Tuesday, 12 July 2016

அனாமிக்கா...முதல் பத்துக் கவிதைகள்

............................................................... 001

சுழண்டு வீசிய காற்றில்
ஒரு சருகும் 
ஒன்றிரண்டு இலைகளும்
அனாமிக்காவின் 
மடியில் விழுந்தது 
அவளோ
காற்றின் திசையைக்
கண்டுபிடிக்கும் முனைப்புடன்
சிந்தனையில் மூழ்கியிருந்தாள்

வார்த்தைகள்
உள்நுழையமுடியாத
மவுனத்தில்
முன்னொரு போது இதேபோல்
நடந்ததை
உனக்கு நினைவூட்டமுடியாவிட்டால்
நானும் அதை மறந்து போகவேண்டுமா?
என்று கேட்டாள்

இனி சென்று பார்க்க முடியாத
ஒரு காலத்தை
வயதாகிய ஒரு பருவத்தை
தேடமுடியாத
நம் அதிர்ஷ்டங்களை
நீதியற்ற தீர்ப்புகளை
உனக்கு இதையெல்லாம்
நினைவூட்டுதல் வருத்தமானது
என்றேன்

நினைவுகள் அழியும்
அதன் பெறுமதிகளை
தராதரம் மறுக்கப்படும்
ஒரு கணப்பொழுதில்
எல்லாவற்றையும்
வலிந்து கொண்டே இழுத்தெடுப்பது
அவமானம் என்றாள்

நான் பார்ப்பதை
அவளும் உள்ளுணர்வில்
இல்லாத நேரத்தில் கவனித்துக்
கண்டுபிடித்துவிட்டதாக
மகிழ்ச்சியில்
இது வெறும் ஒரு சம்பவமில்லை
எனக்கூற விழையும்முன்னே
அடுத்த மரத்துக்கு
நகர்ந்துவிட்டாள்.


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''002

சின்னச் சின்னச்
சண்டைகள் கருக்கொண்டு
பயமுறுத்திய போதெல்லாம்
விஷமத்தனமான
பார்வைகளை வீசி
அனாமிக்கா
நம்பிக்கைகளை உடையவிடாமல்
கதவுகளை அடைத்துவைத்தாள்

அதன் பிறவு
நீலக் கண்கள்
காவல் வைத்த
ஒவ்வொரு இரவையும்
விடிந்தபின் பார்த்துக்கொள்ளலாம்
என்று சொல்லியே
கடந்து விட்டேன்

தேரை இழுத்துத்
தெருவில விட்ட மாதிரி
கடைசியாகச் சந்தித்த ஏரிக்கரையில்
அவள்
சடுதியாகக் கிளம்பிப்போனத்தில்
அதிர்ச்சியாகிய
நேரம் ஓடாமல் நின்றது

மறந்து வைத்து விட்ட
கையடக்கியை
எடுப்பதற்காகச்
மறுபடியும் அங்கே சென்றேன்
பறவைகள் சத்தம் கேட்டது
பார்த்தும் பாராமலும்
காற்று இறுக்கிக்கொண்டிருக்க
அனாமிக்கா
உட்காந்திருந்த சீமெந்துக்கட்டில்
அவள் சூடு
அப்பிடியே இருந்தது.


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''003
அனாமிக்காவுக்கு
இதெல்லாம் தெரியாதென்பது
நேற்றுத்தான்
தெரிய வந்த போதும்
கடவுளறிய
எனக்கும்அவளுக்குமிடையில்
எதுவுமேயில்லை என்பதும்
பொய்

இவளவுநாளும்
கட்டாயம் சிலதாவது
தெரிந்திருக்குமென்றுதான்
நினைத்துக்கொண்டு
மேம்போக்காக்
கதைத்துக்கொண்டிருந்தேன்

திறமையாகக்
கதை எழுதத் தெரிந்த
அவளுக்கு
இதுவரை ஒருவரும்
நேராகவே வந்து
இதெல்லாம் ஏன் தெரியாதென்று
கேட்டதில்லை என்றுசொன்னாள்

அப்படித் தெரிந்தாலும்
ஒரு கேள்வியும்
ஒரு தயக்கமும்
ஒரு விடையும்
ஒரு சந்தேகமும்
ஒரு முடிவும்
உள்ளே உழன்று இருக்கும்.

