Tuesday 27 March 2018

நாளை மறுநாள்...

மற்றவர்கள் போல வலிய பிடிச்சுக்கொண்டு வந்து முன்னுக்கு இருத்தி கெக்கே பிக்கே என்று சிரியடா என்று வெருட்டி மருட்டி சிரிக்க வைக்கிற மாதிரி நகைச்சுவையாக எழுதவோ ,அல்லது அங்கே இங்கே இருந்து இரவோடிரவா தள்ளிக்கொண்டுவந்த சரக்கை ஆகோ ஓகோ என்று மூக்கில விரலைவைச்சு ஆச்சரியப்படத்திற மாதிரி எழுதவோ ,.

                                             அல்லது ஒளிஞ்சு நின்றுகொண்டு தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி அரசியல் கருத்துக்களில் பட்டையைக் கிழப்பவோ ,அல்லது பாஞ்சு விழுந்து பரபரப்புகளில் கடமை உணர்ச்சியோடு பதிவு போடவோ மந்திரக்கோல் எடுத்து எழுதும் மாயவித்தை எனக்கு இன்னும் கைக்குள் வரவில்லை .


                                                          அதனால,கவிதைபோல அப்பப்ப எழுதியவைகள் இவைகள். முகநூல் சுவரில் கிடந்ததை எடுத்துப்  பகிர்ந்துகொள்கிறேன் .....



விவாதங்களால் 
வடிவமைக்கப்படும் 
சுதந்திரத்தின் 
சுத்தமான சுவாசக்காற்றை
போனாப்போகுதென்று
ஒரேயொரு வாரம் 
சுவாசிக்கலாம்
காதலர்கள்
பிழைக்கத் தெரியாத
உறவுகளை
நம்பிக்கையில் வரவாக்கி
மனதோடு பேசவைத்து .

............................................................

முதல் மூன்று வரிகளை 
இயல்பாக அதன்போக்கில் 
வேண்டுமென்றே 
கை நழுவ விட்டேன் 
நாலாவது வரி 
நான் நினைத்ததுபோல வராமல்
கைவீசிக் கைவீசி
அது விரும்பியபடி வந்தது
அஞ்சாவதிலும் ஓரளவுக்கு
என்ன சொல்லவாறேன் என்ற
கட்டுமானம் வீச ஆரம்பித்தது
ஆறாவதில்
வாயுபகவானையும்
நன்றியோடு இணைத்துக்கொண்டேன்
ஏழாவது
அரைவாசியில் புத்தியைக் காட்டி
சூறாவளியாக சுழன்றடித்து
சனியன்போலவே மாறியது
எட்டாவதைக் கட்டி இழுத்து
மேக எல்லைக்குக்
கிட்டக்கொண்டு வந்தேன்
பத்தாவது வரியில்
தென்றல் போல மென்மையான
பாதுகாப்பை உணர்ந்தேன்
பதினொன்றில்
வாடையும் பருவமும்
மறுபடியும் ஒன்று சேர்ந்தது
பன்னிரண்டில் ஆச்சரியம் வைத்து
மேகங்களோடு மோதி
பதின்மமூன்றில் அதிசயமாகியது
மிச்ச ரெண்டு வரிகளில்
திசைகளைத் திருப்பி வைத்தபோது
எழுத்துக்கள் மிதக்கத்தொடங்கின
பறவைகள் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி
எழுதிமுடித்த
அந்தக் கவிதைக்குக்
" காற்று " என்று பெயர்வைத்தேன்.!


..........................................................................

சிவப்பு ரோசாவின் 
பரீட்சை முடிவு 
காதலர் தினம் !

..................................................................

நேசிப்பின் 
முறைமையின் மீதே
கவலையை உண்டாக்குகிறது
விலைகளில் உயர்ந்த
பரிசுகள் தேடும்
தினம்!


....................................................

