Friday 12 August 2016

அனாமிக்கா மேலும் பதின்மூன்று கவிதைகள்..

...........................................................................034
வடக்கு வானத்தை
வரைந்து முடித்த
பறவைகள்
அசதியாக வந்திறங்கி
நீளவாக்கில்வட்டமாக
அனாமிக்காவுக்கு முன்
பணிவோடு இருந்தன

நானோ
நம்பிக்கையானவைகளையே
நம்பமுடியாமல்
ஒரு பட்டமரத்தில்
முதுகை வசாமாக
முண்டுகொடுதுக்கொண்டிருதேன்
பறவைகள்
இன்னொருமுறை
மேற்குவானத்தையும்
அளவெடுத்து
வரைந்துவிட
அங்கலாய்த்துக்கொண்டே
இறக்கைகளில் வேகம் சேர்க்க
ஒருங்கிசைவான
அன்னாமிக்கா
நினைவுகளில் விரிந்து
பறந்துகொண்டிருந்ததை
அவள்
நீலக்கண்கள்அலைபாய்வதில்
நிரூபித்துக்காட்டினாள்
இன்றையதினம்
இப்படிதான் முடியுமென்று
நினைத்த நொடியில்
சடசடசடசடசடசடவென்று
சிறகுகள் அடிக்கப்
பறவைகள்
எம்பிப்பறந்து
மேகங்களைப் பிரித்துவிட்டன
....................................................................................035

வக்கிர குரூரங்கள்
சில நேரங்களில்
நிர்வாணமான
வார்த்தைகளாகி
வந்து விழுந்துவிடும்போதேல்லாம்
அதன் மூலகாரணம்
முகத்தில் அடிக்கும் அகோரம்தான்.

தோல்விகளையே
தொடர்ந்துகொண்டிருப்பதால்
மரியாதைகள் பற்றிய
உணர்வற்றிருக்கும்
எப்போதும்
முடிவில்லா விடைகளே
அதுவாக
நேரம் தேர்ந்தெடுத்து
கேள்விகளாக மாறிவிடுகிறது
செல்லரித்துப்போன தனிமை
தப்புத்தாளங்களை தேர்வுசெய்ய
நானே என்
கேவலம் கெட்டுப்போன
வக்கிரகங்களைத்
திசையறியாமல்
விமர்சனமாக்கும் போது
அது யாரை திரும்பிப் பார்க்கிறது ?
என்று
அனாமிக்காவிடம் கேட்டேன்
காமம் வெக்கமற்றது
அருவருப்பான
அற்பஉரையாடல்கள்
உன் அடிமனது
வாடிகால் தேடும்
இழிவுநிலை என்கிறாள்
அநாமதேயமாகவே இருக்கவிரும்பும்
அனாமிக்கா.
..................................................................................036

போலி உறவுகள்
உன்னதமானவயில்லையென்று
மாலை வெயிலுக்கு
நிழல் சொல்லிக்கொண்டிருந்த
மரங்களின் கீழே
அனாமிக்கா
இலைகள் சுதந்திரத்தை
இழப்பது பற்றி ஜோசிக்கிறாள்

வெட்கமில்லாத
பிரியங்களில் பழிவாங்கப்பட்டு
மேகங்கள்
விலத்தி விலத்தித்
தள்ளாடும் போதையோடு
கீழ்வானத்தில்
சூரிய நெருப்புத்தேடி
அலைந்துகொண்டிருந்தன
நலுங்குநேரம் தவறவிட்ட
பூக்களின் இதழ்கள் சோம்பலாக
நகர நெரிசலில்
அன்பின் ஸ்பரிசம் கேட்ட
நெருக்குவார மனிதர்களின்
தனிமைக் குரல்
அந்தப் பூங்காவின்
கரைகளில் அலையடித்தது
ஏதாவது சொல்லித் தொலை
அனாமிக்கா
உன் நெடில்மவுனம்
என் பிடிவாதங்களை
எதிர்பாராதவிதமாக
மண்டியிடவைக்குது என்றேன்
மலர்களின் வாசனையில்
வழித்துணைக்கு
ஏதாவது
மிச்சமாக எஞ்சி இருந்தால்
சேர்த்துவைத்துக்கொள் என்றபோது
அஸ்தமன வெளிச்சங்கள்
முன் இருட்டோடு
ரகசிய ஊடலுக்கு
நெருக்கமாகிக்கொண்டிருந்தது.
.................................................................................037


