Sunday 27 March 2016

மாரிமுத்து

ஒரு கதையில் கற்பனை காட்டாறாக ஓடுகிறது என்று இலகுவாகச்  சொல்லி முடிக்கலாம் . ஆனால் ஆறும் படிகள் தாண்டாத  கரைக்குள் தான் ஓடுகிறது. சில நேரம்  நாங்கள் எதிர்பார்க்காத  ஒரு நாள் அது உடைக்கலாம். ஆனால் எதுவும் விதிகளை  மீற முடியாது. வெள்ளம்  பள்ளம் நோக்கி வழிந்து ஓடிவிடும் . அவ்வளவுதான். அதே போல சுயநலமான  மனிதர்கள் தங்கள்  இஷ்டத்துக்கு அமைத்துக் கொண்டிருக்கும் தந்திரமான வழிகள் வேறு . இயற்கையின் நேரான பாதைகள்  என்பதே வேறு.

                                        மாரிமுத்து வைத்து இருந்த ஒற்றைச் சுழி வடக்கன் மாட்டுக்கு காளிங்கன் என்று  பெயர் வைச்சு இருந்தார். அவர் வைச்சு இருந்த  மர  இழுவை வில்லு வண்டிலுக்கு அதைத்தான் மூக்கனாங் கயிறு போட்டுக்கட்டி வண்டில் ஓடுவார். நலமடித்ததால்   கல்யாணம் காட்சி  குடும்பம் வம்சம் என்று எதுவுமேயில்லாத காலிங்கன் தான்  அவரோட குடும்பத்தைக்  குண்டும் குழியுமான  கிரவல் வீதிகளில் மூக்காகல நுரை தள்ளத் தள்ள  இழுத்து இழுத்து ரெண்டு நேரமாவது  வீட்டில அடுப்பு  எரியவைத்து உலை வைக்கக்  காப்பாற்றியது. 

                                      காளிங்கன்  என்ன வகை நாம்பன் மாடு என்று டீட்டேயிலா சொல்லுறது கஷ்டம். விருதுநகர் காங்கேயன் காளைகள் போல அது ஒன்றும் பெரிய அளவில் "சிக்ஸ் பக் " கட்டழகுத் தோற்றம் என்றெல்லாம் சொல்வதுக்கு எதுவும் இல்லை. அட்டைக் கறுப்பும் செம்பாட்டு நிறமும் கலந்த ஒருவகை ரோமம். முகத்தில வலது பக்கம் மட்டும் கொஞ்சம் வெள்ளை நிறத்தில பால் அப்பம் அப்பி விட்ட மாதிரி ஒரு அடையாளம். நெற்றியில் ஒரு சின்ன எழும்பல் . மாரிமுத்துவின் கட்டை வண்டில் இழக்க இவளவு தகுதியும் அதுக்குப் போதுமானதாக இருந்தது 

                                         அதன் ரெண்டு நாம்பன் கொம்பிலும் போன வருஷம் மாட்டுப் பொங்கலுக்கு தடவின குங்குமம் கொஞ்சம் அழியாமல் இருக்கும். மஞ்சள் தண்ணி ஊற்றிக் குளிக்க வார்த்து ,சந்தனப்பொட்டு வைச்ச அந்த மாட்டுப் பொங்கல் மட்டுமே அதுக்கு எப்பவுமே மிகவும் பிடித்த நாள் . அன்று மட்டுமே மாரிமுத்துவின் குடும்பம்  தன்னையும் ஒரு உயிர் உள்ள ஜீவன் என்று மதித்து நடத்திய நாள் என்று எப்பவும் நன்றியோடு நினைச்சு , அந்த நாளுக்காக ஏங்கிக் கொண்டு கடைவாயில் எச்சில் வடிய அசை போட்டுக்கொண்டிருக்கும் .

                                  மற்றப்படி ஊருக்குள்ள திமிறிக்கொண்டு சவாரி ஓடுற வண்டில் மாடுகளும் வைத்திலிங்கம் அய்யா வீட்டில நின்றது. காளிங்கன் அப்படி எல்லாம் ஓடும் வலு இல்லாத வகை. ஒரு வண்டில் இழுக்கும் வலு மட்டுமே அதனிடம் இருந்தது. மாட்டு வண்டில் சவாரிப் போட்டிகள் தவறாமல் பார்க்கும் மாரிமுத்துக்கு சவாரி விடுற மாடுகள் வைச்சிருந்து போட்டிகளில் பங்குபற்றும் கனவு எப்பவுமே ஒரு ஓரத்தில் இருந்தது.  அது எப்பவுமே ஒரு அதிகாலை நித்திரையில்   கால்களை  வேகமாக  உதைத்த கனவாகவே ஓரமாக  ஓடிக்கொண்டிருந்தது. 

                                  மாரிமுத்து காலிங்கனின் பின்னங்கால்  இடது தொடையில் இரும்புக் கம்பியை தணல் போல நெருப்பில போட்டு எடுத்து , தன்னோட பெயரை மாட்டில பொறிக்க M M  என்று இங்கிலிசில் ரெண்டு எழுத்து சுட்டு வைச்சார். M M என்கிறது மாரி முத்துவின் சுருக்கமான இனிசல் . பழுத்த தணல் கம்பி சூட்டுக்கு மாடு எகிறும் என்று காளிங்கனின் நாலு காலையும் தேடாவளயக் கயிறால கட்டிப் பாட்டில விழுத்திப்போட்டு, மாடு கத்தாமல்  இருக்க வாய்க்குள்ள யூரியா பாக்கை  அடைஞ்சு  சூடு வைச்சார் . காளிங்கன் " அம்மோய்  ஓடி வந்து  என்னைக்  காப்பாற்று  அம்மோய், அம்மோய்  " என்று அதன் அம்மாவை கூப்பிட்டுக்  கத்தியது அதன் தொண்டைக் குழியை விட்டு வெளியே வரவில்லை. 

                                          தணல் கம்பியால சுட்ட புண் ரெண்டு நாளா ரத்தம் வடிய வடிய காளிங்கன் நடக்கக்  கஷ்டப்பட்டது. மாரிமுத்து அந்தப் புண்ணுக்கு பிடிசாம்பல் தடவி விட்டார். ஒரு கிழமையில் அந்தப் புண் ஆறி அந்த இடத்தில ரோம மயிர்கள் எரிஞ்ச இடத்தில  தோல் கண்டிப்  போய் ,அடுத்த கிழமை அந்த இடம் கரிக்கட்டையால இழுத்த மாதிரி  கண்டங் கறுப்பு ஆகி  அதில M M என்ற எழுத்துக்கள் பதினைஞ்சு அடி தள்ளி நிண்டு பார்க்கவே தெளிவாக தெரியத் தொடங்கியது . மாரிமுத்து அந்த  M M எழுத்தைத் தடவிப் பார்த்து , தட்டிக் கொடுத்து ம் ம் ம்  என்று சந்தோசப்படுவார் . 

                                           பொதுவாக தரவையில் மேயப் போகும்   கட்டாக்காலி அலைச்சல் மாடுகளுக்குதான் களவு போகாமல் இருக்க, அல்லது வழி தவறிப்போனால் கண்டுபிடிக்க  குறி வைப்பார்கள்.  காளிங்கன் வீட்டோட வாழ்க்கைப்பட்டு, நாலு வேலிக்குள்  நிக்கும் அடக்க ஒடுக்கமான வண்டில் மாடு.  மாரிமுத்து தன்னோட பவரைக் காட்ட வேண்டும் என்றே அந்த M M குறியை வைச்சார். மாரிமுத்துக்கு இளிச்சவாயன்களுக்கு தவிச்ச முயலடிசுப்  பவர் காட்ட காளிங்கனுக்கு  M M குறி வைச்சுப்  பார்ப்பதைத் தவிர வேற எந்தத் தகுதியும்  ஊருக்குள்ள அவருக்கு  இருந்ததில்லை . 

                                         சில நேரம் வண்டிலின் பின் சில்லு சேறு அடிச்சு காளிங்களின் பின் பக்கமெல்லாம் செம்மண் தோட்டத்தில கிடந்தது உருண்டு பிரண்ட மாதிரி  சகதியாக இருக்கும். மாரிமுத்து பழைய சாக்கு ஒண்டு எடுத்து தண்ணியில தோச்சுக் கொண்டு வந்து குறி சுட்ட அடையாளத்தை மட்டும் நல்லா துடைச்சு விடுவார். அந்த  M M அடையாள எழுத்துக்கள் அதன்பின் வடிவாத் தெரியும். மாரிமுத்துக்கு அந்த  எழுத்துக்கள் எப்பவுமே முழிப்பா இருக்க வேணும். அவளவு செய்யும் தொழிலே தெய்வமென்று  அக்கறையுள்ளவர்.

                                       குருக்கள் வளவுக்கும்  அம்மன்கிளை  சங்கக்கடைக்கும் நடுவில இருந்த நெருக்கமான பனைமட்டை வரிச்சுப் பிடிச்ச வேலிகள் பிரிக்கும் இடைக் குறிச்சியில் மாரிமுத்துவின் ஓலைப்பத்தி இறக்கின  வீடு இருந்தது. எப்பவும் மாடுச் சாணமும், மாட்டு மூத்திரமும்  கலந்த வாசம்   காஞ்சு வறண்டு வரும் அந்த வீடே மாட்டுக் கொட்டில் போலத்தான்  இருந்தது . பின்னால தென்ன மரங்களுக்கு நடுவில வில்லு வண்டில் அவுத்துப் போட்டுக் கிடக்கும். காளிங்கனை நாலு குத்தி நட்டு நடுவில வைக்கல் போட்ட இடத்தில கட்டி இருப்பார். ஆறுமணிக்கு நுளம்பு அந்த இடத்துக்கு அலைபோல வரும். 

                                                மாரிமுத்துவின் வில்லு வண்டில் அதிகம் எங்கள் ஊரில் எல்லா தொட்டாட்டு  வேலைகளுக்குத்  தேவைப்படும் இழுவைக்கு அம்மாவாசை பறுவம்  ராகுகாலம் என்று  பார்க்காமல் இழுபட்டுப் போகும் . மாரிமுத்து கொடுப்கில வெத்திலையை அடைஞ்சு கொண்டு, தலைக்கு கலர் துவாயால முண்டாசு கட்டிக்கொண்டு கொன்னையாக நாக்கைப் பிரட்டி கமாண்டிங்  கொடுத்துக்கொண்டு  வண்டில் ஓட்டுவார். ஒவ்வொரு நாளும் ஒரு மொத்தமான பூவரசம் தடி முறிச்சு கையில எடுத்துக்கொண்டு தான் வண்டிலில் முன்னுக்கு ஏறுவார் .பின்னேரம் வீட்டுக்கு வரும்போது அந்தப் பூவரசம் தடி விளக்குமாறு போலப் பிஞ்சு தும்பாகி வரும் .

