Thursday, 21 April 2016

சிவலிங்கப் பூ..

யாழ்பாணத்தில சின்னவயசில சிவலிங்கப்பூ என்ற ஒரு பூவை அறிந்த நினைவு இருக்கு,அந்தப் பூ எல்லாப் பூப் போலவும் அதன் இதழ்கள் நாலு பக்கமும் மலர்ந்து சமச்சீராக விரியாமல், வேறு ஒரு வடிவத்தில் கொஞ்சம் சுருண்டு, அதன் கடினமான ஒரே ஒரு இதழ் பக்கவாட்டில் கணவனுடன் கோவித்த மனைவி ஒருக்களித்துப் படுத்த மாதிரி இருக்கும். அது மற்ற எல்லாப் பூக்களின் அடிப்படையான வடிவத்தில் இருந்து வேறுபடவைத்தது
                                               அதைவிட வளைந்த அந்த கடின இதழின் நிழலில்,ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லாமல் , அதன் நடுவில் வண்டுகள் வந்து லான்ட் பண்ணும் இடத்தில் சடைமுளைகள் போல மகரந்த மணிகள் பெருவாரிய இருக்க, காதில பூ செருகின மாதிரி இரண்டு பக்கமும் மஞ்சள் நிறத்தில் புசு புசு எண்டு பஞ்சு போன்ற மிக மிக மெல்லிய இதழ்கள் குஞ்சமாக் வெளித்தள்ள்ளிக் கொண்டிருக்கும் .
                                                    சிவலிங்கப்பூ என்ற அந்தப் பூ கிடைக்கும் போதெல்லாம் சிவபெருமானே கிடைத்த மாதிரி சாமி அறையில் கொண்டுவந்து வைக்க வீடு முழுவதும் அதன் வாசம் சாம்பிராணிப் புகை போட்ட மாதிரி வீசும், இங்கே நான் இனிச் சொல்லப்போறது அந்த பூ , அரும்பாகி ,மொட்டாகி, மலராகி மலர்ந்த அந்த மரத்தின் வரலாற்று, தேசிய முக்கியத்துவம்......
                                                 உலகம் எல்லாம் உள்ள நாடுகளில் உள்ள மாதிரி, இலங்கைத் திருமணி நாட்டிலும், மன்னிக்கவும் அந்த நாட்டை இப்படி எழுப்பமாகச் சொல்வதுக்கு, மரங்களோடு மரமா ஒரு தேசிய மரம் இருக்கு. அது என்ன எண்டு அண்மையில் நாகதீபம் தங்கசியின் பதிவில் படித்த போது, அது நாகமரம் எண்டு எழுதி இருந்தா,
                                                    இலங்கைக்கு தேசிய மரம்,தேசிய பறவை,தேசிய கீதம், தேசிய சமயம் ,இவைகளுடன் தேசிய இனம் இருப்பது எல்லாருக்கும் தெரியும். இலங்கையின் தேசிய கீதம் கொஞ்சம் நாங்கள் சின்ன வயசில் பள்ளியில் காலையில் " நமோ நமோ தாயே ,ஸ்ரீலங்கா மாதா... "எண்டு உளறிக்கொட்டியதால் கொஞ்சம் பிரபலம்,
                                           ஆனால் இலங்கையின் தேசிய இனம்.தேசிய சமயம் பிரபலமான அளவுக்கு, தேசிய மரம்,தேசிய பறவை பிரபலம் ஆகவில்லை, பெரும்பான்மையான சிங்கள தேசிய இனத்தை அந்த புண்ணியவான்களே,சிறுபான்மை இனங்களை மரங்கள் ஆக்கி ,வேண்டிய அளவு அட்டகாசம் செய்து கொஞ்சம் உலக அளவில் பிரபலம் ஆக்கியிருக்குறார்கள்.
                                                            அந்த தீவின் தேசிய மரம் நாக மரம்.ஈரவலயக் காடுகளில் வளரும் பெரிய மரம் . அதை தேசிய மரம் எண்டு 1986 இல் தான் நிர்ணயித்து இருக்குறார்கள். அதுவும் புத்தபிக்குகள் சொன்ன அட்வைசில் தான் அப்படி சட்டரீதியாக ஆக்கினார்கள் எண்டு அறியும் போது அந்த தேசிய இனம் இன்னுமொரு அட்டகாசம் சத்தம் இல்லாமல் சயின்ஸ்ல செய்து இருக்குறார்கள்..
