Saturday 2 May 2015

பாவ மன்னிப்பு..

எல்லோரும் நல்லவராகத்தான் பிறக்கிறார்கள் ஆனால் இடையில்தான் சிலர் வழி தவறிச்  செல்கிறார்கள். மீண்டுமொருமுறை  அப்படி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் விழிப்போடு வழிகாட்டி,   மனிதநேயம் தனது இதய அடையாளமாக  அதிகம் இருக்கும் ஒரு சிலருக்கே எல்லாரும்  மனிதர்கள்தான் என சிந்திக்க முடிகிறது....

                                          பணக்கார நாடு நோர்வேயின் தலை நகர் ஒஸ்லோவில் தலை விதி பிழைத்து ,போதைவஸ்தில் சந்தோஷம் தேடி, இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோசத்தையும் இழந்த, வாழ்க்கை பற்றி அதிகம் பேசாத, பேசினாலும் அவர்கள் வாழ்க்கை அதிகம் சுவாரஸ்யமாக இருக்காத ,சந்தோஷ உச்சிக்குப்  போய்விட வேண்டும், அதற்கு , மெத் அம்பிட்டமின் போதை ஊக்கி மருந்துக்கள் அள்ளிப்போட்டு, மரியுவான ஊதித் தள்ளி  முகத்தில ஒளி இழந்து ,கையில,காலில, கெரோயின் ஊசி குத்தி, சுய நினைவு இழந்தாலும்  கூட பரவாயில்லை என்று நினைக்கும் மனநிலையில் அல்லாடும்  மனிதர்களுக்கு பல வருடமா ஒஸ்லோ நகர மத்தியில் உள்ள ஒரு பார்க்கில் உணவு கொடுத்து, தாகத்துக்கு தண்ணி கொடுத்து ,ஜேசு நாதரின் போதனைகளைக் கிடாரில் பாடலாக வாசிக்கும் ஆர்னே ரண்டி என்ற மனித வடிவில் உள்ள தெய்வத்தைப்பல வருடங்களின் பின் அண்மையில் சந்தித்தேன். 

                      போதைவஸ்துகளுக்கும்  எனக்கும் அந்த நேரம் நேரடியாக எந்தத் தொடர்பும் இருக்கவில்லை, ஆனால் மத்திய ஒஸ்லோ நகரத்தில் இருந்த பிலாத்தா  என்ற பார்க்குக்கு கோடை காலத்தில் எல்லாரும் போவார்கள், ஓய்வு எடுக்க நல்ல ஒரு இடம், அங்கே தான் ஆர்னே ராண்டியை அவரோடு கிட்டார் இசைக்காகவும் , சில நேரம் கோப்பி குடிக்கவும் சந்திப்பேன்.  பல முறை அந்தப் பார்க்கில் அவருடன் கதைத்த நட்பின் அடையாளமாக அவர் பற்றி சொல்லுறேன்.

                                   ஆர்னே ரண்டி ஒரு ஓய்வூதியர் ,தனியாக ஒரு ஆடம்பரம் இல்லாத ஒரு அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்வது  மட்டும் அடிப்படையாகக் கொண்ட சின்ன அப்பர்த்மெண்டில் வசிக்கும் மனிதர்,தன்னோட ஓய்வூதிய வருமானத்தின் பெரும் பகுதியை அந்தரித்த மனிதர்களின் ஆறுதலுக்கு உணவு கொடுத்து, தாகத்துக்கு தண்ணி கொடுத்து சேவை செய்யும் ஆர்னே ஒரு காலத்தில் நோர்வே நேவியில் கடற்படை அதிகாரியா இருந்தவர்,அவர் உணவு கொடுத்து கிட்டார் அடித்து பாடல் பாடும் அந்த பார்க்கில் எப்பவும் அவர் ஜேசுநாதர் போல நடுவில நிக்க, வழி தவறிய மந்தைகள் போல பல மனிதர்கள் அவரைச் சுற்றி நிற்பார்கள்,நிலத்தில் இருப்பார்கள். ஆர்னே அவர்களுக்கு எப்பவும்

                                        " சிலுவையில் அறைந்த போது அவர்களை மன்னித்து விடுங்கள் என்று  ஜேசுநாதர் கூறியதை போல் நான் கூறமாட்டேன். நீங்கள் செய்யும் தவறை  நீங்கள் உணர்ந்தே செய்கிறீர்கள் , அதை மன்னிக்க கர்த்தர் எப்பவுமே தயாராக இருக்கிறார் எண்டு நிட்ச்சயமாகச்  சொல்லுவேன் "

                                எண்டு சிரித்து சிரித்து உத்தரவாதமா சொல்லுவார்.

