Monday, 1 January 2018

போதையேற்றும் கற்பனை !

 படைப்பு உலகத்தில்   பிரபலமானவர்கள்   எழுதியவைகளைப்   பொறுமையாக வாசிப்பதென்பது நேரமின்மையை திருடி எடுக்கும்  அன்றாட வாழ்க்கைச்சோலிகள் நிறையவே குவிந்து போவதால்  என்னதான்  மெகாஜிகா வேகத்தில்  இன்டர்நெட்  அவசர உலகம் இயங்கினாலும்  இப்பெல்லாம் மிகவும் கடினமாக இருக்கு. பிறகு எப்படி பிரபலம் இல்லாத  நான் எழுதியவைகளை மற்றவர்கள் வாசிப்பார்கள் என்ற மனசாட்சியின் உறுத்தல் எப்பவுமே இருக்கும், 

                                                        நல்ல கவிதை என்றால் என்ன என்று எழுத்தாளர்  ஜெயமோகன் ஒரு பதிவில் எழுதி இருந்தார் சரியாகச் சொன்னால் அதை வரையறுத்திருந்தார். அதைப் படிக்கும்போது என் வரையறை என்ன என்று யோசித்துப் பார்த்தேன்.

                                                       "  எல்லா மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய உணர்வையோ அல்லது ஒரு கணத்தையோ அல்லது ஒரு தரிசனத்தையோ ரத்தினச் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும்.  அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியது என்றால் அது மொழியை சுலபமாக தாண்டக் கூடியதாக இருக்க வேண்டும்  புரிய வைக்க முடியாத கவிதை கவிதையே அல்ல.மொழியே தாண்ட வேண்டிய தடை என்றால் சந்தம், வார்த்தை விளையாட்டு, அலங்காரம் எல்லாம் பொருட்டே அல்ல.20-30 வரிகளுக்குள் இருந்தால் உத்தமம். நூறு வரிக்கு மேலே போனால் அது காவியமாக இருக்கலாம், கவிதையாக இருக்க முடியாது. "


                                               இப்படி எழுதுகிறார் பலராலும் அங்கீகரிக்கப்பட்ட  ஜெயமோகன் !   இதெல்லாம் நான் எழுதியவர்களை தொகுக்கும் முயட்சி  என்று அவ்வப்போது நான் சொல்வதுண்டு. உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் ஜெயமோகன் சொல்வதைப் பார்த்தா என் பினாத்தல்களில் தேறுவது கொஞ்சம் தான் !
.
...............................................................
.
நேற்றைய கருக்கலில் 
எதிர்பாராமல் வந்திறங்கிய 

விருந்தினர்போல 
அடிச்சுப் பிழிஞ்சு கொட்டிய 
முன்கோடை மழை, 

முக்கிக்கொண்டிருந்த
மேகங்களின் முற்றுகையிடும்
முஸ்தீப்புகளில்
ஏற்கனவே உஷாராகியேயிருந்த 

நான் 
நல்லகாலமாகவே நனையவில்லை !

.
.....................................................................
.
நிசப்தங்களை 
நிலைகுலையவைக்கும் 
நகரத்தில் 
இரவு நடனவிடுதிக்கு வெளிக்கிடுகிறாள் 
பெரிய மகள் !
முடிவுகளை அவளே நிர்ணயிக்கும்
சட்டரீதியான வயதெல்லை
குழந்தைத்தனத்தை
இந்தப் பக்கமாக தள்ளிவிட்ட
முதல்ப் பிரவேசம் அது !
யார் யாரெல்லாம்
அவள் நண்பிகள் கூடப்போவது பற்றி
நம்பிக்கை விபரங்களை
அடுக்குகிறாள் !
தன் குழந்தை சமாளிப்பாளாவென்று
ஓரத்தில்
அப்பாவுக்கு பயமாகவேயிருக்கு !
தேர்வுசெய்துள்ள
பழக்கமில்லா இடங்களில்தான்
வாசனைகள் இணைக்கப்பட்டிருக்கு என்கிறாள் !
அப்பா
அரண்டுபோய்க்கொண்டிருப்பதை
பலவீனமான பின்வாங்கல்
என்பதுபோலப் பார்க்கிறாள்.
அவளின் துணிச்சலில்
அப்பா இளமைக்கால அட்டகாசங்களை
மீட்டு எடுக்கிறார் !
கலைத்துப் போட்ட கூந்தலை
அள்ளிமுடிக்க நேரமில்லாமல் மேகங்கள்
அலைபாய்ந்துகொண்டிருக்கும்
இரவுவேற நெருக்கியடிக்க
நம்பிக்கை உடைப்புக்களில்
நூறு நூறு விதமான கேள்விகள் !
வெளி முற்றத்தில்
சிவாலோப் பறவைகள்
கைவிட்ட காற்றில் கேவிக்கொண்டிருந்தன!
வெளியே புன்சிரித்தும்
உள்ளுக்குள்
அப்பா பதட்டமாகவே !
" எத்தனை மணிக்குத் திரும்பி வருவாய் ?"
என்கிறார் அப்பா தவிப்பாக.!
தைரியமாகவே
இதயத்தமனிகள் ததும்பவைக்கும்
அப்பா தொலைத்த சிரிப்பை
முன்னுக்குத் தூக்கிப் போட்டுச்
சவாலாகவே சிரிக்கிறாள்
பெரிய மகள் !

