Thursday 13 April 2017

என்ன சீவியமடா இது /இரண்டாம் பாகம் /

முகநூலில் இருக்கும் பெண் நட்புகள் எல்லாம் மிகவும் அறிவாளிகள் எண்டு பலமுறை நிருபித்துக்கொண்டே இருந்த போதும், நான் நம்புங்கள் நாராயணன் மேல சத்தியமா நம்புறதில்லை. சில நாட்கள் முன் நாடு விட்டு நாடு போய் ஒரு ஆஸ்பத்திரியில் " யாக்ஞ வல்க்யக்ருதம் வாணீ தோத்ரம் ஏதத்துய:..." என்ற யமனோடு கை குலுக்கும் போது சொல்லும் யமாஷ்டகம் மந்திரத்தை சொல்லிக்கொண்டு கவுண்டு கிடந்தேன் .
                                               
                                          அவங்கள் "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" போல உடம்பை பேக்கரியில பாணுக்கு மா மேசையில போட்டு குழைக்கிற மாதிரி உருட்டிப் பிரட்டி, நிறைய ஊசிகள் நோகாமல்க் குத்தி ,ஒரு இருட்டு அலாவுதீன் குகைபோலக் குழாய் ஒன்றுக்கால தள்ளி ,மற்றப் பக்கத்தால வெளிய இழுத்து எடுத்து ,பெரிய டாக்குத்தர் ஐயா வந்து செக் பண்ணி எனக்கு

                                      
                                     " ஆத்தி ரோசி கிலோ ரிஸ் பரிசோதனையில் கொலஸ்ட்ரோல் என்ற கொழுப்பு இருக்கு ,நீ ஆத்தி ரோசி கிலோ ரிஸ் பிரச்சினையை இப்ப சந்தித்து ஆக வேண்டிய கட்டத்தில் நிக்குறாய் "
                               
                                                  எண்டு நிறைய பேப்பர்களை மேலோட்டமாய் பார்த்து வாசித்துப்போட்டு ,ரிப்போடில் கண்டு பிடித்து சொன்னார் ,
                                      
                                                                                 எனக்கு குழப்பமா இருந்து எனக்கு ஆத்தி, ரோசி என்ற பெண்களையே தெரியாது ,அவர்களை இன்னும் நான் சந்திக்கவே இல்லை,அதுக்கு நான் இவளவு காலமும் கொடுத்து வைக்கமுவில்லை,அவளுகளை இந்தக் கடைசிக் கட்டத்தில் சந்திக்க வேண்டும் எண்டு இந்தாள் சில்லெடுப்பு போல சொல்லுறாரே ,அதுக்குபிறகு அவளுகளைச் சந்திக்க கிலோக் கணக்கில ரிஸ்க் ,எடுக்க வேண்டும் எண்டு வேற சொல்லுறாரே எண்டு ஜோசித்தேன்,ஆனாலும் நான் ஆச்சரியப்படாமல் ,

                                  " அப்படியா இதை முதலே பலர் சொன்னார்கள் ".. என்றேன்,அவர்
                                              
                                        " யார் சொன்னார்கள், முதலும் ஆத்திரோசிகிலோரிஸ்செக் பண்ணினியா "

                                   எண்டு எனக்கு மேல போக விசா ரெடி போலக் கேட்டார் ,,

                                         " அய்யா எனக்கு ஆத்தியையும் தெரியாது ,ரோசியையும் தெரியாது, இவளுகளை நம்பி கிலோக் கணக்கில ரிஸ்க் எடுக்கவும் தெரியாது. "


                        " அப்படியா நீ என்னப்பா  சொல்லுறாய்,,ஒன்றும் விளங்கவில்லை எனக்கு "


                                    "  நீங்க சொல்லுறது இல்லை அய்யா எனக்கு வேற குழப்பம் , "


                                      "நீ என்னப்பா  சொல்லுறாய்"


                                     " பல வருடமா என்னோட பேஸ் புக்கில் இருக்கும் என் மீது மிகவும் நட்புள்ள பெண் நட்புக்கள் எப்பவுமே , உனக்கு கொழுப்பு அதிகம் ,,கொழுப்பு அதிகம் எண்டு சொல்லுவார்கள்,,"


                 " நான் அதை நம்பவில்லை,,நீ என்னப்பா  சொல்லுறாய்"


                                                 "   இவளவு படிச்ச நீங்க இப்ப கண்டுபிடிச்சிகிறதை அதுகள் அப்பவே கண்டு பிடிச்சிட்டுதுகள் அதால ஆச்சரியப்பட இதில ஒண்டுமே இல்லை "


                                                எண்டு சொன்னேன்.

                                                    அவர் என்னைப் பார்த்த பார்வை " விணப்பம் தெரியாதவன் பெண்டில் விளக்கைப் பிடிசுக் கொண்டு போய்க் குளத்துக்கு விழுந்த கதை " போல இருந்தது....

                        ......................என்ன ஆபத்தான  சீவியமடா இது.....




