Sunday 29 November 2015

பெரிய மாமா ..முதலாவது புயல்

ஆண்களுக்கு ஒரு கிலோ தவிடு தூக்கிற பலம் இருக்கும் வரை ஆம்பிளை என்ற அடையாளம் வயது வளைந்து  வயதாகிக்கொண்டு போனாலும் பெண் ஆசையை மட்டும்  விலத்தி விட்டுப் போகா வைக்காது  என்று சொல்லுவார்கள். அதை அவளவு இலகுவாக வெளியே தெரியும்படி யாருமே காட்டிக்கொள்வதில்லை. சில ஆண்களுக்கு  அந்த ஓர்மம்  ஒரு நிழல்போல இயங்கி  வெறிபோலச் சதிராடும் நேரமெல்லாம் நேரடியாகப் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான்.  

                                        வயதான காலத்தில் ,அதுவும் படுக்கையில் விழுந்த  நேரம் கணவன் உதவியாக இருக்கவேண்டுமென்றுதான் எல்லா மனைவியும் நினைப்பார்கள். முப்பது சொச்சம்  வருடம் தர்மபத்தினியாக வாழ்ந்த மனைவிக்கு உதவியாக இருக்க வேண்டிய நேரம் பெரியமாமா தனக்குச்  சமையலுக்கென  உதவிக்கு இன்னுமொரு அழகான பித்தளைக் குடம் போன்ற பெண்ணை நடு வீட்டுக்குள்ள கொண்டுவந்து வைச்சுக்கொண்டு நல்ல குருநாதன் போல உபதேசம் செய்து, நடுச்சாமம்  உபத்திரவமும் கொடுத்துக்கொண்டு இருந்தார்.  

                                       பெரிய மாமா எங்கள் குடும்பத்துக்கு தூரத்து அம்மாவழி உறவு. வயதில் அதிகமாகவும், பெரிய தோற்றமும் ,பெரிய வேலையும் அந்த நேரம் செய்துகொண்டு இருந்ததால் அவரை பெரிய மாமா என்று சொல்லவேண்டி வந்திருக்காலம் போல .  அதை விட எங்களின் ஊரில் இருந்த அவரே கட்டிக்  குடிபுகுரல் எல்லாம் பெரிதாகச் செய்த, முன்னுக்கு பெரிய தாமரைத் தொட்டி கட்டி , அதுக்கு நடுவில காஸ்மீர் ஏரிபோல விசிரியடிச்சு பைப் தண்ணி பூப்போல விரிஞ்சு பறக்க விட்டு , அதைச் சுற்றி பெரிய சீமெந்து  வாசில் போகன்வில்லாப்  பூக்கள் வளர்த்த  பெரிய  கல் வீட்டில் வசித்தார். எல்லாமே அவரைப் பொறுத்தவரை பெரிசாதான்
இருக்க வேண்டும் .

                                                வாழைச்சேனை அரசாங்க பேப்பர் கொம்பனியில் மார்கெட்டிங்  மனேஜர் என்ற விற்பனை முகாமையாளராக  வேலை செய்த பெரிய மாமா பென்சன் எடுக்கும் காலம்வரை மட்டக்களப்பில் தான் இருந்தார்.  உண்மையைச் சொன்னால் அந்தக் கிழக்கு  மாகாணத்தில் வடக்கிலிருந்து போய் வசித்தார்.  இந்த " வசித்தார் " என்ற வரிக்குள் இன்னுமொரு வாழ்கையே அவருக்கு மீன் பாயம் தேன் நாட்டில்  இருந்தது.  அது  எழுவத்தெட்டில்  மட்டக்களப்பில் புயல் அடிச்ச நேரம் தான் அரசல்புரசலாக வெளியால தெரியவந்தது. ஆனால் அதையும் பெரியமாமா புயல் போல எழும்ப விடாமல் அமுக்கி வைச்சிட்டார்  . 

                                        பெரிதாக எழும்பிப் பேசிய குடும்பத்தில் இருந்து அவர் வந்து இருந்தாலும் , பேப்பர் பக்டரி அரசாங்கக் குவாட்டசில்தான் தங்கி  இருந்து, மூட்டை கடிக்கும் ஒரு பழைய கட்டிலில் படுத்து எழும்பி, தானே சமைச்சு சாபிட்டுகொண்டு  வேலை செய்தார் என்றுதான் யாழ்பாணத்தில் சொல்லுவார்கள் ஆனால் அவர் அரசாங்கக் குவாட்டசில் இருக்கவேயில்லை.  இன்னொரு பெண்ணின் மடியில தலை வைச்சு உல்லாசமாக தான் வாழ்ந்தார் என்று அவரோட அதே பக்டரியில் வேலைசெய்த எங்களின் அயல் ஊரில் வசித்த இன்னுமொரு மாமா  சொன்னதை யாருமே நம்பவில்லை .

                                       மட்டக்களப்புப்  புயல்  வங்காளா விரிகுடாவில் தாளமுக்கமாக எழும்புது என்று ரேடியோவில் அறிவிச்ச நேரமே பெரியமாமா பேப்பர் பக்டிரியை விட்டுப்போட்டு , வந்தாறுமூலைப் பாலம் எல்லாம் கடந்து பாதுகாப்பான கிராமப் பக்கம் இருந்த , அவர்  கீப் ஆக வைச்சு கொண்டு சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்த அம்மணியின் வீட்டுக்கு போட்டார். புயலே அவர் பேப்பர் பக்டறியை  விட்டுப் போனாப் பிறகு மூன்று நாள் கழிச்சுதான் மட்டக்களப்புக்கு குறுக்கா அடிச்சது 

                           யாழ்பாணத்தில பெரிய மாமி ரேடியோவுக்கு பக்கத்தில அங்கால இங்கால நகராமல், கையில தேவாரப்புத்தகத்தை வைச்சுப் பாடிக்கொண்டு , சமைக்காமல் சாப்பிடாமல் உறங்காமல் இருந்து கொண்டு 

                                " கடவுளே , எண்ட மனுஷனுக்கு ஒண்டும் நடக்கக்கூடாது, பாதுகாப்பா இருக்க வேண்டும் , இந்த மனுஷன் எல்லாத்தையும் போட்டது போட்டபடி  விட்டுப்போட்டு தப்பி ஓடி வருவம் எண்டு இல்லாமல் வேலை முக்கியமெண்டு பக்டரியைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு நிக்குதே, எனக்கு இந்தாள் உயிர் முக்கியமெண்டு ஏங்கி ஏங்கி சாக இந்த மனுஷன் புயலுக்க நிக்குதே  " 

                                     என்று எல்லாக் கோவிலுக்கும் நேர்த்தி வைத்துக்கொண்டு இருந்தா.  அவா நேர்த்தி வைத்த கடவுள்கள் அவரைக் கைவிடவில்லை பாதுகாப்பா இருக்க வேண்டிய இடத்தில தான் கடவுள்களும் அவரை வைச்சு இருந்தார்கள். 