.
.....................................................................
.
நான் 
பரீட்சயமில்லாத மொழியில் 
எழுதவிரும்பாத 
அந்நியன் !
புரியாதவைகளை 
மெதுவாக உச்சரிச்சும்
சொல்ல விரும்பாதவன் !
இலட்சியங்களின்றி
வாழ்வதுக்காய்
முகத்தைச் சுளிப்பதுமில்லை !
இந்தப் பிடிமானம்
அதுதான்
ஆத்மாவைத் தழுவிக்கொள்கிறது !
எல்லார்
கைகளைப் பிடித்துக்கொள்கிறது ! 

.
....................................................................................
.
நேற்றைக்கு 
வெட்டியாகவிருந்த பொழுதொன்றில் 
வடமேட்கு வானத்தை 
எல்லைகளை 
மிக எளிதாக்கிவிட்டு 
தகர்த்துத் தாவிச்சென்று
உடைத்தெடுத்துக்கொண்டுவந்து
தாழ்வாரத்தின்
மறைவில் வைத்திருக்கிறேன் !
சாமத்தில் களவாடப்பட்டதால்
நட்சத்திரங்களு தெரியவர வாய்ப்பில்லையென்றே
நினைத்திருந்தேன்
ஆனால்
கீழ்வானில் ஒருபெரிய ஜன்னல்
திறக்கப்பட்டது பற்றியவை
விடியவிடிய விவாதித்திருக்கின்றன !
ஏற்க இயலாத
அவ்வளவு அகலமான வெற்றிடம்
விரித்துவைக்கப்பட்டதால்
தென்திசையிழந்த பறவைகள்
பதட்டமாகியிருக்கின்றன !
சூரியன்
உதித்தெழுந்த முதல் வேலையா
விசிறி அழுதழுது
முறைப்பாடு வைத்துக்கொண்டிருக்கு!
அலைந்தோடிய மேகங்கள்
மறுக்க இயலாத
கலைந்தோடிய பகுதியைத்
சல்லடைபோட்டுத் தேடுகிறன !
கல்லறை மீது சத்தியம் செய்து
ஒப்புக்கொடுத்தபடியே
இற்றை இரவுக்குள்
மறுபடியும் வானத்தைத் தூக்கிப்பொருத்தப்போறேன்
ஆனால்
சண்டமாருதம் வீரியமானது போல
வந்து ஒருநாளுக்குள்
கனதியாகி உருப்பெருந்துவிட்டது
இப்போது
உதவிக்கு நாலுபேர் தேவையாகவிருக்கு
யாராச்சும் வர்றேளா ?

