Saturday 1 July 2017

ஆத்மா.........

புள்ளி வைத்த மாதிரி
அவள்
பேசிக்கொண்டிருந்தாள்
கோடுகள் போல வரைந்து 
நீள் சதுரங்களில் 
புரிய முயற்சித்த கணம்
வட்டங்கள் வடிவாகியது
காற்று
முந்தானையை
வேண்டுமென்றே அசைக்க
முகடுகளை
விழித்துப் பார்த்தேன்
நிபந்தனைகளற்ற காதல்
உன் கவிதைகளில்
மட்டுமே என்றவள்
எகிறிய போது
நானே மண்புழு போலச்
சுருங்கிப் போனேன்
புரிந்து கொள்ள
என் மூளையைத் தேட
அது என்னைவிட்டுப்
பத்தடி தள்ளியே நின்றது
அவள் ஹோ என்று சிரித்தாள்
அது
பின்முதுகில் சொறி வரும் நேரம்
விளக்குமாறின்
அடிக்கட்டையை வைச்சு
உரஞ்சினமாதிரி இருந்தது
பொறுமை இழந்து
அடக்கிவாசி
அடிவேன்டியே சாகப்போறாய் என்றது
ஆத்மா

....................................................................................
கடல்
எல்லாத்தையும்
விழுங்கிக்கொண்டிருந்த
மிகப்பெரிய வானத்தில்
உனக்கு
பக்கபலமாகப் பறவைகள்
பாடுவது
போதுமாய் இருந்தது
ஒரேயொரு மெளனத்தை
மொழிபெயர்க்க
நீ வள வள என்று
பேசிமுடித்த போதும்
என் குதிக் கால்களை
உரசிக்கொண்டு
நிலக்கடலக் கச்சான் விக்கும்
சிறுவனின்
இயலாமையில் ஓட்டிக்கொன்டிருந்தேன்
உன் நேரிய
வளைவுகள்
அதன் நுழைவுகள்
ஈரமான போது
பின் புறமே
அதிசயமாக இருந்தது
கொஞ்சச் தண்ணி விட்டு
இறுக்கிப் பிழிந்த வாசத்தில்
நான் தேடிய
நெருக்க உறவு
விகசித்துவிட
கோபத்தைக் காட்டவும்
கோபத்தை குறைக்கவும்.
இதுவல்ல நேரமென்றது
ஆத்மா.

.................................................................................
ஆயுதங்களை எறிந்த
அவமானத்தில் 
தலையைத் 
தொங்கப் போட்டுக் கொண்டு 
மண்டியிட்டான்
முற்றுகையிட்டவர்களின்
அந்நிய வார்த்தைகள்
முள்ளந்தண்டில் மான நரம்பைக்
குத்தியெடுத்தன
விடுதலையை
எந்தவிதத்திலும் ஏளனப்படுத்த
அப்போதும் அவன்
நினைத்திருக்கவில்லை
ஒரு அதிகாரி
.........என்று சத்தமாகக் கத்தினான்
கேட்டு ரசித்த சிப்பாய்கள்
வாய் விட்டுச் சிரித்தனர்
இப்பொழுது
கள்ளிக்காட்டுத்
தேவர்மகன் கவிஞ்சன்
காவியப் பரணி பாடவருகிறார்
விடுபட்ட வரலாற்றின்
காலத்தில் பயனித்தவனே
நமக்கெதுக்கென்று
சத்தமில்லாமலிருக்கிறான்
மனதின் ஆற்றாமையை
எழுதினால்
பரவாயில்லை
மூலையில் தள்ளி ஒதுக்கி
வாழ்வைத் தொலைத்தவர்கள்
வாசிப்பார்கள்
அல்லது
எழுதியே அவன் போன்றவர்களைச்
சாகடிக்காமல்
குப்பிகளில் அடைத்த
பொட்டாசியம் பெரிசையனைட்
இன்னொரு முறை கொடுங்கள்
வேண்டிக் கடிச்சுச் சாகட்டும்
என்கிறது
ஆத்மா.