                                             புயல் அடிச்சு ஓஞ்சு பேப்பர் பக்டரி ஏறைக்குறைய முக்கால்வாசி அழிந்துபோன பின் ஒருகிழமை கழித்துதான் பெரிய மாமா பக்டரிக்கு வந்து பார்த்திருக்கிறார். அதுக்குப் பிறகு சில மாதம் அவர் யாழ்பாணத்தில் வந்து நின்றார்,எல்லாச் சனங்களும் போய் 

                          " மெய்யாத்தான் கேட்கிறம் , வங்காள விரிகுடாவில் இருந்து வந்த  புயல் எப்படி அடிச்சது, அதில நீங்கள் எப்படி உயிர் தப்பினீங்கள், உன்னான  பேப்பர் பக்டரிக்கு முன்னால நிண்ட லொறிகளின் ஹோர்ன் எல்லாம் தானா அடிச்சுதாமே,,"

                                      எண்டு கேட்டார்கள்,பெரிய மாமா அதுக்கு புயலுக்கு முன்னுக்கு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்று பேப்பர் பக்டிரியைக் காப்பாற்றின மாதிரி கதைகளை அவிட்டு விட்டுக்கொண்டு இருந்தார். அந்தக் கதைகளும் வங்காள விரிகுடா போல பெரிசு பெரிசாத்தான் இருந்தது .

                                      பெரிய மாமா  பேப்பர் பக்டரி திருத்த எடுத்த மாதங்கள் முழுவதும் எங்கள் ஊரில்தான் நின்றார். பெரிய ஒரு யுத்தத்தை வென்ற ஜெனரல் போல மீசையை முறிக்கிகொண்டு எழுப்பும் விட்டுக்கொண்டு திரிஞ்சார்.  பெரிய மாமி நேர்த்திக்கடன் வைச்ச மாதிரி, வைரவருக்கு வடை மாலை செய்து போட்டா, பழங்கிணத்தடிப் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கினா. வீராளி அம்மனுக்கு நெருப்புச் சட்டி தலையில வைச்சு வேப்பிலைக் காவடி எடுத்தா, நல்லூர் கோவிலுக்கு  போய்ப் பத்து நாள்  முழங்காலில் உள்வீதியில் அடியழிச்சு அருச்சனை செய்தா, பெரிய மாமா அதைக் கணக்கில் எடுக்கவில்லை ,
  
                             "  எடியே இப்ப என்னத்துக்கு இந்த காவடி ஆட்டமும், வேப்பிலைக்  கூத்தும் ,,நான் மட்டக்களப்பில் புசலுக்கால தப்பி வந்தது என்னோட மண்டையப் பாவிச்சு, இந்தப் புயல் என்ன இன்னும் எத்தினை புயல் வந்தாலும் தப்பி வருவன், புயல் என்னை என்ன செய்யும்,,அவளவு பயந்தவனா நான் இருந்தா இங்க இருந்து போய் மட்டக்களப்பை இந்த ஆட்டு ஆட்டுவனா,,சொல்லு பார்ப்பம் விளையாடத் தெரிஞ்சவனுக்கு எங்கயும்  சொல்வழி கேட்டு வித்தை விளையாடும் , இங்க ஒரு வீடுவாசல் .. போல... அங்க ஒரு வாசல் வீடு.. ,"

                                      என்று பிடி கொடுக்காமல் பேசிக்கொண்டு இருப்பார். ஆனால் பின் நாட்களில்  பென்சன் எடுத்த நேரம் அவர் இதே  நடுவீட்டுக்குள் அவரே கொண்டு வந்த அழகான பித்தளைக்குடம் போன்ற நடுத்தர வயது சின்னப் புயல், ஒரு நாள் தாளமுக்கமாகி நாலு பக்கமும் சுழண்டு அடிச்சு, சதிராடி ,எல்லாத்தையும் பிரட்டி , பெரிய ஒரு மலையையே தள்ளி விழுதி , அவரை ஒரேயடியாகச் சரித்துப்போட்டுப் போன நேரம்  அதன் அபரிமிதமான கவர்ச்சியில் பெரிய மாமாவின் தந்திரங்கள் எதுவுமே பலிக்கவில்லை. 

                                               பெரிய மாமா சுமாரான , ஆனால் ஒருவித சந்திர வம்ச லட்சணம் போல அழகான தோற்றமுள்ளவர் ,நல்ல சுத்தமான கலப்பில்லாத கறுப்பு நிறம். அரசாங்க வேலை செய்தாலும் வெள்ளை வேட்டிதான் கட்டுவார், வெள்ளை நீளக்கை சேட்டுத்தான் போடுவார்.அதை மடிக்க மாட்டார் . தோளில எப்பவும் ஒரு கலர்த்  துவாய் போட்டிருப்பார்.  அதிலதான் அவர் இன்னும் வடிவா இருப்பார். அவரோட முகத்தில எப்பவுமே எதையும் அலட்சியமாக எதிர்கொள்ளும் சிரிப்பு இருக்கும் . அந்த  அலட்சியக் கண்களில் ஒருவிதமான விரும்பின எல்லாத்தையும் அடையும்  லட்சியமான வசீகரம் பதுங்கிப்பாயத் தயாரா இருக்கும் .

                                              அவரிடம் எந்த ஒரு குறை சொல்லும்படியான  ஒரு கெட்ட பழக்கமும் இல்ல்லை. குடி வெறி, புகைத்தல் , ஏன் வெத்திலையே போடமாட்டார். சாப்பாட்டில பயங்கரக் கவனம். உடம்பு உடைஞ்சு போயிடும் என்று எப்பவுமே சுத்த சைவம் . அதால உடட்பயிட்சி செய்யாமலே கட்டுமஸ்தான பர்மாத் தேக்குமரத் தேகம் . பரந்த நெஞ்சில  அடர்த்தியான  மயிர் , எண்ணை போட்டுப் பிடிச்சுவிட்ட மாதிரி உடம்பு அந்த வயசிலும் அரிசி குத்திற  நாட்டு உரல் போல இறுக்கமா இருக்கும். 

                                               அந்தக் கண்களின் வசீகரம் அதுதான் அவரோட மன்மத லீலைகளுக்கு பெண்களை மயக்கவைத்த மன்மத அம்பு.  அவரோட இவளவு அடக்கமான சோலி சுரட்டுக்குப் போகாத மனுஷன் என்ற முகமூடிக்குப் பின்னால் பயங்கரமான முரட்டுத்தனம் இருந்தது. அது பூனை போலப் பதுங்கிக்கொண்டிருந்தது. அதுவே புலிபோலப் பாய்ந்த சம்பவங்கள் பலது இருந்தும் வெளியால ஒருத்தருக்கும் தெரியாது. 

                                             சின்ன வயசிலேயே அவருக்கு அந்த அரசாங்க உத்தியோகம் கிடைத்து இருக்கு .  பெரிய மாமி பதின்நாலு வயசில சாமத்தியப்பட்ட அடுத்த மாதமே மறு சாமத்தியப்பட முதலே வீட்டுக்க பூந்து இழுத்துக்கொண்டு வந்து இரவோடு  இரவாக்  கலியாணம் கட்டினார்.  அதை சட்டப்படி கவுரவமாக்க கோவிலில் தாலி கட்டினார்.   