                                                 ஆனால் அவர் ஒருநாளும் இழுவை முடிய நேராக வீட்டுக்கு வர மாட்டார் , நேராக வண்டியோடு  கடுக்காய் கோப்பிறேசனுக்குப் போவார். காளிங்கனை அவிட்டு கோப்பிரேசன் வேலியில் நிக்கிற கோணல்புளிய  மரத்தில கட்டிப்போட்டு, கொஞ்சம் வைக்கல் எடுத்து  உதறிப்போட்டுட்டு உள்ளே போய் பிளாவில தென்னம் கள்ளு எடுத்துக்கொண்டு போய் மணலில  குந்தினால் கோப்பிரேசன் மூடும் வரை கள்ளும் பிளாவும் நீயா நானா  என்று இழுவை நடக்கும் .

                                  மாரிமுத்து எப்பவுமே கோப்பிரேசன் குடிகாரர்களின் குதர்க்கமான பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளாமல் ஒரு  அமைதியான வாதனாராணி மர மூலையைப் பிடிச்சு முழங்காலை மடிச்சுக் குந்தி இருப்பார். சாரத்தை ஒருக்கழிச்சு ஒதிக்கிக் கணுக்காலில்  வைச்சு ,போட்டிருக்கிற சேட்டைக் கழட்டி உடம்பு  வியர்வை முழுவதையும் அதால  துடைச்சுப்போட்டு ,சுருட்டி இடுப்பில கட்டிக்கொண்டு ,பிளாவில கள்ளுக்கு மேலே விழுந்து கிடக்கிற தென்னம்பூவை விரலால் சுண்டி எடுத்து எறிவார் . பிறகு அந்த விரலை ரசித்துச் சூப்புவார்  

                                                    வெறி தலையைக் குத்தி ஏற  காளிங்கனுக்கு கோப்பிரேசன் உள்ளே இருந்தே குரலை என் எம் நம்பியார் போல மாற்றி கமாண்டிங் கொடுப்பார். காளிங்கன் அது பாட்டில அநியாயத்துக்கு வந்து மாட்டின அதன் அடிமாட்டுச் சீவியத்தை நினைச்சுக்கொண்டிருக்கும். கோப்பிறேசன் வேலியை பொஞ்சாதியின்  கை என்று நினைச்சு இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு தடவித்  தடவி வெறியில மாடு நிக்கிறது தெரியாமல் அதுக்கு மேலே மோதி விழும் அஸ்கு பிஸ்குகளையும்  அது இரக்கத்துடன் பார்க்கும்.

                                     " புளிச்ச  கள்ளுக்குக் கதை கள்ளப் பெண்டில்  " என்று சொல்லுவார்கள் பெருங்குடிமக்கள் எங்கள் ஊரில் . பழைய தென்னம் கள்ளின் மப்பில   இழுத்து  இருத்தி  வைச்சுக் கதைக்க ஆள் இல்லாதவர்கள் வெளிய வந்து மாடு எது மனிசர் எது என்று தெரியாமல் வேட்டி அவிண்டு விழ  காளிங்கனோடு கலியாணக் கதையையே  அதுக்கு முன்னுக்கு நின்று கதைப்பார்கள் . " காதலிக்க இப்ப இது நேரமில்லை " என்று பாவப்பட்ட காளிங்கன் அந்த மாடுகளுக்கு சொல்லவா முடியும் ,,இல்லையே  அதுகளையும் சுவாரசிமாக  அது கேட்டுகொண்டே இருக்கும் 

                                        கோப்பிரேசன் படலையை  இழுத்து மூடுற நேரம் தான் மாரிமுத்துக்கு வண்டிலும், காளிங்கனும் நினைவு வரும். எழும்பி வந்து வண்டிலைக் கட்டி ஏறிப் படுத்திடுவார். காளிங்கனுக்கு அந்த சிக்னல் வழமை போலவே விளங்கும் .அது வண்டிலை தானே இழுத்து கிரவல் மண் பாதையில் இருந்து தார் ரோட்டுக்கு ஏற்றி , வலது பக்கமா இடம்பிடிச்சு , பாதையில் வரும் வாகனங்களை விலத்தி , குருக்கள் வளவு சந்தியில் நிதானமாக , பின்னால பாயிற மாதிரிப் பதறிக்கொண்டு நிக்கிற வாகனங்களுக்கு இடம் கொடுத்து  நின்று, மெல்ல மெல்ல பாதுகாப்பாய் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிற்பாட்டும்.  மாரி முத்துவின் பொஞ்சாதி வந்து வாயே திறக்காமல் வண்டிலை உள்ளே எடுப்பா. 

                                  வழமையா  இப்படிதான் நடக்கும் , ஆனால் அன்றைக்கு  உடையார் வளவுக்கும் பழங்கிணத்தடிக்கும்  இடையில் வைச்சு ஒரு மோட்டர் சைக்கிள்காரன் அவசரத்தில குறுக்க போட்டு காளிங்களின் வலது முன்னம் காலில் முழங்கால் மூட்டுதெறிக்கிற மாதிரி  அடிச்சுப் போட்டான். எலும்பு வரைக்கும் அடிச்ச அடியில்  காளிங்கனுக்கு உயிர் போய் உச்சம் தலையில தடவிப்போட்டு வந்தது. அது கொஞ்ச நேரம் நிண்டு பார்த்தது .மோட்டார் சைக்கிள்காரன்  அதைப் படுதூசணத்தில திட்டிப் போட்டு  ஓடிப் போட்டான் . 

                                  மாரிமுத்து வெறி நித்திரையில்  யாரோ தூசனத்தில் பேசியது கேட்டு கொஞ்சம் முழிச்சு பார்க்க, ஒருவரும்  இல்லை. மாரிமுத்துக்குக் கோவம் வந்திட்டுது . எழுப்பி

                                         "எளிய   சவத்தை ,,நீ  எனக்கு  தூசனத்தால திட்டுற அளவுக்கு வந்திட்டியோ  " 

                                            என்று  காளிங்கனுக்கு ஒரு உதை விட்டார். பிறகு பிசதிக்கொண்டு  விழுந்து படுத்திட்டார். காளிங்கன் மாட்டுக் கொட்டிலுக்கு வந்த நேரம் முழங்காலில் சதை கிழிஞ்சு இருந்தது. ரத்தம் திட்டாக அப்பிக்கொண்டு இருந்து .சுண்டியிழுக்கும் வலியும் இருக்க இரவெல்லாம்  மாட்டு இலையானும் நுளம்பும் அந்த புண்ணுக்குப் போட்டி போட்டது.

                                            அடுத்தநாள் ஓலை ஏற்றிப் பறிக்க போக வேண்டி இருந்ததால் மாரிமுத்து காலையில் எழும்பி நல்ல வளமான ஒரு மொத்தப் பூவரசம் கம்பு முறிச்சு போட்டு வண்டிலுக்கு காளிங்கனை அவிட்டுக் கட்ட இழுத்த நேரம் தான்  மாடு முன்னம் காலில் நொண்டுவதை பார்த்தார், கிட்ட வந்து முழங்காலைப் பார்த்தார் .

                                          " சவத்தை,,நேற்று இரவு  எங்கயோ கொண்டுபோய் காலைச் செருகிப்போட்டுதே ,,எடியே வாடி  இங்க,,இங்க வந்துபார்,,இரவு  என்னடி நடந்தது,,நீ தானே கயிறு அவிட்டுக் கட்டினனி..என்னடி வெள்ளி வேதாளமே பாத்தனி ,சவத்தை ,,,,பாரடி  மாடு  காலை நொண்டுது "

                                       என்று சொல்ல மாரிமுத்துவின் பொஞ்சாதி மூக்கால சளி  வெள்ளையா ஓடிக்கொண்டு இருந்த ஒரு கைக்குழந்தையை இடுப்பில வைச்சுக்கொண்டு வந்து பார்த்தா, அவரின் மற்றப்  பிள்ளைகளும்   ஓடி வந்து பார்த்தார்கள் 
  
                                   " சவத்தை  இரவு என்னடி  பார்தனி , உனக்கு கண் என்ன பிடரியிலையா , மாடு இரவு சவட்டி இருக்கும்,,நீ என்னடி  பாத்து அவிடுக் கட்டினனி,,வண்டிலில ஒரு சேதமும்  இல்லை,,முன்னம் கால் உடைஞ்ச மாதிரி இருக்கே "

                                  என்று திட்ட , மாரி முத்துவின் மனுசி வாயைத்திறந்து  

                                  " இல்லையுங்கோ ,,நான்  இருட்டில  சரியாப்  பாக்கலையுங்கோ "

                              " எடியே,,சவத்தை,,நீ ஆற்ற ........ பார்த்துக்கொண்டு கவிண்டு  கிடந்தனியடி  இரவு முழுவதும்,,சொல்லடி  சவத்தை "

                                " காயத்தைப்  பார்க்க  யாரோ  ரோட்டில வைச்சுத் தட்டிப் போட்டுப்  போட்டாங்கள்  போல கிடக்குங்கோ,,மாட்டிண்ட முகத்தில    வலி தெரியுதுங்கோ , காயத்தை மாற்றிப்போட்டு  வண்டில்ல கட்டுங்கோ ,,வாயில்லாத  சீவன்  பிறகு  பழி  குழந்தை குட்டிய  விடாதுங்கோ "

                             " எடியே,,சவத்தை  ,,இப்ப  உன்னை  டாக்குத்தர் போல விளக்கம் சொல்லவே இங்க கூப்பிட்டனான் "

                                 " பழக்கமான பாதையில  தானே  வந்திருக்கும் ,,என்ன நடந்து எண்டு எனக்கு எப்பிடித் தெரியுமுங்கோ "

                                 " எடியே சவத்தை,,அதுக்கு  தானே  பாதை,,இடம்  வலம்  எல்லாம் பழக்கி வைச்சு இருக்கிறேன் டி "

                                " எண்டாலும் அது மனுசர் போல இந்த ரோட்டெல்லாம்  சுழிச்சுக்கொண்டு வருமெண்டு சொல்ல முடியாதுதானேங்கோ "

                               "  சவத்தை,, இப்ப  பொறுத்த நேரம்  கையை விடப்போகுது  போல  இருக்கே,,இண்டைக்கு  புன்னியக்குஞ்சிக்கு  ஓலை ஏற்றிப்  பறிக்க வேணுமே ,சவத்தை அந்த  மனுஷன்,,ஒரு  கொதி  பிடிச்சதே  "

                                 "  நீங்களுங்கோ  கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு பிரண்டு கிடக்கிறது,," 

                              " என்னடி  சவத்தை  , என்ன கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு  நான்  பிரண்டு கிடக்கிறனோ ,,"

                             " ஓம்,  அதுதான்  இவளவுக்கும்  காரணம்,,அதில ஏன் பழியப் போடுறிங்களுங்கோ,,அதுக்கு  என்ன  தெரியும்  பாவம்  "

                               "  எடியே சவத்தை,  நான்  தாண்டி  எருமை மாடு போல  பகல் எல்லாம் உழைக்கிறான், புண்ணியக்குஞ்சி  ஒரு பிரகண்டம் ,,இண்டைக்கு என்னைத் தெண்டல் எடுக்கப் போகுதே ,"

                              " நானும் தான்  காலங்காத்தால குருவி கத்த முதல் எழும்பி,,நாரி முறிய வீட்டையும் சின்னதுகளையும்  நிமிர்த்திக்கொண்டு இருக்கிறேன் "

                                 " எடியே சவத்தை ,,இப்ப என்னடி  சொல்லுறாய், இண்டைக்கு ஓலை  ஏற்றிப் பறிச்சா  ஒரு  கணக்கு வெளிக்கும் எண்டு  நினைச்சனே  "

                               " நானும்  உங்களைப்போல கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு பிரண்டு எல்லோ கிடக்க வேணும் ,,சொல்லுங்கோ பார்ப்பமுங்கோ   " 

                                  " சவத்தை,,கதை  இப்பிடிப்  போகுதோ..இரவு  உடம்பு அசதிக்கு எல்லிப்போல கள்ளுத் தண்ணி குடிச்சா கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு  நான்  பிரண்டு கிடக்கிறனோ.."

