Sunday, 12 April 2015

நகரசபையும் அதன் நகரபிதாவும்...

ஏழைகளின் நாட்டிலோ குப்பை லொறி ஓடி நகரை சுத்தமாக்கும் முனுசிப்பாலிட்டி போலவும் , பணக்கார நாட்டிலோ நகரத்தை நளினமாக அலங்கரிக்கும் சிட்டி ஹோல் போலவும்  , வளரும் மூ ன்றாம் உலக நாடுகளில் ஊழல் செய்து கொள்ளை அடிக்க திட்டம் போடும்  அரசியல் வாதிககள்  பந்தா போட்டு பணத்தை சுருட்ட, என்று பிரிவினை இல்லாமல் உலகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலும் அந்த நகரத்தை சட்டப்படி உள்ள உரிமைகளில் ஆட்சி செய்து, பல வழிகளிலும் அந்த நகரத்தை வாழக்கூடிய ஒரு இடமாக இயங்க வைக்க, அந்த நகரத்தில் இருந்து கிடைக்கும் வருமான வரிகளில் அந்த நகரத்தின் தேவைகளை நிறைவு செய்ய   நகரசபைகள் இருக்கு. அப்படி ஒஸ்லோ பெரு நகரத்தை இயக்கும்  நகரபிதாவின் உத்தியோகபூர்வ அலுவலகம்  தான் இந்த றோடஹுவுசெட் Rådhuset என்ற கட்டிடம்.

                                                          கிட்டத்தட்ட 20 வருடங்கள் எடுத்த இந்தக் செங்கற்கள்  அடி மேலே அடி வைச்சு பிரமாண்டமாக எழும்பிய  இந்தக் கட்டிடம் பார்க்க சவுதியில் உள்ள மக்கா மதீனா போல இருந்தாலும் ,இந்த கட்டிடக்கலை வடிவத்தை ஆங்கிலத்தில் Functionalism என்ற ஸ்டைலில் கட்டியதாக சொல்லுறார்கள்.அந்த ஆங்கில சொல்லுக்கு நேரடி தமிழ் சொல் எனக்குத்  தெரியாது,ஒரு கட்டிடம் அது கட்டப்படும்  நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் கட்டப்படுவது அந்த ஸ்டைல் என்று சொல்லலாம். இந்த றோட ஹுவுசெட் கட்டத்தில் வேலை செய்யும் ஆண்களும் பெண்களும் வயதை மறந்து கிடைக்கும் இடைவெளிகளில் ஆளை ஆள் உரசிக்கொண்டு ரொமண்டிக்  ரம்மியமான சுழலில் வேலை செய்வார்கள் போல இருந்தது. ஒரே ஒரு முறை உள்ளே போய்ப் பார்த்த போது.

                                    இந்தக் கட்டிடத்துக்கு உள்ளே ஒரு ஆர்ட் கலரி இருக்கு ,அதில நோர்வேயின் பிரபலமான மொடேர்ன் ஆர்ட் கலைஞ்சர் ஹென்றிக் சொரென்சன்  என்பவரின் ஒயில் பெயிண்டிங்   ஓவியங்கள் காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். ஹென்றிக் சொரென்சன் என்ற அந்த ஓவியரின் படங்கள் சுவர் முழுவதும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு பல இடங்களில்  தொங்கும். குறிப்பிட்ட சில நாட்களில் அதை எல்லாருமே போய்ப் பார்க்கலாம், ரசிக்கலாம் , ஒரு அரசியல் அதிகாரம் உள்ள நிர்வாகக் கட்டிடத்தில் ஓவியங்களை வைத்து அதைக் கலாச்சரா அடையாளமாக்கி  கலையை ரசிக்கும்  நோக்கத்தில் நோர்வே நாட்டவர் வைத்து இருப்பது இந்தநாடு எவளவு இன்டலக்சுவல் விடயங்களில் முன்னோடியாக இருக்கு என்பதுக்கு ஒரு சான்று.

