Monday, 23 July 2018

வாழ்க்கைபோலத்தான் !இளவயதில் கால்பந்தாட்டம்  ஒரே வகுப்பில் படித்த பெட்டையை   பின்னாலும் முன்னாலும் திரத்தி காதலிப்பது போலக் கவர்ச்சியானதும்,  அவளோட அப்பன் , அண்ணன் ,, மாமன், சித்தப்பனுக்கு தெரியாமல் அதை உச்சிக்கொண்டு  போய் ஒரு குச்சு ஒழுங்கையில் வைச்சு  ஒரு  முடிவுகாண்பதும் போலச்  சவால்கள்  நிறைந்ததுமான  விளையாட்டு.  மிகவும் ஆர்வமாக ரைட் எஸ்ட்ரீம்  / மிட் பீல்டர்   என்ற பொஸிஷன்களில்  அதை   விளையாடியபோதும்  அதில் முழுமையாக ஈடுபட முடியாத காலகட்டத்தில் வாழ்ந்ததால் அது ஒரு உதையோடு  மைதானத்தை விட்டு வெளியே போய்விட்டது.


                                                               சைக்கிள் டயர்  ரோட்டெல்லாம்  தேயத்தேய , விசிலடித்துச்  சிக்னல் கொடுத்து , அன்னம்தண்ணி இல்லாமல்   சுழட்டி சுழட்டி  உசிரைக்கொடுத்து காதலித்த பெட்டையை வேறொருவன் ஈஸியா  மடக்கி விழுதிக்கொண்டு போனது போல   சாதிக்க முடியாமல்ப் போன   அந்த வெற்றிடம்  எப்பவுமே திரத்திக்கொண்டிருக்கும்.   ஒரு விடிகாலைக்  கனவுபோல வந்து போகும்  . அவ்வளவுதான் தான் நடந்தது  ,வயதோடு  சமாந்தரமாகக்   காலம் உருண்டோடிப் போயேபோய்விட்டது !                                                                   இந்த வருட உலகக்கிண்ணக் கால்பந்தாட்டம் அதை ரசிப்பவர்கள்  எல்லாரையும் போட்டு ஒரு ஆட்டு ஆட்டியது . உட்சாகமான மோதல்கள் உலுப்பி எடுத்தது. எதிர்பாராத முடிவுகள் இரத்த அழுத்தத்தை எகிறவைத்தது  பல முகப்பதிவாளர்கள்  போட்டிகளில் யார் வெல்லுவார்கள், யார் மண்கவ்வுவார்கள் என்றெல்லாம் எதிர்பாப்புக்கள் எழுதியதும், பந்தயம் கட்டியதும் ,கப்பூரம் கொழுத்தி சத்தியம் செய்ததும்,  ஒவ்வொரு போட்டி முடிவிலும் அந்தப் போட்டியின் முடிவிக்கான காரணங்களை  அவர்கள்  அனுபவ அறிவின் பிரகாரமும் எழுதியதும் சுவாரசியமாக இருந்தது .
                                                                   
                                              இந்தமுறை ஓரளவு எல்லாப் போட்டிகளையும் நேரமொதுக்கிப் பாக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனாலும் உடம்பில்  இளமை ரத்தம் ஓடிமுடிந்துபோனதாலா அல்லது  வெற்றி தோல்வி முக்கியமில்லை மோதிவிளையாடுவதுதான் முக்கியம் என்ற அடிவேண்டியே கற்றுக்கொண்ட  வாழ்க்கைப்பாடம் தந்த   முதிர்ச்சி வந்திருப்பதாலா அல்லது  அதிரனலின் சுரப்பி கடையை மூடிவிட்டதாலா  தெரியவில்லை    உடம்மை உதறவைக்கும்    ஆரவாரங்களோடு  அதை இம்முறை ரசிக்கமுடியவில்லை   .
                                                                     
                                                        ஆனாலும் கொஞ்சம் வித்தியாசமாக  இந்தமுறை போட்டிகளில் எப்படிப் பார்வையாளர்கள்  மன இறுக்கங்கள் , வெற்றி தோல்விகளை வீரர்கள் எதிர்கொள்ளும் மனநிலை , சாதாரண மனிதர்கள், குழந்தைகளின் எதிர்வினைகள் , கால்பந்தாட்டம் திறந்து வைக்கும்  இன்னொரு தத்துவப் பரிமாணம்    இவைகள் அதிகம் கவர அவற்றை எழுதும் முயட்சி கிடைத்தது.