                              என்று  காதைப் பொத்திப் " பளார்,பளார்  " என்று ரெண்டு  அறை விட்டார். மாரிமுத்துவின் பொஞ்சாதி அதை வேண்டிக்கொண்டு அசையாம நின்றா. காளிங்கனும் அசையாமல் கேட்டுக்கொண்டு நின்றது. அதன் கால் வலி  இப்ப கண்களில் கொஞ்சம் கொஞ்சமா தெரியத்தொடங்கியது. மாரிமுத்து அன்றைக்கு காளிங்கனின் காலுக்கு ஒன்றுமே வைத்தியம் செய்யவில்லை. புண்ணியக்குஞ்சி  வந்தா  ஆள் இல்லை, என்று சொல்லச்சொல்லிப்போட்டு வெளிக்கிட்டுப் போட்டார். மாரிமுத்துவின் பொஞ்சாதி காளிங்கனுக்கு மஞ்சளை நல்லெண்ணையில் குழைத்து அந்தப் புண்ணுக்கு மேலே தடவிவிட்டா .

                                 பின்னேரம் நல்ல வெறியில் மாரிமுத்து வந்து மாட்டைப் பார்க்க, காளிங்கன்  எழும்ப முடியாமல் நிலத்தில சரிஞ்சு  படுத்து இருந்தது.

                            " சவத்தை,, பொறுத்த நேரம் கையை விட்டுப்போட்டுதே..இதுக்குதான்  இதை வித்துப்போட்டு ஒரு  லான்மாஸ்டர்  எடுக்க வேணும் எண்டு  நினைச்சனான்,,அதுக்குள்ளே சவத்தை  ,,கையை விட்டுப் போட்டுதே   " 

                                 என்று  திட்டிக்கொண்டு நின்றார். அவர் மண்டைக்குள்ளே லான்ட் மாஸ்டர்  ஓடிக்கொண்டு இருந்தது. காளிங்கன் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்ப்பதை ஏனோ தவிர்த்து வேறு பக்கம் பார்த்துகொண்டிருந்தது.  அன்றைக்கு முழுவதும் புண்ணியக்குஞ்சி வரவில்லை, ஆனால்  வெளிய படலையில் லல்லியக்கா வந்து நின்று , படலையத் தொட்டால் என்னவோ தீட்டுத் துடக்குப் போல  தொடாமல் கொஞ்சம் தள்ளி நின்று 

                               " ம்ம்ம்,,பின்ன,,டேய் ,,மாரிமுத்து ,,நாளைக்கு காலையில கையோட  விறகு ஏற்றிப் பறிச்சு விடுறியே,  கைலாயதிண்ட விறகு காலையில் ரெண்டு தூக்கு  பாலைக்குத்தி வேண்டி அந்த தொட்டக்காட்டுப்  பொடியனை பிளக்கச் சொல்லிப்போட்டு வந்ததணான் "

                                என்று சொல்ல ,  மாரிமுத்து படலைக்குள்ள வந்து 

                               " அதுங்கோ,,அக்கோய்  மாடு  படுத்திட்டுது அக்கோய் "

                           " ம்ம்ம்..பின்ன,மாட்டுக்கு  அசதி வந்தாப் படுக்கும்தானே, நீ அதைக் கட்டி இழு இழு எண்டு இழுக்கவைச்சு போட்டு முறிச்சு இருப்பாய் "

                                " அது இல்லையுங்கோ,,அக்கோய் ,,அதுக்கு ஒரு கால் ஏலாது. அடிபட்டுப் போச்சுதுங்கோ  அக்கோய் .மருந்து போட்டுக்கொண்டு இருக்கிறனுங்கோ  ,,அக்கோய் "

                               " இதென்ன புது வில்லங்கம்  , டேய்  மாரிமுத்து, ,இரவுக்கு  சாதுவா மழை தூறும் போல கிடக்கு,,விறகு நனையப்போகுதே "

                             " இல்லையுங்கோ அக்கோய்,  வேற ஆரையும்   கேளுங்கோ,,மாடு  ஒரு கிழமைக்கு அசையாது போல கிடக்கு "

                               " சரி பின்ன விடு,,நான்  அந்த தோட்டக்காட்டுப் போடியனையே கொஞ்சம் கொஞ்சமா சைக்கிள்  கரியலில் கட்டி எடுக்கிறேன் ,,வேற  என்னத்தை செய்யுறது,,மாட்டுக்கு  ஒழுங்கா வைத்தியம் செய்து  எழுப்படா.."

                                  " ஓமுங்கோ,,அக்கோய்,,அதுகுதானுங்கோ  அலுவல்  பாக்கிறேன் "

                     மாரிமுத்து மறுபடியும் வந்து காளிங்கனைப் பார்த்தார்,  

                               " சவத்தை,, பொறுத்த நேரம் கையை விட்டுப்போட்டுதே.  இந்த  நேரம்  பார்த்து  ஓட்டங்கள்  வருகுதே ...இதுக்குதான்  இதை வித்துப்போட்டு ஒரு  லான்மாஸ்டர்  எடுக்க வேணும் எண்டு  நினைச்சனான்,,அதுக்குள்ளே சவத்தை  ,,கையை விட்டுப் போட்டுதே   " 

                               என்று திட்டிப்போட்டுப்  படுத்திட்டார். அந்த ஒரு கிழமையும் காளிங்கன் படுத்துதான் கிடந்தது. அந்தப் புண் இப்ப மஞ்சள் சிதள் கரைகளில் பிடிக்க சிவப்பும் மஞ்சளுமா தண்ணி பிசுபிசுத்து வடியத் தொடங்கியது. மாரிமுத்து பொஞ்சாதி சக்குப்பிடிச்ச  பழைய உறண்டல் சீலையால  துடைத்து துடைத்து  மருந்து போட்டாலும்  மாட்டு இலையான்கள் அதன் புண்ணில மஞ்சள் நல்லெண்ணெய்க்கும் பயப்பிடாமல் எப்பவும் மொய்க்கும் . அது காலை இழுத்து இழுத்து மாட்டு இலையான்களைக் கலைத்து முழங்காலின் மற்றப்பகமே மண்ணில உராஞ்சி ரத்தம் வரத் தொடங்கீட்டுது . 

                                   ஒருநாள் புண்ணியக்குஞ்சி  மாரிமுத்துவைத் தேடிக்கொண்டு வந்தார், படலையில் நின்று 

                               "    டேய்,,வடுவா,,நானும்  பார்த்துப்  பார்த்துக் கொண்டு  நிக்குறன் ,,வண்டிலும்  இல்லை  பெண்டிலும்  இல்லை... என்னடா  செய்யுறாய் ,,எங்கையடா  வண்டில்..ஓலை கிடந்தது  காயுது,,,எடடா வண்டிலை இப்ப  கட்டையில  போறவனே "

                                  "  சித்தப்பு ,மாடெல்லோ  படுத்திட்டுது...சித்தப்பு..குறை நினையாதையுங்கோ "

                                 " டேய்..எருமை மாடு,,,மாடு  ஏனடா  படுத்தது,,என்ன  சீலம்பாய்க் கதை விடுறாய்.. ஓலை கிடந்தது  காஞ்சு  காவோலை ஆகப்போகுது,,பிறகு  அதை  என்ன அடுப்புக்க  ஓட்டச் சொல்லுறியே  "

                               " இல்லையுங்கோ சித்தப்பு ,,மாடு  காலில  அடிவேண்டி,,இப்ப புண்  பெருத்திட்டுதுங்கோ  "

                                    " எங்க  விடு  பாப்பம் ,,இதென்ன  புதுக்  கதை  விடுறாய் "

                              என்று  புண்ணியக்குஞ்சி படலையத் திறக்கச் சொல்லி அதில முட்டாமல்,,வீட்டுக்கு  பின்பக்கம்  மூக்கைச் சுழிச்சுக்கொண்டு போய் அந்த  வளவில பின்னுக்கு  படுத்துக்கிடந்த காளிங்கனின்  காலைப்  பார்த்தார்.

                                    "  எடேய்..அறுவானே,,புண்  புழு வைச்சுப் போட்டுதடா,,டேய் கட்டையில போற  பரதேசி  என்னடா இவளவு நாளும் பாத் தனி "

                             "    எண்ட  மனுசிதான் மருந்து போடுறதுங்கோ   சித்தப்பு "

                          "  எடேய்...எல்லிப்போல மண்ணெண்ணெய் என்றாலும் அடிச்சு விட்டு இருக்கலாமே டா,,,இப்ப புண்  கரணம் தாப்பாத  கேஸ் லெவலுக்கு வந்திட்டுதே "

                          " எனக்கு  உதுகள்  தெரியாதுங்கோ  சித்தப்பு.."

                            "  நீ என்னடா கோவணம் அவிண்டு விழ ஆவெண்டு  கோபுரத்தைப்   பார்த்துக்கொண்டு நிண்டனியே,,செம்மறி, டேய் ,மாடு  இனி எழும்பாது  போல கிடக்கு  ,,அவுக்கெண்டு  மிருக டாக்குத்தரைக் கையோடு  பிடிச்சுக்கொண்டு  வாடா  ஏமாலாந்தாமல் "

                                "    அதுக்கு   ,,ஹ்ம்ம்,,முதல்  அவரைக்  கொண்டுவந்தால்  சுளையா  அவிட்டுக்  கொடுக்கக் காசு எல்லோ  வேணும் சித்தப்பு "

                                 "  டேய்..மோட்டு  மூதேசி ,இப்ப அவுக்கு அவுக்கெண்டு அலுவல் பார்க்காட்டி,,மாடு  எழும்பாது  கண்டியோ.."

