Saturday 2 January 2016

முஸ்தப்பா

பெண்கள் பற்றிய புரிந்துணர்வு  அதிகமில்லாத  வாழ்க்கையில் கடக்க முடியாத  சுவர்கள்  இல்லை  என்று படிப்பறிவு சொல்லிக்கொடுத்த அனுபவம் எப்போதும்போல உண்மையாக  இருப்பதில்லை.  அதன் பாதிப்பில் ஒவ்வொருவரும்  ஒவ்வொருவிதமான புளியமரம் ஏறிப்  குருட்டுப்  பேய்க்கு வாழ்க்கைப்பட்டது போன்ற  படிப்பினையைப் பெற்றுக்கொள்ள அப்பப்ப முஸ்தப்பா போல சில நண்பர்கள் வந்துதான் போகிறார்கள்.

                                             வாழ்க்கை அனுபவத்தில் சுத்துமாத்து  என்ற வார்த்தையை சந்தி முடுக்குகளில் எடக்கு முடக்கா சந்தித்த அனுபவம் நிறையவே இருக்கு , ஆனால் அதுக்கு  சுருக்கமான பெயராயும் சில் மனிதர்கள் இருந்து இருக்கிறார்கள் , அவர்களே அதுக்கு விரிவான பெயராயும் இருந்தார்கள்  என்பதை புரிந்து கொண்ட நாளில் அவன்  என் சிந்தனைகளை விட பிஸியாக இருந்தான்  . அவன் நல்லவனா கெட்டவனா என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை. ஒரு நாளின் முடிவில் அமைதியாக இருந்து ஜோசிதால் அவன் வாழ்கையின் சுவாரசியமான ஓரங்களில் உரசிக்கொண்டு பயணிக்கும் ஒரு மனிதன்.

                                               ஒஸ்லோவின்  கடைநிலை  நகர விழிம்பில் ,வெளிநாட்டவர் அதிகம் நோர்வே மக்களுடன் கலந்து  வசிக்காத  க்ரிங்க்சு இல் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் உயரமான தொடர்மாடி வீடுகளுக்கு மெட்ரோ ரெயில்வே ஸ்டேசனில் வந்து இறங்கி இடதுகைப் பக்கமாக சொங்க்ஸ்வான் நெடும் சாலையைக் கடந்து கீழ்நோக்கிப் போகும் இறக்கமான படிகளில் இறங்கத் தொடங்கும்போது வலது பக்கம் உள்ள மூலையில் சின்னதாக முகத்தை இழுத்து மூடிக்கொண்டு " யார் வருவார் எப்போது " என்பது போல துருகிக் கடை இருந்தது.

                                      க்ரிங்க்சு  நவீன ஒஸ்லோ நகரத்தின் கட்டை விரலில் போட்ட மாணிக்க மோதிரம் .வில்லோ மரங்களை  தென்றலே அசைக்க விரும்பாத பின் அந்தி மாலை போல அமைதியான பிரதேசம், பழமையான நோர்பேறி சிர்க்கா என்ற தேவலாயம் இருக்குமிடம். அன்பான மனிதர்களின் சரணாலயம் . பத்து நிமிட நடை தூரத்தில் சொங்க்ஸ்வான் ஏரிக்கரை. கப்பல் ஓடி திரைகடல் திரவியம் தேடிய பணக்கார நோர்வே மனிதர்கள் அதிகம் ஆடம்பரமாக  வசிக்கும் பகுதி .அநாவசியமாக இரைச்சல்  கையை விட்டு நோண்டாத அதன் அமைதி பிரமிக்க வைக்கும் . அதன் அழகு யாருமே எழுத முடியாத ஒரு கவிதை மொழி .

                                           முஸ்தப்பா அந்தக் கடையை ஒரு வருடம் வாடகைக்கு எடுத்தான், அவன்தான் முதலாளி , ஆனால்   சில மாதங்கள் மட்டுமே நடத்தினான், அப்போதுதான்  அவனுக்கு நான் நண்பன் ஆனேன். நானாக அவனோடு நண்பன் ஆகவில்லை. ஏதோவொரு உள்மன எச்சரிக்கையில் அவனை நானாக நல்ல நண்பன் எண்டும்  சொல்வதில்லை .ஆனால் முஸ்தப்பா என்னை ஒரு நல்ல நண்பன் எண்டு எப்பவும் அந்தக் கடைக்கு போகும் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு திரிந்தான்.

                                           தனிப்பட எனக்கு முஸ்தப்பா மிகவும் பிடித்த ஒருவன் . நல்லவனுக்கு நல்லவன் போன்ற அவன் தத்துவம் எப்பவுமே என்னோடு கை கொடுத்ததும் கை கோர்த்தும் பயணித்தது . மன அழுத்தத்தில் ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் இருந்த நேரம் " வாழ்க்கை வாழ்வதுக்கே " என்று ஜன்னல்களை அகலமாகத் திறந்து விட்ட உண்மையான நண்பன் . அவனோட லைப் ஸ்டைல் ஒரு பாம்பும் ஏணியும் விளையாட்டு. அதில் அவன் எப்பவுமே ஏணியா இருக்க விரும்பினான்,,எடேன் தோட்டத்தில் புசிக்க விரும்பிய கனியைக் கொடுத்துப்  பாம்புபோலப் பெண்கள் வந்தார்கள்

                                       அவனோட கடைக்கு க்ரிங்க்சு இல் உள்ள ஒரேயொரு வெளிநாட்டவர் அதிகம் வசிக்கும் ஒன்பது மாடி தொடர் குடியிருப்பில் வசிப்பவர்கள்தான் வாடிக்கையாளர் .நோர்வே வெள்ளை மக்கள் அந்தக் கடைக்கு சூப்பர் மார்கெட் மூடி உள்ள வார இறுதி நாட்களில் , அல்லது இரவு பதினோரு மணிக்குப் பிறகு தான் வேறு வழியிலாமல் என்னவாவது வேண்ட அவசரத்துக்குப் போவார்கள்.முஸ்தப்பா  அந்த வியாபாரத்தில் தான் சிலந்திபோல தொங்கிக்கொண்டு  அதை ஓட்டிக்கொண்டிருந்தான் .

