Friday 16 September 2016

நல்லூரான் நினைவுகள்

இந்த  உலகத்தில்  எல்லாருமே ஒரு  ஊரில் பிறந்து வளர்ந்திருப்போம்.  அந்த  ஊர்  பலகாரணங்கள்  எழுப்பிக்  கலைத்து அடிச்சு விரட்டியதால் வேற  எந்த ஊருக்குப் போய் வசித்தாலும் சொந்த  ஊர்  சின்னவயசில் பதிந்து சென்றவை ஏராளம்.


                                                        எவ்ளவோ விசியங்கள் கவனிப்பில் இருந்தாலும்  இன்றைக்கு  உள்ளது  போல அன்றைக்கு பிற்காலத்தில் ஒரு எழுத்தாளனாக  தற்செயலாகவும்  நான்  வரமாட்டேன்  என்றுதான்  நினைத்தது.  அதனால  பல  அருமையான, பெருமையான சம்பவங்கள், நிகழ்வுகளை  அப்போதெல்லாம் ஆர்வமாகக்  கவனிக்கவில்லை.


                                                   செய்தது  எல்லாமே விடுப்புப் பார்க்கிறது  என்ற சொற்பிரயோகம்  சம்பந்தமானது. என்றாலும் முடிந்தவரை நினைவின் வழித்தடத்தை இன்னொருமுறை துடைத்துத் தூசி தட்டிப்  பார்க்கிறேன்.

                                               

சின்னவயசில்  நல்லூர் கந்தசுவாமி  கோவில் எனக்கு  நினைவில்  உள்ளபடி பலவிதங்களில் வேறுபட்டு இருந்தது. இண்டைக்கு இரண்டு வானளாவிய  கோபுரங்கள்  தெற்கு வீதியிலும் ,வடக்கு  வீதியிலும்  ராஜகோபுரங்களாக  எக்ஸ்ராவாக எழும்பி கோவிலின் உட்பிரகாரமே  சரஸ்வதிமகால் போல வடிவமைக்கப்பட்டு , கோவில் நடைமுறைகளில்  பல புதிய விடயங்கள் சேர்ந்துள்ளன. முக்கியமாக அதன்  உள்வீதிகளில்  உள்ள பிரமாண்டம் பிரமிக்கதான் வைக்கிறது.

                                              யாழ்பாணத்தை ஆண்ட கடைசி ஆரியச்சக்கரவர்த்தி சங்கிலி மன்னனின் தலைநகராகிய  சிங்கை நகரில், புவனேகபாகு மன்னன்  கட்டி , சப்புமல்குமாரைய என்ற செம்பகப்பெருமாள் வழிபட்ட நல்லூரில் நல்லைக் கந்தன் திருவிழா  ஆரவார  இயல்பாகி  ஒரு  காலத்தில்  அந்தக்  கோவிலுக்கு  அருகில் பிறந்து வளர்ந்த நினைவுகளோடு வந்து  முட்டி மோதி முத்தமிடுகின்றன. 

                                                            
 ஒரு காலத்தில் யாழ் குடா நாட்டை தெருவெங்கும் விழாவாக்கி , வீடெல்லாம் அன்னதான விருந்து வைத்து ,ஊரெல்லாம் பக்தி நிரம்பி வழிய , நல்லூர் என்ற இடத்தை நாலு பக்கமும் அதிர வைத்த அந்த திருவிழா ஒரு கிராமக்கோவில் போல இந்தமுறை  பக்த கோடிகள் அலை மோத  , அப்படி போயுள்ள பக்த கோடிகள் கையில " கமரா மொபைல் போனில " உலக அளவில் பிசியா இருக்க, அதிகம் ஆடம்பர உற்சாகம் இல்லாமல் பக்தி மயமாக   நடந்துகொண்டிருப்பது   இன்டர்நெட் புண்ணியத்தில் வலை தளங்களின் வலை வீச்சில் பார்க்க ஒரு ஆச்சரியமா இருக்கு.



                               
ஆடம்பரக் கந்தனின் இந்த முறை  தேர் திருவிழாவுக்கு முன்னர் நடந்த வழமையான திருவிழாவில்,பல முக்கிய சம்பவங்கள் மிஸ்ஸிங். ஆறுமுக நாவலர் மணி மண்டபத்தில்   இருந்து இருவத்தி ஐந்து நாளும் "நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகும் தஞ்சத் தருள் சண்முகனின்  " கந்தரநுபூதி பாடும் இளம் பிள்ளைகளின் பயனை கோஸ்டி, திருத்தொண்டர் சபையின் பயனை கோஸ்டி  இல்லை, 


                                                      நான் பலவருடம் நாவலர் மண்டபத்தில் இருந்து வெளிக்கிட்டு கோவிலை திருவிழா இருவத்தைந்து நாளும் கந்தர் அனுபூதி பாடும் பயனையில்  பாடகரா இருந்து இருக்றேன்..