                                                     " Mesua Ferrea " தான் நாக மரத்தின் லத்தின் விஞ்ஞான தாவரவியல் பெயர் எண்டு சொல்லுறார்கள், இலங்கையில் ஈரவலயக் காடுகள் அதிகமுள்ள , பருவமழை அதிகம் பெய்யும் ,பழைய சிங்கள பவுத்த விகாரைகள் , சிங்கள மன்னர்களின் ராஜதானிகள் இருந்த கலாசார முக்கோண வலயத்தில் உள்ள தம்புள்ளையில் இது அதிகம் இருக்கு என்கிறார்கள்,
                                              புத்த பெருமான் முதல் முறை இலங்கைக்கு வந்த போது,வேலை மினகெட்டு இந்த மரத்தை நாட்டினாராம்,அப்புறம் அவரின் சமயத்தை இந்தியாவில் அழியும் போது, தலையில் தூக்கிக் கொண்டு இலங்கைக்கு கொண்டு வந்து தம்பபன்னியில் இறங்கிய சங்கமித்தை அந்த மரத்தை வழிபட, பிக்குகள் இந்த வரலாற்றை பிடிச்சு இப்ப நாக மரம் தேசிய மரம் ஆக்கிவைத்திருகிறார்கள்
                                                        இந்த மரத்தை வெட்டுவது புத்தசாசனத்துக்கு எதிரானது எண்டு சொல்லி,சட்டம் வேறு இருக்குதாம் என்கிறார்கள் . சில நேரம் யாரவது தமிழர் இந்த மரம் என்ன மரம் எண்டு தெரியாமல் அவசரத்துக்கு இதன் அருகில் மறைந்து நிண்டு மூத்திரம் பெஞ்சால்,பிடிச்சு பயங்கரவாத சட்டதில உள்ளுக்கு போடவும் புத்த சாசன சட்டத்தில் வழி இருக்கலாம் போலிருக்கு .
                                                          நாக மரம் தான் சிவலிங்கப் பூ மரமும் என்கிறார்கள் ,ஊரில எங்களின் அயலில்,செட்டி தெருவில் இருந்த ஒரு வீட்டை சிவலிங்கபூ வீடு எண்டு சொல்லுவார்கள். அந்த வீட்டின் சுவர் ஓரமா இந்த மரம் நிண்டு அதன் சிவலிங்கப் பூக்கள் சில நேரம் வீதியில் விழுந்து கிடக்கும் ,சிவலிங்கப் பூ எண்டு பெயர் இருந்தாலும் அது, ஆட்டுக் கல்லுப் போல இருக்கும் சிவன் கோவில் சிவலிங்கம் போல இருக்காது,
                                                     கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தல் சில நேரம் சிவலிங்கம் போல இருக்கும், அந்தப் பூவை மரத்தில் இருந்து பிடிங்கினால் சிவபெருமான் கோவித்து கொள்வார் எண்டும் சொன்னார்கள் அந்த நாட்களில். சிவலிங்கப் பூ இருந்த வீட்டு மதில் சுவர்கள் மிகவும் உயரமா இருந்து, ஒருவேளை சிவலிங்கப்பூ போல அழகான பெண்கள் அந்த வீட்டில இருந்தும் இருக்கலாம்,,,சிவபெருமானுக்கே வெளிச்சம்,
                                                     யாழ் சுப்பிரமணியம் பூங்கா ஒரு காலத்தில் பூங்கா போல ரம்மியமா இருந்த காலத்தில் அங்கே அந்த பூங்காவின் நடுவில் இந்த மரம் இருந்து சாமத்தியப்பட்ட பருவப் பெண்ணின் ஜவ்வன நளினங்களுடன் வஞ்சகம் இல்லாமல் பூத்துக்குலுங்கிய நினைவு இருக்கு. அந்த மரத்தில் பூ அதிகம் உள்ள நேரத்தில் ஒரு வித மயக்கும் வாசம் வரும், அந்த மரத்தில நாக பாம்பு இருக்கும் எண்டும், அந்தப் பாம்பின் கொட்டாவி வாசம் அது எண்டும் சிலர் சொன்னார்கள்,
                                                    பாம்பு இருந்தா யாரும் அந்த பூக்களைப் பறிக்க மாட்டார்கள் என்ற ஐடியாவில் அப்படி புரளி விட்டார்களா தெரியலை, ஆனால் நிறையக் காதலர்கள் அந்த மரத்துக்கு அருகில் ஒளிஞ்சு மறஞ்சு இருந்து கொண்டு காதல் செய்ததை நான் பார்த்திருக்றேன் சில நேரம் அந்த மரத்தில இருந்த நாகபாம்பும் பார்த்துக்கொண்டு இருந்து அதன் இயலாமையை நினைத்துக் கொட்டாவி விட்டு இருக்கலாம்,......
.
ஒஸ்லோ
21.04.14