                                        காரீம் அல்ஜுமைரி முஹம்மது  முஸ்தப்பா  வடக்கு ஈராக்கில் உள்ள உலகின் முதல் நாகரீகம்  தோன்றிய சுமேரியர்களின்  ஆணி வேரடியில்  யுபிரடிஸ் டைகிரிஸ் என்ற இரண்டு நதிகள் பாயும் கழிமுகத்தில் உள்ள ஒரு இடத்தில பிறந்தவன். தன்னை எப்பவும் அசுமேரி என்று பெருமையாகச் சொல்லுவான், ஈராக்கி என்று சொல்லவே மாட்டான் ஈரான்நாட்டுக்கும்  ஈராக் நாடுக்கும்  எல்லைச் சண்டை புருஷன் பொஞ்சாதி சண்டை போல நடந்த வருடங்களில் இள வயதில் நோர்வேயிட்கு அரசியல் அகதியாக வந்தவன் ,நோர்வே மொழி அரபிச் சத்தத்துடன் உரத்துப் பேசுவான்.

                                      நோர்வேயிய மொழியில் பீய்பாண் என்று ஒரு இடறலான வார்த்தை இருக்கு. அதுக்கு அர்த்தம் டேய் சனியன் என்பது. நோர்வேயிட்கு வரும் வெளிநாட்டவர் முதன் முதலில் அறிந்துகொள்ளும் வார்த்தை அது. அந்த வார்த்தையை நோர்வே மக்கள் கோபம் வரும்போது அல்லது நெருங்கிய நண்பர்கள் உரையாடும்போது மட்டுமே பாவிப்பார்கள். முஸ்தப்பாவுக்கு அது எப்பவுமே என்னோட கதைக்கும்போது உரையாடலின் தொடக்கத்தில் அல்லது முடிவில் வந்து விழும். அது எனக்கும் நெருக்கமாக இருக்கும். அதன் தரக்குறைவான அர்த்தம் அவனைப் பொறுத்தவரை யானையில் நுளம்பு கடிச்ச மாதிரி

                                     சதாம்உசேன் போல  உயரமானவன் முஸ்தப்பா , அவரைப் போலவே எடுப்பான அடர்த்தியான மீசை . எப்பவுமே விலை அதிகமான டிசைன் கடைகளில் விற்கும் உடுப்புகள் தான்  செலக்ட் செய்து வேண்டிப் போடுவான் அவனோட வடிவு அது ஒரு மன்மத அம்புகள் பாயும் கந்தர்வக் கவர்ச்சி. தலை மயிர் ஈச்சம் பத்தை  போல அடர்த்தியான சுருள் முடி , முகம் வச்சிரம் போட்டு அடிச்சது போல வனிலாக்  கலர் கலந்த  வெள்ளை நிறம் . கண்ணில எப்பவுமே ஒரு அவசரமாக  அடைக்கலம் தேடும் அவதி, அவன் சிரிப்பு எந்தப் பெண்ணையும் நின்று நிமிர்த்து நேராகப் பார்த்து சில நிமிடம் ரசிக்க வைக்கும், அப்படி குழந்தைப்பிள்ளைகள் போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பான்.

                                        அவன்  எப்பவுமே உரலில அவல் இடிச்ச மாதிரி கதைச்சுக்கொண்டு இருப்பான், ஒன்று அவன் வைச்சு இருக்கும்  மொபைல் போனில் கதைச்சுக்கொண்டு இருப்பான், அவன் கடையில் வேலைக்கு வைத்து இருக்கும் இளம் பெண் பிள்ளைகளோடு கதைச்சுக்கொண்டிருப்பான், அல்லது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள இழுத்து வைச்சுக் கதைச்சுக்கொண்டிருப்பான்,  அல்லது கடைக்கு வெளிய வந்து ரோட்டால போற யாரையாவது கூப்பிட்டு வைச்சுக் கதைச்சுக்கொண்டிருப்பான், சில நேரம் என்னக்கே போன் போட்டு வரச்சொல்லி கதைச்சுக்கொண்டிருப்பன்,

                          "  மாலிக்,  பீய்பாண் , உனக்கு ஒரு விசியம் தெரியுமா , பீய்பாண்,  எனக்கு    யாரோடயாவது கதைக்காம அஞ்சு நிமிஷம் இருந்தா நடு   மண்டை வெடிச்சு சிதறும் போல இருக்கும், பீய்பாண் ,  பல  சனங்களுக்கு வாய் என்னத்துக்கு இருக்கு எண்டே தெரியாது, பீய்பாண்  இந்த நோஸ்கங்களுக்கு வாய் எங்கே இருக்கே எண்டே தெரியாது ,பீய்பாண் இவங்களுக்கு சிரிக்க முதல் தெரியாதே , பீய்பாண்   இவங்கள் சிரிச்சாங்கள் எண்டால் செத்த பிணம் சிரிக்கிறது மாதிரி இருக்கும் எனக்கு ,, பீய்பாண் "

