Saturday, 31 October 2015

இடங்களைப் பெயர்ந்த கதைகள்..001

சரியாக இருவது வருடங்களின் முன் இன்றைய தினம்,யாழ் குடாநாட்டை தரைவழியாக கைப்பற்றும் சூரியகதிர் இராணுவ நடவடிக்கை அகோராமாகி , வலிகாமம் வடக்கு, யாழ் நகரம் முழுவதிலும் வசித்த ஐந்து லட்சம் மக்கள் தென்மராட்சிக்கு உள்நாட்டு அகதிகளாக இடம்பெயர வைத்த வலி நிறைந்த வரலாற்று நிகழ்வு நடந்த நாள் என்று சொல்கிறார்கள்.
                                     அதில் நானும் என்றுமே விட்டு விலக நினைக்காத யாழ்பாணத்தை விட்டு நிலத்தால் இடம்பெயர்ந்தேன். என்னோட அம்மாவும் இரண்டு உடன்பிறப்புக்களும் தென்மராட்சியில் வந்து ஒரு தெரிந்தவர்கள் வீட்டு வேப்ப மரத்துக்கு கீழே குந்தி இருந்தோம். பலர் வடமராட்சிப் பக்கமும் உறவுகள்,நண்பர்களை அண்டிப்போனார்கள்.
                                  " உள்ளுக்க இறங்கவிட்டு பொக்ஸ் போட்டு அடிப்பார்கள் " என்று ஆள் ஆளுக்கு கதைக்கொண்டு இருந்ததால். என்னமோ சில மாதங்களில் குந்தி இருந்த இடத்தில தற்காலிகமாக ஒட்டின குண்டி மண்ணைத் தட்டிப்போட்டு மறுபடியும் சொந்த வீட்டுக்குப் போகலாம் என்றுதான் நானும் நினைத்தேன் , பலரும் அப்படிதான் நினைத்து இருந்தார்கள்.
                                          தென்மராட்சி மக்கள் அன்பாக தங்கள் இடங்களில் இட்டு முட்டு பட்டாலும் அதைப் பொறுத்து இடம் கொடுத்தார்கள் முடிந்தவரை ,குழைக்காடு என்று கிண்டலாக அழைக்கப்பட்ட அந்தப் பிரதேசம் ஓரளவுக்கு இடம்பெயர்ந்த மக்களை முடிந்தளவு இயல்பு நிலைக்கு உள்வாங்கி கொட்டிலிலும் குடிசையிலும் ,கோவில் வெளி மண்டபங்களிலும் இயங்க வைத்தது.
                                          வன்னிக்குப் போக விரும்பும் மக்களை,வன்னியில் குடிசைக் கட்ட நிலம் ,கப்பு வளை போட தடி கம்பு , அதுக்கு கூரை மேய தென்னம் ஓலை தருகிறோம் " இதயபூமிக்கு இடம்பெயர்ந்து வாருங்கள் " என்று சொல்லி இலவசமாக படகு சேவை கொடுத்து ஏற்றிப் பறித்தார்கள். சிலநேரம் ராணுவத்தால் நேரடியாகப் பிடிக்கப்படும் சந்தர்பங்களில் மோசமான பின் விளைவுகள் வரலாம் என்று பயந்த வீரமான இளையவர்களை நாட்டுக்கு கொடுத்த குடும்பங்கள் எல்லாருமே அப்படியே வன்னிக்கு போய்க்கொண்டு இருந்தார்கள்.
                                               எப்படியோ சில மாதத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் வன்னிக்குப் போய் விட்டார்கள் . நான் வேலை செய்த நிறுவனத்தின் நிவாரணத்திலும்,அரசாங்க நிவாரணத்திலும் தொங்கிக்கொண்டு கிட்டதட்ட ஆறு மாதம் தென்மராட்சியில் இருந்தேன்.
                                             அதுக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி ஒரு நாள் காலை சரசாலையை நோக்கி முன்னேறி இராணுவம் அதை சண்டை இன்றியே கைப்பற்றி ,பின் வழிமறிப்பு சண்டை ," கவுண்டர் அட்டாக் " என்று வானவேடிக்கை அகோரமாகினாலும் , ராணுவம் மீசாலை வரை முன்னேறினார்கள் . அதில் வைச்சு தான் " லவுட் ஸ்பிகரில் " மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்துக்கு வருமாறு அறிவிக்க நிறைய மக்கள் உள்ளே போனார்கள்.
                                                  மீசாலை வீரசிங்கம் மகாவித்தியால சந்தியில் ராணுவம் நிற்பதையும், " விடமாட்டாங்கள் அடிப்பாங்கள் பிடிப்பாங்கள் " என்று உசுப்பு ஏத்திக் கொண்டு இருந்த பலரே ராணுவத்துக்குள் போவதைப் பாத்துப்போட்டு, சில நாட்களில் கிளாலிக் கடலால் நேவிக்காரனின் " லேசர் ரவுன்ஸ் " அடி தலையத் தடவிக்கொண்டு போக மறுபடியும் கடலால் இடம்பெயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்பில் காலடி வைத்து கிளிநொச்சியில் மறுபடியும் என் சகோதரியைத் தேடிப்பிடித்து, தங்க இடம் இல்லாமல் கிளிநொச்சி முருகன் கோவிலில் அகதிகளோடு அகதியாக இருந்தேன்,
                                  நல்ல காலம் நான் யாழ்பாணத்தில் வேலை செய்த நிறுவனம் பரவிப்பாஞ்சானில் இடம்பெயர்ந்து இயங்கியது, அதால் அதில வேலை கிடைக்க கொஞ்சநாள், நுளம்புக்கடி செல்லடி போல இருந்தாலும் ஒண்ட வந்த பிடாரி பிஞ்சுபோன அகதி போல இயங்குவதுக்குப் பரவாயில்லாமல் இருந்தது.
                               வன்னியில் ஸ்கந்தபுரம் ரெண்டாம் வாய்க்காலில் ஒரு சின்ன இடம் காட்டு விழிம்பில் ஒரு உறவினர் வீட்டுக்கு அருகில் கிடைத்தது. அதில கொட்டில் ஒன்று போட்டு கொஞ்சநாள் இருப்போம் என்று காட்டை வெட்டிக் குத்துக்கால் போட " இந்தக் காட்டுக்க மனுஷன் இருப்பானா " எண்டு சொல்லி அவர்கள் இருவரும் சந்தில சிந்து பாடிப்போட்டு வவுனியாவுக்கு எஸ்கேப் ஆகி கொழும்புக்கே போய் விட்டார்கள் அதன் பின் வன்னியில் இருந்த காலம் முழுவதும் தனியாத்தான் தவில் அடிச்சுக்கொண்டு இருந்தேன்.
                                      சில மாதங்களில் கிளிநொச்சி நகரைப் பிடிக்க பரந்தன் பக்கம் இருந்து ஆனையிறவு இராணுவம் முன்னேற ,கிளிநொச்சியைக் கைவிட்டு காட்டுப்பகுதியான, முறிப்பு, கோணாவில், யூனியன்குளம், ஸ்கந்தபுரம், அக்கராயன் என்று குட்டி போட்ட பூனை குட்டிகளைத் தூக்கிக்கொண்டு போன மாதிரி பொம்பர் அடிக்கு பாலைமரத்தையும் கிபீர் அடிக்கு முத்திரைமரத்தையும் சுற்றி ஓடி ஒளிச்சுப்பிடிச்சு, செல்லடிக்கு வாய்காலில் கவர் எடுத்து, ஹெலி அடிக்கு விழுந்து படுத்து,சின்னாபின்னமாகி அலைந்து...
                                              வன்னியின் காட்டுப்பகுதியில் மலேரியாக் காச்சல் ரெண்டு முறை மூளை மலேரியா ஆக்கி பிசதிக்கொண்டு அதில தப்பி,அகோரப் பசிகிடக்கும் குளத்து முதலைகள்,விஷம் காவிக்கொண்டு திரிந்த புடையன் பாம்புகளுக்கு உச்சி விளையாடி , ஒருமுறை கோட்டைகட்டிய குளத்தில் அலியன் யானையிடம் இரவு மயிரிழையில் தப்பி, சொந்த வாழ்க்கையையும் கண்டறியாத காதலில் சொதப்பி ரெண்டு வருடங்கள் இருந்து,
                                                 ஒரு மாதிரி பாஸ் எடுத்து, உயிலங்குளம் , மன்னார், செட்டிகுளம்,பறையணாளங் குளம் ,பூந்தோட்டம் , வழியாக வவுனியா வந்த பின் தான் பெருமூச்சு விட்டு ஒரு உடம்பைத் தடவிப்பார்த்து உயிர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திருப்பி ஆர்மி பாஸ் இக்கு சுத்துமாத்து செய்து கள்ளமாக கொழும்புக்கு களைச்சுப்போய் வந்த போதுதான் நாக்கில் தண்ணி வந்தது.
                                                 போட்டிருந்த அண்டவியர் கிழிஞ்சு தொங்கும் அளவுக்கு வழியெல்லாம் கஷ்டம் தந்த இந்தப் பாதையில் இன்னும் திரும்பிப் போகவில்லை, எப்படியோ ஒரு பிரயாணம், இடங்கள், சம்பவங்கள் என்று சுருக்கமாக மேலே ஒரு " ஸ்கெட்ச் " போல சொல்லியுள்ளேன். ஆனால் இந்த இவ்வளவு இடங்களிலும் நடந்த சம்பவங்கள் ஒரு வாழ்நாளுக்குப் போதுமடா சாமி என்பது போல அவளவு அலங்கோலமாய் வாழ்க்கை சிதறியது,
                                              பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி கிரவல் மண்ணோடு மண்ணாகப் பிரண்டு உருண்டு ,எமனோட கை குலுக்கி ,அதிஷ்டம் அரைவாசியாவது அனுதாபப்பட்டதால் உயிர்தப்பிய அதையெல்லாம் " இடங்களைப் பெயர்ந்த கதைகள் " என்ற தலைப்பில் எழுத நினைப்பது. நினைப்பது அவளவுதான் இன்னும் எழுதவே தொடங்கவில்லை,,சிலநேரம் நினைப்பது எழுதித்தான் என்னத்தைக் கிழிக்கிறது என்று வெறுப்பும் வரும்.
                                                                தென்மராட்சி இடபெயர்வில் ,என்னிடம் இருந்த இரண்டு கிட்டார்களை இழந்தேன்,அவை இரண்டும் நானும் என்னோட தச்சுத் தொழில் செய்யும் நண்பனும் சேர்ந்து சொந்தமாக கையால் உருவாக்கியது.வன்னியில் இருந்து மன்னாருக்கு தவளை போலப் பாஞ்ச நேரம் வைத்து இருந்த மூன்றாவது கிட்டாரையும் இழந்தேன். அதெல்லாம் ஒரு இழப்பே இல்லை மற்ற மனிதர்களின் இழப்போடு ஒப்பிடும்போது .
                                                 திசைகள் தெரியாமல் திட்டிக்கொண்டு , பழங்கஞ்சிக்கும் அல்லாடி பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி புறுபுறுத்தாலும், இந்த உலகத்தின் அழகான பல அறியப்படாத பிரதேசங்களில் வாழ்ந்து , பல்வேறு மக்களுடன் உறவாடி உணர்ந்து, அன்பு, பாசம், கருணை, இழப்பு, வெறுப்பு ,உதவி, உழைப்பு, பொறுமை,துரோகம் எல்லாவற்றையும் இன்னுமொரு " வொல்காவில் இருந்து கங்கை வரை " போல புதிய கோணங்களில் இருந்து வாழ்க்கை யதார்த்தத்தை திறந்து விட அதில் இடறி விழுந்து எழும்பிய அனுபவங்கள் இப்படி ஒரு இடபெயர்வில் அலைக்கழிக்கப்படாமல் நிட்ச்சயமாக் கிடைத்தே இருக்காது
                                            இன்றைக்கு யாழ்பாணத்தை " யூ டுயுப் " போன்ற கானோளிகளில் பார்க்கும்போது அதன் அலங்கார நாகரிகம், நாயைப்பிடி பிச்சை வேண்டாம் என்பதுபோல இனி பழசையெல்லாம் கொத்திக் கிளறி புரட்டி எடுத்தால் எடுபடுமா என்று பிரமிக்க வைக்குது. ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் எப்படி விடுதலைக்கு சமாந்தரமாக அதன் வீரம்மிக்க அர்பனிப்புகளுக்கு தங்கள் விலையைக் கொடுத்தார்கள் என்று கதைகள் போல எழுதினால் அதை யாரும் வாசிப்பார்களா என்று தெரியவில்லை.
                                                    ஒரு வரலாற்று ஆவணம் போலவாவது இருந்திட்டுப் போகட்டுமே என்ற ஒரு அற்ப ஆசை எட்டிப்பார்க்க சொல்ல வேண்டியதை சொல்லித்தான் ஆகவேண்டும் எண்டு ஆத்மாவை அரிக்குது அடிமனது அதனால் பார்க்கலாம்...
.
.30.10.15
,