Wednesday, 20 April 2016

வேலவா வடி வேலவா..

யாழ்பாணத்தில எங்களின் வீட்டுக்கு அருகில் இருந்த, பெண்ணாம் பெரிய பித்தளை உண்டியல் பளபளக்கும் ஆடம்பரக் கந்தனின் நல்லூர் கந்தசாமி கோவில் எப்படி ஆடம்பர மக்களின் பிரசித்தமா இருந்ததோ, அதுபோல கொஞ்சம் அடிபட்ட மக்களின் பிரசித்தமாக இருந்த கோவில், அல்லப்பட்ட அடியார்களின் அடையாளமாக பிச்சைக்காரனின் அலுமினியத் தட்டுப் போல இருந்த முருகன்
வடமராச்சியில் இருந்தார்.
                                            வருடம் முழுவதும் அன்னதானம் கொடுக்கும் மடங்கள் சூழ்ந்து இருந்ததால் அன்னதானக் கந்தன் என்ற அடைமொழியில் அருள் கொடுத்து, ஆறுதல் தந்த சந்நிதி முருகன் என்ற செல்வச்சந்நிதி முருகன் கோவிலும் அடக்கமான பெயரோடு, ஒரு சின்னக் கிராமத்துக் கோவில் போல, ஆன்மீகத்துக்கு நெருக்கமாக, அலட்டிக் கொள்ளாமல் அமைதியா, இருக்கும் தொண்டைமான் ஆற்றங்கரையில் இருந்தது .
                                            சந்நிதி முருகன் கோவிலின் தேர் திருவிழாவுக்கு என்னோட அயல், " குளத்தடிக் குளப்படிக் குரூப் " நண்பர்களுடன் சைக்கிளில் சாப்பாடு கட்டிக் கொண்டு, புத்தூர், ஆவரங்கால் வெங்காயத் தோட்ட வெளிகள் ஊடாகப் போகும் யாழ்ப்பான இராஜதானியை ஆண்ட சங்கிலிய மன்னனின் இராஜதானிக் குதிரை சாணம் போட்ட இராஜ வீதி முழுவதும் மூச்சு வாங்க சைக்கிளில் மிதிச்சு, நிலாவரைக் கிணத்தடியில் கொஞ்சம் இளைப்பாறி, அந்த அடிமுடி இல்லாத கிணத்தை எட்டிப் பார்த்திட்டு மீண்டும் அச்சுவேலியில் திரும்பி .........
                                                           அச்சுவேலியில் இருந்து பல பாதைகள் சன்னிதிக்குப் போனாலும்,வல்லை வெளியின் அழகை ரசிக்கவும் தென்னை மட்டை வைச்சு வரிஞ்ச அழகான கட்டை வேலிகளுக்கு மேலால தெரிந்த கிணத்துக் கட்டுகளில் துலாவில அள்ளிக் குளிக்கும் வடமாராட்சி இளம் பெண்களின் அழகை ரசிக்கவும் கொஞ்சம் குளிச்சியா சைக்கில் மிதிக்கவும் நாங்கள் அந்த வழியை தேர்ந்தெடுத்தோம்