அன்னாமிக்கா எழுதியது
வியர்வை நாளில்
அவள் டூரியான் பழ
கமக்கட்டு வாசம்போல
எல்லோருடைய கவனத்திற்கும்
எழுந்து போகவில்லையென்ற
கவலை எனக்குமிருக்கு

அதைப் பற்றி யோசிக்க
பிரபஞ்சம் போல்
அது வளர்ந்து கொண்டே
அவளையே விழுங்கக் காத்திருக்கும்
நாளில்
இன்னொருமுறை
அனாமிக்கா யார் என்று
உங்களுடன்
கதைக்க விரும்புகிறேன்.


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''004
முகமூடியை
நானாகவே கழட்டிவைக்கப்
பயப்பட்டுக்கொண்டு 
வாழ்வின் பயனற்ற தன்மை
பகல்களை திரைச்சீலைகளாக்கி
இழுத்துமூட வைக்கும்
சுய உணர்வின்றிய பொழுதுகளில்
நான் எப்போதும்
உளறிக்கொண்டேயிருப்பேன்

குற்றவுணர்ச்சி பற்றி
இனியெப்போதும் பேசாதே
என்பாள் அனாமிக்கா
எங்கெல்லாம்
சாத்தியமாகுமோ
அங்கிருந்தெல்லாம்
சிந்தனைகள்
திருடப்படுகின்றனவென்பது
அவளின் முகத்தில்தான்
பக்குவமாகும்

மிகச்சிறந்த பொழுதுகளில்
வாழ்வதாக
நம்ப வைத்துக்கொண்டு
உத்தரவாதமாக
இறந்து கொண்டிருக்கிற
நிகழ்வுகளை
ஈவிரக்கமின்றி பதிவு செய்கிறேன்

என்னை உசுப்பிவிட்டுப்போட்டு
அனாமிக்கா
வெளிச்சங்கள்
அவளுக்காகவே
வடிவமைக்கப்பட்டது போல
வேடிக்கை பார்க்கிறாள்
நான்
இரவுகளையாவது யாரும்
திருடாமலிருக்க
ஜன்னலையும் கதவுகளையும்
இறுகிச்சாத்துகிறேன்


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''005

நிறங்களில் நிறைந்த
குதியுயர நீண்ட சப்பாத்துக்கள்
வாசலில் இருக்கின்றன
அனாமிக்காவிடம் .
அவற்றின்
முழங்கால் வரையான
விளிம்புகளில்
பூனை மயிரோ
குதிரை வாலோ போல
ஏதாவதொரு விரிசடை

வடிவம் பெறநினைக்கின்ற
தன் முனைப்பால்
எப்போதும் உலாப்போக
பாதுகாப்புகளற்ற
சருகுப் பாதைகளின்
தேர்ந்தெடுப்புக்கு
அலைய அவசியமில்லை.

அவளினொரு
திசை வழியாகிய
நடத்தலின் முடிவில்
நிறைந்து கிடக்கின்ற
சப்பாத்து அடிகளின்
வெட்டு அடையாளங்களை
கண்டெடுக்கத்தான்
எனக்கு நேரம் போதாமலிருக்கிறது

மென்மையானவளின்
ஒவ்வோர் அடிவைப்புக்களும்
ஈர மண்ணைப்
பொறுத்தவரை
இயல்பான தாய்மையின்
இன்னுமொருவித பதிவுதான்.

" பின்தொடர்ந்து
பாதச்சுவடுகள் படித்த
நாட்களின் மீதான அரவணைப்பு
என்னை முறித்து விடுகிறது"
என்றேன் ஒரு நாள்

இரட்சிக்கின்ற பார்வையில்
நிமிர்ந்து சிரித்து
தன் வெறும் பாதங்களை
கருங்கல்லு நிலத்தில்
குறுகுறுவெண்று
உரசிக்கொண்டிருந்தாள்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''006
நேற்று முழுவதும்
தூறலோடு 
ஊடுருவிக்கொண்டிருந்த 
மழையையை
உள்ளங்கை விரித்து
குமிழிகளில் புள்ளிகளாக
சிலமணித்துளிகள்
வேண்டிக்கொண்டிருந்தாள்
அனாமிக்கா