                                         பெரிய மாமாவுக்கு மூன்று பிள்ளைகள் ,ரெண்டு பொடியன்கள்.  பெரிய ராசன், சின்ன ராசன் என்ற  ரெண்டு பொடியன்களும் என்பதுக்களின் தொடக்கத்திலேயே இயக்கங்களில் இழுபட்டு உருப்படாமல்  போயிடுவாங்கள் என்று பயத்தில கிழக்கு ஜெர்மன்  டி டி ஆர் விசா எடுத்து, ஒருத்தனை  ஜெர்மனிக்கும் , இன்னொருத்தனைப்  பிரான்ஸ்க்கும் பிடிச்சு அனுப்பிப்போட்டார் .

                                             " கலாச்சாரம் பண்பாட்டு  எவளவு முக்கியமெண்டு  இதுகளுக்கு விளங்குதில்லையே ..சின்ன ராசன்,,காடை வத்திப்போய்  வெள்ளைகாரிகளோடு அலையுறானாம் எண்டு பெரியவன் சொல்லுறான்,,இந்தப் பொடிக்கு என்ன குறைச்சல் எண்டு எனக்கு விளங்கேல்ல, இங்கனேக்க வரப்பண்ணி ஒரு ஊர்  உலகத்தில அறிஞ்சு நல்ல ஒரு  பொடிச்சிய கையில பிடிசுக் கொடுப்பமெண்டா வாரானும் இல்லையே ..."

                                                 எண்டு சொல்லுவர் . அவர் பென்சன் எடுத்து இருந்த காலத்தில் பிரான்சில்  ஒரு  இலங்கைப் பெண்ணைத் திருமணம் முடித்து இருந்த அவரோட மூத்த மகன் பெரிய ராசன் மட்டுமே காசு அனுப்பி தொடர்பில் இருந்துகொண்டு இருந்தான் . சின்ன ராசன் தொடர்பே இல்லை.

                                                  அவருக்கு ஒரு மகள் ராசாத்தி என்று இருந்தா .அந்த  மகள் யாழ்பாணம் கம்பச்சில் படிச்சுக் கொண்டு இருந்த நேரமே தன்னுடன்   சயன்ஸ் பக்கல்டியில் படிச்சுக்கொண்டு இருந்த முல்லைத்தீவு பொடியனை லவ் பண்ணிக் கலியாணம் செய்யப் போறேன் என்று ஒற்றைக்காலில் நிக்க ,

                                   " பொம்பிளைக்கு ஒழுக்கம் எவளவு முக்கியமெண்டு  விளங்கமாட்டேன்  எண்டு நிக்கிறியே காதல் தான் உனக்குப் பெரிசு எண்டு நினைச்சி எண்டா ,,நீயே உன் முடிவில போயிடு,,பிறக்கு என்னையும்  கொம்மாவையும்  நினைக்கத் தேவையில்லை,, ஒழுங்கு  மரியாதை  பண்பாடு இல்லாத பொம்புளைப் பிள்ளையை வீட்டுக்க வைச்சிருக்க எனக்கும்தான் பரிசுகேடு..." 

                               என்று சொல்லி  ராசாத்தி  விருப்பத்துக்கே கலியாணம் கட்ட விட்டார் . அவா பெரிய மாமா குடும்பத்தோடு தொடசல் இல்லாமல் திருகோணமலைக்கு டீச்சிங் வேலை எடுத்துக்கொண்டு போட்டா. அங்கே போய் யாரை லவ் பண்ணிக்கொண்டு இருந்தாவோ அவரையே கலியாணம் கட்டி சந்தோசமா வாழ்ந்துகொண்டு இருந்தா என்றுதான் சொல்லுவார்கள். காதலித்துக் கட்டுறதே  சந்தோஷமா இருக்கத்தானே.

                                    அதுக்குப்பிறகு பெரிய மாமியும்,பெரிய மாமாவும் வயதாகித் தனியாதான் அந்த பெரிய கல் வீட்டில் இருந்தார்கள்.  ஆனால் நல்லா உடுத்து, நல்லாச் சாப்பிட்டு  நல்ல வசதியாகத்தான்  இருந்தார்கள். இன்னுமொரு நடுத்தர  வயதுப் பெண்னை அவர் சமயல்வேலைக்கு என்று நடுவீட்டுக்குள் கொண்டு வரும் வரை. ஆனால் இந்தக் குளறுபடிகள் வெளியே அதிகம் யாருக்கும் தெரியாது. காதும் காதும் ஓட்ட வைச்ச மாதிரி பெரியமாமா அதைக்  காய்நகர்த்தி நடத்திக்கொண்டு இருந்தார் 

                              பிறகு எப்படி இதெல்லாம் எனக்கு தெரியும் என்று விடுப்பு அறிவதில் அனுபவம் உள்ளவர்கள் கேட்கலாம். நான் மட்டுமே அந்த வீட்டுக்கு உள்ளே நடமாட அனுமதிக்கப்பட்டேன். பெரியமாமாவுக்கு என்னில நல்ல விருப்பம், இப்பபோலத்தான் என்னைப் பார்க்க அப்பவும் நல்லவன் போல இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை  நம்பிக்கையும் அதிகம் அதால அனுமதித்தார். ஆனால் நான் இப்ப போலத்தான் அப்பவும் நிழலாக பல திருகுதாளம் செய்துகொண்டு இருந்தேன் . ஆனாலும்  யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த ,கரண்ட் இல்லாத அந்த வருடங்களில்  நான்தான்  அவர்களுக்கு கூப்பிட்ட  கைக்கு  எல்லா உதவியும். 

                               முக்கியமா அவர்களுக்கு தண்ணி இறைக்கிற மிசின் கொண்டு வந்து கிணற்று தண்ணியை நீண்ட பைப் போட்டு ஏற்றி  அவர்களின் உயரமான வாட்டர் டேங்க் இக்கு அடிச்சு நிரப்பிறது . அவர்களுக்கு டவுனில  கடைகளுக்குப் போய் சாமான் வேண்டிக்கொண்டுவந்து கொடுப்பது. எல்லாத்துக்கும் எனக்கு கைச் செலவுக்கு காசு தருவார் பெரிய மாமா. பள்ளிக்கூடம் இல்லாத சனிக்கிழமை  தின்னவேலி சந்தைக்கப் போய் மரக்கறி சாமான் வேண்டிக்கொடுப்பேன், மிச்சக் காசும் திருப்பிக் கேட்க மாட்டார் . ஞாயிற்றுக் கிழமை போய் அவர்கள் வீட்டில  தொட்டாட்டு வேலை எல்லாம் செய்து கொடுப்பேன். காசு பார்த்துப் பாராமல் தருவார்.    

