Sunday 10 July 2016

சாமியம்மா .--.பாகம் ஒன்று ---

சென்ற வருட டிசம்பர் மாதம் கவுசல்யா ஒஸ்லோ வந்திருந்தாள். இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் என்ற இடத்தில் கைனக்கோலோயிஸ்ட் என்ற பெண்நோயியல் நிபுணராக இருக்கும் அவள் என்னை சந்திக்க வந்தது பல நாட்களாகப் போட்ட்டு வைச்ச பிளான் என்று சொன்னாள் .அவளின் அம்மா பர்வதம் மாமி சில வருடங்கள் முன் இறந்துபோனது பற்றி நானும் கேள்விப்பட்டதால் அவளை சந்தித்தேன் .

                                            நானே மனிதர்களை அதிகம் சந்திக்க விரும்பாத, சுவாரஸ்யங்களின் சராசரிக்கும் குறைவான பிறவி. கவுசல்யா எனக்கு அப்பப்ப மருத்துவ டிப்ஸ் தரும் அக்கறையுள்ளவள். அதை விட பழையகால மனிதர்களை இந்தக் காலத்தில் சந்திப்பதில் இடங்களில் ஒட்டிக்கொண்டுள்ள நினைவுகளும் ,நினைவுகளில் ஒட்டிக்கொண்டுள்ள இடங்களையும் தவிர  கதைப்பதுக்கு எதுவுமே இருப்பதில்லை என்பது என்னோட கொள்கையாக இருப்பதால்,முதலில் தயங்கினான்,,ஆனாலும் சந்தித்தேன் 

                                     ஒஸ்லோவில் கடற்கரை ஆடம்பரமாக  வீதியுலா போகும் ஆர்கிற்புரிக்கி  என்ற இடத்தில உள்ள ஒரு விலைஅதிகமான ரெஸ்ட்ரோரெண்டில் அந்த சந்திப்பு ஒரு பின் அந்தி மாலை நிகழ்ந்தது. ஒஸ்லோ பியோட் கழிமுகத்தில் உல்லாசப்பிரயாண கப்பல்களில் வந்து இறங்கியவர்கள் கடற்கரை வீதியில்   தலையை வெட்டித்தள்ளும் விலைவாசியில் இருந்த பாதையோர விலைப்பட்டியல்களை ஆச்சரியமாகப் பார்க்க,தாழப்பறந்த  விப்பர் பறவைகள் இரவுக்கு கடலோடு என்னதான்  செய்வது என்று ஏங்கிக்கொண்டு பறந்துகொண்டிருந்தன 

                                                              வெளியே  கிறிஸ்மஸ்  வருகையை உறுதிப்படுத்தும் உறைபனி அள்ளிக்கொட்டிக்கொண்டிருக்க அதை சின்ன  வாகனத்தில் முன்னுக்கு லைட் போட்டு தேடித் தேடி வழித்துக்கொண்டிருந்தார்கள் .துறைமுகத்தின் அந்தப்பக்கம் இருக்கும் இறங்குதுறையில் மஞ்சள் விளக்குகள் கசிய விட்டுக்கொண்டிருந்த ஒளியை மூடு பனி வடிகட்டிக்கொண்டிருந்தது 

                                            உள்ளே   ரெஸ்டோரோரென்ட் கதகதப்பில் இருந்தது. கவுசல்யா  லிவிலிவிலிவி மார்க்   டெனிமும் மேலே ஒரு பிரென்ச் வூல் சுவேடரும் போட்டு , தலை மயிரை கழுத்துவரை வெட்டி பொப் போல பொம்ம விட்டிருந்தாள் . அடக்கமான கச்சித சிகை அலங்கரிப்பு அவளை ஒரு வைத்தியநிபுணர் என்று காட்டவில்லை . எடுத்த எடுப்பில் பார்க்கும் யாருமே அவள் ஒரு விமானப்பணிப்பெண் என்று சொல்லும்படியாக அலங்காரம் அலாரித்துக்கொண்டிருந்தது 

                                                             கவுசல்யா  ஆங்கிலம் கலந்த தமிலாங்கிழ  மொழியில் தமிழில் கதைக்க மிகவும் விரும்புவது போல முயட்சித்து ழகரம்  ளகரம்  லகரத்தில் தடக்கி தடக்கி விழுந்து எழும்பி உயிர்ச் சொற்களில் உயிரையே விடுவது போலவே   கதைத்துக்கொண்டிருந்தாள்  , ஒருகட்டத்தில்   

                                                  "கவுசல்யா உனக்க்கு நினைவு இருக்கா நீ   ஓ லெவல் பைனல்  டெஸ்ட் எடுக்க வேண்டி இருந்த அந்த வருடம் படுத்த படுக்கையாக விழுத்தது,,,உன்னை புண்ணியக்குஞ்சி சாமியம்மா வீட்டுக்கு கொண்டு போனது ...மசுக்குட்டி மாமிக்கும் உன் அம்மாவுக்கும்  சண்டை  வந்தது ...ஒப்பேரேசன்  செல்லத்துரைக்கு  அலவாங்குக்  குத்து  வயித்தில  விழுந்தது ......"

