Friday 21 April 2017

நாடோடியின் நகரம் இரண்டாம் தொகுப்பு






நோர்வேயின் தலைநகரம்  ஒஸ்லோ ஒரு குஞ்சுண்டு  நகரம் ,அங்கே  வாசித்த காலத்தில் எழுதிய கவிதைகள் அலாதியானவை. அந்த நகரத்தின்  பிரத்தியேகங்களும் ,  சிசிலியாவின் வாசனையும் ,அனாமிக்காவின் சிந்தனைகளும், எப்போதும் மறப்பதுக்கில்லை. இப்போது சுவீடனில் ஸ்டோக்ஹோலாம் நகரத்தில் வசிக்கிறேன். நானொரு நாடோடி. என் சிந்தனைகள் காற்றைவிட சுதந்திரமானவை . அவை ஒவ்வொரு பொழுதில் உத்தரவாதமாக  இங்கிதம் தந்த உந்துதல்களால் பல வ்ருடங்கள் வார்த்தைகளையோடு முட்டி மோதியே  வாழ்ந்தே கடந்தேன்

பரபரப்பில்லாமல் உங்களுக்கு பிடித்தமானவரோடு கூடவே இருப்பது  போன்றது ஒரு  நகரத்தை  நாலுவிதமாக ரசிப்பது . சலிப்புக்கள்    எல்லாம் தாண்டி   சந்தோசமான  விசயங்கள் நிறைய இருக்கு ஒரு வாழ்கையில் என்று நாங்கள்  வாழுமிடம்  உத்தரவாதங்கள் தரலாம் .  இந்த உலகில் சந்தோசம் எங்கோ  பதுங்கி இருக்கு  என்பதை உணரும்போது நீங்கள் முழு மனிதராய் உணர்வீர்கள். உங்களுக்கும் இதுதான் தேவையாக இருக்கிறது. எனக்கும்தான் !

                                              ஒஸ்லோ ஒரு சின்ன நகரம். பழமையும் புதுமையும் அருகருகே ஒன்றுக்கு ஒன்று இடைஞ்சல் இல்லாமல் கிளிபோலப் பொஞ்சாதி  இருந்தாலும் குரங்குபோல  தொன்மையான அடையாளங்களை   வைப்பாட்டியாக  வைத்திருக்கும்  நளின நகரம். என்னோட மொபைல்போனில் அந்த நகரத்தை வேலைக்கு கடந்து போகும்போதும் வரும்போதும் கிளிக் செய்த படங்களை ஒவ்வொன்றாகப் போட்டுக் கவிதை எழுதியுள்ளேன் 

                                இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் போலவே  எழுதுவதுக்கு  இன்னமும் படங்களும் இடங்களும்  இருக்கு. ஒருவித சலிப்பில்  அதைப் படம் எடுப்பதையும் ,அதுக்கு கவிதை எழுதறேன் என்ற பிசத்தல்களை  ஒரு கட்டத்தில்  நிறுத்திவிட்டேன் . எதையுமே  அதிகமாய் எழுதினால் வாசிக்கும் உங்களுக்கும்  துன்பமாக இருக்கும். இல்லையா ?

                                                 சிலநேரம் இங்கே  என் மொபைல் போன்  மஹாலக்ஷ்மி எடுத்த   படங்களில் பிரமாண்டமாகப் பிரமிக்க வைத்தாலும் ஒஸ்லோ நோர்வேநாட்டுப் பெண்களின் கொடியிடை இடுப்புப் போல ஒரு அடக்கமான, அவர்களின் கண்கள்போலவே மையிட்ட கண்களில் மான் விளையாடும் நீலமான சின்ன நகரம்...


விரித்து வைக்கப்பட்டிருக்கும்
வானக் குடையின் கீழ்
அப்பாவியாக 
தனித்துக் கிடக்கிறது
ஒஸ்லோ நகரம்!

பகல்களையும்,
இரவுகளையும்,
பெளர்ணமிகளையும்,
உறைபனிக் குளிரையும்
தாண்டி
அணைக்கப்படாத
வெளிச்சத்தில்,
முடிவே இல்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
மனிதர்கள் ,

தவிர்க்க முடியாத
சல்லாபங்கள்,
தீர்க்க முடியாத
கணக்குகள்,
ஒத்துக்கொள்ளாத
தோல்விகள்,
கபடத்தனமான
வெற்றிகள்,
துரோகங்களின்
சாட்சிகள்

எல்லாமே
ஆவணமாக்கப்பட்டு
விரிக்கப்பட்டிருக்கும்
மனசாட்சியின்
கீழ்
குற்றவுனர்வோடு
தனித்துக் கிடக்கிறது
ஒஸ்லோ நகரம்!.