உருக்குலைந்துகொண்டிருந்த
எனக்கோ
அவள் வெளிர்முகத்தின்
பிரகாசங்கள்
பிடிப்புக்களை முறுக்கேற்றப்
போதுமானதாயிருந்தது

எப்போதும்
செய்துகொண்டிப்பதில்
சுவாரசியங்களடைந்து
தொடர்ச்சியாக இரசிப்பவள்
நேற்றய மழை நிக்குமுன்னே
இடையில்
நனைந்து கொண்டே
நடக்கத் துவங்கினாள்.

சாரல் மாலை
தார் வீதியெங்கும்
சாய்மனையில் உட்காந்து
ஆடிக்கொண்டிருக்க
சின்னஞ்சிறு
வெள்ள ஓடைகளை
வாய்க்கால்களின்
அடைசல் மறித்துக்கொண்டிருந்தது

கோடை மழையில்
தெப்பலாக நான் குளிப்பேன்
என்பது மழைக்குத் தெரியும்
ஆனால்
" மழைக்கு உன்னைப் பிடிக்காதடா "
என்கிறாள் அனாமிக்கா
அவள் விருப்பத்க்கு
எதிர்ப்பெதுவும் சொல்லாமல்
குடையை விரிக்கிறேன்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''007
ஓடைக் குளிர்மையில்
இசைக் குறிப்புக்களை
சப்தஸ்வரங்களாக்கி
நரம்புகளிலிருந்த
விண் இழுவிசையை
இறக்கி வைத்தாள்
அனாமிக்கா

நீரில் நீந்தும்
சின்னஞ்சிறு மீன்களோ
அந்த நாதம்
தண்ணியில் கரைந்திருந்தது
இளவெய்யிலோடு
பிரிந்து வருகிறதென்று
நினைக்கின்றன

நிழல்தரு மரத்திலிருந்து
ஹம்மிங் செய்யும் பறவை
வயலின் விட்ட இடத்திலிருந்து
பின்தொடரும்போது
இலைகளை அமிழ்த்தி
மழை தூற ஆரம்பிக்கிறது

தோள்ப்பட்டை
விலா எலும்புகளுக்கு
நெருக்கமாகிய
அந்த இசைக்கருவி
சுதந்திரமாக
அட்சரம் பிசகாத
அதிர்வுகளை அடுத்த நிலைக்கு
ஏற்றிவிடுகிறது

ஏதோவொரு
முக்கியமான முடிவெடுத்து
இதுவரைக்கும்
அவள் வயலின் இசைப்பது
எனக்குத்
தெரியக்கூடாதென்பதில்
அக்கறையோடு
அவள் பெயர் போலவே
சந்தங்களையும் மறைத்திருக்கிறாள்
அனாமிக்கா.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''008
பின்னிரவெல்லாம்
அனாமிக்கா
இருட்டின் மறைப்பில்
பூக்களின் வாசம் தேடி
பூங்காக்களில் உலாவுவதாக 
இயல்பாகச் சொன்னாள்

உன் வயதுக்கும்
மை வைக்கும் இளமைக்கும்
அதெல்லாம்கூட
எவளவு ஆபத்துகளை
வீட்டுக்குகே
வாசல்தேடிக் கொண்டு வருமென்று
நோர்ஸ்க்கில் சொன்னேன்

மிகஅலட்சியமாக இருந்தாள்
புரியும்படியாக
சுவுடிஷ் மொழியில் சொன்னேன்
அதுக்குமவள்
மூக்கை உறிஞ்சிச்சுழிக்க
ஆங்கிலத்தில்
அடுக்கி அடுக்கிச் சொன்னேன்

அதையும் உதறிப்போட்டு
சொரணை இல்லாமலிருக்க
மண்டையில் இறங்கிற மாதிரி
தமிழில் சொன்னேன்
கழுத்தை நெரிப்பது போல
அவள் ங்கே என்று
எதற்காக இப்ப நாலு மொழியில்
திட்டுகிறாய் என்றாள்

