Sunday 28 August 2016

மழைநாளில் ஒஸ்லோ வீதிமனிதர்கள்




 " மழை நாளில் ஒஸ்லோ வீதி மனிதர்கள் " என்ற தலைப்பில் பல படங்கள் மழையோடு மழையாக மனம் போல் நனைந்து எடுத்தேன். அதில் எடுத்த ஒவ்வொரு நிழல்படத்தையும் ஒவ்வொரு படமாகப் போட நினைத்து உள்ளேன். அவை கவிதைபோல எழுதுவதுக்கான உற்சாகத்தை தருவதால் அதோடு கவிதைபோல ஒன்றையும் தள்ளி விடப்போகிறேன். 

ஒரு மழை நாளில் மொபைல் போனில் படம் எடுப்பதில் உள்ள முதல் நடைமுறைச் சிக்கல் அதன் தொடு திரையில் தண்ணி விழுந்துபட்டவுடன் தொடுதிரையை உருட்ட முடியவில்லை. அங்கால இங்கால அசையவே அடம்பிடிக்குது. " இத விட்டாலும் வேற கதி இல்ல, அப்பால போனாலும் நாதி இல்ல " எண்டது போல அதைத் துடைத்து மறுபடி இயக்கவேண்டி இருந்தது.

அதுக்கு போஸ் கொடுத்தவர்களிடம் பேசி முன்அனுமதி பெற்று அவைகளை எடுத்தேன், உண்மையில் படம் எடுப்பதை விடசுவாரசியமாக அவர்கள் எல்லாருமே என்னோட பத்து நிமிடம் பேசிவிட்டுத்தான் சென்றார்கள். ஜோசித்துப் பார்த்தா இந்தப் படங்களுக்கு " பேச யாருமில்லா ஒஸ்லோ வீதி மனிதர்கள் " என்று பெயரை இந்தப் படத்தொகுப்புக்கு வைச்சு இருக்காலம் போல இருக்கு....

பொதுவா இப்படி " ப்ரோஜெக்ட் " எல்லாம் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோகிராபர்கள் " தான் செய்வார்கள். நான் அந்த வகை இல்லை, என்னிடம் சும்மா பிலிம் காட்டவும் ஒரு காமராவே இல்லை,அதுகளை இயக்கவும் தெரியாது . அது எனக்கு தேவையும் இல்லை. அப்புறம் " எள்ளுதான் எண்ணெய்க்கு அழுவுது, எலி புழுக்கை ஏன் அழுவுது? " என்று நீங்க நினைத்தா, அதில கொஞ்சம் உண்மை இருக்கு..ஆனால் எனக்கு நிறையவே மனநிறைவு கிடைத்தது.

அழகான பல வர்ணக் குடைகள் , அதில் நடமாடும் இளம் பெண்கள், சாட்டோடு சாட்டா இறுக்கிப் பிடிக்கும் காதலர்கள். குடையிருந்தும் விரித்துப் பிடிக்க மறந்த மனிதர்கள், பிளாஸ்டிக் மழைக்கவசங்களில் நடனமாடும் மனிதர்கள், எதுவுமே இல்லாமல் வானமே கூரை பூமியே வீடு என நினைத்துக் குளிக்கும் மனிதர்கள்...ஏகப்பட்ட சாத்தியங்கள்.

அடிச்சு ஊத்தும் மழையை வீட்டு ஜன்னலுக்கால " நோகாமல் நொங்கு தின்னுற " மாதிரி பார்த்து ரசிப்பதுக்கும், மழைக்குள் இறங்கி அதோடு பேசிக் கொண்டு அதைப் படம் பிடிப்பதும் வேறு வேறு வித்தியாசமான அனுபவங்கள். காலநிலைகள் கடந்து செல்லும் காலத்தின் நிலைப்படிகள். அதில் தாண்டி பாதங்களை வெளியே வைக்க சுவாரசியத்தைத் வேற எதுவும் தேவையில்லை.

மழை நாளில் ஒரு நகரம் படு உற்சாகமாகத்தான் இயங்குது. அப்படி அதன் ஆத்மாவை பிரியாமல் ரசிக்க மறந்த நாட்கள் சபிக்கப்பட்டவை. அதை நினைக்க முன்னம் எல்லாம் " என்ன சீவியமடா இது " என்ற ஒரு " பன்ச் டயலக்கை " எப்பவுமே போகிற போக்கில் கடைசியில் வேண்டா வெறுப்பாக போட்டு விட்டுப் போவது, ,உண்மையில் அதை இன்றைக்கு மனம் விரும்பியே பொசிடிவ் ஆகப் போடவேண்டியிருக்கு...