                                     "   ஹ்ம்ம்,,புண்ணிய மூர்த்தி சித்தப்பா,,,அவரா,,ஹ்ம்ம்,,ஹ்ம்ம்,,அது  யார் செல்லத்துரை மாமா  அவரா...கொஞ்சம் கொஞ்சம் இவர்கள்  முகம்  நினைவு  இருக்கு "

                                   "   புண்ணியக்குஞ்சியை  கழுத்துறையில் வைச்சு சிங்கள ஆட்கள் வெட்டிக் கொலை செய்து  போட்டாங்கள் "

                                 "  ஓ  மை  காட்,,வாட்  ஹப்பின்ட் "

                                  "  அதெல்லாம் விபரமா எனக்கு தெரியாது,,கேள்விப்பட்டேன் அவளவுதான் தெரியும் "

                                "   சோ  சாட்,,,அதென்ன  சாமியம்மா வீட்டுக்கு  என்னைக் கொண்டுபோய் ,,என்னமோ நடந்ததா,,வாட் இஸ்  தட்..டெல் மீ..ப்ளீஸ் "

                               " அங்கேயும்,,அதுக்குப்  பிறகும்  நிறையக்  கூத்து நடந்ததே ,,உனக்கு  சிலநேரம் அதுகள் தெரியாமல் இருப்பதே நல்லது  "

                                   "ஓ ரியலி,,ஐ டோன்ட் ரிமெம்பர்  வாட்  ஹப்பின்ட்  அப்படியா ,,இப் ஐ சே த த்ருத் .......எனக்கு  இது  ஒன்றுமே நினைவு  இல்லையே ,,டூ  யூ  நோ ,,லெட்ஸ்  டெல் மி "

                                             "உண்மையாவா  சொல்லுறாய்,,நான் சொல்லும் பெயர்கள் தன்னும்  நினைவு இல்லையா "

                                        "  நோ,,,,,,நோ.....நோ....ஹானஸ்ட்லி ,,ஐ டோன்ட் நோ "

                                        "  சரி  விடு,,,,அதில  ஒண்டும்  இல்லை."

                                                     "  ஓகே,,லெட்ஸ் பினிஷ் தட் வே..இட்ஸ் பைன் போர் மி ,,என்ன நான் சொல்லுறது ஓகே தானே "

                                         " ஓகே,,கவுசல்யா ,,வேற என்னவும்  சொல்லு,,எப்படி  உன்னோடு வேலை,,என்ன கார் வைச்சு இருக்கிறாய்,,இந்த வருடம் உன் ஹோச்பிடலில் உனக்கு ஹெட் ஒப் த டிபாட்மென்ட்  டீன் வேலை கிடைக்கப்போறதா சொன்னியே எண்ணச்சு அது    "                       
                                               
                                                செய்வினை சூனியம் ஏவல்  என்பது எல்லாம் உண்மையா பொய்யா என்பது போன்ற அனுமானங்களுக்கு அப்பால்  அதை செப்பவர்களும் ,அதையே எடுத்துவிடுபவர்களும் இருந்த ஊரில் அந்த நேரம் தேர்த் திருவிழாவில் சிதறு தேங்காய் அடிச்ச மாதிரி பொம்பர் அடி,செல் அடி ,அந்தச் சமர் ,இந்தச் சமர் என்று யுத்தம் வீட்டுக்கு வீடு வாசல்படியில் செத்த வீடுபோல ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது 

                                       எவ்வளவுதான் நிஜ வாழ்க்கை ஒரு அந்நிய சூழலில் சலங்கை கட்டிக்கொண்டு சதிர் ஆடினாலும் ஒரு காலத்தில் நடந்து கடந்த பாதையில் சந்தித்த மனிதர்கள் பதிவுசெய்த சம்பவங்கள் அப்பப்ப வந்து வந்து  இருப்பு இங்கே இல்லை வேற எங்கோ பாதிவழிப் பயணத்தில் பறிக்கப்பட்டது போலிருக்கு என்று சொல்லுவது போலிருக்கும் . கொஞ்சம்  உண்மையாகவே சொன்னால் ஏவிவிட்டமாதிரிதான் இருந்தது.

                                          அதையெல்லாம் சொல்லாதவரையில் தொண்டைக்குழியில் என்னமோ வந்து அமுக்குவான் பிசாசு அமுக்கின மாதிரி இருக்கும் .இந்த மாதிரியான பேய்,பிசாசு,பில்லி சூனியம் போன்றவற்றில் எங்கள் ஊரில் அதிகம் கதைக்கப்பட்டுக்கொண்டிருந்த சாமியம்மா வீட்டில் கவுசல்யா வைத்தியம் பார்க்கவேண்டும் என்று விதி எழுதிவைத்ததுதான் நடந்தது.

                                          நேராகவே விசியத்துக்குள்ள வாரேன் , கவசல்யா படிப்பிலே பயங்கரப் புலி. அவள் வயதுக்கு வந்த சில மாதங்களில் என்னவென்று அறிய முடியாத ஒரு நோயால் மாதக்கணக்கில் படுக்கையில் கிடந்தாள். பர்வதம் மாமிக்கு ரெண்டு கையிலும் நாடி விழுந்திட்டுது அந்த சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்தபோது. எப்படியாவது அவளை எழுப்பி அந்த வருடம் மறுபடியும் படிக்க வைக்க பாடாய்ப் பாடுபட்டுக்கொண்டிருந்த போது எங்கள் ஊரில் சண்டை அகோரமாக நடந்துகொண்டிருந்தது 