Friday, 30 October 2015

மென்மையான கிட்டார் இசை அதிசயம் எரிக் கிளப்டன் ,

யாழ்பாணத்தில நான் கிட்டார்  படித்தபோது , என்னோட இசை ஆசிரியர் ஒரு இங்கிலீசுப் பாட்டும் சொல்லிதரவில்லை ,ஆனால் அவர் தனக்கு விருப்பமான சில கிடார் வாத்தியம் வாசித்துப் பாடிய சில பாடகர்களின் பெயர்களையும் , அவர்களின் திறமை , ஏன் அவர்கள் உலக அளவில் கிடார் இசையில் கவனிக்கப்பட்டார்கள் என்பதையும் சுருக்கமா சொன்னார் ! அப்படி அவர் முலமாக அந்த நாட்களில் வெறும் பெயர் மட்டும் அறிந்த ஒருவர் எரிக் கிளப்டன் !

                                           மென்மையான , மேலோடி ஸ்டைலில், சோகமானா தத்துவ , பிரிவின் வதையையும் , காதலின் ஆழத்தையும் , கருணையின் நீளத்தையும் , மரணத்தின் தவிர்கமுடியாத தலை விதியையும் ஆங்கிலப் பாடல்களில் இசை அமைத்து , அதில் அவரே கிடார் வாசித்துப் , கொஞ்சம் அவரே கர்கரப்பானா, ஆனால் கவர்ச்சியான குரலில் எல்லாரயும் பாடி மயக்கிய எரிக் கிளப்டன் ,இந்த நுற்றாண்டின் ஒரு மென்மையான, Rock and Roll  ,Pop,Blues ,Mild pop ,Mild Blues , Blues grass மேலோடி "அக்கோஸ்டிக் கிடார் " இசை அதிசயம் !

                                                எரிக் கிளப்டன் இங்கிலாந்தில் 16 வயது அம்மாவுக்கும், ஒரு "சைலர் " என்ற கப்பல் நாடோடிக்கும் பிறந்தவர் ,அவர் பிறந்தவுடனயே ,தாத்தா பாட்டியிடம் அவரை தள்ளிவிட்டு பெற்றோர் பிரிய,அவரோட "டீன் ஏஜ் "வயசிலதான...் , தானோட தாத்தா பாட்டி எதுக்காக தன்னை சின்னவயசில் இருந்து வளர்த்தார்கள் என்பதும் ,அவரோட பெற்றோர் .சொந்த சோகக், கதையை கொஞ்சம் எக்ஸ்ட்ரா சோகமாகா, தட்செயலாக நடந்த ஒரு குடும்ப சம்பவத்தில் அறிந்தார்! அந்த அதிர்ச்சி அவரின் வாழ்நாள் முழுவதும் மனதளவில் தாக்கியது !
                                                       
                                              எப்படியோ தன்னோட சிறுவயதுப் பின்புலம் ,அம்மா அப்பாவின் அன்புக்கு ஏங்கி தவித்தாலும் , அவரில் இளவயதிலேயே எரிக் கிளப்டன்" றொக் அண்ட் ரோல் "lead கிடாரிஸ்ட் ஆக உலகம் எங்கும் பரவலாக அறியப்பட்டபோதும் ,அவர் சொந்தமாக இசை அமைத்த பாடல்கள் எல்லாம் மரப்பலகையாள செய்த "அகோச்டிக் " கிடாரில், மென்மையாக,மெதுவாக ,டெக்னிகலால split chords என்பதை வைத்து, வாங்கு, வாங்கு என்று வாங்கி உலகாலவில் பலரோட மூகில விரலை வைத்து ஜோசிக்குமலவுக்கு அசத்தி தள்ளினார். இப்படி ஸ்லோவாக இவர் வாசித்தால் இவரை " Mr slow hand " எண்டு கிண்டல் பண்ணினார்கள், அப்படி தன்னை சொல்வதை "பெருமையாக" நினைப்பதாக ,அடக்கமாக பின்னாளில் ஒரு TV பேட்டியில் சொன்னார் எரிக் கிளப்டன்.

                                               இவளவு "ROCK & ROLL " கிட்டார் பேமஸ் ஆனா எரிக் கிளப்டன், சொந்தவாழ்க்கை அலங்கோலமானது ,அவரோட முதல் மைனைவி லைலா ,அவரை விட்டு பிரிந்துபோக, "கொக்கைன்" போதைவஸ்துக்கு அடிமையானார், ஆனால் "லைலா " எண்டு ஒரு அல்பம் அவரே " What'll you do when you get lonely ,And nobody's waiting by your side? எஎன்று கதறி கதறிப் பாடி  த்தனிமையின் கொடுமையை  " Layla, you've got me on my knees., I'm begging, darling please. Layla, darling won't you ease my worried mind."   என்று இசை அமைத்தார், அந்த " லைலா "அல்பத்தில் உள்ளா இன்னுமொரு உலகப் புகழ் பெற்ற பாடல்  "WONDERFULL TO NIGHT!  அதை Ballet என்ற ரொமாண்டிக் ஆங்கில நடன தாள கதியில் இசைஅமைத்துப் பாட அந்தப் பாடல் இன்ற்றையா நாளில்  இந்த உலகத்தில ஒலிக்காத மேடைகளே இல்லை!

                                                 அவரோட முக்கியமான , மெலஞ்சொலிக் ஸ்டைலில்,  சோகமான , ஒருவித சர்ரியலிஸ்டிக் தத்துவ வரிகள் உள்ள  "Tears  In Haven " என்ற  பாடல் ,அவரோட நாலு வயசு மகன், நியூ யோர்க்கில் 53வது மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்து போக ,"I didn't feel the loss anymore, which is so much a part of performing this song" என்று சொல்லி .அந்த சோகத்தில எழுதி இசைஅமைத்த பாடல் எண்டு சொன்னார் ,இழப்புகள் எப்போதுமே அவரை சுற்றி சுற்றி வந்தபோதும் அசங்காமல் இசை அமைப்பில் இப்பவும் புதுமை செய்கிறார் எரிக் கிளப்டன்.

                                                 எரிக்கிளப்டன் அவரோட தந்தைக்காக When I look in my father's eyes.  என்று ஒரு பாடல் படித்திருக்கிறார் , அந்த பாடல் ஒருவித ஏக்கம் நிறைந்த ,Then the light begins to shine .And I hear those ancient lullabies.போன்ற 18ம் நூற்றாண்டு, மறைந்துபோன  ஆங்கில வார்த்தைகள் எல்லாம் போட்டு இசைஅமைத்த பாடல் அதில ,கொஞ்சம் வில்லங்கமான , ஆன்மீகம் சம்பந்தமான ,,Praying for the healing rain , To restore my soul again. போன்ற வரிகளும் வருவதால் சிலர் அந்தப் படலை ஜேசுநாதருக்காகப் பாடியதும் எண்டும் சொல்லுறார்கள் , எப்படியோ அந்தப் பாடலைப்போல வேறு  ஒரு பாடல் இன்னும் வரவே இல்லை.