                                      எண்டு சொல்லுவான், அவனோட அவதானிப்புகள் கொஞ்சம் உண்மைபோலதான் எனக்கும் இருக்கும். ஆனால் அதை அலட்டிக்கொள்ளாமல் சும்மா கேட்பது. பாணும் பருப்புக்கும் நடுவில் உம்பளக்கட மாசி சம்பல் வந்தது போல இருக்கும் அவன் அப்படி சொல்வது 

                                         அவனோட கடையில் அவன் ஒருநாளுமே கையைக் காலை ஆட்டி குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யிறதைப் பார்த்ததே இல்லை.எப்பவும் ஒரு இளம் பெண்ணை சாமான் அடுக்க ,சாமான் எடுக்க வேலைக்கு  வைச்சு இருப்பான். ஒட்டகத்தில் ஏறி இருக்கிற மாதிரி கசியரில் உயரமான ஸ்டுல் இல் அவன் இருப்பான். க்ரிங்க்சு பல்கலைக்கழக மாணவர்கள் தங்கிப் படிக்கும் இடம், அது அவனுக்கு வாசியாகப் போயிட்டுது. அதால் எப்பவுமே அவனுக்கு பார்ட் டைம் வேலைக்கு மாணவர்கள் கிடைப்பார்கள். அதில இளம் பெண்களை மட்டும் தான் வேலைக்கு எடுப்பான். அவர்கள் அழகாக இருப்பார்கள் .

                                        அவனோட மிகப்பெரிய பலம் அல்லது புத்திசாலித்தனம் எந்த ஒரு பெண்ணுடனும் அஞ்சு நிமிஷம் பேசினான் என்றால் அந்தப் பெண்ணின் சைகோலோயியை சிரிச்சு சிரிச்சே அடியோடு பிரட்டி பிரதி எடுத்திடுவான். அப்படி உருவி எடுக்கிறது அவனோட பிறவிக் கலை. அப்படிதான் ரிஸ்வாணாவும் சொன்னாள்,சிசிலியாவும் சொன்னாள், அவன் கடையில் ஒரு கிழமை மட்டுமே வேலை செய்த ரெண்டு இளம் பெண் பிள்ளைகளும் சொன்னார்கள் ,அந்தக் கடைக்கு தபால் போட வந்த தபால்காரியும் சொன்னாள்  அது ஏறக்குறைய அவனோட மிகப்பெரிய பலவீனம் போலவும் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும் .

                                       அவனோட கடைக்கு நான் எப்பவுமே ஏதாவது பொருட்கள் வேண்டப் போவது. அந்தப் பொருட்கள் மிக அருகில் உள்ள நோர்வே நாட்டவரின் சூப்பர் மார்க்கெட்டில் வேண்டாலாம். ஆனாலும் அவனும் ஒரு வெளிநாட்டவன் அவனும் பஞ்சம் புழைக்க வேண்டும் என்று நினைத்து பஞ்சியப் பார்க்காமல் பாதைகளில் ஏறி இறங்கிப் போவது. அது எப்படி முஸ்தப்பாவுக்கு இந்த விசியங்கள் அவளவு இலகுவாகக் கை வருகுது என்று அவனோட பழகிய சில நாட்களிலேயே கேட்டேன், அவன் என்னை எப்பவும் மாலிக் என்றுதான் சொல்லுவான் அதுக்கு அரபியில் என்னோட பெயரின் அர்த்தம் எண்டு சொல்லுவான்

                             " முஸ்தப்பா  என்னடா,,ரெண்டு நாளைக்கு முன் வேலை செய்த அந்த நோர்க்ஸ் பெட்டையைக் கானேல்லேயே,,இது யாரடா ஒரு புது பெட்டைய வேலைக்கு வைச்சு இருகிறாய் "

                               " ஹ்ம்ம்,,மாலிக்,,அவள் ஒரு உதவாக்கரை,,வேலைக்கு உதவ மாட்டாள்,,அதால வீட்டுக்கு அனிப்பிட்டேன் "

                                " என்ன வேலைக்கு உதவமாட்டாள்கள் எண்டு சொல்லுறாய் முஸ்தப்பா "

                                   " ஹிஹிஹிஹி ,,இவளுகள் சோம்போறிகள் மாலிக்,,நான் ஒண்டு சொன்னா இன்னொன்னோடு செய்யுராளுகள் "

                                 " முஸ்தப்பா ,,நீ சொல்லுறது அவளுக்கு விளங்காமல் இருக்கலாம் தானே "

                                        "  ஹிஹிஹிஹிஹி,,இவளுகளா ,,ஹிஹிஹி பழுத்த பழத்தையும் மிஞ்சி வெம்பிப் பழுத்த பிஞ்சுப் பழங்கள் "

                                   " என்னடா இப்பிடி சொல்லுறாய் "

                                     "  மாலிக்,,உனக்கு இதெல்லாம் விளங்காது ,,இந்த உலகம் ஏன் சுத்துது சொல்லு பார்ப்பம்,"

                                          " அது சூரியனின் ஈர்ப்பு விசையில் அப்படி சுத்துது எண்டு நினைக்கின்றேன் "

