Sunday, 19 April 2015

நோர்வே சில ஆச்சரியம்....

நோர்வே நாட்டைப்பற்றி நோர்வேயிட்கு வெளியே ஐரோப்பிய நாடுகளிலும் வேறு நாடுகளிலும் வசிக்கும் தமிழ் நண்பர்கள் பலர் பெருமையாக சொல்லுவார்கள். நான் இங்கே வசிப்பதால்தான் அவர்கள் இந்த நாட்டை பெருமையாக நினைத்தார்கள் என்று நினைச்சுக் கொண்டுதான்  இவளவு நாளும் இருந்தேன். அடப் பாவிகளா இப்ப பார்த்தா  என் நினைப்பில மண் அள்ளிப்போடுற மாதிரி இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் பல விசியன்களில் முன்னோடியாக இருந்து உலக அளவில் எனக்கு முதலே அதைப் பிரபலம் ஆக்கி இருக்கிறார்கள்.

                                       வாழ்க்கைச்செலவு அதிகமான அமைதியான  பணக்கார நாடு,  வடக்கு கடல்  கடலடி எரிவாயு இயற்கை வளம் ,  அடக்கமான மலைகளும் , ஏரிகளும் , பிஜோர்ட்  இயற்கைக் காட்சிகள், வடக்கு நோர்வேயின் நடு இரவு சூரியன், வைக்கிங் என்ற கடல்கொள்ளையர் வரலாறு, ஆறுமாதம் காதைக் கடிச்சுத் திண்ணும் உறைபனி , ஒவ்வொரு வருடமும் சமாதானத்துக்கான நோபல்பரிசு கொடுப்பது  போன்ற பாடப்புத்தகங்களில் பிரபலமான தகவல்களை விட நிறைய சுவாரசியமான செய்திகள் நோர்வேயில் இருப்பது ஒரு ஆச்சரியம்,  

                                      ஐரோப்பாக் கண்ட அளவில் பல பிரமிப்புக்களில் நோர்வே சத்தமில்லாமல் இருக்கு.  முதலாவதா 53,199 km நீளமான கடற்கரை உள்ள நாடு , மத்திய நோர்வேயில் Hornindalsvatnet மிக ஆழமான  514 m உள்ள ஆழமான நல்ல தண்ணி ஏரி , மிகவும் உயரமான நீர் வீழ்ச்சி Vinnufossen  860 m வடக்கு ஐரோப்பாவை ஊடறுக்கும் அதிவேக சாலையான  E16 European route இல் உள்ள  Lærdal Tunnel தான் நீளமான சுரங்கப் பாதை  24.5 km .கடலுக்கு கீழே செல்லும் சுரங்கப் பாதையான  Eiksund Tunnel தானாம் undersea tunnel வகையில் உலகத்திலேயே ஆழமான சுரங்கப்பாதையான அதன் பரிமாணம்  7,765 metres நீளமும்  287 metres ஆழமுமாம் .

                                    மத்தியகால ஐரோப்பாவில் lintel technique என்ற ஸ்டைலில் மரத்தால் கட்டப்பட்ட  stave churches என்ற வகைத் தேவாலயம் 30 நோர்வேயில் இருக்காம், ஸ்கண்டிநிவியாவில் அவைகள்  12ஆம் , 13ஆம்  நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. சுவிடனில்இருக்கும் ஒரே ஒரு தேவாலயம் தவிர உலகத்தில் வேற எங்கேயும் அந்த வகைத் தேவாலயம் இல்லையாம்.

                                        நோர்வேயிலேயே சாகனே தேவாலயம்தான்  கோத்தே ஸ்டைல் அற்கிடேக்சரில் கட்டப்பட்ட தேவாலயக் கோபுரத்தை நியோ கோத்தே ஸ்டைல் என்று சொல்லுறார்கள்,வடக்கு ஐரோப்பாவில் இப்படி கோத்தே ஸ்டைல் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட தேவாலயதில்  உள்ள பைன் மரத்தால் செய்யப்பட்ட எண்கோண வடிவ பலிபீட மேடை போல வேற எங்கேயும் இல்லை . மிக மிக அரிதாக Hollenbach organ என்ற மரத்தால செய்யப்பட்ட ஓர்கன் வாத்தியம் உள்ளது இந்த ஒரே ஒரு தேவலாயதிலையே அது 1891  இல் இருந்து இப்பவும் வாசிக்கப்படுவதுவும்  ஒரு அதிசயம்.

                                             உலகத்திலேயே பெண்களுக்கு முதல் முதல் வோட்டு உரிமைக் கொடுத்த நாடான நோர்வேயில் 37% மான நோர்வே மக்கள் உயர் கல்வி படிப்பு படித்து இருக்கிறார்களாம். அது அவர்களை  the best educated people in Europe. அந்த வீதத்துக்குள் நான் இல்லை. நோர்வேதான் குழந்தை பெற்ற தாய்மாருக்கு விடுமுறை கொடுக்கும்  maternity/paternity leave scheme இல் உலகத்தில் முதலாவது. தாய்க்கு  44 வாரங்கள்   (13 months) வேலை செய்த சம்பளத்தில்  80% கிடைக்கும் விடுமுறையுடன் , அல்லது 34 வாரங்கள்  (10.5 months) வேலை செய்த சம்பளத்தில் 100%. கொடுப்பனவுடன் , அப்பாவுக்கு 12  வாரம் சம்பளத்துடன் விடுமுறையும் கொடுக்கிறார்கள், அதைக் குழந்தைகளின் உரிமை போல செய்கிறார்கள்.

