Wednesday 23 August 2017

மார்க்கண்டேயன்

" போயாவைச் சுட்டுப்பபோட்டங்களே, இனி போயா விடுமுறை வராதே "


                                          என்று என் அம்மாவிடம் கேட்டேன், அம்மா ,என்னடா இவன் இப்பிடிப் பினாத்தறானே என்று என்னை ஆச்சரியமாய் பார்த்தா


                                     " எந்தப் போயாவை,,யார் சுட்டது "
என்று திருப்பிக்கேட்டா,


                                               " கொட்டட்டிப்போயாவை , பெரியாசுப்பத்திரியில் வைச்சு இயக்கம் சுட்டுப்போட்டுடுடாங்கள் " என்று விபரமாச் சொன்னபோதுதான், ,


                                           " அந்தப் போயா வேற, அது சிங்களவங்களோட போயா,,இவன் ஒரு பொல்லாத சண்டியன்,,,நீ பயப்பிடாதை, போயா லீவு ஒவ்வொரு மாதமும் வரும், நீ பள்ளிக்கூடம் போகத்தேவையில் வீட்டில நிண்டு என்னோட நின்மதியக் குழப்பி எனக்கு தெண்டால் போடலாம் "இப்பிடிச் சொன்னா,


                                               மாசத்தில் ஒருநாள் வரும் போயா விடுமுறைக்கு பள்ளிக்கூடம் விடுமுறை. பள்ளிக்கூடம் போகாத என்றைய நாளுமே ஜெயிலில் இருந்து தப்பிவந்தது போல ஒரு உணர்வு அப்பெல்லாம் படிக்கிற காலத்தில் இருந்தது. அதனால ஒரு ஆதங்கத்தில் அப்படி முட்டாள்தனமாகக் கேட்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது.


                                                      ஒரு காலத்தில் எங்கள் ஊரில் முறைச்சுப் பார்த்தாலே முகத்தில குத்துவிடுற மாதிரி நிறைய சண்டியர் இருந்தார்கள். இன்றைக்கெல்லாம் வாடல்ப் பயித்தங்காய் போல இருந்துகொண்டு இடுப்பில பிஸ்டல் செருகி வைச்சு இருக்கிற பயத்தால் கும்பிடு போட்டுட்டு ஒதுங்கிப் போகவேண்டிய நிலைமையை ஏட்படுத்துபவர்கள் போல அந்தக்கால சண்டியன்கள் இருக்கவில்லை.


                                                          அடிப்படையில் ஆரோக்கியமான திடகாத்திரமான உடல்வாகு உள்ள அவர்கள் சுருள்வாள் வீசுறது, யூடோ கராட்டி , மல்யுத்தம், பாரம் தூக்குவது , சீனடி சிலம்படி. குறக்கழியில் லொக் போட்டு விழுத்துறது , கம்பு சுத்துறது என்று தசைகளை முறுக்கும் வித்தைகள் கற்று இருந்ததால், உண்மையாகவே அவர்கள் உருவம் கனவிலையும் புலி திரத்திர மாதிரி பார்க்கவே பயமாக இருக்கும்.


காடுப்பூனைகுச் சிவராத்ரி விரதமா போல அவர்கள் எந்தநேரம் எகிறுவார்கள் என்று சொல்லவே முடியாது. அவர்கள் எதட்காக எல்லா மனிதர்களும் போல இயல்பான ஒரு வாழ்வொழுக்கத்தில் இருக்காமல் , அதிலிருந்து கொஞ்சம் வழிமாறிப்போய் சண்டியர்கள் ஆனார்கள் என்று சொல்லவேமுடியவில்லை.

                                                          பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வு சார்ந்த ஜாதி ஒடுக்குமுறை ஒருவிதமான காரணமாக இருந்திருக்கலாம், ஏன்னென்றால் அதிகமான சண்டியர்களின் பின்னனியில் அவர்கள் பிறந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பழிவாங்கல் இருந்திருக்கு.


                                                             பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு கள்ளனுக்கு களவிலே சாவு என்பது போல சண்டித்தனம் என்று வரும்போது தங்களை எல்லாவிதத்திலும் முதன்மைப்படுத்திய அவர்களின் வீரதீர அட்வென்ச்சருக்கு அவர்கள் கொடுத்த விலையும் அதிகமாகவே இருந்தது. அதுவும் விடுதலைப் போராட்ட நெருப்பு கொஞ்சம் போல புகையில் இருந்து நெருப்பாக கிளம்பிக்கொண்டு இருந்த நேரம்,உள்ளுர்ச் சண்டியர்களுக்கு ஆப்பு வைக்கத்தொடங்கினார்கள் துவக்குகளோடு வெளிப்படையாக நடமாடத் தொடங்கிய " மூமென்ட்ஸ் போய்ஸ் " என்ற இயக்கப்பொடியள் .