                               " மாலிக்,, உலகம் சுத்துது ஏனென்றால் பெண்களால் தான் காரணம் ,,உனக்கு இது புரியாது சனியனே "

                                 " அப்படியா,,இப்பிடி ஒரு விளக்கம் இன்றுதான் கேள்விப்படுறேன் "

                                      " சரி அதை விடு மாலிக் ,,ரிஸ்வானா ஏன் இப்ப கடைக்கு வாறதில்லை ,அவளைப் பாற்றி என்னவும் அறிஞ்சியா "

                                  " ரிஸ்வானா  யார்பா ,,அவளை எனக்கு தெரியாதே "

                                    " அவள் தான் உன்னோட அப்பர்த்மேண்டில் வசிக்கிறாலே ஈரான் நாட்டுக்காரி "

                                   " அப்படியா,,எனக்கு அவளைத் தெரியாது "

                                  " டேய்  சனியன் ,,அண்டைக்கு நீ பேரீச்சம்பழம் வேண்ட வந்தநேரம் என்னோட கதைச்சுக்கொண்டு நிண்டாளே அவள் டா,,அவள் உன்னைத் தெரியும் எண்டு சொன்னாளே "

                                          " நான் உன்னோட கடைக்கு வாற நேரமெல்லாம் நீ யாரோ ஒரு பென்னோடுதானே கதைச்சுக்கொண்டு நிக்குறாய்,,இதில யாரை எவளை நான் நினைவு வைச்சு அடையாளம் காணுறது சொல்லு பார்ப்பம் முஸ்தப்பா "

                                         " ஹிஹிஹிஹி டேய் சனியன் , நானா கதைக்குறேன்,அவளுகள் தானே  வழிஞ்சு வழிஞ்சு கதைகிராளுகள்,,சூடு ஏதிப்போட்டுப் போற பாலைவனப் புயல்கள் அவளுகள் "

                                         " நீ ரிஸ்வானாவோடு என்னவும் விசர்க்கதை கதைச்சு இருப்பாய் அதால அவள் இங்கால வரப் பயப்படுவாள் "

                                             " டேய்   சனியன் ,,அவள் தாண்டா டபிள் மீனிங் இல கதைப்பாள்,,நீ சும்மா பொத்திக்கொண்டு இருக்கு,,ஆனால்  ஒரு சின்னப் பிரச்சினை நடந்தது "

                                           " ஒ, உனக்கு சின்னப் பிரச்சினை ,,உன்னோட அளவுகோலில் ,,ஆனால் ,நீ சின்னப் பிரசினை எண்டு சொன்னால்,,அது  உலகமாக பெரிய பிரசினையாதன் இருக்கும் "

                                            " டேய் சனியன்,,அவள்  போன் அடிச்சா எடுக்கிறாள் இல்லையடா , வொயிஸ் மெயில் ரெக்கொர்டிங்கில போகுது "

                                        " ஒ அப்ப அவள் எச்சரிக்கை ஆகி இருக்கிறாள் என்று அர்த்தம் "

                                       " ஹிஹிஹிஹி,,டேய் சனியன் ,,,பொறு அவளுக்கு செய்யிறன் வேலை ,,உன்னோட அப்பார்ட்மெண்ட் இல்  எட்டாவது மாடியில் இருக்கிறாள் எண்டு சொன்னாள், "

                                     " சரி அதென்ன அந்த சின்னப் பிரச்சினை ,,எனக்கு சொல்ல விரும்பினால் சொல்லு முஸ்தப்பா "

                                    " ஹிஹிஹிஹி ,,அது,,,ஹ்ம்ம்,,அதை விடு சனியன் ,,பெண்கள் ஆண்களுடன் கதைச்சுக்கொண்டு இருக்கும் நேரத்தை விட கதைக்காமல் இருக்கும் நேரம் தான் அதிகம் ஆண்களை ஜோசிப்பாளுகள் ,,அதுதான் வுமன்  சைகோலோயி ,,ஆனால் இவள் கிறுக்குப் பிடிச்சவள் போல இருக்கிறாளே "

                                " நீதான் வுமன்  சைகோலோயி இல் மாஸ்டர் டிகிரி முடிச்சவன்,,நீ சொன்னால் அது சிக்மண்ட் பிரெய்ட்  சொன்ன மாதிரி உண்மையாத்தான் இருக்கும் "

                                   " ஹிஹிஹிஹி   சரி அதை விடு சனியன் ,,அவளைக் கண்டாள் ஒரே ஒருக்கா கடைக்கு வந்திட்டுப் போகச்சொல்லி சொல்லுவியா,,அதோட நான் இந்த சின்னப் பிரச்சினை முடிச்சு வைக்கிறேன் எண்டு சொல்லு,,நீ சொன்னாள் சிலநேரம் கேட்பாள்,,நீ ரெம்ப நல்லவன் எண்டு அவளுக்கு சொல்லி வைச்சு இருக்றேன் மாலிக் ,,ப்ளிஸ்  சொல்லுவியா "

                                  "  பார்க்கலாம் முஸ்தப்பா,,அவளைக் கண்டால் கேட்குறேன்,,ஆனால் நான் இதுவரை அவளோடு கதைத்ததே இல்லை,,"

                                " டேய்,,சனியன்  உன்னை என்னோட பெஸ்ட் பிரென்ட் எண்டு நினைக்கிறன்,,இப்பிடித்தான் நல்ல நண்பர்கள் அவசரத்துக்கு உதவ மாட்டாங்கள் எண்டு சொல்லுறது "

