Saturday, 12 September 2015

சங்கக்கடை

சின்னவயசில் எங்களின் ஊரில் ஒரு இது அல்லது ஒரு அது  இருந்தது என்று தொடக்கி எல்லாராலுமே எழுத முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் வாயால சொல்லும் படியாக ஒரு கதையாவது இருக்கும். அப்படி நினைவு அவதானிப்பில் தேக்கி வைத்து வயது அதிகம் போகவும் கரைந்து போகாத பல விசியங்களில்  சின்ன வயசில் இலங்கைத் தாய்த்திருநாட்டில் வாழ்ந்த எல்லாருக்குமே அடிமனதில் சந்தோஷ அலைகளைத் தாலாட்டிக்கொண்டு இருக்கும்.

                                  அப்படிப் பலதும் பத்தில் சிலதுகளை இன்றைய அவசர அலங்கார உலக வாழ்க்கை ஓட்டத்தில்  நினைத்துப் பார்க்கக்  கொஞ்சம் இயல்புக்கு ஒத்துவராமல் இருக்கும். அப்படி யுத்தத்தால் வடபகுதி தரைவழி உணவுப்பொருட்கள் விநியோகம் தனித்துப் போய் இருந்த கால அனுபவ விளிம்பில் தொங்கிக்கொண்டு நிக்கும் ஒரு மனிதர் வேட்டி மனேஜர்

                                                 மனேஜர் என்றால் பெரிய அலுவலகத்தில் அல்லது கொம்பனியில் வெள்ளைக் கொலர் வேலை செய்யும் மனேஜர் இல்லை. இந்தக் கதை நடக்கப் போகிற லொக்கேசன் பாரதிராஜா படத்தில தொடக்கதில ஒரு பச்சை வயல் வெளி, ஐயனார் கோவில் , வாய்க்கால் வரம்போடு ஓடை,  நெல்லு அறுக்கப் போகும் பெண்கள் போன்ற எடுப்போடு சொல்வதுக்கு எதுவுமே இல்லாத, வேண்டுமென்றால் மலையாளப் படங்களில் இருட்டுப்படத் தொடங்கும் நேரம் நாலுபேர் பீடி இழுத்து இழுத்துக் குடிக்கும் கள்ளுத் தவறணை போல  அதிகம் பேர் கவனம் அடிக்கடி கிடைக்காத ஒரு சின்னக் கட்டிடத்தில் இயங்கிய அந்த இடம்தான் கூப்பன் கடை என்று அழைக்கப்படும் சங்கக் கடை.

                                           வேட்டி மனேஜர் கட்டி இருந்த வேட்டி மட்டும் தான் வெள்ளை அந்த இடத்தில மற்றதெல்லாம் பல வருடமா பெயின்ட் அடிக்காத அந்தக் கடை மஞ்சள்காமாலை வந்த முகம் போல மங்கலாக இருந்தது.

யாழ்பாணத்தில் எல்லா சின்ன நகரங்களில் இருந்து போலவே எங்களின் வீராளி அம்மன் கோவிலுக்கு அருகில அந்தக் கூப்பன் கடை இருந்தது. அது பெரிய யாழ்ப்பான கூட்டுறவு சங்கத்தினால் மாநகர எல்லைக்குள் பரவலாக நடத்தப்பட்ட  பல கடைகளில் ஒன்று. அதை அம்மன் கிளை என்று சொல்லுவார்கள்.

                                                 அதில வேலை செய்த வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, பெரிய கரியலில் ஒரு யூரியா உரப்பை எப்பவும் மடிச்சு வைச்சுக் கட்டிக்கொண்டு, சைக்கிளில் முன்னுக்கு ஒரு பிளாஸ்டிக் பாக்கில் பிளாஸ்டிக் கான் மறைச்சு வைச்சுக்கொண்டு  அதில வேலை செய்ய வரும் அவரைத்தான் மனேஜர் அய்யா என்று சொல்லுவார்.

                                  மனேஜர் அய்யா ஏன் பெரிய கரியல் வைச்ச சைக்கிளில் யூரியா உரப்பை, பிளாஸ்டிக் பாக்கில் பிளாஸ்டிக் கான் சகிதம் அதில " செய்யும் தொழிலே தெய்வம் ,பல நோக்குச் சங்கமே சீவியம்  " என்று வேலை செய்ய வருவார் எண்டு இப்பவே குறுக்க மறுக்க கேள்வி கேட்டு எனக்குக்  கொதி வரப்பண்ணக்கூடாது.

                                            பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், ஒரு ஊரில ஒரு சின்னக் கடையை வாடைக்கு எடுத்து அதில பலசரக்கு பொருட்களைப் போட்டு ஒரு மனேஜர் என்ற ஒரு நிர்வாகியை மேசையில் இருத்தி வைச்சு, சேல்ஸ்மேன் என்ற விற்பனையாளரை நிறுக்கும் தாரசுக்கு முன்னால நிறுத்தி வைப்பார்கள், இந்த இருவருமே சம்பளத்துக்கு வேலை செய்வதால் அந்தக் கடையில் தனியார் நடத்துவது போல விற்பனை அதிகரிக்க எதுவுமே செய்ய வேண்டியதில்லை. 