ஒருவிதமான
தந்திரத்தின் அடிப்படையில்
நிகழ்ந்துவிட்டது போலவே
கோடையில் மழை
இடைச்செருகலாக வந்தது
உலகமே
தனிப்பட்ட முறையில்
நேற்றோடு அந்நியமானது போல
அனாமிக்கா
நனைந்துகொண்டே
நடையை விடாமல் தொடர்ந்தாள்
கடந்தகாலதைப் பேசுகின்ற
இனிய ஏக்கமாக
மனதையழுத்திக் கொண்ட
துயரமெல்லாமாகவும்
இருவரும்
ஈரம் சிதறிய வழியெங்கும்
கதைக்காமலே கடந்துகொண்டிருந்தோம்
ஆனாலும்
இருள் மேகம்
இயல்பில் இருந்த போதும்
அதன் உறவுமுறையில்
மவுனங்கள் மொழிபெயர்க்கும்
துளிகளில்
குழப்பங்களை மட்டுமே
நினைத்துக்கொண்டு நான் நடந்தேன்
காரணம்சொல்லப்படாத
இடைவெளிகளைத் தேடாதே
எதட்காக
மழை பெய்கிறது என்பதை விட்டு
எப்படிப் பெய்கிறது
என்பதை பாரென்ற போது
அனாமிக்கா
பிரியங்களின் பிரகாசத்தை
புரியவைத்தாள்
...................................................................................038

ஏரிக்கரையில்

கதை நடந்துகொண்டிருந்தாலும்
ஏனோதானோ போல இல்லாமல்
என் கால்களிலும்
இளமையோடிருப்பத்துக்கான
குறிகோள்களிருந்தது
அனாமிக்கா
கரையோரமெல்லாம்
பிச்சி மலர்களின்
இடுப்பைச் சுற்றி வளைத்து
நாணல்கள் நிமிண்டிப்பார்ப்பதை
இடை இடையில்
நின்று பார்த்து அசைந்துகொண்டிருந்தாள்
உண்மைகளை
உடைத்து உடைத்துப்
பேசுவதுபோலவே
சதிராடிக்கொண்டிருந்த
நீரலைகளை
கரைகள் நக்கிக்கொண்டிருந்தன
பார்ப்பதில்
ஒன்றுமேயில்லை
நிறங்களின்மாயைக்கு
எண்ணம்கள் வரையும்
வட்டங்களுக்கு
வெளியே இருக்கின்றன செயல்கள்
என்றாள் அனாமிக்கா
பேய்க்காற்றின்
கடும்போக்கை
இலைகள்
விமர்சிக்கத் துணிந்த போது
பேர்ச்மரங்கள்
உதவிக்கு வரவில்லை போலிருந்தது
அன்றைய
நடைப்பயணத்தின்
புழுதி கிளம்பிய பாதையெல்லாம்
புதுவிதமான அமைதி.
.........................................................................039