                              " கையில  காசும்  இல்லை,,   எனக்கு  உதுகள்  தெரியாதுங்கோ  சித்தப்பு..இதுதான் உதை ஆப்பிட்ட  விலைக்குத்   தள்ளிப்போட்டு ஒரு  லாண்ட்மாஸ்டர்  வேண்டினால் இந்தக்  கரைச்சல் இல்லை என்று  நினைசேன்  "

                                    "  எடேய்..மாடு  கிடந்தது  உத்தரிக்குதடா ,,முகத்தைப்  பார்,,,சித்திரகுப்தனைப்  பார்க்கிற மாதிரி கிடந்தது வெருளுதடா  அவுக்கெண்டு  அலுவலைப்  பார்.."

                                   "  சித்தப்பு,,கையில  ஐஞ்சு சதம்  இல்லை,,சித்தப்பு..நாலுநாள் கள்ளுத் தண்ணி நாக்கில நனைக்காமல் எனக்குக்  கை  நடுங்குது  சித்தப்பு "

                               "  எடே  அறுவானே, இவளவுநாள் சம்பாரிச்ச வரும்படி எல்லாம்  எங்கையடா,கள்ளுத்தண்னிக்க ஊதிப்போட்டியே,, அவுக்கெண்டு  டாக்குதரைக்  கொண்டு வா  இல்லாட்டி  சொல்லிப்போட்டேன்  மாடு  கையை விடும் கண்டியோ "

                        " ஓமுங்கோ  ,,சித்தப்பு  அதுதான்  நானும்  ஜோசிக்கிறேன்.."

                              " டேய்  அறுதலி,,ஜோசிசுக்கொண்டு நிக்க இப்ப நேரமில்லை,,நான் போய்க் கையோடு  பிடிச்சுக்கொண்டு வாறன் ,,காசு  நான்  கொடுக்கிறேன்,,வாயில்லாதா  ஜீவனடா,,பாவமடா "

                                        புண்ணியக்குஞ்சி  கூட்டிக்கொண்டு வந்த டாக்குத்தர் காளிங்கனின் புண்ணை டோச்லைட் அடிச்சுப் பார்த்தார்,புண்ணுக்கு உள்ளே புழு நெளிஞ்சுது. கைக்குக் கிளவுஸ்  போட்டுடு ஒரு  வெள்ளை சீலைத் துணி எடுத்து   அதைக் ஹைரியின் பரோக்சைட்  இல நனைச்சு புண்ணில வைச்சு துடைக்க அது நுரைச்சது, முடிந்தவரை எல்லா புழுவையும் வெளியே இழுத்துக் கொட்டிப் போட்டு நாவல் கலரில்  கழிம்பு போல  கொஞ்சம் அதில பூசிப் போட்டு ,காளிங்கனின் பின் தொடையில் நரம்பு தடவி ஒரு  அன்டிபயாட்டிக் ஊசியும்  போட்டார். 

                                       ஆனால் புண் பெருத்து ஆழமாக வெள்ளை எலும்பை சுற்றி விசலாமாக இருந்தது. மிருக டாக்குத்தர் காளிங்கனின்  நிலைமை பற்றி வெளிப்படையாக ஒன்றும் சொல்லவில்லை.  மாரிமுத்து அவர் குறி வைச்ச  M M எழுத்துகளைக் கவலையோடு பார்த்துக்கொண்டு நின்றார் .புண்ணியக்குஞ்சி சுருட்டைப் பத்த வைச்சுக்கொண்டு அங்காலும் இங்காலும் சுற்றி சுற்றி மாட்டைப் பார்த்துக்கொண்டு கோடாப்  போட்ட புகையை நல்லா  இழுத்து இழுத்து விட்டுக்கொண்டு நின்றார். 

                              மாரிமுத்து  " சவத்தை,, பொறுத்த நேரம் கையை விட்டுப்போட்டுதே.  இந்த  நேரம்  பார்த்து  ஓட்டங்கள்  வருகுதே ...இதுக்குதான்  இதை வித்துப்போட்டு ஒரு  லான்மாஸ்டர்  எடுக்க வேணும் எண்டு  நினைச்சனான்,,அதுக்குள்ளே சவத்தை  ,,கையை விட்டுப் போட்டுதே   " என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு, இனி ஒரு லான்ட்மாஸ்டர் எப்படியும் வேண்டி அதன் பெட்டியில் " MAARIMUTHU  "என்று கொட்டை எழுத்தில எழுதி ஓடவேண்டும் என்று நினைச்சுக்கொண்டு இருந்தார் 

                                          காளிங்கன் அதன் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தது. அதன் முகத்தில் அதன் அம்மா அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தா , அதுக்கு இருட்டிலையும் அம்மாவின் முகம் பளிச் பளிச்  என்று அடிச்சது.  ஆனால் அதுக்கு சாவதுக்குப் பயமில்லை. இனியும் எவளவுகாலம் தான் பூவரசம் கம்பால அடிவேண்டி, பாரமான வண்டிலை இழுத்துக்கொண்டு இருப்பது.அதனால் அது சாவதுக்கு சந்தோசமாக இருந்தது. அதுக்கு சாவு நீண்ட கொடுமையில் இருந்து  விடுதலை போல இருந்தது .

                            அன்றைக்கு இரவே காளிங்கனின் அம்மா வந்து  "இனியும் கிடந்தது உத்தரிக்காதை மகனே,,பேசாமல்  என்னோட வந்திரு  " என்று கூட்டிக்கொண்டு போட்டா. காலையில் காளிங்கன் முகம் முழுவதும் மாட்டு இலையான் குந்தி இருந்தது , அதன் கண்கள்  திறந்து கிடக்க முகம் சரிஞ்சு பக்கவாட்டில புழுதியில் கிடந்தது.  மாரிமுத்து முக்கனாங் கயிறைக் கொண்டு வந்து ரெண்டு பின்னங்காலையும்  சேர்த்துக் கட்டி அதை இழுத்துக்கொண்டு போய் குளத்து வெளியில் ஒரு பெரிய கிடங்கு வெட்டித் தாட்டுப்போட்டு வந்திட்டார். 

                               அதுக்குப் பிறகு மாரிமுத்து, மரம் தறிக்கிறது ,தேங்காய் புடுங்கிறது,வேலி அடைகிறது, தோட்டம் கொத்தப் போறது  போன்ற அன்றாடம் கூலி வேலை இதுகளுக்குத் தான் போய்க்கொண்டிருந்தார் . கட்டை வண்டிலை ஒரு விலைக்கு வித்து அதையும் கோப்பிறேசனுக்குப் படி அளந்து மூக்கு  முட்டக் குடிச்சு முடிச்சிட்டார். 

                                புண்ணியக் குஞ்சி ஊரில வேலியில நிக்கிற ஓணானைப் பிடிச்சு வேட்டியுக்க விடுறது போன்ற குழறுபடிகள் செய்துகொண்டு இருந்தாலும்  எப்பவுமே  எல்லாருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர் , அவர் ஒருநாள் வந்து 

                                    "  டேய் ,  சும்மா சிரைச்சுக் கொண்டு நிக்கிறதை விட்டுப்போட்டு நான் சொல்லுறதைக் கேள் ,  

                                   " ஹ்ம்ம்..சொல்லனை  சித்தப்பு,,இனி  என்னத்தைச்  செய்யுறது   "

                                    " சித்தங்கேணியில் ஒரு வளக்கம்பரை ஆட்களின்  வடக்கன் மாடு ஒண்டு நிக்குது , எண்ட காசைப்போட்டு ஒரு விலையைப் பேசி அவிட்டுத் தரவா, "

                          "இல்லையுங்கோ,,சித்தப்பு  இனி  வண்டில்  மாடு  சரிவராது  போல  இருக்கு  எனக்கு சித்தப்பு...மாடுகளோடு அலைச்சல்பட்டது  போதும் "

                                 " ஓ,,அப்ப பின்ன என்ன இனி  இசுசு லொறி வேண்டி ஒடப்போறியே ,,உன்னட்ட கட்டை வண்டில் நல்லா  நிக்குதுதானே ,,இழுக்க ஒரு  மாடு,,அவளவுதானே "

                                 " இல்லையுங்கோ ,,சித்தப்பு,,ஒரு  லான்ட் மாஸ்டர் ,,,அதுதான்  நெடுக நாளா  நினைக்கிறது...

                               " டேய்  ,அடி சக்கை எண்டானாம் , என்னடா ,,லான்ட் மாஸ்டரோ,  நாடு  நாயப்  போல போற போக்கில உனக்கு வந்த பவுசைப்பார் "

                                  " ஓமுங்கோ சித்தப்பு, அதுதான்  கண்னுக்க முன்னால வந்து வந்து நிக்குது ."

                                   " டேய்,,கழுதை, சும்மா  இருக்கிறதை விட்டுப் போட்டுப் பறக்கிறதை  பிடிக்காமல் ,அதுக்கு  இப்ப அள்ளுகொள்ளையா காசெல்லோ வேணும்,,அதுக்கு  எண்ணை  ஊத்திக்கட்டுமே உனக்கு "

                             "  ஓம்,,சித்தப்பு,,ஆனால் உழைக்கலாம்  தானே .."

                               " டேய் , நான் காசு தாரேன் ,போயிலைச் சிப்பம் ஒரு லொறி நாலாங் குறுக்குத்தெருக் கிட்டங்கிக்கு  ஏற்றிவிட்ட காசு  வந்து  கிடக்கு ,நீ  காசு  கொஞ்சம் கொஞ்சமா பிறகு  தா,"

                            "  ஹ்ம்ம்,,,ஜோசிக்கிறேன்,,சித்தப்பு "

                              " டேய் , என்ன நான்  சொல்லுறது  மண்டைக்குள்ள ஏறுதே,,விறுமாண்டி போல முகத்தை நீட்டிக்கொண்டு நிக்குறாய்   "

                                    என்று கேட்டும்  மாரிமுத்து விருப்பப்படவில்லை. வண்டில் வித்த கதையும் அவர் புன்னியக்குஞ்சிக்கு சொல்லவில்லை.