                                               அதைவிட அவர்களுக்கு சம்பளமும் குறைவு. ஆனால் அவர்கள் தண்ணிக்கால நெருப்புக் கொள்ளியை அணையாமல் கொண்டு போய் சுழியோடிப் பிழைக்கத் தெரிந்தவர்கள். அதை நீங்களே இதை வாசிச்சு முடிக்கும்போது ஏகமனதாக ஒத்துக்கொள்வீர்கள்.

                                            சிலந்தி வலை கட்டிய எல்லாக்  கூப்பன் கடை போலவும் அது சின்னதாக, மறைவாக, அதிகம் விளம்பரம் இல்லாமல் இருந்து, அதுக்கு அருகில் இருந்த மொடேர்ன் பலசரக்கு சில்லறைக் கடைகளோடு ஒப்பிடும்போது போது அது கொஞ்சம்  கிராமத்துப் பெண்கள் போல எடுப்புச் செடுப்பு இல்லாமல் கேவலாமாதான் இருந்தது.  

                                                           அதுக்கு காரணம் கூப்பன் கடைகள் தனியார் நடத்துவதில்லை. முழுவதும் அரசாங்கம் நடத்துவதும் இல்லை. கூட்டுறவுத் திணைக்களத்துக்கு கீழே பொதுமக்களின் பங்குகளில்,பொதுமக்களுக்கு சேவை செய்வது போல  உருவாக்கப்படுவது இந்தப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள்.

                                    அந்த தாய்ச் சங்கம் பல கிளைகளை ஒவ்வொரு இடத்திலும் அமைத்து அந்தக் கிளைக்கு அருகில் ஒரு குழு அமைத்து அந்தக் குழு உறுப்பினர் அந்தக் கிளை எப்படி மக்களுக்கு சேவை செய்கிறது என்பதைக் கண்காணிப்பார்கள். 

                                                   அந்தக் கிளைக் குழுத்தலைவருக்கு சில அதிகாரமும் இருக்கு, அதிகமாக  கிளை மனேஜருக்கும், கிளைக் குழுத்தலைவருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கும், அதுதானே சொனேனே பெயரே பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம். அதனால் இருவர்க்கும் இடையில் பல நோக்கங்கள் எப்பவுமே ஒத்துப்போகும்

                       
அம்மன் கிளை கூப்பன் கடை அதிகம் அறியப்படாமல், சுண்ணாம்புச் சுவரில அந்தக் கிளையின் இலக்கம் மஞ்சள் பெயின்டில் எழுதி ஒரு வட்டம் போட்டு ,தாழ்வாக இறக்கிய தகரப் பத்திக்கு மேலே நெல்லு அறுக்கும் அரிவாளை பலர் கையில தூக்கி வைச்சுக்கொண்டு ஒருசக்கரத்துக்கு பின்னால நிக்கிற சின்னத்தோடு ஒரு தகர போட் பலகையோடு, சோக் கட்டியால எழுதின விலைப்பட்டியல் பலகையில் விலைகளின் விபரம் தெளிவில்லாமல் ,விருப்பம் இல்லாதவனின்  பெண்டாட்டி அலங்கோலமா உடுத்திக்கொண்டு கலியாணத்துக்கு வெளிக்கிட்ட மாதிரி ஏனோ தானோ என்று இருந்தது. ஆனால் வேட்டி மனேஜர் அய்யா பேமஸ் ஆகத்தான் இருந்தார்.

                                               அதுக்கு காரணம் மண்ணெண்ணெய் வெளியால இல்லாதா நேரம் கூப்பன்கடையிலதான் அது எல்லாருக்கும் பங்கிட்டு விநியோகிக்கப்பட்டது. சில நேரம் கோதுமை மா தட்டுப்பாடு வரும்போது பாண் பேக்கரிக்காரர் மனேஜர் ஐயாவிட்டத்தான் வருவார்கள்,அவரும் அஞ்சு அஞ்சு கிலோவுக்கு சில்லறையா ஓவ்வொரு பில் போட்டு அருவத்தேழு கிலோ மாமூட்டையை முழுசாகவே வெளிய தள்ளுவார். பின்னேரம் வீட்டுக்குப் போற நேரம் வேட்டி மனேயர் பாண் பேக்கரிகுப் போய் கொம்பு பணிஸ். வறுத்த ரக்ஸ் , கல் பணிஸ் எல்லாம் ஒரு பெரிய பையில வேண்டிக் கொண்டு போவார்.