நிம்மி அலெக்சான்றா சில நாட்கள் முன் டெலிபோன் எடுத்து, " ஒஸ்லோவில் நியூயோர்க் சப்வே வாற செவ்வாய்க்கிழமை வரப்போகுது வாறியா பார்க்க, நான் படம் எடுக்கப் போறேன், எங்களின் விசுவல் இமேயிங் ஆர்ட்ஸ் தான் அதை வடிவமைக்கிறார்கள். நீயும் வாறியா, நீயும் நிறையப் படங்கள் எடுக்கலாம்,,நிறையகலாச்சார விடயங்கள்அறியலாம் வாவேன் " என்றாள்.
                                                
                                                           நியூயோர்க் சப் வே ரெயில் நிலையத்தை எப்படி ஒஸ்லோவுக்கு தூக்கிக்கொண்டு வர முடியும் என்று குழப்பமா இருந்தது. அவள் சொன்னது எனக்கு சரியா விளங்கவில்லை, முக்கியமா அவள் நோர்க்ஸ் வேகமா,இளம் பிள்ளைகள் கதைக்கும் நெளிப்பு சுளிப்புடன் கதைப்பதால் விளங்குவதில்லை. பிறகு விபரமா அது என்ன விசியம் என்று சொன்னாள்.


                                                ஒஸ்லோவில் உள்ள ஒரு தேபாணா என்ற நிலத்தடி இரயில் நிலையத்தை அமரிக்காவின், நியூயோர்க் நகரத்தில் உள்ள முக்கிய சப்வே நிலத்தடி ரெயில் நிலையமான டைம் ஸ்குயார் நிலையம் போலவே கலையமைப்புடன் மாற்றி அமைத்து அசத்தியுள்ளார்கள், " விசுவல் இமேயிங் ஆர்ட்ஸ் " என்ற ஆர்டிஸ் அமைப்பச் சேர்ந்தவர்கள். இதுதான் அந்த செய்தி. இது எனக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா மாதிரி இருக்க , கட்டாயம் நானும் வாறன் என்று சொல்லி அவளுடன் போய்ப் பல படங்கள் என் மொபைல் போனில எடுத்தேன்.
                                           
                                           நியூயோர்க் இந்த உலகத்தின் மிக அவதியான மெகா நகரம், டைம் ஸ்குயர் அதில உள்ள மிக மிக அவசரமான அதே நேரம் அமரிக்காவின் பல்லின மக்களின் கலாச்சாரம் சங்கமிக்கும் வாழ்வியல் அடையாளம் உள்ள நிலத்தடி ரெயிவே ஸ்டேசன் எண்டு நிம்மி சொல்லிக்கொண்டு வந்தாள்.
                                               
                                         ஹெரல்ட் ராபின்ஸ் புத்தகங்களில் வாசித்து, ஹோலிவுட் படங்களில் வாயைப் பிளந்து பார்த்து அதிசயித்த நளினமான நியூயோர்க் நகரத்துக்கு இது வரை போனதில்லை, அதால அதைக் கட்டாயம் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எனக்கு முன்னமே அந்த இடத்துக்குப் போய்விட்டது.
                                         
                                              முக்கியமான ஒரு தேபாணா என்ற நிலத்தடி இரயில் நிலையத்தைதான், அதன் பெயர்ப் பலகை எல்லாம் மாற்றி எப்படி அமரிக்காவில் அந்த ரெயில் நிலையம் இருக்குமோ அதேபோல கலை அம்சமாக மாற்றியிருந்தார்கள். விசுவல் இமேயிங் ஆர்ட்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடிகர்களாக மாறி அந்த நிலையத்தில் அமரிக்க ஸ்டைலில் உடுத்து நடமாடினார்கள்.
                                               
                                             ஒஸ்லோவில் உள்ள எந்த நிலத்தடி இரயில் நிலையத்திலும் ஒலிபெருக்கியில் ட்ரைன் ரூட் சொல்வதில்லை ,ஆனால் அந்த ஒஸ்லோ ரயில்வே நிலையத்தில் அமரிக்க ஆங்கிலத்தில் ட்ரைன் வாறது போறது எல்லாம் நியுயோர்கில் எப்படி அறிவிப்பார்களோ அப்படியே ஒலிபரப்பிக்கொண்டு இருந்தார்கள்.
                                              
                                             வீடில்லாத ஹோம்லெஸ் என்ற தெருவோர மனிதர்கள், அமரிக்க தேசிய விளையாட்டான பேஸ் போல் விளையாட்டு வீரர்கள், நியூஸ் பேப்பர் விப்பவர்கள், நிலத்தடி கிட்டார் இசைக்கலைஞர், விபச்சாரிகள் ,அப்புரோ அமரிக்கன் என்ற கறுப்பினத்தவர், ரப் ஹிப் ஹோப் பாடகர், பொடி பில்டிங் செய்து உடம்பைக் காட்டிக்கொண்டு திரிபவர்கள், ஹோட் டோக் திடீர் உணவு விற்கிறவர்கள் ,கோஸ்பெல் என்ற கிறிஸ்தவ சேர்ச் பாடகர்கள், என்று அந்த இடத்தில நிக்க அமரிக்காவில் நிக்கிற மாதிரி இருந்தது.
                                                   
