Monday 16 July 2018

திணிக்கப்பட்ட அமைதி !

கவிதையை அதிகம் பேர் தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்து வாசிப்பதில்லை, முக்கியமாக நாள் முழுவதும் இடைவிடாது கையடக்கி அலை பேசிகளில் இன்டர்நெட்டில் உலகத்தை விலைபேசி இணைத்துக்கொண்டிருக்கும் இளையவர்கள் வாசிப்பதில்லை. வயதானவர்கள் கண்ணாடியைப் போட்டு வாசிப்பதைப் பார்த்து இருக்கிறேன்.
                                                      
                                                               சிலர் வாசித்து முடிய தமக்குள் புன்னகைப்பார்கள். சிலர் " ஹ்ம்ம் " என்று பெருமூச்சு விடுவார்கள் ,சிலர் முகத்தை " ஓ " என்று ஆச்சரியம் ஆக்குவார்கள். சிலர் " வாவ் " என்று பிரமிப்பார்கள். சிலர் "அடாடா " என்று ஆர்ப்பரிப்பார்கள் . சிலர் மவுனத்தை மொழியிடம் கொடுத்துவிட்டு முகத்தில் எந்தவிதமான சலனமும் காட்டமாட்டார்கள். ஒவ்வொருவர் மதிப்பீடும் வேறு வேறு விதமாக இருக்கும்.
                                                          
                                                                    இதில ஏதோ ஒரு உணர்ச்சியை அந்தக் கவிதை வாசிக்கும் அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளதால் அது ஒரு நல்ல கவிதையாக இருக்கவேண்டும் என்று நினைப்பது. ஏன் என்றால் இன்றைவரைக்கும் நல்ல கவிதை என்று ஒரு கவிதையைச் சொல்ல எந்த அளவீடுடுகளும் இல்லை. ஆனால் ஒரு நுளம்பு கடித்த அளவு உணர்ச்சி கொடுப்பதால் அதை எழுதிய கவிஞ்சனின் நோக்கங்களில் ஒன்று தன்னும் நிறைவேறி இருக்கிறது என்றும் நினைப்பது .
                                                               
                                                                     அந்தக் கவிதை அவர்கள் பல வருடம் முன்னமே வாசித்து இருக்கலாம். கவிதைகள் காலத்தில் தொடர்ச்சியாகப் பிரயாணம் செய்துகொண்டிருக்கும் ஒன்று. அதுக்கு மூன்று காலமும் ஒன்றுதான். நேற்று எழுதியதின் எதிர்வினை நாளையும் நடக்கலாம் என்பது போல.ஒரு கவிதைக்கு இறப்பு என்பதே இல்லை. மரணம் கவிதையைப் பொறுத்தவரை நடக்கமுடியாத ஒரு செயல்.

                                         2017  / 2018 ல் முகநூலில்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   எல்லாவற்றையும் புத்தகம் ஆக்கும்  ஒரு திட்டத்துக்கு முன் முயற்சியாக  சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகின்றேன்.

விதி 
கடந்த காலத்துடன் 
பிணைக்கப்பட்டிருக்கிறது போல
ஆரம்பித்தபின்  நிறுத்துவதுதான் 
மிகக் கடினமாகவிருந்தது. !
ஒரு விஷயம் சொல்ல வேண்டும்,
பாதைகளில் நிறுத்தி ஓய்வெடுப்பதற்கான
இடங்களென்று எதுவும் கிடையாது,
மொழியின் சிக்கல்களின் வழியாகவே
மீட்சியளிக்கும் நீண்ட பயணத்திலிருந்து
விழித்துக்கொள்ளும்
சுதந்திரத்தைக் கண்டடையத் துவங்குகிறது
கவிதை !.