                                                 பர்வதம் மாமி கவுசல்யாவை பெரியாஸ்பத்திரிக்கு பலமுறை கொண்டுபோய் வாட்டில வைச்சுப் பார்த்தா, அங்கே டாக்குத்தர்மார்  எல்லாவிதமான டெஸ்ட் எடுத்தும் மண்டையைக் குடைந்தும் அது என்ன விதமான நோய்க்குறி என்று ஒரு முடிவுக்கு வரவில்லை.  பெரிய டாக்குத்தர் அய்யா வந்து உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொன்ன   முடிவோடு ஒரு வாரத்தில துண்டுவெட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் , நவீன மருத்துவம் அதுவும் அந்த நேரம் சரிவரவில்லை ,

                                           பிறகு காரணம்தப்பி மரணம் என்று வாசலில் நின்ற பலரை இஞ்சி முரைப்பா கொடுத்து எழுப்பிவிட்ட சிவசொம்புப் பரியாரியிடம் கொண்டுபோனா, அவரும் பித்தம்,கணம் ,வாதம் நாடியெல்லாம் பிடிச்சுப்பார்த்தும் ஒரு துப்பும் பிடிபடவில்லை . சிவசொம்புப் பரியாரி பழைய செய்யுளில் எழுதின செகராசசேகரம் ,பரராசசேகரம் என்ற ரெண்டு  புத்தகத்திலும் சில பக்கங்களை  பிரட்டி பிரட்டி பார்த்தார். அவளவுதான் அதுக்குமேல ஒன்றும் சொல்லவில்லை. பரியாரி ஒருவிதமான கடுக்காய் கலரில் இருந்த கசப்புக் கஷாயம் நாலு வேளை தவறாமல் சிரடடையில் அரைச்சுக் குடிக்கக் கொடுத்தார் .

                                                   கவுசல்யா விழுந்து படுத்த ஒரு கிழமையில் ரெண்டு கையும் சரணவாதம் வந்தமாதிரிக் குறண்டத்தொடங்க ,கண் ரெண்டும் மஞ்சள் காமாலை வந்தமாதிரி மஞ்சளா வெளிறி  மோட்டுவளையில் என்னவோ பார்த்து மிரளுவது போல  நிலைகுத்தி ஏறக்குறைய அவளால் இனி இயல்பாக எல்லா  இளம் குமர்ப் பிள்ளைகள் போல இயங்கமுடியமா என்ற கேள்வி அந்த வருத்தம் போலவே  ஒவ்வொருநாளும்  வலுத்துக்கொண்டிருந்தது .

                                            பர்வதம் மாமியும் கவுசல்யாவும் தான் அந்த வீட்டில இருந்தார்கள்.மாமிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு இயக்கத்திலே இணைந்து இந்தியாவுக்கு ட்ரைனிங் எடுக்கப்போனான்.போனவன் போனதுதான் வரவே இல்லை. மாமி விசாரிக்க களத்தில நிக்குறான்,பின் தளத்தில நிக்குறான் என்று அந்த இயக்கம் சொன்னது.கருத்து முரண்பாட்டில் உள்வீட்டு வேலையாக  நித்திரைப்பாயில் வைச்சுப் போட்டுத் தள்ளிப்போட்டு சவுக்கம் தோப்பில் தாட்டுப்போட்டாங்கள் என்றும் ஒரு கதை அடிபட்டது .

                                                            அரசாங்க புடவைக்கு கைத்தொழில் திணைக்களம் நடத்திய நெசவு பாடசாலையில் வீவிங் டீசர் ஆக அரசாங்க வேலை செய்ததால் மாத முடிவில் சம்பளம் என்று  பர்வதம் மாமி வாழ்க்கையை ஓரளவு நகர்த்திக்கொண்டிருக்க முடிந்தது . அவாவின் புருஷன் கொக்கட்டிச் சோலை இறால் பண்ணையில் டெக்னீசியன் ஆக இருந்தார். இனக்கலவர சண்டைகள் தொடங்கிய நேரமே அவரை அந்த றால் பண்ணையில் ஒருநாள் அவரையும் அதில வேலை செய்த பலரும் படுகொலை செய்யப்பட்டார்கள் .

                                                      வாழ்க்கைத் துணை இழந்து விதவையாகி வெள்ளைச் சேலையில் அமங்கலமா இருந்தாலும்   அதுக்குப் பிறகு பர்வதம் மாமியின் ஒரே ஒரு கனவு கவசல்யா .அவளையாவது உருப்படியா படிப்பித்து ஒரு நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தா. ஆனாலும் வாழ்க்கைப் பாதைகள் வழிக்குறிப்புக்கள் இல்லாத ஒற்றையடியில் தான்  எதிர்காலத்தை வரைந்து வைக்கும் என்று அவாவுக்கு தெரியவில்லை 

                                               புண்ணியக்குஞ்சி ஒரு விதத்தில் பார்வதம் மாமிக்கு உறவு முறை.  ஊருக்குள்ள நல்ல அட்வைஸ் சொல்லும்படியான ஒரு மனிதர் அவர்.இல்லாத பிள்ளைக்கு பேர் வைக்கிறது போகாத ஊருக்கு வழி சொல்லுறது போன்ற  பல குழப்பங்கள் அவரைச் சுற்றி இருந்தாலும் அனுபவம் என்பது அவரோடு எப்பவுமே சமாந்தரமாகப் பயணிக்கும் ஒன்று. அவரும் வந்து ஒருநாள் கவுசல்யாவை படுத்த படுக்கையாய்ப்  பாத்துப்போட்டு , கோடாப் போட்ட பாதி சுருட்டை கொடுப்பில  பத்த வைச்சு இழுத்து விட்டுப்போட்டு  