                                       ஒஸ்லோவிற்கு வெளிநாட்டு பிரமுகர்கள் முக்கியமான நகரசபை விருந்துகள்,கொண்டாடங்கள், அரசாங்க நிகழ்வுகள் இங்கேதான் நடக்கும்,நோர்வே ஒவ்வொருவருடமும் கொடுக்கும் சமாதான  நோபெல் பரிசு பெற்றவர்கள் உரையாற்றும் ஒரு நிகழ்வு, பரிசு பெற்றவர்களின் நாட்டு முக்கிய இசைக்கலைஞர்களை வரவழைத்து இசை நிகழ்சியும்  ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் நடக்கும்,சென்ற வருடம் பாக்கிஸ்தான் நாட்டு மலாலா யுசெப்.இந்தியாவின்  கைலாஸ்  பெற்றபோது புகழ் பெற்ற இந்தியாவின் சாரோத் என்ற இசைக்கருவி வாசிக்கும் உஸ்தாத் பண்டிட்களின் இசைக்குளுவோடு அந்த நிகழ்வு நடந்தது .

                                          முக்கியமான நிர்வாக ஹோல் உள்ள  இந்த கட்டிடத்துக்கு உள்ளே எல்லாரும் எல்லா இடமும்  போக முடியாது, போய்ச் சுற்றிப்  பார்க்கவும் முடியாது, அரசாங்க உயுர்மட்ட,அல்லது அழைப்பிதல் கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே அதில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம், ஆனால் வருடத்தில் ஒரு முறை வரும் கிறிஸ்மஸ் நிகழ்வை நகரசபை, பல இடைஞ்சல்களுக்கு முகம் கொடுத்து  வீட்டில்லாததால், தெருவோரம் குளிரில் திருவோடு வைத்துக்கொண்டு வசிக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்காக திறந்து விட்டு " ஜேசுநாதரின் கடைசி இராப்போசனம் "  போல விருந்து வைப்பார்கள்,கொஞ்சம் கிறிஸ்தவ நம்பிக்கையில் நடக்கும் அந்த நிகழ்வில் நகரபிதாவும் ஒன்றாக ஏதிலிகள் எல்லாரோடும் இருந்து சாப்பிடும் நல்ல நிகழ்வும் நடக்கும்.

                                                 இந்தக் கட்டிடத்தில் ஒரு மணி இருக்கு, அது ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒரு முறை  அடிக்கும், ஆனால்  ஒரே மாதிரி அடிக்காது,வேற வேற டியூன் இல் அந்த மணி அடிக்கும், அது Carillon என்ற 49 வெவேறு மணிகள் வெவ்வேறு நாதம் எழுப்பும் இசைக்கருவி. அந்த மணியின் டியூன் பியானோவில் நோட்ஸ் எழுதி வாசிப்பது போல வேண்டிய மாதிரி மாற்றலாம்,அண்மையில் ஒரு இசைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி தான் இசை அமைத்த ஒரு மெட்டை உலக சமாதானத்துக்காக இந்த மணியில் ஒரு நாள் ஒலிக்க விட்டு அசத்தினாள் என்று டெலிவிசன் செய்தியில் காட்டினார்கள். நல்ல நோர்வே கலாச்சாரப் பின்னணியில் மெட்டு யாரும் இசை அமைத்தால், பல பரிசீலனைகளின் பின்னர் நகரசபை அனுமதியுடன் இந்த மணியில் இசைக்க அனுமதிப்பார்கள்.