                                       ஊரில் அந்த நேரம் நாலா பக்கமும் அடைச்சு வைச்சிருந்த  முகாங்களில் இருந்து அடிக்கடி முன்னேறி வெளிக்கிடும் இராணுவத்துடன்  சண்டை அகோரமாக  நடக்கும்.  அன்றைய நாட்களில் ஹெலிகாப்டர்  வாகனங்களைக்  கண்டால்  திரத்தித்  திரத்தி பிப்டி கலிபரால் அடிப்பான், அல்லது ஜாம் போத்தலுக்குள் கிளிப்பை இழுத்துப்போட்டு ஹான்ட்கிரனைட்டைச்  செருகி மேலே இருந்து எறிவான். சில நேரம் ரொக்கெட் ஹெலியில் இருந்து  அடிப்பான்  என்ற பயத்தில  யாரும் இரவில் லைட் போட்டு வாகனங்கள் ஓடுவதில்லை. 

                                          ஒருநாள் ..................

                                  மாரிமுத்து நல்லாக் குடிச்சுப்போட்டு உடையார் காணியின் வேலியோடு படுத்து இருந்த நேரம் அவடதால வந்த  முன் லைட் இல்லாமல்,  பதுங்கு குழிக்கு தென்னம் குற்றி ஏற்றிக்கொண்டு வந்த லான்ட்மாஸ்டர் ஒன்றைக் ஹெலிக்காரன்  நைட்விசனில பார்த்து இயக்கத்திண்ட்ட  ஆட்டிலறி பீரங்கிப்படை செல் ஏற்றிக்கொண்டு போகுது என்று நினைச்சு திரத்தி அடிக்கத் தொடங்க , லான்ட் மாஸ்டர் காரன் பதறி அடிச்சு சைட் எடுக்க ரோட்டு ஓரமா வேகமா விட்டான். 

                                      லான்ட் மாஸ்டரின் பின் சில்லு  இருட்டில மாரிமுத்துக்கு மேலே ஏறி இறங்கியது  . லான்ட்மாஸ்டர் ஓடிக்கொண்டு வந்தவனுக்கு சில்லுக்க என்னவோ மாட்டி எலும்பு முறியிற சத்தம் போலத்தான் கேட்டது.  மாரிமுத்துவின் கழுத்து எலும்பு உடைஞ்ச நேரம் தான் அவளவு சத்தம்  வந்தது. 
                                 

Wednesday 23 March 2016

மோனிக்கா.

இதுதான் வாழ்க்கை என்று சலித்துக்கொள்ளும் நேரமெல்லாம் பழைய சம்பவங்கள் முன்னுக்கு வந்து வசதியான  இடத்தில் ஏறி உட்காந்து  கொள்ளும். அதில பல வீழ்ச்சிக்குப் பின்னரான சந்தோசங்கள் வெறும்பேச்சாகிப் போகாமல் ஒரு காலத்தின் நினைவுகளில்  பன்னீரைத் தூவி ஒய்வெடுக்கும் தருணம் மறைக்கவோ ,மறக்கவோ  முடியாத ஒரு சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வந்து தொண்டைகுழியில் இறுக்கிப்பிடித்து நெரிக்கும் 

                                                         இப்பவே சொல்லுறேன், இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை . விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின்  ஒரு காலகட்டத்தில் நடந்து,மறந்துவிட்டுப் போன  கடந்தகாலப்  பாதையில் ஏனோதானோ  என்று  விசுக்கிவிட்டுப் போன  கற்பனைக் கதை போல...

                                                    மோனிக்காவை முதன் முதல் சந்தித்தது, ஆறு மாதம் " சமையல் இடங்களின் பாதுகாப்பும் ஸ்வீடிஷ் சமையல் சட்ட திட்டமும் " என்ற " டிப்பிளோமா கோர்ஸ் " படித்தபோது, கோடைகாலத்தில் ரெஸ்டாரென்ட் குக் ஆக வேலைசெய்த இடத்தில இருந்து என்னை நிற்பாட்டிய நேரம், கிடைத்த இடைவெளியில் என்னோட சமையல் திறமையை அதிகரிக்க ஜோசித்து, அந்த டிப்பிளோமா லைசென்ஸ் எடுக்கப் படித்தேன் 

                                             கையால கரண்டியைப் பிடிச்சு சமைக்க தெரியுதோ, இல்லையோ அந்த டிப்பிளோமா லைசென்ஸ் கையில இருந்தாதான் ஸ்கன்டிநேவியாவில் குசினிக்க முன் பக்கத்தால உள்ளிடலாம் என்ற ஒரு அவல நிலைமை இருந்தால் வேண்டா வெறுப்பா படிச்சேன். அந்த டிப்பிளோமா லைசென்ஸ்  ஒரு சமையல்காரனின் கன்னத்தில் இருக்கும் அதிஸ்ட மச்சம் போல . அது  இருந்தால் சம்பளமும் கொஞ்சம் அதிகமா  டிமாண்ட் விட்டு கேட்கலாம் என்பதாலும் படிச்சேன்.

                                                              அந்தக் கோர்ஸ் ஒண்டும் நான் யாழ்பாணத்தில குத்தி முறிஞ்சாவது  கம்பஸ் இக்கு போயே ஆகவேண்டும் என்று விழுந்து விழுந்து படிப்பது போல , முறிஞ்சு முறிஞ்சு மண்டையைக் கசக்கிப் படிக்கவில்லை. அந்த லைசென்ஸ் கிடைச்சாப் போதும் எண்டு ஆர்வம் இல்லாமல் படித்தேன். அந்த "டிப்பிளோமா கோர்ஸ் "க்கு பொறுப்பான மோனிக்கா ஆர்வமா படிப்பிசாள். ஸ்வீடிஷ் மொழி அதிகம் எழுத்து வடிவில் தெரியாததால் எனக்கு பல விசியம் விளங்கவே இல்லை.

                                          ஒரு ரேச்ட்டோரென்ட் சமையல் குசினியில் நெருப்பு பிடிச்சா, எந்த வகை அடையாளம் போட்ட  தீ அணைப்பு கருவி, தீ அணைப்பு திரவம், தீ அணைப்பு கெமிகல் பாவிக்க வேண்டும், எந்தவகை உணவு அலேர்யி, உணவு பதனிடல், அதை பாதுகாத்தல் ,கிருமிகள் தொற்று ,பொதுவான சுகாதாரம் ,,என்று பலவிசியம் அதில டிப்பிளோமா பாடத் திட்டமா இருந்து படித்தாலும் பலது படிக்கும் போதே நினைவில்லை 

                                                 ஆனால் ரெஸ்ட்டோரென்ட் சமையல் குசினியில் நெருப்பு பிடித்தால்  சில குறிப்பிட்ட அடையாளம் போட்ட கதவால் வெளியேற வேண்டும் எண்டு  பாதுகாப்பு நடைமுறை இருக்கு.அதையும் சொல்லி தந்தார்கள். அந்த  எந்த அடையாளம் போட்ட எந்தக் கதவால ஓடித்தப்ப வேண்டும் என்ற ஒரு விசியம் மட்டும் நான் ஆரவமா படிச்சேன், படிச்சுக் கிழிச்சதில அது ஒன்றுதான் இன்றை வரை நல்லா தெரியும்.  அந்த நம்பிக்கையில தான் இப்பவும் ரெஸ்டோறேண்டில் குக் ஆக வேலை செய்கிறேன் .
            
                                                   எப்படியோ படிப்பில்  நான் ஆர்வம் இல்லாமல் இருப்பது தெரிந்த மோனிக்கா ,வகுப்பு முடிய எனக்காகவே வேலை மினக்கெட்டு என்னை அந்த இன்ஸ்டிடியுட்ல இருந்த லைபிறேரியில் உள்ள ஒரு அறையில் என்னை இருத்தி வைச்சு முறிஞ்சு முறிஞ்சு சொல்லி தருவாள். அவளவு என் எதிர்காலத்தில் பிரகாசமான விடிவெள்ளிகள் தோன்ற வேண்டும் என்று நினைத்த அப்பாவிப் பெண் மோனிக்கா . ஆனால்  படிக்கிறது  இலுப்பெண்ணை  போல எப்பவும் இருப்பதால் நான் கிடந்தது  நாக்கிளிப் புழு போல நெளிவேன் .

                                            மோனிக்காவும் ஒரு குக் , நல்ல அன்பானவள், ஐஸ்லாந்துக் குதிரை போல நடப்பாள், அவள் முகம் சலவைக்கல்லில செய்த மாதிரி இருக்கும், அவளின் மூக்கு மேல் நோக்கி அடல்ப் ஹிட்லர் மூக்கு போல வளைந்து வலது கன்னத்தில ஒரு கறுப்பு மச்சம் இருக்க வேண்டிய இடத்தில இருக்கும், உதடுகளுக்கு மேலே அதிகமா லிப்டிக்ஸ் போட்டு அதன் விளிம்பில் ஒரு பென்சில் கோடுபோல போர்டரின் போட்டு, தலை மயிரை யூலியா ராபர்ட்ஸ் போல பிரிச்சு விட்டு,கொஞ்சத்தை நெற்றியில் விழ விட்டிருப்பாள்

கழுத்தில நீலநிற அக்குவா மரைன் கல்லு வைச்ச ஒரு சங்கிலி மட்டும் போடிருப்பள். காதிலையும் அதுக்கு மச் பண்ணுற மாதிரி ஒரு தொப்பாஸ் கல்லு வைச்ச தோடு போட்டிருப்பாள். லூயிஸ் வோலுதன் சமர் கலக்சன் வேஸ்ட் போட்டு எப்பவுமே இத்தாலிப் பெண்கள் போல ஒரு கொட்டன் ஸ்கார்ப் கழுத்தில நிரந்தரமாவே கட்டி இருப்பாள். மன்மதன் அம்பு விட்ட மாதிரி இடது கைக் கல்யான ரிங் போடும் விரலில் ஒரு பச்சைக் கலர் எமிரல் கல்லு வைச்ச மோதிரம் போட்டிருப்பாள்.