                                     
                                               வேறு பல பயனைக் கோஷ்டிகள் பாடும் பாடல்களில் பண் அதிகம் இல்லை, ஆனால் பக்தி நிறைய இருக்கு," மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப் பெண்ணினுள் கற்புடைய " தாவணி போட்ட நல்லூர் பெற்றெடுத்த இளம் வள்ளி தெய்வயானைப் பெண்கள் அதிகம் இல்லை,


                                          " ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,செந்நெல் அமலை வெண்மை வெள் இழுத்த " நெஞ்சை நிமிர்த்தும் எங்கள் ஊர்க் காளைகளும் அதிகம் இல்லை,

                             


முக்கியமா  முருக்கப் பெருமான் வெளி வீதி உலா வரும்போது கிராமக் கோவில்கள் போல ஒரு மணியை இழுத்துக்கொண்டு அதை அடித்துக்கொண்டு வருகிறார்கள். அந்த மணி முதிரைச்சந்தையில் இருந்த ஆதியான நால்லூர் கோவிலைப்  போத்துக்கிசர் உடைத்து அந்தக் கற்களை கொண்டு கட்டிய யாழ் டச்சுக்கோட்டை கட்டும் போது கொண்டு போன  நல்லூர்க்  கோவில் மணி எண்டு சொல்லுறார்கள்.


                                           பெரிய ஒரு கற்பூர சட்டியும்,டமாரமும்  ஒரு சின்ன வண்டிலில் வைத்து இழுத்து கொண்டு வருவதைப் பார்க்க கிராமக் கோவில்கள் போலத்  தான் இருக்கு...

                               
இலங்கைத்தீவின் எல்லா நகரங்களில் இருந்தும் விரதம் இருந்து பக்தர்கள் வரும், நல்லூர் தேர்த் திருவிழாவில் பல வருடங்களின் முன் எப்பவுமே கடல் போல அலை அடிக்கும் முருக்க பக்தர்கள் எல்லாரும் எங்கே போனார்கள் என்று ஜோசித்துப் பார்த்தால், அதிகம் பேர் புலம்பெயர்ந்து போய் ஐரோப்பா,கனடாவில் அடைக்கலம் பெற்று வாழும் அவலத்தில் , ஒரு தலைமுறையே விடுதலைக்கு முகவரி எழுதப் போய்த் தொலைந்து போன நிலையில்..

                                 
முருக்க பெருமானின் முக்கியமான இன்றைய திருவிழாவில்  நெருக்கி அடிச்சு இழுபட்டு தேர் இழுக்க, அடிபட்டு முட்டி மோதித் தேங்காய் உடைக்க , உருண்டு பிரண்டு பிரதட்டை செய்ய, " அரோகரா அரோகரா ..கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் " எண்டு பக்தி முழங்க  அதிகம் பேர் இல்லாத நிலையில் இடைவெளிகள் அதிகமா இருக்கு.,

                                                 
ஆனாலும் தெருவெல்லாம் அசைந்தாடும் தேர் அழகா இருக்க அதன் தொங்கு மணிகளின் சத்தம்,ஜாளிகளின் வாளிப்பு, கலசங்களில்  பொன் நிறம், மறுபடியும் உச்சக் கட்டமாக திருவிழாவின் சந்தோசத்துக்கு உயிர் கொடுக்குது.  நல்லூர் தேர் மீடியம் சைஸ் தேர். அந்த தேரின் அளவுப்பிரமானம் ஒன்றும் அமர்க்களம் இல்லைதான். ஆனால் தேர் திருவிழா இலங்கை வானொலியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் அளவுக்கு இலங்கை அளவில் பிரபலம்.

                                           
                                          அந்த இலங்கை வானொலி நேரடி அறிப்பாளர்கள்  திருப்புகள், கந்த புராணம்,,திருமுருகாற்றுப்படை போன்ற பக்தி இலக்கிய  மேற்கோள்கள்  எடுத்துக்  கலந்துவிட்டு  வேர்ல்ட்கப்  புட்போல்  பைனல் மச்  போல உணர்வுடன்  உள்ளொளி தேடி  வர்ணனை செய்வார்கள். ஆனால் அந்த ஒலிபரப்புக்கு டெக்னிசியன்  ஆக  சிங்கள ஆட்கள் வந்திருப்பார்கள். யுத்தம் தொடங்கி தொண்டையை இறுக்கிப்பிடித்த வருடங்களில் அந்த ஒலிபரப்பு நடக்கவேயில்லை. 

                               


சப்பரத் திருவிழா அன்று தான்  எங்கள் வீடில் ஒரு காலத்தில் நிறைய சித்தப்பு,பெரியப்பு,அத்தை , மாமி உறவினர் வெளி ஊர்களில் இருந்து வந்து இரவு முழுவதும்  கச்சான் கோது வீடு முழுவதும் பறக்க கலியான வீடு போல கலகலப்பா இருக்கும்.  அத்தை,  மாமியின் அம்சமான பெண் பிள்ளைகளும் வந்து இரவு முழுவதும் வீட்டுக் ஹோல் முழுவதும் வெள்ளி எறிஞ்ச மாதிரி சிரித்து சிரித்து கதைச்சுக்கொண்டு இருப்பார்கள் .


                             எப்பவும் இருட்டா இருக்கும் எங்க வீடே பவுர்ணமி போல வெளிச்சமா இருக்கும் . 

