Tuesday 5 May 2015

வாழ்க்கைப் பயணம்..

ஒரு நாட்டைப் பற்றி புத்தகத்தில் படிப்பது என்பது வேற அந்த நாட்டை சுற்றிப் பார்ப்பது என்பது வேறு,இரண்டும் வேறு வேறு அனுபவங்கள். முக்கியமா ஒரு நேரடிப் பயணத்தில் ரியலிடியில் பார்க்கும் அனுபவம் அலாதியானது,அதை விட ஒவ்வொரு நகரத்திற்கும் பிரத்தியேக வாசம் இருக்கு அதை சுவாசிக்க முடியும், கலாசாரம் வழியும் பழைய இடங்களில் ஒரு வித பூமி சக்தியை உணர முடியும் ,

                                   இப்படி இருந்தாலும் பிரச்சினை ஒரு நாட்டை எப்படி சுற்றிப் பார்ப்பது என்பதுதான், தனியாக வாழ்பவர்கள், என்னைப்போல தோளில ஒரு ட்ரவல் பையைக் கொழுவிக்கொண்டு,கையில லோன்லி பிளானெட் ட்ரவல் கைடு புத்தகத்தை வைசுக்கொண்டு கிறிஸ்தோபர் கொலம்பஸ் போல வெளிகிடலாம்,
                                           சில வருடம் முன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோன,மட்ரிட்,சென் செபஸ்தியான் நகரங்களை ஒரு கிழமை கிடந்தது சுற்றினேன்,அங்கிருந்தே அந்த நகரங்களைப் பற்றி இங்கே சுட சுட ,சில நேரம் சூடு ஆறமுதல் எழுதினேன். அதை அண்மையில் நானே படித்த போது மறுபடியும் அங்கே நிற்பது போல இருந்தது, 

                                       சில இடங்களின் வாசமும்,சில பெண்களின் வாசமும் நினைவு வர, பார்சிலோன நகர தெருவோர ரூம்பா காதலான இசை காதுக்க கிடுகிடுத்தது. பிரயாண அனுபவங்கள் எப்பவுமே அப்படித்தான், நினைவுகளின் இடப்பெயர்வு தான் பயணம், மறந்து போன ஒரு வாழ்வின் தொடர்ச்சி பயணங்களில் நிறைவு பெறலாம் போல இருக்கு,ஆனாலும் எல்லாருக்கும் இப்படி உலகம் சுற்றிப் பார்க்க வாய்ப்பு,வசதி இல்லை என்பதை நினைக்கும் போது கவலையாவும் இருக்கு .

                                       குடும்பமா குழந்தை குட்டிகளுடன் போறவர்கள் அதிகம் வெளிய கவனிக்க நேரம் கிடைப்பதில்லை. பிரான்சில் வசிக்கும்,யாழ்பாணம் கம்பசிஸ் ஜோக்கிரபி படித்த ஒரு என்னுடைய உறவினப் பெண் ஒருவர் அண்மையில் கனடாவில் உள்ள ற்றொண்டோ நகரம்  போய் வந்தா எண்டு சொன்னா, நானும் கனடா போனதில்லை,ஆனால் அந்த நாட்டில் என்ன என்ன கண்னுக்க நிக்கிற மாதிரி இருக்கு என்று புத்தகங்களில் படித்தும், படங்களில் பார்த்தும் இருக்கிறேன் 
                    
                                 " ற்றோண்டோவில் என்ன பார்த்திங்க " எண்டு கேட்டேன்,

                      " சும்மா ஒண்டாரியோ  மாகானத்தில பல இடங்கள் பார்த்தேன், பிள்ளைகளை ஒவ்வொண்டும் ஒவ்வொரு பக்கம் இழுக்க , எண்ட மனுஷனுக்கு காரில எப்பவும் நோகாமல்  ஓடி ஓடி நடக்கப் பஞ்சியாம் எண்டு சொல்ல,கடைசீல  ஒண்டையும் பார்க்க விடவில்லை " எண்டு சொன்னா,

                        நான் " றோண்டோவின் லேன்ட் மார்க் ஆனா C N N கோபுரம் பார்த்திங்களா " எண்டு கேட்டேன்,

