Wednesday 26 October 2016

மனசாட்சியின் மறுமொழிகள்

முட்டாள்தனமாகக்   கேள்வி  கேட்டு அதுக்குப் புத்திசாலித்தனமாகப்   பதில்  சொல்வது போல  பல  கவிதைகள்  ஒரு பரிசோதனை முயற்சியாக  சென்ற வருடம்  சில  மாதங்கள்  எழுதினேன்.  அது ஒருவிதமான ஆத்மவிசாரணை செய்வது போன்ற ஸ்டைல். 

ஏனோ தெரியவில்லை ஒரு கட்டத்தில் அந்த ஸ்டைல் இல் எழுதுவதும் சலிப்பை ஏற்படுத்தி விட்டதால். நிறுத்திவிட்டேன் . சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன் என்றது  போல  ஒரே  ஸ்டைலில்  எழுதி  வாசகர்  கழுத்தை  அறுக்க விரும்பாததால் நானே நிலைமை   கலவரம்  ஆகுமுன்று  நிறுத்தி விட்டேன்  . 

அந்தக் கவிதைகள் எல்லாவற்றையும்  சேர்த்து " மனசாட்சியின் மறுமொழிகள்  " என்று தொகுப்பு ஆக்கியுள்ளேன். இவை  உங்களுக்கு  புரியுமா புரியாத  என்று  எனக்கு சரியாகச் சொல்லமுடியவில்லை. ஏனென்றால்  இவைகள்  வேற ஒரு தளத்தில்  பரிமாணங்களை  உணர்ச்சியோடும், சம்பவங்களோடும் உள்ளிறங்கிப் போய் கொஞ்சம்  விபரமாக இடுக்குகளில்  விசாரிப்பவை. பிடித்து இருந்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள் , 
..............................................................................................
வெளிச்சங்களைக் 
கூட்டி ஒதுக்கி

அள்ளிக்கொண்டு போய் 
ஒழித்துவைத்து 
நிரவல் செய்வதன் 
தெளிவு என்னவென்று 
இரவைக் கேட்டேன்
அது 
அடேய் விழிக்கமுடியாதவனே 
இறுக்கிப் பிடித்து 
அடைந்து கொள்ள 
நாங்கள் என்னவுன் 
கள்ளக் காதலியா?
இல்லாத
இடத்திலும் நாங்கள்
உள்ளத்தின் 
ஒளி விளக்கு, 
விளக்கை அணைக்கும் 
அவசரத்தில்
காமம் இருக்கும்போது 
விளங்கப்படுத்த 
எங்களுக்கு 
அவகாசம் யாரும் 
தருவதில்லையே, 
பூங்காக்களில் 
மின்மினிப்பூச்சியோடு 
ஹைக்கூ 
கவிதையே எழுதுகிறோம்,
தரவைக் கடலில் 
மெதேன் காற்றோடு 
மரபுக் கவிதை எழுத 
அதைக் 
கொள்ளிவால் பேயென்று 
பூச்சாண்டி காட்டுறீங்கள், 
அடர் இரவில்தான்
மேகங்களை 
அந்தரங்கமாக
இறுக்கியனைத்துக்கொள்கிறோம்
எரிந்து முடியும் 
வடதுருவ விடி வெள்ளிகள் 
யாருக்காகவும்
நடிப்பதில்லை, 
நிமிர்ந்து பார் 
நட்சத்திர மைதானத்தில் 
சலசலத்து 
விடிய விடிய 
விழித்துக்கொண்டுதானிருக்கிறோம்,
வாசல்களைத் 
திறந்த வெளியை வந்து பார் 
அழகான பால் வீதி 
அதுதான் எங்கள் 
படுக்கை விரிப்பு, 
உனக்கு நித்திரை 
எங்களுக்கு 
நித்தமும் யாத்திரை என்றது .