வயதுப் பெண்
பருவம் தவறாத
இரவெல்லாம் அலைந்தால்
நாலு பேர்
நாலு விதமாகப் பேசுவார்களென்று
சிம்போலிக்காகச் சொன்னேன் என்றேன்

அனாமிக்கா
ஹஹஹஹ என்று சிரித்தாள்
பிறகு கொஞ்சம் ஜோசித்து
ஹிஹிஹிஹி என்று இழித்தாள்
பிறகு அடக்க முடியாமல்
ஹோஹோஹோ என்று நெளித்தாள்
பிறகு என்னவோ நினைவு வர
ஈஈஈஈஈஈஈ என்றாள்

கடைசியாக
கழுதை போலப்
பல்லைக்காட்டிய போதுதான்
வரிசை தவறாத
ஆரோக்கியமான
பாண்டிய நாட்டு முத்துக்களை
முதன் முதலாகப் பார்த்தேன்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''009
அனாமிக்கா
நிறைய சொற்களைப்
பொக்கிஷம் போல
வார்த்தையாக்குவாள்
அதற்கெல்லாமே 
ஆதர்சங்கள் எப்போதுமே
அச்சிடப்பட்ட புத்தகங்களேயென்பாள்

அவற்றின்
முதல் பக்கம் முதல்
கடைசி பக்கம் கடைசியாக
முகத்தைக் கொடுத்து வைத்து
வாசனைகளில்
நிரவி எம்ப்பிப் பறந்து
முகர்ந்து பார்ப்பாள்

பலசமயங்களில்
கவிதைகளின்
இறுதித் தடத்தை
அளவுகோலாக்கி
சைடோனியா விலியம்ஸ்சை
அறிமுகம் செய்தவளே
அவள்தான்

கதைகளையவள்
கண்டுகொள்வதேயில்லை
புனைவுகள்
சுய இன்பம் போன்ற
பொய்களின் போலி என்றும்
சுயசரிதைகளை
சவுகரியமாக்கும் அளவுக்கதிகமான
அலட்டல் என்பாள்

ஆழமற்றிருக்கின்ற
வியாக்கியானங்கள்
வெறும் அற்ப வியாபாரம்
திசைகளைத் தேடிக்கொண்டேயிரு
தேடல் திணறும் கடலில்
முழ்கிப் போவாய்
நான் அலை போல வந்து
காப்பாற்றுவேன் என்பாள்

நானவள்
மைதான அகலமான
கன்னம் இரண்டிலும்
சைபிரஸ் கிரேப்புருட் நிறத்தில்
கலிங்கு பாயும்
கண்களை வர்ணித்து எப்போது
ஒரேயொரு
கவிதை எழுதலாமென்பது பற்றி
மேலோட்டமாகச்
சிந்தித்துக்கொண்டிருப்பேன்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''010
உயரமான
இடங்களில் உலாவும் போதுதான்
நிமிடத்தில் மயக்கும்
நிபந்தனையற்ற
சந்தோசக் குழந்தைகளின் 
வாஞ்சை போலவே
எப்போதும் அனாமிக்கா
தெத்துப்பல்லு தெரியச் சிரிப்பாள்

முடிவேயில்லாத
சலிப்புக்கள்
பற்றிய தெளிவேயில்லாத
அற்பத்தனமான
சிறிய கேள்விகளை
அப்பாவிபோலக்
அந்த நேரம்தான் கேட்பேன்

தற்கொலை
தற்காலிகத் தீர்வென்றும்
கடைசி நம்பிக்கையே
இறந்து கொண்டிருப்பவன்
கொஞ்சநாள்
வாழ நினைப்பதும் என்பாள்

என் நிறங்களற்ற
மவுனத்தை வாசித்து
பெரிய வானத்தை விட
நீளமானது
பறவையின் சின்னச் சிறகென்று
நானே எதிர்பாக்காத
திசைகளிருந்து
நம்பிக்கையும் தருவாள் ....

பிரபஞ்சத்தின்
நிரந்தரமான அர்த்தம்
அளவிலா அன்பு
என்றவள் முடிக்கும்போது
ஜன்னல் விழிம்பில்
கால்களை உதறி
காற்றை உள் இழுத்து
பெருமூச்சுவிட்டு
சுதாகரித்துக்கொள்வேன்.

.
.