                               
முக்கியமா அவர்கள் தங்குவது காலையில் வசந்தமண்டபப் பூசை முன்னுக்கு நின்று பார்க்க. அதிகாலையே எழும்பிக் குளிச்சிட்டு தலை கூடக் காயவைக்காமல் ஓடுவார்கள், கொஞ்சம் இளமையான ஆண்கள் காலையில் பிரதட்டை அடிக்க எழும்பி ஓடுவார்கள். அவர்கள் தான் பின்னர்,வீதி முழுவதும் உருண்டு மணல் ஒட்டிய வேட்டியுடன் , தேரும் இழுத்து, தேங்காய் அடிக்கும் போது வரும் இளநியைத் தலை முழுவதும் ஊற்றிக்கொண்டு வருவார்கள்,

                                     
                                       அப்படி பக்தி நிரம்பி வழியும் அவர்களைப் பார்க்க ஒரு வித " மச்சோ ஹன்ட்சம் " ஆண்கள் போல பார்க்கும்  பெண்களுக்கு இருப்பார்கள் . அந்த தோற்றதால்  வேற சில விசயங்களும் தொடரலாம். காலையில்  ஓடியவர்கள் மாலையில் பச்சை சாத்தி சாமி தேரில் இருந்து இறங்கும் திருவிழாவுக்கும் பதறியடிச்சு ஓடுவார்கள்,முக்கியமா பெண்கள் பச்சை சேலை கட்டிக்கொண்டு போவார்கள்... 

                               


கோவிலுக்குப் போகும் எல்லாப் பாதைகளிலும் இருக்கும் தண்ணீர் பந்தலில்க் காலையிலேயே " முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கு " எண்டு சீர்காழி கோவிந்தராசன் வெள்ளியாகி விளாசும் பாடல்  " லவுட் ஸ்பிகர் " தொடங்க ,பகல் முழுவது  தாகசாந்தி எண்டு பந்தலில் மோர்த் தண்ணி,சக்கரைத் தண்ணி,றோசாப்புக் கலரில்  சர்பத் , கலர் கலரா குளிர பாணம் என்று குடுப்பார்கள் .


                                                                   அதை வேண்டிக் குடிச்சுப்போட்டு மண்டையப் பிளக்கும் வெயிலில் இருந்து தப்ப பல அடியார்கள்,தண்ணீர்ப் பந்தல் மணலில்  டி எம் சவுந்தரராஜன் வெங்கலத்தில் பாடும்  " நம்புங்கள் முருகன் நல்லவன், தன்னை நாடி வரும் அடியார்க்கு  என்றும் நல்லவன் ..." என்ற உத்தரவாதத்துடன் ஆற அமர இருபார்கள்,






கோயில் முன் வீதியில் செட்டி தெருவில் ஒரு வீட்டில் அன்னதானம் கொடுப்பார்கள், கோவில்தேர் முட்டிக்கு எதிரே இருந்த அறுபத்துமூன்று நாயன்மார் மடத்திலயும்  கொடுப்பார்கள். கோவிலின் ஆறு காலப் பூசை மணிகளும் தெளிவாகக் கேட்டும் அருகில் இருந்த எங்கள் வீட்டிலும் சமையல் அமளிதுமளியா எல்லா உறவினரும் சேர்ந்து சமைப்பார்கள்.

                         


தேர்த் திருவிழாவிற்கு ,தீர்தத் திருவிழா போல அதிகம் காவடிகள் வருவதில்லை. வாற காவடிகள் பின்வீதியில் மங்கையக்கரசி இல் வந்து இறங்கும். சிலது வடக்கு வீதியில் மனோன்மணி அம்மன் கோவிலில் வந்து இறங்கும். அதிகம் தோள்க் காவடிகள் என்ற தோளில் வைத்து ஆடும் காவடிகள் ,முதுகில செதில் குத்தி,வாயைக் கிழிக்கிற மாதிரி  வேல் குத்தி. தார் ரோட்டில கொதிக்கிற வெய்யிலில் வெறும் காலுடன் ஆடிக்கொண்டு அந்தக் காவடிகள் நல்லுரை விட்டு வெளியே உள்ள சின்ன சின்ன இடங்களில் இருந்து நடையா நடந்து  ஆடிக்கொண்டு வருவார்கள்.

                             
                                          பால்க் காவடி எண்டு சின்னக் குடத்தில பால் நிரப்பி அதைக் காவடியுடன் சேர்த்துக் கட்டி பால் தெறித்து தெறித்து சிதற ஆடிக்கொண்டு வருவார்கள். கொஞ்சம் திரில் ஆக " என்னப்பனே கந்தப்பனே பன்னிருகை வேலவனே  " என்று பெங்களூர் ரமணியம்மாவோடு முதுகில கொழுக்கி போட்டு தொங்க விட்டு பறவைக் காவடியும்,  " வேலவா வடி வேலவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா " எண்டு துலாவில தொங்கிக்கொண்டு, துலா முறிஞ்சு விழுகிற மாதிரி அதை ஒருவர் ஏறி நிண்டு அமத்தி அமத்தி ஆட்ட  தூக்குக் காவடியும் நீண்ட தூரம் இருந்து வரும்.