*
காதலுக்குத்தான் 
முற்றுப்புள்ளியே இல்லையே! 
எனவே
ஒவ்வொரு நாளும்
அன்று 
எது வரை கதைக்க வேண்டும்
எதுவரை கொஞ்சவேண்டும்
எதுவரை உரியையெடுக்கவேண்டும்
எதுவரையில் நெருங்க வேண்டும்
என்பதையெல்லாம் முன்கூட்டியே
குறித்து கொள்ள வேண்டியதாயிற்று !
ஒரு நீள நதிக்கரையில்
நீண்ட நடைப்பயணம் போல
ஆனந்தமாயிருந்தது
கொஞ்சம் போல உண்மைதான் !
ஆனால்
மிதமிஞ்சிய சபலங்கள் 

மனம்மாறுகிறது என்பதைத் தவிர 
 வேறெதுவும் நிகழ்வதில்லை !


*
நேர்மைதான் 

நேர்வழியில்க் கிடைக்காமல்  போனாலும் 
இயல்புத்தன்மையை 
அப்படியே பின்பற்ற ஆரம்பித்த
இப்போதைக்கும்
அதற்குமுன்னருக்கும்
பார்வைகளில் என்னவென்ன வித்தியாசங்கள் ?
சில பிறழ்வுகள் இருக்கக் கூடும்
எந்த நிச்சயமும் இல்லை !
எதையெல்லாம் தனித்திருந்து பார்க்கிறோமோ
அதிலெல்லாம் தெரிந்துகொண்டிருக்கிறது .
உள்நோக்கம் !



*
முற்றிலும்
அந்நியமானவனாகி
கிளர்ச்சிகளையும்
கற்பனைகளையும்
இப்போது  நினைத்துப் பார்க்கும்போது
கொஞ்சம் ஆச்சரியமாயிருக்கிறது.!
மனநிலை அன்றாடத்தைப்
பாதித்திருக்கக்கூடிய விதத்தை பற்றிதான்
எண்ணம் இருக்கும். !
ஆழத்தில் மிதப்பதுபோல
சிலசமயம்
அதன் இயல்பு குறித்த
கவனச் சிதறல்களும் அழகு தான் !


*
கால இடைவெளியைச்
சமன் செய்கிறது
ஒருசில பள்ளிக் காலத்துப்
புகைப்படங்கள் !
அடையாளம்
தெரியாமல் மாறிவிட்டிருந்தது
முகத்தின் வாளிப்புகளிலிருந்த
இளமை ஜவ்வனம் !
பிதுங்கிவிட்டது போலக்
காலம் இறந்துவிட்ட ஒன்றாக
இருந்தாலும்,
நினைவுகள் குறித்து
சந்தேகங்கள் ஆரம்பிக்கும்
இத்தனை ஆண்டுகளில்
வயதின் வியப்பை விலக்க முடியவில்லை !


*
நேரடியாகப்
பரிச்சயமில்லாதவர்களுடன்
அவளாகக் கதைதொடுப்பதில்லையென்றாள் !
தெரிந்தும்  எந்தவிதமான அச்சங்களும்
இல்லையென்பதாலா
நட்புக்குள் வந்து விழுந்தாள் ?
அஞ்சல்கள் எழுதும்போதெல்லாம்
இயல்பாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ள
முகம் மறையும் தருணங்கள் !
அசட்டுத்தனமான இளிப்புடன்
ரகசியங்களையெல்லாம்
பின்னிருத்தி வைப்பாள் !
ஒருநாள் கேட்டேவிட்டேன் !
அன்றுதான்
முதலும் கடைசியுமாகக்
கற்பனை நிஜமாக மாறியது!


*
என்னைத்தவிர
இவ்வளவு கேவலமாக வேறு யாரவது
செய்திருப்பார்களா ?
எதிரில் வந்து முகத்தில்
வீசிக்கொண்டிருந்தது !
உணராராது போல்
அடைந்தையாகவிருந்தேன்
வலியவந்து பேச்சுக் கொடுத்தது.!
நடந்ததைப் பற்றி
துருவிக் கேட்பதாக இல்லாமல்,
மிக இயல்பாக
சில ஆறுதல் வார்த்தைகள்!
காற்றுக்கும் பூடகமாகச் சொல்லி
நேசிக்க வைக்கும் இதயமிருக்கு !