                                      மாதத்தில் சில நாட்களைத் தவிர வீராளி அம்மன் கிளை, எப்பவுமே கோவிலுக்கு அருகில் குளத்துக்கு முன்னால குளத்து கரையில் சரிஞ்சு விழுகிற மாதிரி நின்ற கிளிசீரியா  மரங்கள் போலதான் அந்தக் கூப்பன் கடை, அதில இருந்த மனேஜர்,அதில வேலை செய்த சேல்ஸ்மேன் எப்பவும் இருப்பார்கள்.

                                        காரணம்  மாதத்தில் சில நாட்களில் தான்  கூப்பன் வெட்டி வறுமைக் கோட்டில் இந்தா அந்தா என்று தொங்கிக் கொண்டு நிற்கும் மனிதர்களுக்கு அரசாங்க உதவிப் பொருட்கள் கொடுப்பார்கள்,அல்லது உள்நாட்டு யுத்தத்தால் இடம் பெயர்ந்தவர்களுக்கு அரசாங்க நிவாரணம் கொடுப்பார்கள், இந்த நாட்களில் தான், பரபரப்பாகி  நானும் இவடதில தான் இருக்கிறன் என்று சொல்வதுபோல்  கூப்பன் கடை பலரை திரும்பிப் பார்க்கவைக்கும்.

                                                அந்தக் கூப்பன் கடையில் ஓர் சேல்ஸ்மன் என்ற பொருட்கள் நிறுக்கும் மனிதர், நிறுக்கும்  மேசையில நாடிக்கு ரெண்டு கையையும் முண்டு கொடுத்துக்கொண்டு தலையைப் பணிய  வைச்சுக்கொண்டு வேலை செய்ய விருப்பம் இல்லாதவர் போல இருந்தார். கழுத்தில குருசு போட்டு இருப்பார். சில நேரம் மித்திரன் பேபரில் வார ஜில் ஜில் கதைகள் தவற விடாமல் வாசிப்பவர் போல வேட்டி மனேயருக்கு அவர் படித்த கதைகளில் வாற ஜில் ஜில் சம்பவங்கள் சொல்லிக்கொண்டு இருப்பார்.

                                     வேட்டி மனேஜர்  குடும்பப் பொறுப்புள்ள குடும்பஸ்தன் போல,கொஞ்சம் வாட்டசட்டமா, எம் ஆர் ராதா போல காதுக்கும் கன்னத்துக்கும் நடுவில பண்ணைப் பாலம் போல பெரிய கிருதா விட்டு, அவர் கதைக்குறதும் வாயுக்குள்ள துப்பாக்கி சன்னம் பாஞ்ச எம் ஆர் ராதா மாதிரிதான் வாக்கியங்களின் முடிவில்  க்வா க்குவா  என்று இழுத்துக்  கொன்னை போலக் கதைப்பார் . பில் போடக்  கணக்குப் பார்க்க கல்குலேடர் பாவிக்க மாட்டார் ,பேனையை மேசையில தட்டி தட்டிக் கூட்டுவார். பில் மொத்தமா போட்டு அந்த தொகையை பில் நடுவில போட்டு ஒரு பெரிய நீள் வட்டம் சுளிசுப் போடுவார் .

                                    ஆனால் கண்ணுக்குள்ள எண்ணைவிட்டுக்கொண்டு, நினைவு முழுவதும் வெட்டாத , இன்னும் வெட்ட வராத கூப்பன் காட்டுகளின் கணக்கு வழக்கில் வேட்டி  மனேஜர் அய்யா காலை ஆட்டிக்கொண்டு ரோட்டை விடுப்புப் பார்த்துக்கொண்டு இருப்பார்.  எப்பவாவது அந்தரிச்ச சனம், கூப்பன் சாமான் எடுக்க வந்தால் ,மனேஜர் அய்யா

                                       " இவளவு நாளும் எங்க போனனி , இப்ப ஏ யி ஏ கூப்பன் நிற்பாட்டப்போற  நேரம் தானோ உங்களுக்கு விடியுது, என்ன சனம்களோ இதுகள், இனிக் கடைசி நாள் வரைக்கும் இழுத்தா கூப்பன் வெட்ட மாட்டன் ,இனிக் கடைசி நாள் வரைக்கும் இளுத்தடிச்சா சாமான் இல்லை , எனக்கு இருக்கிற அக்கறை உங்களுக்கு இல்லையே "

                                                  என்று உண்மையாகவே அக்கறையா சொல்லுவார் பிறகு, கூப்பன் முத்திரையை வெட்டி பில் போட்டுக்கொடுக்க , அதை வேண்டி மேசையில் குத்திப்போட்டு சேல்ஸ்மேன் சோம்போறித்தனமா எழும்பி, கை காலை உதறிப்போட்டு

                               " இவளவு நாளும் எங்க படுத்துக் கிடந்தனி, சாமானில அக்கறை இல்லை போல,  இருந்த மாதிரி தெரியேல்லையே ,கச்சேரி கணக்கு எடுக்கிற அரும்பட்டு நேரம் வந்துதான் எங்கட உயிரை எடுப்பிங்க போல, சாமான் இல அக்கறை இல்லாத சனங்களை இந்தக் கிளையில்தான் பாக்கிறேன்     " என்று நிறுப்பார்,