                                                        ஊருக்குள்ளால போகும் பாதையில் பக்தியோடு பரவசமாய்ப் பயணிக்க திட்டமிட்டு வல்லை வெளிப் பாலம் பாதையில், சேட்டைக் கழட்டி எறிஞ்சு போட்டு " சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே...." பாட்டைப் பாடிக்கொண்டே மிதித்து.......
                                                     புறாப் பொறுக்கி, குஞ்சர் கடை, எல்லாம் தார்ரோடில அமத்தி மிதிச்சு தாண்டி , வடமாரட்சி ரெண்டாகப் பிரியும் வதிரியில் வடக்கால போற கல்லுப் போட்டு கிரவல் மண் மேவிய சந்நிதிப் பாதையில் பனை மரங்களுடன் சமாந்தரமாகப் பயணித்து போன பாதையின் முடிவில் வல்லை வெளிக் காற்று பருத்தித்துறைக் வங்கக்கடலில் கலக்கும் ஒத்திகைகள் நடக்கும்
                                               தொண்டைமான் ஆற்றங்கரைத் தரவை வெளிகளின் முடிவில் சன்னதி முருகன் கோவில் இருக்கும் இடமே தெரியாமல் ஒரு சின்னக் கோவில் பக்தர்களால் மறைக்கப்பட்டு,வெளிச்சமான தொண்டைமான் ஆற்ருக்கு அருகில் கொஞ்சம் மங்கலாக இருந்தது.
                                             நாங்க போய் சேர்ந்த நேரம் ,வெயில் மண்டையப் பிளக்க முதல் வேலையா, கோவிலுக்கு போகும் பாதையின் தொடக்கத்தில், நிறையத் தண்ணீர்ப் பந்தல் போட்டு தாகசாந்தி செய்யும் சின்ன ஓலைப் பந்தலில், லவுட் இஸ்பீக்கரில், " நம்புங்கள் முருகன் நல்லவன் ,தன்னை நாடி வரும் அடியார்க்கு நல்லவன்...." என்ற பக்கதி பாடல் போட்டு பச்சை மிளகாய்,வெங்காயம் மிதக்கும் மோர்த் தண்ணி கொடுத்து கொண்டு இருக்க, அதை வேண்டி மண்டி முடிய....
                                                   சைக்கில் எல்லாத்தையும் ஒன்றாக வைத்து பூட்டிப் போட்டு, நாங்க போனதே தொண்டைமான் ஆற்றில குளிக்க எண்டது போல ஒன்றாகவே எல்லாரும், உடுப்பெல்லாம் கழட்டி, சுழட்டி எறிஞ்சு போட்டு, பழனி ஆண்டவர் போல ஒரே ஒரு உள்உடுப்போட," கந்தனுக்கு வேல் வேல்,முருகனுக்கு வேல் வேல்..." எண்டு சொல்லி மாதக் கணக்கா குளிக்காத மாதிரி, கருணாகரத் தொண்டைமான் தோண்டின தொண்டைமான் ஆற்ருக்குள்ள குதித்து, வருசக் கணக்கா ஆற்று தண்ணியக் காணாத மாதிரி நீந்தி விளையாடியதில் செல்வச்சந்நிதி முருகனை மறந்திட்டம்.