                                                     " எடி ஆத்தை,  என்னடி பிள்ளை இப்படி அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு விழுந்து கிடக்கிறாள் , நீ ஏமாலாந்திக்கொண்டு நிக்கிறாய் "

                                            "  நானும் குஞ்சி முடிஞ்சவரை  எல்லா வைத்தியமும் பாத்திடேன் ,,ஒண்டும் சரி வருகுது இல்லையே  குஞ்சி "

                                                 "அடியே,,பிள்ளை அடிச்சு வளத்தின மாதிரி பாட்டிலே கிடக்குறாள் ஆவெண்டு  வெள்ளி பார்த்தது காணும்,,இப்ப இதுக்கு என்னவும் செய்ய வேணுமே "

                                         "ஓம் குஞ்சி எனக்கு ஒண்டுமே பிடிபடுகுது இல்லை,  கடவுள் என்னத்துக்கு  இந்தப் பிள்ளையப்போட்டு இந்தப் பாடுபடுத்துறார்  எண்டுதானே  எனக்கும் விளங்கவில்லை  குஞ்சி "

                                " எடி ஆத்தை ,,ஊருக்குள்ள செய்வினை சூனியம் காதும் காதும் வைச்ச மாதிரி  நடக்குதுடி ..இதுக்கு மலையாளத்தான் மருந்துதான் சரி வரும் போல இருக்கு, "

                                             " என்ன குஞ்சி  இப்பிடி சொல்லுறியள்,,மெய்யாதானா சொல்லுறியள் குஞ்சி "


                                 " ஓமடியாத்தை , பிள்ளைக்கு ஆரோ சூனியம் வைச்சுப் போட்டிடங்கள் போல கிடக்கு இவள் மல்லாந்தி மல்லாந்தி முழிக்கிறதை பார்க்க , "

                                       " என்ன குஞ்சி சொல்லுறியால் ,,கேட்கவே பயமா இருக்கே ,,எங்களுக்கு ஊருக்குள்ள எதிரிகள் யாரும் இல்லையே குஞ்சி "

                                  "  எடி  ஆத்தை,,உனக்கு  ஒரு நாசம் அறுப்பும் விளங்காது,,இங்க எரிச்சல் பொறாமை பிடிச்சதுகள் தானே ஊருக்குள்ள அசுமாத்தம் இல்லாமல் அலுவலைக் கொடுக்குதுகள் "

                                  " மெய்யாதானா சொல்லுறீங்கோ  குஞ்சி "

                                   "   உனக்கு ஒப்பரேஷன் செல்லத்துரை வயல் வரப்பு சண்டை என்னெண்டு முடிஞ்சது தெரியுமே,,சும்மா உலகம் தெரியாமல் விசர் கதை கதைக்காதை,,எடி ஆத்தை  ,,நான் சொல்லுரத்தைக் கேள்,,இதுக்குள்ள என்னவோ பிரகண்டம் இருக்கு "

                                "எனக்குதான் அப்பிடி ஒரு சொத்து பகையோ,,வேற பகையோ  பிக்கல் பிடுங்கல் ஒண்டும் இல்லையே ,, சரி,,குஞ்சி,,இதுக்கு இப்ப என்ன பரிகாரம் செய்யிறது எண்டு சொல்லுங்கோவன் "


                                    "  ஓம்டி  ஆத்தை , சிங்கள நாட்டில இதுக்கு சொல்லப்பட்ட மருந்து கமே வெதமாத்தாய மத்துரு  செய்வான் ,,அல்லது பண்சாலையில் ஹாமத்துறு  செய்வான் ,,சொல்லி ஒருகிழமையில் நிமித்தி எடுத்துப்போடுவாங்கள் இங்க வெச்சு ஒன்றும் செய்ய முடியாது போல இருக்கு "

                                   "  சிங்கள நாட்டுக்கு கொண்டுபோக எனக்கு என்ன வசதி இருக்கு,,சொல்லுங்கோ பார்ப்பம் குஞ்சி "

                                       "   ஹ்ம்ம்,,,எதுக்கும் ஒருக்கா சாமியம்மா பார்வை பார்த்தால் நல்லம் எண்டு நினைக்கிறன்,,மனுஷி வேப்பிலை அடிச்சு உருவேற கலைவந்து ஏவல் என்னவும் இருக்கு என்றா சொல்லும்,,,நான் அதுதான் முதலில் செய்யவேணும்  எண்டு சொல்லுவன் "  என்று சொன்னார் ,, 

                                                    
                                   சாமியம்மா வீட்டில் சாமியம்மா ஒரு சாதாரண பெண் போல இருக்கவில்லை. கொஞ்சம் தெய்வத்தன்மை மனித வடிவில் வந்திறங்கி ,நம்பிக்கைகள் பொய்த்துப்போன மனிதர்களின் நம்பிக்கையில் பல மாற்றங்களை ஏட்படுத்தியது .அதுக்கும் கடவுள் அனுக்கிரகம் போன்ற விபரங்கள் பின்னணியாகத் தேவை இல்லாமலே இருந்தது .சாமியாடுற பொம்புளை என்று அவாவை ஊரில சொன்னாலும் மனுசி பலருக்கு தெய்வம்போலத்தான் இருந்தா .