                                 ஏ யி ஏ கூப்பன் நிற்பாட்டப்போற  நேரம் என்று வேட்டி மனேயர் அய்யா வெருட்டினாலும்,ஒரு நாளும் கூப்பன் நிற்பாட்டி அதை எடுக்கத் தவறிய மனிதர்களின் பங்கீடுப் பொருட்கள் திருப்பி ஏ யி ஏ இக்கோ அல்லது கச்சேரிக்கோ திரும்பிப் போனதாக வரலாறே இல்லை. அது சங்கக் கடைக்குள்  அதன் பின் இருந்ததாகவோ வரலாறு இல்லை.

                                   அடுத்த கூப்பன் விநியோகம் வாறத்துக்கு இடையில். வேட்டி மனேஜர் அய்யா அதுக்கு எப்படியும் ஒரு வழி பண்ணிப்போடுவார் . அவளவு வலு விண்ணன் வேட்டி மனேஜர், அவர் செய்யிறதும் சரிதானே அடுத்த முறை புதிய விநியோகப் பொருட்கள் வரும்போது இறக்கி வைக்கவும் இடமும் வேணும் தானே .

                                           அந்த சேல்ஸ்மேன் பெரிய மண்ணெண்ணெய் பரலில் இருந்து  வேகமா திறந்து ஒரு லிட்டர் கானில நுரைசுக்கொண்டு வரும்போதே சடார் என்று கொண்டு போற பிளாஸ்டிக் கானில ஊதுவார். அதை வீட்டை கொண்டு வந்து அளந்தா முக்கால் லிட்டருக்கு கொஞ்சம் குறைவா இருக்கும்,

                                               அவர் சாமான் நிறுக்கிறதும் வலு வேகம், ஒரு கிலோ படிக்கல்லை நிறுவைத் தராசின் ஒருப்பக்கம் போட்டுடுடு சடார் என்று மாட்டுத்தாள் பையில் குத்து மதிப்பா ஒருகிலோ சீனியை சடார் என்று மற்றப்பக்க நிறுவைத் தராசில் குத்திப் போடுவார் ,தராசு கீழ போகவே சடார் என்று எடுத்திடுவார்,அவளவு வேகமா நிறுத்தல் அளத்தல் வேலை செய்வார், வீட்டை கொண்டு வந்து நிறுத்துப் பார்த்தல் சீனி ஒரு கிலோவுக்கு இருநுறு  கிராம் குறைவாதான் இருக்கும்.

                                         சங்கக் கடை வாசல்படியை அடிக்கடி மிதிப்பவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள். அவர்களுக்கு தான் சமூக சேவைத் திணைக்களம் கொடுக்கும் கூ ப்பன் விநியோக உதவிக்கு விதானை சிபார்சு செய்வார். அந்த மக்கள் அந்தக் கோட்டுக்கு கீழே இருப்பதாலோ என்னவோ எழுந்து நின்று சட்டம் கதைக்கும் உரிமைகள் அவர்களிடம் அதிகம் இல்லை. அதைவிட மனேச்சரை கோவித்தால் இன்னும் பிரச்சினை வரும் என்பதால் அவர்கள் எதையும் வாய் திறந்து சொல்வதில்லை.

                                             வேட்டி மனேயருக்கு சிம்ம சொப்பனமா இருந்த ஒரே ஒரு மனிதர் பெட்டிசம் பாலசிங்கம் ,கண்ணுக்குள்ள எண்ணையை விட்டுக்கொண்டு பெட்டிசம் அந்த சங்கக் கடையில் நடக்கிற எல்லாத்தையும் கவனித்துகொண்டு இருந்தார் .முக்கியமா இரவில கனவிலையும் திரத்துவதாலோ  என்னவோ தெரியவில்லை பெட்டிசதைக் கண்டவுடன எழுந்து நிற்பார் வேட்டி மனேச்சர்.

                                ஆனால் பெட்டிசம் மனேச்சருக்கு எதுவுமே நேரடியாக சொல்வதில்லை. ஆனால் விபரமா என்ன தில்லுமுல்லு நடக்குது என்று கூடுறவு  திணைக்களத்துக்கு  மாதம் மாதம் பெயர் இல்லாத கடிதம் போகும். அதுவும் தலைகரனமான இங்கிலீசில் பறக்கும். பெட்டிசம் பாலசிங்கம் கச்சேரியில் ஹெட் கிளார்க்காக இலங்கை கிளரிகள் செர்விஸ் இல் வேலை செய்து ஓய்வூதியம் எடுத்தவர் .