                             


ஆன்மிகம் அதிகமாகி  கோவில் நாலு வீதியிலும் எவளவு சனம் இடிபடுவார்களோ அதே அளவு, சுவாரசியக்  கொண்டாட்டம் சந்தோசமாகும் இடங்கள் கோவிலின் சுற்றுப்புற பாதை முழுவதும் ஆகா ஓகோ எண்டு நடக்கும்.,

                                 
                                                    நிலகடலை கும்பியாகக் குவித்து வைத்த கடலைக் கடைகள் , சுடச்சுட சோழன் பொரியும் கச்சான் கடைகள், வளையல்கள் மின்ன மின்னி அழைக்கும்  காப்புக்கடை, குழந்தைப் பிள்ளைகளுக்கு ஆசை காட்டி பெற்றவர்களின் காசைக் காலியாக்கும் விளையாட்டு சாமான் கடைகள் , சீனி வழியும் மஸ்கட் சுவிட் கடைகள், பள பளக்கும் எவசில்வர் பாத்திரக் கடைகள்.


                                                   " ஓடியா ஓடியா மலிவு மலிவு " என்று கத்தும் சில்லறை வீட்டுப் பாவனைப் பொருள்கள் விற்பவர்கள் சத்தம், பலூன் விற்பவனின் பரிதாபக் கெஞ்சல், வழி முழுவதும் பிச்சைக் காரர்களின் " ஐயா தர்மம் செய்யுங்க சாமி... " திண்டாட்டம்கள் , லைட் சுற்றி சுற்றி ஓடும் விளம்பரங்களின் கீழே  சனம் நிரம்பி வழியும்  ஐஸ்கிரீம் கடைகள் , அதை விக்கும் ஐஸ் கிரீம் வானில இருந்து வரும் காதைக் கிழிக்கும் ஜெனரேடர் சத்தம். 

                               


குண்றத்திலே  குமரனுக்குக் கொண்டாட்டம் போலவே இதுகளுக்கு நடுவில்  ரகசியக் காதலர்களின் ரகசிய சிக்னல்கள், கிடைத்த சின்ன இடைவெளியில் சொல்லும் அன்பான வார்த்தைப் பரிமாற்றம், அரோகரா போட்டுக் கொண்டு  கும்பலில் கோவிந்தாவாக முதல் முதல் முழுவதும் முகம் பார்க்க கிடைத்த சந்தர்ப்பம்,  வழம்  மாறி வீதி  வலம் வந்து தேடும் கண் பார்வைகள்,

                                   
                                                       கலியாணக் கனவுகளின் ரகசிய அர்ச்சனைகள்,  கோபுர வாசலில் விட்டுசென்ற சின்னச் சிரிப்பு, அடியளிக்கும் போதும் அன்பான வேண்டுதல்கள், சென்ற திருவிழாவில் சந்தித்து இந்த திருவிழாவில் பிரிந்து போன ஒரு காதலின் கண்ணீர்த் துளி,  காத்திருந்து காத்திருந்து காற்றோடு போன பெருமுச்சு , சிலருக்கு மட்டும் இதயம் எங்கும் உதயமாகும் ஒரு உயிரில் கலந்த உறவு.....  

                     
                                                        உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும் போல  சின்ன வயதில்  கோவிலின் திருவிழா ஒரு  கலியான வீடு.   டோல்கி டப்பா டுல்கி போல வாழ்க்கை தந்த பாடங்கள், எப்படியோ  இதுகள் எல்லாம் நல்லூரான் திருவடியில் அதிகம் கவனிக்கப்படாமலேயே  போகலாம்.....

                    
                                       
நல்லூர்க் கோவிலின் வடக்கு வீதியில் கட்டியுள்ள ராஜ கோபுரப் படம்  அதை இருபது வருடங்களின் பின் என்னோட கொம்புயிடர் திரையில் பார்த்து அதிசயித்தேன். நான் பிறந்த ஊரில உள்ள அந்த அலங்காரக் கந்தன் கோவில் எல்லாக் கோவில்களையும் விட அதிக வருமானம் உள்ள, ஆடம்பரக் கந்தன், கந்தசாமி என்ற பெயரில அருள் கொடுத்துக் கொண்டு இருக்கும , அந்த கோவிலின் சின்ன வயது நினைவுகள் எப்பவுமே ஒரு புத்தகம் போல பிரட்ட பிரட்ட ஒற்றைகள் வருவது போல எப்பவுமே முடிவில்லாமல் வரும்.

                                              
                                        அந்தக் கோவிலின் ஆறுகாலப் பூசை மணியும ,  ஒரு மாத திருவிழா, அல்லோலோல கல்லோல ஐஸ்பழ வான்களின் ஜெனேறேடர் அலறல் ஓசைகளும் , சுற்றி இருந்த தண்ணிப் பந்தல்களின் லவுட் ஸ்பிகர்  காதைக் கிழிக்கும் சத்தம்கள் தெளிவாகக் கேட்கும் மிக அருகில் உள்ள இடத்தில தான் நான் அவதரித்தேன். அந்தக் கோவிலின் ஒவ்வொரு சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவதித்து வளர்ந்தேன்.