" ஞானக்கூத்தன் கவிதைகள்
உனக்கு விளங்குமா
அனாமிக்கா ?
எனக்கவர் பிரத்தியேக மொழியும்
சிக்கலான உருவகநடையும்
பலநேரங்களில்
புரியவே புரியாது " என்றேன்
" கடந்து போகும் காலம்
நிலையாமையைப்பற்றிகொண்டு
சொல்லாமலே
நழுவி விடுவதைப்போல
திரும்பி பார்க்க வைக்கிற
அவர் கவிதைகளின்
ரகசியங்கள்
உனக்கு சொல்லட்டுமா " என்றாள்
அந்தக்
கவிஞரைப் படிக்காமலே
கடந்து இழந்த
எல்லாவற்றின் மீதும்
ஆர்வத்தைத்தூண்டுகின்ற
வாஞ்சையோடு வந்து தெறித்தன
அனாமிக்காவின்
விளக்க சந்தங்கள்
" கற்பனைகளற்ற உண்மையில்
முறுக்கிவிடப்பட்ட
எண்ணப் பரிமாற்றங்கள்
ஆதாரமான
உணர்ச்சியைப் பகிர்வதுக்கு
சொற்களாக மாறி
இடைஞ்சலாகவே
இருக்கவேண்டிய அவசியமில்லையென்று
ஞானக்கூத்தன்
நிருபித்தார் " என்றாள்
இப்பிடித்தான்
என்ன சந்தேகம் கேட்டாலும்
அது பற்றிய விவரணைகளின்
அதீத அர்த்தங்களில்
எல்லைகளைத் தாண்டியே பேசுவாள்
அனாமிக்கா
நானோ
எப்போதும்போல
ஒரு வட்டத்துக்குளே நின்று
முட்டாள் ஆகிக்கொண்டிருப்பேன்.
...............................................................................040
என்றோவொருநாள்
கேட்கப்படலாம்
அந்த நேரத்தில்
எதையாவது இடைச்செருகலாம்
சமாளிக்கலாமென்றிருந்த
கேள்வியை
ஆற்றின் கரை மணலில்
நேற்று உலாவியபோது
அனாமிக்கா கேட்டேவிட்டாள்
அந்த
உரையாடல் தொடங்கிய
நொடிகளில்
எனக்கு தனிப்பட்ட முறையில்
மிகவும்கோபமாயிருப்பதும்
அந்நியமானதுமான
ஆத்மா
விழித்துக்கொண்டது
வாக்குவாதம்
வம்பு இழுக்கும் போதெல்லாம்
நான் எனக்குள்ளிருந்து
துல்லியமாகப்
பின்வாங்கிய என்னையே
வெளியேற்றிவிடுவதை
பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
சிக்கலான கேள்வி
அதன்
இயல்பில் இருக்கும்போதே
அதில் வன்மத்தையும்
சந்தேகங்களையும் உருவாக்கிவிட
நேர் மாறாக
விடைகள்என்னுடைய
குறைகளையும் குழப்பங்களையும்
மட்டுமே
மூளைக்கு அனுப்பியது
எப்படியோ
புரிந்து கொள்ள முடியாத
ஆனால்
பிரியத்தின் நேசத்தில்
சுவாசிக்கும்
முழுமையான மறுபுறத்தை
ஏக்கம் எட்டிப்பார்க்கும்
மனநிலையில் அனாமிக்கா இருந்ததால்
என் பதில்
ஏற்கனவே சொன்னதுப் போல
எனக்கு மறுபிறப்பாகியது.
..................................................................................041


சொல்லிமுடியாத
கதைகள் ஒவ்வொன்றிலும்
குவிமையம்
எத்தனை பெரிய
உணர்ச்சியாகவிருந்தாலும்
உரையாடல்கள் மூலமாகவே
கடத்திவிட முடியுமென
நம்பிக்கொண்டிருப்பவள்
அனாமிக்கா.
நிகழ்கால
சௌகரியங்களின் கதகதப்பில்
இறந்தகாலம் அறுபட்டு
எதிர்காலத் திகைப்பில்
நுழையத் தயங்கும் தத்தளிப்பு
எனக்கென்று
எப்போதுமுள்ள ஆதங்கம்
மிகுந்த நம்பகத்தன்மை
புனைவுகளோடு
உண்மைக்கு நெருக்கமாக
முடிவிலாவது
பதிவு செய்யப்பட்டிருகிறதா
என்றெல்லாம் பார்ப்பாள்.
சம்பவங்களின்
விட்டேந்தியான மனப்பான்மைகள்
பொருந்தாமல்
குறிக்கோள்களற்ற சம்பவங்களில்
இல்லாத ஒன்றை
'உருவாக்க' முனைவதே
கற்பனையின்கோளாறுதான் என்பாள்
கவிதைகளின்
பிழிவுகள்இதில் இல்லைதான்
ஒத்துகொள்கிறேன்
எழுதுவதின்
கொண்டாட்ட மனநிலையையாவது
தக்கவைத்துக் கொள்வதால்
என் எழுத்து
தப்பித்துவிடலாம் என்றேன்.
.................................................................................042

மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும்
பாவனையில்
தினுசான வகையில் திணிக்கப்பட்ட
நினைவுகளைத்
தின்று முடித்து ஏப்பம்விட்டு 
நடுச்சாமம் போல
சாந்தியடைந்தது
அந்தக் கவிதையின் வரிகள்
" Desire is an empty landscape
where lovers are two dew drops
Like a Breeze sleeping on a flower
Oh! Can hear a buzz in two hearts silently
Curls and Moustache shower in the heavenly rain
Hatred left and Happiness filled the void
Wind has no boundaries
In the sleep of the youth, two yearnings
Upon waking,flying colors
With Hands locked let us cross the boundaries
Like a lightning in the cloud
Like a feet for the path
Whose life with whom? Whose body with whom? "
அனாமிக்கா
இதை ஆங்கிலத்தில் சொன்னபோது
ஒவ்வொரு நொடியும்
அவளை விழுங்கிக்கொண்டிருக்கும்
வெற்றிடம்
எழுதியதாகவிருக்கலாம்
என்பதுதான் முக்கியமாக
என் வியப்பில் முனைப்பாகவிருந்தது
இப்பிடித்தான்
அச்சொட்டாக அசத்தி வைத்து
அனாமிக்கா எழுதுவாள்
" யாருடைய இலையுதிர்கால
வார்த்தைகள்இவைகள்
அனாமிக்கா
ஜீவனோடு வாசமாகிவிட்டதே
எழுதிவிட்டுப் போன பேனாவின்
முகவரியையும் சொல்லிவிடு " என்றேன்
அனாமிக்கா
பதிலென்று எதுவும் சொல்லவேயில்லை
" திசைகளற்ற
காலத்துடன் சமாந்தரமாக
எடுத்துக்கொண்டு செல்லவும்
நரை தட்டும்போது
தலையில்க் குட்டி
சாரல் மழையை ஞாபகப்படுத்தவும்
இப்படிச் சில கவிதைகள் தானே
சகாப்தங்கள் கடந்தும்
தேவைப்படுகிறது " என்றாள்
அனாமிக்கா
..........................................................................043

சந்தரப்பங்களைக் 
கையிலெடுக்கும் மனிதர்கள்
அதிகாரங்களைத்
தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற
அனாமிக்கா
உன்னைப்போல தர்மசங்கடங்கள்தான்
தற்குறிகளென்று
என்னைப்பார்த்துச் சொன்னாள்

மோதிக்கொள்வது
சட்டப்படி பிழை என்பதாலும்
தேடித்தேடி
அலையமுடியாது என்பதாலும்
இன்றுவரை
பழிவாங்கப்படவேண்டியவர்களின
நீண்டகாலப் பட்டியலில்
பல பெயர்ககளை
மறந்துவிட்டேன் என்றேன்

முகமெல்லாம் சிவந்து
உனக்காக
வாழ்ந்திருக்கிறேன் என்றுசொல்ல
ஒரு நண்பன் இல்லாதவன்
நடுக்கடலில்
நக்குத்தண்ணி என்றாள்

காலத்துக்கு வயதாகி
ஞாபகம் மறந்தாலும்
மிக மிகத்தெளிவாகச்
சொல்லி விடுகிறேன்
பலரின் முகங்கள்
விடுப்பட்டுப் போய்விட்டதென்றேன்

அனாமிக்கா
விஸ்வரூபம் எடுப்பாளென்று நினைக்க
அவளோ
தர்மம் வெல்வது பற்றிக்
கீதையின் சாரத்தில்
குணங்களின் ப்ரபாவங்கள்,
ஸ்வரூபமான தத்வம்,
ரஹஸ்யம் கொண்ட உபாஸனை,
கர்மம் தேடும் ஞானம்
எல்லாம் விளக்கத் தொடங்கினாள்


.........................................................................044


அனாமிக்கா 
பார்க்காத போது 
காற்றவள் புதிய புத்தகப் 
பக்கங்களை 
மழைக்காலமென நினைத்து 
புரட்டி வாசித்துக்கொண்டிருந்தது

மொழிக்குள்
இருக்கின்ற அத்தனை
வைராக்கியமான
வார்த்தைகளையும்
கலைத்து எழுதி எழுதிக்
களைத்துவிட்டேன் என்றேன்

அர்த்தங்கள்
திரைபோட்டு வைத்துள்ள
அசாத்தியங்களை
வெறுமனே கரைகளில்
நின்று கொண்டு உணர்வது
ஆபத்து என்றாள்

கண்டடைய முடியாத
ஏமாற்றங்களே
எப்போதும் வாசமாகி
ஒரு தளம் கிடைக்கும்போது
வசனம் போல வசமாகி
ஒற்றை வரியாகி விடுகிறது

