Sunday 31 May 2015

முகநூல் முகங்கள்......

"அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது" என்று நல்லாவே தெரிந்தும் கிட்டதட்ட எட்டு வருடங்கள் ஆகுது இந்த முகப் புத்தகத்துக்கு முகவரை எழுதத் தொடங்கி, இவளவு வருடங்களில் "உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல" என்று ஒரு சின்னக் கணனித் திரையில் கிடைத்த அனுபவம் நிஜ வாழ்கையில் கிடைத்ததை விட அதிகம்,

                                                முக்கியமாக, " ஒல்லும் வாயெல்லாம் வினைநன்றே, ஒல்லாக்கால்
செல்லும் வாய்நோக்கிச் செயல் " போல அனைத்து வழிகளிலும் முயன்று செயல்படு, முடியவில்லை என்றால், மாற்று வழியில் செயல்படுத்துவது போன்ற தத்துவங்கள் எல்லாம் வேர்க் அவுட் ஆகாமல் இந்த முகநூல் கொடுக்கும் சில நேர்மையான நல்ல உற்சாகத்துக்கு மயங்கி அதை இரவும் பகலும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருக்க வைக்குது .

                                            பொறுமையாக இருத்தல், துன்பத்தை சகித்துக்கொள்ளுதல், இன்பத்தை அளவாக உணருதல், முகம் மட்டும் தெரிந்த நட்புக்கு புதிய வரைவிலக்கணம் , எதிரிகளின் காலை வாருதலுக்கு புதிய பரிமாணம் , பெரும்பாலான வழியல் இடைஞ்சல்களுக்கு வளைஞ்சு நெளிஞ்சு கழுவுற மீனில நழுவுற மீன் போல வழுக்கிக்கொண்டு போவது, எல்லா விசர்த்தனத்தையும் விமர்சனமாக நினைப்பது எல்லாருக்கும் நல்லவன் போல நடிப்பது, அவமதிப்புக்களை கணக்கில் எடுக்காமல் ஞானியைப் போல இருப்பது, போன்ற வாழ்கையில் ஒட்டியும் ஒட்டாமலும் சுயமரியாதையுடன் வாழக் கற்றுக்கொடுத்த பேஸ் புக் அனுபவம் அலாதியானது.

                                                   எப்படியோ சும்மா இருந்த ஒருவனை உலகளவு பொறுமை உள்ள முனிவன் ஆக்கிய பெருமை ,ஏறக்குறைய எதையும் தாங்கும் இதயத்தை பொதுவெளியில் உருவாக்கி ,ஈகோவை இறக்கி வைத்து விட்டு " உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே......" என்று கிறங்க வைத்தது முகநூல் முகங்கள் .


                                                    " 
சிந்தனையுடன் இருங்கள். ஆனால், எந்த சிந்தனையுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள் " என்று இந்த முகஸ்துதி நூலுக்கு எண்பதுக்களில், கடவுளாகத் துணிந்த மனிதன்  ரஷ்னிஷ் ஓஷோ அமரிக்காவில் ஓரேகன்  பார்ம் இல் ரோல்ஸ் ரோயிஸ் காருக்க இருந்து சொல்லும் போதும் செம்மறியாடு போலக் கேட்காமல் இருந்தது  எவளவு அவலம் என்று இப்ப விளங்குது  . இதை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் பிராங் காப்கா சொன்ன " By believing passionately in something that still does not exist, we create it. The nonexistent is whatever we have not sufficiently desired."தான் நினைவு வருகிறது.

.