Monday 25 December 2017

தேவதைகள் வெண்பனியில் அழுவதில்லை !

விழாக்கால கொண்டாட்டம் ஒரு எழுத்து உட்சாகம். அதில் உள்ள நல்லது, கெட்ட்து, முரண்பாடு, நம்பிக்கை, எல்லாமே எழுதுவத்துக்கு அலாதியான சந்தோஷம் தருவன. கிறிஸ்தவர்கள் மென்மையான சோசியல் அட்டிடியூட் உள்ள இலகுவான  போக்குடையவர்கள், அவர்களின் நம்பிக்கைகளைக்  கொஞ்சம் கிண்டலடித்து எழுதினாலும் தலையை ஆட்டிப்போட்டு போவார்கள்.கொதித்து எழுந்து  தலைக்கு விலை வைக்கமாடார்கள் .
                                                                        
                                                              கிறிஸ்ம்ஸ விழாக்கால கொண்டாட்டம் அதைபற்றிக் கவிதை போலப் பதிவுகள் எழுதும் போது  எப்போதுமே மூன்று விசயங்களில் தங்கி இருப்பது போலிருக்கும். முதலாவது அந்த உன்னதமான உட்சாக நாட்களில் எந்த நாட்டில் வசிக்கிறோம் என்பது. ரெண்டாவது அப்போதுள்ள காலநிலை, மூன்றாவது அந்த சமய அனுஷ்டான ஐதீகக்கதைகள் உண்மைபோல எழுந்து கொண்டு ஆடும் கொண்டாட்டத்தில் எப்படி எமது மனநிலையை இணைப்பது .

                                           தாய்திருநாட்டில் நத்தார் பெருவிழா  நமக்கு நேரடியாகச் சம்பந்தமில்லாத ஒன்றுபோலிருக்கும், எங்கள் ஊரில் கிஸ்தவர்கள் அதிகம் பேர் வசிக்கவில்லை.  சும்மா பாசையூர் அந்தோனியார் கோவிலுக்குப் போய்  விடுப்புப்பார்பது, அப்படி இருந்தும் " பால்வீதி நட்புக்கள் " என்ற ஒரேயொரு சிறுகதை மட்டுமே அயலட்டை கிறிஸ்தவ வீட்டு அனுபவத்தில்  எழுத்தமுடிந்தது . சுவீடனிலும்  பின்  நோர்வேயில் ,ஒஸ்லோவில் வசித்தபோது கிறிஸ்மஸ் என்ற ஜூல்  கொஞ்சம் நெருங்கி வந்து மடியில் ஏறிவிட்டது  !

                                                  கிறிஸ்மஸ் வருட இறுதி டிசம்ப்பரில் வருவதால் எப்போதுமே வெண்பனி விழுந்து இருக்கும், அதனால்  தான் மேலை நாடுகளில் " வைட் கிறிஸ்மஸ் "  என்று சொல்லுறார்கள் . சில வருடங்களில் கிறிஸ்மஸ் நாளில் இரவும் பகலும் நிலமெல்லாம்  வெறுமையாக இருக்கும்.  வெண்பனி விழுவதில்லை. அல்லது முந்திப் பிந்தி விழும். வெண்பனியும் வெளிச்ச சோடனைகளும் மேலைநாடுகளில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு இன்னும் அழகு கொடுக்கும்.


                                                 பைபிள் என்ற புனித நூலின் பழைய ஏட்பாட்டு தீர்க்கதரிசனத்திலும், புதிய ஏட்பாட்டின் அப்போஸ்தலர்களின் விவரிப்பிலும் உள்ள செய்திகளின்  அடிப்படையில்    ஒரு கிறிஸ்தவ சமய நம்பிக்கையாக ஜேசுநாதர் பிறந்த இரவை வத்திக்கானில் இருக்கும்  போப்பாண்டவரை இன்றய வழிகாட்டியாக நம்பும்   ரோமன் கத்தோலிக்கர்  கிறிஸ்மஸ் என்கிறார்கள். இதை எல்லாம் பின்பற்றாத கோடிக்கணக்கான மக்களுக்கும் கிறிஸ்மஸ் ஒரு உட்சாக கொண்டாடமாய்த்தான் இருக்கு . 
.
.
கர்த்தருக்கு 
மகிமையுள்ள ஸ்தோஸ்திரங்கள் ,
இந்த வருடமும் 
வாடிப்போன ஊசியிலை மரம் ,
மின்சார இணைப்பில் 
சுடரும் மெழுகுதிரி ,
பரிசேயர்களின் 
வெள்ளிப்போளங்கள் 
அலுமினியத்தில் ,
திசைத்துருவ நட்ச்சத்திரங்கள் 
ஜிகினாப் பேப்பரில் ,
ஆட்டுத் தொழுவத்தில் 
பிளாஸ்டர்பரிஸ் இடையர்கள், 
மேரியும் ஜோசேப்பும் 
பிளாஸ்டிக்கில் ,
பாலன்பிறகும் இன்றைய இரவில் 
நீர் ஒருவராவது 
இயற்கையாகவிரும் பிதாவே ! 
.
2013. Oslo, Norway, 
............................................................