                                                 இந்த ஸ்டேசனில் நின்று போன நிலத்தடி ரெயிலில் இருந்தவர்கள் எல்லாருமே, அதிசயமா திடீர் என்று உருவமைப்பு மாறிய தாங்கள் வழமையாகக் கடக்கும் அந்த ரெயில் நிலையத்தை பார்த்தார்கள். சிலருக்கு ட்ரைன் அமரிக்காவுக்கு உள்ளால ஓடுற மாதிரியான ஒரு நம்பமுடியாத கனவுலகப் பிரமிப்பு கட்டாயம் கிடைத்து இருக்கும், சிலர் உடனேயே அந்த ஸ்டேஷனில் விடுப்புப் பார்க்க இறங்கினார்கள்.
                                                                      குழந்தைகள் ஆ என்று ரெயின்ன் யன்னலுக்கால்ஆச்சரியமாகப் பார்த்தார்கள், அவர்களின் ஆச்சரியமுகங்களைப் பார்க்க சந்தோசமாக இருந்தது. அந்த ஸ்டேசனில் இறங்கியவர்கள் டைம் ஸ்குயார் என்ற பெயரை நிமிர்ந்து பார்த்து,,டைம் ட்ரவலிங் என்ற காலத்தில் பிரயாணம் செய்து வந்த மாதிரியான ஒரு பிரமிப்பை முகத்தில் காட்ட,,அதை ரகசிய கமாராக்களில் படம் பிடித்தார்கள்..நான் நினைக்கிறன் அது நோர்வே டெலிவிசனில் ஒளிபரப்புவார்கள் என்று.
                                                
                                              எனக்கு அந்த இடத்தில நடமாடிய அமரிக்க மனிதர்களில் ஒரு விபச்சாரியத் தான் அதிகம் பிடித்து இருந்தது. அவளைப் பார்க்க " பிரிட்டி வுமன் " படத்தில வாற ஜூலியா றொபேட்ஸ் போல இருந்தாள். அவளுடன் ஒட்டிக்கொண்டு நின்று ஒரு படம் எடுக்க அவளும் அமரிக்கன் ஸ்டைலில் வளைஞ்சு நிண்டு போஸ் கொடுத்தாள்.
                                             
                                                           மெய்யாத்தான் கேட்குறேன், ஓசியில அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து அமரிக்காவின் நியூயோர்க் போய் டைம் ஸ்குயார்ல ஒரு பிரிட்டிவுமனைப் பார்க்கிறது என்றால் சும்மாவா,எல்லாருக்கும் கிடைக்குமா, சொல்லுங்க பார்ப்பம் . 

                                  ..........என்ன அழகான  சீவியமடா இது ............ 





                           கணணி உலகம் அது இன்றைக்கு எப்படி ஜன்னல்களை அகலமாகத் திறந்துவிடும் ஒரு தவிர்கமுடியாத பாவனையாக இருக்கு என்பதை நினைக்கப் பிரமிப்பாகவும் பயமுறுத்துற மாதிரியும் இருக்கு. எல்லாருக்கும் அப்பிடிதான என்று தெரியலை. ஆனால் எனக்கு அப்பிடிதான் காதுக்குள்ள ஆலுமாடோலுமா குத்துப்பாட்டுக்குக் குரவைச் சத்தம் கேட்க வைக்குது
                                          
                                                          அதுக்கு மிக முக்கியமான வெளிப்படையான காரணம் அதிலதான் நான் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் மானாவாரியா எழுதிக்கொண்டு இருக்கிறேன். என்னோட ஆத்மாவின் குரலை அதுதான் இலற்றோனிக்கில் இருந்து மொழிபெயர்த்து இதயங்கள் வரை எடுத்துக்கொண்டுபோய்ச் சேர்க்கும் ஒரு அலாதியான ஜீவனுள்ள அறிவியல் ஊடகம்.
                                                     
                                                 கணணி உலகம்தான் சுடச்சுட எழுதிப்போடும் எல்லாவிதமான பதிவுகளுக்கும் சுடச்சுட சூடு ஆறமுதலே வாசகரை எழுத்தோடு இணைத்துவிடுகிறது. எதிர்வினைகள் விமர்சனங்கள் விருப்புக்கள் அதன் தொடர்ச்சியாக இன்னும் நெருக்கமாக்கிவிடுகிறது. எழுதுபவனுக்கும் வாசகனுக்கும் உள்ள நெருக்கம் காவடி ஆடுபவனின் செதில்கையிற்றை இழுத்துப் பிடிப்பவனும் ஆடவேண்டும் போன்ற நிலைமை. ரெண்டு ஆட்டமும் ஒரே நேரம் நிகழவேண்டும்.