                                         ஒருகாலத்தில் வட்டிக்கடை நடத்தின பேரம்பலம் என்பவரின் மனைவிதான் சாமியம்மா. அவர்கள் வட்டிக்கடை அவர்கள் வீட்டிலேயே இருந்தது. முன்னுக்கு  ஜன்னல் கம்பிகளில் கிராதி போட்டு அதுக்கு உள்ளே ஒரு கிராதி போட்டு அதுக்கும் உள்ளே இரும்புக்கு கிராதி போட்டு ஜெயில் போல இருக்கும் அந்த வீட்டுக்கு உள்ளே போறது என்றாலே மூன்று இரும்பு  ஆமைப் பூட்டுக்கள் திறந்த பிறகுதான் போக முடியும். அவ்வளவு அரண்மனைப் பாதுகாப்பு இருந்தது ,   

                                          இயக்க ஆரம்ப நாட்களில் ஒருநாள் ஒரு இயக்கம் அவர்கள் வீட்டுக்கு வந்து துவைக்கைக் காட்டி லாக்கரில் இருந்த எல்லா அடைவு நகையையும் அள்ளிக்கொண்டு போட்டார்கள். அதுக்குப் பிறகு பேரம்பலம் தாடி வளர்த்து அந்த ஜன்னல் கம்பிக் கிராதியை இறுக்கிப்பிடிச்சு வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார் .கொஞ்ச மாதங்களில் ஒருநாள் அந்த ஜன்னல் கிராதிக் கம்பியை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இருந்த நேரம்  நெஞ்சுக்க என்னமோ செய்யுது என்று நெஞ்சை பிடிச்ச ஒரு நாள் சீவன் போட்டுது. 

                                                           அதுக்கு பிறகு அதுவரை சாதாரண குடும்பப் பெண் ஆக இருந்த சாமியம்மா ஒரு முடிவோடு சாமியம்மா ஆகினதா தான் சொல்லுவார்கள். அல்லது வேற காரணங்கள் இருக்க முடியுமா என்று யாருக்கும் எதுவும் சொல்லும்படியாக காரண காரியங்கள் இல்லை  . மூன்று இரும்பு ஜெயில் கிராதிகளையும் உடைச்சு எறிஞ்சு போட்டு ஓவென்று வாசல்கள் திறந்து விட்ட போதுதான் அது சாதாரணமான ஒரு வீடுபோல வந்தது 

                                      பழங்கிணற்றடி வீராளி அம்மன் கோவிலுக்கும், பெட்டிசம் பாலசிங்கம் வீட்டுக்கும் எல்லையாக இருந்தது சாமியம்மா வீடு. மற்ற இரண்டு பக்கமும் வடக்கால உடையார் வளவும், தென் திசையில் மதியாபரணம் டீச்சர் வீடும் எல்லைகளாக இருந்தது. வாழை,கமுகு,தென்னை,ஆடாதோடை  என்று சோலைபோல இருந்த அந்த வீட்டில் சாமியம்மா தனியா இருந்தா .அந்த வீடு விட்டலாச்சாரியார் படங்களில் வரும் பேய் வீடு போல இருக்கும்.

                                             ஜடா மாலை,முத்துமணி மாலை என்று நிறைய பாசிமணி மாலைகள் அள்ளிப்போட்டு , நெற்றியில் பெரிய அம்மன் குங்குமப் பொட்டு வைச்சு நடுவகிட்டு தொடக்கத்தில் கஸ்தூரி மஞ்சள் போட்டு வைச்சு    சாமியம்மா சீத்தாபழம் போல செழிப்பான பெண்மணி. கருத்தகொழும்பான் போல சதைப்பிடிப்பான தேகம். நாலு மணித்தியாலம் அசையாமல் அனுங்காமல் சப்பானிக்கட்டி இருப்பா. கலையாடும் நேரம் காளி அம்மன் வாலாயம் முகம் முழுதும் வந்து ஏறி இருக்கும் 

                                                  கழுவித் துடைத்து  சுத்த சைவம் ,மாதத்தில் அரைவாசிநாட்கள் அம்மன் விரதம் ,மடி ஆசாரம் பார்த்து மஞ்சள்தண்ணி தெளித்த வீடு , நடுஹாலில் பூசை புனஸ்காரம் என்று கலையாடுறதுக்கு நிறைய அம்மன்,ஆதிகேசவன், வீரப்பத்திரர் சாமிபடங்கள் அடுக்கி வைச்ச உயரம் குறைந்த அகலமான  மரமேசை  , நிறைகுடம் , வேப்பிலை, சந்தனம், குங்குமம்,திருநீறு , சாம்பிராணி ,தேங்காய்சிரடடைகள், பூசுமஞ்சள்  ,கப்பூரம் , கைமணி , அதுக்கு முன்னாலதான் சாமியம்மா சப்பாணியில் நாரி வளையாமல் இருப்பா. சாமியம்மா வெத்திலை போடுறது மேளக்காரர் வெத்திலை போடுறதைவிட சுவாரசியமா இருக்கும் . 