உறுதிமொழியை நம்பிய
குழந்தைகள்
இன்னமும்
ஜன்னல் விளிம்பில்
நம்பிக்கையோடு
வெண்பனிப் பொழிவின் வரவுக்காய்

இனிப்
பார்வைக்குள்
எந்தவித அலுப்பையும்
தருவதில்லயென்ற முடிவோடு
வெளிச்சம் வேறு
கோடிட்டுக் காட்டுகிறது

" ஒரு
இருண்டு போன
நரிகளின் கிராமத்தில்
அழகான இளம் பெண்
மரவீட்டில் வசித்து வந்தாள்
என்று " அம்மா சினோஏஞ்சல்
கதைசொல்கிறாள்.

சோபாவில்
சரிந்து சாந்திருந்து
கால் இறுதியில் நிக்கும்
டெலிவிசனில் கால்பந்து விளையாட்டுப்
பார்கிறார் அப்பா

" தேவதைகள்
வெண்பனியில் அழுவதில்லை " என்று
ரேடியோவில்
ஜோகனாஸ் பிஜெல்லின்
நனைந்த குரலில்
பழைய பாடல் பிழிகிறது

ஆண்டுகளாகவே
இந்த மாதிரியான  செய்திகளை
பார்ப்பது மிகவும் அரிதென்று
கிளர்ச்சியாகிவிட்டது
மரங்கள்.

உறைநிலையில்
திசைகளைத்
தேர்ந்தெடுக்கும் உரிமை கூட இல்லாத
காற்று
தனக்கு விருப்பட்ட
எல்லாவற்றையும் தானே
தேர்ந்தெடுக்கும் ஒன்றாகிவிட்டது

மின் மினிகள்
காய்த்து தொங்கிய
கிறிஸ்மஸ் மரம்
சோடனைகளை
தளர்த்திக்கொண்டு
வாடத் தொடங்குது

இது
நிஜமான கதை என்பதால்
நம்பித்தான் ஆகவேண்டும்
பரிசுப் பொருட்களைத்
தூரமாக எறிந்து போட்டு
குழந்தைகள்
ஜன்னல் விளிம்பில்
வெண்பனிப் பொழிவின்
வரவுக்காய் காத்திருகிறார்கள்.......
.

26 December 2015 Oslo, Norway.
.....................................................................................

வெயிலைப்
முடிவில்ப் பதுக்கி வைத்து 
வெள்ளை  நிழலால் 
உருமறைத்து
உறை பனி உள்ளிறங்கத்
துவங்கியிருந்த 
மாலைப் பொழுதில்
என் விரலிடுக்குகளில்
வியர்த்தது..... 

இரண்டாவது
முறையாக 
நேற்று இந்தப் 
பனிப் பாலம் வழியாக 
எதிர்பாராத விதமாக
வழிதவறிச் செல்ல நேர்ந்தது......

ஒரு
வித்தியாசமான
பார்வையை
என் மீது வீசி எதிர் எதிரே  
எதிர்ப்பட்ட முதியவர் 
 தனிமைத்  தயக்கத்துடன்
 "நாளை எல்லாம் சரியாக இருக்கும்" என்றார்..

சென்ற  முறை
வேறொரு வழியில்
இதே பாதை 
என்னை அழைத்துச்செல்ல 
முடிவை அடைந்தபோது
உதிரி உதிரியாக இடம் பிடித்த 
டிசெம்பர்  வெயில்
கிராமத்தின்மீது வெளிச்சமாக
விழுந்து கிடந்தது....

அங்கங்கே  மரத்தடியிலும்
கைவிடப்பட்ட வாகனங்களிலும்
நிராகரித்த மரவீடு கூரைகளிலும் 
வாழ்வுடன் சமரசமாய் ஜீவித்தபடி 
தனிமை பாழடைந்த  கிராமம் ....

மறுபடியும் 
எதிர்ப்பட்ட முதியவர் 
தனிமைத் தயக்கத்துடன்
 "நாளை எல்லாம் சரியாக இருக்கும்" என்றார்.

கேள்வியற்ற 
பதிலுக்கான காரணம்
பாதி புரிந்தது, 
பாதி புரியவில்லை...

" சரியாக எல்லாம் இருக்கும் நாளை " 
என்று நானும் சொன்னேன் 

புரியாததை ஆராயவோ
புரிந்ததற்குத்
தலை அசைக்கவோ
மனம் எதிலும்
நிலையாக நிற்காமல் 
நடந்துகொண்டேயிருந்தது.... 