                                    அமைதியான,அடகமான் இந்த கிடாரிஸ்ட்,எல்லா முன்னணி இசைமேதைகளுடனும் கிடார் வாசித்து இருக்கிறார் , 2005, இல் சுனாமி  அடிததபோது பாதிக்கப் படவர்களுக்கா இசை நிகழ்ச்சி செய்து அந்தப் பணனதை பாதிக்கப் பட்ட வர்களுக்குக் கொடுத்தார்  இந்த இசைமேதைய கவுரவிக்க, அவர் எப்போதும் விரும்பி வாசிக்கும் "fenders " எலெக்ட்ரிக் கிடார் நிறுவனம்,சென்ற ஆண்டு "ERICK KALPTAN . E SERIES " என்று தங்களின் அதிநவீன கிற்றாருக்குப் பெயர்வைத்து " கிட்டார்  " என்ற வாத்தியத்தை பெருமைப்படித்தினர்கள்!
.
.

Wednesday, 28 October 2015

இரவின் மடியில் இதயம் வரை...

வசந்தகாலம் விடைபெறும் கடைசி மாதத்தில், பேர்ச் மரங்களும் வில்லோ மரங்களும் அவைகளின் கடைசி இலைகளைக் கழட்டி மஞ்சளாகிய சென்ற வாரம், ஒஸ்லோவில் எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் என்ற தலைப்பில் இலற்றோனிக் கண்காட்சியும் " கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது " போல விற்பனையும், தலைநகரின் நடுவில் உள்ள ஒரு பெரிய மகாநாட்டு மண்டபத்தை வளைச்சுப் பிடிச்சு நடத்தினார்கள்.

                         ஜப்பான்,தென் கொரியா, தாய்வான் ,சைனா இல இருந்து பல்தேசிய இலற்றோனிக் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களின் சந்தைப்படுத்தல் முகவர்களை அனுப்பி வைச்சு, அந்த நிறுவனங்களின் அதி நவீன இலற்றோனிக் உற்பத்திகளின்  கண்காட்சி என்ற பெயரில், முடிந்தளவு  அவர்களின் வேறு சில தயாரிப்புகளையும் அதைப் பார்க்க வந்தவர்களின் தலையில் " நடக்க மாட்டாத லவாடிக்கு நாலு பக்கமும் சவாரி " பழமொழி போல பாசல் கட்டி ஏத்தி அனுப்பிக் கொண்டு இருந்த ஒரு இடத்துக்கு சும்மா  " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற தலைப்பில் கொஞ்சம் கவரப்பட்டு உள்ளுக்க வலது காலை எடுத்து வைச்சுப் போய்  சுற்றிப் பார்த்தேன். 

                                                அந்த மண்டபத்துக்கு வெளியேயும், உள்ளேயும் அடிச்சுப் பிச்சு இளம் பெண்கள்தான் குறுக்க மறுக்க " மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது " குறுந்தொகை போல நிறைந்து இருந்தார்கள். மண்டப வாயிலில் இன்னும் கொஞ்சம் இளம் பெண்கள் ஒரு " கட்லோக் " என்ற கடைகளின் விபரம் அவை விற்கும் பொருட்கள் பற்றி ஒரு சின்னக் குறிப்பு உள்ள துண்டுப்பிரசுரம் தந்தார்கள். அந்த இடமே ஏறக்குறைய " வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் " அகநானூறு கால இளமையா இருக்க, அதையும் வேண்டிக் கொண்டு " தந்தன தந்தன தாளம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் " எண்டு பாடிக்கொண்டு உள்ளுக்கு சும்மா சுற்றினேன்.

                                           எல்லா சின்ன சின்ன கடைகளிலும் நிறைய அதி நவீன , " பிளாஸ்மா " , " மட்ரிக்ஸ் ", " ஹை டேபிநிசன் ", " லேமொட்த் "தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் உலக அழகு ராணிகள் போல " என்னைப் பார் என்னைப் பார் " எண்டு ப்ளஸ் ஏற்ற  புரோட்டான்களும், மைன்ஸ் ஏற்ற இலத்திரன்களும் ஓடிப்பிடிச்சு விளையாட அவைகளுக்கு நடுவில்  நடுநிலை நியுற்றோன்கள் போல  ஒரு ஓரமாக ஒதுங்கி நிண்ட போது  அவைகளின் பாவனை ஏன் இப்ப எங்களுக்கு தேவை எண்டு ஜோசிக்க வைத்தது...

                              அந்த கண்காட்சி உண்மையில் " பணமும் பத்தாயிருக்க, பெண்ணும் முத்தாயிருக்க, முறையிலேயும் அத்தை மகளாயிருக்க " பிரமிப்பா இருந்து, எதிர் கால " ஹை டெக் " தொழில் நுட்பம் உண்மையில் பயப்பிடுத்தும் போல இருந்து, டெலிவிஷனை ஒரு சீலை போல சுருடிக்கொண்டு போய் விரும்பின சுவரில வைச்சு தப்பிப்போட்டு வேண்டிய சனல் பார்க்கலாம் எண்டு ஒரு செய்முறை விளக்கம் செய்து காட்டினார்கள் அதைப் பார்க்க குதிக்காலில் சீனி எறும்பு கடிக்கிற மாதிரி திரிலா இருந்தது.

                                       அந்தப் பொருட்களை உலகத்தின் வேற ஒரு மூலையில் இருந்து கொண்டு எப்படி யாரோ ஒருவர் கண்டு பிடிக்கிறார் என்ற ஆச்சரியதைவிட,  இவளவு அழகான பெண்கள்  ,அவைகளை வாயில தேன் போத்திலை வைச்சு சரிச்சு ஊத்தின மாதிரி தேன் ஒழுகப் பேசி , சிக்கலான டெக்நோலோயில் உருவான சாதனங்களை இலகுவாக விளங்கப்படுத்தி விற்பனை செய்த இளம்பெண்களை  யார் எங்கிருந்து கண்டுபிடித்து இங்கே கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி மிகவும் ஆச்சரியமா இருந்தது.

                             எல்லாக் கடைகளிலும் இருந்த விற்பனைப் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல எண்டு " ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க.... " அபிராமிப் பட்டருக்கே சவால் விடுற மாதிரி இருக்க பேசாமல் இந்த கண்காட்சிக்கு " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற பெயரை விட " எதிர்கால வாழ்க்கைத் துணைகளின் சாத்தியம் " எண்டு பெயர் வைச்சிருக்கலாம் போல இருந்தது..,,

                       வளர்ச்சியடைந்து கொண்டு வரும் நாடுகளின் உற்பத்திப்பொருள்கள்,  வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் அதிக விலைக்கு விற்பனை ஆகுது.  அதுக்கு காரணம் மேலை நாடுகளில் உள்ளவர்களிடம் திருப்பி இல்லைப் போல இருக்கு, அதிகமாக இளம் பிள்ளைகள் தான் விடுத்தது விடுத்தது கேள்வி கேட்டு அதுகளை வேண்டி  " பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டு வந்த மாதிரி " பாவித்துப் போட்டு, அதன் நவீனம் கொடுக்கும்  பெறுமதி குறைய,  ஏற்கனவே வீட்டில் இருக்கும் மற்றபல இலற்றோனிக் குப்பைகளுடன் அதை எறிஞ்சு போட்டு மறுபடி அதி நவீனம் தேடுவார்கள்,

                                இப்படியான கண்காட்சி விற்பனை ஒழுங்கு செய்பவர்கள் அவர்களுக்கு கடன் கொடுக்க கையோடு சில " பேங்க் " குகளையும் ஒழுங்கு செய்து வைச்சு இருப்பார்கள், அந்த விற்பனை நிலத்திலேயே " நோர்வேயின் பொருளாதரத்தை நிமிர்த்திப் பிடிக்கிறோம் "  எண்டு பெருமையா விளம்பரம் எப்பவும் டெலிவிசனில் செய்யும் ஒரு பேங்க்,  
                                      
                                  "  ஓடியா.. ஓடியா ..கையில காசு வாயில தோசை, கையில காசு வாயில தோசை, போனா வராது ,வந்தாப் போகாது  ...ஓடியா.. ஓடியா ..கையில காசு வாயில தோசை, கையில காசு வாயில தோசை .."

                                   எண்டு விளம்பரம் செய்து கொண்டு, எவன் வந்து மாட்டுவான் " நோர்வேயின் பொருளாதரத்தை நிமிர்த்திப் பிடிக்க " என்று ஒரு " மினி பேங்க் ஸ்டால் " திறந்து வைச்சுக் கொண்டு இருந்தார்கள். கொள்ளை அடிப்பவர்கள் இப்படிதான் எப்பவுமே திட்டம் போட்டு கும்பலாகக் கொள்ளை அடிப்பார்கள் என்று கொமினிசம் சார்ந்த புத்தகங்களில் சின்ன வயசில் படித்து இருந்தாலும் அன்றுதான் நேரடியாப் பார்க்க முடிந்தது.

                          ஒரு கட்டத்தில் இப்படி பேங்க் கடனுக்கு  அழுது வடிந்து வேண்டிய இலற்றோனிக் பொருட்கள்  " கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது " போல நீர்த்துப்போனாலும் பேங்க் இல் எடுத்த கடன் முடியும் வரை கட்டத் தான் வேண்டும். அதைதான் பேங்க்காரங்கள் " வந்தாப் போகாது " எண்டு சொல்லி சொல்லியே எல்லாரையும் மயக்கும் வித்தை போல இருந்தது.