கொண்டாட்டங்களின் 
மதுவில் 

மறக்க வைத்த 
ஏமாற்றங்களை
இம்முறையும் 
விடி காலையில் 
விரக்தியாக்கித் 
தருமாவென்று 
பண்டிகைக் காலத்தை
மன்றாட்டமாகக் 
கேட்டேன், 
அது 
பரிகசிப்புக்களை 
உன் 
பாதை எங்கும் 
பரப்பி வைக்காதே,
நிராகரிப்புகள் 
நிரந்தமானவை என்பதை
நீயாகவே 
நிறுவிக்கொள்ளாதே,
தூக்கி விடும்
உற்சாகத்தை
கணக்கில் எடுக்காமல் 
தள்ளி விடாதே,
வெளிச்சமான 
விழாக் கோலத்தை 
புதியதோர் 
பிறப்பென்று 
ஏற்றுக்கொள், 
உனக்கு 
யாரெல்லாம் 
என்ன செய்ய வேண்டுமென்று 
நினைக்கிறாயோ 
அதை 
மற்றவர்களுக்குச் 
செய்து விடு, 
பண்டிகை 
ஒரு 
தண்டனையல்ல 
பல 
நம்பிக்கைகளின் 
பிராத்தனை, 
வருடத்தில் ஒருமுறைதானே
மனம் போல 
வலம் வருகிறோம் 
அதிலேறி 
உலாத்திவிட்டுப் போவேன் என்றது.



பஞ்சு போல 
அன்பிருந்தும் 

தடுக்க முடியாமல் 
பாஞ்சு வருவதன்
கையாலாகத்தனத்தனம் 
என்னவென்று 
கோபத்திடம் கேட்டேன் 
அடேய் வீணாப்போனவனே
அது 
தன் மீதே நம்பிக்கை 
இல்லாதவனின் 
வெளிப்படை ஒப்புதல் 
வாக்குமூலம்,
விட்டுக்கொடுப்பின் 
சாத்தியங்கள் 
பின்வாங்கிய நிரந்தரமான 
நிராகரிப்பு ,
பொறுமையின் 
கட்டுப்பாட்டை 
இழந்து வெளியேறிய 
திரும்பப்பெற முடியாத 
ஆளுமை ,
இதயத்தின் 
இரத்தச் சுற்று ஓட்டம் 
இரட்டிப்பாகும்
அபாய கட்டம், 
அற்பமானதை 
நியாப்படுத்த
கவுரவமானதைத் 
தூக்கி முன் வைக்கும் 
அடமானம் , 
ஆத்திரத்தைக் அதிகம் 
கொடுத்து 
அவமதிப்பை
இன்னுமதிகமாகவே 
வேண்டிக்கொள்வது,
நீயே உனக்குத் தூக்கு 
மாட்டிவைத்துக்கொண்டு
மற்றவன்
சாகவேண்டுமென்று
எதிர்பார்ப்பது, 
தேவையில்லாத 
நேரத்தில் 
தேவைக்கதிகமான
சக்தி இழப்பு,
உன் அழிவுக்கு 
நீயே தேர்ந்தெடுத்து 
நடு நெஞ்சில் நட்டு வைக்கும் 
நச்சு விதை, என்றது .



நிமிர்ந்து 
பார்ப்பதற்கு 

யாருமில்லாத போதும் 
விரித்து வைத்திருப்பதன் 
விந்தை என்னவென்று 
வானத்தைக் கேட்டேன்
அது 
அடேய் நாகரீகக் கோமாளியே 
நீல நிறம் 
பரிசம் போட்ட 
நீண்ட கல்யாணக் 
கனவின் தொடர்ச்சி, 
அதிகாலை 
இதழ் வாழை நிறம் 
வரம் தந்த 
வயதுக்கு வந்த வேளை, 
அந்தி மாலை
குங்குமப் 
பொட்டு வைக்கும் 
நிட்சயதார்த்தம், 
நுதல் மேகங்கள் 
எங்களைத் 
தள்ளி விட்டுத் தாலாட்டும்
முதல் முதலிரவு, 
விடிய விடிய 
வெள்ளி விரிப்புக்கள் 
சொல்லித் தரும் 
காமங்களின் 
மன்மத பாடங்கள்,
இரவின் 
மழை முகில்கள்
இறக்கிவைக்கவேண்டிய 
இதழ் ஈரமான 
முத்தங்கள், 
மஞ்சள் தடவிய 
விடிகாலை 
மிச்சங்களோடு 
நெருங்கும் 
எச்சங்களின் கெஞ்சல் , 
நிலவு 
தள்ளியே நின்றாலும் 
விடி வெள்ளிகள் 
நம்பிக்கையின்
நட்சத்திரங்கள்,
புயல் இப்பவும் 
எங்களுக்குப் 
புரிந்துகொள்ள முடிந்த 
பொறாமையின் புதிர், 
யாருக்கும் இடைஞ்சலில்லாத 
ஒரு இரவுக்கும் 
ஒரு பகலுக்கும் 
இதைவிட வேறென்ன 
வேண்டுமென்றது !