                                         ஒரு நாள்  

                                 " நான் , இரண்டு பிள்ளைகளுடன் வீடில முறிஞ்சு, உனக்கும் இங்கே நேரம் ஒதுக்கி சொல்லிதாரன், நீ ஏன் ஆர்வம் இல்லாமல் இருக்குறாய், இன்னும் ஒரு கிழமையில் கடைசி பரீட்சை வரப்போகுதே "    

                                  எண்டு குண்டை தூக்கிப் போட்டால், நான் அவள் கலியாணம் கட்டாமல் இருப்பாள் எண்டுதான் நினைச்சேன் ,ஆனாலும் அவள் இரண்டு பிள்ளைகள் எண்டு சொன்னாள், கணவனோ,காதலனோ பற்றி சொல்லவில்லை என்பது கொஞ்சம் நல்ல செய்தியாக இருந்தது,

                                     
சுவீடனில் பெண்கள் பிள்ளை பெற தாலி கட்டிய கணவன் தேவையிலை,அந்தப் பிள்ளைகளுக்கு அப்பாவின் பெயரும் தேவை இல்லை,அதுகளைதான் தீவிரமா ஜோசித்தாலும், கடைசி பரீட்சை வரப்போகுதே எண்டு அவள் சொன்னத நினைக்க பயம் வந்தது,மோனிக்கா மனம் வைச்சா அந்த பரிட்சையில் பாஸ் பண்ணி டிப்பிளோமா லைசென்ஸ் எடுக்கலாம் எண்டு வடிவா தெரிந்தாலும் ,அவளை எப்படி வழிக்கு கொண்டுவாறது எண்டு கொஞ்சம் ஜோசித்தேன்.முதல் அவளைப் பற்றி சில விசியம் தெரியவேண்டும் எண்டு போட்டு , 

                                        மோனிகாவுக்கு மலர்கள் என்றால் விருப்பம்,அவளே வீட்டில கோடைகாலத்தில் நிறைய மலர்கள் தோட்டமா வைச்சு இருக்கிறதா சொல்லி இருந்தாள். நான்  

                                        " ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் என்னிடம் இருக்கு உனக்கு வேண்டுமா, வேண்டும் என்றாள் நானே கொண்டுவந்து உன்னோட தோடத்தில நட்டு விடுறன் "    

                            எண்டேன், அவள் முகம் பிரகாசமாகி    

                          " வாவ் வாவ் ,,அது எனக்கு ரெம்பப் பிடிச்ச மலர், கேள்விப்பட்டு இருக்றேன், ஒரு நாளும் வேண்ட முடியவில்லை, விலையும் அதிகம் ஸ்பெயினில இருந்து வேண்டிக்கொண்டுவரவும் யாரும் இல்லையே"  என்றாள்,

                                        " உன் கணவன் போய் வேண்டி கொண்டுவரலாமே "    

                                              எண்டு நூல் விட்டுப் பார்க்க கேட்டேன், அவள்  

                                            " எனக்கு அப்படியாரும் இல்லை "    எண்டு சொன்னாள். கொஞ்சம் ஜோசித்து,  

                                   " சரி உன் போய் பிரெண்ட் ஆவது போய் வேண்டி கொண்டுவரலாமே "  

                      எண்டு கயிறு  விட்டுப் பார்க்க கேட்டேன், அவள் அதுக்கும்    

                          " எனக்கு அப்படி   யாரும் இல்லை "  

                         எண்டு என் நெஞ்சில பாலை வார்த்து சொன்னாள். அவளே  

                                 " நீ ரெம்ப நல்லவன்,வெளிப்படையானவன் , பார் எப்படி  வஞ்சகம் இல்லாமல் கேள்வி கேட்குறாய், 

                                 " ஹ்ம்ம்,,அதெண்டா  உண்மைதான்  ,,மோனிக்கா "

                               " உன்னைப்போல ஒளிவுமறைவு  இல்லாத ஒப்பின் ஆட்களை எனக்கு மிகவும் பிடிக்கும் , வெளிநாட்டு ஆட்கள் நல்லா ஓப்பின் பிரண்ட்சிப் உள்ள ஆட்கள் என்று  எனக்கு தெரியும்   " 

                                 " ஓ அப்படியா,, நான் போட்ட பிளான் வேர்க் அவுட் ஆகுதே "

                                   " என்ன பிளான் போட்டாய்,,சொல்லு ,,"

                                    " இல்லை,,உனக்கு சாடினியா  மலர்கள் வேண்டி கொண்டுவந்து நட்டு ,,,அதில  இருந்து  என்னத்தையும்  தொடங்கலாம்  என்றுதான்  மோனிக்கா "
                                    
                                    " சனிகிழமை பிள்ளைகள் வீட்டில நிற்பார்கள் ,நானும் ஓய்வாக நிற்பேன்,சமைக்கலாம் உனக்கு , அதால அன்றைக்கே நீ  சாடினியா மலர்களைக் கொண்டு வந்து அதை தோடத்தில உனக்குப் பிடித்த வடிவத்தில நட்டு விடு "

                                      எண்டு சொல்லி, " சமையல் இடங்களின் பாதுகாப்பும்,ஸ்வீடிஷ் சமையல் சட்ட திட்டதுக்கும்  சம்பந்தம் இல்லாத சில டிப்பிளோமா விசியங்கள் அதுக்குப் பிறகு ஆர்வமாகக் கதைத்தாள். 

                                          
ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் பற்றி எனக்கு ஒண்டுமே தெரியாது, மலர்களை மணிக்கணக்கில் பார்ப்பேன்.ஆனால் அவைகளின் ஜாதகம் பார்ப்பதில்லை. முக்கியமா சாடினியா அது  என்ன நிறம் எண்டே எனக்கு தெரியாது. பிறகு எப்படி சடார் எண்டு சொன்னேன் எண்டு நீங்க நினைபிங்க,சொல்லுறன் ,

                                         என்னோட அப்பார்ட்மென்டுக்கு கொஞ்சம் தள்ளி கொஞ்சம் பணக்கார தனிவீடுகளில் பணக்கார வயதான பெருங்குடி மக்கள் வசித்தார்கள்,அதில் ஒரு வீடில இருந்த வயதான கிழவி எப்பவும் தன்னோட வீடுக்கு முன்னால இருந்த மலர்த் தோடத்தில ஏதாவது கிண்டிக்கொண்டு இருப்பா,என்னைக் கண்டால் இழுத்துவைத்துக்   கதைப்பா,சில நாள் கோப்பி போட்டுக் கொண்டுவந்து தந்து பேர்ச்  மரங்களின் என்னை உக்கார வைத்துக் கதைப்பா 

                                                தான் வளர்க்கும் பூனைகள், ஏமாத்திட்டு இன்னொரு பணக்காரியோட போன கணவன், கிரிஸ்மஸ் விடுமுறைக்கு மட்டும் வந்து பார்க்கும் பிள்ளைகள்,தோட்டத்தில் வளர்க்கும் மலர்கள், இவை பற்றி கன நேரம் ஒருவித  தனிமையில் கதைப்பா, ஒரு நாள் எனக்கு ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் தன்னிடம் வளர்வதாகவும், அவை வேறு யாரிடமும் இங்கே இல்லை எண்டு சொல்லி எனக்கு அதைக் காட்டி இருக்குறார், அதைவிட தனக்கு பின்னேரம் சரியா கண் தெரியாது எண்டும் சொல்லி இருக்குறா, 

                                 இப்படிதான் நாங்கள் வாழ்கையில் சந்திக்கும் மனிதர்கள் சொல்லும் தகவல்களை, நாங்கள் அதிகம் கணக்கில் எடுப்பதில்லை,ஆனால் அவைகள் வேற ஒரு சந்தர்ப்பத்தில் உதவலாம்,நான் அந்த மனிசியின்,வீட்டை நினைச்சுப் பார்த்தேன்,நான் நினைச்ச மாதிரி அந்த வீட்டுக்கு வெளியே வேலி சின்னதா ஏறிப்பாயக் கூடிய மாதிரி இருந்தது நினைவு வந்தது. 

                                          
சொன்ன மாதிரியே ஒரு வெள்ளிகிழமை நாள் இரவு,கிழவி வீட்டை போனேன், ஜன்னல்களில் திரைச்சீலை போட்டு மூடி, வெளிச்சம் இல்லாமல், கிழவி உசிரோட இருக்கிற சிலமன் ஒண்டுமே இல்லாமல் இருக்க,வெளியே அப்பிள் பழங்கள் மரத்தைச் சுற்றி விழுந்து கிடக்க, ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் இருக்கிற இடத்தைப் பார்த்தேன்,எனக்காகவே நல்ல பொலிவா அந்த மலர்கள் வளர்ந்து இருந்தது, 

                                       அந்த டிப்பிளோமா லைசன்ஸ் நினைவு வர, ஜோசிச்சுப் போட்டு, நானும் மனுஷன் தானே,நானும் எல்லாரும் போல வாழ்கையில் முன்னேறத்தானே வேண்டும் எண்டு சொல்லிக்கொண்டு, கிழவிய நினைக்கப் பாவமா இருந்தது ,என்றாலும் பகவத் கீதை சொன்ன   

                        " உன்னுடையது ஏதோ அது நாளை மற்றொருவனுடையதாகிறது " 

                                    என்ற  சுலோகம் நினைவுவர, சத்தம் இல்லாமல் சாடினியா மலர்கள் வேலையை முடிச்சிட்டு,அந்த தோட்டதில சில மலர்கள் தண்ணி இல்லாமல் வாடி இருந்தது பார்க்க பரிதாபமா இருக்க அதுகளுக்கு கொஞ்சம் தண்ணி குழாயில பிடிச்சு நல்லாக் குளிப்பாட்டிப் போட்டு ,ஒரு கடதாசிப் பெட்டியில் சாடினியா மலர்களை வேரோட பிடுங்கி அடுக்கிக் கொண்டு வந்திட்டேன் .

                                    
சனிகிழமை ,பஸ் பிடிச்சு மோனிக்கா வசிக்கும் புறநகர்ப் பகுதியில் உள்ள அவள் வீட்டுக்குப் போனேன் அவள் வீடு வில்லா என்ற தனி வீடு,வீட்டைச் சுற்றி நிறைய புல் வெளிகளும்,தோட்டமும் இருக்க, அவளின் அப்பன் வீட்டு சொத்துப்போல இருந்தது அந்தப் பழங்கால வீடு. என்னை வெளிப் படலையில்க் கண்டதும் மோனிக்கா  ஓடி வந்து மலர்களை ஆச்சரியமா பார்த்தாள், என்னை அதைவிட ஆச்சரியமா பார்த்தாள் ,  

                            " எங்க நட்டா அழகா இருக்கும் "  

                               எண்டு அட்வைஸ் கேட்டாள்,எனக்கு மலர்த் தோட்டவேலை எண்டால் என்ன எண்டே தெரியாது, சும்மா  

                          " இங்கே இதய வடிவில் நட்டா நல்லா இருக்கும் எண்டு சொன்னேன் ",    

                          " இதய வடிவில் நட்டா நல்லா இருக்கும் " 

                                                                            எண்டு  சொல்ல அவளுக்கு முகம் சிவந்திட்டுது ,பெண்களின் மென்மையான இதயம் அப்படிதான் சடார் என்று சில சொற்களில் சறுக்கும். எனக்கு ஏறக்குறைய அந்த டிப்பிளோமா லைசென்ஸ் கையில கிடைச்ச மாதிரி இருந்தது,அதுக்கு பிறகு அவள்,    

                          " உனக்கு ஏதாவது சமைக்கிறேன், வேலை முடிய எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம் "    

                                      எண்டு சொல்லி வீட்டுக் உள்ளபோய் குசினி ஜன்னலுக் கால நான் குனியாமல் நிமிராமல் வேலை செய்யும் அழகைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்,