*
வழக்கமான
உறுதிமொழிக்குப்பின்
அவசரமாக ஏதொவொன்றைச்
சாட்டாகச் சொல்லி 
மழுப்பிய துயர் முகத்தில்
சிரிப்பை வரவழைத்து
புரிந்து கொள்ள முயல்வதுபோல
என்னைக் காப்பாற்றி
வெளிக்கிடும் போதுதான்
எதிர்பார்த்த ஏதோவொன்றைச்
சந்திக்காதது போன்ற
வெறுமையுணர்வு !


*

மிகப்பரிச்சயமான
துயரமொன்றுக்கு
அனுதாபம் தெரிவிப்பது போல
நகரம் !
விட்டு வெளியேறி சுமந்தலைந்து
தொடர்பற்றுப்போகுது
வெறிச்சோடிப்போன
தெருக்கள் !
உயிர்தெழுதலில்
சுருங்கிவிட்டது போல தோற்றமளிக்கும்
மனிதர்கள் !
எல்லாவிதத்தில்
யதார்த்தத்தை மீறுவதாகவுள்ளது
திணிக்கப்பட்ட அமைதி !



*
ஒரு  தனிப் பறவை 
எதிர்வினைகளில்லாத 
மழை மேகத்தை ,
சுழல் காற்றின் வாய்ப்புகளில்ப்
புறக்கணிப்புக்களை,
எல்லைகளை நீட்டி வைக்கும்
ஆழ்கடலின் வானத்தை,
சமரசம் செய்துகொள்ளாத பெரும் புயலின்
சமிக்ஞைகளை
எதிர்கொள்ளவேண்டிவந்தால் .
சரியான நேரத்தைத் தேர்ந்தேடுத்து .
சிறகுகளை மட்டும் விரிக்கத் தெரிந்தால்
வேறெந்தத் திசைகளும் தேவையில்லை !.



*
ஒரு அமைதிப் பூங்கா,
ஒரு போர்வீரனின் சிலை,
ஒரு  பள்ளி ஆசிரியை
ஆரம்பக் குழந்தைகளுக்கு
அதிதீரவரலாறு விளக்குகிறாள்!
அவன் கையில்
பதம் பார்க்கின்ற
கூர்மழுங்காத வாள்,
விசுவாசத்தின் ஆதிக்கக் குறியீடாக
இரும்புக் கவசங்கள்,
முன்னம்கால்கால்களில்
எகிறிப்பாயும் வெள்ளைப் புரவி ,
கண்களில் ரத்த நிறத்தில் கொலைவெறி,
அதிகாரமென்றால்
அடுத்தது அராஜகம்தானே!
குழந்தைகள்
தமக்குரிய எல்லைக்குள் நின்று
குதிரையின் வாலைத்
தடவி விளையாடுகிறார்கள் !



*
நம்
நிகழ்கால யதார்த்தங்கள்
ஒரேமாதிரி
இருக்கப்போவதில்லை !
அடிக்கடி  விருப்புக்களின்றி
நேசிப்புகள் மாற்றப்பட்டலாம் !
காத்திருக்கையில் பழகிப் போன
உணர்ச்சி விஷயங்களும்
பழசாகிப்போன பாவனை முகங்களும்
உங்களுக்கு நினைவு வருகிறதா?
தயவு செய்து அபத்த தரிசனங்களை
அழித்துவிடுங்கள் !



*
உஷ்ணமாகும் வருடத்தின்
இந்த மாதத்துக்கு
இது மிகவும்குளிர்தான் , 
வடமேற்கே
நீல மலைகளில்
இன்னும் பனிபடர்ந்திருக்கிறது,
வெடித்தபடி நொறுங்கிக்கொண்டிருக்கிற
அசையா நதியின்
சரிவான கரையில்
சறுக்கியபடி கீழிறங்குது
உறை பாளங்கள் ,
தேவையற்ற சுமையென
நினைத்திருக்கலாம்
ஒரு மஞ்சள்ப் போர்வையை
போர்த்திவிட்டு நகருது
வடதுருவ சூரியன் !