.
...........................................................................
.
தூறல் பூச்சிகள்
தலையை மெல்லத் துவட்டினாலும்
ஈரமான தாவணி விசிறிகள்
வாய்ப்பாக ஒத்துவருவதில்லை !
என்
ஒதுங்கிப்போதல்களுக்கும்
மழையின் தினவெடுத்த திமிருக்கும்
மிகப்பெரிய
அடிப்படைத்தவறு 

நடந்துகொண்டேயிருக்கு !
.
.....................................................
.
முதல்முதலா 
உங்கள் வெளிறிய முகத்தைக் 
கதவை திறக்கச்சொல்லும் வெளியில்
காற்றோடு அறிமுகமாகித்தான் 
பார்த்தேன் !
என்
உறவுமுறை தேடிவந்த
உங்களுக்கு எதுக்கு
முகம் சட்டேன்று வெள்ளையானது ?
அது எனக்கும் புரியவில்லை !
தலைமுறைப் பிறழ்வுகள்
நீண்ட தூரங்களை அனுமதிக்கும்
பார்வைப்பரிமாற்றத்தில்
அளவில்லா அதிர்ச்சிகளை
நீங்கள்
எதிர்பார்த்திருக்க நியாயமில்லை !
ஒருவேளை
அந்த இடத்தில என்னை
பலவருடம் முன்னைய
பால்ய நாட்களில்
அடையாளம் கண்டிருக்கலாம் !
அதில் தான்
என்
வயதை நேரடியாகச் சந்திக்கிறீர்கள்,!
இரண்டாம் முறையாக
கதவைத்திறந்து நீக்கலாக விட்டு
காலத்தைக் கொஞ்சநேரம்
கசியவிட்டேன் !
நீங்கள்
மேம்படுத்தல்களில்லா
எனக்குரிய வாசனையை
அடையாளம் கண்டதுபோல
தலையைக் குனிந்துகொள்கிறீர்கள்,
தயைகூர்ந்து
அம்மாவின் சாயலோடிருக்கும்
என்னை
நானே
எனக்குள்ளே
பத்திரமாக வைத்திருப்பது பற்றி
யாருக்கும் சொல்லிவிடாதீர்கள் !

.
................................................................................
.கடவுளிடம் வேண்டிக்கொண்ட
நிசப்த கணங்களுடன்
தனித்திருப்பதாக
உணரவதை விடவும்
சருகுகளோடு
காற்றில் நடனமாடிக்கொண்டிருக்கும்
வெய்யில் போலவே
ஒன்றோடு ஒன்றைச்
சம்பந்தப்படுத்திக்கொண்டிருப்பதில்
நேரம் கடந்துவிடுகிறது !

.
................................................................................
.
மழை 
தண்ணியாகிய தண்ணியோடு 
வட்ட வட்டமகாக 
யாரோ ஒருவர் வந்திறங்கி
தெருவோரத்தில் 
வாழ்க்கையாக்கிவிட வைத்திருக்கு,
இப்போதைக்கு
அதன் வட்டங்கள் வெறும் வட்டங்களே
ஏனென்றால்
வானவில்லின் வளைகாப்பைப்
பிரதியெடுக்கிக்கொண்டிருக்குமதன்
சுழிக்கும் வளைகோடுகளை
யாரும் தீண்டப்போவதில்லை !
ஒரு வயதில்
பெரிய மகள்
வெறும் பாதங்களோடு
சேறுகளைச் சதுப்பாக்கி
என்முகத்திலும் விசிறியடித்து
நாலு பக்கமும் சிதறடிக்க
உந்திக் குத்தி விளையாடி
நனைந்தே நனைந்து போவாள்!
தெறித்த தென்பாண்டி முத்துக்களை
நானாக ஒருநாளும்
துடைத்ததில்லை
வரம்போல வேண்டிக்கொண்டிருப்பேன்
அவளுக்கான உலகத்திலிருந்து
குளம்போலவிருக்கும்
சின்ன ஆழத்தையே
ஆழ்கடல் என்பாள் !
இப்போதெல்லாம்
வடிவமைக்கப்பட்ட சப்பாத்துகளில்
பொறுப்புணர்வு வந்ததுபோல
தேங்குதண்ணியை விலத்தியே போகிறாள்
நான்
ஆயிரம் நேசமான ரசனைகள்
இழந்துவிட்டேன்
அதில இதுவுமொன்று !

.
...........................................................................................
.உங்களில் யாரவது
என்
வார்த்தைகளை நம்புபவர்களாயின்
ஏற்றுக்கொள்ளுங்கள்
தவறுகள்தான்
இன்னமும் இன்னமும்
முயட்சித்துக்கொண்டிருப்பதுபற்றி
வெட்கமின்றி
மனித மனச்சாட்சியை
ஒத்துக்கொள்ளவைக்கின்றன !