                                  நான் அந்த இடம் முழுவது சுற்றி,பல விஞ்ஞானம்  விந்தைகளில் ஆர்வம் உள்ளவன் போல பல அதி நவீன பொருட்களையும்,  அழகுப் பெண்களையும் மேஞ்சு போட்டு, அந்த மண்டபத்தின் நடுவில் பேப்பர் கப்பில் கோப்பி விக்கும் கடை போட்டு இருந்தார்கள் அதில இருந்து ஒரு கோப்பியை வேண்டி உறுஞ்சிக்கொண்டு, சின்னப் பிள்ளைகள் உலகம் மறந்து கேம்ஸ் விளையாடும் விளையாட்டு சாதனங்களுடன்  தோற்று தோற்று விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். வயதான ஒரு பெண்மணி " ரிமொர்ட் கொன்றோல் " போல இருக்கும் பழைய நோக்கியா பழைய போனை வைச்சு ஆருக்கோ நம்பர் தேடி தேடி அதில குத்திக்கொண்டு எனக்கு முன்னால வந்து இருந்தா, 

                         " ஹாய் "

                            எண்டு சொல்லி  என்னைப் பார்த்து சிரிச்சுப்போட்டு,

                         " என்னோட பேரப்பிள்ளைகள் வந்து நிக்குதுகள் அதுகளோட வந்தேன், என்னோட பென்சன் காசில கொஞ்சம் கொஞ்சமா சேமித்த காசு கொண்டு வந்து அதுகளுக்கு சில பொருட்கள் வேண்டிக் கொடுக்கத்தான் நானும் வந்தன், இப்ப என்னடா எண்டால் என்னோட சேமிப்பு காசு  முழுவதுக்கும் ஒரு வழி பண்ணிப்போட்டு தான் அதுகள்  வெளிய வரும்கள் போல இருக்கு "

                      எண்டு விபரமா சிரிச்சு சிரிச்சு சொல்லி முடிய, 

                   " நீ ஒண்டும் வேண்டவில்லையா ,நிறைய மொபைல் டெலிபோன் எல்லாம் போட்டு இருகுரான்களே, சும்மா அதில விரலை வைக்கவே இழுத்துக் கொண்டு தண்ணியில அன்னம்போல வழிக்கிக்கொண்டு போகுதே ஒரு சேர்விஸ் பெண் பிள்ளை எனக்கே செய்து காட்டி வேண்டச் சொன்னாள் " , 

                               என்று போட்டு மறுபடியும் கையில வைச்சு இருந்த பழைய நோக்கியாவில் கல்லு உரலில நெல்லு நிரப்பி  உலக்கையால குத்துற மாதிரி குத்திப்போட்டு, 

                   " என்ர  மனுசன் போன் எடுக்குதில்லை, அந்தாளுக்கு காதும் ஒழுங்கா கேட்காது , "

                    எண்டு போட்டு மறுபடியும்

                " நீ ஒண்டுமே வேண்டவில்லையா ,ஏன் உன்னிடம் காசு இல்லையா,அல்லது நீ அகதியா வந்து அகதி முகாமில் இருக்குறியா  "   எண்டு  " சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டது " போலக்  கேட்டா,, 

                            நான் "  ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, இதுக்குள்ள ஒரு மண்ணும் வேண்ட விரும்பவில்லை "  

                                 எண்டு நல்ல  கவுரவமான நோர்க்ஸ் உச்சரிப்பில் சொல்லி சிரிச்சேன்,மனுசி நான் வெறியில இருக்றேன் எண்டு நினைச்சோ என்னவோ கொஞ்சம் என்னை சந்தேகமாப் அக்கம் பக்கம் பார்த்திட்டு 

                       " போட்டு வாறன்,நோர்வே சரியான வாழ்க்கைத் தரம் உயர்வான ,அதே நேரம் வாழ்க்கைச் செலவு அதிகமான நாடு, கவனம்பா காசு கண்ட பாட்டுக்கு செலவழிப்பதும் நல்லதில்லை, ஹா டே ப்ரோ , ஹா டே குட்  , ஹா என் பின் டாக் " 

                            எண்டு சொல்லிப்போட்டு எழும்பிப் போயிட்டுது. 

                                  நோர்வே போன்ற நாடுகளில் வீடுகளில், அன்பாக ஆதரவாக நாலு வார்த்தை அக்கறையாகப் பேச யாரும் இல்லாமல்,  நிறைய மனிதர்கள் பேசுவதுக்கு உயிர் உள்ள மனிதர்கள் இல்லாமல் தனியாக இருக்குறார்கள்,ஆனால் அவர்கள் வீடு முழுவதும் இலற்றோனிக் தொடர்பு சாதனங்கள் நிறைந்து கிடப்பதைக் கண்டு இருக்குறேன். அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாய், பூனையோடு கதைத்துக்கொண்டு வாழுங்கள்.

                                     ஏன் அவங்களைச் சொல்லுவான் " சேணியனுக்கு ஏன் குரங்கு? " என்று அந்தக் காலத்தில் பழமொழி  எழுதி வைச்ச மாதிரி என்னுடைய வீட்டிலேயே நிறைய இலற்றோனிக் டீவி, டிவிடி , சிடி பிளையர், மைகிரோவேவ் அவன், அறுவத்தெட்டு டெலிபோன்,மோடெம், சடளைக்ஹ்ட் பொக்ஸ், அதிவேக ஜிகா மெகா வேக இன்டர்நெட் இணைப்பு .லாப் டாப் கணணி,டிஜிட்டல் கமரா , இசைக்கருவி சம்பந்தமான அம்பிளிபயர் சாதனங்கள் எல்லாம் கச கச எண்டு வீடு முழுக்க லொட்டு லோடுக்கு இலத்திரன் ஓடும் சாதனங்கள் அம்முக்கி கொண்டு குவிந்து கிடக்குது, அதை வைச்சு உலகத்தை வேகமாக இயக்கலாம், வாழ்க்கையை அடுத்தவனுக்கு கலர் படம் காட்ட  " ஹை டெக் லெவலில் மெயின்டேயின் " பண்ணலாம்.... ஆண்டவன் புண்ணியத்தில் அவளவுதான்செய்யலாம்! 

                                           ஆனாலும் உண்மையில்  சின்ன வயசில் யாழ்பாணத்தில்  எங்க வீட்டு ஹோலில் இருந்த மரத்தால செய்த பெட்டி போன்ற  பழைய ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோ  இரவின் மடியில் இதயம் வரை தந்த இன்பம் இதுகளில் இல்லை. கோப்பிக் கோப்பையை உள்ளங்கையில் வைச்சு நசிச்சு போட்டு குப்பைக் கூடையில் எறிஞ்சு போட்டு வெளிய வந்தேன்..

                                        வந்து வெளியே என்ன சோடினை போட்டு இருக்கிறாங்கள் எண்டு பார்த்தேன்,மண்டபத்தின் முக்கிய வாசலுக்கு மேலே நியோன் குழாய் விளக்கில் வளைச்சு ,  " அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கின கதை  போல வெளியால விசியங்கள் வேற மாதிரி இருந்தது,  

                         " நாளைய உலகம் இன்றைக்கு ஒஸ்லோவில்  "

                               என்று அந்த லைட் சுழண்டு சுழண்டு ஓட,  

                         " இந்த உன்னத நிகழ்வில் இணைவதில் ஒஸ்லோ நகரம் பெருமைப்படுகிறது "

                                          என்று ஒஸ்லோ நகரத்தின் நகரபிதா மேன்மை தங்கிய பேபியான் ஸ்டெங் வாழ்த்து சொல்லும்  பெரிய விவரண வர்ணப்  படம்  இணைத்த இன்னுமொரு அழகான விளம்பரப் பலகை அதுக்குக் கீழ வைச்சு இருக்க,  அதுக்குக் கீழே இரண்டு வசிக்க வீடு இல்லாத தெருவோரம் வசிக்கும் வெள்ளை இன நோர்வேயிய ஹோம்லெஸ் மனிதர்களில் ஒருவன் பேப்பர் கோப்பி கோப்பையை நீட்டி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க ,மற்றவன் கம்பி அறுந்து போன கிடாரில்

                                 " jeg sto i skyggene i regn og vind
                           
                                   jeg var en fremmed til du åpnet deg og lot meg inn

                                   jeg sto alene helt til du steg frem " 

                                    " நான் ஒரு வீடு இல்லாத மழையிலும்,குளிரிலும் வாழும் மனிதன்,தயவு செய்து கதவை திறந்து உள்ளே அனுமதி , " என்ற ஜோஹனாஸ் பிஜெல் என்ற நோர்வே நாட்டவர் பாடிய  நோர்வே மொழிப் பாடலை இரவின் மடியில் இதயம் வரை உலகம் இறந்து கொண்டு இருப்பது போன்ற குரலில்ப்  பாடிக்கொண்டு இருந்தான்....
 .
.
.

ஜோர்ச் ஹரிசன், இந்தியாவை நேசித்த இதயம்!