டவுன் பாடசாலையில் சாதாரணதரத்தில் படிக்கிறகாலத்தில் முதல் முதலில் டவுனை அண்டிய ஒல்லாந்தர் கோட்டையையும் முனியப்பர் கோவிலடியையும் அண்மித்த கொட்டடி என்ற இடத்தைக் குறுநிலமன்னர்கள் போல கட்டுப்பாட்டில் வைத்திருந்து அட்டகாசம் செய்த கொட்டடிப்போயா என்ற சண்டியனை இயக்கப் பொடியள், சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றுக்கொண்டிருந்த நேரம் கட்டிலில் வைச்சுப் போட்டுத் தள்ளினார்கள்.


                                                       ஆனால் அந்த முதல்ச் சூட்டூச் சம்பவத்தில் கொட்டடிப்போயா காயங்களோடு தப்பிவிட்டார். இயக்கப்பொடியன்கள் வைச்ச வெடிகள் குறிதவறிவிட்டது. அதுவும் ஆசுப்பத்திரிக் கட்டிலில் படுத்துக்கிடந்ததால் உடனடியாக ரத்தப்போக்கை நிப்பாட்டி அவசர சிகிச்சை உதவி கிடைத்திருக்கலாம் .


                                                     கொட்டடிப்போயா ஆசுப்பத்திரிக் கட்டிலில் கிடந்தது சுடுகலன்களை இயக்க இராணுவப் பயிட்சி எடுத்த சுடவந்த இயக்கப்பொடியன்களுக்கே தண்ணி தெளிச்சுக் காட்டுற மாதிரி கட்டிலுக்கு கீழே உருண்டு லெக் கவர் பொசிசன் எடுத்து காயங்களோடு தப்பிவிட்டார். இராணுவம் போலீஸ் எல்லாம் கொஞ்சம் நடமாடிய அந்தநேரம் சட சட சட என்று வெடிவைச்சுப்போட்டு பொடியன்கள் தப்பித்போட்டாங்கள்

                                                    . கொட்டடிப்போயா சுடப்பட்டது, அதிலிருந்து தப்பியது செய்தியாகக் கசிய, விடக்கூடாது என்று அடுத்தநாளே திரும்பி வந்து பொடியன்கள் வெச்சாங்கள் வெடி. கொட்டடிப்போயா அதிலிருந்து தப்பவே முடியவில்லை

                                             ஆங்கிலத்தில் லெதல் வெப்பன் என்று பயங்கரமாய்  உயிராபத்து விளைவிக்கும் ஆயுதங்களை சொல்லுவார்கள், அப்படியான ஆயுதம் கட்டாயம் ஒவ்வொரு சண்டியனிடமும் இருக்கும். கொட்டடிப்போயா வைச்சிருந்த ஆயுதம் சுருள்வாள். சுருண்டு கையடக்கமாக இருக்கும் அந்த வாள் நீட்டி விசிக்கினால் காற்றைக் கிழித்துக்கொண்டு புடையன் பாம்பு படமெடுக்கும் நேரம் கோபமாக உஷ் உஷ் உஷ் என்று மூச்சு எறியுமே அதுபோல நாலு பக்கமும் விசிறும் சத்தமே அகோரமா இருக்கும்.

                                                      அதை எப்படிக்  கொட்டடிப்போயா பயன்படுத்தினார் என்று தெரியவில்லை .

                                                 கொட்டடி  என்ற போயாவின் கட்டுப்பாடுப் பிரதேசத்துக்குள் அதிகம் வசித்த டவுன் பெரியக்கடை வீதியில் கொழும்பிலிருந்து வரும்  லொறியில் இருந்து மூட்டை  தூக்கி இறக்கும் உழைப்பாளி மக்கள் இருந்தார்கள். போயாவும் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கும்   அருகில் இருந்த இஸ்லாமிய சமூகம் வாழ்ந்த பொம்மைவெளி  அஞ்சுசந்தி  பகுதிக்கும் இடையில் எப்பவுமே அடிதடி கைகலப்பு   சண்டை நடக்கும்.

                                                      அது பலவருஷமா  நடந்துகொண்டிருந்தது. அதுக்கு அடிப்படைக்காரணம் என்ன என்று தெரியவில்லை. கொட்டடிப்போயா இருந்த காலத்தில் அவர் சார்ந்த சமூகம் அவர் சண்டியன்போல இருந்ததால் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். தன் சமூகத்தை நிமிர்ந்து நடக்க வைச்ச நல்ல ஒரு லீடராக இருந்திருக்கிறார்,


                                           கொட்டடிப்போயா அப்படி என்ன கொடூரமான சண்டியரா, என்பது பற்றி அதிகம் தெரியாது, ஆனால் டவுனில்  பெரியகடை வீதியில்  இயங்கிய வியாபார நிறுவனங்களுக்குள் போய் கிரீஸ் கத்தியைக் காட்டிப் பயமுறுத்தி மாதம் மாதம் கப்பம் வேண்டிய தகவல்கள் அப்போது பரவிக்கொண்டிருந்தது. கொட்டடிப்போயாவின் மரண வீடு அவரோட ஆதரவாளர்களால் மிகவும் பெரிய எடுப்பிலே கொண்டாடப்பட்டது. பிரேதம் எடுத்து சவ ஊர்வலத்தில் அவர்கள் மிகவும் பயங்கரமான வெடிகள் கொளுத்தினார்கள். டவுனே ஹைட்ரையின் போம் போட்டமாதிரி அதிர்ந்தது


இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வேறுபல சண்டியர்களும், டவுணிலையும், அதை அண்டிய சின்ன ஊர்களிலும் விசாரணை என்ற பெயரில் கண்கள் கட்டப்பட்டு கடத்தப்பட்டு, லைட் போஸ்ட்டில கட்டப்பட்டும், தெருவோரத்திலும் , சந்தி முடக்குகளிலும் ஏன் ,எதுக்கு என்ற கேட்டுக்கேள்விகள் இல்லாமல் தாறுமாறாய்ப் போட்டுத்தள்ளப்பட்டார்கள்.

                                                              அமைதியான சமூகத்துக்கு சட்டவிரோதமாகச் சண்டித்தனம் செய்துகொண்டு இடைஞ்சலாக இருக்கும் சண்டியர்கள் தானே கொல்லப்படுகிறார்கள் என்று பொதுஜனங்களும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.


எங்கள் ஊரில் ஒரு சண்டியர் இருந்தார். அவர் பெயர் கன்னுத்துரை, கசிப்புக் கன்னுத்துரை என்றால் தான் பிரபலம் , அதைவிட கை கால் உதறல் எடுக்கிற மாதிரியான ஒரு பெயரும் அவருக்கு இருந்தது, அந்தப் பெயர் நெப்போலியன். நெப்போலியன் பெர்னபாட் போலவே குள்ளமான தோற்றம். ஆனால் ரெண்டு மண்ணெண்ணெய் பரல் போல வாட்ட சாட்டமான உடம்பு. முன்னுக்கும் பார்த்துப் போகவிட்டுப் பின்னுக்கும் பார்த்தால் டுபாய்ப் பூசணிக்காய் போயிருப்பார்.

                                                                 அவருக்கு நெப்போலியன் என்று பட்டப்பெயர் வைத்த சிலம்படிச் சீமான் உண்மையில் மிகவும் ரசனையுள்ள பிரெஞ்சுப் புரட்சி வரலாறு தெரிந்த உள்ளூர்த் தத்துவ ஞானி சிங்கிமாஸ்ட்டர் .


                                           ஏனென்றால் நெப்போலியன் பெர்னபாட் போலவே கன்னுத்துரைக்கும் முன் மண்டையில் தலைமயிர் இல்லை. நெப்போலியன் பெர்னபாட் போலவே கன்னுத்துரையும் முன்நெற்றி வழுக்கலை மறைக்க கொஞ்சம் நடுமண்டை மயிரை முன்னோக்கி விழுத்தி இருப்பார். நெப்போலியன் பெர்னபாட் போலவே காதுக்கு மேலால நிறைய முடியை கும்மி போல தூக்கி விட்டு இருப்பார்.

                                                                          நெப்போலியன் பெர்னபாட்க்கும் அவருக்கும் இடையில் இருந்த முக்கிய வேறுபாடு இருட்டுப்போல கறுப்பு நிறமும் எந்த நேரமும் செக்கச் சிவப்பா இருக்கும் ரெண்டு கண்களும் தான். வேற ஒன்றுமில்லை. அவருக்கு நெப்போலியன் என்று பட்டப்பெயர் வைத்த உள்ளூர்த் தத்துவ ஞானி சிங்கிமாஸ்ட்டர் ஒரு விபரமான ஆள்த்தான்


                                                  நெப்போலியன் எப்பவும் வெயில் அடிக்கும் பகல் நேரம் ஆள் எப்பவும் வீட்டுக்குளே பதுங்கிக்கொண்டு இருப்பார், இடுப்பில கிரீஸ் கத்தி செருகிக்கொண்டுதான் எப்பவாவது பின்மாலைப் பொழுதுகளில் மம்மல் நேரம் ஊர்ல ஆள் நடமாட்டம் இல்லாத போது சாரத்தை முழங்காலுக்கு மேல மடிச்சுக் கட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியவருவார், அதுவும் அவர் வசிக்கும் மரவள்ளித் தோட்ட ஒழுங்கையை விட்டு மெயின் ரோட்டுக்கு தலைக் கறுப்புக் காட்ட மாட்டார் . அவ்வளவு தன் நிழலுக்கே பயந்தாள் ஆள் .

                                                    அவர் சண்டித்தனம் செய்துவாற எல்லாப் பிரச்சினையையும் முன்னுக்கு போய் முண்டுகொடுத்து எதிர்கொள்வது அவரோட இரண்டு பொஞ்சாதிகளும் தான்.


நெப்போலியனின் ரெண்டு பொஞ்சாதிகளும் நல்ல வெள்ளாவி பிடிச்சு வெளுத்தது போல வெள்ளை நிறம், ரெண்டுபேருமே எங்கள் ஊருக்கு அயல் ஊரில் வசித்த சண்டித்தனத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.சாமத்தில் ரெண்டுபேரையும் நெப்போலியன் வீடு புகுந்து வைபோசாய் தூக்கிக்கொண்டு வந்து, தாலி கூறை காட்டிக் கலியாணம் கட்டாமல்த்தான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார்.