யூலை 22* கோடைநாளின்
பின்னேரம்
தனிப்பறவை ஒன்று
விட்டு விட்டு பாடல் ஒன்றை
சந்தோசமாக்கிக் கொண்டிருந்த
கருணையில்லாத
கடைசி நிமிடத்தில்,
வெடித்த அதிர்வின்
புகையடங்க முன்னரே,
இறந்தவர்கள் விழுந்த இடத்தை
சுற்றி இரத்தம் வட்டமிட்டது.
நான் நிற்குமிடத்தில்
அவர்கள்
விழுந்துகிடந்த இடத்தில்
உயிர் தடுமாற
இந்த மரங்களும்
பார்த்துக்கொண்டு இருந்தது.
அதன் பின்னர்
வெறிச்சோடிக் கிடந்த
வசந்தகாலத்தின் சாலைகளில்
வெள்ளைப் புறாக்கள் மட்டும்
பதடமில்லாமல் இருக்க ,
வந்தேறு குடிகளுக்கு எதிராக
தாறுமாறாய் தூசனத்தில்
கிறுக்கப்பட்டிருந்த
சுவர்களில்,
வழிந்து கொண்டிருந்தது
குடியேற்றத் துவேசம் !
தனிமையின் குளிரில்
வடதுருவக் காற்று
உத்தோயா* படுகொலைக்
கதைகளை சுமந்து
ஒப்பாரி பாடிய
ஒரு வாரத்தில்
இருந்து
இன்னொரு வருட
இடைவெளி வரை
அழுது வடிந்து
இறந்து பிறந்தது
ஒஸ்லோ நகரம் !

{ 2011 யூலை 22*- இந்த இடத்தில நடந்த அந்த குண்டு வெடிப்பு சமபவத்தில நானும் தப்பினேன், அன்ரிஸ் ப்ஜெர்விக் என்பவன் வெடிக்க நேரம்குறித்து விட்டுச்சென்ற சக்கைவான் வெடிக்க 8 பேர் கொல்லப்பட்டனர், அதே நாள் 2 மணிநேரத்தின் பின் உத்தோயா* என்ற தீவில் 69 இளம் " டீன்ஏஜ் " பிள்ளைகளை அதே அன்ரிஸ் ப்ஜெர்விக் துவக்கால சுட்டுக் கொன்றான்,கரணம் - இஸ்லாமோபோபியா என்ற இனமான மனவருத்தம்!}





யாரும் களவாட முடியாத
தனிமையும் கூட
பறவைகளை
அலுக்காமல்
அன்போடுதான் 
அரவணைக்கிறது

வண்ணங்களற்ற
சிறகுகளுடன்
வந்திறங்கும்
அவைகளின் குஞ்சுகள்
மீதும் ஆரம்பத்திலேயே
உயிர் நம்பிக்கையைப்
பூசிவிடுகின்றது....
சுற்றி நடக்கும்
மனிதர்களால்
அச்சமும் தயக்கமும் 
தெளிக்கப்படுகின்ற
நேரத்திலும்
நம்பிக்கைகளை
வாரி நாலுபக்கதுக்கும்
வழங்கிக்கொண்டேயிருக்கிறது
இரவெல்லாம்
அயராமல்
மெல்லிய ஒளியின்
விளிம்பு தெரியாத
கரையைத் தாலாட்டித்
துயரத்தைத்
துடைத்தெறிந்து
தூங்க வைக்கிறது....
நடு இரவில்
வெள்ளிகள் எண்னும்
மெலிதான நுரை அலை
பகலெல்லாம்
அணிந்துகொண்டிருக்கு
மேகம் வீசிய
நீலநிறச் சேலையை
பக்கச்சார்பற்ற
ஒரேயொரு
வெளிச்சமான தினம்
என்னைப் போலவே 
கொஞ்சம் நின்று பாருங்கள்
பறவைகளுக்கும்
ஏரிக்கரைக்கும்
மனதோட உறவான
உயிர் வாழ்தலின்
ரகசியத்தை
பிரஸ்தாபித்துவிடும்
ஆத்மா .

ஒரு வரியில்க் 
கவிதைக்கான 
சாத்தியங்கள் 
பெருவாரியாகச் 
சுற்றி வளைக்கும் 
ஒரு பழைய நகரத்தின்
பழைய பாதை வழியில்
வரலாறு நின்றுவிடுகிறது

வெய்யில் பிழியும்
மனிதர்களின்
வியர்வை வாசத்தில்
பெண்களின்
பிரத்தியேக வாசம்
சித்திரைக் காற்றை
ஈரமாக்குகிறது.....