யாழ்பாணத்தில, என்னோட இளவயதில் கிடார் பயின்றது மட்டுமில்ல , பின்னாட்களின் அதை சொல்லித்தந்த மாஸ்டரின் இசைக் குழுவான, திருநெல்வேலி ,கலாசாலை வீதியில் இயங்கிய " அபர்ணாலயா " என்ற அவரின் சிறிய, உள்ளுர்ப் பாடகர்கள் பாடிய , கோவில் திருவிழாவில விடிய விடிய இசை மழை பொழிந்த, ஒரு இசைக்குழுவில் bass கிடார் வாசித்த போது, நீண்ட தாடி, நீண்ட தலைமயிர் வளர்த்து இருந்தேன் . பார்க்க ராப்பிச்சைகாரன் ஒருவன் தவறுதலா  கிட்டாரோடு மேடையில் தோன்றியது போலவே ஒரு  ஸ்டைலில்  வாசித்தேன்!                                                         

                       பலநண்பர்கள் , உறவுகள் அந்த நேரம்  நேரடியாவே கேடார்கள்                                                                                     
                               "உனக்கு என்ன ஏதும்  காதல் தோல்வியா? அல்லது வேற என்னவும் பிரசினையா,,,,என்னத்துக்கு இப்பிடி  பிடிவாதமாக அலங்கோலமாக  , ஏன்  இப்படி தலைமயிரையும் ,தாடியையும்  விசர் ஆசுப்பத்திரியில் இருந்து தப்பி வந்தவன் மாதிரி வளத்துக்கொண்டு திரியிறாய்,  " என்று கேட்பார்கள். அதுக்கு  நான் எப்போதும் சொல்வது                                              

                                    " ஜார்ஜ் ஹரிசன் என்ற கிட்டாரிஸ்,,,அவரின்  பாதிப்பு இது ,,அவரை மாதிரி கிட்டார் வாசிக்க முடியாவிட்டாலும் அவரைப்போல தாடி,,தலைமயிராவது  வளர்த்து  என் ஆசையை  நிறைவு செய்கிறேன்,,,ஹ்ம்ம்,,,பார்க்கலாம் ஒரு நாள் அவர் போலவே கிட்டார்  கையில் எடுத்து இசைமழை  பொழியும் நிலைக்கு  வரவேண்டும் என்று வெறியிருக்கு  " எண்டு சொல்லுவது                                                          

                                      இப்ப எப்படியோ தெரியாது ,,ஆனால் பலருக்கு அந்தகால யாழ்பாணத்தில விளங்கவில்லை நான் என்ன சொல்லுறன் எண்டு ! அதனால ஒரு குத்துமதிப்பா எனக்கு மனநிலை சரி இல்லை எண்டு என் காதுபடவே புரளியக் கிளப்பி , அதையே கொஞ்சம் நாலு பக்கமும், உண்மை போலவே ஊதி விட்டார்கள் ! ஜோசிதுப்போட்டு, அவர்களின் கேள்விக்கு வாயை அடைக்கும் பதில் ஒன்று சொல்லாமல் அவர்களின் புரளியை நிறுத்தமுடியாது என்று நினைத்து ,அதுக்குப்பிறகு என் அடையாளத்தைக் கேலி செய்பவர்களுக்கு                                   

                                   "செல்வ சன்னதி முருகனுக்கு நேர்த்திக்கடனுக்கு வளர்கிறேன்" 

                                         என்று சொல்லத் தொடங்கினேன் , அதன் பின் பலர் நண்பினார்கள் ! இப்படிதான்,தமிழ் கலாசார சூழலில் ஒருவன் தாடி ,மீசை ,தலைமயிர் வளர்க எப்பவுமே வலுவான காரணங்கள் தேவை!                                                    

                                      சரி ஜார்ஜ் ஹரிசன் யார் எண்டு இப்ப உங்களுக்கே குழப்பாம இருக்கும் இல்லையா ? சொல்லுறன் .

                                பீட்டில்ஸ் ,இந்தப் பெயர்  உலகைக் கலக்கிய பெயர். ,இந்த  இசைக்குழு உலகத்தின் அதிகம் பேர் கேட்ட பாடல்களை இசைஅமைத்து பாடிய இசைக்குழு , அவர்களின் இசை,பாடல், வரலாற்றின் பெறுமதி இன்றய நிலவரத்திலும் பில்லியன் டாலர்கள் வருமானம் புரட்டிய அதிசயம், நான்கு இசைக்கலைஞர்கள்  சேர்ந்து அந்த சாதனையைச் செய்தார்கள். அவர்களின் இசை நாடித்துடிப்புப் போல தாளம் போட வைக்கும் "ராக் அண்ட் ரோல் " என்ற வகை அதில் இருந்த கிடாரிச்ஸ் ஜோர்ச் ஹரிசன்                                    
                                                     
                                      யாழ்பாணத்தில அந்த ஜார்ஜ் ஹரிசன் என்பவர் ககிட்டார்  வாத்தியக் கலைஞ்சரா இருந்த, " பீடில்ஸ் "இசைக் குழுவின் பாடல்கள் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த நேரம் ,எங்களின் வீட்டுக்கு அருகில் வசித்த, " கஸ்சுப் புஸ்சு " எண்டு கொடுப்புக்குள்ள இங்கிலிசு கதைக்கும் அப்போதிகரி டாக்டர் ஒருவர் ,அவரின் மகனுக்கு கணக்கு சொல்லிகொடுக்கப் போன என்னோட பெரிய அண்ணனனுக்கு அவர் விரும்பிக் கேட்ட " பீடில்ஸ் " பாடல் அடங்கிய ஒரு கேசட் கொடுக்க அதை அண்ணன் வீட்டில கொண்டுவந்து போட, அந்த பாடல்களின் இசை அண்ணனை மயகாமல், ஏனோ என்னை மயக்கியது , 

                                          அதுக்குப் பிறகு " பீடில்ஸ் " இசைக்குழுவின் விபரம் அறிய , "ஜப்னா முநிசிபால்டி பப்ளிக் லைபெறேரியில்" இருந்த " insider story of Beatels " என்ற புத்தகத்தை வரிக்கு வரி படிக்க , என்னோட நெஞ்சினில் " பீடில்ஸ் " நெருப்பு பத்தியது. அவர்களின் பாடல்கள்,,இசை  இந்த உலகத்தை திருப்பி மற்றப்பக்கமா சுழற விடுவது போல இருந்தது                                               

                                              அந்த பீடில்ஸ் இசைக்குழுவின் கலர்ப்படம் ஒன்று முகம் பார்க்கும் கண்ணாடியின் மேலே ஒட்டி வைச்சு இருந்தேன் .அதில அந்த இசைகுழு அங்கத்தவர் எல்லாருமே ஜிப்ப்சி ஸ்டைலில் தாடி ,மீசை,தலைமயிர் எல்லாம் அக்கறை இல்லாமல் வளர்த்து, மாதக்கணக்கில் தோய்க்காத டெனிம் காற்சட்டை போட்டுக்கொண்டு நிற்பார்கள். இவளவு கேவலமாக இருந்தாலும் அவர்கள் உலகத்தின் நம்பர் வான் இசைக்குழுவின் இசைக்கலைஞர்கள்.                                              

                                 அந்தப் படத்தை , முகக் கண்ணாடியில் முகம் பார்க்க மறந்து எப்பவுமே மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த என்னோட அம்மாவே ஒரு கட்டத்தில்                                    " 

                                  " டேய்..இவங்கள் யாரடா,, பார்க்கப் பரதேசிகள் போல இருக்கிறவன்களோட படத்தை ஒட்டி வைச்சு ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டு இருகிறாயே  ,,மூதேவி வாலாயம் பிடிச்சவங்கள் போல இருக்கே இவங்கட மூஞ்சியும் முகரக்கட்டையும் ,,இது   வீட்டுக்கு முழுவியளத்துக்கே உதவாத படமடா,, இதை  நீயா இப்ப கிழிச்சு எறியப்போறியா, இல்லாட்டி இப்ப நானே  கிழிச்சு அடுப்பில நெருப்பில  எறியப் போறேன்.."                                 

                                    என்று ஒரு நாள் சண்டை பிடிச்சா. ஒரு மாதிரிக் கெஞ்சி மன்றாடி அதைக் உரித்து எடுத்து கொண்டு வந்து என்னோட அறையில் இரகசியமாக வைச்சு சில வருடம் அந்த இசைக்குழுவின் மானத்தைக்  காப்பாற்றினேன்.                                                 

                                       ஜார்ஜ் ஹரிசன், இங்கிலாந்தின் மேற்க்கு கரையில் உள்ள துறைமுக நகரமான ,லிவர்பூலில் ஏழ்மையான  உழைக்கும் வர்க்கப் பெற்றோர்களுக்கு பிறந்தவர், அவரோட லிவர்பூலில் நகரத்தில் பிறந்த , பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற "Beatels "இசை குழு உருவாகிய போது  , அந்த இசைக்குழுவில் lead கிடாரிஸ்ரா இருந்தவர்,

                                பின்னர் அந்த இசைக்குழுவில் இருந்த உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஜோன் லென்னன் உடனும் ,லென்னனின் ஜப்பான் நாட்டுக்  காதலி ஜோகோ ஓனோவுடன் ஏற்பட்ட  மனஸ்தாபத்தில் பீட்டில்ஸ் இசைக்குழுவை விட்டு  பிரிந்து போய் தனியாக அல்பம் இசை அமைத்தவர் , அவரின் பாடல்கள் இசைக்காத நாடுகளே இல்லை, பாடாத மேடைகளே இல்லை , மயங்காத மனிதர்களே இல்லை என்கிற அளவுக்குக் கலக்கியவர் !                                                  

                                                       பின்னர்  அவரின் செவ்விகளில் விமானத்தில் பறந்து சென்று இசைநிகழ்ச்சி செய்ய பயந்து, அதை ஒரு காரணமாக சொன்னாலும் ,  ஜான் லனன்னின் ,காதலி  ஜோகோ ஓனோ இன் இம்சையைப்  பொறுக்கமுடியாமல் ,அந்த குழுவில் இருந்து விலகி தனியானதா சொன்னார் ! 

                                                  ஜோர்ச் இன் ஆழ்மனது  இசைப்பொறி உண்மையில் " ராக் அண்ட் ரோல் "  இல்லை.  இசையின் உண்மையான சோடனைகள் அற்ற அதன் உண்மையான முகத்தை அவர் தன்னுளே தேடினார். அவரின் அந்த  இசைத் தேடல் கீழத்தேய இந்தியாவுக்கு அழைக்க , இந்தியாவுக்கு போய் ரவிசங்கரிடம் சித்தார் பயின்றவர்,"here comes the sun " என்ற உலகப் புகழ் பெற்ற பாடலில் கிடாரில் , ரவிசங்கரின் சிதார் போல இசை அமைத்து வாசித்தவர்!                                              

                                                               இந்தியாவின் ஆன்மிகத்தில அலாதியான அமைதி இருப்பதை உணர்ந்து , ஹரிசன் ஒரு கட்டத்தில் "ஏகம் தத், அகம் பிரம்மாஸ்மி " எண்டு சொல்லி முழுவதும் இந்திய ஆன்மீகத்தில் இறங்கியவர்! இமயமலை அருகில் , ரிசிகேஸ் மலையடிவாரத்தில , ஜோகி ஒருவரின் ஆசிரமத்துக்குப் போய், உலகத்துடன் தொடர்பைத் துண்டித்து வருடக்கணக்கில் தியானம் செய்தவர் ! அவரின் இசை  அடையாளம் ஒரு கலாச்சார  அடையாளமாகவே மாறியது.                                     