                                                 ஒரு சண்டியனுக்கு வாழ்க்கைப்படத்துக்காய் அவர்கள் ஒருநாளும் சலித்துக்கொண்டதில்லை , பதிலாக எல்லாரும் பயப்பிடும் ஒரு ஹீரோவோடு வாழ்வது போலவே பெருமையாக நிமிர்ந்து நடப்பார்கள். சத்தமாகக் கதைப்பார்கள். நெப்போலியனை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்கமாடார்கள் .


ஒருநாள் மம்மல் நேரம் நெப்போலியன் கிரிஸ்க்கத்திய இடுப்பில செருகிக்கொண்டு.மாட்டொழுங்கை இருட்டில சுப்பிரமணியம் கடைக்கு பின்பக்கம் இருந்த தார்ப் பீப்பாவை வெட்டி அடிச்ச தகரவேலிக்கு அருகில் நின்று இருக்கிறார், அவரிண்ட கசிப்பைக் குடிச்சுப்போட்டு சைக்கிள் ஹாண்டிலில் இருந்து ரெண்டு கையையும் எடுத்துப்போட்டு கந்தக் கடவுளை நம்பிக் காற்றில் மிதந்தபடி

                                           " கந்தப்பனே ஞாப்பனே பன்னிருகை வேலவனே "

                                                 என்று பாடிக்கொண்டு சைக்கிள தலைகரணமா வளைச்சுக்கொண்டு வந்த அவரோட வாடிக்கையாளர் தார்ப் பீப்பா தகர வேலியோடு படார் என்று மோதிவிழ,


                                                     நெப்போலியன் விழுந்தடிச்சு, கிறிஸ் கத்தி கீழ விழ அதையும் எடுக்காமல் , சாரம் அவிண்டுவிழ குண்டியில் குதிக்கால் தெறிக்க உசைன் போல்ட் போல ஒழுங்கையால ஒடித்தப்பி வீட்டுக்குள் ஓடி அதையும் தாண்டி பின்னால மரவள்ளித்தோட்ட்துக்குள்ளே விழுந்து படுத்து, மூச்சு விட்டு பதுங்கியிருந்தபடி பொஞ்சாதி ரெண்டுபேரையும் உடனே மெயின் ரோட்டுக்குப் போய் பார்க்கச் சொல்லி அனுப்பினார் .


                                                             அவர்கள் போய்ப் பார்த்தபோது அந்தக் " கந்தப்பனே ஞாப்பனே " ஒருமாதிரி பாலன்ஸ் பிடிச்சு எழும்பி, இடத்தைக் காலிபண்ணிப் போட்டுப் போட்டார் . பொஞ்சாதி ரெண்டுபேரும் வந்து ஒரு சிலமனும் இல்லை என்று சொன்னபிறகு தான் , நெப்போலியன் மரவள்ளித்தொட்ட்துக்குள்ளால வெளியேவந்து, சாரத்தை இடுப்புக்கு மேல உயர்த்திக்கட்டிக்கொண்டு , ஒரு முதிரமர மண்டான் உருட்டுக் கட்டையைத் தூக்கிக்கொண்டு , ஒழுங்கைக்குள்ள இறங்கி.


                                              " டேய்,,யாரடா அவன்,,,சண்டித்தனம் செய்யிறது என்றா நேரா முன்னுக்கு வரவேணும்..ஆரட அவன் எளியவனே , பெண்டுகள் போல சீலைய முடிஞ்சுகொண்டு பின்னால முதுகிலே பயந்து நிண்டு குத்த வந்தது...வெட்டிக் கண்டம் போட்டு உப்புத்தூள் தடவிப்போடுவன்..நெப்போலியனோட சண்டித்தனம் விடுறது எண்டா நேருக்கு நேரா வந்து மோதிப் பார் பார்ப்பம் துணிவு இருந்தா."


                                இப்படி சொல்லிப்போட்டு அங்கால இங்கால தட்பாதுகாப்பாய் திரும்பித் திரும்பி சுழண்டு பார்த்தபடி,,கத்திப்போட்டு வீட்டுக்குள்ளே போட்டார் .


சட்டவிரோதமாய்க் வெட்டிரும்புக் கசிப்புக் காச்சி அதை சட்டவிரோதமாய் விட்பனை செய்வதுதான் நெப்போலியனின் பிரபோசனல் ஜாப் , அதுக்கு வலு வசதியாய் இருந்தது அவர் வசித்த மாட்டொழுங்கை . அது முடியும் இடத்தில இருந்த மரவள்ளித்தோட்டமும். வெட்டிரும்பு வாடிக்கையாளரைத் தவிர யாருமே அந்த ஒழுங்கையை எல்லிப்போலவும் எட்டித்தன்னும் பார்ப்பதில்லை.