                                                          சந்நிதி முருகன் கோவிலுக்கு எதிரில், தொண்டைமான் ஆற்றங்கரையின் மறுகரையில் வெளிக்கள நிலையம் இருந்தது,அதில இருந்துதான் நாங்க படிக்கிற காலத்தில், வழமையான ஆண்டு இறுதிப் பரீட்சையின் சயன்ஸ் பாட கேள்வித்தாளை விட, எச்ற்றாவ ஒரு பயங்கர விஞ்ஞான கேள்வித்தாள் வரும், அது ஆண்டு இறுதிப் பரீட்சை அரசாங்க் கேள்வித்தாளை விட கடினமா இருக்கும், முதல் கேள்வியிலேயே வயித்தைக் கலக்கும். ஏதோ விஞ்ஞானிகள் அந்த கேள்வித்தாள் தயாரித்த மாதிரி இருக்கும் படு பயங்கரமான ,கொஞ்சம் பாட திட்டத்துக்கு வெளியே கேட்கப்படும், விடை தெரியாத கேள்விகள் உள்ள அதன் கேள்வித்தாள்.
                                                        நாங்க போன நேரம் வயித்தைக் கலக்கும் கேள்வித்தாள் தயாரித்த அந்த வெளிக்கள நிலையம் அருகில் இராணுவ முகாம் இருந்ததால், சண்டையின் இடையில் அம்புட்டு அந்த நிலைய கட்டிடங்கள் கைவிடப்பட்டு இடிந்து காணப்பட்டது. என்னைப் போன்ற பல அறிவு ஜீவன்களின் மண்டையில் மணி அடித்த அந்த வெளிக்கள நிலையம் இருந்த கேவலத்தைப் பார்க்க ,ஒரு பழி வேண்டின திருப்தியில், மனதுக்கு ரெம்பவே சந்தோசமா இருந்தது.
                                                                      யாழ்ப்பாணத்திலையே மிகப் பெரிய தேர் இருந்த செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் தேரை வெளிக்கள நிலைய இராணுவ முகாமில் இருந்து வந்த ராணுவம் எரித்து மிஞ்சிய நாலு தேர்ச் சில்லு மட்டும், அந்த மிக உயரமான தேர்முட்டியின் உள்ளே இருந்தது,
                                                           அந்த தேர் இழுக்கும் வடக்கயிறு கடலில் இருந்து அதிசயமா மிதந்து வந்தது எண்டு சொன்னார்கள். அது மிதந்து வருவது கப்பிறாளை என்ற அந்தக் கோவில் ஐயரின் கனவில் வந்தது என்றும் சொன்னார்கள்.அது உண்மையா,அல்லது பொய்யா என்று தெரியவில்லை .
                                                          இலங்கை ராணுவம் பெட்ரோல் ஊற்றி எரித்த போது தப்பிய அந்த தாழம் வடக்கயிறு பார்த்த போதும்,மிக மிக உயரமான அந்த தேர் முட்டியைப் பார்த்த போதும் அந்த தேரின் பிரமாண்டம் கற்பனை பண்ணிப் பார்க்க இன்னும் பிரமிப்பாய் இருந்தது,
                                               மற்றப்படி சந்நிதி முருகன் கோவில் சந்நிதானத்தில் ஒரு பெரிய கறுத்த மரப் பெட்டி இருக்க, அதைதான் வாய் வெள்ளைத் துணியால கட்டிய கப்புறாளை என்ற ஐயர் போன்றவர் ஆராதனை செய்ய அதை ஒரு சின்ன தேரில் வைத்து இழுத்தார்கள். அந்தக் கறுப்பு மரப் பெட்டிக்குள் உள்ள வேல் தான் கதிர்காமம் கோவில் கொடியேறும் போது அங்கே பறந்து செல்வது என்றும் பெரியவர்கள் சொல்லுவார்கள்.
                                                        கோவிலைச் சுற்றி நிறைய வசதியான நடுத்தர வயதுப் பெண்கள், வாட்ட சாட்டாமான உடம்போடு , கையில, காதில ,கழுத்தில ஒரு தங்க நகைக்கடையையே அள்ளிப்போட்டு அசைந்தாட, காஞ்சிபுரம் சேலைகளில் பட்டு மினுமினுப்புக் காட்ட, அவர்களின் இளம் பெண் பிள்ளைகள் இந்திர விழாவிற்கு வந்த சந்திரிகள் போல, மாதவிக் கண்ணால கதை சொல்ல, அலட்சியமான அவர்களின் அழகு சிலப்பதிகாரத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுத, ஆர்வக்கோளாறு அதிகமாகி, ஒரு வயதான ஐயாவிடம் விசாரித்த போது
                                   " அவயல் எல்லாரும் வல்வெட்டித்துறை ஆட்கள் கண்டியளோ, நீர் ஏன் காணும் இதெல்லாம் குடையுரீர் " 

