Tuesday, 24 July 2018

மணல்க் கரையின் நினைவில்..

ஒரு  சிறந்த கவிதை தலைவாழை இலையில் போட்ட  கல்யாணச்சாப்பாடுபோல அமர்களமா இருக்குமாம் .  ஒரு நல்ல கவிதை பிரபல பத்திரிகையின் பரபரப்புத் தலைப்புச்செய்தியைவிட சுவாரசியமாய் இருக்குமாம். வார்த்தைச் சிக்கலில் சுழன்றுகொண்டிருக்கும் சுமாரான கவிதை அரைச்சுவிட்ட தஞ்சாவூர் சாம்பாரு போல இருக்குமாம்,                                                       உப்பில்லாத ரசம்  போல இருக்குமாம் எங்கே செல்கிறது ,என்ன சொல்லவருகிறது என்று விளங்கமுடியாத  திசை இழந்த கவிதை ,  பச்சைத்தண்ணி  போல   அதுக்கும் கீழே இருக்குமாம்  உரைநடைபோல உள்ள  வார்த்தைகளை ஒன்றின் கீழ் ஒன்று  வெட்டி ஒட்டி எழுதப்படும் வாலறுந்த கவிதைகள் என்று மூக்குச்சாத்திரம் பார்த்துச் சொன்னார் ஒரு இலக்கிய ஜாம்பவான்.

                                                                     
                                              எனக்கு அவர் சொன்னதில் உடன்பாடு இருக்கு. காரணம் ஒரு நல்ல கவிதை என்பது வாசிப்பவரின் கலாரசனை, வாசிப்பு அனுபவம், செய்திகளைப் புரிதல் , மொழியை இன்னொரு கோணத்தில் மொழிபெயர்த்தல் , உணர்வுகளை ஒற்றி எடுத்தல் ,படிமங்களைப் பிரித்தறிதல் போன்றவற்றில் தங்கி இருக்கு. எனவேதான் கவிதையையின் தரத்தை அளக்க மூக்குச்சாத்திரத்தைத் தவிர வேறெந்த முறைகளும் கவிதைக்கு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
                                                                  
                                                                   கவிதைக்கு  ஒவ்வொரு தருணமும் மாற்றீட்டு  உள்ளீட்டு வடிவங்களில்  புதுப்பிக்கப்படும் கவிதைமொழி அவசியம். பொஞ்சாதியின் பாவாடையை திருப்பித் திருப்பி அடிச்சு பிழிஞ்சு அடிச்சுப் பிழிஞ்சு தோய்ப்பது போலவே ஒரே வார்த்தைகளை வைச்சுக் கொத்து பரோட்டா பிரட்டிப் பிரட்டிப் போட்ட மாதிரி ஒரு சில விசியங்களை மட்டுமே எழுதிக்கொண்டு இருந்தால் அது எடுபடாது.


                                                 
                                                                      நமக்கென்று நமக்கென்று  விதிக்கப்பட்ட வாழ்க்கை எல்லாருடையதும் போல இல்லை. அதில உள்ள முரண்பாடுகள்தான் ஒரு பொழுது  கலகமாக இருந்தாலும் சில சமயங்களில் கலகலப்பான  சுவாரசியங்களும் நிறைந்திருக்கும். அப்படியான  காலகட்டத்தில்  கலவரமாக மனது அல்லாடியபோது எழுதியவைகள் இவைகள் !*


நேற்றும் சரி,
ஒரு 
பெரிய சுமை ஏற்றினால்போல 
இன்றும் சரி மனசு சரியில்லை,
அடிக்கடி 
பெரும் எடுப்பில்
வந்துபோகிற
பழைய உபாதைதான் !
ஒரு
விசாரிப்பு,
ஒருசில அக்கறை,
ஒன்றுக்கும் மேற்பட்ட
புன்னகைகள்,
கிடைக்காமலாபோகப்போகிறது
என்றும் தோன்றிய நேரம்தான்
எதிரே இருக்கும்
மட்டுப்படுத்த முடியாது
ஆயுளின் நீளம்
பயமுறுத்தியபடியிருக்கிறது !.*

சிலருக்கு
உறவுச் சிக்கல்கள் ,
கதைக்க வேண்டியதைக்
காற்றோடு தள்ளிவிடும் 

தாம்பத்தியங்கள் ,
காதுகளைப்
பொத்திக்கொள்ளாத குறையாக
சிலருக்கு
வாழ்க்கையே பிரச்சினை,
அபாண்டங்களை
அள்ளி வீசத்தொடங்கினாலும்
ஒன்றும் வராதென்ற
ஒப்பீட்டில்
என் பிரச்சினைகளில்
எதுவுமேயில்லை !*

சொல்லுங்க
மறதி இப்படியா ஆட்டும்?
பாதிக் குளிர்நாட்கள்
நடுச்சாம இரவில்,
பகலின் சப்தம்போலத்தோன்ற 

இதயத்துடிப்பை அடக்கிக்
கீழிறங்கிப் போய் .
விளக்கைப் போட்டால்
வெளியே
மொழுக்கென்று
வெளிச்சமிருக்கும் !
ஜன்னல்களைத் திறக்க
தனியாகத் தூங்குகிற
இருட்டு விழித்திருக்கும் !
அதிகாலையில்
கிழக்குப்பக்கம்
மேற்க்குப்புறமாக மாறியிருக்கும் !*

