Monday, 7 November 2016

காதலென்னும் காற்றினிலே ..முதல்தொகுப்பு

        காதல்கவிதைகள் எழுதுவதுக்கு ஒரு கவிதைமொழி இருக்கு அதுதான் இதயத்தின் மொழி. இதயத்துடிப்பு அதுதான் சந்தத்தில் மாறாத நடையோடு சிந்து வரிகள் எடுத்துக்கொடுக்கும். மற்றது கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் உல்டா, கொஞ்சம் உடான்ஸ், கொஞ்சம் தில்லுமுல்லு , கொஞ்சம் பொய். இவைதான் காதல் கவிதைகளின் ரகசிய  ரெசிப்பி

காதல் அனுபவிக்காமல் எழுத முடியாது என்று பலர் சொல்லுவார்கள். காதலில் தோல்வி அடைந்தவர்கள்தான் நல்ல நல்ல காதல் கவிதை எழுதி இருப்பதாக தமிழ் வாசக நண்பர்கள் மத்தியில் ஒரு கணிப்பு இருக்கு. அதை நான் நம்புவதில்லை. கவிதை எழுத முதலில் கிரியேடிவ் இன்டளியின்ட் வேணும். அப்படி மண்டைக்குள்ளே மசாலா  இருந்தால்தான் கவிதைமொழியில் என்னவும் எழுதலாம்,  
                           .
                                       எப்படியோ ,  காதல்  அது  யாருக்குதான்  இனிக்காது. ஆனால் அது எப்பவுமே கவிதை எழுதிக் கொல்ல நல்ல ஒரு கொன்செப்ட். நிறைய சென்டிமென்ட் அதில இருப்பதால் எப்பவுமே எல்லாருக்கும் பிடிக்கும் வாசிக்க .அதனால் தான் எண்பதுக்களில் அச்சு  உருவில் புத்தகமாக வந்த   வானம்பாட்டிக் கவிஞ்சர்களின் கவிதைகள் பிரபலம் ஆகியது 

இன்றைக்கு எல்லாருமே இன்டர்நெட் வலையை விரிச்சு வைச்சு அதில ஒரு சுவரைப் பிடிச்சு கவிதை எழுதிக் கிழிக்கலாம்  என்ற மிக மிக வசதியான ஊடக வாய்ப்பு வந்ததால் அதிகம் பேர் எழுதி அடிவேண்டியே  செத்தது காதல் கவிதைகள் தான். ஒவ்வொரு நாளும் வந்து குவியுது காதல் கவிதை.  

மற்றப்படி  அமர  காதல் உயிர் உள்ளவரை வாழும் ,  அதுக்கு இறப்பே இல்லை என்பதில் எனக்கு அதிகம் உடன்பாடு இல்லை. முக்கியமாக நிபந்தனை அற்ற காதல் என்பதே மனிதர்களுக்குச் சாத்தியமில்லாத ஒன்று. காதல் கொடுப்பதில் அதிகம் எதிர் பார்புக்களை வைத்திருப்பது. இன்றைய உலக வாழ்கையில் பெற்றுக்கொள்வதில்தானே நாங்களே அல்லாடுறோம். பிறகெப்படி காதல் நிலைக்கும். 

2013 இல் நிறையக் காதல்க் கவிதை எழுதி வாசகர்களின் அன்பையும்  அதே நேரம்  வெறுப்பையும் பெற்றுக்கொண்டேன்.இப்பெல்லாம்  காதல் கவிதை எழுத விருப்பம் இல்லாவிடினும் அப்பப்ப எழுத வைக்குது காதல் என்ற மென்மையான உணர்வு. 2013 இல் எழுதிய  கவிதைகளில்   சிலதை தொகுப்பு ஆக்கியுள்ளேன், இப்பிடி தொகுப்பு ஆக்குவதே புத்தகம் ஆக்குவதுக்கு  முன்னோடியா செய்கிறேன்.