                                                   ஒரு பேப்பரில் என் கையெழுத்தை பேனாவால் எழுதும்போதுதான் பார்க்க முடியுது எவளவு அலங்கோலமாய்க் கோழி குப்பையைக்கிளறின மாதிரிஅது கோணல் மாணலா இருப்பது எனக்கே சகிக்கவில்லை.. நாலுவரி தமிழில் எழுதினா அது லைசன்ஸ் இல்லாதவன் வெறியில கார் ஓடினமாதிரி இன்னும் அவமதிப்பா இருக்கு.

                                             இதுக்கெல்லாம் காரணமே கணணி விசைப்பலகையில் எழுதுவதுதான் என்று நினைக்கிறன். ஒரு மொழியைக் கையெழுத்தில் எழுதும்போது மிகவும் நெருக்கமாக உணரமுடிந்தாலும் அப்படி எழுதும் வாய்ப்புகளோ,,தேவைகளோ எனக்கு இப்போது இல்லை. அது ஒருவிதமான அடிப்படை நிலையில்அம்மாவையே மறப்பது போல இருக்கு.

                                                  முக்கியமான விசியத்துக்குள்ளே நேராகவே வாறன், கணணி என்ற கொம்புயுடர் அறிவு இல்லாமல் கணனியின்கண்ணுக்குள்ள விரலை விட்டு அதை ஆட்டிக்கொண்டு எழுதிக்கொண்டு இருந்தாலும், கணனியில் ஒரு பிரசினைவந்து எழுத முடியவில்லை என்னும்போது ஊர்கோலம் போகும் மேகங்களை ஒருநாளில் நிறுத்தி வைத்து உலகமே இருண்டுவிடுகிறது

                                                நான் கிட்டதட்ட ஒரு வருடம் கணணி படித்து அதில டிப்பிலோமா எல்லாம் வேண்டி அதைப் பக்குவமா பைலில்போட்டுவைச்சு இருக்கிறேன். பன்னிரண்டு வருடங்களின் முன் தியரியாக கன விடயம் படித்துள்ளேன். சிலநாட்கள் முன் என்னோட ரெண்டு மடிக்கணணிகள் வேலைசெய்யாமல் கையைவிட்டு என் மடியில் குத்தினபோது அந்த டிபிலோமாகளை தேடி எடுத்துப் பார்த்தேன்

                                              அப்போது ஒரு விசியம் தெரிந்தது தியரி என்பதும் பிர்க்டிகள் என்பதும் வேறுவேறு என்று. அதிலும் இன்றய நாட்களில் கணணியை எப்படிஇயக்குவது என்பது தெரிந்தால் போதும்போலவும் அது எப்படி இயங்குது என்பது நடைமுறைக்கு வேலைக்கு ஆகாத ஒன்று போலவும் இருந்தது. அடிப்படைகளைப் புரிந்துகொள்ளும் படிப்புக்களில் இருந்து நாங்கள் வேறெங்கோ வந்துவிட்டோம்போல இருக்கு

                                                 இதில உள்ள இன்னொரு குளறுபடி பன்னிரண்டு வருடம் முன் கணணி உலகமே வேற .அப்போது அது நேர்சரி லெவலில் வாயில விரலை வைச்சு சூப்பிக்கொண்டிருன்தது. .இப்ப அது ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு புதுமையில் பவுடர் அடிச்சுக்கொண்டு புதுப்புது சாத்தியங்களோடு ஜிகா பைட்ஸ் வேகத்தில் ஹை டெக் பாதையில் டாப் கியரில் எகிறிப்பாய்ந்தது முன்னேறிக்கொண்டு இருக்கு.

                                                    அதுதான்ஒரு பிழை வரும்போது அதை திருத்துபவர்களின் காலிலபோய் விழ வேண்டி இருக்கு. அவர்களுக்கு பிராக்டிகலா என்ன நடக்குது,,நடந்தது,,என்ன நடக்கும் என்று பகவத்கீதை ரேஞ்சுக்கு அறிவுஅனுபவம்உள்ளது. இது ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியர் கார் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாத நேரம் கராச்சில கட்டி இழுத்துக்கொண்டு கொண்டுபோய் விட்டுப்போட்டு கையைக் கட்டிக்கொண்டு மொக்கன்மொரிஸ் மெக்கானிக்கைப் கடவுள்போல பார்த்துக்கொண்டிருப்பது போல

                                                       அதனால என் அனுபவம் தந்த பாடம் இன்றைய தினத்தில் எப்பவுமே ஒரு கணணி திருதகூடிய ஒருவரை நட்பாக எப்போதும் தொடர்பில் வைத்திருக்கவேண்டும். அவரின் காலைபிடிச்சு மசாச் செய்தாவது கைக்குள்ளே போட்டுவைச்சு இருக்கவேண்டும்.ஏனென்றால் காலம் பொன்னான எழுத்துகளை எழுதிவிடுவதுக்காகக் காத்திருப்பதில்லை.