நிழலான மனசில்
நான் எதுவரை
நீ எதுவரை என்பதை
முடிவிலியான வேதமாக்கி
அனாமிக்கா
ஏறி மிதித்து ஓடிக்கொண்டிருக்கும்
மேகங்களுடன் ஒப்பிட்டாள்

சருகுகள்
இன்னொருமுறை ருதுவாகி
இலைகளாகும் நாளை
நினைத்துக்கொண்டிருக்க
அனாமிக்காவோ
அடுத்தொரு பழைய புத்தகத்துக்குள்
இறங்கிவிட்டாள் 


...............................................................045


எப்பவாவது 

மழை பெய்து முடித்து 
வெளிச்சங்கள் படிஞ்சு 
மண் ஈரமான நாட்களில் 
அனாமிக்கா 
ஒரு கவிதை எழுதுவாள்

அதில்
அதிகம்பேர் போலவள்
உணர்ச்சி உத்தேசங்களோடு
மொழியைச் சுற்றிவளைத்து
சேறுபோலக் குழப்பி
சூறாவளி போலாக்காமல்
மெல்லெனவே நேராக
தென்றலோடு பேசத்தொடங்கி விடுவாள்

பதில்கள்
பழிவேண்டப்படும்
கேள்விகளே
அதிகம் அதிகமாயுள்ள
அவள் கவிதைகள்
வாசித்து முடிய
வியப்புக்குக்குறிகள் தேடுவதில்
ஒருநாளும் ஏமாற்றியதில்லை

உதாரணமாக
" .....ஒரு முடிவோடு
இரகசியமாக்
கருக்கலைப்புச் செய்தவளின்
வலிகளும்
இரகசியமானவை
அவனோ
ஒரு கணத்தின் காமத்தைத்
திசைதிருப்பியத்துக்காக..... " என்று
" முகமுள்ள ஏமாற்றம் " என்ற
நீண்ட கவிதையில்எழுதினாள்

அனாமிக்காவின்
கவிதைமொழிக் கச்சிதமே
சந்திக்க முடியாத
தண்டவாளங்களை
எறியங்களாக்கி
இரண்டு முடிவிலிப் புள்ளியில்
சந்திக்க வைப்பாள்

இப்பிடித்தான்
சிக்கலேயில்லாத வார்த்தையில்
மிகப்பிரியமான
அர்த்தங்களை உள்செருகி
நெஞ்சில பனிக்கட்டியை வைத்து
அது கசிந்து உருக்கும்
குளிர் போல
ஒரு செக்கன் உள்ளிறங்கி
மனதை நனைத்து விடுவாள்.


..........................................................................046


நிறங்களே 

காட்சியில் நனைவது போல 
கோடுகளில் முட்டிப் 
புள்ளிகளில் தொடங்கும் 
மொழியில்
அனாமிக்கா ஓவியம் வரைந்தாள்

பறவைகளை
வானத்துக்குள் வரைவதென்றால்
அவளுக்கு மிகவும் பிடிக்கும்
ஆனாலும்
ஒருநாளும் சிறகுகள் காற்றோடு
உடன்படுவது போல வரையவே மாட்டாள்

தாய்ப்பறவை .
தாழப் பறக்கும் போது .
அதன் வால்பகுதியை
சிரத்தை எடுத்து வரைந்து .
குஞ்சுகளை
நிழலாக்கி மறைத்துவிடுவாள்

பலமுறை கேட்டும்
பறவைகள் நிலத்தில் நிட்பதை
வரைந்ததே இல்லை
அதட்கான
விளக்க விவாதங்களைக் கேட்டே
களைத்துப் போயிருந்தேன்

வண்ணப் பூசுமைகள்
நிலமெல்லாம் சிதறிப்போயிருந்த
ஒரு மந்தார நாளில்
மிக நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்
அனாமிக்கா
பறவையின் கால்களை நிலத்தில்
நிறுத்தி வைத்து வரைந்தாள்

ஏனோ தெரியவில்லை
இறக்கைகைகள் ஓய்வில் தெரியும்படியான
அந்த ஓவியத்தில்
காட்சிப் பிழைபோல
பறவைகளின் முகத்தில்
சொல்ல முடியாத
ஏமாற்றமேயிருந்தது .