                                   பெரிய மாமாவுக்கு சாப்பாடு சொல்லப்பட்ட மாதிரி ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும். மத்தியானம், உமியவிட்டு வடிச்ச புழுங்கல் கைக்குத்தரிசிச் சோறு ,எண்ணை தாளிச்ச  பிரட்டல் உறைப்புக்   குழம்பு, தேங்காய்ப்பால் மிதக்கும் ஒரு வெள்ளைக் கறி, சரக்குத் தூள் போட்டு ஒரு மரக்கறி வதக்கல் ,  வறை சுண்டிய இலை ,தேசிக்காய் புழிஞ்சு விட்டுக் கடைந்த முளைக்கீரை   ,கூட்டுப் பொரியல்,  பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் போட்ட பால்ச் சொதி, முறுக்கிக்கொண்டிருக்கும்  பப்படம்.  இது கட்டாயம் இருக்க வேண்டும் இல்லாட்டி குசினிக்க சட்டி பானை உடையும் 

                                           " இதெல்லாம் நேரத்துக்கு நேரம் இல்லாமல் மட்டகளப்பில இந்த மனுஷன் எவளவு கஷ்டப்பட்டுக் கொண்டு  இருக்குமே,  அங்க என்ன இருக்கப் போகுது, அரையும் குறையுமா அவிச்சு வடிச்சு ஆறப்போட்டு சாப்பிட்டு வாயும் வயிறும் எங்க நிறையப் போகுது, "

                                    என்று  பெரியமாமி சொலிச் சொல்லி பார்த்துப் பார்த்து சமைப்பா ,

                                  " இனிப் போய் பழையபடி வாய்க்கு ருசியா உப்புப் புளி இல்லாமல்,என்னோட சமையலை நினைச்சுக்கொண்டு  கிடந்தது , காஞ்சுபோன கடைச்  சாப்பாட்டைத் திண்டு  கொண்டு கிடக்கப்போகுதே , என்னோட சமையல் காணுமே என்னை மறக்காமல் நினைக்க வைக்க, எண்டாலும் ஒரு ஆம்பிளைக்கு பக்கத்தில இருந்து பார்த்துப் பார்த்து சமைச்சுப் போடுமாப் போல வருமே .."

                                        என்று கவலைப்படுவா. பெரியமாமாவுக்கு இதே அடுக்கில மட்டக்களப்பிலயும் சாப்பாட்டு , சிலநேரம் இதைவிட எடுப்பா எருமைத்தயிரும் வைச்சு ஒவ்வொருநாளும் கிடைக்கும் என்று அவாவுக்குத் தெரிந்திருக்க  நியாயம் இல்லைத்தான். இதெல்லாம் அவர் மட்டக்களப்பில் வேலை செய்த நேரம் நடந்தது. ஆனால் அவர் பென்சன் எடுத்து வீட்டோடு வந்த பிறகுதான் அவரோட ஒழித்துக் கொண்டு இருந்து வேஷம் போட்ட ஓர்மம் அதிகமாய் ஆட்டம் போடத் தொடங்கியது ..

                                  பெரிய மாமி ஒருநாள் பாத்ரூமில் குளிக்கும் போது வழிக்கி விழுந்திட்டா என்று செய்தியோடு  என்னை அவசரமா வரச்சொல்லி தகவல் பெரியமாமா அனுப்பி இருந்தார். போய்ப் பார்க்க பெரியமாமியின்  வலது முழங்கால் வளைஞ்சு, இடது கையும் மணிக்கட்டில் முறிஞ்ச மாதிரி இருந்தது. அந்த வயதான வயதில அவாவை பெரியாஸ்பத்திரிக்கு இழுத்துப் பறிக்க அவர் விரும்பவில்லை. அல்லது வேற ஏதும் பிளான் போட்டாரா தெரியவில்லை 

                                          வீட்டு செற்றியில் இருந்து ஜோசித்தார். நாயன்மார்கட்டில்  இருந்த முறிவு நெறிவுக்குப்  பத்துப்போடுற பொம்பிளையைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார். அவளைக் கூட்டிக் கொண்டு வர அவள் வந்து கையால எண்ணை போட்டு நெறி இழுத்து உருவிப்  பார்த்திட்டு பத்துப் போட்டாள். அது போட்ட அன்று சாமி அறையில் இருந்த படுக்கையில் பெரிய மாமி போய் விழுந்தா. அவளவுதான் அதுக்குப் பிறகு அத்தியாவசிய தேவைகளுக்குத் தவிர வேற எதுக்கும் எழும்பி  நடமாட முடியவில்லை,முக்கியமா சமைக்க அறவே முடியவில்லை . 

                                            பெரிய மாமா ரெண்டு நாள் தான் சமையல் ஒழுங்கில் இல்லாமல் சமாளித்தார். மூன்றாம் நாள் முடிவெடுத்தார். இனி சமையலுக்கு ஒருத்தி இந்த வீட்டுக்கு கட்டாயம் வேணும் என்று அதனால என்னைக் கேட்டார் 

                                 "  யாரும் ஒரு பொம்பிளை வந்து சமைச்சு வைச்சுப்போட்டு போற மாதிரி பிடிச்சுத் தர முடியுமா,,உனக்கு தெரிஞ்ச ஆரும் இருக்கினமே ,அல்லது கொம்மாவைக் கேட்டுப் பாரேன் சிலநேரம் அவாவுக்கு அயலட்டையில் நல்லா  தெரிஞ்ச மாதிரி  நல்ல பழக்க வழக்கம் உள்ள பொம்பிளை யாரையும் தெரிஞ்சு இருக்கலாம் ,,இல்லாட்டி இனி நான் தான் கடிதம் எழுதிக் கூப்பிட வேண்டும் ,,,அதுகள்  பிரசினையில்  சில நேரம்  முடியலாம்,,,அதயுமெல்லோ ஜோசிக்க வேணும் ,,நாளைக்கு ,,ஒண்டு கிடக்க  ஒண்டு  மேலே  ஏறிப்  பாஞ்சா... "

                                        என்று கேட்டார் .எனக்கு அப்படி யாருமே தெரியாது என்று சொன்னேன். ஆனால்  " கடிதம் எழுதிக் கூப்பிட வேண்டும் ,,,அதுகள்  பிரசினையில்  சில நேரம்  முடியலாம், " என்று விழுங்கி விழுங்கி சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறதுக்கு   என்ன அர்த்த மெண்டு கேட்க நினைச்சேன், நானே  சின்னப் பொடியன், பெரியாக்களின்   பெரிய பிரசினைகள் எனக்கு என்னத்துக்கு எண்டு கேட்கவில்லை . 

                                      ஆனால் நடு முதுகில வளம் பார்த்துப் பொல்லால அடிச்ச மாதிரி அடுத்த சில வாரங்களில்  ஒரு நடுத்தர வயது அழகான பித்தளைக் குடம் போல ஒரு பொம்பிளை குசினிக்க இல்லை, நடு வீட்டில நடமாடி ஏறைக்குறைய வீட்டுத் துறப்பையே எடுத்து இடுப்பில செருகிக்கொண்டு நடமாடியதை பார்க்க முடிந்தது.