...............................................................................
எவ்வித
ஆடம்பரமுமின்றி 
இயற்றப்படும்
இயற்கையில்
நாதமான  கடவுளின் 
ஆதாரமான சான்றுகள்....
ஓடிக்கொண்டிருக்கும்
கால நேரம்
 சின்னக் கீற்றாக
அமைதியின்
ஆன்மாவில்
 பிரித்தெடுக்கிறது
பிரபஞ்ச  ஞாபகங்களை.....
படைப்பின்
புதிரை விடுவிக்க
அனைத்து விதமாகவும்
நம்பிக்கை கொடுக்கும்
விஞ்ஞான விளக்கங்களிலும்
தோற்றுக்கொண்டிருக்கிறேன்.....
அந்த
இருப்பின்
பெருவெளியில்
 இல்லாமையின்
அர்த்தங்கள்
வெறும் இயலாமையின்
மனப்பதிவுகள்......
இப்பவும்
கேள்வி வடிவில்  எதிர்கொள்ள
அனைத்தும்  இருக்கிறது
விடைகளின் வடிவில்
சிறிதுதான் எஞ்சி இருக்கிறது
ஆத்மாவின் பதில்கள் .... 

...................................................................
மிக மிகப் பழைய
கவிஞன்
பெருமைகளைத் தூசு தட்ட
நேற்றுக்காலையே
எழுதிவிடத் தளம் கிடைத்த
புதியவன்
புல்லின் நுனுனியில்
ஊசலாடும்
பனித் துளியை விசாரிக்கிறான்
கவிதைகளின்
மயக்கத்தைக் கெடுக்க
சப்தமிட்டு நடக்காதீர்கள்
இங்கேதான் என்னருமை
வார்த்தைகள்
இளைப்பாறிக்கொண்டிருக்கிறனவென்று
ரெண்டு பேருமே
விலாவாரியாக முடித்திருக்கலாம்
திருப்தியற்று
பிரபஞ்சப் பேரழகிகளை
இருவருமே சளைக்காமல்
போட்டிபோட்டு
வர்ணித்த கவிதைமொழியின்
கல்லறை வாசகம் தான்
என்னைக் குழப்பியது
உலகத்தின்
மீட்சியற்ற அழகிங்கே
உறங்கிக்கொண்டிருக்கிறதென்ற
வரைந்து விட்டார்கள்
போனாப்போகுது
இரண்டு இதயங்கள்
சமாந்தராகப் பயணிக்காட்டியும்
நல்ல வேளை இவள்
பிணமானாள்
என்றுசொல்லவில்லை என்கிறது
எனக்கு எப்பவுமே
விசுவாஷம் காட்டும்
ஆத்மா.


..................................................................................

பார்வையொன்றே 
பரலோகமென்று 
அதிகமாக ஏற்றி வைத்த
கற்பனையில்
வர்ண அலைகளை
விரித்து விட்டாள்
மறைத்துக் கசக்கிக் கொடுத்த
சின்னக் கடிதத்தில்
மடித்துக் கொடுத்த
பெரிய பதில் மடலில்
உன்
ஸ்பரிசமே
சொர்க்கத்துக்குப் போகும்
குறுக்கு வழியென்று
பொய்களுக்குப்
பொன் தடவினான்
ஒப்பனைகள் தேவையற்ற
ஒரு நாள்
சங்கடங்களின்றி
உண்மைகளை
ஒவ்வொன்றாக எடுத்து
சந்தேகங்களை
நேராகவே மோதவிட்டு
இரங்கிப் பார்த்தாள்
அன்று
சிரிக்க மறந்து
மூக்கைச் சிந்திக்கொண்டு
அவள்
மரங்கொத்தி[ப் பறவையைப்
பார்த்துக்கொண்டிருந்தாள்
அவனோ
கைபொத்திப் கொட்டாவிட்டு
வானத்தின் எல்லைகளைத்
தேடிக்கொண்டிருந்தான்
பிறகு
கரையோரம்
காற்றுக் கைவீசி நடக்க
நாணல் அசைந்தது
தாளம் பூ மணந்தது
முகில் இருண்டது
மழை தும்மியது
இப்பெல்லாம்
ஏதோவொரு கோவில் மணி
யாரோவொரு கடவுளை அழைக்க
காரணங்கள்
எதுவும் சொல்லாமல்
இன்னமும்
ரகசியமாகக் காத்திருக்கிறது
ஆத்மா  !


...................................................