                               " சரி உன்னோட பிரச்சினையை சொல்லு இப்பவாவது "

                              " டேய் சனியன்,,,அது  ஊசி போற இடத்தில உலக்கையை வைச்சு ஓட்டுறது போல கொஞ்சம் குழப்பம் ,,ஹ்ம்ம்,,,அது உனக்கு இப்ப தேவை இல்லை,,பிறகு சொல்லுறேன் "

                              " முஸ்தப்பா,,இப்ப உன்னோட கதைச்சுக்கொண்டு நிக்க நேரம் இல்லை,,நான் வேலைக்கு போக வேண்டும் பா "

                               " என்னடா ரெண்டு நிமிஷம் கதைச்சுதுக்கு வருஷம் முழுக்க கதைச்ச மாதிரி சொல்லுறாய் டேய் சனியன் "

                                      " அடப்பாவி,,இப்ப அரை மணித்தியாலம் கதைச்சே காற்றோடு போயிட்டுது ,நான் போறேன் பிறகு வந்து கதைகுறேன் "

                                   " சரி,,போய்த்தொலை,,ரிஸ்வாணாவை கண்டால் மறக்காமல் கேள் ஓகே தானே , வெளிய தட்டில டுரியான் பழம் பழுத்து மணக்குது ரெண்ட எடுத்துக்கொண்டு போ. அதுவும் கையை விடும் போல இருக்கு கொண்டு போ .காசு வேண்டாம் ,, "

                                         நான் ஒரே ஒரு டுரியான் பழத்தை சொப்பிங் பாக்கில் எடுத்து வைச்சுக்கொண்டு வந்திட்டேன்.  அன்று முஸ்தப்பா அவனோட சின்னப் பிரச்சினையை எனக்கு சொல்லவில்லை , முதல் அதைக் கேட்டு அதுக்கு தீர்வு சொல்ல நான் என்ன சைகோ அனலைசிங் கவுன்சிலிங்கா  செய்துகொண்டு இருக்கிறேன் நீங்களே சொல்லுங்க பார்ப்பம் . நானே குருவி தலையில பனங்காய் போல தேவை  இல்லாத பிரச்சினைகளில் தலையைக் கொடுத்துப்போட்டு சேனப்பன் வீட்டுக் குரங்கு இழனிக் கோம்பைக்க கையை விட்ட மாதிரி   போற பாதை தெரியாமல் தடுமாறிக்கொண்டு பம்மிக்கொண்டு இருக்கிற ஆள் .

                                                  ரிஸ்வானாவுக்கு ரிஸ்வானா என்ற பெயரே முஸ்தப்பா சொல்லித்தான் எனக்கு தெரியும்.ஆனால் அவள் என்னோட அப்பாட்மென்டில் இருந்தாள். கன்னத்தில  கோபுர சந்தனம் தடவின மாதிரி அழகான நடுத்தர வயது, கொஞ்சும் இளமை ஆடாமல் தீர்க்கமாக நடப்பாள் ,தனியாவா அல்லது கணவனுடம் இருக்கிறாளா எண்டு தெரியாது.மூன்று சின்னப் பிள்ளைகளுடன் எப்பவும் வெளிய போவாள் . அடக்கமான பெண்.   ஊமத்தம்பூப்போல  பெரிய முகம் . கோடையில் நானும் என் நோர்ஸ்க் நண்பர்களும் வெளியே மர வாங்கில் பியர் அடிச்சுக்கொண்டு இருக்கும்போது  நிமிர்ந்தே எங்ககளைப் பார்க்க மாட்டாள். 

                              அரபி நாட்டவர்களுடன் நாங்கள் அவர்கள் வழியில் குறுக்கிட்டு வழமையாக எல்லாருக்கும் சொல்லும்  " ஹாய் " என்பதைக்  கூடச் சொல்ல மாட்டோம். அதுக்கா அவர்கள் புதினமான மனிதர்கள் என்று இல்லை. நட்பானவர்கள் .ஆனால் எப்பவுமே அவர்களின் கலாச்சார எல்லைகளை இலகுவில் விட்டுக்கொடுத்துத்  தாண்டமாட்டார்கள் .முக்கியமாகப் பெண்களோடு வெளி ஆட்கள்  யாருமே கதைக்க மாட்டார்கள் , அவர்களும் தங்கள் பாட்டில் போவார்கள்,வருவார்கள் 

                                                   ஒஸ்லோவில் சாமத்தியப்பட்ட பெண் தலை முழுக முகமெல்லாம் பூசிக்கொண்டது போல   பூசுமஞ்சள் வெயில் வெளிச்சமாக அடிச்சுக்கொண்டு இருந்த   ஒரு நாள் , வெளியே மரவாங்கில் இருந்துகொண்டு பேர்ச் மரத்தில  குருவிகளுக்கு தீனி கட்டித்  தொங்க விட்ட குழாயை மோர்க்கோ பறவைகள் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு இருந்ததை நானும் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு  இருந்தேன் ,ரிஸ்வான அவளோட மூன்று பிள்ளைகளோடு என்னைக் கடந்து சூப்பர் மார்கட்டில் பொருட்கள் வேண்டிக்கொண்டு அப்பாட்மென்ட் நோக்கி வந்துகொண்டு இருந்தாள்  , என்னை கொஞ்சம் விபரமாகப் பார்த்தாள் ,நான் முதல் முறையாக அரபியில்