                                     அந்தப் பொம்புளை எங்களின் ஊரில் உள்ள பொம்பிளை இல்லை. கதை பேச்சு கொஞ்சம் பிறத்தி ஊர் போல இருந்தது. கட்டியிருந்த நூல் சீலையில்  பின்னுக்கு கொசுவம் வைச்சதே வித்தியாசமா இருந்தது.கேள்வி  எல்லாத்துக்கும் வஞ்சகமில்லாத  பதில் போல சிரிச்சா. உள் சூட்டுக்  காச்சல் போல கணகணப்பான நடுத்தர வயது, உடம்பில ஒருவித றாத்தலடி நல்லெண்ணெய்  தடவி உள்ளங் கையால நீவி விட்ட  மாதிரி மினுமினுப்பு , பெரிசா இருந்தாலும் விழாமல் எடுப்பாய் குத்திக்கொண்டு நெஞ்சு , உயரமான கால்கள் நீளமான கைகள், முகத்தில நேர்மையான நட்பு, கண்களில் இன்னும் நிறைவடையாத ஏக்கம், மொத்தத்தில் பித்தளைக் குடம் போல அள்ளிப் போடுற வாளிப்பு , 

                                         பெரிய மாமா இந்த அள்ளிப் போடுற  பித்தளைக் குடத்தை நிட்சயமாக சமையலுக்கு மட்டுமே வைச்சு வீணடிக்க மாட்டார் என்று மட்டும் உத்தரவாதமாகத் தெரிந்தது. அவர் பரமார்த்தகுருவை நம்பி  ஆத்துக்குள்ள கொள்ளிக்கட்டை யை  வைச்சுப் பார்த்த மட்டி மடையன் போல விபரம் தெரியாத ஒரு  ஆள் இல்லை . வயதானாலும் அழகை ஆராதிக்கும் விபரமான  மனிதர். அதை சில நாட்களில் அவர் முக்கியமா  டவுனில  சுப்பிரமணியம் மருந்துகடையில் வேண்டச் சொல்லி தந்த சில்லறைச் சாமான் லிஸ்டில்  கண்டு பிடிச்சேன்.  

                                         அந்த லிஸ்டில், சீயாக்காய், சந்தனாதித்தைலம், ஜாதிக்காய், கராம்பு , ஏலம், மாதுளம்பழ எண்ணை, வாசப் புகையிலை, சுண்ணாம்பு ,வெத்திலை,பாக்கு , பாக்கு உரல் , சண்டுள் வூட் சோப் , இன்னும் பல இருந்தது. இதுகள் அவர் முன்னம் ஒரு போதும் வேண்டியது இல்லை,முக்கியமா  பெரிய மாமி வீட்டு குடும்பத் தலைவியாக இருந்த நேரம் வேண்டியதேயில்லை. எனக்கும் தெரியும் யாருக்கு வேண்டுறார் என்று.ஆனாலும் ஆச்சரியமாக இருந்தது  பித்தளைக் குடம் இதெல்லாம் பாவிப்பதால் தான் பவுர்ணமி ஜொலிப்பாகப்  பித்தளைக் குடம் போல இருப்பது போல இருந்தது. 

                                               பெரிய மாமிக்கு இன்னுமொரு பெண்ணைத்  தன்னோட புருஷன் சமையலுக்கு கொண்டு வந்து வைத்திருப்பது நன்றாகவே தெரியும், ஒரு கட்டத்தில் அந்தப் பெண் சமையலுக்கு மட்டுமில்லை என்பதும் தெரியவந்தநேரம் சாமியறைக் கதவை இறுக்கிச் சாத்திப்போட்டு, எப்பவுமே படுத்த படுக்கையை விட்டு எழும்பி நடமாடவே விரும்பாமல் ஒவ்வொருநாள் காலையிலும்  படித்துக்கொண்டிருந்த தேவார திருவாசகத்தையும் படிக்கிறதை நிட்பாட்டிப்போட்டு நிரந்தர மவுனம் ஆகிட்டா.  

                                        பித்தளைக்குடம் நல்லா சமைப்பா. அது ஒரு வேறு விதமான சமையல், நிறைய சரக்குத்தூள் அம்மியில அரைச்சுப் போட்டு செட்டிநாட்டு சமையல் போல இருக்கும். பெரிய மாமாவும் பித்தளைக்குடம் அருகில் இருந்து பரிமாற  மிகவும் சந்தோசமா சாப்பிட்டார். அதுக்குப்பிறகு பித்தளைக் குடம் சாப்பிட்டு முடிய  பெரிய மாமிக்கு ஒரு தட்டில சாப்பாடு போட்டு ஜெயிலில் உள்ளவர்களுக்குக்  கம்பிக் கதைவைத் திறந்து தள்ளி விடுவார்களே அதே போல தள்ளி விடுவா. பெரிய மாமா அதைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பிறகு  பித்தளைக்குடம் பாக்கு உரலில் வெத்திலை இடிச்சுப் போட முன்னுக்கு இருந்து சிரித்து சிரித்து கதைத்துக்கொண்டு இருப்பார் .

                                   பித்தளைக்குடம் வந்த ஒரு கிழமைக்குள் பெரிய மாமா அந்த வீட்டில சாமி அறை எந்தப்பக்கம் இருக்கு என்பதையே மறந்திட்டார். பித்தளைக்குடம் அவரை சேலைத் தலைப்பில முடிஞ்சு வைச்சு இருந்தா. நாய்க் குட்டி போல  பித்தளைக்குடத்தின் காலுக்க கிடந்தது சுழன்டார் பெரிய மாமா . எனக்கும் வேண்டுறதுக்கு சாமான் லிஸ்ட் எப்பவுமே பெரிய லிஸ்ட் ஆக இருக்க மிச்சக் காசு எவளவு வந்தாலும் கேட்க மாட்டார்.  அதால நானும் கைச் செலவுக்கு காசு அதிகம் வருகுது தானே என்று என்ன நாசமறுப்பு எண்டாலும் நடக்கட்டும் எண்டு என் பாட்டில் இருந்தேன், நான் சொன்னால்தான் வெளிய தெரியவரும் இதெல்லாம் எண்டு அவருக்கு நல்லா தெரியும் அதால இடைக்கிடை கடனாக நூ று . இருநூறு  எண்டு கேட்பேன்  உடனையே ஆயிரத்தில் மயில் தாள் உருவித் தருவார்  

                                          பித்தளைக்குடம் என்னோட அதிகம் கதைக்க மாட்டா , ஆனால் நல்ல ஒரு பெண்மணி போல இருந்தது அவா கதைத்த சில நாட்களில். பெரிய மாமா ஆகோ ஓகோ எண்டு தலை கால் சந்தோஷத்தில் மிதந்துகொண்டு இருந்தார், பத்துப் போடுற பொம்பிளை வந்து பெரிய மாமிக்கு பத்துப்போடுவா,

                        "  இனி நீ  மருந்து கட்ட வரவேண்டாம், கதவை இறுக்கி அடிச்சு சாத்திப்போட்டுப் போ, இந்த வீட்டுக்குள்ள என்னோட புருஷன் போடுற கூத்துப் போதும் எனக்கு வலிக்க வலிக்க செத்துப்போக  , இன்னும் சில  நாளில் நான் செத்துப் போக வேண்டும் , இனி நீ இங்க வர வேண்டாம்,,நீ இங்க அடிக்கடி வந்தா பிறகு உன்னையும் எண்ட மனுஷன் ,,வேண்டாம்,,எக்கேடு கெட்டு எண்டாலும்  வாழ்ந்து தொலையட்டும்,இன்றைக்கே நான் செத்தாலும் சந்தோசமா போயிடுவேன் ..நீ கதவை அடிச்சு சாத்திப்போட்டு போ , முதல் இங்க நடக்கிற கதையும்,,சிரிப்பும்,,கும்மாளமும்  என்னை ஒவ்வொரு அணு அணுவா குத்திக் கொல்லுது ...நீ கதவை அடிச்சு சாத்திப்போட்டு போ " 

                       என்று சொன்ன நாளில் இருந்து அவள் வரவில்லை. 