நெருக்கமான 
அதிகாலைப் புகையிரதம், 
திரும்பும் நிறுத்தத்தில்
கிட்டத்தட்ட நான்தான் கடைசியாக 
நுழைத்து ஏற்றிக்கொண்டேன், 
இருக்கை விளிம்புகளில்
கனவுகளைப் பாதியாக விட்டுவந்த
அரை நித்திரை மனிதர்கள்,
ரெண்டுபக்கமும் ஜன்னல்கள்
சுழல்காற்றில் சருகுபோல
நகர்ந்தகொண்டிருக்கும் வேகம்,
நாயோடு ஏறியவள்
முழங்கால்களுக்கு நடுவேயதை
அதட்டி அமத்திவைக்கிறாள்,
ரெண்டு காதலர்கள்
இரவின் மிச்சத்தை வீணாக்காமல்
இறுக்கி அணைத்து முத்தமிடுகிறார்கள்,
எக்கோடியனில் இரங்கி
பிலாஸ்ட்டிக் கோப்பையில்
கையேந்தும் பிச்சைக்காரன்,
இதயத்தில் பற்றிக் கொண்ட
ஏதோவொன்றை நினைத்து ரசிக்கிறார்
நடுத்தர நரை வயதுக்காரர்,
ஆழ்மனதிலிருந்து தோண்டிய
உதடுபிரியாச் சிரிப்போடு
தொடுதிரையில் விரலோடியபடி
சின்னவள் இணையவலைவெளியில்,
நடைச்சுற்ற்றில்
ரெண்டுபேருக்கு நடுவில் நசிந்து
நிண்டுகொண்டிருப்பவளில்
முகமிழந்த களைப்பு ,
இடுங்கி உள்வாங்கிய கண்களில்
ஒரு வாழ்நாளில்
பிரிவுகளே மிச்சமாகிப்போன
ஈரக்கசிவோடு வயோதிபர்,
பூங்காவில் ஊஞ்சலாடுவதுபோல
எம்பி எம்பிக் குதிக்கும் குழந்தையை
அன்பாக தட்டுகிறாள் அம்மா,
அனேகமாக
என் மூலை இருக்கையிலிருந்து
கவனிக்க முடிந்த எல்லாமே
வடிவமைக்கப்பட்டதுபோலிருக்கு
பெரும்பாலும்
இனி வரும் இறக்க நிறுத்தத்தில்
இந்தபிரமை ஒழுங்கின்றிக் குலைந்துவிடலாம் !


......................................................................................

பணத்தின்
பெறுமதியைக் கூட்டி
நாதியற்று போன
கண்ணாடி

பரிசுகெட்ட
அலங்கார அங்காடி
பொறுமை நிறை
வெள்ளை நகரத்தில்
வெப்பச்சலனத்தை காட்டுகிறது
கடைகளின்
காட்சிப்படுத்தலில்
உருவேற்றிய அலங்காரங்கள்.


...................................................................

பார்வையொன்றே 
பரலோகமென்று 
அதிகமாக ஏற்றி வைத்த
கற்பனையில்
வர்ண அலைகளை
விரித்து விட்டாள்
ஒருநாளை 
மறைத்துக் கசக்கிக் கொடுத்த 
சின்னக் கடிதத்தில்!

........................................................................
.
காலமானது தோற்றம் 
நிறம் மங்கவேயில்லை
நீளமான நேசம் !

................................................................

ஒப்பனைகள் தேவையற்ற
ஒரு நாள் 
சங்கடங்களின்றி
உண்மைகளை
ஒவ்வொன்றாக எடுத்து
சந்தேகங்களை
நேராகவே மோதவிட்டு
இரங்கிப் பார்த்த
பார்வை !

......................................................................

வெண்மை முடி 
வயதாக மறுக்கிறது
உண்மைக் காதல்.!

..................................................................

பார்வையொன்றே 
பரலோகமென்று 
அதிகமாக ஏற்றி வைத்த
கற்பனையில்
வர்ண அலைகளை
விரித்து விட்டாள்
ஒருநாளை 
மறைத்துக் கசக்கிக் கொடுத்த 
சின்னக் கடிதத்தில்

....................................................

அன்று
சிரிக்க மறந்து
மூக்கைச் சிந்திக்கொண்டு
அவள்
மரங்கொத்திப் பறவையைப்
பார்த்துக்கொண்டிருந்தாள்
அவனோ
கைபொத்திப் கொட்டாவிட்டு
வானத்தின் எல்லைகளைத்
தேடிக்கொண்டிருந்தான் .