                                                          ஒரு பெரிய வெத்திலையை எடுத்து அதை மூன்று தரம் பிரட்டிப் பிரட்டி தொடை சேலையில் துடைத்து கடவிரலையும் சின்னிவிரலையும் இறுக்கி அதன் காம்பை நறுக் என்று  சுண்டி எறிஞ்சுபோட்டு ,ஐயங்கார்  பொட்டு வைக்கக் கிண்ணத்தில் கிள்ளின  மாதிரி சுட்டுவிரலில் வாச சுண்ணாம்பு தொட்டு  எடுத்து அதை வெத்திலையின் பின் பக்கம் என்னவோ எழுதுவதுபோல விரலால் கீறி ,மிக நேர்த்தியான வட்டமா உள்ள சீவல் நாலே நாலு தேர்ந்து எடுத்து நடுவில வைச்சு கடை வாயில அடைவா 

                                                               கடைவாயில் அடைஞ்ச தாம்பூலம் வலதுபக்கக் கொடுப்பில தள்ளிக்கொண்டு நிக்கும். அதை மெல்லவே மாட்டா . மற்றக் கொடுப்புக்கு மாற்றவும் மாட்டா . கொம்பொறிமூக்கன் பாம்பு தவளையை பிடிச்சு வாயில கவ்விக்கொண்டு மிரட்சியில் பார்ப்பது போல இருக்கும். உண்மையில் அந்தநேரம் சாமியம்மாவைப் பார்க்கவே பயமா இருக்கும். சாமியம்மாவும் மற்றவர்கள் பயப்படும்படியான ஒரு வெறித்தனமான பார்வைதான் அப்போது பார்த்துக்கொண்டிருப்பா .

                                   செவ்வாயும் வெள்ளியும் பயனை நடக்குது என்ற பெயரில் தான் சாமியம்மா வீட்டில் கலையாடி தேசிக்காய் வெட்டு நடக்கும்.பயனை பாடப் பல பெண்கள் போவார்கள். ஆண்கள் அதிகம் போவதில்லை. சில விசேட நாட்களில் கழிப்பு கழிக்க என்று ஒரு சம்பவம் நடக்கும் அதுக்கு குறிப்பிட்ட அந்தக் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கு பற்றுவார்கள் . நிழலாக ரகசியம் பேசுவது போல அது மர்மமாகவே இருக்கும் 

                                             பெட்டிசம் பாலசிங்கம் வீடு பின் வளவில் சாமியம்மா வீட்டு வெளியோடு முடியும். பெட்டிசம் கலையாடுறது சாமியாடுறதுக்கு ஜென்மத்து எதிரி.  

                                "  இந்த அறுதலிதான் வெள்ளடியான் சேவலில் மந்திரிச்சு விட்டு அதைக் கழுத்தைச் சுத்தி கூரைக்கு மேலால எறிஞ்சு எண்ட ராசாத்தியின் உயிரை எடுத்துப்போட்டாள், சூனியக்காரக் கிழவிக்கு இன்னும் சாவு வருக்குதில்லயே "

                                           என்று வெளிப்படையாகவே சொல்லித்திரிவர்    அவரோட பொஞ்சாதி இறந்ததுக்குக் காரணமே சாமியம்மா என்று சொல்லிக்கொண்டு திரிந்தார். ஆனால் அதை எந்த அரசாங்க டிப்பாட்மென்ட் இக்கும் பெட்டிசம் எழுதி வேலை நடக்காது என்று நல்லா தெரியும் அவருக்கு. அதனால சாமியம்மா பற்றி இல்லாததும் பொல்லாததுமா வதந்திகளை எப்பவுமே கிளப்பிவிட்டுக்கொண்டிருப்பார். அவர் பொஞ்சாதி புற்றுநோய்  வந்து இறந்தாத்தான் ஊருக்குள்ள எல்லாருக்கும் தெரியும்.அதுதான் உண்மையும் ,

                                          அந்த வீட்டின் பெரிய  நடு ஹோலில் பயனை நடந்தாலும்,அந்த ஹாலின் ஒருபக்கம் உள்ள ஒரு அரை பலவருடமா பூட்டப்பட்டே  கிடப்பது போல அந்த அறைக்கதவில் சிலந்தி வலை கட்டி இருக்கும் . எப்பவோ ஒரு காலத்தில் அந்தவீடு மங்கலமா இருந்த போது ஒரு பொங்கலுக்கோ,தீவாளிக்கோ கட்டித் தொங்கவிட்டு இருந்த மாவிலை காஞ்சு சருகாகி ஒரு நூலில் அந்த கதவுக்கு மேலே இருக்கும். அந்த அறைக்குள் என்ன இருக்கு என்று யாருக்குமே தெரியாது 

                                           சாமியாவுக்கு ஜால்றா போட ஒரு பயனைக் கோஸ்ட்டி இருந்தது. அதில டோல்கி கோபாலு என்ற எங்கள் உள்ளூர் இசைக்கலைஞர் டோல்கி மேளம் வாசிப்பார். அவர் ஒரு பிரபலம் இல்லாத ஒரு இசைக்குழுவின் மேடைகளிலும் சினிமாப் பாட்டுகளுக்கு டோல்கி வாசிப்பார். சாமியம்மா பயனையில் அவர் டோல்கியை கொஞ்சம் உருவேற்றும் நாதத்துக்கு கிட்டிடவா கொண்டுவர அதை துந்தனா மேளம் போல வாசிப்பார்,,அந்த நாதத்தில் பயனை எகிறி எழும்பி அகோரமா சாமியாடும் 

                                             சாமியம்மாவே டோல்கி கோவாலுக்கு மியூசிக் டைரக்ட்டர் போல ஆவேசமாக நல்ல பாம்பு படம் எடுத்து சீறுற மாதிரி ,,உஸ்ஸ்ஸ்   உஸ்ஸ்ஸ்ஸ்    என்று மூச்சை முன்னுக்கு ஓங்கி வெளிய விட்டு 