தொலைதேசத்திலிருந்து வந்துள்ள  
என்னுடன்
தன்   தனிமைத்துக்கத்தைப்
பகிர்ந்து கொள்ளவென்று
தேர்வு செய்து விட்ட
தனிமனிதனிடம்
வேறென்ன சொல்வது?
 .
.........ஒஸ்லோ 25.12.14....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
.

திவ்விய ஜெசுவே !
தேவரீர் எழுந்தருளிவாரும்
பரலோகத்தில் 
நின்று உம்முடைய 
திவ்விய பிரகாசத்தின் 
கதிர்களை காட்ட
இங்கே
பிரகண்டமாயிருக்கு
தரித்திரர்களுடைய பிதாவே,

உம்மை நம்பின
விசுவாசிகளுக்கு
உம்முடைய திருக்கொடைகள்
இந்தப் பிறப்பிலாவது
வங்கிக் கடனில்லாத
மெய்யுணர்வைத் திறக்கட்டும்
நல்ல பிதாவே
கொடைகளைக்
கொடுக்கின்றவரே
இருதயங்களின் பிரகாசமே
இப்பதான் நல்ல நேரம்
எழுந்தருளி வாரும்
இல்லாட்டி
சாத்தான்கள் எழும்புவார்கள் .
உத்தம ஆறுதலானவரே
ஆத்துமங்களுக்கு
மதுரமான விருந்தாளியே
உலகமயமாக்கல்
உலாவரும் நேரம்
பேரின்ப இரசமுள்ள
இளைப்பாற்றியே
வெளிக்கிட்டு வெளியே வாரும்
பிரகாசத்தில் சுகமே
வெயிலில் குளிர்ச்சியே,
அழுகையில் தேற்றரவே
திருச்சபையின்
படிகளைக் தாண்டி
எங்களுக்காக எழுந்தருளி வாரும்.
அடுத்த
கற்பளிப்புக்குத்
திட்டமிடுபவனையும்
நினைவில் வைத்து
வெகு ஆனந்தத்தோடு
உம்முடைய விசுவாசிகளுடைய
இருதயங்களின்
உற்பனங்களை நிரப்பும்.
உம்முடைய தெய்வீகமின்றியே
மனிதரிடத்தில்
குற்றமில்லாதது
ஒன்றுமில்லை என்பதை
எல்லாம் இழந்தவர்கள்
மறுபடியும் நிமிர்ந்து வர ஏதாவது
செய்யும் கர்த்தாவே .
உலர்ந்ததை நனைக்கும்
புற்றுநோயோடு
நோவாய் இருக்கிறவர்களைக்
குணமாக்க
வணங்காததை
வணங்கப்பண்னும் பிதாவே
அதுக்கொரு
மருந்து கண்டுபிடியும் ,
குளிரோடிருக்கிறதை
குளிர் போக்கும்
தவறினதை செவ்வனே நடத்தும்
உம்மை நம்பின
உம்முடைய விசுவாசிகளான அகதிகளுக்கு
இருக்க ஒரு இடம் கொடும்
அடைக்கலமானவரே
பரிசுத்தமானவரே
முழு விசர்
பிடிக்க முதலே
நல்ல மரணத்தையும்
நித்திய மோட்ச ஆனந்தத்தையும்
எங்களுக்குத் தந்தருளும்
ஆமென்.
.
24 December 2015 Oslo, Norway.
............................................................................................
பஞ்சுகளோடு
கொஞ்சி விளையாட
ஜன்னல்கள் குழந்தைகளுக்கு
சொல்லி வைத்த மாதிரி 
எதுவுமே நிகழவில்லை
கால நிலையின்
வருட இறுதி அட்டவணையில்

வீதிகள்
நாலு பக்கம்
சிதறிக் கிடக்க
கடந்து போவதிலும்
குளிரோடு
கும்மாளம் போட்டு
சம்பந்தமில்லாமல்க்
கதை பேசுது மஞ்சள் வெயில்

இடம்பெயர்ந்து போன
பறவைகளுக்கும்
நிமிர்ந்து பார்க்கும்
புல்நுனிக்கும்
இது இப்படித்தான்
நடக்கப் போவது
தெரிய நியாயமில்லை
இரவெல்லாம்
ஈர முத்தங்களுக்காய்
மரங்கள்
இலைகளை உதறிப்போட்டுக்
காத்திருந்தது தான்மிச்சம்
கொட்ட வேண்டிய
வெண்பனி
திட்டமிட்டுத் திசை மாறிவிட்டது!
.
..........................................................
மேட்குநோக்கி
சின்னதான நகரத்துக்கு
எல்லை கடந்த பறவை
மறுபடியும்
கிழக்கில் வந்திருக்கு !