                                         
அந்தக் கோவில் எவளவு ஜனரஞ்சகப் பிரசித்தமோ அந்தளவு அதன் வரலாற்றுக் குழப்பங்கள், அந்தக் கோவிலில் நடக்கும் விசியங்கள் அதிகம் பலருக்கு தெரியாது, நல்லூர் கோவில் அருகில் நாவலர் மணிமண்டபம் அமைத்து, அதில ஆறுமுக நாவலர் சிலை பல வருடம் இருந்து, அதுக்கு முன்னாள் கோவில் திருவிழா இருவத்தைந்து நாளும் என்னோட அப்பாவின் கட்டளைப்படி, கந்தர் அணுபூதி படிக்கும் பயனைக்கு சின்ன வயசில நாவலர் போலவே நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராட்சை மாலை போட்டு , கேவலாமாய்ப் போய் என்னோட பயனை பாடிய பெண்களை பார்த்து நெகிழ்ந்த் உருகும் அனுபூதி பெற்று இருக்கிறேன்,

                                                       

நல்லூர் கோவில் ஆகம விதிப்படி கருங்கல்லில் மூலஸ்தானம் கட்டப்படவில்லை எண்டு ஆறுமுக நாவலர் சொல்லி இருகிறார், அந்தக் கோவத்திலையும், அவரின் வெண்கல சிலையைப் பலர் தொட்டுக் கும்புடுவதாலும் கோவில் நிர்வாகம் கொழும்பில் இருந்து ஊர்வலமா கொண்டு வந்த அந்த சிலையைக் கிளப்பி இரவோடு இரவா டாக்டரில் ஏற்றி , நாவலர் பிறந்த, நாவலர் வீதியில் உள்ள ஒரு சிறிய மண்டபம் உள்ள இடத்தில இருந்த நினைவு மண்டபத்தில் இருட்டுக்க வைத்தார்கள்,


                                        அதோட எனக்கு பயனை பாடிய பெண்களை பார்த்து அனுபூதி பெறும் நோக்கத்துக்கு ஆப்புவைக்கப்பட்டது.

                                                 

நல்லூர் கோவிலின் மூலஸ்தானம் இருக்கும் இடத்துக்கு கீழே ,ஒரு முஸ்லில்ம் துறவியின் கல்லறை இருக்கு என்கிறார்கள், அதால அந்த கோவிலின் முன்னே கற்பூரம், வாழைப்பழ தட்டு, சாம்பிராணி விக்கும் உரிமை ஒரு வழிவழியா வந்த முஸ்லிம் குடும்பத்துக்கு இருந்தது, அவர்கள் தான் அந்த கடை கோயிலின் முன்னே கால் கழுவிப் போட்டு வரும் இடத்துக்கு அருகில் வைத்து இருந்தார்கள்,


                                     இஸ்லாத்துக்கும் ஹிந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை விட அவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமால் , " வாகிலாத் அலா அல்லாகு அக்பர் " எண்டு சொல்லி விற்கும் அந்த பூசை புனஸ்கார பொருட்களை , வேண்டி கந்தக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதில் ஒருவித பிரபஞ்ச அளவு ஒற்றுமை இருந்தது அந்த நாட்களில்,

                                              

  வருமானம் அதிகம் உள்ள அந்தக் கோவிலின் வருமானத்தில் ,ஏழை மக்கள் , படிக்க வசதி இல்லாத பிள்ளைகளுக்காக எந்த சமூக திட் டங்களும் இருக்கவில்லை . பதிலாக உண்டியலில் புண்ணியம் கிடைக்க எண்டு சொல்லி , தாள் தாளா விழும் காசில் கோவிலை தமிழ் சினிமாவில் வரும் கனவு சீன் போல மோடேன் ஆக்குவார்கள் ,


                                          கோபுரம் கட்டி , அலங்கார விளக்கு தொங்க விட்டு, ஏறக்குறைய அந்தக் கோவிலுக்குப் போறதே சுவாரசியம் இல்லாமல் இருக்க, அந்தக் கோவிலுக்கு பக்தி நிரம்பி வழியும் அழகோடு வரும் இளம் வள்ளி, தெய்வயானைகளை பக்தி நிரம்பி வழிய ரசிப்பதில் நிறைய சுவாரசியம் இருந்தது .

                                               

நால்லூர் கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் ,அந்த அலங்காரக் கந்தனை முப்பது அடி உயர மதில் கட்டி வெளி உலகத்துடன் தொடர்பே இல்லாத மாதிரி ஜெயிலில் வைப்பது போல வைத்து இருப்பார்கள்,அவசரத்துக்கு அந்த முருகனே வெளிய வரவேண்டும் எண்டால்,அநத முப்பது அடி மதிலை ஏறிக்குதிச்சுதான் வரவேண்டும் போல இருக்கும், 

                                           
அந்த கோவிலில் வெளிய இருந்து முருகப் பெருமானுக்கு சாத்துவதுக்கு பூ, பூமாலை எட்டுப்பதில்லை,கோவிலின் உள்ளேயே ஒரு பூந்தோட்டம் இருக்கு எண்டும் , அதில இருந்து பறிக்கப்படும் பூக்கள் மட்டுமே கோவிலில் பாவிக்கப்படும் எண்டும், பூமாலை கட்ட, கோவில்மணி அடிக்க ஒருவர் நிரந்தரமா மாதசம்பளத்துக்கு இருந்தார் எண்டு சொல்லுவார்கள்.


                                       அந்தப் பூந்தோட்டதுக்கு வண்டுகளே முப்பதடி மதிலை தாண்டிதான் போய் இருக்க வேண்டும் என்பதை நினைக்க வேதனையா இருந்தது அந்த நாட்களில்,

                                           

முருகப்பெருமானே நேரம் குறித்துதான் அருள் குடுப்பது போல அந்த கோவிலில் எல்லாமே ஒரு நேரம் குறிப்பிட்டபடிதான் நடக்கும், கதவு திறபதுக்கும் மூடுவதுக்கும் எண்டே ஒருவர் கடிகாரம் பார்த்தவாறு இடுப்பில சாவிக்கொத்தை செருகிக்கொண்டு இருப்பார்.