                                      
நான் கொஞ்சம் வேண்டா வெறுப்பா குனிஞ்சு நிலத்தைக் கிண்டினேன், நிண்ட நிலையில பூ கன்றுகளை ஒவ்வொன்றா தூக்கிப் போட்டு காலால,மண்ணைத் தள்ளிப் போட்டு கொஞ்ச மலர்களை நடத்தொடங்க அவளோட இரண்டு சிறிய பெண் குழந்தைகள் நான் என்ன செய்யுறன் எண்டு பார்க்க மெல்ல மெல்ல தயங்கி வந்தார்கள் ,வந்து

                         " நீ எந்த நாட்டவன்,  நாங்களும்  அம்மாவும்  வெள்ளையா இருக்குறோம் , நீ ஏன் கருப்பா இருக்குறாய் "

                           எண்டு கேட்க, ஒரு சின்னப் பெண் என்னை வந்து தொட்டுப் பார்த்தாள், நான்

                        " நீ ஏன் இப்ப என்னை தொட்டுப் பார்த்தாய் "

               எண்டு கேட்டேன் அவள்,

                                     " நான் நினைச்சேன் நீ கறுப்பு பெயின்ட் அடிச்சு இருக்குறாய் ஆக்கும் " எண்டு சொன்னாள்

                                  நான் முதுகுக்குப் பின்னால திரும்பிப் பார்த்தேன்.மோனிக்கா குசினி ஜன்னலில் நாடிக்கு கை முண்டு கொடுத்துக்கொண்டு ,எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்,  ஒரு அரை மணித்தியாலம் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில  வேலை செய்து இருப்பேன்,அந்தக் குழந்தைகள்  

                         " நீ முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்கிறாய்  உனக்கு களைப்பா இருந்தா ஒய்வு எடு "    

                              எண்டு சொன்னார்கள்,

                                நான் அந்த தோட்டத்தில் போடிருந்த ஒரு வாங்கில இருந்துகொண்டு ,  

                                  " உங்களுக்கு சிலோன் சின்னத்தம்பி குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை தெரியுமா "  

                  எண்டு அந்த குழந்தைகளிடம் கேட்டன்.அவர்கள் கொஞ்சம் ஜோசித்து  

                                " யானை சிரிக்குமா "    

                   எண்டு சந்தேகமாக் கேட்டார்கள் ,நான் சிலோன் சின்னத்தம்பிகுனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை சொன்னேன், அதன் முடிவை சொல்லவில்லை,பிறகு யானை  போல  அவர்கள் இருவரையும் முதுகில ஏற்றி  கொஞ்ச நேரம் அந்த தோட்டத்தில உப்பு மூட்டை சுமந்தேன் 

                                  
சிலோன் சின்னத்தம்பி குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை. அது ஒரு கலியாணம் கட்டுற ஆட்களுக்கு சொல்லுற கொசப்புக் கதை அதை எப்படி குழந்தைகளுக்கு சடைஞ்சு சொல்லி முடிகுறது எண்டு எனக்கே தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருந்த நேரம், அந்த ரெண்டு குழந்தைகளும் என்னோட மடியில வந்து ஏறி இருந்து    

                          " யானை குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   சிரிச்ச முடிவை இப்ப சொல்லு "    

                           எண்டு கொண்டு நிக்க, நான் அதை வேறு விதமா,ஒரு நீதிக் கதை போல திசை திருப்பிச் சொன்னேன், ஆபாசம் கொஞ்சமும் இல்லாமல் சொன்னேன் . சொல்லி முடிய அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கவில்லை, பதிலாக நான் எதிர்பார்த்த மாதிரியே   

                                    " யானை பாவம் "    என்றார்கள் ,

                                       நான் கொஞ்சநேரம் டிப்பிளோமா லைசென்ஸ். மோனிக்கா,.ஏன் இந்த உலகதையையே மறந்திட்டேன்,

                                                  குழந்தைகளுடன் பேசும் போது மட்டும்தான் வளர்ந்தவர்களால் உலகத்தை மறக்கமுடியும் போல இருந்தது. 

                                             நான் முதுகுக்குப் பின்னால திரும்பிப் பார்த்தேன்,மோனிக்கா குசினி ஜன்னலில் சிலோன் சின்னத்தம்பி  குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை போல கோப்பி கோப்பையைக் கையில வைச்சுக்கொண்டு எங்களையே சந்தோஷமாப் பார்த்துக்கொண்டு இருந்தாள். 

                                                  
அதுக்குப் பிறகு நாங்கள் எல்லாருமே சிரிச்சு சிரிச்சு சாப்பிடும் போது .மோனிக்கா என்னை விழுங்கிற மாதிரிப்   பார்த்தாள். ரெண்டு பிள்ளைகளையும் கொண்டு போய் ஹோலில் இருந்த சோபாவில் இருத்திப்போட்டு, அவர்களுக்கு டெலிவிசனில் கார்டூன் படம் போட்டு ஓடவிட்டுப் போட்டு என்னிடம் வந்து     

                          " நீ என்ன லீனாவுக்கும்,லின்டாவுக்கும் மடியில வைச்சு சொன்னனி "    

                      எண்டு கேட்டாள் மோனிக்கா , நான் சிலோன் சின்னத்தம்பி யானையைக் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   சிரிக்க வைத்த உண்மையான,  கலியாணம் கட்டுற ஆட்களுக்கு சொல்லுற, உதவாக்கரை   கொசப்புக் கதையை கொஞ்சம் அவளுக்கு புரியிற மாதிரி சொன்னேன் ,அவள் விழுந்து விழுந்து சிரிசாள் ,    

                             " அடப்பாவி இவளவு உதவாத கொசப்பு கதையா ,,,இதெல்லாம் தெரிஞ்சு நீ எங்க உருப்படப் போறாய், ஆனாலும் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில  யானையை சிரிக்க வைச்ச அந்த மனுஷன் கெட்டிக்காரர்,,"

                                         "  ஹி...ஹி....ஹிஹி  "

                                                   அவர் உன்னோட நாட்டு ஆள்  போல இருக்கே,,, , அடப்பாவிகளா யானையை வைச்சு நீ பிறந்த நாட்டில இப்படி எல்லாம் கொசப்பு கதை உருவாக்குவின்களா,," 

                                          " ஹிஹி...ஹிஹி "

                                                 " ,அந்த யானை பாவம்பா, ஆனாலும் அந்த சின்னடம்பி கொஞ்சம் உன்னைப்போல எடக்கு முடக்கான வில்லங்கமான ஆளா இருப்பார் போல  "  

                                                 எண்டு சொன்னாள், சொல்லி அடக்க முடியாமல் சிரிச்சாள். போகும் போது ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் கொண்டுவந்து நட்டத்துக்கு நன்றி என்றால் , நான்  அவள் வீட்டு வெளிக் கதவில் முதுகை குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில முண்டு கொடுத்துக்கொண்டு ,   முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்கிற அந்தக் சாடினியா மலர்கள் களவு கொடுத்த கிளவிய நினைச்சேன்,

                                    போக வெளிக்கிட , மறுபடியும்  அடக்க முடியாமல் சிரிச்சாள். ஏன் சிரிக்கிறாய் மோனிக்கா , முதலில் சொல்லிப்போட்டு சிரி  என்றேன் ,

                                              " அந்த உதவாத கொசப்புக்  கதை  ,,,இதெல்லாம் தெரிஞ்ச நீ எங்க உருப்படப் போறாய் என்று நினைக்க சிரிப்பு வருகுது   , ஆனாலும் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில  யானையை சிரிக்க வைச்ச அந்த  ஷின்னடம்பி ,  அந்த  ஆள்  ஷின்னடம்பி போல நிறைய ஆட்கள் நீ பிறந்த உன்னோட நாட்டில இருப்பாங்க போல,,,ஜீசஸ்கிரிஸ்ட் ,, "   ,

                                                  என்று சீரியஸ் ஆகச் சொன்னாள். நான் சும்மா நான் பிறந்த என் தாய்த் திருநாட்டை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டு வேற அசுமாத்தம் இல்லாமல் கேட்டுக்கொண்டு நின்றேன்     

                                        " பரிட்சைக்கு ஒழுங்காப் படிக்கிறியா , நான் தான் பேப்பர் திருத்துவேன் , நீ எப்படியும் பாஸ் பண்ணுவாய், அதில பத்துக் கேள்வி முக்கியமா நீ விளக்கி விபரம் எழுத வேண்டி வரும், அது சரியா எழுதினால் அதுவே முக்கால் வாசி பாஸ் பண்ண உதவி செய்யும்  "  

                  எண்டு சொல்லி என்னோட நெஞ்சில பாலை வார்த்தாள்,நான் ஒண்டுமே சொல்லவில்லை, பேசாம வந்திட்டேன் , நான் போக வெளிக்கிட மோனிக்கா கிட்டவந்து  

                            " உன்னிடம் ஒரு முக்கியமான விசியம் சொல்ல வேண்டும் "  

                              "  ஹ்ம்ம் சொல்லு "

                                  " நாங்கள் பெண்கள்  ,,சின்ன சின்ன  விசியன்களில் உள்ள அன்பை எப்பவும் சட்டென்று  அடையாளம்  காணுவோம் "

                             "  ஒ அப்படியா,,கேட்கவே நல்லா இருக்கே "

                                "  என்ன சொல்லுறாய் "

                                 " ஒண்டும் இல்லை .." 

                                 " ஹ்ம்ம்,,என்னிடமும்  ஒன்றும்  இல்லை,,ஆனால்  எல்லாம் உன்னிடமே  இருக்கு,,நான் சொல்லுறது விளங்குதா உனக்கு .." 

                                        என்றாள் ,நான் கொஞ்சம் நடுங்கி விட்டேன்,ஒரு வேளை டிப்பிலோமாப் பரீட்சை பற்றி ஏதும் வில்லங்கமா  சொல்லப்போறாலோ  எண்டு இனி தலைக்கு மேல வெள்ளம் வந்த பிறகு கவலைப்பட்டு வேலை இல்லையே எண்டு பேசாமல் வாறது வரட்டும் எண்டு தலையைக் குனிந்து கொண்டு நின்டேன்,  அவள் மறுபடியும்

                                 " ஹ்ம்ம்  இதை உனக்கு கட்டாயம் சொல்லத்தான் வேண்டும்.....ஹ்ம்ம் ....   என்னோட பிள்ளைகள் உன்னைப்போல புது ஆட்களுடன் லேசில சேராதுகள் .....ஹ்ம்ம் ..  உன்னோட எப்படி இப்படி ஓட்டினார்கள் எண்டு ஜோசிக்கிறேன்,,ஹ்ம்ம்  "   

                                   "  குழந்தைகள்  அப்படிதான் , " 

                                       "நீ  என்ன நினைக்கிறாய்   " 

                                 "அந்தக்  கிழவியை  நினைக்கிறன்   " 

                                      "எந்தக்  கிழவியை,,  " 

                                      "சரி,,விடு  அது  வேற  கதை  "  

                                     " நான் என்ன நினைக்கிறன் எண்டு இப்ப சொல்லலாமா  ,,இல்லை  பிறகு  சொல்லலாமா என்று  நினைக்கிறேன் "

                                          எண்டு என் கண்களைப் பார்த்து சொன்னாள்,நான் ஒண்டும் சொல்லாமல் ஹ்ம்ம் எண்டு நானும் பெருமூச்சு விட்டுப்போட்டு வந்திட்டேன்.