                    அவா " அவடத்தை போனோம் ,நிமிர்ந்து பார்க்க சரியா நேரம் கெடைகேல்லேயே " எண்டு சொன்னா,
                     லேக் ஒண்டாரியோவின் தண்ணி விழும்  நயாகரா வீழ்ச்சி பார்த்திங்களா எண்டு கேட்க வாய் எடுத்து, நயாகரா போய்க் குனிச்சு பார்க்க நேரம் கிடைக்கவில்லை எண்டு சொல்லுவாவோ எண்டு பயத்தில நான் கேட்கலை. 
                             அந்த உரையாடலின் முடிவில் அவா போன உறவினர் வீடுகளில் என்ன கார் வைதிருக்கிரார்கள்,என்ன அளவு பிளாஸ்மா டிவி,எவளவு பெரிய வீடு,அதில உள்ள அறைகள் எண்ணிக்கை போன்ற தமிழ் கலாசாரா அடையாளமான விடுப்பு விண்ணாணம் அறிவதில் ஒரு குறை வைக்காமல் விபரம் சொன்னா.
                                    இதில ஆகப் பெரிய காமடி ஐரோப்பாவில் வசிக்கும் பல தமிழருக்கு ஐரோப்பிய நாடுகளே உலகப் படத்தில எங்கே இருக்கு எண்டு தெரியாது,இங்கிலாந்தில் இருந்து கொண்டு கடவுளின் தேசம் என்று ஒரு வெப் ப்ளாக் வைச்சு எழுதும் பிட்டி கிட்டி என்ற ஒரு பள்ளிக்கால தோழன்,சில வருடம் முன் நான் சுவிடனில் வசித்ததாக் கேள்விப்பட்டு,
          
                          " நீ வசிக்கும் சுவிஸ் பேங்க் உள்ள சுவீடனும், நோபல் பரிசு கொடுக்கும் சுவிச்லாந்தும் வேற வேற நாடுகள் எண்டு அண்மையில்தான் தெரியும் " எண்டு சொன்னான், 

                           நான் பதில் ஒண்டும் சொல்லி அவன் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை,பரிசில் வசிக்கும் சகோதரிக்கு பிரான்ஸ் எங்க இருக்கு எண்டு தெரியாத பிரான்சை சுற்றி உள்ள நாடுகளின் பெயரே தெரியாது,ஆனலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அவர்கள் காரில GPS நேவிகேசன் பொருத்தி ஓடி ,சாமத்திய வீடு,கலியாண வீட்டுக்கு அடிக்கடி போவார்கள், சாமத்திய வீடு,கலியான வீடுகளில் பார்த்த விசியங்கள்,நிறை,குறை.பெறுமதி,மினுக்கம்,விசியங்கள் நல்ல தெளிவா தெரியும்.
                              
                          சுவீடனில் என்னோட நண்பர் தலையிடி எண்டு ஒருவர் இருந்தார் ,அவருக்கு  வரைபடத்தில்  கண்டு பிடிக்க கடினமான ,நெருக்கமான, வாயில நுழையாத பெயர் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்,தலை நகரம், அந்த நாடுகளின் அருகில் உள்ள நாடுகள் , எல்லைகள்,எல்லைகளில் உள்ள சிறு சிறு நகரங்கள் , ஏற் போர்ட் பெயர், அங்கே பேசப்படும் மொழி, பாவனையில் உள்ள காசின் பெயர் எல்லாம் தலைகாரணமா தெரியும்,அதுக்காக அவர் யுனிவெர்சிட்டி இல ஜோக்கிரபியில மாஸ்டர் டிகிரி முடித்தவர் எண்டு நீங்க நண்பினா நான் பொறுப்பில்லை,அவர் என்ன கடத்தல் செய்திருப்பார் எண்டு பலருக்கு தெரியும்.

                                 பத்திரிகைத் தொழில் ரீதியாக பிரயாணம் செய்து நாடுகளை சுற்றிப் பார்த்து எழுதுவதை " ரவல் ஜெர்னலிஸ்ட் " எண்டு சொல்லுறார்கள்,சிலர் படம் எடுத்து போட்டு கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள் அவர்களை " ரவல் போட்டோ ஜெர்னலிஸ்ட் " எண்டு சொல்லுறார்கள், சாதாரண ஆர்வக்கோளாரில் வெளிக்கிடும் என்னைபோல ஊர் சுற்றிகளுக்கு முன்னப் பின்ன தெரியாத ஒரு நாட்டில், அந்த நாட்டின் உள்ளூர் மொழி புரியாமல் சுற்றிப் பார்ப்பது எப்பவுமே, முன்னப் பின்ன தெரியாத ஒரு இளம் பெண்ணை இரவின் அமைதியில் நேருக்கு நேர் பார்ப்பது கொடுக்கும் த்ரில் போல இருக்கும்,நல்லதும் கெட்டதுமா சில விசியங்கள் நடந்தாலும் அதுவும் அந்த பயணத்தின் மறக்க முடியாத ஒரு அங்கமாக வரலாம்.