.
..............................................................................
.

தனித்தனியாக நின்று 

இருட்டின் 
மொழிபெயர்ப்புகளை 
உறக்கமின்றி 
ஒன்றோடொன்று தொடர்பிளக்கச் செய்யும் 
கனவுகள்
பயணமாகிக் கொண்டிருக்கும்
நெடுந்துராப் பாதையில்
அச்சம்தரும் அமைதி ! 

இருத்தலைப்
பொறுமையோடு அணுகிக்கொண்டிருக்கும்
வெவ்வேறு கணங்களில்
அருகருகே
வெளிச்சக் குறுக்கீடுகள் !
ரகசியமாகப் படர்ந்திருந்தாலும்
நிசப்தங்களை
நீட்டிக்கொண்டேயிருக்கும்
நிசி மவுனம் !
இதெல்லாம்
இயங்கக் காரணமாயிருக்கிற.
இரவின் குரலை
எப்போதாவது
கேட்டேவிடுவதென்று முயட்சித்த
அத்தனை நாட்களிலும்
முதலில்த் தூக்கம்
அப்புறம் தான் மற்றதெல்லாமென்று
சொல்லாமலே
விடிந்துவிடுகிறது !

.
..............................................................................
.
என்னை 
வேகமாக உந்திச் செலுத்தி 
நான் 
அறிந்திருந்கும் 
முன்னரங்க எல்லைகளை 
உடைத்துக்கொண்டே தகர்த்து
வலிகளையே
வார்தைகளாக்கும்
மிக முக்கியமானவொரு
சம்பவத்தில் முழுமையடையாமல்
தொக்கி நிக்கிறேன் !

.
......................................................................................
.
கறுப்பு நிறத்தை
நேருக்குநேர் சந்திக்க
வெறிச்சோடிக்கொண்டிருக்கும்
இரவுநேரத்தெருக்கள்,
கரண்ட் வயரின் 
மீதமர்ந்து பாடிக்கொண்டிருக்கும்
மோர்கோப் பறவைகள்,
சின்ன வெளிச்சக்கீற்று
வசீகரமான கட்பனையாக
அடிவைக்கத்தவறிய வேகத்தில்
முன்னோக்கி விழுந்தேன் !
விவரிக்கமுடியாத
பயங்கரவலி முள்ளந்தண்டில் !
மொத்த உலகமும்
என்
தோல்வியால் போர்த்தப்பட்டு
மென்மஞ்சளாக மங்கியது,!
மனதின்
கபடமான பகுதி
திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்கிறது,
தடுமாறும் மற்றையபகுதி
பைத்தியக்க்காரத்தனமாக
முடித்து வைக்கப்போகிறதென்கிறது !
வயதாகும் வயது
மறைமுகமாகக் கிண்டல்செய்கிறது
என்பதே என்னோட சமாதானம் !
முற்றிலும் மாறுபட்ட
தொனியில்
முனகிக்கொண்டு எழுந்துவிட்டேன்!
விழுகிறதே
எழுவத்துக்குத்தானே
என்றுசொல்லி முடிப்பதுக்குள்
ரெண்டாவது முறையும் சறுக்கிவிட்டது!

.
..................................................................................................
.


மனமகங்காரம்
அவ்வளவு இலகுவாக
சமயங்களில் விட்டுக்கொடுக்குதில்லை,
மோனத்தை ஆனந்தமாக்கும்
செப்படி வித்தைகளும் 
பிடிபடுகுதில்லை,
அப்பட்டமாகச் சொல்வதென்றால்
விழிப்புணர்வின்றி
நாளைகளை களவெடுத்து
இன்றோடு பொருத்திக்கொண்டு
அத்தமில்லாக்
காலத்தில் வாழ்ந்து போவது குறித்து
வருத்தப்படமுடியவில்லை !

.
........................................................................
.
உள்வாங்கி உச்சக்கடத்தில்ப்
பாவிக்க வேண்டியிருந்த
கவிதைமொழி
கடைசி நேரத்தில்
புத்தியையைக் கபடமாகக்காட்டிப்
பின்வாங்கிவிட்டது !