.............................................................



ஈரமான
முத்தங்கள் காய்ந்து
கைப்பிடிப்பின்
வாசனைகள் வியர்த்து
பூங்கொத்துக்கள் வாடிவிடும்
இன்றிரவுக்குள்
கொடுத்துவைத்த
வாக்குறுதிகள் எல்லாவற்றையும்
நிறைவேற்றிவிடுங்கள் !

................................................................


மடித்துக் கொடுத்த 
பெரிய பதில் மடலில்
உன் 
ஸ்பரிசமே 
சொர்க்கத்துக்குப் போகும்
குறுக்கு வழியென்று
பொய்களுக்குப்
பொன் தடவினான்
காதலித்த தினமொன்றில் !

...............................................................

முடிந்த
எதிர்பார்ப்புக்கள்
சூழ்ந்துள்ள உறவுகள்
எதிர்காலம்
மாங்கல்யத்துக்கு
மட்டுமென்றே
உரிமைகோரவிடுவதில்லையே
இன்றைய
பின்மாலைப்பொழுது !

............................................................

பிறகு
கரையோரம் 
காற்றுக் கைவீசி நடக்க
நாணல் அசைந்தது
தாளம் பூ மணந்தது
முகில் இருண்டது
மழை தும்மியது
இப்பெல்லாம்
ஏதோவொரு கோவில் மணி
யாரோவொரு கடவுளை அழைக்க
காரணங்கள்
எதுவும் சொல்லாமல் 
இன்னமும் 
ரகசியமாகக் காத்திருக்கிறது
காதல் !

..........................................................


நாளை
யாழிசை மீட்டி
மதுக்கிண்ணங்களில்
மீறல்கள்
தேன் வழியும் பொழுதுகளில்
காமம் தலைக்கேறி
யாதார்த்தத்தை
நினைக்க நேரமிருக்காது
நாளை மறுநாள்
இன்னொரு
மகத்துவங்களற்ற
மறுநாள்தானே !

..................................................................

அவளுக்காக
அவனுக்காக
எழுதி முடிக்கப்பட்ட
எல்லாக்
கவிதைகளில் இருந்தும்
ஊடலின் அவஸ்தைகள்
சாயம் கழண்டு விட
கேவலப்படுத்தப்பட்ட
வார்த்தைகள்
மவுனமாக
அடுத்த வருடத்துக்கு
அசைபோட்டுக்கொண்டிருக்கும்.!

........................................................................

பழகிப்போன
ரெயில்ப் பயணம்
பார்த்துச்சலித்த
ஜன்னலோரம்
வெளிச்சம் சுருங்கும்
பகல்ப்பொழுது
குரல்களில்
பிசிறிக்கொண்டிருக்கும்
மொழிகளின் சம்பாஷணை
ஒரு
வெள்ளைவனாந்தரத்தைக்
கடக்க நேர்ந்ததுபோது
அடிமனதிலேறிவிடுகிறது
அமைதி !

................................................................................

நெடும்விசும்பு
புதிய சட்டை அணிந்து
மென்குளிரை
அரவணைத்துக்கொள்ள
எல்லாவற்றையும்
களைந்து போட்டு
வெய்யிலோடு உரசி
நெருங்கும்
பகல்ப் பொழுது
ஒரு நாளை
நிறைவு செய்ய
உந்திக்கொண்டு
காற்றைச்
சிநேகிதமாக்கும்
மொட்டை மரங்கள்
வானத்தை
வாசித்துக் கொண்டே
பறக்கிற பறவை
சில நிமிடம்
விரித்துவைத்த சிறகில்
மிதக்கிறது
ஒரு
மரஅணில் குஞ்சு
வாயில் ஏதோவொன்றைக்
கவ்வுவதைக்
குழந்தைகள் மட்டும்
கவனிக்கிறார்கள்
வெளிப்புறத்தில்
சந்தோஷம் வைச்சு
தொலைந்த வெளிச்சம்
திரும்பக்கிடைத்த
பருவத்தின்
அலைபாச்சலுக்கு
இதெல்லாம்அவசியம்தானே!

..............................................................