                                                             நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அரைகுறை   அவியல்  அவிச்சு விட்டோ , அல்லது  தெரிஞ்ச மாதிரி  அவிட்டு விட்டோ  ஒரு கதையாகவோ, பதிவாகவோ எழுதுவது  கடினமில்லை. ஆனால்  சந்தர்ப்பத்துக்கு ஏற்ற உணர்ச்சிவடிவ மொழியில் நனைத்து ஒரு  கவிதை வடிவத்துக்குள் கொண்டுவருவது சிரமம், இந்த சவால்தான் எனக்கு அதிகம் பிடித்திருந்தது !


.


உத்தரவுகளை நடுமீறி 
நாலுமுறை 
சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவனை
குழுப்பயிற்றுனர் 
உட்சாகப்படுத்துகிறார் !
மாற்றுவழிக்கு வழிபோதிக்கிறார்
அவன்
மீண்டெழுந்து இலக்குப்போடுகிறான் !
நினைவு வந்தது
ஒரேயொரு
அற்ப தவறுக்கு
நிராகரித்து வெளியேற்றுமுன்
விளையாட்டு ஆசிரியர்
வலிக்க வலிக்க
மாறிமாறிக் கன்னத்தில் வைத்த
அறை !


.


வேகமோடு 

நெருக்கத்தை ச் சேர்க்கும் 
சில நிமிடங்கள் ,
ஆற்றுவெள்ளம் போல
நிலைகொள்ளமுடியாத 
கால்கள் ,
தேவைக்கேற்றபடி
விதவிதமான உதைப்புகள் !
ஒருகணத்தின்
ஒரு நொடியில்
திசைகளைப் பிடித்துவிடுகிறது
அல்லது
நூலிடையில் நழுவிவிடுகிறது !
உயிர் மூச்சுவிட்டு
சூழ்ச்சிகளால் வெல்லப்படும் வெற்றிகழும்
ருசிக்கப்படுகிறது !


.


சுட்டிப் பெண் 
லயனல் மெர்ஸிபோல 
வெட்டி வெட்டி அடிக்கிறாள் !
குட்டிப் பையன் 
கிறிஸ்ட்டியானோ ரொனால்டோபோல 
அம்பு வைத்து உதைக்கிறான் !
தாண்டிச்செல்லும்
நிர்ணயிப்பு
ரெண்டு சோடி சப்பாத்துகள்
ரெண்டு முனையிலும் !
மாறிமாறிக் கால்மாறுகிறது
சுமாரான பந்து !
சொன்னபடி
கோடுகீறிக்கிழிக்க
நடுவரென்று யாருமில்லை !
நைந்துபோன
என்னைத்தவிர
பார்வையாளரென்றும் யாருமில்லை !
இவ்வளவும் போதுமானதாயிருக்கு
குழந்தைகளின்
உலகக்கிண்ணத்துக்கு !


.வாழ்க்கைபோலத்தான் 

முட்டிமோதும் பிரச்சினைகள் ! 
சமாளித்தலில் 
பொறுமை மிஞ்சிவிடுகிறது !
பயம்களை எதிர்கொள்ளும் போதே 
எதிர்பார்தலில்
தவறுகள் சேர்ந்துவிடுகிறது !
ஒரு சந்தர்பத்துக்குத்
தீவிரமாகத் திட்டமிடுதலில்
உத்வேகமாகவே
மனது உடம்பை முந்திவிட
எதிரியின்
அற்ப பலவீனங்கள்
அதை
பயன்படுத்திக்கொள்ள
இலக்குகள் தீர்மானிக்கப்படுகிறது !
என்ன வித்தியாசம்? ‘
வாழ்க்கைபோலவேதான் !


.


