Wednesday 15 August 2018

கனவிலும் மீதமிருக்கலாம் .!

யாருமில்லாத யாரோ ஒருவன் வயோதிபத்தில்  எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை போன்றது  பல சமயங்களில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு இருந்து போட்டு கொஞ்ச நாட்கள் எழுத ஏதுமில்லா வெறுமை வெளிக்குள் சஞ்சரிப்பது. எழுத இடையூறுகள் இருந்த போதும் மற்றவர்கள் எழுதுவதை  வாசிப்பது.  அதிலுள்ள இன்னொரு குழப்பம்  வித்தியாசமான பேசுபொருட்கள் இல்லாத  கவிதைகளின் தேக்கநிலயை  பலசமயம் அவதானித்து இருக்கிறேன், நீங்களும் கவனித்து இருக்கலாம்.


                                                              ஓரளவுக்கு எல்லாக்  கவிதைபோன்ற எழுத்துக்களையும்  மின்னெறிஞ்சவெளி வலைப்பூங்காவில் தொகுத்து முடிந்தாகிவிட்டது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன் , ஆனாலும் இன்னும் பல ஆங்கங்கே ஒரு ஒழுங்கு முறையில் இல்லாமல் சிதறிக்கிடக்குது, அவற்றையும் தொகுத்து முடியத்தான் மனது அப்பாடா என்று ஆசுவாசம் கொள்ளும்போல இருக்கு . இவைகள் இந்த வருடத்  தொடக்கத்தில் முகநூலில் எழுதியவைகள்,


*


என் 
சிந்தனையின்
தொடக்கத்திலும் 
முடிவிலும்
காது நுனியில்
வண்ணாத்திப்பூச்சி போல
வாசனைக் காற்று
வந்தமர்ந்துகொண்டது
அதன்
நாடியைப் பிடித்து
உள்ளங்கையில் உரசி 
நாள்ப்பட்ட
பழைய நட்பை
விசாரித்துக் கொண்டேன்.!




*


முதல்க் காதலி 
திடுக்கித் தடுமாறி 
போயே போய்விட்ட 
காலப்பிரமானக் கணக்கில் 
தவறிப்போன 
கண்களைப் பிரகாசமாக்கி
போதுமென நினைத்து
சட்டென்று சந்திப்பைமுடிக்க
தலையைத்

தாழ்த்திக் கொண்டாள்,
அவள்
இத்தனை வருடங்களில்
இந்தப் பழக்கத்தை
ஏதுக்காக 

இன்னும் மறக்கவில்லை?. 



*

உறைபனிக்கு
இடம்பெயர்ந்து போன
பறவைகள்
திரும்பி வரும் போது
வெயிலோடு போராடி 
நிறங்கள்
மாறினாலும்
வாழ்வு கொடுத்த
மரங்கள்
வாக்குத் தவறி
மற்றொன்றாக
மாற முயல்வதில்லை..!

*

சிந்தித்திருக்க வாய்ப்பில்லா 
நேரங்களில்தான் 
படபடப்புப் பார்வைகள்

மோதிக்கொள்ளும், 
அதுதான்

இதயம்வரை 
பிராண்டிச் சீண்டுகிறது 
அதில் தேற்றுதல்கள் இல்லை! 
பிரிந்துபோன

காதலின் ரணமே 
அயர்வுகளில் ஆறவிடாத
மனசாட்சியின் தொந்தரவு !
அந்தக் குற்றவுணர்ச்சியை 
ஒத்துக்கொண்டுதான் 
இளவட்ட வயதின்

குருட்டுத்தனமான 
குழப்ப உணர்வுகளோடு 
எல்லை தாண்டவேண்டியிருந்தது!



*
பனி
உறைந்த
நிகழ்காலத்தில்
வெப்ப மண்டலப் பறப்பு,
இங்கே
வெயில் விரித்துவைக்கப்பட
சலிக்க விடாமல்
கூட்டிக்கொண்டு வந்த
குஞ்சுகள்
கிளைகளில் அலகு தீட்டி
அரிவரிகள்
அனுபவிப்பதைத்
தாய்ப்பறவை
தூரவிருந்து   ரசிக்கிறது  !




*



ஒரு 
முடிவைச் 
சொல்லிமுடிப்பத்துக்குக் கூட 
அச்சம்தரு சூழல் 
அப்போதிருந்ததுபற்றி 
சமாளிப்புகளோடு 
பேசிக்கொண்டு 
முட்டாள்தனமாக வெட்கப்பட்டேன் .
அவள்
மவுனமாகவே 
அப்போதுமிருந்தாள் !
தோற்றுப்போன 
எல்லைகளுக்குள் நின்று
ஒரேயொருமுறை 
திரும்பிப்பார்த்தாள் ,
அவ்வளவுதான்
அந்த அதிகாலைக்கனவில் 
முப்பது சொச்சம் வருடங்கள் 
வரமாகத் திருப்பிக்கிடைத்தது ....!


*
எல்லாமே அழகாக
ஒருங்கிணைந்து
செல்லும்
இயற்கையில்
வாழ்வின்
அற்புதங்களில் இருந்து
நம்மைப்
பிரித்துப் போடும்
அறிவு தான்
எப்பவுமே எதிரி.!