                                   " டேய்  கோவாலு ,,,ஏத்தடா  நாலு கட்டைக்கு ,  காளியம்மா  நாதம்  பாடுது,,,டேய்  கோவாலு ,,ஏத்தடா  அஞ்சு  கட்டைக்கு,,டேய்  கோவாலு உறுமி உறுமி வாறாள் டா  அங்காள அம்மன்,,,டேய் கோவாலு,,இப்ப  ,,இப்ப ,,,உஸ்ஸ்ஸ்    உஸ்ஸ்ஸ்ஸ் ..கோவாலு  ஏத்தடா  ஆறு  கட்டைக்கு,,அம்மன்  அகோரமா  ஆடி  வாரா  டா "

                                     டோல்கி கோவாலுக்கு அந்த அளவுப் பிரமாணங்கள் நல்லா விளங்கும்,,அல்லது  சாமியம்மாவின் ஆவேசம்  விளங்குமா என்பதும் தெரியாது.ஆனால் டோல்கியில் வார் அறுந்து தோல் பிஞ்சு போறமாதிரி கோவாலு போட்டு முழக்குவார் .

                                                    பயனை தொடங்குமுன் பயனைக்கும், சாமியாடுறதை விடுப்புப் பார்க்கவும் வந்திருக்கும் எல்லாரோட முகங்களையும் சாமியம்மா நல்லா உற்றுப் பார்ப்பா. முகத்தில் ஓலைச்சுவடி வாசிக்கிறமாதிரி அவாவின் கண்கள் ஓடும் ,சிலரை மட்டும் சிங்கள ஆமிக்காரன் செக் பொயிண்டில்  ஐடண்டிக் கார்டில் தமிழ் பெயரைக் கண்டவுடன தமிழரை மட்டும் பெருவிரலை சொடுக்கி கைகாட்டி  அங்காலே வா என்பானே அதுபோல சைகை செய்து எழுப்புவா 

                                                     அப்படி எழுப்பிக்கொண்டு வாற ஆட்களை வீட்டுக்கு வெளியே முற்றத்தில் நிட்பாட்டி வைச்சு அவர்களைச் சுற்றி கொக்கச்சத்தக்கதால் வட்டமாக கோடு நிலத்தில கீறிப்போட்டு அதுக்குள்ள நிக்கச் சொல்லுவா. பிறகு உள்ளே போய் கொஞ்சநேரம் கழிச்சு தேசிக்காய் மூன்றை எடுத்துக்கொண்டு வந்து வெட்டி மஞ்சள் தட்டிலே போட்டு பிரட்டி எடுத்து அதை அந்த வட்ட த்துக்குள் நிக்கிற எல்லார் உச்சம் தலையையும் தேச்சு வலது இடது பக்கமா துப்பிப்போட்டுத்தான் உள்ளுக்கு எடுப்பா 
                                                         

                                     செய்வாய் வெள்ளியில்   இரவு பன்னிரண்டு மணிவரைக்கும் தான் சாமியம்மா வீடு பயனையில் அதிரும். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு குறுக்க அரிவாள் போட்ட மாதிரி சத்தம் அடங்கிப்போடும் . பன்னிரண்டு மணிக்கு சாமியம்மா ஒரு முடித்  தேங்காயில் கப்பூரம்  பத்த வைச்சு  அதை உள்ளங் கையால அடிச்சு அணைச்சுப்போட்டு , ஒரு முழுத் தேசிக்காயை வாயில அடைஞ்சு அதை சக்கையாக  நெரிச்சு துப்பிப்போட்டு இந்தக் கடைசி வசனம் சொல்லுவா 

                                         "   இனிக் ,,காடேறி சுடலை மாறன்  வாற நேரம்,,,இதுக்கு மேலே உங்களை நான் காபாந்து செய்ய முடியாது,,அதுக்கு எனக்கு கட்டளையும் இல்லை,,எல்லாரும் பாதுகாப்பாய் வீடு வாசலுக்குப் போய்ச் சேருங்கோ "

                                                 இதோட  அமைதி ஆகிடும் சாமியம்மா வீடு. அமைதி என்றால் சவுக்காலை போல அமைதி. அந்த அமைதி பயப்படுத்தும்படி இருக்கும். ஒரு சின்னக் குண்டூசி விழுற சத்தமும் வராது. இரவெல்லாம் என்னதான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இருட்டுக்கே தெரியாது. அவ்வளவு  அனுமாஸ்ஸா அமைதிக்குப் பின்னால் நிறைய இந்த உலகத்துக்குச் சம்பந்தம் இல்லாத இன்னொரு உலகத்தின் நாடகம் நடக்கும் .