*
தீவிரமாகத் தேடிப்பார்த்து
எல்லைகள் கிழிக்கப்படுகின்ற இடத்தில்
தூக்கத்தைக் கெடுக்கிறதுபோல 
அந்தக் கனவு !
என்னைத்தவிர
யாரெல்லாருமோ
அந்தரங்கமான பங்கெடுப்புக்களில்
வந்துவந்து போனார்கள் !
என்னையறியாமல்
நுழைந்தபோதும்
திருப்திப்பட்டுக்கொள்ள  ஏதுமிருக்கவில்லை !
சில சமயம்
ஒரு கனவென்பது
எனக்குரியதென்பதையும்
தாண்டிப்போய்விடுகிறது.!


*
குறுகலான
சந்து முடுக்கில்
இருட்டுப் பிரவேசம் ! ,
சட்டென்று
உரையாடல் துவங்கும் போதே 
ஒருமையில் தான் ஆரம்பித்துவிடுகிறது!
நொடிப்பொழுதில்
அடையாளம் கண்டு
விசாரிக்க வருகிறார்கள்!

நான்  நானாகவேயிருக்கிறேன் !
இப்போதெல்லாம்
முன் போல் கோபப்படமுடிவதில்லை.
என்னிடமிருந்து
மனம் அயர்ந்து விடுகிறது.1
இப்போது
நான் நிட்பதைக்
கணக்கிலெடுக்காமல்க்
கடந்துவிடுகிறார்கள் .!
வெளியேறிவிட
அந்த விளிப்பு ஒன்றே
போதுமானதாயிருந்தது !


*
பின் மனசில்
அலைக்கழிப்புக்கள்
மேல் அமிழ்த்தி
ஓடிக்கொண்டேயிருக்கும்
காட்சி ஞாபகம் ,
புரிதல்கள்
முற்றிலும் வேறாகவிருந்தாலும்
தினவாழ்க்கை
கொஞ்சமாய் என்னவென்று தெரியாத
ஏதோ ஒன்றை
உறிஞ்சிக் கொண்டிருக்கிறது,
கண் காணாமல்
அடிமனசில் ஒளித்து
அது எப்போது வேண்டுமானாலும்
தீர்ந்து போகக் கூடும் !


*

இப்போதுதான்
புறப்பட்டுப்போனாள் !
இருட்டு விழுங்கிக் கொண்டது .
எவ்வளவு நேரமென்று தெரியவில்லை !
வானம் கவிந்திருந்து
மழை எப்போது வேண்டுமானாலும்
தடமழிக்க  வருமென்பது போலிருந்தது.!
வழியனுப்பி நினைக்க வைத்து விட்டு
விளக்குகள் அணைக்கப்பட்ட
நொடிப்பொழுதில் அடையாளம் கண்டு
மறக்காமல்த் தேடி வந்து விடுகிறது
காலடியோசை !



*
நெற்றிக்குக்
கை வைத்துக்கொண்டு
உயரத்திலிருந்து
கீழ் நோக்க

 பிடரியில் லேசாகக் கிறுகிறுத்தது,
ஏழுமாடி படியிறங்கிவிட
கையைப் பிசைந்தபடி
சாலை முழுதும் போக்குவரத்து நெரிசல், !
குறுக்க பறந்த
பறவை 
துணை அழைப்பதைத்
தீனமாய்க் கேட்டபோதும்
எனக்கதை விளங்கிக்கொள்ள முடியவில்லை !
மின்கம்பியிலிருந்தவொரு பறவை
சாந்தமாகவே திரும்பிப் பார்த்தது . !


*


நிறுத்த முடியாத 
ஒரு சந்தத்துடன் தொடரும் 
பயணம் போலிருக்கிறது நாட்கள், 
நம்பிக்கையில்  உயிரற்ற காற்று
உல்லாசக் கொண்டாட்டம் ,
ஏதோவொரு ஒழுங்கற்ற வரிசையில்
மீண்டும் மீண்டு
மீண்டும்  

கலைத்துத் தொகுக்கப்படும் நினைவுகள்,
மனதளவிலாவது
எனக்கென்று அதிகளவு சுதந்திரம்,
ஒரு வேளை
நான் இதைக் கனவு கண்டிருக்கலாம்,!