.
..............................................................................
.
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
பருவங்கள்
புதுப்பிக்கப்படும் அனுபவம் அது !
மனதோடு
பூத்துச்சொரியவைக்கும்
அந்த ஒரேயொரு
காரணத்துக்காகவே
மழையோடும் 

உன்னோடும் 
அனுசரிக்கிறேன் !
.
.....................................................................................
.
மேன்மையானவொன்றை இழக்கிற
கவலை
உதறி எழ முடியாதவாறு
ஆக்கிரமிக்கிறது !
இன்னும் இன்னும் வேண்டுமென்ற
மனப்பான்மை
ஆழ்ந்த விவாதத்திறகுரிய
எளிதில் மறுக்கவியலாத
நோக்கங்கள் நோக்கி
வழி நடத்தும் பொறுப்பிருப்பதாகவும்
நம்பமுடியவில்லை !
புரிகிறதோ
இல்லையோ
ஆழ்மனக் கொந்தளிப்புக்களை
முடிந்தவரையில் அடக்கிக்கொண்டு
நேர்மையான
சிருஷ்டிகர்த்தாக்களுக்கு
உண்மையானதை விட்டுக்கொடுத்து
ஒதுங்க வேண்டியதுதான்.!

.
....................................................................................
.
ஒரு
குறிப்பிட்ட
பின்விளைவுச் செயல்பாட்டில்
கைகளை பிசைந்தவாறு
ஏதுமில்லாமல்
திரும்பிப் பார்க்கையில்
இழந்தவை அத்தனையும்
சமாதானம் சொல்லி ஈடாகுமாவெனும்
சின்னக் கேள்வியை
பெரிய வரலாற்றிடம் கேட்கிறேன் ! 

விட்டுக்கொடுப்புகளற்ற
கபடத்தனமான வரலாறு
அந்தக்
கனதியான கேள்விக்கு
சீரழித்துக் கொண்ட
மிருகத்தின் மூர்க்கத்துடன்
இப்போதும்
ஆம் என்றே பதிலுரைக்கிறது. !

.
...............................................................................
.
ஒரு
வெளிச்சமான நாளில்
விழித்திருக்கும் கனவில் கடன்வேண்டி
பிம்பங்களை உடைக்கும் மழையை
வெறுக்கிற அளவுக்கு
உறைபனியோடு போராடியே
இறந்துபோன மஞ்சள் சருகுகளை
அது
சேர்த்துக் கூட்டி அள்ளிக்கொண்டு
ஒரு
திசையைத் தேர்ந்தெடுத்து
வெகுதூரத்துக்கு அணைக்கும் வெள்ளத்தை
வெறுப்பதில்லை !

.
..........................................................................
.
சாதாரணமான பார்வையில் 
எளிதாகவே 
கவனிக்கப்படாமல் தப்பிவிடும் 
சின்ன விபரங்கள்,
பிரத்தியேகமாக அனுபவங்கள் 
எதிர்கொள்ள விரும்பாத
நேரடியான யதார்த்தம்,
நீண்ட கதைகளாகவேண்டியதை
வரிகளுக்கிடையில் சுருக்கிவிடும்
நரித் தந்திரங்கள்,
நல்ல சந்தர்பங்களைத்
தள்ளிப் போட்டுவிடும்
அசந்த மன அழுத்தம்,
இன்னார் என்று பெயர்சொல்லி
இந்த இடத்திலென்று குறிப்பிடமுடியாத
இணைக்கப்பாடுகளற்ற
கணநேர சம்பவங்கள்,
எந்தச் சந்தேகங்களையும்
சிக்கலாகிவிடும்
போதையேற்றும் கற்பனை ,
நிறைவேற்றமுடியாத
மவுன வெளிகளில்
தனித்து நின்று கேலிசெய்யும்
மொழிப்பிரயோகம்.
சில உண்மைகளையும்
பல பொய்களையும்
நம்பும்படியாகவே
உருவாக்கிய விதம் ,
இவற்றோடு போராடித்தான்
ஆச்சரியங்கள் தருகின்ற
ஒரு கவிதையை
எழுதிமுடிக்கவேண்டியிருக்கு !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Happy New Year, 

for  all of my   Facebook friends  ,, my blogg readers  ,   wish you a year filled with laughter, friends and the connections that matter most. Happy 2018!
.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;