                                               அந்த ஒழுங்கையில் வேறு வீடுகளே இல்லை. நாலு கடி நாய் எப்பவுமே ஒழுங்கை முகப்பில் படுத்திருக்கும். நெப்போலியனின் அலேர்ட் டிபென்ஸ் அந்த நாலு நாய்களும்தான். இரவில மாட்டொழுங்கையில் இருந்த ஒரேயொரு லைட் போஸ்டில் பல்பு என்றைக்குமே எரிந்ததில்லை . அந்த ஒழுங்கை மெயின் வீதியில் சுப்பிரமணியம் கடைக்கு வலதுபக்கமாய் வந்தேறும்.


                                                      நெப்போலியனின் கசிப்பு பிரெஞ்சு கவினியர் ஷாவைரா ஸ்பார்க்கிளிங் றோஸ் வைன் போல ஒரு தனியான சுவையுள்ள தயாரிப்பு. சீனியும், பாண் பொங்கப் போடுற ஈஸ்ட் என்ற வெதுப்பியும், அலுமினியம் பித்தளை சில்லறைக்காசும், ஸ்பெஷலாக செத்துப்போனவர்களை ரெண்டு மூன்றுநாள் பழுதாகாமல் வைக்க உடம்பைக் கீறி அடைவார்களே இம்பாம் பவுடர் , அந்தப் பவுடரும் சேர்த்து, வாசத்துக்கு அழுகின வாழைப்பழமும்,,

                                                   சிலநேரம் பேரிச்சம்பழமும் சேர்த்து தேங்காய்எண்ணெய் பரலில் புளிக்க வைச்சுப் பின் நொதிக்க வைச்சு, அதை பெரிய கண்டக்கல் அடுப்பில வைச்சு கொதிக்க வைச்சு அதிலிருந்து வரும் ஆவியை ஒரு சின்ன வெண்கலக் குழாயால் ஒடுக்கி அதைப் பச்சைத்தண்ணிக்கு நடுவால விட்டு எடுத்து சொட்டுச் சொட்டாக விழாவைச்சு வடிக்கப்படுவது.

                                                    அதுதான் முதல் வடி . அதுக்கு பிறகு தண்ணி கலந்து விட்பது. மிகவும் கஷ்ட்ட நிலைமையில் இருந்த நெப்போலியனின் வாடிக்கைக் குடிகாரர்களுக்கு அந்த கசிப்பு எக்கோனோமிக்கலா கட்டுப்படியாக இருந்தது.


                                             " குறைந்தவிலையில் நிறைந்த பேரின்பம் "


                                                   என்று அதுக்கு விளம்பர வசனம் சொல்லுவார் கோடாப்போட்ட வையண்ணாசீனாக்கூனா சுருட்டைத் தவிர வாயில எதுவுமே வைக்காத சிங்கி மாஸ்ட்டர் . அதைவிட


                                                       "துரையன்ற வெட்டிரும்போ, சொல்லப்பட்ட சங்கிராந்திச் சாமான் கண்டியளோ , அத குடிச்ச செத்தால் அந்த மூதேசிகளுக்கு இம்ப்பாம் செய்யிற செலவும் இல்லை. ஏற்கனவே வேண்டிய அளவு இம்ப்பாம் பவுடர் உடம்பில ஊறி இக்குமே ,,பிறகென்ன செத்த உடம்பு நாலு அஞ்சு நாளுக்கு சவம் கெடாமல் கண்டக்கோடாலி வைச்சுப் பிளந்தாலும் சொல்லிவைச்சுத் தாக்குப்பிடிக்கும் " என்று சொல்லுவார் தனிப்பனைக் கள்ளத் தவிர வேற எதிலுமே நாக்கு நனைக்காத புண்ணியக்குஞ்சி .


நெப்போலியனின் சட்டவிரோத கசிப்பு வருடம் முழுவதும் வீட்டுக்குள் விற்றுக்கொண்டிருந்தாலும். நெப்போலியன் வருடத்தில் இருவத்திஐந்துநாள் நாள் தான் வெளிய வந்து சண்டித்தனம் செய்வது.

                                                            அது நல்லூர் திருவிழா நடக்கும் இருவத்திஐந்து நாட்கள். கோவிலின் மேட்குப் பக்கம் முனுசுபால்டி கல்யாண மண்டபத்தைச் சுற்றி சின்ன சின்ன கடைகள் போட முனுசுபால்ட்டி நிலத்தை வாடைக்கு கேள்வி விண்ணப்ப அடிப்படையில் கொடுப்பார்கள். அதில் கச்சான் கடலைக்கடை , வளையல் காப்புக்கடை, சுவீட் இனிப்பு விக்கிறக்கடை , குழந்தைப்பிள்ளைகளின் விளையாட்டு சாமான் விக்கிற கடை எல்லாம் சின்ன ஓலைக்கொட்டில் போட்டு நடத்துவார்கள்.