மனதுக்குள்ளிருந்து
சின்ன வயதும்
பதின் வருடங்களும்
உந்தி வெளித்தள்ளுகிறது,
ஒவ்வொரு 

தனித்த பகலிரவின்
அசைவுகளும் நினைவிருக்கு,
எப்படியெல்லம்
ஜோசிக்கத் தோன்றுகிறதோ
அப்படியெல்லாம்
எழுத்து அழைப்புக்கள்
பிடிகொடுத்துப் பற்றிவிடுகின்றன,
பிறகெப்படி
சமீபத்திய நடப்புகளின்
நிறப்பூச்சுக்களில்
கவனமில்லாமல் போனது ?*

பார்த்துக்கொண்டிருந்த
பொழுதொன்றில்
இது நடந்தது,
அரிசி மாவால்
சுழிச்சுச் சுழியுருவாக்கி 

இழைத்து இழுத்துப்போட்ட
கோலம் போலவேயிருந்தது ,
சமீபத்தில் இறங்கியது
தூறல்த் துளிமழை,
சப்பாத்துக்கள்
மேலேறி நடந்தன
பேருந்துகள்
உராய்வுகளில் அமுங்கின,
முற்றாக்கச்
செயலற்றுப்போனது
உறைபனி !*

நெடுநேரம்
இலக்கின்றி ஏதேதோ
அலையடித்துக்
கற்பனைகள் செய்துவிட்டு
எப்போதோகேட்ட 

பாய்மரப் பாடலில்த்
திசை திரும்பும்போது
கோபமாக நுரைத்து எழுந்து
மூழ்கிக் குளித்து
ஏதோவொரு
மணல்க் கரையின்
நினைவில்
விழித்துக் கொண்டது
பகல்க்கனவு !*உடம்பில்த்
தூக்கப் பதட்டம்,
அடிவயிற்றிலிருந்து
ஏதோவெல்லாம் எழுகிறதுபோல
வாணவேடிக்கை ரகளை, 

ஒவ்வாமைக்கு
நேரம் சரியில்லை ,
வாந்தி எடுத்தால்
சரியாகலாம் போலிருந்தது,
பலசமயம்
சொன்னபடி உதவியிருக்கு !
இன்றைக்கோ
வெறும் முயற்சிதான்
ஒன்றுமே
வெளியேவரவில்லை !*

இரவுகள் .
போர்த்தியபடி வியர்க்கிறது,
பிறருக்குக்
ஆறாத காயங்களில்
வலி ஏற்படுத்துமோவென்ற 

ஈரமான அச்சங்கள்
என்
வார்த்தைகளில் இல்லை !
பிறகெதற்கு
முன்னெப்போதையும் விட
அதிக நெருடல்களோடு
எப்போதும்
பின்னிரவின் நிலவுபோல
மறைந்துகொண்டிருக்கிறேன் ?*

நடந்துமுடிக்கவேண்டிய
பயணத்தூரங்கள்
நிறையவேயிருக்கு ,
இந்தப்
பாலத்திலிருந்து 

துவங்கியிருந்து
இடப்பக்கமாகப் பார்க்க
ஒரு வளைகோடு
காற்றில் உலவுகிற மாதிரியிருக்கும்,
கீழிறங்கிப்போய்
வலப்பக்கம் நோக்க
குத்துக்கருங்கல்லில்
கைப்பிடியளவுள்ள சுவர்
உயிரோடிருப்பது போலிருக்கும் !*

அவள்
முன்னறையில்
உட்காரச் சொன்னபோது
குஷன் சோபாவில்
குவித்துவைக்கப்பட்டிருந்த 

புத்தகங்கள்
இடைச்சலாக இருந்தது,
ஒரு மேசை
ரெண்டு கதிரைகள்
மூன்றையும் நிராகரித்தேன்,
அவளே
எதேச்சையாகத் திரும்பி
நெருக்கமாகவிருந்த
கட்டிலைக் காட்டினாள்
இடம்மாற்றிக்கொண்டிருந்த
கால்களால்
அதற்குமேல் நிக்கவேமுடியவில்லை !*

மனதென்ன
சொன்னபடியா கேட்கிறது?
இல்லையே
பிய்த்து ஓடுகிறது.!
வெய்யிலில் 

உறைபனியைப்போல
சங்கடமாக
விழுந்துகொண்டிருக்கும்
காலை முகத்தைத்
தூக்கி வைத்துக்கொண்டு
இனி
எப்படிப் பேசுவதென்றும்
யோசித்தபடியிருக்கிறேன் !*

ஒரு
அமானுஷ்யமான
கட்டத்தை நெருங்கியபோது
முகம் சுளிக்காமல்
பின்வாங்குதல் 

தந்து சென்ற அனுபவம்,
ஞாபங்கங்களின்
இடைவெளிகளை
நிரப்ப விரும்பாமல்
தீவிரமாக ஆலோசிக்கும்
பாவனையில்
விளிம்பில்ப்போய் நிக்கின்றன
பட்டறிந்து தெளிந்த
பாடங்கள் !