                          பித்தளைக்குடம் வீட்டில இப்ப முக்கிய பிரமுகராக இருந்தாலும். அவாவின் செயல்கள் அதுக்கு பெரிய மாமா கொடுக்கும் ரியாக்சன், அதுக்கு பித்தளைக்குடம்  தள்ளி விடும் சைட் எபெக்ட் , பிறகு ரெண்டு பேரும் மாறிமாறி ஆளை ஆள் கண்ணால சிக்னல் போட்டு அதுக்குப்  போடுற பக்கிரவுண்ட் மியூசிக் இதுகளைப் பார்க்க பித்தளைக் குடமும் பெரியமாமாவும் முதலே வருசக்கணக்கா ஒன்றா வாழ்ந்தவர்கள் போல இருந்தது. ஆனாலும் எங்கே  என்று உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது , 

                          ஒருநாள் குசினியில் சாப்பிடும் போது பெரிய மாமா கோபமாகி 

                      " செவிட்டில அறைஞ்சன் என்டா இப்ப உனக்கு,  வருசக் கணக்கா சமைச்சுப்போட்டும் இன்னும் என்னோட உப்புப் பதம் பிடிக்க முடியவில்லையே  ,என்னத்தைக் இவளவு வருசமும் கவிட்டுக் கொட்டிக்கொண்டு இருகிறாய் என்று மெய்யாத்தான் எனக்கு விளங்கவில்லை "

                                 என்று  சாப்பாட்டில உப்பு அதிகம் என்று தாறு மாறாக் கத்தினார் , இன்னொருநாள் வேட்டி வளம் மாறிக் கரை மடிசுக் கிடக்கு என்று உரிமையோடு கோபமாகி, 

                          " முகத்தில போட்டன்  என்டா இப்ப உனக்கு, நாலு முழம் வேட்டிக்கு பட்டுக்கரை பிடிச்சு மடிச்சு வைக்கத் தெரியாமல் இவளவு வருசமும் என்னத்தை ஆவெண்டு பார்த்துக்கொண்டு இருந்தனி,,இப்பிடி செய்யவேண்டாம் எண்டு எத்தின வருசமா படிச்சுப் படிச்சு சொல்லுறன்,,நீயும் நாய் வால் போல நிமிராமல் தானே நிக்குறாய் அடம்பிடிச்சுக்கொண்டு " 

                                      என்று தோச்சு மடிச்ச வேட்டியைக் கரை மாறி மடிச்சதுக்கு பேசினார் . அதுக்கும் பித்தளைக்குடம் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து "ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: " மந்திரம் சொல்லி தாலி கட்டின கணவனிடம் திட்டு வேண்டுற பதிவிரதை மனைவிபோல  தலையைக்குனிந்து கால் விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தா. அப்பவும் பேச்சு பின்னணியில் பித்தளைக் குடத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து விழுந்துகொண்டு இருந்தது 

                                                இதெல்லாம்  எனக்குத் தெளிவாகக் கேட்க முடியாத தூரத்தில் நடந்த உரையாடல்கள். சிவாஜி கணேசன் நடித்த தமிழ் சினிமாப் படங்கள் பார்த்த அனுபவத்தில் உரையாடலுக்கும் வாய் அசைவுக்கும், முகப் பாவனைக்கும்  உள்ள வார்த்தைத் தொடர்பை உன்னிப்பாக ஊகிக்கும்  திறமை அந்த நாட்களில் என்னிடமிருந்தது. என்றாலும் ஒருநாள் பெரியமாமா வவுனியாவுக்குப் போய் இருந்த நேரம் பித்தளைக்குடத்தையே  மடக்கிக்  கேள்வி கேட்டேன் 

                                     " பெரிய மாமாவை,, ,சமையல் வேலைக்கு இங்கே வர முதல்  முன்னமே தெரியுமோ "

                                    " ஏன்  நீர் கேக்குறீர் ,,உமக்கு என்ன பிரசினை இப்ப "

                               "  இல்லை , முதலே வருசக்கணக்கா ஒன்றா வாழ்ந்தவர்கள் போல இருந்தது. அதால சும்மா கேட்டேன் "

                                " ஏன்  நீர்  என்னைக்  கேக்குறீர் , உம்மட மாமாவைக் கேளுமேன் முதலில் , அவர் சொல்லட்டுமென்  பதிலை. " 

                                  " இல்ல மாமாவைக் கேட்டால், பிறகு பிரசினை , எனக்கு ஏன் தேவையில்லாத கேள்வியும், தேவையில்லாத  பதிலும்  "

                                "  ஏன் எப்பவுமே இதுக்கு பொம்பிளையளிட்ட பதில் சொல்லச்  சொல்லி கேள்வி கேட்குறிங்க, செய்யிற திருக்கூ த்து எல்லாம் உம்மட பெரிய மாமா செய்துபோட்டு ,பெரிய்ய்ய்ய்ய்ய  மாமா ,,ஹ்ம்ம் ,,பெயர்தான்  பெரிய மாமா,,இப்ப உருத்திராட்சம் மாலையைக் கையில வைச்சு சுழட்டிகொண்டு இருந்தா சரிவருமே   "

                               "அய்யோ,,,என்னை விடுங்க,,,இந்தக் கேள்வியையே மறந்திருங்க இப்படிக்  குருசேஸ்திர   அஸ்திரங்கள்  பாயும் என்று  தெரியாமல் கேட்டுப் போட்டேன்  " 

                                       " ஹஹஹஹா, உங்க மாமாவே,, ஹ்ம்ம்,, இவர்தான் பெரிய்ய்ய்ய்ய்ய  மாமா,, பெரியமாமா  அவரும்  மறந்துதானே ஓடப்பார்த்தார் , விதி விடாதே "

                                       " விதி யாரைத்தான் விட்டு வைக்குது "

                                    " இல்லை,,நீர் மாமாவை  சும்மா கேளும், எனக்கும்  அவர் என்ன பதில் சொல்லுறார் எண்டு அறிய ஆவால் , ஹ்ம்ம், உமக்கு என்ன பிரசினை அதலா வரப்போகுது  எண்டும் பார்ப்பமேன்  " 

                                   " ஹஹஹா,,பிறகு மாமா இங்க வரவேண்டாம் என்டு சொன்னால்,,கைசெலவுக்கு காசு வருமானம் நிண்டு போடுமே,,அதால நானா வாயத் திறந்து ஒண்டும் கேட்கவே மாட்டேன் "

                                 " இல்லை உமக்கு மண்டைக்குள்ள கேள்விகள் கிடந்தது புழு குடையிற மாதிரி நிறைய இருக்கெண்டு நான் என்ன செய்யுறேன் எண்டு என்னை ஒவ்வொரு முறையும் நீர் இரகசியமாப் பார்க்கும் போது  எனக்கு தெரியும் "

                                      " அது உண்மை,,ஆனால் இப்ப எனக்கு இது தேவை இல்லாத உத்தியோகம்,,பெரிய மாமா எனக்கு நல்ல பினான்சியல் சப்போர்ட்,,அதுதான் காசு காய்கிற மரம்,   அதைக் கெடுக்க விரும்பவில்லை "

                                       " ஒ அப்பிடியே சங்கதி "

                                      "  பெரிய மாமா அப்படி செய்ய மாட்டார், என்றாலும் சொல்ல ஏலாது .."