                                    நோர்வே பணக்கார நாடு ,நாட்டு மக்கள் எல்லாருமே வறுமைக் கோட்டுக்கு பத்தடி உயரமா மேலே வாழும் மனிதர்கள்,ஆனாலும் இந்த மனிதர்கள் மனதளவில் தனித் தீவாக வாழும் மனிதர்கள், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை தான் மனஅழுத்த செயற்கை சந்தோஷம் தேடும் வாழ்க்கை. அன்பு,பாசம், கருணை இந்த அவசியமான அடிப்படை மென் உணர்வு  மொடேர்ன் அவசர,இயந்திர வாழ்க்கை உள்ள நாட்டில் எல்லாருக்கும் கிடைபதில்லை,பெற்றோர்கள் பிரிந்து போகும் குடும்பத்தில் வளரும் இளம் பிள்ளைகள் பல மன வெறுப்பில்,சந்தோசம் தேட போதைவஸ்தில் இறங்குவார்கள்,

                           ஒரு முறை இறங்கினால் அம்போதான்,அவர்கள் வாழ்கை அந்த போதையின் அடிமை ஆக்கி,ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்க்கை சின்னா பின்னமாகி  சிதிலமாகும், போதை உலகதில் விழுந்த அவர்கள்  நாடிய தடவிக்கொண்டு ஆண்களும், பெருமூச்சு விட்டுக்கொண்டு பெண்களும்" All by myself " என்று தனிமையில் இன்றைய நாளில் இருக்குறார்கள்! அவர்களைப் போன்ற பலரின் அன்றாட உணவு தேவையை ஆர்னே ராண்டி போன்ற உதவும் இதயம்கள் இருப்பதால் ஒரு இளைப்பாறல் கிடைக்குது.

                                       நோர்வே மக்களின் வரிப்பணத்தில் இந்த போதை பாவனையாளரை அதில இருந்து விடப்பட புணர்வாழ்வுக்கு நிறைய செலவு செய்கிறது அரசாங்கம். போதைப்பொருள் பாவனையாளர் தங்கள் சமூக உதவித் தொகைக் காசில் போதைப்பொருள் வேண்ட செலவு செய்வதால்,அவர்கள் ஒழுங்கா வாழ ஒரு இடமே கிடைபதில்லை .

                             கோடை காலத்தில் பலர் தெருவோரம், பார்க்கில்,பாலங்களின் கீழே வசிப்பார்கள், குளிர் காலத்தில் சில சேர்ச் ,சில மனிதாபிமான உதவும் நிறுவனங்கள் அவர்கள் இரவு உறங்க இடம் கொடுக்கும், ஆனால் வருமான வரி கட்டும் மனிதர்கள் இவர்களுக்காக அரசாங்கம் ஏன் செலவு செய்ய வேண்டும் எண்டு எப்பவுமே விமர்சனம் செய்வார்கள். எப்படியோ இந்த " மொடேர்ன் ஹை டெக் " சமுதாயத்தின் ஒரு வித உபரி மறைமுக உற்பத்திகள் தான் இந்த அவலநிலை மக்கள் எண்டும் எல்லாருக்கும் ஓரளவு தெரியும் .

                                    ஆர்னே மரபு ரீதியான சமய ஒழுங்கமைப்பை அதிகம் நம்பாதவர்.

                                       " சண்டே என்றால் பைபிளைத் தூக்கிக் கொண்டு சர்ச் இற்கு போறது மட்டுமில்லை  கிறிஸ்தவன் என்ற அடையாளம் அல்லது சேர்ச்  பெயரில் நற்பணி மன்றம் ஆரம்பிச்சு  சமூகப் பணி செய்ய நினைபதுமல்ல கிறிஸ்தவன் எனும் அடையாளம் அது தனி மனிதனாக  ஜேசுவைத் தேடுதல், அவர் சொன்ன வழியில் வாழ்வினை நாடுதல் "