 அப்புறம் பாச மலர்களே  அன்பு  நிறைந்த வாசமலர்களே வண்டுகள் வந்து தேன் உண்டு மயங்குமுன் இந்தக்   கவிதைகள்  பிடித்து இருந்தால் உங்க கண்ணீர்பூக்களின்  கருத்துக்களைச்  சொல்லுங்க..
......................................................................................................
சந்திக்காமலே
இருக்கும் 

வார்த்தைகளுடன் 

மவுனம் சண்டை போட்டு,

சொல்லாமல் சொல்லி, 
சிந்திக்காமலே 
வருவது 
கவிதை ஒன்றுதான் எனக் 
கடைசி வரை 
நினைத்திருந்தேன்,


தற்செயலாக
கடற்கரையில் 

உன்னையும்

உன் 

காதலையும் 
சந்திக்கும் வரை!

வார்த்தையில்லாத 

ஒரு 

மொழியில் பேச,

குரல் இல்லாமலே 

சங்கீதம் பாட,
சம்பவங்களே இல்லாமல் 
ஒரு 
கதை எழுத , 
உணர்ச்சி இல்லாமலே 
ஒரு 
கவிதை இயற்ற ,
தூக்கம் வராமலே 
கனவு காண ,
சிறகில்லாமலே 
ஒரு 
பறவையால் பறக்க ,
இதயம் இல்லாமலே 
நினைக்க ,
இதெல்லாம் 
முடியும் என்றால்.....
உனக்கும் எனக்கும் 
பிரியமில்லாத 
அந்தப் பிரிவும் சாத்தியமே!

.....................................................................
ஒரு புள்ளியில்
உன் கடைசி

வார்த்தையோட

இதுவரை எல்லாருமே 

எழுதிக் கவிழ்த 
காதல் மொழி 
மவுனமானது,

கடைசிப் பார்வையோட
கண் இருட்டாக 
கடைசி இஸ்பரிசதோட
உணர்ச்சி 
இழந்துபோனது,

வாசல்ப் படி இல்லாத 
வீட்டில் 
வசிக்கும் படி 
வட்டம் கீறிப்போட்டு 
வாழ்கைக்கு 
வரவேற்புரை குடுக்கின்றாய்.. 

இதுக்குப் பிறகும்
நான் விட்ட இடத்திலேயே
இன்னும்
நீயும் தேடிக்கொண்டிருப்பாய்
என்பதை
இன்னும்
நம்பிக்கொண்டிருக்க
இன்னும்
ஒரு வாழ்க்கை 
முழுவதுமே
தேவை என்பதை
நிரூபித்து விட்டாயேடி!!!

...................................................................................
வரட்டுக் 
கவுரவத்துக்கு 

வக்காளத்து வாங்கி, 

நினைவுகளை 

நிப்பாட்டி வைக்க 
ஒரு கிழமை

(அ)கால அவகாசம்!

வேறு வழியின்றி, 
கனவுகளைக் 

கழட்டி வைத்து

அநாதையான அந்த  ,

"காலமே இல்லாதா
ஒரு காலத்திலும் 
தளும்பாமல் 
தாக்குப் பிடிக்கும் உண்மை


உன்
நினைவுகள் 
கண்ட கனவுக்கும், 

என் 

கனவுகள் கண்ட 

நினைவுக்கும்,
டை
யி
ல் 
ஒருநாள் 
திட்டமிட்டபடியே 
சண்டை வந்தது!

மவுனம் ஆர்ப்பரித்து 
பொறுப்பில்லாமல் 
கட்டவிழ்ந்து 
கலவரப்பட்டு ,
கடைசியில் 

உன் கனவுகள் 
வென்றபோது 
நீ அழுதாய்,
என் நினைவுகள் 
தோற்றபோது
நான் சிரித்தேன், 

எப்போதும் போல 
பொறுப்போடு
மனசாட்சி 
மறுபடியும் 
மவுனமானது


உன்னோடு நானாகி, 
என்னோடு  நீயாகி, 

ஒற்றுமையில், 

கொடுத்து, வாங்கத், 

தெரியாமல் 
சில்லறைத்தனமாய் 
சிதைக்கப்பட்ட 
சின்ன சின்ன 
சந்தோஷங்கள், 


வேற்றுமையின்,
பிரிவின் வதையில் 

ஒவ்வொருமுறையும்

கனமான 

ஏதோவொன்றை 
கற்றுகொடுக்கிறது!