                                    அருமையான  சீவியம்  இது.!



மழை 
மும்மரமாக
வெள்ளிகளை
இழுத்து நீட்டி 
இறக்கி விட்டு 
ஓய்வெடுத்து 
தார் போட்ட 
வீதியெல்லாம் 
தேரோடி நீராடி 
விளையாடிக்கொண்டிருந்த 
நேற்றைய மாலை


தூறல் 
விதைத்துக்கொண்டிருந்த
சாரல் துளிகளோடு 
வெய்யில் 
இடையே குறுக்கிட்டு 
நிமிடத்துக்கு ஒரு 
வெளிச்சம் 

பிரதிபலிக்க 
ஒரே படத்திலையே 
கற்றுக்கொண்ட 
மொத்த வித்தையையும்
தானியங்கித் தன்பாட்டில் 
செருகி விட்டது
கையடக்கி...!

                                              


முற்பகலில்
சாரல் விசிறியபடி
கால்களில்
தப்புத் தண்ணி
தெளித்துக்கொண்டு 
நெருக்கமாக
வரவிரும்பும்
மழைப் பாதைகள்...

அந்தி மாலை
ஈரமாகத்
தெரிந்தாலும்
பச்சை மரங்களைப்
பொறுத்தவரை
அதன்
குளிர்மை
பக்கத்து வீட்டு
இரகசியக் காதலிகள்....

இனிப்
பின்னிரவெல்லாம்
கிளைகளிளிருந்து
சொட்டுச்சொட்டாக விழும்
பருவத் துளிகளை
புல் வெளிகள்
மன்மதலீலை செய்து
சுற்றி வளைத்து
தாராளமாகப்
பயன்படுத்திக்கொள்ளும்! 

.

அக்கறையோடு 

மழை
அதைவிடக் கரிசனையோடு 
நனையாமல் குடைபிடி 
மனிதர்கள். 
யாரோ ஒரு கர்ணன்   
விளம்பர மொடல் 
நனையக் கூடாது என்ற 
உயர்ந்த சிந்தனை
தன்னோட குடையை 
அவளுக்கு கொடுதுப்போட்டு 
நனைந்துகொண்டே 
வீடு போயிருக்கிறான். 
ஆண்களுக்கு இரக்கம் தான்!
 அட நம்புங்கப்பா 
" முல்லைக்கு குடை கொடுத்த பாரி வள்ளல்கள் " 
இந்த  
நகரத்தில் நிறையப் பேர்.

                                   
 


மனம்போல 
நனைய விரும்புவன் 
தாழ்வாரத்தில் 
ஒதுங்கும் போது
விசிறுகிறது

அவன்
விருப்பமாக
வீதியெங்கும்
இறங்கி
நடக்கும்போது
அள்ளிக்கொட்டுது

ஒரு
தனி மனிதனோடு
தன்னுடைய
சந்தோசங்களைப்
பகிர்ந்துகொள்ள
விரும்பியே

அந்தரங்கமாக
ஒதுங்காமல்
அடக்கத்தை
அவிட்டு எறிஞ்சுபோட்டு
ஆட்டம் போடுது
மழை !

                                   



மதித்து
ஒதுங்கியே 
நடைபாதைக்கு
வழி விட்ட
மிதிபடாத
சருகுகளின்
உணர்வுகளில்
மனித
அவமதிப்புக்கள்
இல்லை.!

.

அரைகுறைகள்தான்
ஆடுவார்கள் என்று 
கேள்விப்பட்டிருப்பீர்கள்
புது வெய்யிலோடு
பூபாளம் பாடி
அழகாய்
விடியாத நாளுக்கு
வானமே கூரை
வீதியே வீடு
என்று
நினைப்பவன்
யார்
முகத்தில்
இன்று விழித்தேன்
என்று யோசிப்பதில்லை!
                                      
.

அத்தனை
நவீனத்துவம்
நிறைந்த நகரத்தில்
அபத்தமான
பிரதிபலிப்புகளும்
இடறுவது
விநோதமாகத் தோன்ற
சவால்களின்
உச்சகட்டப்
பிரதியாக
மழை கழுவிவிட்ட
தார் வீதிகள்
இப்படியான
மனிதர்களை
அடையாளப்படுத்துவது
எப்பவாவது
ஒரு முறையே
கிடைக்கிறது ! 