                                 ஆனாலும் நோர்வே வெள்ளை இன மக்கள் இவளவு சலுகை இருந்தும் அடுத்து அடுத்து பகவான் கொடுக்கிறான் என்று பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை. வந்தேறுகுடிகள்தான்  அந்த சலுகைகளை அதிகம் பெற்று மேலும் மேலும்  பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்லுறார்கள்.  நோர்வே உலகத்தில் best country for the State of the World's Mothers என்று பல வருடம் வந்த நாடு. .மனித உரிமைகள் மதிப்பீடு என்றதில்  Human Development Index இல்  11 வருடங்கள்  2001 இல் இருந்து  2011. வரை முதலாவதாக இருந்த நாடு.

                           நாட்டு மொத்த தேசிய வருமானம் , தனிமனிதர்களுக்கு பங்கிடும்  GDP per capita இல் உலகத்தில் பல வருடம் நோர்வேயை அடிக்க வேறு நாடுகள் இல்லாமல் இருந்து அசத்தி இருக்கு.  2012 இல்  உலகம் எங்கும் பத்திரிகையாளர் வேட்டை ஆடப்பட்டுக் கொண்டிருக்க  The World Audit பத்திரிகை சுதந்திரத்துக்கு  Freedom of Press என்பதில் முதலாவதாக  வந்தது. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட போது முதலாவது Secretary-General செயல் அதிபராக 1946 இலிருந்து  1952 அதில் இருந்தவர் Trygve Lie என்ற நோர்வே நாட்டவர்.

                                        உலகத்திலேயே முதல் முதல் சுற்றுப்புற சுழலுக்கு ஒரு அமைச்சு உருவாக்கிய நாடு நோர்வே. 1972  இல் நோர்வே அதை உருவாக்கியபோது உலகத்தில் வேற எந்த நாட்டிலும் சுற்றுப்புற சுழல் என்றால் என்ன அதன் முக்கியத்தும் என்றால் என்ன என்று அறியாமலே இருந்தார்கள்.  நோர்வே  European Union என்ற ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பில் இல்லை. ஆனால்  European Economic Area (EEA) என்பதில் 1992 இல் இணைந்தது ,  2001 இல்  எல்லைகள் திறந்த ஐரோப்பா என்ற Schengen Area இல் இணைந்து எல்லைகளைத் திறந்து விட்டது.

                              நோர்வே பணக்கார நாடு ஆனால் அதிகம் உலகப்பிரபலமான பணக்காரரை உருவாக்காத நாடு. அதுக்கு காரணம் சீனாவைப்போல , ஐரோப்பாவில் உள்ள ஒரே ஒரு state capitalism என்ற பொருளாதார அரசியல் பின்பற்றும் நாடு என்கிறார்கள். நோர்வே பணக்கார நாடு என்றாலும் அதுக்கு கொடுக்கும் விலை அதிகம், மோசமான காலநிலையை திட்டிக்கொண்டு கடுமையாக உழைக்க வேண்டிய நாடு . இந்த நாட்டின் காசில் இங்கே பணகாரர்போல வாழ முடியாது. காரணம்  உள்ளாடை வரை உருவி எடுக்கும் வாழ்க்கைச் சுட்டெண் அதிகம். இங்கே உழைப்பதைச்  செலவழிக்காமல், மூன்று நேரம்  வெள்ளைப் பாணைப்  பச்சை தண்ணியில் தோச்சுச்  சாப்பிட்டு மிச்சம் பிடித்தால் நோர்வேக் காசு இலங்கை போன்ற வறிய நாடுகளில் பெறுமதியாக இருக்கும்.

                                        பனிச்சறுக்கு விளையாட்டை modern skiing as a sport ஆகக் கண்டு பிடித்த நாடு நோர்வே .இன்றுவரை விண்டர் ஒலிம்பிக்கில் அதிகம் தங்கம்,வெள்ளி. பித்தளை மெடல்கள் வாங்கிக் குவித்த முதலாவது நாடு நோர்வே. உலகத்திலையே மிக அதிகமான உயரத்தில் செயற்கை பனிச்சறுக்கு தடம் கட்டி வைத்துள்ள நாடு நோர்வே.  விண்டர் ஸ்போர்ட்ஸ் பிரபலமாயும் உள்நாட்டில் அதிகம் பிரபலம் இல்லாத செஸ் என்ற சதுரங்கத்தில் சென்ற வருடம் மங்க்னுஸ் கார்ல்சன் என்ற பையன் உலக சம்பியனா வந்து அசத்தினார்.

                                            உலகப்புகழ் பெற்ற அத்திலாந்திக் சல்மான் என்ற உள்ளுரில் லக்ஸ் என்று சொல்லப்படும் மீனை வளர்த்து உற்பத்தி செய்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் முதலாவது நாடு நோர்வே. பிரவுன் கலரில் உலகம் எல்லாம் உலாவும்  brunost என்ற சீஸ் கண்டுபிடிக்கப்பட்ட நோர்வேயில் சந்தோசமான செய்தியாக  உலகத்தில கோப்பி அதிகம் பேர் குடிக்கும் நகரமாக ஒஸ்லோ முதலிடத்தில் இருப்பது போல வாழ்க்கைச்செலவு அதிகமான நகரமாயும் ஒஸ்லோதான் முதலிடத்தில் இருப்பது எல்லோருக்கும் சந்தோஷமான செய்தி போல இல்லை என்பது அந்த நகரத்தில் என்னைப் போல அன்றாடம் காச்சிகளாக வாழும்  பலரோட கருத்து.
.
.