                                         எண்டு சொன்னார். அன்னதானக் கந்தன் என்ற அடைமொழியில் அருள் கொடுத்து, ஆறுதல் தந்த சந்நிதியில் வாட்ட சாட்டாமான வல்வெட்டித்துறை ஊர் பெயரை கேட்டவுடனே, தீவிர முருக பக்தன் போல கொஞ்சம் பயத்தில ஒதிங்கியே இந்திர விழாவிற்கு வந்த சந்திர மாதவிகளை அவதானித்த போது அவர்களும் எங்களைப்போல தான் இயல்பாக அந்த கோவில் திருவிழாவை என்ஜோய் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்,
                                                  கோவிலைச் சுற்றி நிறையக் காவடிகள் " வேவா வடி வேலவா, ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா.. " என்ற பெங்களூர் ரமணியம்மா பாடலை நாதஸ்வரத்தில வாசிக்க, முள் குத்திய முதுகில் இருந்து ரத்தம் வடிய,நேர்த்தி வைத்த அடியார்கள் ஆட்டம் போட ,நிறையப் பெண்கள் வேப்பிலை வைத்த குடத்தை தலையில வைத்து குன்றத்தின் குமரனுக்கு பக்தி மயமாக,ஒரு கிராமக் கோவிலின் அடையாங்களுடன் சந்நிதி முருகன் கோவில் இருந்தது.
                                                     நாங்க போன நேரம் தொண்ணுறு ஆரம்ப வருடம் சிங்கம்/புலி சண்டையில் ,,சந்நிதி மடம் ஒன்டுமே இயங்கவில்லை...கட்டிடம் மட்டும் இருந்தது. சந்நிதி முருகன் கோவிலுக்கு பின்னால தென்னத் தோப்புகளுக்கு நடுவில் ஒரு காலத்தில் இலங்கை முழுவதுமே புகழ் பெற்ற அன்னதானம் கொடுக்கும் மடங்கள் இருந்தது,
                                                   அதுவும் சண்டையில அழிந்து,இடிந்து, கைவிடப் பட்டிருக்க அந்த மடத்துக்கு வருடம் முழுவதும் நடக்கும் அன்னதானதில் ஒவ்வொரு நாள் யார் யார் உபயம் செய்தவர்களின் பெயர்கள் ஒரு பலகையில் தொங்க ,புண்ணியம் செய்தவர்களின் விபரம் உள்ள அந்தப் பலகை மட்டும் இவளவு யுத்த அழிவிலையும் அழியாமல் இருக்க , அதில இன்னுமொரு ஆச்சரியமா ஒரு நாள் இலங்கை பொலிஸ் திணைக்களம் கொடுத்து அன்னமிட்டுப் புண்ணியம் சேர்த்த விபரமும் இருந்தது.
                                                    அன்னதானக் கந்தன் அருள் கொடுத்து, ஆறுதல் தந்த சந்நிதி முருகன் மடங்கள் இருந்த தென்னத் தோப்பு அமைதியா இருக்க,அதில இருந்த கொஞ்சநேரமே வயிறாற சாப்பிட்ட ஒரு உணர்வு வந்தது. நிறைய மனிதர்கள் வந்து அந்த மடங்களை சுற்றிப் பார்த்தார்கள், அந்தக் கோவில் சுற்றாடலில் தொண்டைமான் ஆற்றங்கரையின் கரையில், தென்னத் தோப்புகளுக்கு நடுவில் இருந்த மடம் இருக்கும் பகுதி உண்மையில், " கந்தக் கடவுள் எங்கள் சொந்தக் கடவுள் " போல இந்த உலகத்தின் ஒரு அழகான பிரதேசம் போல இருந்தது அந்தநேரம்....
...                                         தொண்டைமான் ஆற்றைக் கிண்டிய செங்கையாரிய கருணாகரத் தொண்டைமான் என்ற மன்னனின் " லொக்கேசன் செலக்சன் " உண்மையிலேயே பிரமிக்க வைத்தது.. .
..