                           " ஹேப கால  "

என்று கேட்டேன் ,,அவள் அதுக்கு சடார் என்று ஜோசிக்காமலே,

                             " அல் ஹம்துல்லா "

                                  என்று சொன்னாள், எனக்கு கொஞ்சம்  " அட்டிகைக்கு ஆசைப்பட்டவள்   இடுப்பில எருமைச் சங்கிலியைக் கட்டிக் கொண்டாளாம் .." போல அரபி மொழியில் வணக்கம் போன்ற சில விசியங்கள் சொல்ல தெரியும். துருக்கிகாரர்களின் ரேஸ்டோறேண்டில் கோப்பை கழுவும் வேலை சுவிடனில் செய்த போது பாடிப் பாடி அவர்களிடம் இருந்து கொஞ்சம் அரபி படித்தேன், அந்த மொழியில் எப்பவுமே ஒரு கவர்ச்சிகரமான சந்தம் இருப்பதைக் கவனித்து இருக்கிறேன்  

                               " கேபகாலக் கேவந்த சிலோனோக் சபாரக் ஐவோக் கல்லா அல்லாக் கரீம் அல்ல்லாமோ சல்லம் "

                                        என்று சொன்னேன்,அவளின் குழந்தைகள் என்னோட அரபியில் ஆச்சரியாமாகி என்னைப் பார்க்க, அவள் அதுக்கும்

                      " சுக்கிரியா ,,சுக்ரியா  அல்ஹம்துல்லா அல்ஹம்துல்லா ,,இந்த மாலும் அரபி " 

                              என்று  நன்றி நன்றி,,ஆண்டவன்  ஆசிர்வாதம் ,,நீ அரபி கதைப்பியா என்று அரபியில் கேட்டாள் ,நான் 

                         " அனா அரப் மாபி,,அனா வோல்லா மாந்தி மாய் அரப் "

                    நான் அரபு கதைப்பவன் இல்லை,,கொஞ்சம் தெரியும் என்று அரபியில் சொன்னேன் 

                         சுக்கிரியா ,,சுக்ரியா  அல்ஹம்துல்லா அல்ஹம்துல்லா 

                           என்றாள், நான் முஸ்தப்பா கேட்ட கேள்வியைக் கேட்டேன்

                                   " முஸ்தப்பா உன்னுடன் பேச வேணும் எண்டு சொன்னான்,,ஒரே ஒரு முறை கடைக்கு வந்திட்டுப் போகச் சொல்லிச் சொன்னான்,,அவன் கேட்ட தகவலை உனக்கு சொல்லுறன் "

                                                என்று நோர்ஸ்ச்கில்  சொன்னேன்,அவள் கன்னம் சிவப்பாகி விட்டது, பிள்ளைகளை தள்ளிப் போய் விளையாடச் சொன்னாள்,என்னை நேராகப் பார்த்து, வறுத்த மிளகாய்த்தூள் தடவின  நோர்ஸ்ச்கில்

                       "  என்ன?????????????? "

                                               என்று மிகக் கடுமையான அழுத்தம் கொடுக்கும் நோர்ஸ்ச்கில் இடியன் கட்டுத் துவக்கு வெடிச்ச மாதிரிக் கேட்டாள் ,பெண்கள் மென்மையாவர்கள், அவர்களின் உலகத்தில் கடுமை என்பது கடுகு போல . அவர்கள் ஒரு போதுமே கோபமாக " என்ன???????????? " என்று கேட்க மாட்டார்கள்,ஆனால் " என்ன????????????? " எண்டு இறுக்கிக்கொண்டு கேட்டால் அது முகத்தில கையை வைச்ச மாதிரி , நான் மறு முறையும்

                           " முஸ்தப்பா,துருகிக் கடை ஓனர் ,,கடை வைச்சு இருக்கானே அவன் ,, உன்னுடன் பேச வேணும் எண்டு சொன்னான்,,ஒரே ஒரு முறை கடைக்கு வந்திட்டுப் போகச் சொல்லிச் சொன்னான்,,அவன் கேட்ட தகவலை உனக்கு சொல்லுறன் "

                           என்று மென்மையான  நோர்ஸ்ச்கில்  சொன்னேன், அவள் கை ரெண்டையும் இடுப்பில பின்னோக்கி வைச்சுக்கொண்டு

                            " என்ன ???????????????????"

                                என்று நோர்ஸ்ச்கில் கேட்டாள், பெண்கள் ரெண்டாம் முறையும் " என்ன????????????????? " எண்டு உதைக்கிற மாதிரிக் கேட்டால் அது மாட்டுச் சாணியில் கையை வைச்சு அந்தக் கையை மூஞ்சியில் அறைஞ்ச மாதிரி, ரிஸ்வானா என்னை முறைச்சுப் பார்த்திட்டு தன் மூன்று பிள்ளைகளையும் தாய்ப் பறவை குஞ்சுகளை காப்பது  போல நெருக்கமாக பாதுகாப்பாக அணைத்துக்கொண்டு கூட்டிக்கொண்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்  என்பது போல உள்ளுக்கு போயிட்டாள்.