இரவெல்லாம்
சிரித்தும் அழுதும்
களைத்துப்போன
நடைபாதைகளை
கவனமாக மிதித்துக்கொண்டே
உலாவவேண்டி நினையுங்கள்

வலி சுமந்த
மனிதர்களின்
கதைகளைக்
கேட்டுக்கொண்டு
நிழல் போல
அதிராமல்
எனது கால்த் தடம்
வழியெங்கும்
பதிந்துகொண்டேகிறது.....

நடக்க நடக்க
சிந்தனைகள்
தெளிவாகுமென்பது
தெரியும் மட்டும்
வலிக்கட்டும்....

எனது சுவடுகள்
இன்னோருவரின்
துன்பத்தின்
தாள கதியில்
இணைத்து அதிருமாயின்
இன்னுமின்னும்
பல மைல் தூரத்திற்கு
நடக்கலாம்..

எனக்கும்
என் முதுகுக்கும்
நன்றாகத் தெரியும்
பிழைக்கத்தெரியாத முட்டாளென்று
நீங்கள் ...
இயலாமையுடன்
பொருத்திப்பேசுவது

நான்
பார்க்கும் உலகம்
என்மண்ணில் விடுபட்டுப்போன
ஆத்மாவை உசுப்புகிறது
அதன்
அதிர்வலைகள்
உறைபனி நாட்டிலும்
வேப்பம்பூக்களை உலுப்புகிறது

அறியப்படாத
மூளை ஒரத்தில்
அலட்சியமாக
துருப்பிடித்திருந்த
எழுத்து
ஜன்னல்களைத்
அகலத் திறந்துவிடுகிறது

மழுங்கிக்கொண்டிக்கும்
தாய்மொழியின்
முனையை
கவிதையிலும்
கதையிலும்
உரசி உரசியே
பட்டைதீட்டுகிறேன்

முடிந்தவரை
கிளை கொம்புகள்
கொடியில்
பற்றிப்பிடித்துப் பேச
கைப்பிடித்து
திரும்பமுடியாத
விடிவெள்ளியின் திசையில்
அழைத்துச்செல்கிறேன்

இதற்காகத்தான்
தாகமெடுக்கும்
அற்புதமான தருணங்களிலும்
நேரத்தைக்
கடத்திக்கொண்டுபோய்க்
காவுகொடுத்து
எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
என்பதை மட்டும்
உறுதியாகச் சொல்கிறேன்.

.


ஆளுமைப்படுத்தும்
சின்ன அசைவுகளில்
தொடர்ச்சியாக
முரண்பட்டுக்கொண்டிருக்கும்
மைய நகரம்...
நகர்ந்துகொண்டிருந்தது
இதயவடிவில்
மலர்வளையங்கள் போலவே
அதன் நளினங்கள்
பின்தொடர்ந்துகொண்டிருக்க
கடவை விளக்குகள்
நிமிடத்தில் பாதியாகி
நிறம் மாறுகின்றது
தொட்டுப் பார்க்க
இடம் கொடுக்காத
குளிரை
முகத்திலறைந்துகொண்டு
மனிதர்கள்
குறுக்கமறுக்க கடந்து
நேற்றுத் தொலைத்த அவசரத்தை
இன்றும்தேடுகிறார்கள்
நான் நிற்குமிடமும்
நிராகரிக்க முடியாமல்
அதுவேதான்
ஒருசமயம்
வியப்புக் கொடுக்கும்
எல்லாக் காட்சிகளுமே
ஆழப்பதிந்து
குத்தி
உள்ளிறங்குவதில்லை
மறுசமயம்
உரையாடல் மனதில்
வார்த்தைகள்
தேடினாலும்கிடைப்பதில்லை
பிறகேன் கழுதை
அர்த்தமின்மையை
வரவேற்க யாருமில்லாத
சந்திவளைவில்
நின்று
சப்பாத்துக் கால்களைப்
பார்த்துக்கொண்டிருகிறாய்?
என்கிறது ஆத்மா.





நட்சத்திரங்களற்ற
நவீன நகரம்
வீம்புக்குக் குந்தியிருக்கும்
கும்மிருட்டு
வண்ணாத்திப்பூச்சியைத்...
திரத்தும் வெய்யில்
அலகு தீட்டும்
மொர்க்கோ பார்வை
வளைக்காப்புப் போட்ட
பேர்ச் மரங்கள்
வெள்ளைச் சருகில்
உறங்கும் உறைபனி
வெளிச்சங்களின் விலாசம்
சொங்ஸ்வான் ஏரிக்கரை
விம்மிக் கொண்டிருக்கும்
ஹோல்மன் குன்றுகள்
நச்சென்று குட்டும்
நடை பாதைகள்
நெளிப்புக்காட்டி ஓடும்
ஆர்கிஸ்எல்வா நதி
வயதில் பக்குவப்பட்ட
பைன் மரவீடுகள்
கடவுளின் மொழிபேசும்
வெள்ளைக் குழந்தைகள்
அவன்,அவள்,அது
இதெல்லாம்
நான்
பார்க்க மறந்தாலும்
ஒரு செக்கன் நிக்கவைத்து
தான்
பார்த்து ரசிப்பாள்
என்
மகாலக்ஸ்மி கலக்சி.