                          இடம்பெயர் நிவாரணம், கூப்பன் விநியோகம் எல்லாம் அமளிதுமளியாக்  கொடுத்து முடிந்த   ஒருநாள் பின்னேரம் சங்கக்கடை பூ ட்டுற  நேரம் பெட்டிசம் அந்தப் பக்கம் போய் இருக்கிறார் , வேட்டி மனேஜர் சைக்கிள் முன் ஹன்டில்ல ஒரு மண்எண்ணைக் கலனைக் கொழுவிப்போட்டு , உரைப்பை நிறைய சாமான் கட்டி அதைப் பின் கரியலில் வைத்துக் கட்டிக்கொண்டு நிண்ட நேரம் கறுப்புப் பூ னை குறுக்க வந்த மாதிரிப்  பெட்டிசம் வர கஷ்டப்பட்டு சிரிச்சுப்போட்டு

                  " கிளாக்கர் அய்யா, எங்க இந்தப் பக்கம் இந்த இருட்டுப்படுற  நேரம் வந்தனியால்,  " என்று கேட்டார்

                          "    ஏன் ,வரக்கூடாது எண்டு என்னவும் சட்டதிட்டம் இருக்கோ ,இல்லைத் தெரியாமதான் கேட்கிறேன் , "

                      "  இல்லை கிளாக்கர் அய்யா,, பெடி பெட்டையள் கண்மண் தெரியாமல் சைக்கில் ஓட்டுதுகள்,இடிச்சுப் போட்டு அதுபாட்டில போகுதுகள், வெளிக்கிட்டா  பகல் வெய்யிலோட இங்கால வந்திட்டுப் போகலாமே "

                         "  இல்லைத் தெரியாமதான் கேட்கிறேன்,,என்னை இடிச்சுப் போட்டு போறது என்ன லேசுப்பட வேலையே ,நைன்டீன் செவிண்டி  செவினில  இன்ஸ்பெக்டர்  அத்தநாயக்க எனக்கு முன்னால பொலிஸ் ஜீப்பை ரேஸ் பண்ணி புகை கிளப்பினதுக்கே கோன்ஸ்சூமார்  கோட்டில் வழக்குப் போட்டு அவனைக் கோடு கச்சேரி எண்டு இழுத்து எடுத்தனான் கண்டியே ,அதுவும் பண்டாரநாயக்க காலத்தில "

                         "  அடி சக்கை எண்டானாம் , நல்ல காலம் சிறிமா பண்டாரநாயக்ககாவை விட்டு வைச்சிங்க கிளாக்கர் அய்யா " என்று சிரிச்சார்

               அதுக்குப்  பெட்டிசம் , " ஒருத்தன்  விடிய விடிய  மேடைபோட்ட கோவிலில சின்ன மேளம் ஆட பெண்டுகள் வந்த நேரம்,மேடைக்கு முன்னால போய் இருந்தானாம் ,அந்த நேரம் பார்த்து அவன்  பொஞ்சாதிக்கு பிள்ளைப்பெறுவுக்கு அடிவயித்தில  வயித்துக் குத்து வந்த கதை தெரியுமே உனக்கு "

                           "  அதென்ன கதை கிளாக்கர் அய்யா ,,உண்ணான எனக்கு அந்தக் கதை தெரியாது, "

                         " சரி ,கதையைக்  காத்தோட விட்டுப் போட்டு , உதென்ன தனிச் சீவியதுக்கு வெளிக்கிட்ட மாதிரி   பெரிய பொட்டலங்கள் மூட்டை  முடிச்சுக்களோட இன்றைக்கு ரெண்டு ராமேஸ்வரம்  போறதுக்கு  தலைமன்னாரில கப்பல் ஏறப்போற மாதிரி ரெண்டு  பேரும் கட்டிக்கொண்டு நிக்கிறியள் "


                               "     சரஸ்வதிப் பூ சைக்கு கொஞ்சம் படையல் சாமான் வீடுக்கு எடுத்துக்கொண்டு போறன்,,அதுவும் எல்லாத்துக்கும் பில் போட்டுடுதான் கொண்டு போறேன், " என்று கஷ்டப்பட்டு சிரிசுக் கொண்டு சொல்ல ,பெட்டிசம்

                     " உதென்ன சரஸ்வதிப் பூசைக்கோ இவளவு சாமான் போகுது,,உது போறதைப்  பார்தா நூற்றிஎட்டு சங்கு வைச்சு செய்யிற சங்காபிசேகத்துக்கு ஏத்திப் பறிக்கிற மாதிரியெல்லோ கிடக்கு ,அதென்ன முன்னுக்கு பிளாஸ்டிக் கானுக்க "

                          " அது கிளாக்கர் , பிள்ளையள்  படிக்க அரிக்கன் லாம்புக்கு கொஞ்சம் மண்எண்ணை  எல்லிப்போல  மனுஷி கொண்டுவரச் சொன்னது அதுதான் கானில அதிலயும் கொஞ்சம் பிடிச்சுக் கொண்டு போறேன் ,அதுக்கும் பில் எல்லாம் போட்டுதான் கொண்டுபோறேன் " என்றார்