                                               அதன் இன்றைய வேகத்துக்கு இன்டர்நெட் தொடர்பு அறுந்து போவது என்பது குற்றாலம் அருவியில குளிக்கும்போது அடிச்சிப் பிச்சுக்கொண்டு வரும் தண்ணி போட்டிருக்கிற யட்டியை உருவிக்கொண்டு போறது போல. அவளவு ஆபத்தாகத்தான் இருக்கு. எனக்கு இருக்கு...ஹ்ம்ம்.....உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை...


                                   ...........என்ன அலங்கோல  சீவியமடா இது                   
                             



                           
     
சில பிறமொழித் திரைப்படங்கள் எப்போதாவது பார்ப்பது. ஆனால் திரைக்கதை நினைவு இருக்கும். படத்தின் பெயர் நினைவு இருக்காது. சென்ற வருடம் நோர்வே NRK தேசிய தொலைக்காட்சியில் ஒரு கொரியன் நாட்டுப் படம் பின்னிரவில் போட்டார்கள். கொரியன் மொழி தெரியாவிட்டாலும் அந்தப் படம் நிறையவே சிந்திக்க வைத்தது. முதலில் அந்தப் படத்தில் கொரியன் மொழியே அதிகம் உரையாடலில் பாவிக்கப்படவில்லை.
                                                      சம்பவங்கள், சூழ்நிலைகள் , கதாபாத்திரங்களின் உடல் மொழி, பிண்ணனி இசை, மவுனத்தில் தவறிய வார்த்தைகள், இதை நம்பியே அந்தப் படத்தை இயக்கியுள்ளார் கொரியன் இயக்குனர். பலருக்கு கிம் கு டுக்கு என்ற கொரியன் இயக்குனர் பற்றியும் அவர் படங்களும் தெரியும், ஆனால் இந்தப்படம் அவர் இயக்கவில்லை, வேற ஒரு புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார்
                                                           
                                           ஒரு திரைப்படத்தை நேரம் செலவழித்துப் பார்க்க அது சுவாரசியமாய் இருக்க வேண்டும். இந்தப் படம் ஒரு சிம்பிள்க் கதை. அதை கொஞ்சம் விசுவலாக திரைக்கதை அமைத்து முதலாளித்துவ கைத்தொழில் பொருளாதாரத்தில் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் சின்ன நாடான தென் கொரியாவின் தலைநகர் சியோலில் நுகர்வோர் கலாச்சாரத்துக்கு எப்படி மனிதர்கள் பலியாகிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்
                                                              
                                                    கதை இதுதான், ஆனால் கதை ரெண்டு தனி மனிதர்களில் தொடங்கி அவர்கள் இருவரையும் இணைக்கும் இடத்தில இன்னொரு பரிமாணத்தில் ஒரே சமூகப் பிரசினையை இணைத்துக்கொள்ளும் , ஒரு இளம் சாப்ட்வேர் எஞ்சினியர், ஒரு இன்டர்நெட் கேம் விளையாடும் இளம் டீன்ஏஜ் பெண். இவர்கள்தான் மையப் பாத்திரம் . வேறு யாருமே இல்லை. மிச்சமில்லாமல் இயற்கை நிரம்பி வழியும் கைவிடப்பட்ட ஆற்றுக் கழிமுகத்தில் இருக்கும் ஒரு சின்னத் தீவு .
                                                       
                                                       சிலநேரம் இது சாப்ட்வேர் எஞ்சினியர், இன்டர்நெட் கேம் விளையாடும் இளம் டீன்ஏஜ் பெண் இருவரையும் முதன்மைப்படுத்தி திரைக்கதை வருவதால் சயன்ஸ் பிக்சன் ஆக இருக்கலாம் என்று நீங்க நினைச்சால் அது உங்களின் தோல்வி,யாரும் நினைக்காத திசையில் திரைக் கதையை இன்றைய விஞ்ஞான முன்னேற்றதுக்கும் மனித உணர்வுகளுக்கும் நடுவில் நடக்கும் கடைநிலைப் போராட்டம் ஆக இயக்குனர் காட்டியதால் அவர் வென்று விட்டார்
                                                          அந்த சாப்ட்வேர் எஞ்சினியர் மகா புத்திசாலி, அவன்தான் அந்த வெற்றிகரமான சாப்ட்வேர் நிறுவனத்தின் புரோஜக்ட் எஞ்சினியர். நல்ல வீடு ,நல்ல சம்பளம், நல்ல மரியாதை, நல்ல கவுரவம், அவன் போடும் புதிய புதிய ஐடியாக்கள் கோடி கோடியாய் அந்த நிறுவனத்துக்கு அள்ளிக்கொட்டும் ஆனால் வேலைப்பளு தலைக்கு மேலே ஏறி நிண்டு அவனைக் கொல்லும் . அவன் வேலைதான் அவன் பொஞ்சாதி , பிள்ளைகள், குடும்பம் எல்லாமே
                                                               