                                                 என்னதான் முனுசுபால்ட்டி பவர் உள்ள அமைப்பாக இருந்தாலும். அந்தக் கடைகள் நெப்போலியனுக்கு ஒவ்வொருநாளும் கிள்ளுக்கீரை போல வருமானத்தில் ஒரு பங்கு கொடுத்தே ஆக வேண்டும். இல்லாட்டி சாமத்தில் தென்னம் ஓலைக் கூரையில் திடீர் என்று நெருப்பு பத்தும். அல்லது நித்திரைப்பாயில் கிரீஸ் கத்திக் குத்து விழும். எல்லாம் இரவிலேதான் நடக்கும். அதெல்லாம் நெப்போலியனின் இருட்டுக் கைவேலை. ஆனால் பகலில் அவரின் ரெண்டு பொஞ்சாதிகளும்தான் கலக்சனுக்கு வருவார்கள். அதிகம் கதைக்காமல் காசை வேண்டிக்கொண்டு போவார்கள்.

                                                        யாராவது தனகி முண்டினால். இரவு மேலே சொன்ன டிரீட்மென்ட் நடக்கும்.


இதெல்லாம் இயக்கங்கள் சாடைமாடையையாய் வெளிய தலைகாட்ட முன்னம் நடந்தது. பொடியன்கள் நிலப்பிரதேசத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்பு ஒருநாள் கசிப்பு வடிக்கிற பரலைத் தலையில தூக்கி வைச்சு
                                  " இனிமேல் வெட்டிரும்பு வடிக்க மாட்டேன் "

                                                 என்று எழுதிய மட்டையைக் கழுத்தில தொங்க விட்டு நெப்போலியனை ஊர் முழுவதும் ஊர்கோலம் போக வைத்தார்கள் இயக்கப்பொடியன்கள் . அன்றைக்கு இதை மீறினால் நெத்தியில பொட்டு வைக்கவேண்டிவரும் ,அல்லது காதுக்குள்ள பூ செருக வேண்டிவரும் என்று டெத் வார்னிங் கொடுத்தார்கள்.  

                                      நெப்போலியன் அன்றோடு கப் சிப் . அதுக்கு பிறகு திருவிழா கடைகளில் சண்டித்தனமும் அடியோடு கைவிடப்பட்ட்து.


அதுக்குப் பிறகு ஒரே ஒருமுறைதான் நெப்போலியன் பொதுமக்களின் முன் மிகச் சாதாரணமான மனிதராகத் தோண்றியது . எங்கள் ஊர் சனசமூக நிலையத்தில் றோட்டரிக் கழகம் என்ற தொண்டு நிறுவனம் கண்தானம் செய்யவிரும்புவர்களை பதியும் நிகழ்வு நடந்தது. அதில முதல் முதல் வந்து எங்கள் ஊரிலிருந்த எல்லாரையும் அதிர்ச்சியாக்கும்படி நெப்போலியன் தன்னோட பெயரைப் பதிவு செய்தார். அதன் பின் சிலவருடங்களில் ரெண்டு சிறுநீரகங்களும் இயங்காமல் இறந்துவிட்டார்.

                                                   அதுக்குப் பிறகுதான் மாட்டொழுங்கையில் லைட் போஸ்டில் இரவுகளில் பிரகாசமாக லைட் எரியத்தொடங்கியது.


நாங்கள் வசித்த வீதியிலே ஒரு சண்டியர் இருந்தார். ஒரு கிளாசிக்கல் சண்டியனுக்கு இருக்கவேண்டிய உடல்த் தோற்றம் இருந்தாலும் அவர் ஒரு காலத்திலும் முழுநேர சண்டியராக இருந்தமாதிரித் தெரியவில்லை. இலங்கைப் போக்குவரத்து சபையில் ட்ரைவர் ஆக வேலை செய்தவர். ஆறடிக்குமேலே உயரம், பெயரே கொஞ்சம் நடுங்கவைக்கிற மாதிரி மார்க்கண்டேயன்,


                                                                          மார்க்கண்டேயர் போலவே கறிச்சசட்டியைக் கவிட்டு வைக்கிற கறுப்பு நிறம். சேட்டுக்கு மேலால சரத்தைக் கட்டி அதுக்கு வளவுகார சிங்களவர்கள் போல அகலமான பெல்ட் கட்டி இருப்பார். கமலா பீடிதான் விரும்பிக் குடிப்பார். அவரரோட பேஸ் குரலில் ஆழமான அதட்டல் தொண்டை நரம்புகள் புடைக்க எதிரொலித்தாலும், கொஞ்சம் " மொடரேட் டைப் " சண்டியரான மார்க்கண்டேயன் மிகவும் மரியாதையாக மரியாதை கொடுத்து வேண்டுபவர்களுடன் கதைப்பார்.


எங்களின் வீதியின் தொடக்கத்தில் ஒரு சின்ன வயிரவர் கோவில் இருந்தது, வயிரவருக்கு முன்னால ஒரு கறுப்பு நாய் படுத்திருக்கும், நாய்க்கு முன்னால ஒரு கட்டுக்கிணறு இருக்கும் , கட்டுக்கிணத்துக்கு வலது பக்கமாய் மண்ணில் அரைவாசி புதையுண்டு ஒரு பெரிய கருங்கல்லு இருக்கும். அதன் நிறை நாலு ஐம்பதுகிலோ சீமெந்துபாக் இந்த பாரம்.

