Tuesday 5 May 2015

பாட்டி வைத்தியம்.

" வாழ்கையே சிக்கலாகவும் எது செய்யவும் வெறுப்பாகவும், விரும்பிற மாதிரி எதுவுமே நடக்காததால் அலுப்பாகவும், மிக மிக சிக்கலாகவும் இருக்கிறது " என்று ஒரு அன்பர் உணர்ச்சிப் பிளம்பாகிப் பதிவு போட்டு இருந்தார், அவர் அது என்ன சிக்கல் என்று சொல்லவில்லை. இங்கே பேஸ் புக்கில் உள்ளவர்கள் எல்லாருமே சிக்கல் பிக்கல் பிடுங்கல் சோலி சுரட்டு எதுவுமே இல்லாமல் நின்மதியா இருப்பது போலவும் தான் மட்டும் சிக்கலில் அவதிப்படுவது போலவும் போட்டிருந்தார்.
அதுக்கு முதல் கருத்து பதிவிட்ட இன்னுமொரு அன்பர்,
" நான் நினைக்கிறன் உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கு போல " என்று போட, அந்தப் பதிவு போட்டவர்
" அதெப்படி அவளவு கரெக்டாக் கண்டு பிடித்தீங்கள் " என்று பதில்க் கொமென்ட் போட, அதுக்கு அந்த அன்பர்,
" நீங்க வெறுத்துப்போய் எழுதிய விதத்திலையே எனக்கு விளங்கியது நீங்கள் எவளவு கஷ்டப்பட்டு எழுதி இருப்பிங்க என்று அதை வைத்து மலச்சிக்கல் இருக்கு என்று கண்டு பிடித்தேன் "
என்று எழுதி பாட்டி வைத்தியம். சொல்லுறேன் பேர்வழி போல ,
" மலச்சிக்கலுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம்பழத்துடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு சிறிய இஞ்சித் துண்டை நறுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் விளாம்பழத்தையும் கலந்து வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அந்தச் சிக்கலுக்கு நல்ல பயன் பெறலாம் " என்று நாட்டு வைத்தியர் அளவுக்கு அட்வைஸ் எழுதி இருந்தார்.
ஏன்பா தெரியாமத்தான் கேட்கிறேன், வருத்தம் துன்பம் வந்தால் அதுக்கு அதுக்கு என்று படித்துள்ள டாக்டரிடம் போகாமல், இப்படி குய்யோ முறையோ என்று அதை இங்கே போஸ்டிங் ஆகப் போட ,அதை வாசிக்கிற அரைகுறை அறிவுக் கொழுந்துகள் சொல்லும் அட்வைசை நம்பினால்,கடைசியில் பைத்தியம் பிடித்து வைத்தியம் அதுக்கும் இல்லாமல்ப் போய் கடைசீல இங்கேயே உங்க மரண அறிவித்தல் போட்டு அதுக்கு கண்ணீர் அஞ்சலிக் கவிதையே எழுதவேண்டி வரும்பா.
...... என்ன சீவியமடா இது.
.

No comments :

Post a Comment