                                     இந்தக் கட்டிடத்தில் ஒரு குறிப்பிட்ட கோபுரம் ஒன்றில், ,என்னைப்போன்ற விண்வெளி விண்ணியல் ஆர்வம் உள்ளவர்கள் பிரமிக்கும்  Astronomical clock என்ற பூமியை மையமாக வைத்து சூரியன், சந்திரன் ,சில கோள்கள் ராசிகள் , அவைகளின் அசைவுகளை குறிக்கும் பஞ்சாங்கம் போன்ற ஒரு வானியல் சாத்திர  மணிக்கூடு இருக்கு,  கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு அது பிசகாமல் ஓடிக்கொண்டு இருப்பது இன்னுமொரு ஆச்சரியம். அந்த வானியல் சாத்திர  மணிக்கூட்டில் நேரம்தான் என்னால் பார்க்க முடிந்தது, மற்ற சூரியன், சந்திரன் ,கோள்களின் ,பன்னிரண்டு ராசிகளின் இயக்கத்தைக் கணிப்பிட கொஞ்சம் திருக்கணித வாக்கிய பஞ்சாங்க கணித அறிவு வேண்டும் . என்னோட நேரம் அந்த அறிவு என்னிடம் இல்லை, அதால் அதில எமகண்டம், ராகுகாலம்  எல்லாம் காட்டுமா என்று  ஆராய்ச்சி செய்யவில்லை.

                                     முக்கியமான இந்தக் கட்டிட முகப்புக்கு மேலே ஒஸ்லோவின் காவல் தெய்வம் என்ற பெண்ணின் சிலை இருக்கு,அதுதான் ஒஸ்லோ நகரசபையின் சின்னதிலும் இருக்கு, சென்ற நூற்றாண்டில் ஒஸ்லோ ஒரு துறைமுக நகரமா இருந்த போது , கடலுக்கு காற்றோடு பாய் மரக் கலங்களில்  பயணப்பட்டு  தொழிலுக்குப் போனவர்கள் திரும்பி வரும் வரை காதலோடு வீரமாகக் காத்திருக்கும் வீரப் பெண்ணின் சிலை அது. இன்னுமொரு சிலை காதலை வீட்டில் வைத்து விட்டு  துண்டு போட்டு சண்டைபோடும்  வாளோடு  புழுதியைக் கிளப்பியபடி யுத்தத்துக்கு போகும் குதிரை வீரனின் சிலை.  வீரமும் காதலும் ஒரு காலத்தில் ஒஸ்லோவின் கதையை எழுதியத்துக்கு சாட்சியாக அது இருக்கலாம் போல இருக்கு.

                                      ஒஸ்லோ நகரசபை, அரசாங்கம் நகர அபிவிருத்திக்கு கொடுக்கும் மானியன்களுடன், நகரத்தின் வர்த்தக,வாணிப வருமான வரியில் இயங்கினாலும், நகரத்தில் வாகனங்கள் தரிப்பிடத்தில் இருந்து நிறைய வருமானம் கிடைப்பாதாக சொல்லுறார்கள். சில இடங்களில் வீதிகளில் ஒரு சில மணித்தியாலம் மட்டுமே இலவசமாக வாகனம் நிறுத்த முடியும்,அதுக்கு மேலே நிறுத்தி பிடிபட்டால், பெரிய தொகை தடையாக அறவிடுவார்கள். இது கொஞ்சம் குழப்பமான விவாதமாக நீயா நானா என்று இழுபறியில் பல வருடம் எந்த சாதகமான முடிவும் இல்லாமல் நடந்துகொண்டே இருக்கு.

                                        மற்றப்படி ஒஸ்லோ நகரசபையும் ,அதன் நகரபிதாவும்  இந்த நீலமான பியோட் கடல் அலைகள் குடாப்போல வளைத்து வைத்து தாலாட்டி , மூன்று பக்க பள்ளத்தாக்குகளில் ருதுவாகி  சுழண்டு வரும் குளிர்காற்று மலைக் குன்றுகளில் மோதி நளினமாக வளைந்து போகும்    அலங்கார, அமைதி நகரத்தைக்  கோடையிலும்,உறைபனிக் காலத்திலையும்  ஒவ்வொரு நாளும் இதயத்துடிப்பு போல இரவு பகலாக  இயங்க வைத்து இருப்பதுக்காக எல்லாருமே பெருமைப்பட்டுக் கொள்ள நிறையவே நல்ல விசியங்கள் இருக்கு.
.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 12.04.15