................................................................
ஆரம்பதில்
ஆர்வமில்லாமல் பார்க்க 

சுமாராகத் தெரிந்தாள்!

அப்புறம்

போனாப் போகுதெண்டு பார்க்க 
அழகா தெரிந்தாள்!
பின்னர் 
கொஞ்சம் வடிவாப் பார்க்க 
வண்ணமாகத் தெரிந்தாள்!
ஒரு கட்டத்தில் 
கவனித்துப் பார்க்க 
காதலாய்த் தெரிந்தாள் !
கடைசியில் 
காதலே வந்த பின்னர் 
கண்ணை மூடிக்கொண்டு 
நினைக்கவே
பேரழகியா தெரிகிறாளே!

இப்பிடித்தான்  என் மனதின் கடிதத்துக்கு 
மனசாட்சியின்  பதிலில் 

வெட்கம் இல்லாமல்

இளகி வழிந்து 

கூனிக் குறுகி 

குனிஞ்சு வளைஞ்சு,

விழுந்து கும்பிட்டு 
விட்டுக்கொடுத்து, 
ஒவ்வொறு முறை 
தோற்றுப் போயும் ,
அவளேதான் வேண்டுமென்று அடம் பிடிக்குறாயே, 
வெட்கமாக இல்லையா ? 
இப்படிக்கு 
என்றென்றும் ரோசமுள்ள
- இதயம் -

............................................................................
சட்டம் 
சட்டப்படி 
பிரிந்து போக வைத்த 

வருடங்களின் பின்

நட்புடன் நட்பாக 

நிகழ்ந்த நம் 
முதல் சந்திப்பில், 

மறைக்க முயன்ற 
உன் முகத்தில் 
அதே மயக்கும் சிரிப்பு,

கோபம் போல் 
நடித்த உன் 
கண்களில்
அதே கடவுளின் கருணை,

வேண்டா வெறுப்பா 
விருந்து வைத்த 
உன் பணிவிடையில் 
அதே பனியுருகும் பண்பு,

ஆனாலும் 
பிரிந்த போது 
இருந்தது போல் 
உன் வார்த்தைகளில் 
மட்டும் அதே வைராக்கியம்!

இப்போதும் 
உன்னிடம் சொல்ல
என்னிடம் 
ஒண்டுமே இல்லை
எண்டு 
உண்மை சொன்னேன் .. , 

என்னிடம் 
சொல்லவென உன்னிடமும் 
ஒண்டுமே இல்லை 
என்று அப்போதும் 
விட்டுக் கொடுக்காமல் 
பொய் சொன்னாய்!

இருந்தாலும் 
விளக்க வேண்டிய
வரட்டுக் கவுரவ 
விசியங்கள் 
ஏராளம் இருந்தது 
உனக்கும்,
எனக்கும் 
விதண்டாவாதத்துக்கும் 
நல்லாவே தெரிந்தும்,

குளிர் காற்று 
ஊசி இலை மரங்களில் 
அடித்து ஜன்னலையும் 
இடிச்சு மூடிய பிறகு...

வரவேற்பு அறையின் 
கண்ணாடி வழியே
இருளில் 
அர்லாண்டா* ஏர்போர்டுக்கு 
இறங்க வரும் 
விமானங்கள் 
ஓடு பாதையில் 
வழி தேடி 
ஒளி உமிழும்
தொலை தூர விளக்குகள்
இருவரையும் 
மௌனமாக்கிப் போட்டு
அதுபாட்டுக்கு 
விட்டு விட்டு கண்சிமிட்டுகின்றது!