வளைசதுக்கத்தில் 
சூடான கோப்பிக் கடைகள், 
பெண்கள் 
விடுப்பில் மூழ்கியிருக்க 
வயதானவர்கள் 
அரசியல் கதைக்கிறார்கள் ,
நீளமான திரையில்
நீண்டுகொண்டேயிருக்க்கிறது
முடிவில்லாப் பந்தாட்டம் !
மூன்று
கோப்பி வேண்டி உறிஞ்சி முடியவும்
இரு முனைகளிலும்
வெற்றி வளைந்து நுழையவில்லை !
அவ்வளவு
தற்பாதுகாப்பு இந்தப்பக்கம்
அதேயளவு
முறியடிப்பு அந்தப்பக்கம் !
நிச்சயமாகக்
அடுத்தகட்டத்துக்குப் போயிருப்பார்கள்
ஒருமுடிவோடு
காத்திருக்க நேரமில்லையென்று
வேகமாக நகர்ந்துவிட்டேன் !


.


இமைப்பதுக்குள்
தொண்ணூறு நிமிடங்களை 
எதிர்கொண்டு தலைகுனிவது போலவே 
விழுங்கிவிடுகிறது !
நிறையவே 
அலைபாயும் அங்கலாய்ப்பு !
பச்சைநிறப் புற்களோடு
நேருக்கு நேராக
நினைவுக்குள் திரும்பிவிடும்
பந்தாடக் கால்களும்
விளையாடிய கல்லூரிக் காலமும் !
இவ்வளவு நேரம்
ஒரு சகமனிதன்
சில நண்பர்கள்
சொந்தக் குடும்பமும்தான்
இன்பம் கொடுத்ததில்லை !


.


புதிய முகங்கள் 
புதிரான தந்திரங்கள் 
முதுகுக்குப் பின்னாலும் 
கோபப்பார்வை தெறிக்க 
மைதானக் கடைக்கோடியிலும் 
இயலாமையை
நிறுவிவிடுவதுபோல
ஆக்ரோஷ இரைச்சல்கள் ,
வேண்டுமென்றே
கோபத்தில் எதிராளியை
முடக்கும் முஸ்தீப்புக்கள் !
வென்றவர்கள்
குற்றம் இழைத்ததுபோல் நிட்கும்
தோற்றவர்களை
புன்னகையை வரவழைத்து
தழுவி அணைப்பதில்
ஆதாரமாக உயிர் நேயம் !


.


நேராகவே 
நடந்துசெல்லவே 
கால்களில்ப் பலமில்லை !
உபயோகப்படுத்தாத பாதங்கள் 
புலனிழந்து விடுகிறது !
அப்படியென்னதான்
நடக்குதென்று
முடிந்தளவுகளில்
கால்பந்தாட்டம் பாக்கும்போதெல்லாம்
பந்தாடிய
பால்யகாலம்
நினைவுகளைத் திரத்த
மறந்துபோன காலவெளிக்கும்
தன்னையறியாமல்
வேகம் வந்துவிடுகிறது !


.


மைதானத்தை
மழை நனைப்பதுபோல 
நிலைகொள்ளாமல் 
ஓடி விளையாடுகிறார்கள் 
இளையவர்கள்!
கொடிகள் அசைத்துக்
கோஷங்கள் எழுப்பி
சில மணி நேரங்கள்
குழந்தைகளாகி விடுகிறார்கள்
ஒரு
காலத்தின்
இளமை ஈரத்தை
பச்சைப் புல்வெளிகளில்
இன்னமும் வைத்திருக்கும்
பெரியவர்கள் !


.


ஒவ்வொரு 
பந்தாட்ட மோதலிலும் 
வெற்றிக்கான 
எதிர்பார்த்தல்களில் 
இயல்புகள் மீறிவிடுகின்றன !
இது
மறந்துபோன
என்னுடையதுமான
வலியென்பதை
எந்தவித சலனமுமின்றிக்
கடப்பதைத்
தவிர்க்கமுடியவில்லை
என்
இளமைக்காலச் சாயலில்
விளையாடுமொருவன்
வேண்டுமென்றே
இடறி விழுதப்படும்போது !


.


பின்வாங்காமல்த் 
தோற்றுப்போவதிலும் 
ஒருவிதமான 
லயம் இருக்கிறது !
அதனால்த்தான் 
வருத்தப்படாமல்
பார்த்துக்கொண்டிருக்கமுடிகிறது
முடிவைக்
கொண்டாடிக்கொண்டிருக்கும்
எல்லாவிதமான
ஆரவார இரைச்சல்களையும்
தரிசித்தபடி
தாண்டிக்கடக்கிற
தோற்றுப்போனவர்களின்
ஆதரவு முகங்கள்களை !