                                                   இந்திய ஆன்மீகப் பாதிப்பால் ,அதன் பின் அவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் "everything must pass "  ,"Oh ,my sweet loard " ,"while my guitar gently weeps..."  எண்டு பாடிய அவரோட ஆன்மீகத் தேடல்கள் நிரம்பி வழிந்து," ஆன்மீக வரட்சி " நிரம்பிய மேலை நாடுகளில் பிரபலம் ஆகிக்கொண்டு இருந்த "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா " பக்தி இயக்கம், அவரின் பாடல்களைப் பாட , இன்றைக்கு ஜார்ஜ் ஹரிசன் யார் எண்டு, இசை உலகில் எல்லாருக்குமே தெரியும்.

                                                 அவர் நிறைய ஆன்மிக தேடல் ,நிலையாமை , கடவுளின் கருணை,பாவங்களின் மன்னிப்பு என்று  நிறைய ஆன்மீகப் பாடல்கள் இசை அமைத்து அல்பங்களாக வெளியிட்டார்,கோடிக்கணக்கில் அவை விற்றன . எழுபதுகளின் இறுதியில் ஹிப்பிஸ் ஸ்டைலில் வாழ்ந்த இளையவர்கள் அவர் பாடலைப் இபேச என்ற ஸ்பானிஸ் தீவில் பாடி,ஆடிப் பிரபலம் ஆக்கினார்கள். ஜார்ஜ் ஒரு சாமியாரா இருந்து  இருக்க வேண்டிய ஆள், தவறாக கிட்டாரிஸ்ட் ஆகிவிட்டார் போல இருந்தது அன்றைய வருடங்கள் என்று சொல்லலாம்.                                               

                                                        ஜார்ஜ் ஹரிசன் ,பங்களாதேஸ் வெள்ளத்தில் மிதந்தபோது "Banagaladesh we love you " என்று பாடி"  live concert "  இசை நிகழ்ச்சி செய்து வந்த காசு முழுவதையும் அந்த நாட்டு மக்களுக்கு கொடுத்தவர்! தான் இறந்தால் உடலை எரித்து அதில் ஒரு பகுதியை புனித கங்கை நதியில் வீசும்படி சொன்னவர்! ஜார்ஜ்சோட ஆன்மீக தேடல் வித்தியாசமானது,அப்படி இருந்தும் ,பைபிளையும்,ஜேசுநாதரையும் கிண்டல் அடித்து எடுக்கப்பட்ட  படமான "life of brian "எண்ட படத்தையும் அவர் தான் காசு  கொடுத்து  தயாரித்தார்!                                             

                                                             ஜார்ஜ் புற்று நோய் வந்த இறந்து அவரோட பூதவுடல் வைக்கப்படிருந்த அறையில் எந்த விளக்குகளுமே இல்லாமல், அந்த அறை மிகவும் பிரகாசமாக இருந்ததாக அவரோட மனைவி ஒலிவியா எழுதியுள்ளா!.இதைவிட வேற என்ன ஆத்மா விடுதலை வேண்டும் இந்தியாவை நேசித்த இதயத்துக்கு .
.

.

Sunday, 25 October 2015

மானம்பூ

.
உனக்கு 
மானம்பூத் திருவிழா 
வாழை வெட்டில் 
வீர ஆவேசமாக 
யாதுமாகி நின்றாய் காளி 
எங்கட
சனங்களுக்கோ
கொலு வைச்சுக் காத்திருந்த
சீருடைகள்
ஆயுத பூசையில்
சப்பாத்துக் கால்கள்
கல்வியா
செல்வமா
வீரமா
எண்டு ஆராய்ந்த
புலனாய்வுப் பார்வைகளின்
நவ ராத்திரிகளிருந்து
தப்பிக்க
ஓரமாக ஒதுங்கி நின்ற
நேரமே
மானம் போய்விட்டது !
.

Vasanthathil Orr Naal Acoustic Guitar Coverஞாயிறு விடுமுறை நாள் இசை விருந்து. இசைக்கருவியில் வாசிக்கக் கடினமானஇந்தப் பாடலை அகோஸ்டிக் கிட்டாரில் என்னோட ஸ்டைலில் வாசித்துள்ளேன்.சும்மா பொழுதுபோக்காக வாசித்துள்ளேன் , பிழைகள் இருந்தால் மன்னித் துக்கொள்ளுங்க. வசந்தகாலக் குயிலோசை பி. சுசிலா அம்மாவின் இளமைக்குரலில் " வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாள் " மறைந்தும் மறையாத மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் மறக்க முடியாத மெட்டு. எப்போதுமே உத்தரவாதமாக ஏக்கமான உணர்ச்சியை அடிச்சுப் பிழிந்து தரும் தர்பாரி கானடா இராகத்தில் கர்நாடக ஸ்டைலில் வேகமான ஸ்வரக் கோவையில் வரும் பிருகாக்கள் அதிகம் உள்ள பாடலின் இரண்டு இண்டர்லூட் இடைஇசையிலும் கல்யான உணர்வு கொடுக்கும் நாதஸ்வரம் தவில் இசையுடன் வெஸ்டர்ன் ரிதம் டெம்போவும் கலந்து பொன் வண்ணமாலை வைத்திருக்கும் ஸ்ரீராமனுக்காகக் காத்திருக்கும் வைதேகியின் திருமணம் அந்தப் படத்தில் வரும் மூன்று தெய்வங்களும் வாழ்த்த உள்ளம் கொள்ளை கொள்ளும்பாடல்


Tuesday, 20 October 2015

எனக்கொரு கனவு இருக்கு ,,

தோசைக்கல்லு LP  இசைத் தட்டுக்களின் காலம் ஒரு பொற்காலம் . அதில் வந்த இசை மனித உணர்வுகளின் மார்கழி மாத வாசல்க் கோலங்கள் . இரைச்சல் இல்லாத  இயற்கையான சங்கமம்.அவைகள்  ஒரு காலத்தின் அடையாளம் போல இப்பவும் பல பழைய சாமான்கள் விற்க்கும் கடைகளின் அலுமாரிகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கு. அதன் வரலாற்றுக் கவர்சிக்கும், கலைப் பெறுமதிக்கும் மதிப்புக் கொடுக்கும் மக்கள் தேடித் தேடி அதை வேண்டிச் சேர்ப்பதை பார்த்து இருக்கிறேன். 

                                                    யாழ்பாணத்தில " பஸ் ஸ்டாண்டில " 80களில் " நியூ விக்டேர்ஸ் " என்று  ஒரு " மூயுசிக் ரோகொரடிங் பார் " இருந்தது, அதன் வெளியே பல இங்கிலிஸ் பாலடகள் பதிந்து வந்த,   தோசைக்கல்லு சைசில இருந்த பிளாஸ்டிக் தட்டில  பல இசைதட்டுகளை வெளியே எல்லாருக்கும் தெரியிற மாதிரி வைத்திருந்தார்கள் !அதில ஒரு LP அல்பத்தின் கவரை " ஷோ கேசில் " வைத்திருக்க ,அதில இரண்டு வெள்ளைகார ஆண்களும்,இரண்டு வெள்ளைகார பெண்களும் அருகருகே ஒட்டிக்கொண்டு , கைகளைக் கட்டிக்கொண்டு நிண்டு, சிரித்துக்கொண்டு, ஒரு "ஒளி வெள்ளம் பாயும் "  வட்டத்தில் நின்று  போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

                                        அந்த இரு ஆண்களும் ஸ்டார் வார் படத்தில வார  "வேற்றுகிரக வாசிகள் " போல இறுக்கமாக உடை அணிந்துகொண்டு இருக்க, அந்த இரு பெண்களும் அதைவிட இறுக்கமாக உடைஅணிந்து, மார்புப் பகுதிய வஞ்சகம் இல்லாமல் தாராளமாக காட்டிக்கொண்டு இருக்க, அந்த இரு பெண்களும்  அணிந்திருந்த குட்டைப் பாவாடை அவர்கள்  குனிந்தால் எல்லாம் தெரியும்போல இருக்க, சொக்கநாதரே  சொக்கிப்பிவிடுவார்போல இருக்க , அவர்களை சும்மா விரலால சுண்டினாலே சரி கம ப த நி ச நாதம் பேசும்போல  அவர்களின் உடலமைப்பு வில்லா வளைஞ்சு நிக்க ,  இசை மீது இருந்த தீராத தாகத்தால் , அவர்களே  பாடினால் எப்படி இருக்கும் என்பதை அறிய அந்த" ரோகொரடிங் பார் " இக்குள்ள துணிந்து போய்

                                      "இந்த அல்பத்தின் கவரில் இருபவர்கள் யார்? "

                                                 எண்டு அங்கே தலையில "ஹெட் போனை" கொழுவி வேலை செய்தவரிடம் கேட்டேன் "

                                                 அவர் இவர்கள்தான் உலகப் புகழ் பெற்ற  ABBA என்ற  இசைக் கோஸ்டி " என்றார். அவரிடம்

                              " இசை என்றால் எனக்கு உசிர், இந்த அல்பத்தை கொஞ்சம் கிட்டத்தில பார்க்க தரமுடியுமா?"

                                               என்றேன், அவர் எடுத்து தந்தார்,தெரிந்த தற்குறி இங்கிலீசை வைச்சு நோண்ட அதில் அவர்கள் ஸ்வீடன் என்ற நாடில இருக்குறார்கள் எண்டு எழுதிக்கிடந்தது ,

                                                  " ஸ்வீடன் என்ற நாடு எங்க இருக்குது ?" அவரிடம் அவரிடம் கேட்டேன் , அவர் "ஹெட் போனை" கழட்டி,தலையை சொரிஞ்சுபோட்டு,

                                                 " ஐரோப்பாவில்  இருக்குது எண்டு நினைக்குறேன்  , அதுக்கு முதல் உமக்கு இப்ப என்ன வேணும்?"