வலை வீசி 
அலையின் நுரை போல 

அடங்க முடியாமல் 
ஆர்ப்பரிக்கும் 
இச்சைகளின் 
வரைவு இலக்கணம் 
என்னவென்று 
காமத்திடம் கேட்டேன் 
அடேய் அலங்கோலமாய்ப் பிறந்தவனே 
அது 
அத்திவாரமில்லாத
அணி அலங்காரத்தின்
பிரதி பிம்பம்,
நிமிடங்களின் 
ரசிப்பில் 
வருடங்களைத் 
தவறவிட்டவனின் 
சுயசரிதை, 
நேசிப்பை ரசித்துப் 
பாட முடியாத
அவதி நேரத்தின் 
தலைக்கேறிய ஒப்பாரி,
சொந்தமில்லாத
இங்கிதங்களைத் 
திருடி எடுத்து ருசிக்கும்
சிற்றின்பம்,
நின்று பேச விரும்பும் 
தென்றலை 
விரட்டி ஒரங்கட்டும் 
சூறாவளி, 
அழகைக் 
கற்பனையில் 
நிர்வாணமாக்கும் 
அழுக்கு, 
நீண்ட நிலையான 
சந்தோசத்தைக் 
கடக்க நினைக்கும் 
குறுக்கு வழி,
நன் நடத்தையை 
நடுத் தெருவில் வைத்து 
விலை பேசும் 
மனசாட்சி என்றது !



இலைகளை 
இழந்துகொண்டிருப்பதில் 

அப்படியென்ன 
இங்கிதம் இருக்குதென்று
என் 
தூங்கு மூஞ்சி 
முகத்தைத் 
தூக்கி வைத்துக்கொண்டு
இனி 
நிமிர முடியாத 
மரங்களைக் கேட்டேன் 
அது
அட மோட்டுக் கழுதை 
வேர்களில் 
எங்கள் விலாசத்தை 
எழுதி வைத்து இருக்கிறோம் 
கிளைகளில் 
கிளுகிளுப்பு 
வேண்டுமளவு எஞ்சி இருக்கு 
மலராத மொட்டுக்களில் 
வண்டுகளின் வாசம் 
சேமித்தே இருக்கு 
சுவாசம் 
தளர் தண்டுகளில் 
சுற்றி ஓடுது 
நாங்கள் மரங்கள் 
இறப்பை 
நிரந்தரமான இறுதியெண்டு 
மனிதர்கள் போல் நேசிப்பதில்லை 
பொறுத்திருந்து 
பருவம் வர 
துள்ளி எழுந்து 
துளிர்துவிடுவோம் என்றது ! 



மெல்லெனவே 
கொல்லப்படுவதற்கா 

வடதுருவத்துக்கு 
குடிபெயர்ந்தேன் 
என்று
கும்மிருட்டை 
மூடிவைத்துக்கொண்டிருந்த 
இலையுதிர் குளிரைக் 
கேட்டேன்
அட பரதேசியே 
இரட்சிக்கத் தவறிய 
இதயத்தின் 
இடைவெளிகளைக் 
காதலால் 
நிரப்பிக்கொள்
அதை 
எப்போதும் 
நினைத்துக்கொள்ளும்படி 
உண்மை 
ஒளியை ஏற்றிவை 
அதிகாலையே 
வெள்ளிகளை எண்ணி
ஆரம்பித்து 
விபரிக்க முடியாத 
வெளிச்சங்கள்
நடு இரவுவரை 
வீசி எறிந்துகொள்ளும் என்றது



