Thursday, 14 June 2018

விடையில்லாத வெற்றிடத்தில் .

கவிஞ்சர்களை மறக்காமல் கவுரவித்து வரலாற்றின் காலத் தடம் வழியில் அவர்கள் நினைவுகள் அழிந்துவிடாமல் சிலையாக வைத்துக் கொண்டாடும் நகரம் ஸ்டாக்ஹோலம் . நில்ஸ் பெர்லின் சுவீடனில் முக்கியமான கவிஞ்சர். சுவீடன் கைத்தொழில் தொழில் நுட்ப்ப முன்னேற்றத்தில் உலகத்தின் முதன்மையான பணக்கார நாடாக இருந்த போதும் அந்த நாட்டில் இருந்த சமூக இடைவெளிகளில் விளிம்புநிலை மனிதர்கள் சந்தித்த அவலங்களைக் கவிதையாக எழுதியவர் நில்ஸ் பெர்லின் .

                                                               முக்கியமாக ஸ்டாக்ஹோலம் நகரத்தின் பணக்கார மனிதர்களின் டாம்பிகா வாழ்க்கைக்கு உழைக்கும் சாதாரண மனிதர்கள் கொடுத்த அதீதமான விலையை அவர் கவிதைகள் பிரதிபலித்ததாக சொல்கிறார்கள். நில்ஸ் பெர்லின் மிகவும் கஷ்ட்டமான வாழ்க்கை வாழ்ந்தவர். பல நேரம் இருக்க வீடு இல்லாமல் அவதிப்பட்ட கவிஞ்சர்.
                                                              நில்ஸ் பெர்லினின்  குடும்ப வாழ்க்கை ஒரு ஒத்துக்கொள்ளப்பட்ட தோல்வி! அதனால் வெறுத்துப்போய் பூங்காக்களில் படுத்துறங்கிய மனிதர்!  அதனாலதானோ தெரியவில்லை வெற்றிடமான ஓர் நேசித்த   இடத்தில அவரின் ஆத்மாவோடு பேசிக்கொள்ளும் மொழிக்கு இடைஞ்சல் இல்லாமல்  ,பரிமாணமுள்ள  கனதி  நாட்களில்  வேனிற்காலக்   காற்று அசைந்த பாதைகளில்  சிதறிய தன்  கவிதைக்குரிய  வார்த்தைககளைச் சேகரித்துக்கொண்ட ஒரு அமைதியான பூங்காவில் அவருக்கு வெண்கலச்சிலை வைத்து இருக்கிறார்கள் .
                                                                              
                                                              அப்புறம்  சென்ற வருடம்   முகநூலில் நிலைத்தகவலாக எழுதிய எழுத்துருக்களை தொகுத்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவைகள் கொஞ்சம் நீண்ட வடிவாக எழுத்துருக்கள், நேரமெடுத்து வாசிக்க  எவ்வளவு பொறுமை இருக்கோ அந்தளவில் வாசித்துக்கொளுங்க!


மிகவும் திருப்தியான 
தருணங்களை 
புரியாமலே உருவாக்கும் 
குழந்தைகள் 
அறிவுரைகளை ஓரமாக்கிவிட்டு 
உதாரணங்களைத்தான்
உன்னிப்பாகக் கவனிப்பார்கள்,

பொம்மைகள
வக்கிரங்களைக்காட்டாததால்
இயல்பாகவே
நெருக்கமாகிவிடுகிறார்கள்,

எந்தக் காரணமுமின்றி
எல்லாவற்றிலும்
விபரம் தெரியாமலே
சந்தோஷமாயிருக்கிறார்கள்,

அவர்கள் இல்லாத
வீடுகள்
சுத்தமாக இருக்க
வளர்ந்த இதயங்கள்
வெறுமையாகவிருக்கும் ,

அவர்களின் சிரிப்பில்
நாதஸ்வரத்திலேயே
சிம்பொனிகள் இசைக்கப்படும்,

அவர்கள் குறும்புகளில்
விந்தைகள் தேடும்
வெளிச்சங்கள்
இருட்டை விரட்டும் ,

அவர்கள் கோபங்கள்
முடிந்தவரை அல்ல
முடிவுவரை விடை தேடும்,

அவர்களின் மவுனம்
உரையாடலற்ற
வெளிகளை நிரப்பும்,

பெரிய பரிசுப்பொருள்கள்
அவர்களை அசைப்பதில்லை
பிரியமான கரிசனையில்
ஆடி விடுவார்கள்,

குழந்தைகள் போலவே
கனவுகாணமுடியுமென்றால்
யாருமே விஞ்ஞானி ஆகலாம்,

அவர்கள் மனதை
வாசிக்கமுடியுமென்றால்
ஒரேயொருநாளாவது
எங்களுக்கும்
நாளை என்பதே இல்லாத
கடந்தகாலம்
முழுமையாகிவிடும் .....!
*