                                   நான் ஸ்பெயின் போய் சுற்றிய போது அந்த நகரங்களின் படங்கள் உள்ள நிறைய பிக்சர் போஸ்ட் கார்ட் அந்த அந்த நகரங்களில் இருந்து வேண்டி,ஆங்கிலத்தில் கொஞ்சம் காமடியா எழுதி என் சகோதரியின் பிள்ளைகளுக்கு அனுப்பி இருந்தேன்,அதைப் பார்த்த அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தார்களோ தெரியாது, ஒருவேளை பெரிய உலகம் சுற்றும் அறிவுக் கொழுந்து எண்டு அறிந்து இருப்பார்கள் எண்டு அதைப் பற்றி அறிய அவர்களிடம் 

                         " அந்தப் படங்கள் எப்படி இருந்தது ,உங்க அம்மா என்னைப்பற்றி என்ன சொன்ணா " எண்டு ஒரு முறை கேட்டேன், 
                   
                     அதுக்கு அவர்கள் " படங்கள் சூப்பர் அங்கிள் , நாங்கள் நிறைய மேடிடேர்நியன் நாடுகளின் சிட்டி பற்றி உங்களின் ஆங்கிலக் குறிப்புகளில் இருந்து தெரிந்து கொண்டோம், அப்புறம் ,,உங்களைப் பற்றி  அம்மாவிடம் கேட்க ,அவா  சொன்னா சும்மா,வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுத்துரவனைப் பற்றி தெரிந்து என்ன வரப்போகுது எண்டு சொன்னா அங்கிள் "

                                    என்றார்கள் பிரெஞ்சு மொழி நாக்கில பிரளும் தமிழ் மொழியில் அந்தப் பிள்ளைகள் .
..............................................இதுதான் வாழ்க்கைப் பயணம்..

.

பாட்டி வைத்தியம்.

" வாழ்கையே சிக்கலாகவும் எது செய்யவும் வெறுப்பாகவும், விரும்பிற மாதிரி எதுவுமே நடக்காததால் அலுப்பாகவும், மிக மிக சிக்கலாகவும் இருக்கிறது " என்று ஒரு அன்பர் உணர்ச்சிப் பிளம்பாகிப் பதிவு போட்டு இருந்தார், அவர் அது என்ன சிக்கல் என்று சொல்லவில்லை. இங்கே பேஸ் புக்கில் உள்ளவர்கள் எல்லாருமே சிக்கல் பிக்கல் பிடுங்கல் சோலி சுரட்டு எதுவுமே இல்லாமல் நின்மதியா இருப்பது போலவும் தான் மட்டும் சிக்கலில் அவதிப்படுவது போலவும் போட்டிருந்தார்.
அதுக்கு முதல் கருத்து பதிவிட்ட இன்னுமொரு அன்பர்,
" நான் நினைக்கிறன் உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கு போல " என்று போட, அந்தப் பதிவு போட்டவர்
" அதெப்படி அவளவு கரெக்டாக் கண்டு பிடித்தீங்கள் " என்று பதில்க் கொமென்ட் போட, அதுக்கு அந்த அன்பர்,
" நீங்க வெறுத்துப்போய் எழுதிய விதத்திலையே எனக்கு விளங்கியது நீங்கள் எவளவு கஷ்டப்பட்டு எழுதி இருப்பிங்க என்று அதை வைத்து மலச்சிக்கல் இருக்கு என்று கண்டு பிடித்தேன் "
என்று எழுதி பாட்டி வைத்தியம். சொல்லுறேன் பேர்வழி போல ,
" மலச்சிக்கலுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம்பழத்துடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு சிறிய இஞ்சித் துண்டை நறுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் விளாம்பழத்தையும் கலந்து வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அந்தச் சிக்கலுக்கு நல்ல பயன் பெறலாம் " என்று நாட்டு வைத்தியர் அளவுக்கு அட்வைஸ் எழுதி இருந்தார்.
ஏன்பா தெரியாமத்தான் கேட்கிறேன், வருத்தம் துன்பம் வந்தால் அதுக்கு அதுக்கு என்று படித்துள்ள டாக்டரிடம் போகாமல், இப்படி குய்யோ முறையோ என்று அதை இங்கே போஸ்டிங் ஆகப் போட ,அதை வாசிக்கிற அரைகுறை அறிவுக் கொழுந்துகள் சொல்லும் அட்வைசை நம்பினால்,கடைசியில் பைத்தியம் பிடித்து வைத்தியம் அதுக்கும் இல்லாமல்ப் போய் கடைசீல இங்கேயே உங்க மரண அறிவித்தல் போட்டு அதுக்கு கண்ணீர் அஞ்சலிக் கவிதையே எழுதவேண்டி வரும்பா.
...... என்ன சீவியமடா இது.
.