நேசிப்பின்
முறைமையின் மீதே
கவலையை உண்டாக்குகிறது
விலைகளில் உயர்ந்த
பரிசுகள் தேடும்
காதலர் தினம்

பணத்தின்
பெறுமதியைக் கூட்டி
நாதியற்று போன
சமூகத்தினை காட்டும்
கண்ணாடிகள்
பரிசுகெட்ட
அலங்கார அங்காடிகள்

பொறுமை நிறைந்த
வெள்ளை நகரத்தில்
வெப்பச்சலனத்தை காட்டுகிறது
கடைகளின்
காட்சிப்படுத்தலில்
உருவேற்றிய அலங்காரங்கள்

விவாதங்களால்
வடிவமைக்கப்படும்
சுதந்திரத்தின்
சுத்தமான சுவாசக்காற்றை
போனாப்போகுதென்று
ஒரேயொரு வாரம்
சுவாசிக்கலாம்
காதலர்கள்

பிழைக்கத் தெரியாத
உறவுகளை
வலன்டைன் பாதிரி
நம்பிக்கையில் வரவாக்கி
மனதோடு பேச வைத்து
எழுத வைத்த
மந்திரக்காரர் என்கிறது
ஆத்மா.

.........................................................................
ஈரமான
முத்தங்கள் காய்ந்து
பூங்கொத்துக்கள் வாடிவிடும்
இன்றிரவுக்குள்
கொடுத்துவைத்த
வாக்குறுதிகள் எல்லாவற்றையும்
நிறைவேற்றிவிடுங்கள்
முடிந்தால்
எதிர்பார்ப்புக்கள்
சூழ்ந்துள்ள உறவுகள்
எதிர்காலம்முழுவதும்
மாங்கல்யத்துக்கு மட்டுமென்றே
உரிமைகோரிவிடுங்கள்
நாளை
யாழிசை மீட்டி
மதுக்கிண்ணங்களில்
மீறல்கள்
தேன் வழியும் பொழுதுகளில்
காமம் தலைக்கேறி
யாதார்த்தத்தை
நினைக்க நேரமிருக்காது
நாளை மறுநாள்
இன்னொரு
மகத்துவங்களற்ற
இயல்பு நாளாக வர
உங்களுக்காகவே
எழுதி முடிக்கப்பட்ட
எல்லாக்
கவிதைகளில் இருந்தும்
ஊடலின் அவஸ்தைகள்
சாயம் கழண்டு விட
கேவலப்படுத்தப்பட்ட
வார்த்தைகள்
மவுனமாக
அடுத்த வருடத்துக்கு
அசைபோட்டுக்கொண்டிருக்கும்

ஆத்மா .

........................................................................
நேற்றுத்
தலைக்கேறிய பித்தம்
ஆட்டம்போட்டு
நேற்றிரவே இறங்கிவிட்டது
பழிவாங்கும்
உன் மவுனமும்
விழித்துப் பார்த்திருந்து
இதயத்தை
இறுக்கிப்பிடித்து வைத்திருந்த
பிடிவாதமும்
என் அறியாமையை விழுத்தி
பாதங்களில் மண்டியிட்ட
மன்னிப்பில்
உன் மனதை உடைத்திருக்கலாம்
மனம் வேறு
அதன் தத்துவம் புரியாத
உடம்பு வேரென்பதையே
ஒரு மனவெளிப் பொழுதின்
விவாத சுழற்சிக்குள்
நிறுவித்தள்ளிவிட்டாய்
நீதான்டி எப்பவுமே வேணுமென்றேன்
அதுக்காக
வாழ்நாள் முழுவதையும்
சமாதானமாக
ஒதுக்கியே வைத்து விடு
அதி முக்கியமாக
அற்பமான
விரசங்களுக்காய்
அன்பின் பலத்தை
ஒருநாளும்
அசைத்துப் பார்க்காதே
என்கிறது அனுபவப்பட்ட
ஆத்மா.


.............................................................
தொண்டைக்குழியில்
சேமித்து வைத்த
விசமேறிய
சொற்களுக்குச்
சாவு வருகுதில்லை
அவை
கண்ணின்
இடுக்குகளில் சிக்கியிருக்கும்
கண்ணீரின்
ஊற்றை கிழித்து
கொப்பளிக்கும்
அவ்வளவு
கொடுமை தர
விரைவான வலியில்லாத
மரணம் வரப்போகும்
கடைசிக் காலத்துக்குப்
போதிமரம்
நட்டு வைக்கிறேனென்று
சாமர்த்தியமாகவே
நடித்துக்கொண்டிருக்கிறேன்
உன்
ஆதிக்கத்தை
நிலைநாட்டும் குறியீடு
உன்னிருப்பு
ஞான உதயத்தைத்
தேடிக் கடப்பதில்
நீ மட்டும் விதிவிலக்கல்ல
என்று முடித்தது
ஆத்மா.


......................................................................