இலங்கை ஜெனாதிபதி ரணசிங்கே பெறேமதாச ,கோயில்க் கதவு மூடி அஞ்சு நிமிஷம் பிந்தி வந்ததால்,அவருக்கு தரிசனம் மறுக்கப்பட்டது ,அவரும் கோவிக்காமல்

                                         " ஹரி புதுமாய் கமக் நா அப்பிட்ட கத்தரகாம தெய்யோ இன்னவா நேத " ,

                                               (சரியான புதுமை ,எங்களுக்கு பிச்சைக் கார, கதிர்காமக் கந்தன் இருக்குறார் இல்லையா ) எண்டு சொல்லி ஒண்டும் சொல்லாமல் போனாராம் ,

                                                   

கோவிலுக்கு முன்னால ஐந்து வேப்பமரம்,சடைச்சு, வளர்ந்து நிழல் பரப்பி இருந்தது .  அதுக்கு கீழ தான் செல்லப்பா சுவாமிகள் , கொழும்பில அரசாங்க வேலை செய்துகொண்டு இருந்த இளவயதில்  , பின் நாட்களில் , கொழும்புத்துறை ஜோகர் என்ற ,ஜோகர் சுவாமிகளை முதல் முதல் கண்ட போது " யாரடா நீ எண்டு " கேட்டாராம்,


                                           ஜோகர் சுவாமிகளுக்கு அந்த ஒரு கேள்வி விழிப்புணர்வு தர அவர்   " தேரடியில் தேசிகனைச் சந்தித்தேன், அங்கேயே சரண் அடைந்தேன் " எண்டு சிவதொண்டனாகி அந்த இடத்திலேயே அவரின் சீடர் ஆனாராம் ,

                                            அந்த அஞ்சு வேம்புக்குக் கீழ நான் கொஞ்சநாள் என்னோட இள வயதில் உலகப் பற்று எல்லாம் துறந்து அந்த வேப்ப மரத்துக்கு கீழ போய் இருந்தேன், அம்மா வந்து அழுது குளறி

                                    " ஏனடா உனக்கு இந்த சின்ன வயசில இப்படி ஒரு ஆன்மீக எண்ணம் "

                                               எண்டு சண்டை பிடிச்சா, நான் அசரவே இல்லை. ஆனாலும் நாவலர் மணிமண்டபம்ல என்னோட பயனை பாடிய தர் .... னியை , மறுபடி சந்திக்க , எனக்கு பழையபடி உலகப் பற்று எல்லாம் தாறுமாறா வர , ஆன்மீக எண்ணதை விட்டுட்டு ஓடி வீட்டை வந்திட்டேன் .


                                           இப்ப நினைக்கும்போது கவலையா இருக்கு , இல்லாடி இப்ப நான் நித்தியானந்தா ரேஞ்சுக்கு பெரிய மகான் ஆகி இருப்பேன், " தாரமும் குருவும் தலை விதிப்படியே " , எண்டு சும்மாவா சொனார்கள் ,,,அதுதான் நடக்கலையே....

                                    ஆனாலும் எனக்கு அப்பவே மனஅழுத்தம் எண்ட டீபிரசன் இருந்து இருக்கலாம் எண்டு இப்ப நினைகேறேன் ,,எப்படியோ அது பெரிய கதை,,,ஆனால் அதில நிறைய குழப்பம் வந்தது அதைப் பிறகு சொல்லுறேன்....

                                             


நல்லூர் கோவிலுக்கு அருகில் பிறந்து ,வளர்ந்ததால் , சங்கீதமும் ஏதோ ஒரு விதத்தில கூடவே சேர்ந்து வளர்ந்தது . என்னோட அப்பா " சைவசமய ஞாணப்பழம் " அதால தேவார திருமுறைகளை பண்ணிசையில் படிக்கவேண்டும் எண்டு அதைப் படிக்க  ஒரு "சங்கீத பூசனம் "  ஐயாவிடமும் , ஒரு பண்ணிசைத் திலகம்  மாஸ்டர்டமும் ஏற்பாடு செய்திருநதார் .


                                 அதால சில வருடங்கள் படித்த சங்கீதம் கொஞ்சமும் என்னோட கூடவெ சங்கீதம் படித்த பெண்களின் முகம்கள் அதிகமாகவும் நினைவு இருக்கு,




                             
 நல்லூர் கோவிலுக்கு அருகில் இருந்த நாவலர் மணி மண்டபத்தில் ஒவ்வொரு ஞயிற்றுக் கிழமையும் பண்ணிசை வகுப்பு நடக்கும் . அதை பண்டிதர் கார்த்திகேசு அவர்கள் நடத்துவார்கள். பண்ணிசை என்றால் தேவார திருமுறைகளை தமிழிசைப்  பண்ணில் பாடுவது . அதில நான் படித்தத பண்ணில்  மாயாமாளவகௌளை, இந்தோளம் , இந்த ரெண்டின் ஆரோகணம் அவரோகணம் இரண்டும் தான் இப்பவும் நினைவு இருக்கு .