.......................................................................
பார்க்காமலே இருக்க 
முயற்சிக்க

என் கண்கள்

கலவரம் தொடன்குவோமெனப்

பயப்படுத்த,

கதைகாமலே இருக்க 
முயற்சிக்க
என் காதுகள்
தனியாகப் கழண்டு போவோமெனப் 
பயப்படுத்த,

இடைவெளி விட்டு நிக்க 
முயற்சிக்க
என் இதயம்
இன்னும் இறுக்காமா 
இறுக்கிப் பிடிப்பேனப் பயப்படுத்த,

கொஞ்சம் தள்ளியே நிண்டுபார்க்க 
முயற்சிக்க
உன் நினைவுகள்
தனியாகவே வந்து ஒட்டுவொமெனப் 
பயப்படுத்த,

ஒப்பந்தப்படி 
ஒருகிழமை ஒதுங்கியிருக்க 
முயற்சிக்க
என் கனவுகள்
கண்ட்டபடி கலாட்டா தொடஙகுவோமெனப் 
பயப்படுத்த,

பூவையும் வண்டையும்
போல
கனவுகளையும் நினைவுகளையும்
காற்று புயலாக வந்தாலும்
பிரிக்கமுடியதெண்டு
மலர்களை மயக்கிய 
தென்றலே சொல்ல
உண்மையாகவே பயந்துபோனேன்!!!.

................................................................................
என்னைப் பொறுத்தவரை
எல்லாமே மறக்க முடிகிறது,காற்றோடு பாடிக் காட்டியதை

கிடாரில் வாசித்து காட்டியது,

மோதிர விரலைக் காட்ட
முதல் கவிதை எழுதியது ,

கடற்கரையில் ரெண்டுவரி
காவியம் ஆகிப்போனது,

கோவத்தில முடிச்சுப்போட்டு
இறந்து போன கவிதை,

அழுத கண்ணீர் வற்றமுன் ,
சிரித்த பகிடிகளின் சந்தோசம்,

ஒரு கிழமை சோதனை 
தந்த நரக வேதனை,

மேக்கப் போடாத படத்துக்கு
முதல் மரியாதை,

யாரோடயோ யாரையோ
முடிச்சுப் போட்ட அலட்டல்,

பேசிப் பேச்சை நிப்பாட்ட 
பேசாமல் மூச்சு தவறியது,

நீ கேட்ட கேள்விக்கு
நான் சொன்ன பதில்,

சின்னச் சின்ன சண்டை
முடிவில் பெரிய சமாதாணம்,

அதிகபட்சம் செருப்பாக
மிதிபட பேராசைபப்பட்டது, 

சொன்னது எல்லாமே
சொல்லாமல் விட்ட எல்லாமே

எல்லாமேக்குள் அடங்கும் எல்லாமே
அதுக்குள்ள அடங்காத எல்லாமே

இதெல்லாம் மறக்க முடிகிறது,
உன்னையும் 
உன் காதலையும் தவிர
அதுவும் 
என்னைப் பொறுத்தவரை!

......................................................................
காணாமல்போன 
என் பெயரைக் 

கண்டுபிடிக்க முயற்சிக்க 

அதுவுன் இதயவாசலில் 

தலைகீழா 
தொங்கிகொண்டிருந்தது !

கொஞ்சம் உற்றுப்பார்க்க
அது 
ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது!

வாசலுக்கு 
அந்தப்பக்கம் 
ஒய்யாரமானின்று
விதி 
வில்லங்கமாக சிரிக்க, 

இந்தப்பக்கம் 
ஒதுங்கியிருந்து
அறிவு 
அலங்கோலமாக அழ,

நடுவில 
அசந்தபாட்டுக்கு 
அனுபவம்
அமுங்கிப்போய் இருக்க, 
கனவழிந்து விழித்தெழுந்து 
கடைசியில்
"காதலில்விழுந்து காணாமல்போனவர் " 
பட்டியலில் 
என்பெயரையும் 
கண்டுபிடித்தேன்....!

