Sunday, 22 March 2015

இசை அமைப்பாளர் உதயன் விக்டர்

பல வருடங்களின் பின் கிராமிய இசைக் கருவிகள் இசைத்து இசை அமைக்கப்பட்ட மத்யமாவதி ராகத்தில் அமைந்த மன்னாரு திரைப்படத்தில் வரும் ,இலற்றோனிக் இரைச்சல் இல்லாத என்பதுக்களில் வந்த மண்வாசனைப் பாடல்கள் போல வயலும், ஆறும் ,மண்ணும் ,ஆலமரமும் அய்யனாரும் மறுபடியும் உயிராகி வரும் இந்த பாடல் " ஊரையெல்லாம் காவல் காக்கும் அய்யனாரு சாமி .." என்ற பாடலை இளம் இசை அமைப்பாளர் உதயன் விக்டர் இசை அமைக்க, எஸ் பி சைலயா , கிருஸ்ணராஜ் சேர்ந்து பாடிய பாடல்.
                                            ஒரு கிராமத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்களை அதிகம்கண்ணை உறுத்தாமல் படம் பிடித்துள்ள இந்தப் பாடல் ஊரையெல்லாம் காவல் காக்கும் அய்யனாரு சாமி , பாடல் கேட்க நல்லா இருக்கு, ஆனால் யூ டுபில் உள்ள குப்பைகள் எல்லாம் பிரபலம் ஆனது போல இந்தப் பாடல் அதிகம் பார்க்கப்படவில்லை அது ஒரு சோகம்.
                                               எம் ஜி ஆரின், சிவாயியின் சினிமா முடிந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்த இளையராஜாவோடு சேர்ந்து பாரதிராஜா தந்த கிராமிய மணம் கமழ்கிற வெற்றிப் பாடல்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு கிராமியப் பாடல்களுக்கு பெரும் மரியாதையை உருவாக்கித் தந்தது.இந்தக் காலகட்டத்தில்தான், பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிஞர் வைரமுத்துவும் இதற்கு முக்கியக் காரணமாய் இருந்தார்.
                                               நாட்டுப்புறப் பாடல்களை அப்படியே காப்பியடிக்காமல் . நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் இனிய இசைநயத்தைப் போல புதிய மெட்டுக்களை உருவாக்குவதும், இதயத்தை வருடும் நயமிக்க வார்த்தைகளைக் கற்பனை செய்து பாடல்களை எழுதுவது இவ்வாறன இசைமெட்டுக்களை இயற்றுவதில் இசைஞானி இளையராஜாவும், பாடல்வரிகளை எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவும் சினிமாவில் தனிமுத்திரை பதித்த இருவருமே கிராமத்திலிருந்தே வந்தவர்களாதலால் கிராமத்து இசை மெட்டுகளும், வரிகளும் அவர்களின் இரத்தத்தில் இருந்தது.
                                               கிராமத்துக் குயில்களின் குரலோசை போன்ற பல பாடல்களை S P ஷைலஜா பல இசை அமைப்பாளர்களின் இசையில் அழகாக பாடியிருக்கிறார். மறந்து போன அந்தக் குரலை மறுபடியும் வெள்ளித்திரையில் உதயன் விக்டர் பதிந்துள்ளார். தன்னுடைய காற்சட்டை காலத்தில் அவர் மிகவும் ரசித்த S.P.சைலஜா அவர்களை இந்த பாடலை பாடவைத்தது மிகவும் சந்தோசமான ஒரு விடயம் என்றும் , ஏறக்குறைய 40 இசைக் கலைஞர்களை இந்த பாடலில் வாத்தியங்கள் வாசிக்க வைத்து இசை அமைத்ததாகவும் உதயன் விக்டர் சொல்லியுள்ளார்.

                                                  " சென்னையில் இருக்கின்ற முன்னணி வயலின் கலைஞர்கள் 12 பேர் வாசித்தார்கள் . இசை அமைப்பில் வயலின் இசை மிகவும் முக்கியமானதும் கடினமானதும் ஆகும் . இந்த பாடலின் பதிவு எனக்கு பல சுவையான அனுபவங்களை தந்திருக்கின்றது .S.P..சைலஜா வின் குரலும் என் இனிய நண்பர் கிருஷ்ணராஜ் குரலும் மிகவும் இனிமை .கஷ்டப்பட்டு இசைக்கிற பாடல்கள் மக்களை சரிவர சென்றடையவில்லை என்பதை விட வாழ்க்கையின் மிகப்பெரிய சோகம் எதுவும் இல்லை.. " என்று உதயன் விக்டர் தன்னுடைய ஆதங்கத்தை சொல்லி இருக்கிறார்.

                               " ஊரையெல்லாம் காவல் காக்கும் அய்யனாரு சாமி .." என்ற பாடலைக் கேட்க இந்த லின்ங்கை கிளிக் பண்ணுங்கள் ...https://www.youtube.com/watch?v=9Jdr2NoaRcM
                                    .

தணலின் அனல்

நெருப்பின் தகிப்பை
நாங்களாக
அனுபவிக்காத வரை
தணலின் அனல்
எங்களுக்கு 
வெளியே இருக்க
யாருக்கோ
வியர்ப்பது போலத்
தோன்றும்.
ஆலையிலே
சூடான
மூச்சுக் காற்றை
குளிர்மைப்படுத்த
எல்லோரும்
வெளியில் சென்றுவிடும்
மாலையிலே மட்டும்
தென்றல்
உள்ளே நுழையும்....
சாம்பல் இருட்டில்
கண் முன்னே
நெருப்பைப் பிடித்து
வளைக்கும்
முகங்கள் உருக
வெளியேற விரும்பாது
புகையாகிப் போன
கரி போல
ஒரு மனிதனின்
பார்வை...
உணர்ச்சியை வசப்படுத்தி
யதார்த்தத்திலிருந்து
தப்பியோட நினைக்காத
ஆயிரம் குரல்களை
அடைத்து
வைத்து கொண்டு
திண்டாடுகின்ற
சிலர் இங்கே
விறகாக
எரிவதால் தான்
அவர்களின்
குடும்பம்
நிழலோடு
குளிர் காய்கிறது.
.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 22.03.15.