Friday, 3 April 2015

நினைவாலே சிலை செய்து.

நோர்வேயின் தலைநகர், ஒஸ்லோவின் புறநகரில், ஒரு காலத்தில் அந்த நாட்டு  ராணுவத்  தளபதி வசித்துக்கொண்டு கட்டளை கொடுத்துக்கொண்டு இருந்த பேட்டையான  "மேஜஸ்ரூவா" என்ற இடத்தில இருக்குது கோடைகாலத்தில் அதிகமான உல்லாசப் பிரயாணிகளும் ,வேலைவெட்டி இல்லாத பிராணிகளும், ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களும், உடல் ஆரோக்கியம் விரும்பும் சுகதேகிகளும், நல்லூர் தேர்த்திருவிழா போல அலை மோதும் ப்ருக்னர் வியிலேன்ட் பார்க் என்ற கிரனைட் கற்களில் பொழிந்து எடுத்த சிற்பங்களின் சிற்றன்ன வாசல் !

                                               குஸ்தாவ் வியிலாந் என்ற நோர்வேயிய சிற்பியின் வாழ்நாள் படைப்புக்களை இங்கே வைத்திருக்கிரார்கள்! ஏக்கர் கணக்கில் பரந்து  விரிந்து கிடக்கும் இந்த" பார்கை" ஆரம்பத்தில் ஒரு உலகப்புகழ் பூங்காக்கள் திட்டமிடும் ஆகிலேயரிடம் வடிவமைக்கக்கொடுக்க, அவர் இதன் நடுவில் ஒரு கிரிக்கட் மைதானம் அமைக்கும்படி" ப்ளான் "போட்டாராம். நோர்வேயில் 4 மாதம் தான் போனாப் போகுது எண்டு வெயில் எறிக்கும்,அப்புறம் எப்படி கிரிகெட் விளையாடுவது,அதிலும் கிரிகட் எண்டால் என்ன நாசமறுப்பு எண்டு ஸ்கண்டிநேவியர்களுக்கு தெரியாது,அதால அவரை " நாயைப் பிடி, பிச்சை வேண்டாம்" எண்டு வீடுக்கு அனுப்பிவிட்டார்கள் !

                                                          என்னோட சிற்ப அறிவு வீச்சுக்கு இதை "உரிஞ்சான் குண்டி பார்க் " என்று பாமரத்தனமாக சொல்லத்தான் முடிகிறது ,அதே நேரம் ஒஸ்லோவில் உள்ள கலாரசனை உள்ள தமிழ்  கலாரசிகர்கள் இதைத் " தூசனப் பார்க் " என்று சொல்லுறார்கள்.இங்கே நோர்வே நாட்டு  நோர்வேயியன் பெண்கள் பொதுவாக மெலிந்து அம்சமாக இருப்பார்கள்  ஆனால் இந்தப் சிற்பப் பூங்காவில் பெரும்பாலான  சிற்பங்களில் பெண்கள் குண்டாக இருகிறார்கள் . அதை ஒருவித வாயிட்குள்ள நுழையாத பெயருள்ள ஒரு "...............இசம் "  எண்டு சொல்லுறார்கள் இன்டலெக்சுவல் அறிவுஜீவிகள் !

                                                   இந்த கிரனைட் கருங்கல் ஆண் ,பெண் நிர்வாண சிற்பங்கள் கோடைகாலத்தில மட்டுமல்ல,செம குளிர் காலத்திலையும் ஒரு உடுப்பும் போடாமல் நிர்வாணமாக உள்ள பார்க் !.. இங்க உள்ள மனித சிற்பங்கள் முழுவதும் ஆடையின்றி , ஆண் , பெண் உறவுகள்,  ,காதல்,ரொமாண்டிக் உறவு ,நட்பு,குடும்பம்  போன்ற சாதாரண மனிதர்களின் அந்தரங்கம் இல்லாத வாழ்வினை  ஆதாரமாக சொல்வது போல வடிவமைக்கப்பட்டது!இந்தப் பார்க்கின் நடுவில் உள்ள ஒரு பெரிய உயரமான பல மனிதர்கள் இணைந்து உருவாகும் சமுதாயம் போன்ற ஒரு சிற்பத்தைத் தவிர, வேறு  அபத்தமான சர்ரியலிஸ்டிக் சிற்பங்கள் போல மண்டையைக் குழப்ப வைக்கும் எதுவுமே இல்லை

                                          விவரம் தெரிந்தவளுக்கு இது எல்லாம் அழியா கலை ப்படைப்புகள் , என்னை போல அரை குறைகளுக்கு, இழுத்து மூடிக்கொண்டு போகும் பெண்களை தற்செயலாகப் பார்த்தாலே " அதிரினலின் " எசகு பிசகா எகிறும் நிலையில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் வேறவிதமாத்தான் தெரியும் .ஆனாலும் இந்த சிலைகளில் எந்த விசரமுமே இல்லை, அவளவு யதார்த்தமாய் மனிதர்கள் நிர்வாணமாய் இருந்தால் எப்படி இயல்பாக இருக்க முடியுமோ அவளவு ஆழமான  புரிந்துணர்வு சிற்பங்களின் வெளித்தோற்றம் உள்ளே இழுத்து ஆழமாக சிந்திக்க வைக்கும். அதைப் புரிந்து கொண்டால்  அமைதியான அந்த இடத்தில் , "வள வள "எண்டு பேசி அறுக்கும் நண்பர்களைத் தவிர்த்து தனிமையின் ஏகாந்தத்தை அனுபவிக்கக் கூடிய ஒரு இடம் !