...............................................................................
கடலளவு கருணை
காந்த விழி வழிய 

உலகளவு அன்பு 

இதயத்தை 

நெருக்கடியில் விழுத்தி 
மேகமளவு பாசம் 
மெல்லிய மனதில்

இமயமளவு மன்னிப்பு 
இளகிய 
வார்த்தையாகி 
வாழ்நாள் சந்தோசம் 
வாய்விட்ட சிரிப்பில்

உருகும் பனித்துளி 
பணிவாகிய 
காட்டாறு வியக்கும்
கவலையின் கண்ணீர் 
நினைவுகளைத் தின்ன
கனவுகளின்
வழியற்ற முடிவிலும் 
நீரோடைத் தெளிவு

இவளவு 
குழப்பத்திலும்,
பிரபஞ்சமளவு காதல்
நெஞ்சில் 
எப்படிச் சாத்தியது 
மவுனமான சிநேகிதம் 
மரணம் வரையுமென்று சொன்ன 
ஒரேயொரு 
பெண்ணிடம்?

..............................................................................
அறிவு கொடுத்த 

தெளிவிருந்தும்

மனம் 
சொன்ன 

சாட்சியியுமிருந்தும்,

இதயம்
முழுவதும் 
இரக்கமிருந்தும்,
நரம்பு
முறுக்கிய 
ரோசமுமிருந்தும்,

தலையில்
எழுதப்படிக்கத் தெரியாத
விதி
விலக்கில்லாமல், 
கிறுக்கியதால்

வழியிருந்தும்,
வாழ வழியிலாமல்,
அநாதையானது
காதல் மட்டுமல்ல
உன் 
கருணை முகமும்தான்!

.............................................................................
கறுப்பு வெள்ளையில
கண்ணா பின்னாவெண்டு 
வந்த

கனவுகளே,

காதல் வந்தபின் 

சுய கட்டுப்பாட்டில்,(!)
கவுரமா, 
கண்ணியமா,
கலர் கலரா வேற 
வருகுதேடி!.


கருங்கல்லில்,
கல்வெட்டில்,

காகிதத்தில்,

வடித்த எல்லாக் 

காலமில்லாக்
கற்பனைக் 
காவியங்களை விடவும்,
நிமிடங்களில் அழிந்தாலும் 
கடல் மணலில்
நீ கிறுக்கிய
நிஜமான 
இரண்டுவரி 
என்னைப்பொருத்தவரை 
எப்போதுமேயெனக்கு
விலைமதிப்பற்ற 
கவிதை!

..........................................................
சிணுங்கிச் சினந்து 
தூறல் போலத் 

தெளிக்காமல் ,

நானே

அடை மழைபோல
அள்ளிக் கொட்டுறேன்,

அதை
ரசித்துக்கொண்டு
அதில்
நனைந்துகொண்டு,
அதையே
சுவாசித்துக்கொண்டு
நீ ,

உன் கூந்தலில்
நனைந்து,
நெற்றியில்
வழிந்து,
மூக்கினில்
உருண்டு ,
சொன்டினில்
விழுந்த
முத்துக்களுடன் 
கவலைப்படும் 
உன் கண்ணீரை 
ஒரு மின்னல் வெட்டில்ப்
பார்த்த போது,

இடி மழையே
நானாகிப் பொழிந்தபோதும்
உன்
விழியோரம்
வழிந்த ஒரு துளி
என்னைப் பதற வைத்ததடி!!!

................................................................................
"கல்லானாலும் "
என்று அமைதி கொள்பவள் 

என்றோ ஒருநாள் 

என் உயிராவாள் என்று 

யாரை
நினைகேறேனோ 
அவள் என்னை விரும்பவில்லை...

அவள் அதிகமாக
யாரை நேசிக்கிறாளோ
அவன்
ஆண்டவருக்கு 
தன்னையே காணிக்கையாக்கினான் ...

இபொழுது 
என்னிடம் காதல் சொல்கிறாள் 
வேறொரு பெண்..
அந்தப் பெண்ணையா,
அல்லது 
இந்தப் பெண்ணையா,
எப்போதும் நம்புவது ?

அவள்
விரும்பும் மன்மதனையா
அல்லது 
கல்லானாலும் கணவனையா
இப்போதும் வெறுப்பது ?

என்றாவது 
என்காதல் வெல்லும் 
என்ற நம்பிக்கையுடன்
இவளவு வலி தந்தும் வாழ்கையை 
உயிராய் நினைக்க வைப்பதும் 
அந்தக் காதலே !