                                               ஒருநாள் அந்த சாப்ட்வேர் எஞ்சினியர் அவன் போட்டிருந்த கோட், சூட், சப்பாத்து எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு அவன் எப்பவும் ஜன்னலால் ரசிக்கும் ஒரு தொழிற்சாலை கழிவு நீர் வளைந்து சுளித்து ஓடும் ஆறின் கழிமுகத்தில் உள்ள யாருமே போகத் தடை செய்யப்பட்ட தீவுக்கு போய்விடுகிறான். கொஞ்சம் கவிதைத்தனமாகச் சொல்வதென்றால் ஹைடெக் உலகத்தில் இருந்து தடயம் இல்லாமல்க் காணாமல்ப் போய்விடுகிறான்
                                                                  
                                                              அந்த தீவில் மரங்களும், பூக்களும், பறவைகளும் தவிர ஒன்றுமேயில்லை , கழிவு நீரில் அடித்து வரப்படும் முளை விட்ட உருளைக்கிழங்கை எடுத்து தோட்டம் செய்கிறான், ஒரு கைவிடப்பட்ட சோயா பீன்ஸ் கானை உடைச்சு அதை வைத்தே ஒரு சோயா பீன்ஸ் தோட்டம் அமைக்கிறான், மலர்கள் விடிகாலை இதழ் விரிப்பதை அதிசயமாய்ப் பார்க்கிறான், தூரத்தில் வானவில்லை ரசிக்கிறான் , உண்மையில் சந்தோசமாய் இருக்கிறான்
                                                                              
                                                    மனிதர்களே இல்லாத ஒரு இயற்கை இடத்தில அவனை யாரும் கவனிக்கவில்லை என்பதே அவனுக்கு மிகவும் அலாதியாக இருக்கு, அவனுக்கு யாரும் உத்தரவுகள் கொடுப்பதோ, காலக்கெடு விதிப்பதோ இல்லாதா அந்த ஏகாந்த நிலையை அவன் குழந்தை போல உள்வாங்குவான். அதை அவன் ஒவ்வொரு நாளும் செய்யும் சின்னச் சின்ன நிகழ்வுகளில் இயக்குனர் பதிவாக்கி இருப்பார்.
                                                                         
                                                           அவன் வாழும் தீவின் தொங்கலில் உள்ள இருபது மாடிக் கட்டிடத்தில், மிக உயரமான ஒரு அப்பட்மேண்டில் ஒரு டீன்ஏஜ் வசிக்கிறாள். அவளின் அம்மாவும் அப்பாவும் மிகவும் பிசியான வேலை செய்பவர்கள், பணக்காரர், ஆனால் அவளுக்கு அன்பு செய்ய நேரம் இல்லாதவர்கள் அதனால் அவள் கதவுகளை அடித்துச் சாத்தி விட்டு தனியாக இன்டர்நெட் கேம் விளையாடிக்கொண்டிருப்பாள். அவள் உலகத்தில் நிஜ மனிதர்கள் இல்லை.
                                                                   
                                        சாப்பிட எப்பவும் டேக் எவே என்ற ஓடர் செய்யும் உணவகத்துக்கு ஓடர் கொடுப்பாள், அதுக்குரிய காசை வெளியே வாசலில் கதவருகே வைப்பாள், அவள் டேக் எவே டெலிவரி செய்யக் கொண்டு வருபவனையே சந்திக்க விரும்பமாட்டாள், ஆனால் அவள் ஒரு நாள் தற்செயல் ஆக இந்த சாப்ட்வேர் எஞ்சினியர் காட்டுவாசிபோல அந்த தீவில் இருப்பதை பைனாக்குலர் இல பார்ப்பாள்
                                                                        
                                                             யப்பா சாமி, என் வீராளி அம்மாளாச்சி மேலே சத்தியமா சொல்லுறேன் ,ரெண்டு அபத்தமான கதாபாத்திரத்தைப் பசை போட்டு ஓட்ட வைக்கும்,கதை இங்கே இருந்துதான் நாங்க எதிர் பாராத திசையில் சும்மா பிச்சுக்கொண்டு போகும், இந்தக் கட்டம் வரை பார்த்த யாருமே இதுக்குப் பிறகு உலகம் அழிஞ்சாலும் அழியட்டும் முடிவுவரை பார்த்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் பார்ப்பார்கள். இதுதான் அந்த இயக்குனரின் திரைக்கதை திருப்பங்களை விருப்பமாகவே சந்திக்க வைக்கும் உத்தி ,
                                                                    
                                                            அந்த சொப்ட்வார் எஞ்சினியர் ஒவ்வொரு நாளும் ஆற்று மணலில் அவன் மன உணர்வை சூரியனுக்குப் சொல்லுவது போல ஒரு தடியால எழுதுவான், அதை இந்தப் பெண் பைனாக்குலர் மூலமாக வாசிப்பாள். நடு இரவில் யாருக்கும்தெரியாவாறு இருட்டோடு நழுவிப் போய் ஒரு போத்தலில் சின்னப் பேப்பரில் அவள் உணர்வை எழுதி ஒரு பாலத்தில் இருந்து அவன் இருக்கும் தீவுக்கு எறிந்து விடுவாள்
                                                            
