Sunday 22 March 2015

தணலின் அனல்

நெருப்பின் தகிப்பை
நாங்களாக
அனுபவிக்காத வரை
தணலின் அனல்
எங்களுக்கு 
வெளியே இருக்க
யாருக்கோ
வியர்ப்பது போலத்
தோன்றும்.
ஆலையிலே
சூடான
மூச்சுக் காற்றை
குளிர்மைப்படுத்த
எல்லோரும்
வெளியில் சென்றுவிடும்
மாலையிலே மட்டும்
தென்றல்
உள்ளே நுழையும்....
சாம்பல் இருட்டில்
கண் முன்னே
நெருப்பைப் பிடித்து
வளைக்கும்
முகங்கள் உருக
வெளியேற விரும்பாது
புகையாகிப் போன
கரி போல
ஒரு மனிதனின்
பார்வை...
உணர்ச்சியை வசப்படுத்தி
யதார்த்தத்திலிருந்து
தப்பியோட நினைக்காத
ஆயிரம் குரல்களை
அடைத்து
வைத்து கொண்டு
திண்டாடுகின்ற
சிலர் இங்கே
விறகாக
எரிவதால் தான்
அவர்களின்
குடும்பம்
நிழலோடு
குளிர் காய்கிறது.
.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 22.03.15.

1 comment :