                             அதைச் சொல்லித் தந்த பண்டிதர் கார்த்திகேசு வேறு பல பண்கள் சொல்லி தந்தார் ,ஆனால் நினைவில் இல்லை .

                                   


                                                  மற்றபடி எனக்கு கர்நாடக சங்கீதம் முழுமையா தெரியாது. ஒரு சில ராகமும் அதுவும் , கல்யாணி,ஆரபி ,சிவரஞ்சனி ,சண்முகப் பிரியா, சாருமதி ,நீலாம்பரி போன்ற  அழகான பெண்களின் பெயரில் உள்ள  ராகங்கள் மட்டும் நினைவிருக்கு, அதுகள் அழகான பெண்களின் பெயரில் இருந்தபடியால் மட்டும் இன்னும் நினைவுருக்கு மறக்கவே முடியவில்லை!!!




                                     கோவிலை சுற்றி, நல்லை ஆதினத்தில், தெற்கு வீதியில்,கம்பன் கழகத்தில், மனோன்மணி அம்மன்கோவிலில் நிறைய சங்கீதக்கச்சேரி எப்பவுமே நடக்கும்! அண்ணாமலை இசை தமிழ் மன்றம் ஒவ்வொரு வருடமும் இசைவிழா நல்லை ஆதினத்தில நடத்துவார்கள்,


                                              அதில "சங்கீத பூசனம் " பொன் சுந்தரலிங்கம், "சங்கீத பூசனம் " திலகநாயகம் போல், பாடினால் அரங்கு நிரம்பி வழிந்து வெளியே ரோட்டை வழிமறித்துக்கொண்டு நிண்டு கேட்பார்கள் ,அவளவு பேமஸ் அவர்கள் இருவரும்.

                           


நல்லூர் கோவிலின் வடக்கு வீதியில் , நல்லைக் கந்தனின் அலங்கார அட்டகாச,பிரபலங்களில் இருந்து விலத்தி , "  நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ ...." என்று அமைதி நாடும் சாதாரண மனிதர்களின், சாமான்ய இசை அறிவின் விளிம்பில் அடக்கமாக ,அமைதியாக ,ஆர்ப்பாடம் போடாமல் இருந்த  மனோன்மணி அம்மன்கோவிலில்தான் அழகான இளம் பெண்கள் ஒவ்வொரு ப்வுர்ணமி தினத்திலும் பாடுவார்கள்.


                                  வெளியே மணலில் படுத்து கிடந்து கேட்கலாம் !


                       இளம் பெங்கள் பாடும் சங்கீதம் அவர்கள் போலவே இளமையா இருக்கும். பட்டுச்சீலை, மல்லிகைப்பூ மாலை, காதில லோலாக்கு , நெற்றியில் சாந்துப்பொட்டு ,என்று அவர்களே அம்மன் சிலைபோல , "நிலவின் ஒளியில் தெரிவது தேவதையா " என்பதுபோல சம்மானம் கட்டி இருந்து ,தேன் வழியப்பாட கோவிலை சுற்றியே சந்தன மல்லிகை வாசம் வரும்!.

                               
                                                        பெரிய கிழட்டு  "சங்கீத பூசனம் " வித்துவான்கள் காட்டும் "ஆலாபனை வித்தை" எல்லாம் காட்டா மல் இயலப்பாக   அவர்கள் இளமை குரலில் அந்த தெலுங்கு மொழிக் கீர்த்தனைகளை பாடுவது நிறைய " பீலிங்க் " கொடுக்கும் ,


                                           "எந்தரோ பா மகானுபாவ " தியாகராஜா கீர்த்தனை தொடங்க முளந்தண்டு குளிரும்,


                                         "நகு மோ மு  கனலே னே   நாசாலி  தெளிசே "  கீர்த்தனை ஆரம்பிக்க நாக்கில தண்ணி வத்திப்போகும் ,


                                      "ஜகதானந் தா தரா " பஞ்ச கீர்த்தனை தொடங்க வயித்துக்குள்ள பட்டம் பூச்சி பறக்கும்,


                                   ஆரபி ராகத்தில " சாடிஞ்சனே " தொடங்கி ,அதன் சரணத்தில "சமயாகி ரிக்கி தகு மாடலாகு" எண்டு கொஞ்சம் வேகமான தாளத்தில பாய நாடி ,  நரம்பெல்லாம் அதிரும்.

                                             


தியாகப்பிரம்மம் தியாகராஜா சுவாமிகளின் " பஞ்ச இரத்தின  கீர்த்தனைகளையே" அதிகம் ஆலாபனை, அலாரிப்பு , தனியாவர்த்தனம் எண்டு வில்லங்கமாப்  போட்டு அதிரவைகாமல், அழகான அந்த இளம் பிள்ளைகள் பஞ்சுபோலப் பாடுவார்கள்!


                                               என் நண்பன் கிருபாவையும் இழுத்துக்கொண்டு போய் தான் மணலில் படுத்துக் கிடந்தது அந்த சங்கீதத்தைக் கேட்டு இருக்கிறேன். அவனுக்கு சங்கீதம் தெரியாது ஆனால் நிலவின் ஒளியில் ரம்மியமான இரவை நன்றாகவே ரசிக்கத் தெரியும் . அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிதான ஒரு நிகழ்வு .

