Monday 17 August 2015

ஆன்மாவோடு பேசுவது...

சோமாலியா மேற்கு ஆபிரிக்காவில் உள்ள உலகத்தில் உயிர் வாழ உத்தரவாதம் இல்லாத உள் நாட்டு யுத்தம் யாரை எந்த நேரம் எங்கே வைத்து போட்டுத் தள்ளுவது என்ற சந்தேகம் இல்லாமல் பல வருடமா அரசியல் இஸ்திரம் இல்லாமல் அல்லாடும் ஒரு வறிய நாடு.அந்த நாட்டு மக்கள் நிறையப்பேர் ஒஸ்லோவில் அரசியல் அகதிகளாக வந்தேறி வசிக்கிறார்கள்.
                                             அவர்களில் சிலர் என்னோட நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நாடு ஐரோப்பிய காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களான போத்துக்கீசர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாளை சில நாட்கள் முன் ஒஸ்லோவில் உள்ள ஒரு பார்க்கில் பாரம்பரிய உடைகள் அணிந்து நடனம் ஆடி கொண்டாடினார்கள். உண்மையில் சோமாலியாவுக்கு உள்ளேயே இன்னொரு சின்ன சுதந்திர நாடு இருக்கு எண்டும் அதுக்கு பெயர் சோமாலி லேன்ட் என்று அந்த நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

                                             மிகவும் வறிய நாடான சோமாலியா உள்நாட்டு யுத்தத்தால் ஆயுதம் தாங்கிய குழுக்களின் கைககளில் சிக்கிச் சின்னாபின்னமாகி சிதறு தேங்காய் போல சிதறிக்கிடக்குது என்று சோமாலி நண்பர்கள் சொல்லுவார்கள். உண்மையில் சோமாலியாவுக்கு உள்ளேயே இன்னொரு சின்ன சுதந்திர நாடு இருக்கு எண்டும் அதுக்கு பெயர் சோமாலி லேன்ட் என்று அந்த நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