                                        " இல்லை அவர் அப்படி செய்ய மாட்டார்,,நல்ல மனுஷன்,,விருப்பமான ஆட்களை ஒருநாளும் உதறி ஏறிய மாட்டார் "

                                     " ஹ்ம்ம்,,,அப்படியா ,ஹ்ம்ம், ,"

                                  " இப்ப என்னத்துக்கு சாமி அறையைப் பார்த்து பெரு மூச்சு விட வேணும் ..,,அதுக்கு என்ன அர்த்தம் சொல்லும் "

                                       " இல்லை,,ஒண்டுமில்லை "

                              "  இவர் உமக்கு என்ன தாய் மாமாவா , பெரிய மாமா எண்டு சிலநேரம் சொல்லுறீர் ,,இவர்  ,உம்மோட அம்மாவோட  அண்ணாவா .."

                                 " இல்லை ,,தூரத்துச் சொந்தமெண்டு அம்மா சொல்லி இருக்கிறா "

                                   " ஹ்ம்ம்,,எனக்கும் உம்மட மாமா  துராத்தில்...இங்கிருந்து  வெகு  தூரத்தில்,,,,நல்லா  தெரியும்,,,ஹ்ம்ம்,,,இங்கே யாருக்கும்  தெரியாமல்  இருந்து இருக்கும் .".

                                 "  என்னது  வெகு தூரத்தில் என்றால் எந்த ஊரில "

                              "  இல்லை ,,ஹ்ம்ம்,,இல்லை,,,என்னண்டு சொல்ல,  ஒருவேளை போன பிறப்பில ஒன்றாக கணவன் மனைவியாக இருந்து இருப்பமோ  தெரியவில்லை ,,ஹ்ம்ம்,,எப்படிப் பதில் நல்லா சோத்தாங் கையால பிடறீல அறைஞ்ச மாதிரி இருக்கா " 

                               "  எனக்கு ஒன்றுமே புரியவில்லை ,நான் பிறகு ஒருநாள் ஆறுதலாக் கதைக்கிறேன் ,,இவளவு கதைததுக்கே நன்றி . "

                                      பரிஸ் இல் வசித்துக்கொண்டிருந்த பெரிய ராசன் அந்த வீட்டில தாய் மீது மிகவும் அன்பும்,அக்கறையும் உள்ள ஒருவர். பெரிய மாமா  வீட்டில அண்மைக்காலமாக  நடக்கும் எதையுமே அவருக்கு சொன்ன மாதிரி தெரியவில்லை.முக்கியமா பெரிய மாமி படுத்தபடுகையாக இருப்பது சொல்லப்படவில்லை. மற்றப்படி அந்த வீட்டில்  ஒன்றுமே சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டிருப்பது இல்லை போலதான் இருந்தது. இப்பிடி  " ஒன்றுமே சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டிருப்பது இல்லை போல "  என்று எப்பவாவது நடந்தால் அதுக்குப் பிறகு தான் பெரிய குண்டுகள் வெடிக்கும் . 

                               பெரிய மாமா  சில நாள் வவுனியாவுக்கு போய் லொட்சில் நின்று  ,பெரிய ராசனுடன் டெலிபோனில் கதைப்பார் , கதைச்சு காசு எடுத்துக்கொண்டு வருவார். அப்படிப் போனபோது பெரிய மாமி படுக்கையில் இருக்கிறதா சொல்லி இருக்கிறார் போல,ஏன் சொன்னார் என்று தெரியலை, அல்லது  சில பிராத்தனைகள் ,வேண்டுதல்கள் , இறந்துகொண்டிருக்கும் நம்பிக்கைகள் அவரை அறியாமலே அப்படி அவர் வாயாலயே சொல்ல வைத்ததா என்று எனக்கு சரியாத் தெரியவில்லை.

                                    வவுனியாவுக்கு போயிட்டு வந்த சில நாட்களில் ஒரு நாள் பின்னேரம் பெரியமாமா  வீட்டுக்குப் போனேன்  , பித்தளைக்குடம் குசினி வாசலில் நிலத்தில இருந்து கொண்டு  பாக்கு உரலில் வெத்திலை இடிச்சு வாய்க்க வழிச்சு அடைஞ்சு கொண்டு இருந்தா. பெரிய மாமா ஹோல் நடுவில் இருந்த குஷன் செற்றியில் காலுக்கு மேலே காலைப் போட்டுக்கொண்டு, அதை ஆட்டிக்கொண்டு, மெய்கண்டான் கலண்டரில் தாள்களை  ஒவ்வொன்றாய் பிரட்டிப் பிரட்டி ஜோசிதுக்கொண்டு இருந்தார் ,நான் ஹோல் வெளிக்கதவில்  பெட்ரோல்மக்ஸ்க்குக்  காற்று அடிச்சுக்கொண்டு இருந்தேன் , பித்தளைக் குடம் அன்றைக்கு அதிசயமா 

                                " என்ன ,,உம்மோட கொண்ணை வெளிநாட்டில் இருந்து வாறாராமே,,இனியென்ன உமக்கும்,,உங்களுக்கும்  கொண்டாட்டம்  தானே,,இனிப் பிறிச்சுப்   பார்த்து ..நான் பழையபடி  பிறத்தி ஆட்கள்  போல  வெளியால போக ..உங்களுக்கு  இனிக் கொண்டாட்டம்  தானே ,,ஹ்ம்ம்  "

                                   என்று சொன்னா. பெரிய மாமா அப்படிக் கதைக்க வேண்டாம் என்று சொன்னார். எனக்குப் பெரியமாமாவைப் பார்க்கக்  குழப்பமாக இருந்தது .அவர் கையில வைச்சிருந்த மெய்கண்டான் கலண்டரில  திருத்தனி முருகபெருமான்  தங்கவேலை இறுக்கிப் பிடிசுக் கொண்டிருந்த படத்தில ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டு வள்ளியும் மற்றப்பக்கம் ஒட்டிக்கொண்டு தெய்வயானையும் இருக்க " யாமிருக்கப் பயமேன் " என்று மேலே கறுப்புக் கொட்டை எழுதில மேல எழுதி இருந்தது   
                                  
                                  " ஹ்ம்ம், இந்த முறை வவுனியாவுக்கு போன நேரம், பெரிய ராசனுடன் கதைச்சனான்,,,ஹ்ம்ம்,,பத்தோடு பதினொன்டா ,,உளறிப்போட்டன் ..,,ஹ்ம்ம்,,,சண்டை பிடிச்சான்,,, இப்ப அவன் அடுத்த கிழமை வந்து இறங்கப் போறான் எண்டு சொல்லிப்போட்டான், ....இந்தக் கிழமைகுள்ள  வந்திருவான் போல இருக்கு ...ம்..." 