                                                        எண்டு கோபமாகாக் கேட்டார் , நான் கோவிக்கவில்லை , நானே பிட்காலதில ஒரு புகழ் பெற்ற கிடாரிச்ச்டா வருவேன் எண்டு எனக்கே அப்போது தெரியாது , பிறகு அவர்க்கு எப்படி என்னோட அருமை தெரியப்போகுது எண்டு போட்டு !

                                              " இவர்களின் பாடல்கள் கேசட் வடிவில் உள்ளதா?"  எண்டு கேட்டேன் ?   அவர் ,அதுக்கு

                                                     "  இல்லை , LP  வடிவிலதான் உள்ளது" 

                                                 என்றார் , இதுக்குமேல கேட்டால் மூன்சியில அறை விழும் என்பதுபோல என்னை சுவாரசியம் இல்லாமல் பார்க்க , நான் படு சுவாரசியமகா அந்த இரு பெண்களையும் பார்த்துகொண்டு,   இனி அவரிடம் என்னத்தை கேட்கிறது எண்டுபோட்டு,

                                              " இதை கேசட்டில ரெகார்ட் பண்ணி தருவீர்களா ?" என்றேன், அவர்

                                    " பேந்தும்பார் , இந்தப் பெடி நேரம் காலம் தெரியாமல் முசுப்பாத்தி செய்யுறதை, ரேகொர்ட் செய்யத் தானே ரேகொர்டிங் பார் வச்சிருக்கிரம்,வேற என்னதுக்கு  தலைமயிர் வெட்டுரதுக்கே இதை வைச்சிருக்கிறம் "

                                   என்றார், அவரை பார்த்து நட்பாக  சிரிச்சுப்போட்டு , அந்த அல்பத்தை கடைசியா கொஞ்சம் முகத்துக்கு கிட்ட வைச்சுப் பார்த்தன்.

                                         இனி பொய் சொல்லி என்ன வரப்போகுது ,எல்லாத்தையும் இழுத்து மூடிக்கொண்டு இருக்கிற யாழ்ப்பாணக் கலாசார சூழலில் இருந்ததால் , கிட்டத்தில பார்க்க அந்த இரு பெண்களும் சொக்க தங்கம் போல இருக்க, அவர்களின்கண்களில் ஒருவித வசியம் இருந்தது, அப்பவே மனதளவில் அந்த நேரம் சபதம் எடுத்தேன், வளர்ந்து கலியாணம் கட்டினால் ,இப்படி ஒரு வெள்ளைக்கார .பொன்னிற கூந்தல் சடைச்ச சொப்பன சுந்தரியத் தான்  கட்டவேண்டும் எண்டு.  சொல்லி வைச்ச மாதிரி விதி ஆரைத்தான் விட்டு வைக்குது, நாசாமாப் போன அந்த யாழ்ப்பான சபதம் என்னோட வாழ்கையில் நடந்தது, அதுவும் ஸ்வீடனிலயே  நடந்தது!

                                                     அவர் அப்படி ரேகொட் பண்ணிதந்த அந்த கேசட்டை வீட்டில இருந்த ஒரு லொட்டு லொடக்கு "டேப் ரெகார்டரில் " போட்டுக் அடிக்கடி கேட்பேன், என்னோட அம்மாவே வியந்து பார்த்து ,

                                                    " இங்க பாரடா இவனை, இங்கிலிஸ் பாடத்துக்கு 26 மார்க்ஸ் இக்கு மேல ஒருநாளும் போகாத இவன், இங்கிலீசு பாட்டுக் கேட்கிறதை"

                                                                 எண்டு கிண்டல் அடிச்சா ! அவர்கள் பாடிய அந்த ஆங்கிலப் பாடல்களின் கருத்து விளங்கவில்லை,, ஆனால் அவர்கக்ளின் அந்த இசை அந்த  இரு பெண்களைப் போலக் கவர்சியாதான் இருந்தது !

                                            வீட்டுக்கு கொண்டுவந்த கெசட்டில்  இருந்த "DANCING QUEEN" பாடல் , அது தான் ABBA இன் முதல் பாடலாம் , இதை அவர்கள் ஐரோப்பா அளவில் நடக்கும்  EURO SONG பாட்டுப் போடியில் பாட, அது முதலாவதா வர, இதுதான் அவர்களை உலகம் அறியச் செய்தது, உலகை கலக்கிய ABBAஇன் பாடல்கள் டெக்னிகலா MUSICALLY GENIOUS வகையில் இல்லை,வெறும் POWER CHORDS ஐ வைத்து "மைல்ட் பொப் " மெலடிகள், அவர்களின் பெரும்பாலனா "Lyrics " பாடல்வரிகளும் " உன்னை நினைத்தன், காதல் வந்தது,கவிதை எழுதினன்,அதை பாட்டப்படிச்சன்" டைபில வெறும் மேம்போகானவை, ஆனால் அவர்களின் இசை அந்த வரிகளுக்கு உலகளவு உயிர் கொடுத்தது உண்மை!

                                                  ABBA வின், நான் ஜொள்ளுவிட்ட அந்த  இரு பெண்களும்,  இரு ஆண்களும் ," Take A Chance On Me " எண்டு மனம்  விரும்பி , அவர்களுக்குள்ளையே " Gimme! Gimme! Gimme! "  என்று  பாடி,  "DANCING QUEEN " என்று  ஆடி ,"  Honey Honey"  என்று  கட்டிப் பிடிசுக்  காதலர்கள் போல வாழ்ந்து , " I Do, I Do, I Do, I Do, I Do " எண்டு அடுத்தடுத்துப் பிள்ளைகள் பெற்று , கொஞ்சம் அலுத்துப் போக " Knowing Me Knowing You  " என்று சொலிப்  பின்னர் பிரிந்தார்கள், பிரிந்து அந்த காதலையும், காதலின் பிரிவையும் " " The Winner Takes It All  " என்று உருக்கமாக , ஆளை ஆள் மாறி மாறிப் பழியப்போட்டு , ஆற்றாமையில்   " The Day Before You Came  " எண்டு  பாடலாக பாடினார்கள்! அப்படி வேற எந்த ஒரு இசைக்குழுவும் செய்யவில்லை!

                             நான்கு இசைக்கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய இசைக்குழு, அதில் அக்னிதா என்ற பாடகி சின்ன வயசிலேயே தனிப் பாடகியா கொஞ்சம் புகழ்பெற்ற ஒருவர்  , பெனி என்ற கிட்டாரிஸ் , அக்கொர்டியன் வாசித்துக்கொண்டு இருந்த பிஜோர்ன் என்ற பின்நாட்களில்  பியானோ வாசிப்பவர் இவர்கள் மூவரும் சுவிடிஷ் இனத்தவர்கள்.சுவிடனில் பிறந்தவர்கள். அந்தக் குழுவில் இருந்த நாலாவது பெண் பாடகியான  பிரிடா நோர்வேயில்ஜெர்மன் நாசி இராணுவ அப்பாவுக்கும்,வட மத்திய  நோர்வே நாட்டு பெண்மணிக்கும்  பிறந்தவா.

                                                     மிகச் சிறிய வயசில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிடாவின் அப்பா ,மனைவியையும்,பிள்ளையையும் கைவிட்டுப்போட்டு மறுபடியம் ஜெர்மனிக்கு போக பிரிடாவை அவாவின் பாட்டி சுவிடன் கொண்டுவந்து வளர்த்த . தான்னோட முப்பது சொச்சம் வயசில் தான் தன்னோட ஜெர்மன் நாசி ராணுவ அப்பாவைக் கண்டு பிடித்தா பிரிடா. தற்போது பிரிடா ஜெர்மனியில் வசிக்கிறா. தன் அப்பாவழியில் ஒரு பிரபுக்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தவர்.பணக்காரி .

                                          உலகின் முக்கிய  நட்ச்சத்திரன்ங்களாய் ABBA ஜொலித்த போது  அவர்களின் இசைக் குழுவின்  LIVE நிகழ்ச்சி 1979: இல்  Wembley Arena London இல் நடந்தபோது இசை படிக்கும் பாடசாலை மாணவிகள் "  I Have A Dream  " என்ற பாடலை தாங்கள் மேடையில் படிக்கப்போவதாக கேட்க அவர்களுடன் சேர்ந்து மேடையில் பாடிப் படித்தார்கள். சுவுடிஷ் மக்கள் பந்தா போடமாட்டார்கள் ,அதைவிட குழந்தைகளை நேசிப்பவர்கள்.

                                     இன் இசை வெற்றிக்கு முக்கியமான் ஒரு  காரணம் அவர்களின் இசை ஒலிப்பது டெக்னிக். சுவிடன் அந்த நாட்களில் உலகின் முக்கிய டெக்னிகல் வளர்ச்சியுள்ள நாடாக இருந்தது.அதனால் அவர்கள் ஸ்டாக்ஹோலம் போலர் ஸ்டுடியோவில் மிகத் தரமான தெளிவான ஒலிப்பது மற்ற எல்லா இசைக்குழுக்களையும் விட முன்னோடி டெக்னிக்கில் கொஞ்சம் புதுமையாக செய்தார்கள்.