*





காச்சலடிக்கும்
கணச்சூடு போல
கொஞ்ச நேர
வெய்யிலோடு
விடாப்பிடியாக
நிலத்தை
ஆக்கிரமித்தபடி
மல்லுக்கு நிக்குது
உறைபனி !


*
நெருக்கமான
தேவையாக இருந்த
மரங்களின் 
மவுனத்தைப்
பறவைகள்
பறித்தெடுத்துத்
தொலைத்துவிட்டன !






*


கோடை காலம்
முழுவதுமே
பறவைகளும்
மரங்களும்
ஏற்படுத்திக்கொண்ட
புரிந்துணர்வுதான் தான்
முதலும்
கடைசியுமான
சுதந்திரம். !




*



உயிருள்ள வீடுகளின் 
இருண்ட சன்னல்களும் 
வெளிக் கதவுகளும் 
இன்னும் இறுக்கியே 
சாத்திக் கிடக்கின்றன, 
துக்கம் அதிகமாகி
மாரடித்துப் புலம்பிய
விண்டர் உறைபனி
கரைந்து போனாலும்,
கொஞ்ச நேர சூரியனால்
பஞ்சுக் குளிரை
விரட்ட முடியவில்லை





*

இரவெல்லாம்
ஊர்க் கதைகள்
முணுமுணுத்த
ஊதல்க் காற்று
காலையில் வாசலில்
தேங்கியிருந்த
மழையின் தண்ணீரை
கிள்ளிப் பார்க்கிறது,
வரப்போகும்
வசந்தகாலம்,
அதன் இலை துளிரும்
சாத்தியங்கள் ,



*

அடிவானில் சிரிக்கும்
விடி வெள்ளி போல
ஒளிரத் தொடங்குது,
அந்த நம்பிக்கையில்
சின்னக் குழந்தைகளின்
பிஞ்சுப் பாதங்களில்
நசிபடும் புற்களின்
இலைகளில் தொங்கும்
பனித் துளிகளில்
உயிர்கள் மீதான
ஆழமான அக்கறை
மீண்டும் ஒருமுறை
கசியத் தொடங்குகிறது....







*


மார்ச் மாதக் 
கடைசி உறைபனி
மெதுவாக
பரபரப்புச் செய்திபோல 
சத்தமில்லாமல் 
சோளப் பொரிகளாக
இறங்கி நிறைக்கிறது....
விரும்பிய எதுவுமே
மறுபடியும்
திரும்பி வராததுபோல
மனிதர்கள்
அலையும் போது
விதவையின் ஏக்கம்
போலக்
கிசுகிசுக்கத் தொடங்குகிறது
மழை... !







*

இறுகிச் சாத்திய
கோப்பிக் கபேக்களின்
ஜன்னல்களில்
நடுங்கிய விம்பங்களின்
உரையாடல்களில் 

தெறிக்கிறது
சொல்ல விரும்பாத
ரகசியங்கள்.....
தற்செயலாகச்
சந்தித்த
பழைய காதலர்கள்
கனவுகள் இறந்து போய்
பிரிவை உறுதிப்படுத்திய
கடைசி
இரவைப் போலக்
கை குலுக்காமலே
சிரித்துக் கொள்கிறார்கள் ....





*

வண்ணாத்திப்பூச்சியைத்
திரத்தும் வெய்யில்,
அலகு தீட்டும்
மொர்க்கோ பார்வை,
பவுர்ணமியில் முழுகிய 
சந்தன நிலவு,
வளைக்காப்புப் போட்ட
பேர்ச் மரங்கள்,
விம்மிக் கொண்டிருக்கும்
குன்றுகள்,
நச்சென்று குட்டும்
நடை பாதைகள்,
நெளிப்புக்காட்டி ஓடும்
நதி,
வயதில் பக்குவப்பட்ட
பைன் மரவீடு,
அன்பை மொழிபெயர்க்கும்
வெள்ளைக் குழந்தைகள்,
அவன்,
அவள்,
அது !



*

நட்சத்திரங்களற்ற
நவீன நகரம்
வீம்புக்குக் குந்தியிருக்கும்
கும்மிருட்டு
வளைக்காப்புப் போட்ட

பேர்ச் மரங்கள்
வெள்ளைச் சருகில்
உறங்கும் உறைபனி
வெளிச்சங்களின்
விலாசம் மறந்தாலும்
ஒரு செக்கன்
நிற்க வைத்து
பார்த்து ரசி!







*

பூங்காவில்
கோடைக் காலத்தில்
ஆடியது போலவே
குழந்தைகளுக்காவும்
கதகதப்பான வெய்யிலுக்காகவும்

ஏங்கிய ஊஞ்சல்கள்
வளவை வசீகரித்தபடி......
அரை குறையாக
நினைவுகளில்
தாண்டிப் போய்க்கொண்டு
சேர்ந்து நடக்க
விரும்பாதவர்களை
முன் மாலை இருட்டில்
விட்டுப் போட்டு
விலத்தி நகர்கிறது
பாதையின் முடிவில்
நகரம்..!





*

ஏதோவொரு 
கனவிலும்  மீதமிருக்கலாம் 
அதனால்த்தான் 
விடியவிடிய 
சுருண்டு படுத்திருக்கு

உறைபனி !
இன்று
எதட்காக
வந்ததும்வராததுமாய்
அதட்டி எழுப்புகிறது
காலை வெய்யில் ?