                                     என்று சொன்னார்,,சொல்லிப்போட்டு என்னைப் பார்த்தார்,,நான் பித்தளைக் குடத்தைப் பார்த்தேன்,,பித்தளைக் குடம் பெரிய மாமாவைப் பார்த்துக்கொண்டு இருந்தா,,நான் அதைக் கேட்டுக்கொண்டு பெற்றோல்மக்ஸ்க்கு புசுக்கு புசுக்கு என்று காத்து அடிச்சுக் கொண்டு இருந்தேன் 

                                   " என்ன நான் சொன்னது கேட்டதே  உனக்கு,,,"

                                   "  இல்லை மாமோய் ,வடிவாக் கேட்கவில்லை, இன்னொரு தரம் சொல்லுங்கோ மாமோய்      "

                                        " ஹ்ம்ம், இந்த முறை வவுனியாவுக்கு போன நேரம், பெரிய ராசனுடன் கதைச்சனான்,,,ஹ்ம்ம்,,பத்தோடு பதினொன்டா ,,உளறிப்போட்டன் ..,,ஹ்ம்ம்,,,சண்டை பிடிச்சான்,,, இப்ப அவன் அடுத்த கிழமை வந்து இறங்கப் போறான் எண்டு சொல்லிப்போட்டான்,,,,,இந்தக் கிழமைகுள்ள  வந்திருவான் போல இருக்கு ...ம்..." 

                                      "  ஓ,, அப்படியே  சங்கதி .மாமோய் ....ம்,,,"

                                    " என்ன நான் சொன்னது கேட்டதே  உனக்கு,,,"

                                "  நல்லா விளங்குது மாமோய்  ..கன வருசம் ராசன் அண்ணை இங்காலே வரேல்லத்  தானே, வந்தா சந்தோசம்  தானே " 

                       என்று சொல்லி பித்தளைக் குடத்தைப் பார்த்தேன், பித்தளைக் குடம் நாடிக்கு கையை முண்டு கொடுத்துக்கொண்டு, வாயில வெத்திலை போட்டு மென்று கொண்டு,  பெரிய மாமாவைப் பார்த்துக்கொண்டு இருந்தா

                                     " இவளைப் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் பார்ப்பம் என்று நினைக்கிறேன் ,, அல்லது  சென்றல் நேர்சிங் ஹோமில் வைச்சும் பார்க்கலாம் என்று நினைக்கிறன் நீ என்ன நினைக்கிறாய் "

                                  "  உங்களுக்கு என்ன விருப்பமோ,,என்ன வசதியோ அதுபோல செய்யலாம்,,மாமி  முதல் சம்மதப்பட்டு வருவாவோ தெரியாதே "

                                       " அது தான், நீ ஒருக்கா கதவைத்திறந்து கேள்..நான் அந்த அறைப்பக்கமே இவ்வளவு நாளும் எட்டிப் பார்க்கவில்லை , இப்ப அவள் இப்ப என்னோட முகத்தைக் கண்டாள் கட்டாயம்  யமனை கண்ட மாதிரி  எரிஞ்சு பாஞ்சு விழுவாள் "

                                        "    சரி , நான் கதைக்கிறேன், சில நேரம் என்னோட அவா  கதைச்சு இதுக்கு எதுவும் ஒரு முடிவு கட்ட முடியும் என்றா நான் கதைக்குறேன்  மாமோய்    "

                                       "  விளங்கேல்ல, நீ சொல்லுறது  என்னத்தைக் கதைச்சு  என்னத்துக்கு முடிவு கட்டப் போறாய்,  நான் ஏற்கனவே குழம்பிக்கொண்டிருக்கிறேன்,  இதுக்குள்ள நீ வேற என்ன சொல்லுறாய் " 

                                    " இல்லை மாமோய் ,பிரைவட் வாட்டில் நிற்பாட்டி சென்றல் நேர்சிங் ஹோமில் வைச்சும் பார்க்கலாம் என்று நீங்க  நினைக்கிறதை சொன்னேன் மாமோய் "

                                    " அதுதான் நானும் நல்லது எண்டு நினைக்கிறன்,இப்ப உள்ள நிலைமையில் நான் கதைக்கப் போனால் பெரிய பிரசினை எடுப்பாள் "

                                      "     ம்  "

                                "  என்ன ம் ம் எண்டு மண்டிக்கொண்டு இருகிறாய்,,நீ கதைக்கிறியே ,,இப்பவே உதைக்  கொழுத்திப்போட்டு போய்க் கதை "

                                      "  மாமா ,,வந்து ..வந்து "

                                   " என்னடா  மண்டையச் சொறியிறாய் "

                              "  இல்ல  மாமா ,,ஒரு சின்னப்  பிரசினை  எனக்கு ,,மாமா "

                         " சொல்லடா,,நானே  பெரிய  பிரசினையில் நிக்குறேன் "

                                   " அது வந்து  மாமா,,,வந்து "

                                 " என்னடா  வந்தது  போனது  ,,வாயை திறந்து  சொல்லு "

                                     "   மாமோய் , ஏசியாச் சைக்கில்  ஒன்டு நல்ல விலைக்கு வந்திருக்கு மாமோய்,,இப்ப வைச்சு ஓடுற பழைய சைனாக்காரன் செய்த சைக்கிள் சக்குப் பிடிச்ச சைனாக்காரன் போலக்  கிடந்தது அவிக்குது மாமோய் "

                                        "   ம்  என்ன விலையாம் "

                                     "  ரெண்டாரியம் சொல்லுறாங்கள் மாமோய்,,"

                                        "     ம்,,நாளைக்கு காசு தாரன் ,,இப்ப நீ போய்க் கதைச்சு அவளை ஒரு வழிக்குக் கொண்டுவா ,,ரெண்டாயிரம் நாளைக்கு கட்டாயம் தாரேன் "

                                           "   சரி மாமோய் ,,நான் வெண்டு தாரன் நீங்க ஜோசிக்க வேண்டாம்,,உங்கட நல்ல மனதுக்கு எல்லாமே நல்லபடியாதான் நடக்கும், 2

                            என்று சொல்லி பெட்ரோல்மக்ஸ்சைக் கொழுத்தி வைச்சுப்போட்டு எழுந்து போய்க் சாமியறைக் கதவைத் திறந்து மெல்ல எட்டிப் பார்த்தேன். பெரிய மாமி அரைவாசியாய் மெலிஞ்சு போய் கிடந்தா என்னை நேராகப் பார்த்தா. இதுக்கெல்லாம்  நீயும்தானே உடந்தை என்பது போல அந்தக் கண்களில் ஒரு கோபம் இருந்தது. என்னோடையும் கதைக்க விருப்பம் இல்லை என்று சொன்னா, " கதவை மட்டும் இறுக்கிச் சாத்திப்போட்டுப் போ " என்று சைகையில் சொன்னா.

                                        இது நடந்து ரெண்டாம் நாள் பெரிய மாமா சொன்ன மாதிரியே பெரிய ராசன் வந்திட்டார் என்றும் என்னை உடனடியா வரசொல்லியும் இந்த முறை பித்தளைக்குடம் தகவல் அனுப்பி இருந்தா. போய்ப் பார்த்த போது நான் நினைச்ச மாதிரிதான் புயலடிச்சு ஓஞ்சு   நாலு பக்கமும் சிதறி இருந்தது வீடு ..........

                           பாகம் இரண்டில்  புயல் தொடரும்.... ..