                                                            காலையில் அவன் அந்த சின்ன பேப்பரை எடுத்து வாசிப்பான், ஆச்சரியமாய் இருக்கும் அவனுக்கு, யாரோ அவனைக் கவனிப்பது கவலையாக இருக்கும், ஆனால் அந்த பேப்பரில் இருக்கும் பாசத்தை நேசமாக உள் வாங்கிக் கொள்வான். அன்று மாலை சின்னப் பேப்பருக்குப் பதில் மணலில் எழுதுவான், இது கொஞ்சநாளா தொடரும், அப்படியே ஒரு மென்மையான நாளில் ரெ ண்டு பேருக்கும் ஆளை ஆள் பார்க்காமலே காதலே வந்துவிடும்
                                                                      
                                                             இது சீரியஸ் ஆனா படம், இதில ஒரே ஒரு காமடிதான் இருக்கு. ஒரு நாள் இரவு நிறைய மழை பெய்து அவன் தோட்டத்தை அப்படியே வாரிக்கொண்டு ஆற்று நீர் ஓடிவிடும், அவன் ஜோசிதுக்கொண்டு குந்தி இருப்பான் இதை அந்த டீன் ஏச் பெண் விடிய எழுப்பிப் பார்ப்பாள், அன்று அவனுக்கு அவள் எப்பவும் ஓடர் செய்யும் டேக் எவே உணவகத்தில் இருந்து ஒரு  சோயா நூடில்ஸ்  ஓடர் கொடுப்பாள், அவன் இருக்கும் தீவின்விபரம் சொல்லுவாள்
                                                                         
                                                               அந்த  டெலிவரிக்காரன் ஒரு வள்ளத்தில் சோயா நூடில்ஸ்  கொடுக்க அந்த யாருமில்லாத கைவிடப்பட்ட தீவுக்கு தண்டு வலிச்சுப் திட்டித்தீர்த்து குலை அறுந்து போய்ச் சேருவான் பாருங்க அதில நடக்கும் காமடியை பார்க்கவே சிறுகுடலும் பெருங்குடலும் வெளிய வரும் சிரிச்சு சிரிச்சு, அவளவு காமடி , எனக்கு அதை இப்ப நினைச்சாலும் எந்த இடத்தில நிக்குறேன் என்ற நினைப்பே இல்லாமால் வாய்விட்டுச் சிரிப்பேன், அவளவு உத்தரவாதமான காமடி அது,
                                                                          ஆனால் அந்தப் பிட்சா டெலிவரிக்காரன் எப்படியோ சியோல் போலிஸ்இக்கு போட்டுக்கொடுத்திடுவான், ஒருநாள் காலை போலீசார் அந்த தீவை சுற்றி வளைகிறார்கள் , அந்த தீவு தடை செய்யப்பட்டது, நச்சு மண் உள்ள இடம் என்று சொல்லி அவன் அத்துமீறி இயற்கையான இடத்துக்குள் சுதந்திரமாக வாழ்வது தென்கொரிய சட்டப்படி பிழை என்று சொல்லி விலங்கு போட்டுக் கைது செய்வார்கள், இதை அந்த டீன்ஏஜ் பெண் பைனாக்குலரில் பார்க்கிறாள்
                                                              
                                                                     என்ன செய்திருப்பாள்,,சடார் புடார் என்று அக்சனில் இறங்குவாள், சும்மா சொல்லக்கூடாது ஒரு டீன்ஏஜ் இளம்பெண் எப்படி புத்திசாலித்தனமாக அவனைக் காப்பற்ற முயற்சிக்கிறாள் என்பது அந்தப் படத்தின் கிளைமாக்ஸ், ஆனால் அவளால் காப்பாற்ற முடியாமல் போகுது, அதன்பின் இரண்டு சம்பவம் நடக்கும் , அதுவும் அந்த இயக்குனர் எப்படிபா இப்படியும் ஜோசிக்க வைக்க முடியும் என்று ஆச்சரியம் காட்டுவார்
                                                                     
                                                                இந்தத் திரைப்படதில் வரும் ஒவ்வொரு சின்னச்சின்ன பிரேமும் மிகக் கனதியான விசியத்தை முகத்தில் அடிக்கும், நான் அதை எல்லாம் எழுதினால் இந்தப் பதிவு நீண்டுகொண்டே போய்விடலாம் என்பதால் எழுதவில்லை, ஆனால் மனதில் ஆழமாகவே அவை எல்லாம் எனக்கு ஆணி அடித்து உள்ளன, அதில் ஒன்று அந்த டீன்ஏஜ் பெண்ணின் பெற்றோர் ஒரு சோளம் அடைக்கப்பட்ட டின் ஐ அவளுக்குக் கொடுப்பது, செத்தாண்டா சேகரு அந்த இடத்தில போன்ற சம்பவம் அது ,
                                                     