                                                 பெரும்பாலான சோமாலி ஆண்கள் திடகாத்திரமான உடல்க் கட்டமைப்பு இருந்தாலும் ,கஷ்டப்பட்டு வேலை செய்வதைக் கஷ்டமாக நினைப்பவர்கள்.அதனால் அவர்கள் உழைப்பு பற்றி இங்கே நோர்வே மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை.சமூக உதவிகளில்,நிரம்பி வழிந்து அவர்கள் தான் அதிகம் அழுது வடிந்து கொண்டு இருப்பார்கள்.அவர்கள் நாட்டிலும் அவர்கள் வேலை செய்வதை ஒரு சுமையாக நினைப்பது என்பது போல சோமாலி நன்பர்கள் பெருமையாக சொல்லுவார்கள் .
                                    " ஊருக்குன்னா இரும்ப கூட இடிப்பேன், வீட்டுக்குன்னா தவுடு கூட இடிக்கமாட்டேன் " என்பது போல அவர்கள் வீட்டிலும் வேலை செய்வதில்லை.பெண்கள் தான் வீட்டின் கண்கள். என்னோட முன்னர் ஒரு சோமாலி வேலை செய்தார். நாலு மாதம் தான் வேலை செய்தார்,அதுக்குப் பிறகு நாலு மாதம் ரெஸ்ட் எடுப்பார். பிறகு வேற இடத்தில நாலு மாதம் வேலை செய்ததா சொன்னார். " கெவிலி சொல்ற பல்லி கழநி பானையில விழுந்துச்சாம் " என்றது போல விளக்கம் வேற சொன்னார்.
                                 " எப்படிப்பா இப்படி தேசிங்கு ராஜா போல வந்தா வரவுல வச்சிக்க, இல்லன்னா செலவுல வச்சிக்க என்று வாழ முடிகிறது உங்களால் " என்று கேட்டேன் ஒரு நாள், அதுக்கு அவர்
                                                          " நான் பரவாயில்லை, என்னோட அப்பா ஒரு இடத்தில ஒரு மாதம் தான் வேலை செய்வார்,அதுக்கு பிறக்கு அந்த வருடம் முழுவதும் வீட்டில இருப்பார்,எங்கள் தலைமுறை கொஞ்சம் டெவலப் ஆகிக்கொண்டு இருக்கு, கஷ்டப்பட்டு பல்லைக் கடிச்சுக்கொண்டு நானே தொடர்ச்சியாக நாலு மாதம் ஒரே இடத்தில வேலைசெய்யப் பழகிவிட்டேன்,அது எங்கள் சமூகத்துக்கு நல்ல அறிகுறி " என்று சிரித்துக்கொண்டு சிம்பிளா சொல்லுவார்.
                                                    அம்மன்கோவில் அன்னதானத்தில் அவல் கடலை சுண்டலுக்கு அள்ளுப்படும் கோஸ்டிகள் போல நெரிசலில் அலைக்கழிந்து கொண்டு கும்பலாக எப்போதும் பேசிக்கொண்டு இருக்கும் சோமாலி மக்கள் நட்பானவர்கள். அவர்கள் ஒரு தனித்துவ மொழி பேசுகிறார்கள்.ஆனால் அந்த மொழிக்கு தனித்துவ எழுத்துக்கள் இல்லை. ஆங்கில எழுத்துக்களைப் பாவித்தே அவர்கள் மொழியை எழுதுகிறார்கள். அதை வாசிக்க தமிழை ஆங்கிலத்தில் எழுதி பேஸ்புக்கில் சிலர் போடும் கொமென்ட் போல இருக்கும்.
                                                         சோமாலி ஆண்கள் பாரம்பரியமாக ,கிராமப்புற முதியான்சலாகே சிங்களவர் கட்டும் வெள்ளை நிற சரம் ,சிங்களவர் போலவே கட்டி அதுக்கு மேலே தவில் மேளம் வாசிப்பவர்கள் அணிவது போல ஒரு பெல்ட் கட்டுறார்கள்.பெண்கள் நீண்ட வெள்ளை அங்கிகளின் நிறையக் கலர் கலரான குஞ்சங்கள் தொங்கும் பிரில் வைச்ச ஆடையை அணிகிறார்கள். பெண்கள் தலையை மூடிக்கொண்டு கறுப்பாக இருந்தாலும் அவர்களின் கண்கள் ஆயிரத்து ஒரு இரவுகள் கதை சொல்லும் கறுப்பு வைரங்கள்.
                                             சோமாலி ஆண்களும் பெண்களும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் முன்னேறி பதுங்கித் தாக்குவது போல பாய்ந்தும் கால்களை உதைத்து எம்பிக் குதித்தும் ஆடுவதைப் பார்க்க அவர்கள் இயற்கையாகவே பூமியுடன் பாதம் வழியாக ஆதர்சமான சக்தியை சேர்த்துக்கொண்டு ஆடுவது போலவும்,,கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் எதிரே ஆடும் பெண்களை கடத்துவதுக்கு பிளான் போடுற மாதிரியும் இருந்தது,சோமாலி ஆண்கள் பெண்களுக்கு வசியம் வைப்பதில் கில்லாடிகள் என்று அவர்களின் செயல்களில் பலமுறை கவனித்து இருக்கிறேன்.
                                                          பல நிறங்களில் கண்ணைக்கவரும் அவர்களின் உடைகள் ஒரு அலாதியான போட்டோகிரபிக்கு அணி அலங்காரம் கொடுக்கும். தங்கள் தாய் நாட்டில் ஒரு காலத்தில் காடுகளில் வேட்டை ஆடி வாழ்ந்ததை நினைவு கொள்ள ஆண்கள் எல்லாரும் ஒரு நீண்ட மரக் கம்பு வைத்து இருந்தார்கள்.மிக நவீனமான நோர்வேயில் அதைப் பார்க்க அபத்தமாக இருந்தாலும் அழகாக அவர்களின் மூதாதையர்களின் ஆன்மாவோடு அது பேசுவது போல இருந்தது .
..
17.08.15