                 "   உவன் சேல்ஸ்மேனும் என்னத்தைக் சைக்கிள் கரியரில் கட்டி வைச்சுக்கொண்டு நிக்குறான் ,அவனுக்கும் என்ன சரஸ்வதிப் பூசையோ..கழுத்தில ஜேசுநாதர் குருசு போட்டுக்கொண்டு நிக்கிற அவனுக்கு என்ன சரஸ்வதிப் பூசை "

                           "  இல்லை,கிளாக்கர் அய்யா,,அவன்  வேதக்காரப் பொடியன் "

                      "  பிறகென்ன உன்னைப்போல அவனும் பெருமாள் கோவில் ஆண்டி தெண்டளுக்கு வெளிக்கிட்ட  மாதிரி என்னவோ மூட்டை முடிச்சுக்கள் கட்டிக்கொண்டு நிக்குறான் "

                       " இல்லை கிளாக்கர் அய்யா,,நிவராண அரிசி கொஞ்சம் புழுத்துப் போய்க் கிடந்தது அதை அவன் கொண்டுபோய்க் கழுவிக் காச்சிக் குடிக்கிறன் எண்டு கேட்டான்,,நான் தான் கொண்டுபோகச் சொன்னண்ணன்,,அதுக்கும் பில் போட்டுக்கொண்டுதான் போறான்,," என்று கஷ்டப்பட்டு சிரிச்சு சொன்னார்.

                             " அப்ப அலுவல் நடக்குது  போல, உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது கண்டியளோ , நல்லதுக்குத்தான் சொல்லுறேன்."

                              " என்ன கிளாக்கர் அய்யா , நான் இருவது வருசத்துக்கு மேலே  சங்கத்தில வேலை செய்த செர்விஸ் ,சிறிமாவோட சீத்தைத் துணி கிழிச்சுக் கொடுத்த காலத்தில வேலைக்கு சேர்ந்தனான்,  கணக்கு வழக்கு எல்லாம் சட்டப்படி இருக்கும் கிளாக்கர் அதில ஒரு சந்தேகமும்  வரத்தேவையில்லை "


                         " இருவது வருசத்துக்கு மேலே செர்விஸ்,,,,அதுதான்  சொல்லுறது .. மூளை செய்யாததை முழங்கால் செய்யும்......எண்டு சொல்லுறது ,,,"


                       "   இல்லைக் கிளாக்கர்,,நீங்களே திறந்து  பாருங்கோ திறப்பைத்  தாறன்."


                           "   என்னமோ பில் போட்டேன் போட்டேன் என்று சொல்லுறீர் காணும் ,எனக்கு உந்த ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை, வாற சனத்துக்கு ஒழுங்கா மனசாட்சிப்படி அளந்து நிறுத்துக் கொடுத்தா போதும். "

                             " அதுக்கு ஒண்டும் நீங்கள் ஜோசிக்கத் தேவை இல்லை கிளாக்கர் அய்யா " என்று மிகவும் கஷ்டப்பட்டு சிரிசுக் கொண்டு சொல்ல

                              "  பிறகு என்னவும் பிசகின பிறகு குத்துது குடையுது எண்டு வரபட்டாது கண்டியலே.முதுகைத் தடவி பப்பாவில ஏத்தாமல் சொல்லுறதை முகத்துக்கு முன்னால சொல்லிப்போட்டேன் கண்டியலே  " 
                               
                                      " சங்கீதக் கச்சேரியில்  மிருதங்கமும் ,சங்கக் கடை மனேஜரும் ஒன்றுதான் ,,கிளாக்கர் அய்யா "

                            "  இதென்ன புலுடா விட்டு  புது விண்ணாணம் எல்லாம் எனக்கே சொல்லுறாய் அதுவும் மட்டு மரியாதை கொஞ்சமும்  இல்லாமல்   எனக்கே  சொல்லுறாய் "

                            " ரெண்டுமே..... ரெண்டு........ பக்கமும் எப்பவுமே அடி வேண்ட  வேண்டும், .......கிளாக்கர் அய்யா , ஒரு  சங்கக்கடை மானேஜரா வேலை செய்து பார்த்தா தான் தெரியும் எலிக்கு விளையாட்டு,,சுண்டெலிக்கு  சீவன் போற கேவலம்,சீ எண்டு  போகுது ,,"

                                என்று மனேஜர் இனி வந்தா வா போனாப் போ என்றது மாதிரி சொன்னார்.  அதுக்கு பெட்டிசம் பாலசிங்கம் ஒன்றும் சொல்லவில்லை. அல்லது இன்னும் கதை வளர்த்துக்கொண்டு நிக்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை ,

                                         " எண்ணமோ.... பார்த்து நடவுங்கோடா.... " என்று போட்டுப் போட்டார்.