                                      நான் மரவாங்கில் இருந்துகொண்டு காலை ஆட்டிக்கொண்டு பேர்ச் மரத்தில  குருவிகளுக்கு தீனி கட்டித்  தொங்க விட்ட குழாயை மோர்க்கோ பறவைகள் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு இருந்ததை நானும் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு  இருந்தேன் ," மவனே ..இங்கே என்னதான் நடக்குது  " என்பது போல மோர்க்கோ பறவைகள் சந்தேகமாக என்னைப்  பார்த்துக்கொண்டு இருந்தன

                                   கொஞ்ச நேரத்தில் ரிஸ்வானா அப்பாட்மென்ட் வெளிக் கதவை வேகமா உதைத்து  தள்ளித் திறந்துகொண்டு வெளிய வந்தாள்,,வந்து எனக்கு நேரே வந்து , தலையில் மூடி இருந்த ஸ்கர்ப்பை சரி செய்து கொண்டு, சொண்டை வெங்கனாந்திப் பாம்பு  போல இறுக்கி வைத்துக்கொண்டு

                                                " உன்னோட கொஞ்சம் சீரியஸ் விசியம் பேச வேண்டும் இப்ப பேச முடியுமா "

                                           என்று கேட்டாள். இந்த  " உன்னோட கொஞ்சம் சீரியஸ் விசியம் பேச வேண்டும் இப்ப பேச முடியுமா  " என்ற வார்த்தைப் பிரயோகம் நோர்வே வெள்ளை மக்கள் சொல்லும் வார்த்தை. ஏதாவது முக்கிய விசியம் பேசவேணும் என்றால் இப்படிதான் சொல்லுவார்கள்.சும்மா வாய்க்கால் தண்ணி வள வள எண்டு ஓடின மாதிரி முக்கிய விசியங்களை அவர்கள் போகிற போக்கில் பேச மாட்டார்கள். ரிஸ்வானா அப்படிக் கேட்டது அவளுக்கு நோர்ஸ்ச்கில் ,நோர்வே கலாசாரத்தில் நிறைய விசியம் தெரியும் போல இருந்தது ,அல்லது ஈரானில் அப்படிதான் பேசுவார்களா என்று எனக்கு தெரியாது.

                                    " நீ முஸ்லீமா "

                                " இல்லை "

                                 " பிறகு எப்படி அரபி கதைக்குறாய் "

                                  " கொஞ்சம் அங்கே இங்கே சுரண்டிக் கற்றுக் கொண்டது ,முஸ்தப்பா கொஞ்சம் சொல்லி தந்தான் "

                                   " ஒ அதுமட்டுமா சொல்லித் தந்தான் ,,வேற ஏதும் சொல்லித் தந்தானா? "

                                  " இல்லை,,வேற ஏதும் சொல்லித்தரவில்லை "

                                   " இன்ஷா அல்லா,,அதோட உன்னை விட்டானே,,அதுக்கு அல்லாவுக்கு நன்றி "

                                  " ம்,,"

                               " நான் முன்னம் பின்னம் தெரியாத ஆண்களுடன் பேசுவதில்லை,,இப்ப உன்னோட பேசியே ஆக வேண்டும்,,,இல்லாட்டி என்னோட நெஞ்சு வெடிக்கும்  போல இருக்கு ,,முஸ்தப்பா என்ன சொன்னான்  அதை சொல்லு முதலில் "

                                 " அவன் ,, உன்னுடன் பேச வேணும் எண்டு சொன்னான்,,ஒரே ஒரு முறை கடைக்கு வந்திட்டுப் போகச் சொல்லிச் சொன்னான்,,அவன் கேட்ட தகவலை உனக்கு சொல்லுறன் "

                                        " ஒ அப்படியா,,முதலில் உன்னோட பெஸ்ட் பிரண்டுக்கு சொல்லு,,ஆட்களை நரி வெருட்டின மாதிரி வெருட்ட வேண்டாம் எண்டு "

                                 "அவன் என்னோட் பெஸ்ட் பிரெண்ட் எண்டு யார் சொன்னது "

                               " அவனே தான் சொன்னான்,,நான் யார் தெரியுமா,,,,என்னோட  அப்பா ஈரானின் ஆர்மியில் ஜெனரல் ஆக இருந்தவர்,,இவன் ஒரு சுண்டங்காய்,முஸ்தபாக்கு ,சொல்லு,,ஆட்களை  வெருட்ட வேண்டாம் எண்டு முக்கியமா பெண்களை வெருட்ட வேண்டாம் எண்டு,,எனக்குப் பயமில்லை எண்டு சொல்லு "

                            " ஹ்ம்ம் "

                            " விபரம் தெரியாத என்னோட பிள்ளைகளே என்னைக் கேட்குதுகள்  ஏனம்மா அழுகுரிங்க ,,ஏனம்மா பேய் அறைஞ்ச மாதிரி இருகுரிங்க எண்டு "

                             " ம் ,,சொறி,,எனக்கு தெரியாது உங்க பிரச்சினை என்ன எண்டு "

                          "  ஹ்ம்ம்,,என்னக்கும் தான் தெரியவில்லை,,என்னோட பிரச்சினை என்ன எண்டு,,அதுதான்  பிரச்சினையே "

                               " அய்யோ,,எனக்கு மண்டை எல்லாம் சுத்துது,,இதைக் கேட்க "

                                       " நான் ஆம்பிளைகளுக்கு முன்னால் இப்பிடிக் கதைக்கவே மாட்டேன்,,ஆனால் என்னோட அப்பா என்னக்கு சொல்லி சொல்லியே வளர்த்தார் என்னை ,பிழை நடந்தால் அதைத் தட்டிக் கேள் எண்டு,,என்னோட அப்பா ஒரு ஆர்மி ஜெனரல் "