........................................................................
நேற்றொருத்தி 
எனது கவிதை

தனது சம்பவமென்றாள் 

அதில் பிழையிருக்கு

என்றவள் சொல்லத்தொடங்க 
அதை நீயே எடுத்து
முடிந்தளவு திருத்தி
உன் மொழியில்
எழுதிவிடு 
எனக்கு நேரம் மிச்சமென்றேன்!

எனது வார்த்தை,
எனது அனுபவம்,
எனது வாழ்வு,
எனது தோல்வி 
உனக்குமது 
நன்றாகவே பொருந்தினால்
அதையும் நீ ரகசியமா
என்னிடம் சொல்ல வேண்டாம்.

அந்த சம்பவத்தை
மனவெளியில் 
எடுத்துகொண்டு போ
அதையெல்லாம்
நான் படித்தாகிவிட்டது 
இனி
உலகத்தில் வேறு எவருமே
படிக்க தேவையில்லை!

எனக்கு நண்பிகள் 
அதிகம் இருப்பதாய்
அன்றொரு நாள் கூறினாய்,
அவர்களையும் கோள்மூட்டிப் பிரி
அட,
தனித் தனியயாக 
விளக்கம் சொல்லி
எதுக்கு ஒவ்வோன்றாய்
உன்னுடையதாக்க வேண்டும்?

ஒரே நேரத்தில்
முடிந்தளவு எல்லாத்தையும்
எடுத்துக்கொள் 
எனக்கென்ன கவலை
எழுதச்சொல்லி தான்
என்னை சுற்றி நிமிடங்களில் 
எத்தனையோ நடக்குதே!

............................................................................
தொடர்கதையின் முடிவில்
தனிமை தரும்

பலன்களை

தொடாமல் ரசிக்கத்

தொடங்கியிருக்கிறேன்..
ஒரு 
கவிதைத்தொகுப்புப் 
புத்தகத்தை 
விரும்பிப்படிக்கலாம்,
நட்புகளோடு
நாற்ப்பது வருடங்களை
அசைப்போட்டே 
பொழுது போக்கலாம்
அயல்வீட்டுக் 
குழந்தைகலோடு 
விளையாடிக்கொண்டிருக்கலாம்..
மேகம் வழிதவறி போகும்
பால் வீதி எங்கும்
மெளனம் அழகான மொழியென
கடைசிக் குருவியும் சொல்லிப்பறக்குது 
இது
பிரிவின் வதை என்கிறேன் நான்.
அது
அன்பின் வதை என்கிறாள் அவள் !
வாழ்க்கயை வாழ்ந்துபார்என 
வழியனுப்பியவளிடம்
முடிவு சொல்ல வாய்வருவதில்லை!
ஒரு யுகமாகக் 
விடியல் காத்திருக்கிற 
கனவோடும் ,
நிறம் மாறிக்கொண்டிருக்கும் 
நினைவோடும்
எங்கிருந்து எங்கு போவதென்பதுதான்
தற்போதைய குழப்பம்...............!

..................................................................................
கடைசிக் காதலி 
என் வயதான 

கவிதைகளைத் தன்

கசப்புக் கடந்தகாலம் என்றாள்,


அதன் மெலிந்த 
வரிகளைத் தன் 
வாழ்நாள் வலி என்று 
அதன் அலங்கார 
வார்த்தைகளைத் 
தன் அலங்கோல 
வாழ்க்கை என்றாள்,

அதன் கண்ணியமான 
கருத்துக்களைத் 
தன் களவாடப்பட்ட
கற்பு என்றாள்,

அதன் அபத்தமான 
முடிவுகளைத் தன் 
ஆதித் தொடக்கம் என்றாள்,

நிகழ்காலத்தில் 
பயந்துபோய் என் 
இறுதி மூச்சில் 
நானாக அவைகளை 
எழுதவில்லையென்று
பொய் சொன்னேன் ,

யாரும் யாராகவும் 
இல்லாத போதுதான் 
கவிதைகள் 
கசியத் தொடங்குமென்று 
உண்மை சொல்லி ,
என் கழுத்தைப் பிடிச்சு நெரிக்க 

நாடி விழுந்த
என் வயதான கவிதைகள் 
ஒவ்வொன்றாய்
சாகத் தொடங்கியது ! 