பிடிச்சு 
இழுத்து வைத்தமாதிரி 

நேசத்தை 
உதாசீனம் செய்ய முடியாமல்
அவள் பாசமிருப்பதன் 
காரணங்கள் 
என்னவெண்டு 
காதலிடம் கேட்டேன்
அது 
அடேய் விபரமில்லாதவனே 
அவள் அன்பு 
உன் மீதான அக்கறைகளின் 
அணைக்கட்டு 
அவளின் கருணை 
கனவுகளின் காப்பியம் 
அவள் கண்ணீர் 
நெருப்பையும் நனைக்கும் 
தண்ணீர் 
அவளின் அனுமதிகள் 
அடிமைகளின்
சுதந்திரப் பாடல் 
அவள் நெருக்கம் 
பிரிக்க முடியாத 
திருக்குறளின் சுருக்கம் 
அவள் வியர்வை 
வெண் முத்து 
அவள் வாசம் 
இன்னொரு பிறப்பு 
அவள் பொறுமை 
உன் அதிஸ்டம் 
அவள் 
விருப்பங்கள் 
உனக்கேயான 
நிறைவான திருப்பங்கள் 
அவள் மவுனம் 
முழுதான உன் எண்ணம்
எதையும் தாங்கும் 
அவளை மட்டுமே 
காதலித்துப்பார் 
உலகம் 
உனக்காகவே விடியும் என்றது .



அர்த்தமில்லாமல் 
ஓடுவதன் 

விளக்கம் என்னவென்று
காலத்தைக் 
நிறுத்தி வைத்துக் 
கேட்டேன்
அது
அட அவசரம் பிடிச்சவனே 
காலம் 
மரணத்தின் 
கைக் கடிகாரம்
முந்திப் பிந்தி விடாமல் 
உன்னோடு 
சேர்ந்தே ஓடும் 
முடிந்தால் 
நாடித்துடிப்புள்ள போதே 
பொழுதுகளை
மணித்தியாலங்களாக்கி 
உழைப்பாக்கிவிடு 
நிமிடங்களைப் பிரித்து 
சந்தோஷ 
விநோதங்களை
இதயத் துடிப்போடு 
இணைத்து விடு
செக்கன்களை
இழக்க விரும்பாத 
வெற்றிக்கென 
ஒதுக்கி வை
முக்கியமாக 
உன் 
புரியாத கேள்விகளுக்கு 
தெரியாத பதில் 
தேடும் நேரத்தை
குறுக்க கடந்து 
வீணாக்காதே என்றது.



விருப்பமில்லாதவனை 
என்னத்துக்கு 

விடியாத முகத்திலடிச்சு 
வெளிச்சம்
ஜன்னலைத் தேர்ந்தெடுத்து 
தட்டி எழுப்புகிறதென்று 
அதிகாலைப் பறவையிடம் 
கேட்டேன்
அட விளக்கமில்லாதவனே 
இருப்பின் 
அற்ப கேள்விகளில் 
உற்சாகமாகி
சிறகுகள் அசைத்துப்
பறப்பதின்
பக்குவத்தில் சொல்கிறேன் 
சூரிய உதயங்களை
யாரும்
உறை போட்டு
மூடி வைக்க முடியாது
நேர்த்தி பிசகாத 
ஒரு நாளின்
சுழற்சியை
பூமிக்கு
நிறுத்தி வைக்கத் தெரியாது
காலநிலை 
உன்னை அடக்கும்
சமாதிநிலையல்ல
அது
புதுக்கவிதை
தட்டி எழுப்பும் 
ஆழ் மன நிலை
இந்த நாளை
உனக்கேற்ற மாதிரி
சமநிலையில் 
வடிவமைத்துக்கொள்
அதுவே
விலையேதுமற்ற 
என்றைக்குமான திருநாள் என்றது ! 