                             
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் , தாய்ச் சங்கத்தில் இருந்து அதிகாரிகள் வந்து இருப்பு எடுத்து ஒரே நாளில் வேட்டி மனேஜரும் ,அந்த குருசு போட்ட சேல்ஸ்மேனும் அந்த கிளையில் இருந்து தூக்கப்பட்டு ,அடுத்த நாள் இளமையான,லோங்க்ஸ்  போட்ட  ஒரு மனேச்சரும்,வேட்டி கட்டின மெலிஞ்ச ஒரு வயதான சேல்ஸ்மேனும் அதில வேலைக்கு வந்தார்கள்.

                          இளமையான,சரத்பாபு போல அழகா,வெள்ளையா இருந்த  அந்த லோங்க்ஸ் போட்ட மனேஜர் அதிகம் மேசையில் இருக்க மாட்டார். அங்கேயும் இங்கேயும் அன்ன நடை நடந்து திரிவார். அவரைப் பார்த்தா படிச்சுப்போட்டு நல்ல வேலைக்கு ட்ரை பண்ணிக்கொண்டு இடையில் இந்த வேலைக்கு வந்தவர் போலதான் இருந்தார்,மரியாதையா எல்லாரோடும் கதைப்பார்.

                                             முக்கியமா சொண்டைக் கொஞ்சம் சரிச்சு கன்னத்தில் பலுன் ஊதிச் சிரிப்பார்.  வெக்கை  வியர்வை அதிகமான  நாட்களில் சேட்டுக் கொலருக்க ஒரு லேஞ்சி மடிச்சு வைச்சு இருப்பார். ஜப்பான் இலற்றோனிக் காசியோ வாச் கட்டி இருந்தார். கோதம்பமா நிறுக்கிற மாத்  தூசு அதில படாமல் அதுக்கும் ஒரு லேஞ்சி சுற்றிக் கட்டிக்கொண்டு இருப்பார். 

                      அந்த வயதான சேல்ஸ்மேன் அய்யா பற்றி சொல்ல ஒண்டுமே இல்லை,அவளவு சிம்பிளா இருப்பார்.கண்ணில களவு பொய் தேடினாலும் கிடைக்காத மாதிரி நெற்றியில் திருநீறு சந்தனப்பொட்டு,காதில அருச்சனைப் பூ  என்று அந்தாளைப் பற்றி வாயைத்திறந்து புறணி சொல்ல எதுவுமேயில்லை. 

                                 தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி ஏறுதாம்...எண்டுமாப் போல  எப்பவுமே  குளறுபடியாப் போய்க்கொண்டு இருக்கிற எங்களின் ஊரில   இனிக் கொஞ்சம் இந்த சங்கக்கடை  தர்மத்தின் பலனையும் அனுபவிக்கும் என்று நினைச்சுக்கொண்டு இருக்க....

                                                   சங்கக் கடைப் பின் சுவரோட ஒரு கம்பிக் கிறாதி வைச்ச ஜன்னல் இருந்தது , அந்த ஜன்னல் மரக் கதவைத் திறந்தால் பின் வெளியால வெறுங்காணி தெரியும், முடக்கொத்தான் பத்தைக்கள் தாறு மாறா வளர்ந்து கிடந்த  அதன் முடிவில் வேலி ஒழுங்கா அடைக்காத பவளமக்கா வீடு இருந்தது. 

                                          பவளமக்கா வீட்டில அவாவின் மகள் அரியமலர்  ஒ எல் பெயில் பண்ணியதால் வீட்டோடோ இருந்தாள். இனி அவளுக்கு ஆனி,ஆவணி,புரட்டாசி மங்குசனி  தோஷம்  கழியிற  கையோடு கலியாணம் போல பவளமக்கா புரோக்கர் தட்சனாமூர்தியிட்ட குறிப்புக் குடுத்து சொல்லி வைச்சா 

                                       அரியமலர் காதவராஜன் கூத்தில வாற ஆரியமால போல அழகுக்கு கொஞ்சி  அரிதாரம் பூசுற  அந்த குமரி வயசில தையல் படிக்கிறேன் என்று ரோட்டால தையத் தக்க தையத் தக்க என்று வாத்து நடை  போட்டுக்கொண்டு போவாள், 

                                            நல்லா இருட்டுற நேரம் ஏதாவது ஒரு இளையராஜா பாட்டு வேப்பமரத்தில குயில் பாடுறது போல  மெல்லப் பாடிக்கொண்டு வருவாள் ஆனாலும் அதிகம் உயரம் இல்லாத ,கொஞ்சம் குண்டான உடல்வாகில் இருந்தாலும்   ஊமத்தம்பூபோல அரியமலர் வாளிப்பா இருந்தாள்.கொஞ்சம் சோசியல் டைப்,  எல்லாரோடும் வஞ்சகம் இல்லாமல்  வள வள எண்டு கதைச்சுக்கொண்டு திரிவாள்  அந்த நாட்களில்.  