                                           
அடுத்த கிழமை பரீட்சை நடந்தது , அதில் என்னோட படித்தவர்கள், போன முறை பெயில் பண்ணியவர்கள் எண்டு பலர் வந்திருந்தார்கள்.  நான் கேள்வித்தாளை பார்த்தேன்,முதலில் இருந்து எல்லாக் கேள்விகளையும் வாசித்தேன் எனக்கு கேள்வியே விளங்கவில்ல்லை . ஜோசிசுப் போட்டு கடைசிக் கேள்வியில இருந்து வாசித்தேன் அது இன்னும் குழப்பமா இருந்தது.

                                         இது சரிவராது ஆறுமாதம் முறிஞ்சு முறிஞ்சு டிப்பிளோமா படிச்சதுக்கு அர்த்தமே இல்லை போல இருக்க, அதிலும் முக்கியமா அவள் சொன்ன பத்துக் கேள்வியில் முதல் அஞ்சு கேள்விக்கு விடை தெரியவில்லை,மிச்ச அஞ்சு கேள்வியே விளங்கவில்லை , பல் தேர்வு வினா எண்டு நாலு விடை தந்து அதில சரியானதைப் புள்ளடி போட சொல்லி இருவது கேள்வி இருந்தது, 

                                                      அதைப் பார்க்க வண்ணத்திப்பூச்சி  நடு  மண்டைக்க  பறந்தது, வேற வழி இல்லாமல் நாலு விடையில் சரியானதைக் கண்டு பிடிக்க எறும்பு புடிச்சு விட்டு பார்க்கலாம் எண்டால் சுவிடனில் எறும்பும் இல்லை , எப்படியும் மோனிக்கா ஏதாவது செய்வாள் எண்டு நினைச்சு தெரிந்த சில கேள்விக்கு மட்டும் பதில் எழுதினேன்,

                               சிலோன் சின்னத்தம்பி யானையைக் கடைசில இருட்டில தேடின மாதிரி மோனிகாவை தேடினேன் அவள் அந்த பரீட்சை நிலையத்திலேயே இல்லை.  எண்டாலும் 

                             " ஆண்டவன் ஒரு கதவை அடைச்சா மறுகதவைத் திறப்பான் " 

                                         எண்டு பைபிளில் சொல்லி இருக்கிறதை நினைக்க, மண்டபக் கதவைத்  திறந்து கொண்டு வேளாங்கண்ணி மாதா  போல மோனிக்கா வந்தாள்,  தூரத்தில நிண்டு எல்லாரையும் பார்த்தாள் ,கிட்ட வந்து என்னோட கதைக்கவில்லை ,  

                                                      நான் பேப்பரை வைச்சு முழிஞ்சு கொண்டு இருக்குறதை ஓரக் கண்ணால பார்த்துக்கொண்டு இருந்தாள். நான் எல்லாம் விளங்கின மாதிரி விடை எழுதுவது போல கேள்வித்தாளில் குனிஞ்சுகொண்டு ரோசாப் பூ படம் கீறிக்கொண்டு இருந்தேன் ,
     
                                நான் விடைப் பேப்பரை அவளிடம் கொடுக்கிற நேரம் சிரிச்சாள்,    

                      " அந்த பத்துக் கேள்வி சரியா எழுதினாயா "    எண்டு கேட்டாள் ,  

                               நான்   " முதல் அஞ்சு கேள்வியும் ,,பிறகு வாற அஞ்சு கேள்வியும் எழுதவில்லை "   எண்டு சொன்னேன்,

                                  அவளுக்கு  முதல் கன்னம் சிவக்க கோபமும், பிறகு இரக்கப்படும் சிரிப்பும் வந்தது ,  நான் அவள் ஏதும் தாறு மாறாய்ப் பேசப் போறாள் எண்டு நினைக்க , மோனிக்கா கிட்ட வந்து ,    

                          " கொஞ்சம் வெளிய வா, அந்த மரத்துக்கு கீழ போட்டுள்ள மர வாங்குக்கு  போவம்  "  

                                   எண்டு சொல்ல ,நானும் போனேன் . இடது கையால தலை மயிரைப்  பின்னுக்குக்  கோதி விழுத்திப் போட்டு, முகத்தை வலது கையால வழிச்சுப் போட்டு, வலது கைச்  சுட்டு விரலை   சொண்டில வைச்சு கிள்ளிப் போட்டு,  ஸ்வீடிஷ் நீலக்கடல்விழிகளால் என் கண்களுக்குள் பார்த்து,

                                 " ஹ்ம்ம்....லீனாவும் ,லிண்டாவும் நீ வந்து தோட்டத்தில பூக்கண்டு நட்டுப் போட்டு போன  பிறகு எப்பவும் உன்னைப்பற்றிக் கேட்குங்கள்,..

                                           " ஹ்ம்ம்     ."

                                   " ..இதெல்லாம் ஏன் சொல்லுறேன் தெரியுமா..ஹ்ம்ம் ..  உன்னோட ஒரு முக்கியமான விசியம் கதைக்க வேண்டும்...ஹ்ம்ம்......"

                                            "இந்த டிப்பிளோமா லைசென்ஸ் கிடைச்சால்,,,"

                                          "............... , கொஞ்ச நேரம் நிற்க  முடியுமா..

                                          " .ஹ்ம்ம்.... " 

                                   "  நான்  விடைத்தாள் பேப்பர்  எல்லாம் கட்டி எடுத்துக்கொண்டு வாறன்,,ஹ்ம்ம் .... " 

                                         எண்டு கேட்டாள். அதுக்கு  நான்

                                                   " இல்லை மோனிக்கா இந்த டிப்பிளோமா லைசென்ஸ் எனக்கு முக்கியம்,  அதுதான் கவலைப்படுகிறேன் , "

                                              " ஆண்டவன் ஒரு கதவை அடைச்சா மறுகதவைத் திறப்பான் " 

                                        " எனக்கு சமையல் வேலை மட்டும் தானே தெரியும், "

                                  "  உனக்கு சமையல் வேலை சரிவராது, "

                                           " வாழ்கையை ஏற்கனவே நல்லா சேறு போலக் கலக்கிப் போட்டு  நடுரோட்டில நிக்கிறேன்,  " என்றேன் "

                                         " ஜீசஸ்கிரிஸ்ட் , நான் என்னவோ கதைகுறேன், நீ என்னவோ விளங்கி கதைகுறாய், ஜீசஸ் கிரிஸ்ட் , " 

                                          "அதுதான் நான் ஜோசிக்கிறேன்  " 

                                         " உனக்கு சமையல் வேலை சரிவராது, என்னோட  அண்ணா சூப்பர் மார்கெட் வைச்சு இருக்கார்,அது என்னோட அப்பாவின் காசில தொடங்கியது, எனக்கும் அரைவாசி பங்கு உரிமை இருக்கு, "

                                                   " ????????? "

                                            " நான் அதில உனக்கு ஒரு வேலை எடுத்து தாரேன், முதலில் நான் சொன்ன விசியத்துக்கு பதில் சொல்லு " 

                                    ,  " மோனிக்கா எனக்கு சூப்பர் மார்க்கெட் வேலை எல்லாம் செய்ய தெரியாது, சமையல் வேலை மட்டுமே தெரியும், "

                                              "  நான் என்னவோ கதைகுறேன், நீ என்னவோ விளங்கி கதைகுறாய்,"

                                                " இந்த டிப்பிளோமா லைசென்ஸ் கிடைச்சால் வீராளி அம்மன் கருனையால மறுபடியும் வேலையை ஆரம்பிக்கலாம் , அதுதான் நான் ஜோசிக்கிறேன் " என்றேன்.

                                                 " ஜீசஸ்கிரிஸ்ட் ,  அது யாரடா வீராளி அம்மன்,,,, உன்னோட கேர்ள் ப்ரெண்டா,,,,சொல்லவே  இல்லையே, ஹ்ம்ம்,,,,, ஜீசஸ்கிரிஸ்ட் ,,,,ஹ்ம்ம்,,,இப்பவாவது சொன்னியே, ஜீசஸ்   கிரிஸ்ட்  , தலைக்கு  கயிறுவிழமுதல் தப்பிட்டேன், என் பிள்ளைகளின் அப்பாவும்,,,,அந்தக்  கழிசடையும்,,எனக்கு  சொல்லவே  இல்லை, ஜீசஸ் கிரிஸ்ட் ,கடைசியில்   ஒருநாள் கையும் மெய்யுமா பிடிச்சேன் ,,,அதுவும்  என்னோட வீட்டு படுக்கை அறையில்.......ஜீசஸ்கிரிஸ்ட் , நான் வேலைக்கு போயிட்டு தவறவிட்ட திறப்பை  திரும்பி எடுக்க வந்த நேரம்,,, " என்று கோபமாக கதைக்கத் தொடங்கினாள் மோனிக்கா, நான் இடை மறித்து 

                                      " இல்லை மோனிக்கா, வீராளி அம்மன் , ஒரு பெண் கடவுள் என்னோட சமயத்தில்,,எங்களின் குல தெய்வம் அவா, அவாவின் கோவிலுக்கு அருகில் தான் நான் பிறந்து வளர்ந்தேன் ,,,, " என்று விபரமா சொன்னேன்  

                                     "  ஜீசஸ்கிரிஸ்ட் , ஹ்ம்ம்,,,ஹ்ம்ம் ..ஜீசஸ்கிரிஸ்ட் , "

                                     என்று சொல்லிக்கொண்டு கேட்டுக் கொண்டு இருந்தாள்.  நான் அவளோட எல்லா ஹ்ம்ம் இலும் தொங்கிக்கொண்டு  நின்றேன்.  மோனிககா வந்து மிச்சக் கதையை முடிவாகச்  சொன்னாள். .

                                                  ." வெண் மணற் பொதுளிய பைங் கால் கருக்கின்கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டுக்  " குறுந்தொகைச்  சுருக்கம் போலச்  சொன்னாள்.... 

                                                         அந்த டிப்பிளோமா லைசென்ஸ் எனக்கு கிடைக்கவில்லை , அது கிடைக்காமல் போனதை விட என்னோட வாழ்கையைத் திருப்பிப் போட்ட வேற ஒரு சம்பவம் நடந்தது.

                  தொடரும்......