Monday, 11 April 2016

அமரிக்காவின் அழகு

பார்த்து இரசித்து மனதில் பதியும் திரைப்படங்களை இன்னொருமுறை நினைப்பதே ஒரு அலாதியான அனுபவம் அண்மையில் ஒரு கிழக்கு மாகான எழுத்தாளர் ஒருவரின் பதிவின் "கொமன்ட்" ல் ஒருவர் " American Beauty " படத்தை நினைவுக்குக் கொண்டுவந்தார் !

                                       சுவிடனில் வசித்த போது இந்தபடத்தை வீட்டில DVD ஆக இருந்த போதும் நேரம் ஒதுக்கி போதாக்குறைக்கு என்வெள்ளைக் குதிரயையும் இழுத்துக்கொண்டு போய் தியேட்டரில் பார்த்திருந்தேன், காரணம் அதன் கமரா சத்தமே இல்லாமல் புதுக் கவிதை எழுதி இருந்ததால் !

                                           கதை ,எங்க வீடு ,உங்க வீடு போல ஒரு சாதாரண அமரிக்கக் குடும்பத்தில நடக்கும் "romantic and paternal love " கதை! ஒரு 16 வயது "டீன்-ஏஜ்" பெண்ணின் அந்த வயதுக்கேயுரிய காதல் ,தனிமை, மனஅழுத்தம், அப்பா -அம்மாவின் அற்ப சில்லறை சண்டைகள்,இதுகளைத் தான் அதிகம் கதை முதன்மைபடுத்துது போலிருக்கும் ஆனால் உள்ளே இன்னொரு சோகக் கதை ஓடிக்கொண்டிருக்கும். ,

                                   "பகுதி நேர எழுத்தாளர் " அப்பா ,அந்த "டீன்-ஏஜ்" பெண்ணின் நண்பியுடன் ரகசியமா உறவாடுவது ,"வீட்டு புரோகர்" வேலை செய்யும் அம்மா பணக்கார ஆண்களின் பின்னால் "AMARICAN DREAM "ஐ துரத்துவது, அந்த "டீன்-ஏஜ்" பெண் அயல் வீடில் வசிக்கும் றிக்கி என்ற "மரியுவானா " போதைவஸ்து புகைக்கும் பையனைக் காதலிப்பது, அந்தப் பையனின் அப்பா , ஒரு முன்நாள் நாள் ராணுவ வீரர் , "டீன்-ஏஜ்" பெண்ணின் அப்பாவை ஓரினசேர்கையாளர் என்று தாப்பாக நினைப்பது ,இப்படி ஏகப்பட்ட குளறுபடிக்களுடன் கதை திகிலாக நகருது.