                                      என்று சொல்லுவார். ஆர்னே ராண்டி அண்மையில் கிறிஸ்தவ பாடல்கள் அவரே எழுதி, இசை அமைத்து ஒரு சிடி வெளியிட்டு உள்ளார் . அதற்கு " பாவ மன்னிப்பு " (Forgiveness)  எண்டு தலைப்பு வைத்து பன்னிரண்டு பாடல்கள் அதில உள்ளது,எனக்கும் ஒன்று தந்தார். அந்த சிடி பாடல் தொடங்கு முன் ஆர்னே ராண்டி ,

                  " அந்தரித்த மனிதர்களின் அவலத்தை  கடவுளின் சாயலில் கடவுளே படைத்த மனிதர்கள்  எந்தவித கவுரவ அடையாளமும் இல்லாமல் வாழ்வது எவ்வளவு சிரமம்,  அடையாளமும் இல்லாமல் மரியாதையும் இல்லாமல் , மனநோயாளிகளாகவும்  இங்கே பலரை வேன்டாத மனிதராகப் பாகுபடுத்தி வைத்து இருக்கிற இந்த மனிதருக்கு உதவும் ஒவ்வொரு முறையும் கடவுளின் உலகவு சந்தோசம் ஏதோவொன்றைக்  கற்றுகொடுக்கிறது..."

                               என்று ஒரு சின்ன விளக்கம் தொடக்கமா கொடுத்துள்ளார் 

                                    எல்லாரும் வாழும் ஒரு சமூகத்தில் மற்றவர்களுக்கு யாரைப் பிடிக்கிறது யாரைப் பிடிக்கவில்லை என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய நமக்கு உரிமையும் இல்லை. என்றாலும் விளிம்பு நிலை மனிதர்களின் வேதனை எங்கள் எலாருக்குமே புரிகிறது, இந்த உலகத்தில்  ஆர்னே ராண்டி  போன்ற உண்மையைத் தேடும் அவர்களில் ஒரு சிலர்தான் அதைக் கடவுளுடன் சேர்த்து ,மன்னிப்பின் ஆழத்தில் புரிந்து கொள்ள முடியும் போல இருக்கு .

                                   மிக பெரிய சந்தோஷங்கள் எதுவும் எங்களுக்கு நாங்களே கொடுத்து வேண்டி சேர்க்க முடியாது போலவும் அடுத்த மனிதருக்கு உதவும் ஒரு நல்ல குணத்தில் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை மறுபடியும் மறக்க முடியாத ஏதோவொன்றை எங்களைப் போன்ற சாதாரண மனிதருக்கும்  கற்றுகொடுக்கிறது போலவும் இருக்கு .

                               இந்தப்  பதிவு  பத்து மாதங்களின் முன், சென்ற வருடம்  06.07.14 ம் திகதியில்  எழுதியிருந்தேன் , எய்துவிட்ட அம்பு போல நேரம் முன்னோக்கிப் பாயும்  இடைப்பட்ட காலத்தில் இயற்கை அதன் பல உயிர்புக்களையும், சில படைப்புக்களையும் வெறுமையாக்கி, குவாண்டம் பிசிக்ஸ் லெவலில் வேறு சக்தி வடிவமாக்கி இருப்பது தெரியாமலே போனதுதான் பிரபஞ்ச ஆதார விதிகளில் ஒன்று. 

                        சில நாட்களுக்கு முன்னர் ஒஸ்லோ சென்ரல் ஸ்டேஷன் அருகில் ஆர்னே எப்போதும் நிற்கும் இடத்தைக் கடந்து செல்லும்போது ஒரு சிலை தற்செயலாக கவனத்தை ஈர்ந்தது. ஆர்னேயின் நினைவாக அந்த இடத்தில ஒரு சின்ன வெண்கல சிலை வைத்து இருந்தார்கள். ஆர்னே ரண்டி  இயற்கை எய்திய திகதி அந்த சிலையின் கீழே போட்டு இருந்தார்கள். அதில நோர்வே மொழியில்  எழுதி இருந்ததை என்னோட நோர்க்ஸ் மொழி அறிவில் மொழி பெயர்த்தால் 

                                " மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படி . இன்புற்றிருப்பதேயன்றி வேறொன்றறியேன் பராபரமே  " ...இப்படி

........மனிதாபிமானம்  என்பதை மனிதர்கள் பேசுகின்ற அற்ப வார்த்தைகளால் விவரித்து விட முடியாது என்று உலகம் எங்கும் நம்பிக்கை இழந்த மனிதர்களுக்கு சொல்வது போல நம்பிக்கையோடு சில வரிகள் எழுதி இருந்தது........ 




02.05.15