                                      இன் பாடல்களை அதிகம் எழுதியது ஸ்டிக் அன்டர்சன் என்ற பாடலாசிரியர். ஒரு சுவிடன் நாட்டவர்  சுவிடிஷ்   தாய் மொழியாகக் கொண்டவர் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதி அசத்தியது இன்னுமொரு ஆச்சரியம் . அதைவிட அவர்களின் ஆங்கில உச்சரிப்பு இங்கிலிஸ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் பாடல் கேட்கும் போது மூக்கில விரலை  வைச்சு ஜோசிக்க வைத்திருக்கு 

                                        என்பதுக்களின் இறுதியில் ABBA  மிகவும் அடக்கமான , பப்ளிசிட்டி விரும்பாத " I Have A Dream " எண்டு தன்கள் இசை வாழ்வை அடக்கமாகத் தொடங்கிய  அவர்கள் ,அவர்களின் இசைவாழ்வு முடிந்தபின், " thanks you for the music " எண்டு பாடிப்போட்டு, பொது மேடைகளில தோன்றுவதை பெரும்பாலும் தவித்தார்கள் ! இன்றைவரை ஸ்வீடன் எண்ட நாட்டை உலக அளவில் பிரபலம்  ஆக்கிய  பெருமை எனக்கும் ...கொஞ்சம் ABBA என்ற  இசை குழுவுக்கு இருக்கிறது!
.
.

Sunday, 18 October 2015

M.G.R

யாழ்பாணத்தில எங்களின் ஊரில M.G.R என்ற " மக்கள் திலகம் "என்ற ,இலங்கை  கண்டியில் பிறந்த, மருதர் கோபாலன் ராமச்சந்திரனுக்கு அதி தீவிர ரசிகர்களா இருந்தவர்கள், தொழிளால வர்க்க ,உடலால் கடுமையாக உழைப்பவர்கள். அவர்கள்ர்தான் M .N ,நம்பியாருக்கும் அதிதீவிர எதிரியாகவும் இருந்தார்கள் ! 

                                         தியடரில் M.G.R படம் வந்தால் அதை முதல் ஷோவில பார்க்க தியட்டர் வாசலில் முதல் நாளே போய் படுத்து இருந்து அடுத்தநாள் முதல் ஷோவில பார்த்து ஜென்மசாபல்யம் அடைவார்கள்! அவர்கள் வசிக்கும் குறுச்சியில் அவர்களின் இதய தெய்வத்துக்கு சிலை வைத்து அதுக்கு கீழே " பெண் மனச் செம்மல் " எண்டு அவரைப் பற்றி நன்றாக அறிந்ததாலோ , அல்லது தமிழ் மொழி தெரியாததாலோ பிழையாக தமிழில் எழுதி இருந்தார்கள்! 

                                    தமிழ் நாட்டில் ஒரிஜினல் M.G.R இறந்தபோது ,அவர் ஈழ விடுதலைக்கு ஆதரவா இருந்ததால்,யாழ்பாணத்தில அனுதாப அலை கொஞ்சம் "ஓவராக" அடித்தது !  இயக்க ஆதரவாளர்கள்  வாழை ,தோரணம் கட்ட,எங்கள் ஊர் M.G.R அதிதீவிர ரசிகர்கள் , பெரிய தென்னை மரத்தையே புடுங்கிக்கொண்டு வந்து சந்தியில் நட்டுப்போட்டு,சந்தியில் இருந்த பாரதியார் சிலையை தூக்கிப் போட்டு அதில அவர்களின் "இதயக் கனி " சிலையை வைக்கப் போவதாகப் பயமுறுத்தநிலைமை கொஞ்சம் மக்கள் திலகம் படங்களில் வரும்  வாள் சண்டை, குஸ்தி , கைகலப்பு , சீலடி சிலம்படி  போல நடக்கப் போகுதுபோல இருந்தது

                                   சவுகார் ஜானகி  வந்து காலில் விழுந்து,  கிளிசரின் வழிய அழுது ,குளறிக்  சண்டையை நிப்பாட்டிய மாதிரி  இல்லாமல் , அந்த நேரம் எங்கள் உரில இருந்த கவிஞ்சர் கந்தப்பு வெகுண்டு எழும்பி  "சினிமா நடிகனுக்கு சிலை வைக்கும் ,சிற்றுனர்வுள்ள சிற் எறும்புகளை......" எண்டு கவிதை எழுதி,"மகா கவி பாரதி சிலையில் கை வைத்தால் ,சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தடுப்பேன் " எண்டு பீதியக்கிளப்ப ,அந்தக் களேபரம் அதோட அமுங்கிவிட்டது!

                                உலகம் முழுவதும் தங்களின் அபிமான நடிகர் ,பாடகர் போல மானரிசம் பண்ணி வாழ்பவர்கள் நிறையப் பேர் இருக்குறார்கள் !  அவர்களின் நடை உடை பாவனை மற்றவர்களுக்கு கோமாளித்தனம் போல இருக்கும் .ஆனால் அவர்களுக்கு ஒருவித சந்தோசம் கிடைக்கும் , அல்லது அவர்களின் நிறைவேறாத கனவுகளுக்கு ஒரு வடிகால் அப்படிக் கிடைக்கும் என்கிறார்கள் சைகொலோயிட்டுகள்!

                                           எங்கள் ஊரில M.G.R எண்டு ஒருவர் வெள்ளையா, உசரமா ,வெள்ளடியான் சேவல் போல கையை விசிக்கி விசிக்கி நடப்பவர் இருந்தார். அவர் ஜப்னா முனிசிபால்டியில் குப்பை டக்டர் ஓடும் டிரைவர் ஆக வேலை செய்தாலும் , வேலை முடிய  M.G.R போலவே,தோளில சால்வைத் துண்டு, மழை பெய்யும் நேரம்களிலும் கறுப்புகண்ணாடி, பலூன் விக்றவன் போல ஒரு வெள்ளை தொப்பி போடுக்கொண்டு, அவரோட குரலையே மாற்றி கொடுப்புக்குள்ள M.G.R போலவே கொன்னையாகக் கதைப்பார், எப்ப யாரைப் பார்த்தாலும் "v " போல விரலைக் காட்டி "நாளை நமதே ,எந்த நாளும் நமதே " எண்டு சொல்லுவார்! அவரை பார்த்து சிரிபவர்களை " அங்கே சிரிபவர்கள் சிரிக்கட்டும் ,அது ஆணவச்சிரிப்பு எண்டு " கம்பிரமா சொல்லுவார்!

                                   ஒரிஜினல் M.G.R போலவே அவர் இருந்ததாலோ என்னவோ அவருக்கும் வீட்டில இரண்டு பெண்சாதி! அதுவும் அவர்கள் அக்காவையும் ,தங்கசியும் எண்டு வேற ஊருக்குள்ள பேசுவார்கள்! அவருக்கு M.G.ர  இக்கு  ஜெ..... ஜெயராம்  இருந்ததுபோல , ஒரு செட்டப்  இருந்தது எண்டு பெடிசம் பாலசிங்கம் என்ட எங்கள் ஊர் சிவாயியின் தீவிர ரசிகர் எப்படியோ கண்டுபிடித்து சொல்லிருகிறார் ! மற்றப்படி M.G.R பெண்களை நிமிர்ந்தும் பார்க்கமாட்டார், தாய்க்குலத்தின் மீது அவளவு மரியாதை அவருக்கு!

                                  அந்தக் காலத்தில்  கிராம வாசிகசாலைதான்  பல முற்போக்கு நிகழ்வுகளை ஒழுங்கு செய்வார்கள் , விடுதலை  இயக்கங்களின் தொடகப்பப்புள்ளியே  ஒரு காலத்தில அதுவாதான் இருந்தது  ! அதில சேர்ந்த நட்புவட்டத்தில் இருந்துதான் பலர் எல்லா இய்கதுக்கும் போனார்கள் , பலர் நாசமாணார்கள் ! பலர் வீராதி வீரன் ஆனார்கள் ! M.G.R எங்கள் ஊர் வாசிகசாலையில் TV ,டெக்,படக் கொப்பி வாடகைக்கு எடுத்து ,அதை ஒரு விழாவாக்கி,அதுக்கு அவரே தலைமைதாங்கி , M.G.R படம் போடுவார் .

                              படம் தொடங்கமுதல் அவர் M.G.R படம் ஏன் எல்லாரும் பார்க்கவேண்டும் எண்டு, "இறுதியாக ஒண்டு மட்டும் சொல்ல விரும்புகிறேன்" எண்டு பத்துத் தரம்,சொன்ன ஒரே விசியத்தையே பத்துத் தரம் சொல்லி தலைமை உரையாற்றுவார் . "எங்க வீடுப் பிள்ளை "  படம் போட்ட ஒரு முறை, அவர் இரண்டு மைக் கையில பிடித்து இரண்டிலையும் மாறி மாறிக் குரலை மாற்றி M.G.R போலவே உரை ஆற்றினார் ,ஆச்சரியமாகி ,மேடைக்கு அருகில் போய் அவர் பேசிமுடிந்து மேடையைவிட்டு இறங்கிவர 

                                 " ஏன் இரண்டு மைக் கையில பிடித்து இரண்டிலையும் மாறி மாறிக் குரலை மாற்றி பேசினீர்கள் ?" எண்டு கேட்டேன் ,அதுக்கு அவர் 

                     " எங்க வீடுப் பிள்ளை படத்தில நம்ம தலைவர் " டபுள் அக்டிங் " எல்லா நடிக்குறார் ர்,அதாலதான் இரண்டு மைக் , இரண்டு குரல் " 

                             எண்டு சொல்லி "v " போல விரலைக் காட்டி "நாளை நமதே ,எந்த நாளும் நமதே " எண்டு சொலிப்போட்டு, 

                          " நீ போய் முதலில படத்தைப் பார் , வீட்டில இப்ப ரெண்டுபேரும் சண்டை , நெருப்பு எடுப்பாளுகள் ஒருத்திக்கு ஒருத்தி , இப்ப நான் போய் கெஞ்சி மண்டாடி  விலக்கி விடாட்டி , வீடு ரெண்டாப் பிரிஞ்சிடும்  " 

                               எண்டு போட்டு தோளில போடிருந்த சால்வையால தலைய மூடிக்கொண்டு ,வாசிகசாலை பின்பக்க வாய்கால்லுக்கால விழுந்து எழும்மி அந்த M.G.R போறதை நான் மட்டும்தான் பார்த்தேன்!
.