                                      இந்தப் படத்துக்கு 5 ஒஸ்கார் விருது கிடைத்தது. அந்தப் பக்கத்துக்கு வீட்டுப் பையன் ரிக்கி எப்போதேமே ஒரு "கையடக்க கமராவால் " அவர்கள் வீட்டை சுற்றி படம் எடுப்பான்,அந்த "கிளிப்ஸ் " உம் அதிகமாக படத்தில வரும் , அந்தப் பையன் எடுத்த ஒரு " பிளாஸ்டிக் சொப்பிங் பை " காற்றில சும்மா எழும்பி ஆடுவதை ஒரு கவிதைபோல சில நிமிடங்கள் பின்னணி இசையுடன் மட்டும் காட்டுவார்கள் ,

                                           இப்படி தமிழ் படத்தில காட்டினால் "சரிதான் போடா மயிரு "என்று சொல்லி எழும்பிப் போய்விடுவார்கள். அந்த "சீன்" இன்றுவரை உலகஅளவில் நினைவு கொள்ளப்படுகின்றது! இந்த காமடி ரொமாண்டிக் படத்தை வைத்து எப்படி "அமரிக்க நுகர்வோர் பொருளாதார" கலாசாரம் ,ஒரு அமைதியான குடும்பத்தை சிதைக்குது என்ற யதார்த்தத்தையும் சொன்னார்கள்.

                                                   படத்தோட முடிவில் அந்த டீன் ஏச் பெண்ணின் அப்பா சுட்டுக் கொல்லப்படுவார் , ஏன் சுடப்பட்டார், யார் சுட்டது எண்டு நேரடியாக காட்டமாடர்கள் , ஆனால் திரைக்கதையை முதலில் இருந்து உள்வாங்கிப் பயணிக்கும் எல்லாருக்கும் தெரியும் அவர் மனைவிதான் அவரைச் சுட்டு இருப்பார். ஆனால் நேரடியாக சூ ட்டுச் சம்பவம் காட்டப்பட்டமாட்டாது. நாங்கள் தான் ஊகிக்க வேண்டும், அதில்தான் திரில் இருக்குது !

                                                   இப்படி Materialistic Values and Susceptibility to Influence படம் தமிழ் கலாசார சுழலில் நேரடியாக தமிழில் படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறன் , பிறகு அதை "செக்ஸ் " படம் எண்டுதான் வெகுஜன ,பொதுஜனங்கள் சொல்லி வெகுண்டு எழுவார்கள் , American Beauty "கதையின் ஆதாரமே அவர்களின் சமுக வாழ்கை முறையில் உள்ள "வெறுமை "இடைவெளிகளை Beauty என்ற அடைமொழியில் சொல்லுவது.

                                                ஆனாலும் கொஞ்சம் ஜோசித்துப் பார்த்தால் ,இதே போன்ற CONCEPT இல் தமிழில் பல படங்கள் எழுபதுக்களில் மூஞ்சி முழுவதும் மேக்-அப் அப்பிய ,ஓவர் அக்டிங், "பெரிய திலகங்கள் " நடிக்காமல்,இயற்கையான நடிகர்களான ரவிச்சந்திரன்,M R ராதா நடித்து வந்திருக்கிறது என்றும் தான் சொல்லவேண்டி இருக்கு !

                                           Context என்பது ஒன்றுதான் அதன் Presentation தான் தமிழ் கலாச்சார சூழலுக்குள் அடங்கிப்போக வேண்டிய கட்டாயத்தில் திரைக்கதையை சொல்லி இருப்பார்கள்.குடும்பங்களில் நிகழும் ஏகப்பட்ட உறவுச்சிக்கல்களை வைத்து இயக்குனர் கே. பாலச்சந்தர் அப்படியான படங்கள் நிறையவே இயக்கி இருக்கிறார்.

                                                         நான் என்ன சொல்ல வாறேன் என்று இப்ப உங்களுக்கு விளங்கி இருக்கலாம். அல்லது ஒருமுறை American Beauty யைப் பாருங்கள். எப்படி சிம்பிளாக ஒரு சில சம்பவங்களை இணைத்து ஒரு திரைகதையை உருவாக்கி அதை வைத்து ரெண்டு மணித்தியாலம் அசையாமல்க் கதிரையில்க் கட்டிப்போட்டு வைக்க முடியும் என்பதை உணர்வீர்கள்.
.
.///11. 04. 2013 ////
.