                                   கோடை காலத்தில் இந்த இடமே , பச்சை புல் வெளிகள்,அதில் பாய்ந்து விளையாடும் அணில்கள்,புதுக் கவிதை எழுதும் சிற்றோடையின் கரைகளில் " உன் விழியில் விழுந்தேன், வின் வெளியில் பறந்தேன் " எண்டு ஒருவரை ஒருவர் அனைத்தபடி இளம் காதலர்கள், கலியாணம் கட்டாமல்  பிள்ளை பெறும்  சாத்தியங்களுக்கு சிக்னல் கொடுத்துக்கொண்டு இருக்கும் கொஞ்சம் பழகிய காதலர்கள் , அவர்களுக்கு குறுக்க மறுக்க ஓடும் சிறுவர்கள், ஒதுக்கமாக நின்று இசைக் கருவிகளில் பழைய ஸ்பானிஸ் ரொமான்ஸ் பாடல்கள் வாசித்து சில்லறைக்கு அல்லாடும் இசைக்கருவி வாசிபவர்கள், மரங்களையும் மலர்களையும் கிட்டத்தில் போய் விசாரிக்கும்  இயற்கையை நேசிப்பவர்கள்.....

                                ...... புரியாத மொழியில் வியந்து,கண்ணை விரிச்சு ,கமராவை கையை விட்டு எடுக்காமல் கிளிக்கிக் கொண்டே நகரும் டுரிஸ்ட்டுகள்,  உலகம் மறந்து புத்தகம் படிப்பவர்கள் , "உலகம் பிறந்தது எனக்காக" எண்டு சொல்லி " பீர் "போத்திலோடு இருந்து தத்துவம் பேசுபவர்கள், எண்ணப் பறவை சிறகடிக்க சாம்பல் நிற வண்ணப் புறாக்களுக்கு நொறுக்கு தீனி வீசுபரவர்கள் ,பேப்பர் கோப்பையில் குனிந்து வழிந்து பிச்சை எடுக்கும் பாவப்பட்ட ரோமானியர்கள் , எதைப்பற்றியும் ஜோசிக்காமல் உடம்பை மரத்தில முண்டு கொடுத்துக்கொண்டு  சும்மா ஆயாசமாக மற்ற எல்லாரையும் நோட்டம் விடுபவர்கள் , என்று நிறைய மனித நடமாட்டம் இருக்கும் .

                                            இவளவு அமளி துமளியிளையும் எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் இடைஞ்சல் இல்லாமல், துடைகானம் துணியக்காணம் எண்டு ஓடும் அவசர வாழ்கையில் இருந்து விலத்தி ,இயற்கைக்கு சிநேகமகா, இலற்றோனிக் பொழுதுபோக்குகளுக்கு விரோதமா , கோடைகால சூரியனையும், குருவிகளின் சத்தத்தையும் ,வட துருவ ஆரோக்கியமான தூய காற்றையும் சுவாசிக்கக் கூடிய இடம்!,,இந்த பார்க்கில் பல சமயம் கோடை காலத்தில் தண்ணியப் போட்டுடு உருண்டு பிரண்டு " நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன். திருக்கோவிலே ஓடிவா .." என்று பாடி பிரதட்டை செய்திருக்கிறன்! யாரும் ஒண்டுமே சொன்னது இல்லை!

                                        வருடங்களின் முன் இந்த பார்க்குக்கு ஒவ்வொரு கோடை காலமும் போய் அமைதியாக புத்தகம் படிப்பது,அல்லது பியரை உள்ளுக்க தள்ளிப்போட்டு , வேர்த்து வடிய உலகம் ஏன் இப்படி வருடத்தில் இந்த  மூன்று மாதம் மட்டும் வெளிச்சமாக அட்வான்ஸ் கொடுத்து சொல்லிச் செய்வித்த மாதிரி அழகாக இருக்கிறது என்று ஜோசிப்பது ,  இப்பவும் இந்த பேட்டையைக் கடந்து போகிறேன்,வருகிறேன் ஆனாலும் போகும் போதும் வரும் போதும் ஏனோ இறங்கிப்போய் ஏகாந்தமாய் இருக்க மனது வருகுதில்லை.

                                               ஜோசித்துப் பார்த்தால், எல்லா இடமும் எல்லா நேரமும் ஒரே மாதிரி சந்தோசம் கொடுப்பதில்லை, ஒரு காலத்தில் அந்த இடங்கள் தந்த அற்புதங்கள் நினைவாலே ஒரு கதையை எழுதிச் செல்லலாம், சில நேரம்   "நினைவுகள் புத்தகம் மாதிரி புரட்டப் புரட்ட தொடர்கிறதே தவிர மூடிவைக்க முடியவில்லை " எண்டு கவின்ஞர் ராஜகவி ராஹில் எழுதிய வரிகள் எவளவு அர்த்தம் நிறைந்தவை  என்பதும்  புரிகிறது!.
.