                              " ம்  ம் "

                           " முஸ்தப்பா நல்லவன், எனக்கு விசர் வருகுது , நான் என்ன சொன்னாலும் உலக்கதுக்கு உண்மை தெரியாது,,நான் ஒருநாளும் மனத்தால் யாருக்கும் ஒரு சின்னத் தீங்கு நினைக்காதவள் ,ஹ்ம்ம் ஆனால் அவன்,,உன் பெஸ்ட் பிரென்ட் முஸ்தப்பா  நல்லவன் இல்லை,,எனக்கு அழவேண்டும் போல இருக்கு,," 

                                  " ஹ்ம்ம் ,,இங்கே அழாதே பிறகு ஆட்கள் என்னைத் தப்பாக நினைப்பார்கள்,நான் ஏற்கனவே பிச்சைக்காரன் போல பிஞ்சு போய் இருக்கிறேன்  " 

                              " பாவம் எண்டு அவனுக்கு உதவி செய்தேன், அவன் நல்லவன் எண்டு , இன்ஷா அல்லா , அதுவும் அகமத்துக்கு தெரியாமல்..... "

                         " அப்படியா "

                               " நான் ஒரு மடைச்சி,,முட்டாள்..அறிவே இல்லாத ஜென்மம்,,ஆனால் முஸ்தப்பா நல்லவன், ஹ்ம்ம் அன்பானவன் , அவனை நினைச்சால் அடி வயிறே நோகும்,,ஆனால் அவன்  நல்லவனில்லை ,அதுவும் எனக்கு தெரியும்  "

                                      " ஹ்ம்ம்  அதை அவனும் சொல்லுறான் இல்லை,,நீயும் சொல்லுறாய் இல்லை  மாதன முத்தா மண்பானையில் மண்டையைச் சுத்தி  மூக்கைத் தொட்ட மாதிரி இடையில நான் கிடந்தது தடுமாறுறேன் "

                                     " என்னோட ஸ்பார கொண்தோர் பாங்  அக்கவுண்டில் எவளவு பணம் இருக்கு எண்டு அகமத் ஒருநாளும் என்னைக் கேட்டதில்லை,,அவர் அன்பான ஒரு நம்பிக்கையான மனிதர் ,,நான் அதை என் பிள்ளைகளுக்காக சேமித்துக் கொண்டு வந்தேன் "

                                   " ஹ்ம்ம்,,அது நல்ல விசியம் தானே "

                                          நான் இதென்னவோ இதுக்குள்ள  கும்முடிப்பூண்டு குச்சுப்பிடி விளையாட்டு  இருக்கும் எண்டுதான் நினைச்சேன்,,ஆனால் இது என்னவோ காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை போலத்  தான் மேலோட்டமாக இருந்தது ,என்றாலும் ஆழமாமாக என்னத்தை ரெண்டு பேரும் சுழி ஓடினார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை

                                 "  ஹபீபி ஹபீபி எண்டு கொஞ்சிக் கொஞ்சி,,,என்னை சித்திரவதை செய்தான்,,அதால் உதவி செய்தேன் ...இப்ப அகமதுக்கு தெரிஞ்சா அவர் என்னைத் தலித் தலித்  எண்டு மூன்று முறை சொல்லி   தள்ளி வைச்சாலும் வைக்கலாம் அதுவும் நடக்கலாம் "

                                  " ஹ்ம்ம்,,அகமத் யார் "

                              " அவர் என்னோட புருஷன் "

                              " ஒ ,,நான் கண்டதே இல்லையே அவரை இங்கே உன்னோடு "

                               " அவர் அக்காவோடு இருக்கிறார்,,"

                                  " ஒ உன்னோட அக்கவோட இருக்கிறாரா,,இல்லை அவரோட அக்காவோடு இருக்கிறாரா ,,ஒண்ணுமே புரியலையே    "

                               " இல்லை,,அது அவர் முதல் மனைவி,,நான் அவாவை அக்கா எண்டுதான் சொல்லுவேன்,,என்னோட கூடப்பிறந்த அக்கா போலதான் ,,நல்ல உயிர் போல என்னோட  பாசமானவா "

                           " ஒ ,,இப்பிடி எனக்கு ஒரு துவரம்பருப்பு சுண்டல் போல வாழ்க்கை  ஒண்டும் கிடைக்குதில்லையே "

                              " என்ன கிண்டலா, துள்ளார் டு மேய் ..,நான் எவளவு கோவத்தில் இருக்கிறேன் தெரியுமா "

                                      " ஹ்ம்ம்  "

                                 " சரி,,,உன்னோட மட்டும்  ஒரே ஒரு விசியம் சொல்லுறேன் ,அதை மட்டும் முஸ்தப்பாவுக்கு போய்ச் சொல்லுவியா ."

                                      இந்த உலகத்தில் பெண்கள்தான் எல்லாவிதமான வலியையும் சுமக்கிறார்கள்.அவர்களின் வலி இந்தப் பூமித்தாயின் வலி. அது எனக்குத் தெரியும் .ஆனாலும் அவர்கள் தான் அன்புக்கு ஏங்கும் இதயத்தில் எதோ ஒரு வழியில் தடம்புரண்டு போகிறார்கள் ....

                                   

,,,,,,,,,,,,,,,தொடரும் .............

...