.


..என்
வேதனையை
வெளியே இழுத்துவிடு
என்று
வாழ்விடமில்லாதவன்
சட்டப்படி
கேட்கிறான்

போதைவஸ்தில்
விழுந்து அழிந்துபோன
முகத்தைக்
காட்ட விரும்பாத
அவனின்
புதிய காதலி
இயலாமையைத்
திரும்பிக்கொள்கிறாள்

சமூகத் தோல்வியின்
பெரிய
அவலத்தை
சின்ன சட்டத்துக்குள்
அகப்படுத்த
நான்
அவசரப்படுகிறேன்

நிலைமையைப்
புரிந்துகொண்ட
மழை
கொஞ்சம்
தாமதிக்குது !

.

ஈரமான
மழையைப் பற்றிய
அவனின் 
கற்பனை போலவே
கடைசியில்
இதுவும் நடந்தது

அதிகம்
உளறுகிற
அவளாகவே உருவெடுத்தவை
எழுதச் சொல்லி
கையைக் கடிக்க
நிரந்தர வேலை
வருடங்களாய் இல்லை

காதல் பற்றிய
வர்ணனைகளில்
பாதுகாப்பாக இருக்கும்
உறுதிமொழிகளை
உள் நோக்க
பதுங்கிக் கொள்ளும்
அவநம்பிக்கைகள்

அவனே
உருவாக்கிய
முடக்கி அழித்து விடும்
நேசத்திற்கு
பக்குவம் தேவையென்று
உணர்ந்துகொண்ட
மேகங்கள்
இருண்டு திரண்ட
ஒரு நாளில்

எழுதி வைத்த
வரிகளுக்கும் சொல்லாமல்
திறப்பு ஓட்டையில்
செருகி வைத்த
கடைசிக் கவிதையோடு
அவனும்
பெரிய நகரத்துக்குள்
காணாமல் போனான்.

                                            
நடு நகரப் பாதை
தேக்கி வைத்து
ரசித்துக் கொண்டிருந்த 
சின்னக் குளங்களில்
கடந்த அவனின்
பிரிக்கமுடியாத முகத்தைத்
தேடித் தேடி
ரசித்துப் பார்த்தாள்

வேகமாகச் சீறிய
வாகனம்
உடை நனைக்க
சிதறியெறிந்த முத்துக்களை
முகம் சுழிக்காமல்
வரம்போல
வேண்டிக்கொண்டாள்

அப்பப்ப
அவன் கைகளை
இறுக்கிப்பிடித்து
இசை வீணை வாசிக்கும்
நாடிகளில்
சூடேற்றி இரவுக்கு
ஒத்திகை
பார்த்துக்கொண்டாள்

முகத்தில்
துவானம் கிள்ளி முடிய
ஒளி வீசிய
ஒரு துளியை
நாக்கால் நக்கி
கன்னம் சிவந்து
சிரித்துக் கொண்டாள்

மிச்சத் தூரத்தை
அரங்கேறி விரித்த
குடையில்
விழுந்த துளிகளின்
இடைவிடாத
தாளத்தின்
பேச்சைக்கேட்டுக்கொண்டே
நடை போடுகிறாள் !

அவனோ
மழையை
விட்டுத் தொலையச் சொல்லி
திட்டிக்கொண்டு
முட்டித் தட்டும்
குடைகளைச்
சபித்துக்கொண்டு
அவளையும்
இழுத்துக்கொண்டு போகிறான்! 

.
                                         


மழையின்  மாலை நேரம். 
காதலை  நெருக்கமாக்கிவிட்ட குடை. 
நடைபாதையில் 
வெள்ளித் தெறிப்புக்கள்.
மெலிய சாரல் போடும் தூறல் 
புழுதியைக் 
கழுவி எடுக்கும் பாதை. 
நீளவே நடக்கும் 
நீண்ட நிழல்கள். 
ரகசியமான  
சதிக்குத் தயாராகும் மம்மல் இருட்டு. 
வண்ணக் கலரில் 
உயிர்ப்பைத்  தேடி எடுத்தாள் 
மஹாலட்சுமி 
கறுப்பு வெள்ளைக்கு மாற்றிவிட 
மழை 
இன்னும் அதிகமாக காட்சியை
ஈரமாக  
நனைப்பது போலிருக்கு
எனக்கு. 
உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.!