                                           அந்த மேனேஜர் அவளை ஜன்னலுக்கால முதல் பார்த்தாரா அல்லது  அரியமலர் அவரை  வேலிக்கால முதல் பார்த்தாளா என்று எனக்கு இன்றுவரை தெரியாது. அரியமலர் வேலிப் பொட்டுக்கால அடிக்கடி  சங்கக் கடை ஜன்னலுக்கு வந்து சிரிச்சு சிரிச்சு பேசுறதை பவளமக்காவும் அடிக்கடி பார்த்தா. 


ஒருநாள் லோங்க்ஸ் மனேஜர் அரியமலருக்கு கடிதம் எழுதி அதில ஒரு கவிதையும் எழுதிக்  கொடுக்க அது பவளமக்காவுக்கு தெரியவர , ஒரு நாள் பவளமக்கா ஜன்னலுக்கால கிழி கிழி எண்டு மனேயரைக் கிழிச்சும் ,,அந்த ஜன்னல் ஒவ்வொரு நாளும் திறந்தது,,,சிக்னல் போய்க் கொண்டும் வந்துகொண்டும் தான் இருந்தது.

                                           வீராளி அம்மன் கோவில் துர்க்கையம்மன் திருவிழாவுக்கு காலையில , அம்மன் மணி அடிச்சு,வைரவர் மணி அடிச்சு   சிங்கக்கொடி கொடிக்கம்பத்தில் கொடியேறின நேரம், " ஏலேலங் குயிலே என்னைத் தாலாட்டும் இசையே,,உன்னைப் பாடாத நாள் இல்லையே ,ஏலேலங் குயிலே என்னைத் தாலாட்டும்  .........., உன்னைச் சேராத நாளும்  இல்லையோ, " என்று கட்டுக் கிணற்றடியில் நிண்டு முகத்துக்கு கஸ்தூரி  மஞ்சள் அரைச்சுப் பூசிக்கொண்டு ,கப்பியில் இழுத்து இழுத்து தலைக்குத்  தண்ணி அள்ளி வார்த்துக்கொண்டு  அரியமலர்  சந்தோசமா பாடிக்கொண்டு இருந்ததை பவளமக்காவும் சந்தோசமாத்தான் பார்த்துக்கொண்டு இருந்தா.

                                       ஆனால்  அன்று பின்னேரம் அரியமலர் " பொலிடோல் குடிப்பேன்,,,அல்லது  அரளிக்கொட்டை அரைப்பேன்   ,,," என்று  கடிதம் எழுதி அரிக்கன் லாம்புக்கு கீழே வைச்சுப்போட்டு இருட்டு மம்மல்ப்பட்ட நேரம்  காணாமல் போக, பவளமக்கா சிம்மிணியைக் கழட்டி துடைச்ச நேரம் பார்க்கவில்லை, நெருப்புக்குச்சி தட்டி திரிக்கு வைச்ச நேரம் தான் அதைப் பார்த்தா ,பார்த்திட்டு வேலிப் பொட்டுக்கால விழுந்து எழும்பி ஓடிவந்து சங்கக்கடை ஜன்னலைப் பார்த்தா.

                                       அதுவும் பூட்டி இருந்தது. முன்னால ரோட்டுக்கு ஓடிவந்து பார்க்க ,முன் கதவும் பூட்டிக் கிடந்தது,சரத்பாபு மனேஜர் இல்லை , அந்த காதில பூ  வைச்ச வயதான சேல்ஸ்மேன் அய்யாதான் போக வெளிகிட்டுக் கொண்டு நிண்டார்

                           " எண்ட அம்மாளாச்சி ,நீ தானனை  என்னைக் காப்பற்ற வேண்டும், எண்ட பெட்டை மலரைக் கண்டனியலே அய்யா,, இந்த அறுதலன் மனேஜர்  அவன் என்னைப் பார்த்து சிரிச்ச சிரிப்பிலேயே இவன் ஒருநாள் இங்க பிரச்னை எடுப்பான் என்று அண்டைக்கே எனக்கு புத்தி இல்லாமல் போச்சே,,அய்யோ ,இந்தநேரம் பார்த்து எண்ட மனுசனும் வவுனியாவில போய் நிக்குதே,,அய்யா எண்ட மகள் மலர் இண்டைக்கு இங்க வந்தவளே,,அய்யா உங்களைக் கையெடுத்துக் கேட்கேறேன்,,அய்யா சொல்லுங்கோ ஐயா ,,,"  என்று ஒப்பாரி வைச்சா 


                            ஆனால் இது  வெட்டுக் குத்தில முடிஞ்சு ஒரு கதையாக  அந்த லோங்க்ஸ் போட்ட மேனேஜர் வந்த ரெண்டு கிழமையில் சங்கக் கடைக்கு பின்னால நடந்தது.  விலக்குப்  பிடிச்சு விடுறன் என்று  முன்னுக்கு நின்ற புண்ணியக்குஞ்சிதான்  அந்த சம்பவம் நடக்கவே பிண்ணணியில் நின்ற ஆள் . அதைப் பிறகு எழுதுறேன்.

    .