.......................................................................................
தோல்விகள் என்னை 
முழு மூச்சாக முடிந்தவரை 

முடிந்துவிட்டது 

அவமானப்படுத்தின பின்னும், 

கருணை 
என் 
நினைவுக்குள் வர விரும்பாமல் 
வருடக் கணக்கில் 
விலகியே நின்றது ,

எப்படி உன்னால் மட்டும்,
கடந்து போகும் ஒரு 
பார்வையால் 
மலையளவு மனிதாபிமாணத்தை
பெருமைப்படுத்த முடிந்தது ?

அதனால்தான் என்னவோ ,
ஒரு யுகக் காதலோடு, 
நினைவுகள்,
நிமிசங்கள் நெரிபட,
விருப்பங்கள் ,
ஏக்கம்கள் எரிய ,
தவிப்புக்கள் ,
உன் 
கனவுகளை வாழவைக்கக் 
கடல் வேறாகினும்
ஒரு நீரே மழை

கால் நனைக்கப் பிடிக்கும் 
நுரை அலைகள் 
கொஞ்சம் வா என்கிறதா 
அல்லது 
கொஞ்சவா என்கிறதா 

நம்பிக்கை
எதிர்கால வெற்றிகளுக்காக 
காத்துக் கொண்டிருகிறது
ஆழியின் தாழமுக்கம் 
இடையில்
கிளிஞ்சல்கள் போலவே 
சிக்கிக்கொண்டு 
இறந்து கொண்டிருக்கும்
இதயம் ஒன்று
இன்னமும் துடித்துக்கொண்டிருக்கு!
.....................................................................................................................
பனை 
வடலிப் பாதை,
தென்னை
மரத் தோப்பு ,
பச்சை 
வயல் வரம்பு ,
தரவைக்
கடல் வெளி ,

தாமரைக்
குளத்தடி ,
ஆலமர
அரசமரத்தடி ,
பூவரசமரக்
குச்சு ஒழுங்கை,

கோவில்
திரு விழா,
திருவெம்பா
பயனை ,
சனிக்கிழமை
ரியூடரி ,
இல்ல
விளையாட்டுப் போட்டி ,

இதில்
ஏதோ ஒன்றில்
சொல்லத் துணிவில்லாமல் ,
மவுனமாகிப்போன
காதல்,

கனவிலையும்,
நினைவிலையும்
மட்டும்
இன்னும்
காதலிக்கப்படுகிறது.........
........................................................................................................
பார்த்தவரை
படம் வரைந்து 
நினைத்திருந்தேன்
முகம் தான் 
மறக்கமுடியவில்லை  என்று ,

கேட்ட வரை
இன்று முதல் தெரிகிறது
குரலும் கூட
கேட்காமல்
இருக்கமுடியவில்லை என்று ,

நேற்று வரை
உன்
நடந்த பாதச்சுவடுகள்
இன்றைக்கும்
கடல் மணலில்
காத்திருக்க
வேண்டுமாமென்று
அலைக்கும் கரைக்கும்
சண்டை

இப்படியே போனால்
மறப்பதுக்கு
இறப்புக் கூட
உதவாது போல
இருக்குதடி!

யாருமே எழுதாத 
அதைக்  கவிதையாக்கியெழுத, 
கண்ணா பின்னாவென்று கிறுக்கி,

வார்த்தைகளை வளைத்து ,
மொழிக்கு வலி கொடுத்து,
உவமைகளை உதறவைத்து,
படிமங்களைப் பதறவைத்து ,

சிலேடைகளை சிரிக்கவைத்து,
இலக்கணத்தை இளிக்கவைத்து,
தோல்வியிடமே தோற்றபின்னும் ,

ஒத்துக்கொள்ளவே
மனம் வருகுதில்லையடி,
இந்த உலகத்தில
எழுதவே முடியாத
ஒரு கவிதையே
நீ ஒருத்தி மட்டும்தான் என்று!