                                                               மார்க்கண்டேயன் ஒருவர் தான் இளந்தாரி வயதில் அதை பஸ் ஓடி டிப்போவில் விட்டுப்போட்டு வேலை முடிஞ்சு வரும் ஒவ்வொருநாளும் தோளுக்கு மேலே தூக்கி வைச்சுபோட்டு திருப்பி நிலத்தில போட்ட ஒரே ஒரு ஆம்பிளை என்று பெட்டிசம் பாலசிங்கம் பலமுறை அந்தக் கல்லில குந்தியிருந்தபடி சொல்லி இருக்கிறார்.

                                                 மார்க்கண்டேயன் வீதிக்கு இறங்கி  சண்டித்தனம் செய்த காலத்தில் ஆயுதம் என்று எதுவும் கொண்டுதிரிவதில்லை, ஆனால் அவரிடம் திருக்கைமீன்வால் இருந்ததாகவும் , அதுக்கு கைபிடிசெய்து  பித்தளைப் பிடிபோட்டு வைச்சு இருந்ததாகவும்   புண்ணியக்குஞ்சி சொல்லுவார், அதுவும் நாலடி நீளமான திருக்கைவால்.

                                                                  ஒரு மீனின் வாலில் அப்படி என்ன பெரிய ஆபத்து இருக்கு என்று நீங்க நினைக்கலாம், திருக்கைமீன்வாலால்  அடிவேண்டினால் அந்த இடத்தில  அட்டை போல    சுருண்டுவிழ வேணும். அவ்வளவு சடுதியான அதிர்ச்சி வலி கொடுக்கும் . பிறகு வாலில் உள்ள முள்ளு  நீண்ட கோடுபோல வெட்டிக் கிழித்த புண்  சீழும் சிதலும் பிடிச்சு மாதக்கணக்கில் உலைச்சுப்போட்டுத்தான் மாறும்,அவ்வளவு விஷத்தன்மை இருக்கு.

                                      ஆனால் அந்தப் பயமே கிலி ஏட்படுத்தப் போதுமானதாய் இருந்தது. எப்படியோ வீராளி அம்மாளாச்சி அறிய  மார்க்கண்டேயன் அதை யார் மீதும் எந்த அவசரகால சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தியதாக தகவல்கள் இருக்கவில்லை.


மார்க்கண்டேயன் சண்டியராக இயங்கிக்காலத்தில் நான் பிறக்கவேயில்லை, எங்கள் வீட்டில் அவரைப்பற்றி நிறையக் கதைகள் சொல்லுவார்கள். அவரோட பொஞ்சாதிக்குப் பெயர் குஞ்சுப்பிள்ளை , பெயரைப்போலவே நாலடி உயரமுள்ள சின்ன உருவம்.

                                                               பின்னேரங்களில் அவர் சாராயம் குடிச்சுப்போட்டு பொஞ்சாதியோடு தனகிக்கொண்டு இருப்பாராம் எங்கள் வீதியால் யாரவது மார்க்கண்டேயன் வீட்டுக்கு முன்னால உரத்து சத்தம்போட்டுக் கதைச்சுக்கொண்டு போனாலே பிரச்சினை தொடங்கும், படலைக்கால வெளிய வந்து மார்க்கண்டேயன் ,


                                           " ஆரடா அவன்,,இப்ப வந்து கொரக்கில போட்டு கழுத்தில பிடிச்சனெண்டா சங்கு அறுத்துப்போட்டுத்தான் விடுவன் ,,ஆரடா அவன் மார்க்கண்டேயன் வீட்டு படலைக்கு முன்னால வாள் வாள் எண்டு கத்திக்கொண்டு போறது,,வடுவா ராஸ்கலுகள் "


                                                          இந்த அதட்டலோடு பலர் ஓடித்தப்பி விடுவார்கள்..அதுக்குப் பிறகு இன்னொருமுறை மார்க்கண்டேயன் படலையக் கடக்கும் போது மூச்சு விடுற சத்தத்தை விட வேற எதுவுமே வராது.

                                                            யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த ஆண்டுகளில் காலையிலயே ஒல்லாந்தர் கோட்டைய சுற்றி செல் மழை பொழியும், அல்லது அதிகாலை வீராளியம்மன் கோவில் லவுட்ஸ்பீக்கர்ல இருந்து அபிராமி அந்தாதி சீர்காழி எஸ் கோவிந்தராஜன் குரலில் மிதக்கும், அல்லது வீட்டுக்குப் பக்கத்தில வெள்ளவாய்க்கால் ஓரமாகச் சடைச்சு நின்ற மஞ்சவண்ணா மரத்தில இருந்து குயில்கள் பாடும் ,

                                                                இது மூன்றும் நடக்காத ஒரு அநாதிக்காலையில் மார்க்கண்டேயன் வாசிக்கும் இசைக்கருவியின் நாதங்கள் அயலட்டை முழுவதையும் திருப்பள்ளிஎழுச்சி பாடி எழுப்பிவிடும்.