                                                               புண்ணியக்குஞ்சி ஒருநாள் சாமியம்மா வீட்டுக்கு போய் இருக்கிறார்.சாமியம்மா பூசைக்கு ஆயத்தம் போல தியானம் போல இருந்து இருக்கிறா, புண்ணியக்குஞ்சி ஒரு பக்கமா குந்தி இருக்க,கண்ணை முழிச்சுப்பாத்திட்டு 

                                                   "   இதார் பேச்சு மூச்சு இல்லாமல் குத்திக்கொண்டு இருக்கிறது,,பார்க்க சித்தப்பு போல இருக்கே "    


                                                  " ஓம் ஓம் ,,நான் தான்,,ஆனால் பேச்சு மூச்சு இல்லை என்றால் இப்ப ஆள் முடிஞ்சலோ இருக்கும்,,நான் தான் கையைக் காலை உதறிக்கொண்டு இருக்கிறேனே  "                                                                     

                                  " என்ன சித்தப்பு,,இந்தப்பக்கம் தனியா வந்து மண்டிக்கொண்டு இருக்கிறியள் எண்டு கேட்டேன்  "

                                       " அட பேந்துபார்...ஆடு மாடுகள் தான் கூட்டமா  வரும்  தெரியும் தானே,,நான் வேங்கைப்புலி எப்பவும் தனியாத்தானே  உலாவுறது  அது  தெரியாதோ உங்களுக்கு "

                                        "  அப்ப பின்ன இங்க பயனை பாட வாற ஆட்களை   மாடுகள் ஆடுகள் எண்டுறியளோ,,இந்தப் பிலாக்கணக்  கதை  தானே  சித்தப்பில மற்ற ஆட்களுக்கு  கொதிவரப் பண்ணுறது "

                                   "  இல்லை  இல்ல,,அம்மா,,,கோவிக்காதையுங்கோ ,,ஆணியில்  பொம்புளை பார்க்கப்போனவனுக்கு  எட்டுச் சோடி செருப்பு ஆடியில தேஞ்சு போன மாதிரி,,நான்  வாயைத்திறந்தால் வம்பாதானே எல்லாரும்  நினைக்குதுகள் "

                                      " அது தானே உண்மை,,சித்தப்புக்கு வாயிலதானே  சனியன்,,அதுதானே ஊர் முழுக்க சனம் பறையிறது "

                                        "  ஓ,,வெறும் வாயில கொட்டாவி  விடுற சனம்களுக்கும் வாயைப் போட்டு ஆட்டவும்  அவல் வேணும்தானே "

                                         " உந்தக்  கிரந்தம் மட்டும் இன்னும் சித்தப்புவை  விட்டுப்  போகுதில்லை "

                        " அட அட  அதுக்கும்  எண்ணவும் காய்வெட்ட போறிங்களோ "

                                   " சரி,,உந்த விண்ணணாத்தை அங்கால  வைச்சுப்போட்டு,,வந்த விசயத்தை  சொல்லுங்கோ  சித்தப்பு,,எனக்கு அலுவல் ஆயிரம் கிடக்கு "

                               " எங்கட பர்வதம் தெரியும்தானே ,,அவளிண்ட பிள்ளைக்கு  என்னமோ காத்துக்கறுப்பு ராவுப்பட்ட நேரம் அண்டிப்போட்டுது போல கிடக்கு "

                                                       " ஓம்,,அதுவே வந்த அலுவல் "

                           " ஓம்,,ஓம்  பொடிச்சியை மல்லாக்கா விழுத்திப்போட்டுது .. "

                                 "  அவள்  சடங்கு வைச்சு  குமரி  ஆகிடாள் இல்லையா,,அப்பிடித்தான்  கேள்விப்பட்டன்,,மெய்தானே "

                                              "    ஓம் ஓம் குமரிதான் , ஒரு கையோடு இந்தக்கிழமையில் ஒருநாள் பார்வை பார்த்தால் நல்லம்,,கொஞ்சம் பிள்ளை அலங்கோலமாய்க் கிடக்கிறாள்   "

                                                         என்று கவுசல்யா நிலைமையை சொல்ல, சாமியம்மா ஒருக்கா சாமிப் படங்களைப் பார்த்துப்போட்டு  ,தீட்டுத்  துடக்கு இல்லாத ஒருநாள் அவளைக்கொண்டுவரச் சொல்லி ,ஒரு லிஸ்டில் இன்ன இன்ன சாமான் எல்லாம் வேண்டிக்கொண்டு வரச் சொல்லி எழுதிக்கொடுத்தா . அதுக்குப்பிறகு கொஞ்சநேரம் புண்ணியக்குஞ்சியோடு ஊர் விடுப்புக் கதையில் கொஞ்சம் கேட்க ,எப்பவும் போல புன்னியக்குஞ்சி அவரோட திரைக்கதைகளில் கொஞ்சம் அவிட்டுக் கொட்டிப்போட்டு வந்திட்டார் .

                                                                   அந்த வாரத்தில் வந்த வியாழக்கிழமை கவுசல்யாவை குளிப்பாட்டி கொண்டுபோய் சாமியம்மாவுக்கு முன்னால கிடத்த, சாமியம்மா வந்து கொஞ்சநேரம் ஒன்றுமே சொல்லாமல் பல வருடமா  பூட்டிக் கிடந்த அறையை பார்த்திட்டு, அந்த சிலந்திவலை கதவை மூடின அறையை கொஞ்சநேரம் சந்தேகமாய் பார்த்திட்டு,

                                               ரெண்டு விசியம் சொன்னா ,

                                                  அதில முதல் சொன்ன விசியம் ஓரளவு நம்பும்படியாக இருந்தது . பார்வதம் மாமியின் பின் காணியில் வடமேட்கு  மூலையில் ",,,சாமவேத  பாதாளம்  பதம் ஏழும் பண்ணிய திருட்டுக் கட்டியை .... மண்வெட்டியால் தோண்டிப்பாக்க சொன்ன  ......".அந்த  ரெண்டாவது விசியம்  பிடரி மண்டையில் உலக்கையால் அடிச்ச மாதிரி   தூக்கிவாரிப் போட்டது... 
,
.
..தொடரும் .......