கால்களை
சில்லென்று நனைத்தபோது
தண்ணியில்...
மிகத்தெளிவாக
வழுக்குப் பாறைகள்
தெரிந்தது

என்
அளவுக்கதிகமான
மவுனம்
சருகுகளை மிதித்து
நடந்துகொண்டிருந்தவர்களின்
இரைச்சல்களுக்கு
இடைஞ்சலாக
இருந்திருக்கலாம்

நானே
ஒருகட்டத்தில்
ஓவெண்டு குரலெடுத்துக்
கத்த நினைத்தேன்
பார்வை இழந்தவனுக்கு
திசைகாட்டிகள்
உதவாதே

என் சத்தம்
என் குரல்வளையைவிட்டு
வெகுதூரம்
இறங்கிப்போய்விட்டதென்பதை
கிறங்கிக்கிடக்கும்
கரைகளில்
பறவைகளின் கும்மாளம்
தெளியவைத்தது.

முடிக்கப்படாத
பிரச்னைகளில் தான்
நேற்றுக்கும்,
நாளைக்கும்
அர்த்தமிருக்குது போலிருக்கு...



முடிக்கப்படாத
பிரச்னைகளில் தான்
நேற்றுக்கும்,
நாளைக்கும்
அர்த்தமிருக்குது போலிருக்கு...


நம்பமுடியாதவாறு
பின் வந்துதொடரும்
அனுபவத்தோடு
முரண்டுபிடிக்க விரும்பாமல்
என்பாட்டில்
போக எத்தனித்தேன்

பச்சை விளக்கை
நிறுத்த அவதியாகி
மஞ்சளில் கடக்க நினைத்தவன்
சறுக்கினான்

மூக்கு அழகான
கிழக்கு ஐரோப்பியப் பெண்
ஒவ்வொருவரிடமும்
பிச்சை கேட்டாள்

வெறித்து பார்த்த
ஜன்னலிலிருந்து
ஒருவன்
இருமித் துப்பிக்கொண்டிருந்தான்

பாதைக்குக் குறுக்காக
போலீஸ்காரன்
வெறித்துப்பார்க்கும் பார்வையில்
துவேஷத் தூவானம்

தோல்வியைப் பாடும்
தெருப்பாடகனின்
பூனைக் கண்களில்
நம்பிக்கை

பிரத்தியேக வாசனையோடு
கும்பலாகப் கடக்கும்
பதின்வயதினரிடம்
பொறுப்பற்ற சிரிப்பு.

புகைபிடிக்க
குடிவரவுக் கட்டிடடத்துக்கு
முன்னால் நின்ற
நிறைவேற்று அதிகாரி
என்னைவிட அகதிபோலிருந்தார்

என்னைச் சுற்றி
எனக்குத் தேவையான எதுவுமே
நடக்காததுபோல
ஒடுக்கமாக
நழுவிக்கொண்டிருக்கிறேன்.








காற்றுக்கு இன்று
என்னவிதமான
மனநிலையென்று தெரியவில்லை
வழமையாக எப்போதும்
எனக்காகத்...
தனியாக நுழைந்துவிடும்
அந்தத் தனிப்பறவையை
கூட்டத்திலிருந்து
வேறுபடுத்த முடியவில்லை

யாரோவொருவர்
வீசி எறியும்
உதிரி உணவுகளுக்குள்
அதன்
குரலாவது இருக்குமென்று
தேடிக் களைத்து விட்டேன்

ஒன்று போலவேயுள்ள
இறக்கைகள்
ஒவ்வொன்றும்
முட்டி மோதிக்கொள்ளாமல்
ஒரு மிருதுவான
தனியுலகத்தை
தங்களுக்குள்
உருவாக்கிக்கொள்ள

நான்
எரிக்கரையின் விஸ்தீரணத்தை
இன்னும் கொஞ்சம்
அகலமாக விரிக்க
அலைகளை சம்மதிக்க வைத்து
ஒதுக்கித் தள்ளமுடியாமல்
அதிலும்
தோற்றுப்போனேன்...