                                    இந்தப் படம் நீங்களில் சிலர் பார்த்து இருக்கலாம்,,அப்படிப் பார்த்து இருந்தால் தயவுசெய்து அந்தப் படத்தின் பெயரை சொல்லுங்க, மற்றவர்களும் பார்க்கலாம், இல்லையா , ஒரு முறையாவது உலகம் மறந்து விசித்திரமான வாழ்க்கை விளிம்புநிலை வாசல்படிகளை குனிந்து பார்க்க வைக்கும்படியான சினிமாப்படம் இது என்று நான் நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்குரின்களோ தெரியவில்லை
                             .
.....................................என்ன ஆச்சரியமான  சீவியமடா இது ...






                                                 

                                                            இன்னும் ஒழுங்கா நாரியைச் சூடாக்கும் வெப்பம் உள்ள கோடை வரவில்லை, அதுக்கு முதலே என்னோட குடிகாரக் குப்புசாமி நண்பர்கள் கொண்டாடத்தை ஆரம்பித்துவிட்டார்கள். சுவாரசியமான, பரந்த மனது அன்பான, ஆத்திர அவரசரத்துக்கு அஞ்சைப் பத்தைப் பிரட்டிக் கடன் வேண்ட, நாட்டு நடப்புக் கதைக்க மனிதர்கள் நம்மைச்சுற்றி இருப்பது எப்புவுமே அலாதியான தருணங்கள். 

                                                       நோர்வே மக்களை நண்பர்களாவைத்து இருந்தால் எப்பவுமே சோலி சுரட்டு இல்லை. கமக்கட்டில கையை வைச்சுக் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைக்காமல் இயல்பாகவே பயங்கரமான பகிடிகள் சொல்லுவார்கள் . அவர்களுடன் உரையாடும்போது எப்பவுமே நிறைய உலகத்த்தரமான விசியங்களை அறியமுடியும்.

                                                   முக்கியமாக நான் பெரிசு என் மண்டை பெரிசு என் அறிவு பெரிசு என்அனுபவம் பெரிசு என்ற அல்டர்ஈகோ எல்லாம்அவர்களிடம் இல்லை. மிக மிக அடக்கமாகப் பேசும்போதே ஒரு பெரிய உலகத்தைத் திறந்து விடுவார்கள். அதில் நமக்கு வேண்டிய எல்லாம் இருக்கும். நான் எவளவு பெரிய முட்டாள் என்று அப்போது உணருவேன்.

                                                    நான் ஒரு டமால் டுமில் என்று கொக்கு தலையில வெண்ணையை வைச்சு உல்டா விடுற கதாசிரியர் என்று அவர்களுக்குத் தெரியவே தெரியாது .அதைச் சொன்னால் நம்பப்போறதுமில்லை. எனக்கு கதைவிட என்னவெல்லாம் தேவையோ அதை சத்தமில்லாமல் உருவி எடுப்பேன். அதுக்கு வெய்யில் வெங்காயம் விக்கும் கோடை காலத்தை நல்லாப் பயன்படுத்துவேன்.

                                                    நோர்வே நண்பர்களோடு நட்பாக இருப்பதில் உள்ள முக்கிய நன்மை அவர்கள் ஒருநாளும் என் தனிப்பட்ட வாழ்கையில் மூக்கை நுழைச்சு எனக்கு மனைவி, காதலி, சின்ன வீடுகள், குழந்தைகள்,உருப்படியான வேலை ,பெறுமதியான கார் இருக்கா என்று சிம்மக் கல்லில அருவாள் வைச்சுத் தீட்டி வெட்டுற கேள்விகள் கேட்பதேயில்லை

                                                                        இதில அமரிக்க ஆதிவாசி இந்தியர் ஸ்டைலில் இருக்கும்அண்ட்ரிஸ் நோர்வேநாட்டு கொமோண்டோ இராணுவத்தில் பணியாற்றியவர். மற்ற நண்பர் ரோவர் ஒரு ஓய்வுபெற்ற மனநலகாப்பகத்தில் வேலை செய்த நேர்ஸ். இப்படி ஒரு பட்டாளமே என்னைச் சுற்றி இருக்க என்னக்கென்ன கவலை. எனக்கென்ன குறைச்சல். சொல்லுங்க பார்ப்பம். உலகம் என் கையில்.

                                                        இது நிம்மி அலெச்சான்றா எடுத்த படம் அவளுக்கு மட்டுமே என் உலகத்தில் என்னை எங்கே ஓடவிட்டு ஒரு கணத்தில் நிக்க வைச்சு எப்படி படத்தில விழுத்த வேண்டும் என்று நல்லாவே தெரிந்த சின்னப் பெண். நிம்மி ஒரு இயற்கையுடன் மனித உணர்வுகளை சமாந்தரமாகப் பயணிக்கவைக்கும் போட்டோகிராபர் .



                                    ...........என்ன நட்பா  சீவியமடா இது.....