                                                     மார்க்கண்டேயன் வாசிக்கும் அந்த இசைக்கருவி என்ன என்று பலவருடம் மர்மமாகவே இருந்தது.அவரோட பொஞ்சாதி எங்கள் வீட்டுப் பக்கம் வந்தால் கேட்பது, தனக்குச் சரியாகப் பெயர் தெரியாது என்றும். தான் அதை டைபிரேட்டர் எண்டு சொல்வதாகவும் சொல்லுவா,எழுத்துக்கள் அடிக்கிற டைப்பிரெடரில் யாராவது இவளவு இனிமையான இசையை வாசிக்க முடியுமா,என்ன ஒரு முட்டாள்தனமான விளக்கமாய் இருக்கே என்று குழம்பியதுதான் மிச்சம்.  ஆனால் இசை பிரவாகிக்கும் சத்தத்தில் அது ஒரு கம்பி வாத்தியம் என்று சொல்லக்கூடியதாய் இருந்தது.

                                                         மார்க்கண்டேயன் வயதாகி நடக்க முடியாத ஒரு நிலை வந்தபோது அந்த இசைக்கருவியை வாசிப்பதை நிறுத்திவிட்டார்.


எங்கள் வீட்டில் அந்த நேரம் உருத்திரவீணை, மிருதங்கம், அக்கோஷ்டிக் கிட்டார் என்ற இசைக்கருவிகள் இருந்தது. ஆனால் அதுகளை முறைப்படி வாசிக்கும் ஞானம் யாருக்குமே இல்லை. எலி அலுமினியப் பானைக்குள் விழுந்து உருட்டினமாதிரி வாசித்துப்பழகும் நிலைமைதான் இருந்தது. அந்த சத்தங்களைக் கேள்விப்பட்டோ தெரியவில்லை,

                                                          ஒருநாள் அந்த வாத்தியத்தை மார்க்கண்டேயன் தூக்கிக்கொண்டு கால் ஒன்றை இழுத்து இழுத்து நடந்தபடி வந்து எங்கள் வீட்டுக்கு கொண்டுவந்து எங்களிடமே தந்தார். அப்போதுதான் அந்த வாத்தியம் என்ன என்ற நெடுநாளைய மர்மம் உடைக்கப்பட்டது.


அந்த இசைக்கருவி ஹவாயின் கிடார் போல இருந்தது, சின்ன சைஸ் சாய்பாஷ என்ற இசைக்கருவி போலவும் இருந்தது, யூகலிகாஸ் என்றபசுபிக் தீவுகளில் வாசிக்கும் கருவி போலவும் இருந்தது, மார்க்கண்டேயன் பொஞ்சாதி குஞ்சுப்பிள்ளை சொன்ன மாதிரி நோட்ஸ் வேறுபடுத்தி அழுத்துவத்துக்கு அதில டைபிரேட்டர் போலவே கீபோர்ட் இணைக்கப்பட்டு இருந்தது, அதனால்தான் அதை டைபிரேட்டர் என்று சொல்லி இருக்கிறா.

                                                             சும்மா தட்டித்தப்பட்டி நோண்டிப் பார்க்க உண்மையில் அந்த இசைக்கருவி வாசிப்பதுக்கு மிகவும் கடினமான ஒரு கருவியாகவே இருந்தது


இந்த சம்பவம் நடந்து சில மாதங்களில் மார்க்கண்டேயன் அதை எங்கே வாசிக்கப் பழகினார் என்று அறிவத்துக்கோ,அந்த இசைக்கருவியின் ஆதியிடம் எதுவென்று அறிவத்துக்கோ, அல்லது அவரிடம் அதை வாசிக்கும் முறையைக் கற்றுக்கொள்ள சந்தர்ப்பமோ கொடுக்காதமாதிரி காலம் அவரை ஒரு நாள் பாட்டில விழுத்தி ,நாக்குச் சழிஞ்சு போக வாய் பேசமுடியாமல் ஸ்ட்ரோக் போல வந்து, நாலே நாலுநாள்தான் தாக்குப்பிடித்தார்.

                                                 அஞ்சாம் நாள் அதிகாலை வீராளியம்மன் கோவில் லவுட்ஸ்பீக்கர்ல இருந்து அபிராமி அந்தாதி சீர்காழி எஸ் கோவிந்தராஜன் குரலில் மிதந்த நேரம் ,

                                             " ஆரடா அவன்,,இப்ப வந்து கொரக்கில போட்டு கழுத்தில பிடிச்சனெண்டா சங்கு அறுத்துப்போட்டுத்தான் விடுவன் ,,ஆரடா அவன் மார்க்கண்டேயன் வீட்டு படலைக்கு முன்னால பதுங்கிக் கொண்டு   நிக்குறது வடுவா ராஸ்கல் "

                   என்று வெருட்டு விட்டு  அனுப்பும் தைரியம் எல்லாம் இறங்கிப்போய், ஜடமாகக் கிடந்தபடி , மார்க்கண்டேயனுக்கே பாசக்கயிறோடு வந்து படலைக்குள் நிண்ட யமனோடு போராட முடியாமல் போய்விட்டது.