அழுத்திக்கொண்டே 

இயங்க முடியாமல் 
விழுத்திக்கொண்டிருப்பதன்
வீரியம் என்னவென்று 
ஆத்மாவைக் 
கேட்டேன்
அடேய் இலக்குகளில்லாதவனே 
அது 
தனக்கு வெளியே
எதுவுமில்லையென்று 
வெட்ட வெளியில்
ஒடுங்கிப் போகும் 
தனிமை, 
எதையெல்லாம் 
தள்ளிப் போடமுடியுமோ 
அதையெல்லாம் 
முன்னிறுத்தும் 
ஓரங்க நாடகத்தின் 
ஒத்திகை,
பெரிய 
வழிகள் இருக்க 
வேண்டுமென்றே 
சின்ன 
வேலியைத் தாண்டுவது,
காற்று வெளியில் 
ஆயுள் கைதிபோலக் 
கதவுகளைப் 
பகலில்தேடுவது , 
முடியுமென்ற 
வார்த்தையில்லாத 
அகராதியை
மனப்பாடம் செய்யும் 
பைத்தியக்காரத்தனம்,
முடிவாக அது 
சோம்போறிகள் 
தேர்ந்தெடுத்த 
சந்தனம் தடவிய 
சமாளிப்பு வார்த்தை என்றது.


நுழைய முடியாத 
இடுக்குகளிற் 

புகுந்து வெளியேறி 
மெல் உணர்வை
சொல்லாமலே 
இழுத்தெடுக்க 
எப்படி முடிகிறதெண்டு 
கவிதையிடம் கேட்டேன் 
அது 
அடேய் உணர்ச்சியில்லாதவனே 
இன்பமான 
சொற்களையே 
இழவு வீட்டிலும் 
சொந்தம் கொண்டாடு,
வரிகள்
வலைவீசியே
வசந்தகால 
வாழ்க்கையைத் தேடட்டும், 
தேவையான அளவு 
கற்பனை 
உண்மை வார்த்தைகளில்
கலந்திருக்கட்டும்,
புதிதாக்கி 
நேரே பார்ப்பதில்
பழசாகிப் போன 
அடிவேண்டிய பரிமாணங்களைச் 
செருகி விடு, 
அனுபவத்தை 
அதன் அனுமதியின்றியே 
அங்கங்கே 
இறுக்கி அறைந்து விடு, 
புதுமைகளைக் 
கேட்டுக் கேள்வியில்லாமல் 
அதன் போக்கில் 
அவிட்டு விடலாம்,
மொழியிலுள்ள 
இருள் வழியும் 
படிமங்கள் 
வெளிச்சமாகட்டும், 
இலக்கணத்தை
எல்லாத் திசைகளிலும்
முடிவுகள் வரையில்
தள்ளியே வை, 
கவி விதைகள் 
உன்னாலும் முடியுமென்றது.

கடினமான 
பொழுதுகளை நெரிக்கும் 

காற்றிலும் 
உன் இயல்பான 
குணாதிசயத் 
தோற்றத்தை 
வரைந்து விடுகிறாயே 
எப்படிச் சாத்தியமென்டு 
மெல்லிசையைக் கேட்டேன் 
அது 
அடேய் மட்டிமடையா 
காதுகளைத் 
திறக்க மறுப்பவனின் 
இதயத்தை 
நாங்களாவே
இடித்துப் பார்ப்பதில்லை, 
எல்லாவித இரைச்சலும்
எங்களின் 
பிரகடனப்படுத்தப்பட்ட 
பொது எதிரி ,
நிஷப்தம்
நிழல் போலத் தொடரும் 
நீண்டகால நட்பு ,
சப்த சுரங்களின் 
அடி நாதங்கள் 
நம்மைத் தேர்ந்தெடுத்த
சதுர் வேதங்கள்,
நாங்கள் 
மறந்தாலும் சுருதி
விட்டுவிலகி 
நம்மை மறைப்பதில்லை, 
தாளங்கள் 
செப்பனிடப்பட்ட 
தலைமுறையின் வாசல்க் 
கோலங்கள்,
இசைந்து பார்
இராகங்களில்லாத 
அமர கீதங்கள் 
ஒலிக்கவிட்டு 
நீ மறந்த இன்பத்திலும்
இசைந்திருப்போம் என்றது!