அதன் பழைய கூடு சிதிலமாகிவிட்டது
இப்போதைய
ஸ்டோக்ஹோலம் நகரம்
பிரமாண்டங்களில்
பிரமிக்கவைப்பதாய் இருந்தாலும்
உறைபனிக்கால
வனாந்தரத்தின் மரங்களில்
கிளைகளை நெருக்கியடித்து
புதிய கூடுகள் நிரம்பி வழியுது !

வேடந்தாங்கலில்
மிகக் குறுகியகால விடைபெறுதல்
நீண்டு கொண்டிருக்கும்
உதிர்சிறகுகளில் பாரமேற்றிவிட
இந்தக் கோடையை
ஒரு மரத்தின் மஞ்சள் நிழலில்
சமாளிக்கலாம் ,
அல்லது,
சலிப்பும் எரிச்சலும் தருகின்ற 
பழைய நகரத்தின் 
சோம்போறிக் கொட்டாவிகளுடன்
பறவையின் பறத்தலே கேள்விக்குறி
 
அந்தரத்தில்
நிலைக்குத்தாய் நிமிர்த்திவைத்த
ஏணி ஒன்றின் தள்ளாடும்
முதல் படியில்
இருப்பின் அடிப்படையான
உயிரோடு இருத்தலும்
விடையில்லாத வெற்றிடத்தில்
சேர்ந்துகொள்கிறது.
.
19 December 2016 . Stockholm .
........................................................................................
உறை நகரம்
விறுவிறுப்பாக
சென்ற நூற்றாண்டின்
மனசாட்சியின் குரலை 
இன்னொரு முறை
பகுப்பாய்வு செய்கிறது
உரிமை கொண்டாட
வாய்ப்புக்கள் இல்லாது போய்விட்ட
தலைமுறையின் கலாச்சாரம்
இங்கேதான்
விதிகளையும் மீறிக் கொண்டு
புதுப்பித்தும் கொள்கிறது
காலம் அழித்துவிடாத கதைகள்
மீண்டு எழுவதுக்கு
ஏதேனும் வரைவிலக்கணம்
இந்தக் கொண்டாட்டங்களில்
இருக்கிறதா ?
நாளைக்குக்
கிடைக்கப் போவதிலும்
குழந்தைகளின்
சந்தோசங்கள் மட்டுமே
உண்மை எனும்போது
எதற்காக
இவ்வளவு முயற்சிகளென்ற கேள்வியே
உறைந்துபோய்விடுகிறது.
.
23 December 2015 .Oslo, Norway.
.

கொண்டாட்டங்களின்
மதுவில் மறக்க வைத்த
ஏமாற்றங்களை
இம்முறையும் 
விடிகாலை  விரக்தியாக்கித்
தருமாவென்று
பண்டிகைக் காலத்தை
மன்றாட்டமாகக் கேட்டேன்,



அது 


பரிகசிப்புக்களை
உன் பாதை எங்கும்
பரப்பி வைக்காதே,
நிராகரிப்புகள்
நிரந்தமானவை என்பதை
நீயாகவே நிறுவிக்கொள்ளாதே,
தூக்கி விடும்
உற்சாகத்தை
கணக்கில் எடுக்காமல்
தள்ளி விடாதே,
வெளிச்சமான
விழாக் கோலத்தை
புதியதோர்
பிறப்பென்று
ஏற்றுக்கொள், 
உனக்கு
யாரெல்லாம்
என்ன செய்ய வேண்டுமென்று
நினைக்கிறாயோ
அதை மற்றவர்களுக்குச்
செய்து விடு, 
பண்டிகை
ஒரு தண்டனையல்ல
பல நம்பிக்கைகளின்
பிராத்தனை, 
வருடத்தில் ஒருமுறைதானே
மனம் போல
வலம் வருகிறோம்
அதிலேறி
உலாத்திவிட்டுப் போவேன்  என்றது.
.
20 December 2015 Oslo, Norway 
...............................................................................................

காத்திருந்து
கால்களை இழுத்து
விழுத்துது
மண் தெரியாமல் மூடிய 
வெண் பனி,

மாற்றிக்கட்டவேறு
சேலை இல்லாதது போல
ஊத்தையாகிப் போன
முன் இருட்டு
ஓட்டிக்கொள்வது
வெளியே மட்டுமல்ல
வீட்டுக்குஉள்ளேயும்,

அதை
விடியாத இரவும்
வெளிச்சமாகாத பகலும்
ஒன்றான பின்
அலுத்துக்கொள்ளாமல்
என்மனநிலையில்
அண்டவிடாமல்
விரட்டியடிக்குது
கிறிஸ்மஸ்   மின்விளக்குகள்!
.
            
18 December 2015 Oslo, Norway                                                  


.