                           
                                              கடைசியில் எப்பவும் ஆனந்த பைரவி தாய் ராகத்தில்,  அதன் மூன்று ஜென்மராகங்கள் அசத்தும் " கற்பக வல்லி நின் பொற் பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா ..." பாடல் எப்பவுமே மனோன்மணி அம்மனின் தனிப்பட்ட விருப்பம் போல பாடி முடியும்.


                                       அந்த நிகழ்சி  முடிய பவுர்ணமி  முழு நிலவு நடு உச்சிக்கு மேல அடிச்சுப் பிடிச்சுப்  பிரகாசமாக வழிய, அதன் பால் ஒளி கோவிலிக்கு அருகில் இருந்த நெல்லிமரம் எங்கும் சிதறி , கோவில் சுவரில நடனமாட, கடைசி இரவுக் குருவியும் சோம்பலாகப் பறந்து செல்லும்


                                       அந்தக் கச்சேரி முடிய,  மனோன்மணி  அம்மனுக்கு ஆலாத்திகாட்டி. முடிவில, சுவையான  அவல், கடலை,சுண்டல்  தருவார்கள் ,  சங்கீதம் விளங்குதோ இல்லையோ  அவல், கடலை,சுண்டல்லுக்காகவே கச்சேரி முடியும் வரை  இருக்கலாம்!


                                          இதெல்லாம் நடக்கும்போது  அகோரமான  செல் அடியும் ஹெலி அடியும்  பொம்பர் அடியும்  சில நேரம்  நடக்கும். வாழ்க்கை ஒரு  ஓரமாக ஒதிங்கித்தான்  அப்போதெல்லாம் போய்க்கொண்டிருந்தது  ஆனால் அதில் ஒரு நளினம் இருந்தது


                             
 இப்ப  முக்கியமான  விசியதுக்குள்ளே வாறன்,  சாத்திரிய சங்கீதத்தின் பலவீனம் அதை முழுமயாக படித்தவர்கள்தான் அதன் சுவையை பிரிச்சு மேய்ந்து முழுமையா அனுபவிக்கலாம் என்கிறார்கள். என்னைப் போன்ற சராசரி  ரசிகர்களுக்கு  அதன் முழு வீச்சு விளங்காது ,அது ஒரு பலவீனம் , சரி, அப்ப அதன் பலம் என்ன என்று கேட்பிங்க , சொல்லுறன்....

               
                                                சுவிடனில் இருந்த போது என்னோட  ஒரு நல்ல ப்ரென்ட் ஸ்வீடிஷ் வெள்ளை இனத்தவா ,பிறந்து வளர்ந்து முதல் ஸ்வீடனை தவிர வேறு உலகம் தெரியாத அப்பாவி , கிளாஸிக்கல் வெஸ்டேர்ன் முயூசிக் முறைப்படி படித்தவா. Pichoda. Beethoven, Mozart, Ennio Morricone என்ற மேலைத்தேய இசை மேதைகளின் சிம்பொனி ஒர்கேஸ்ரா எல்லாம் விரல் நுனியில் பியானோவில் விளையாடும் மேதாவி .

                                 ஒருநாள் ஒரு பரிசோதனை போல அவளுக்கு  "அலை பாயுதே கண்ணா,........." என்ற Dr. மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா உருகி உருகிப் பாடிய பக்திப் பாடலை கிடாரில் வாசித்து காட்டி,  


                      "இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க்  வருகிறது? " 

                     
                                                          எண்டு கேட்டேன், நான் கிடாரில வைச்சு நோன்டியத்தை  , என்னோட நட்பாக இருக்கும்  ஒரே ஒரு குற்றத்துக்காக பொறுமையாகக் கேட்டுப்  போட்டு, அந்தப் பாடலின் அடி நாதமாக இருந்த ராகம் , அதன் உணர்ச்சிப் பிரவாகம்  , சாஸ்திரிய  இசை வடிவம்,  அவளை மயக்க கொஞ்ச நேரம் பொறுமையாக் கேட்டாள்..
 

                                  " இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க் வருகிறது " 

                           
                                                 எண்டு மறுபடியும் கெஞ்சிக் கேட்டேன்  , அவள்  உண்மையாகவே சீரியஸ் ஆக என்னைப் பார்த்து நம்பமுடியாத மாதிரி சொன்னது,  

                     
                                                  "  music is a kind of spritul dimension ,,i red  that many years back,,but feel that now,,,உருகி உருகி  அடி மனதில் அமைதியான, எளிமையான அர்த்தமுள்ள , தெய்வீகமான , கடவுளுக்கு நெருக்கமான ஒரு  பக்தி உணர்வு வருகிறது, அதை வார்த்தைகளில் மொழி பெயர்த்து  சொல்ல முடியவில்லை "  

                   
                                        என்றாள்.


                         ..ஒரு ஐரோபியப் பெண் "அலை பாயுதே கண்ணா,........." பாடலை சிலை போலவே நின்று ரசித்துக் கேட்டு அதைக்   " கடவுளுக்கு நெருக்கமான ஒரு  பக்தி உணர்வு " என்று சொன்னாள் பாருங்க , அதுதான் கீளைத்தேய கர்நாடக சாத்திரிய சங்கீதத்தின் பலம்!