டிசெம்பர் வருமுன்னே 
வெள்ளை விரிப்புக்களை 

எதற்காக நீ
வெள்ளனவே
நவம்பரில் 
இறக்கி விடுகிறாயென்று 
உறைபனியிடம் 
விரக்தியாகக் கேட்டேன் 
அது 
அடேய் ஒளித்துக்கொண்டிருப்பவனே 
அவசரம் 
அப்படி எதுவுமேயெங்கள் 
கரைந்துவிடும் 
அடி மனதிலுமில்லை, 
வருடத்தின் மாதங்கள் 
உங்களுக்குத் தான் 
கட்டளைகளை 
அடிபணிய வைக்கும் 
கண்டுபிடிப்பு, 
எங்களுக்கும் 
தள்ளிப்போட முடியாத 
பிரசவ நேரங்களின் 
அவஸ்தை உண்டு,
வான அந்தரத்தில்
மானம் அலைக்கழிந்து
இறங்கிப் பரவிவிடத்தான்
விடுதலைஅடைகிறோம்,
உருண்டு பிரண்டு
விளையாடக் காத்திருக்கிற 
குழந்தைகள்
உன்னைப்போலக் 
குறை சொல்வதில்லையே,
உன் நடையை 
நிதானமாக்கி
வெண் பஞ்சுகளில் 
ஏறிநடந்து பார், 
நாலு பக்கமும் 
மேலாடை முடிய 
பாலாடைகளைத் 
திறந்து பார், 
புதிய பனியின் 
இளமை வாசத்தை
அள்ளியெடுத்து 
முகர்ந்து பார்,
வழுக்கி விழுந்தால் 
சாபங்களால் சபிக்காமல் 
ஆசையாக எங்களை 
ஒரு முத்தமிட்டு விடு, 
இறக்கி மூடிய
ஜன்னல்களை வெளிச்சமாகத் திற 
வெளியே 
வெள்ளை நிறம் 
உனக்காக அரங்கேகேற்றிக்
காத்திருந்து
விறைத்துப்போன
கவிதையே இருக்கும் என்றது !



                                                       கவிஞன்தான்  கற்பனையின் 
                                                     காதலி  என்றால் 
                                                அதெப்படி காலத்தில் அதன் 
                                     கனவுகள் களவாடப்பட மறந்து விடுவாயாவென்று   
                                                    மரணத்திடம்   கேட்டேன் 
                                           அதற்கது  அறுதியாகச்சொன்னது 
                                                                        அடேய்   
                                                      உறுதிகள்  இல்லாதவனே,  
                                                                     கவிதை
எழுதத் தொடங்கும்
முதல் வரியில்
மூச்சுவிடத் 
தொடங்குகிறது......,
எழுதி முடித்த
முடிவு வரியுடன்
அதுவாகப்
பேசத் தொடங்குகிறது.......
அதன்
உயிருக்கு
எழுத்துக்கு கொடுத்து ,
வரிகளுக்கு
வாழ்வு கொடுத்த,
அதன் வார்த்தைகளுக்கு
உணர்வுகொடுத்து ,
அனுபவத்துக்கு
ஆத்மா கொடுத்த,
அதன் சம்பவத்துக்கு
சாட்சி கொடுத்து ,
கவலைகளுக்கு
கண்ணீர் கொடுத்த........,
அதன் இருப்புக்கு
நம்பிக்கை கொடுத்து
இறுதிவரை
இதயம் கொடுத்த........
அந்தக் கவிஞ்சன்
கால விளிம்பில்
காணாமல்ப் போனாலும்,
காலமுள்ள
காலமெல்லாம்
அந்தக்கவிதை
அதுவாகவே
பேசிக்கொண்டேயிருக்கும்  என்றது 


.