அது 
நடந்தேதீரும் என்று 
எனக்கு நல்லாவே தெரியும் 
உங்களுக்கு 
அதுபற்றி ஒன்றுமேயில்லை 


என்னைத்தவிர
அது
வேறு யாருக்கும் சொந்தமில்லை

எனக்கேயுரிய
இயலாமைகளைக் கச்சிதமாகத்
கணக்கெடுத்து
எதிர்ப்புகள் இல்லாத
இடத்தையும் கண்டுபிடித்து
மோசமான நேரத்தையும்
கூட்டிக்கொண்டு வந்தபோது
அது
என் சமாளிப்புகளையே
மண்டியிட வைக்கும்
பிரமாண்டமாயிருந்தது

என்
அனுபவத்தை விழுத்தும்
வியூகங்கள் வடிவமைக்கப்பட்ட
அதன்
பஞ்ச தந்திரங்களில்
பட்டறிவு பின்வாங்கிவிட்டது

அது அதுவாகவே
ஆக்கிரமித்த போது
என் கடைசிப் பிரமாஸ்திரமாய்
அன்பைத் எடுத்துப்
பாசத்தில் தோய்த்து
கருணையோடு தொடுத்துவிட்டேன்

நான்தான் வென்றேன்
அதைச்

சொல்லவேண்டியஅவசியமில்லை!


*


மொழி 
விபரிப்புகளில் 
காட்டும் அசட்டுத்தனம் 
சமுத்திரங்களை 
அச்சுறுத்தும் ஆழ் மௌனம் , 


உந்தித் தள்ளும
நுரை அலைகள்
கூச்சசுபாவ உணர்வுகளை
உள்வாங்கிப் பிறப்பிக்கின்றன

புதுமைகளை
உள்ளிழுத்துக்கொள்கிறது
மூடுபனி சூழ்ந்துகொள்கிற
அங்கலாய்ப்புக்கள்,

இலக்கணங்கள்
உடையும் போதெல்லாம்
இரைச்சல் நுழைந்துவிடுகிறது,

புகழப்படும் அளவிற்கு
படிமங்களில்
நின்று விளையாடிய
புதுக்கவிதைகள்
அதிகநாள் வாழ்ந்ததில்லை ,

புதிய சிந்தனைகளை
காலம்

பின்னேதான் வைத்திருக்கின்றது


வாசிப்பு அனுபவ,
எண்ணத்தில் தோன்றியதை
எழுத்துருவாக்கியே
எல்லைகளை விரித்தாலும்
ஆத்மகிலேசத்தில்
" கொஞ்சம் புரிகிறது " என்ற
எதிர்வினைகள்
அளப்பரிய நம்பிக்கைகள்,

எதையும்தாங்கி
இயங்கவைக்கும்
அந்த நாலு பேருக்கு
எப்போதும் கடன்பட்டிருக்கிறேன்!

*.
நிறங்கள் விழுங்கிவிடலாம் 
என்ற அதீத பயத்தில் 
பழைய சதுக்கதைப் 
படமெடுக்கவில்லை வசமான சில வார்த்தைகளில் 
சொல்லிவிடுகிறேன்


கைவிடப்பட்ட வரலாறு
படிந்திருக்கும் சுவர்கள்
வாழ்ந்து முடித்த
செங்கல் கட்டிடங்கள்

குறுகலான வீதிகளில்
கருங்கல்லு தேய்ந்திருந்தது


மர ஜன்னல்களில்
யாரோவொருத்தியின் விரகதாப முகம்
அல்லது
காதலின் கண்ணீர்த்துளிகள்
அல்லது
மீதமிருக்கும் காத்திருப்பு

வெளிச்சமும்தான்
கொள்ளை போனமாதிரி
விலாசங்களைப்
பறிகொடுத்திருந்தது

சிவப்பு வீட்டுக் கதவுகளில்
திறப்பு ஓட்டைகள்
அகலமாகி இருந்தது

முதுமையில்
சளிந்துகொண்டிருக்கும்
உச்சிக் கோபுரங்கள்

இங்கிருந்துதான்
நாலுதிசை நகரங்களும் தொடங்கியது
என்ற
சின்னக் குறிப்பில் திணறினேன்நீங்களே சொல்லுங்க
ஒளிதிரையில் விழுத்தி இருந்தால்
நிச்சயமாகக்
காலத்தைக் கடக்கமுயற்சித்துத்
தோற்றுப்போயிருப்பேன்..

*

அந்த ஓவியத்தில்
வலதுபக்கம்
சிறகிழந்த பறவை
மேற்குத் திசையை
வெளிச்சமாக்கி 

கிழக்கின் உதயத்தை
இருட்டாக்கி வைத்திருக்கும்
கருக்கல் வானத்தில்
இடது பக்கமாய்ப்
பறக்க முயட்சிக்குது,

விபரங்களில் எவ்வளவு
தள்ளாடினாலும் பரவாயில்லை
நிகழவேமுடியாத
பொய்யான விபரிப்பு
இப்படத்தையும் சிதைக்கிறது
என்ற நினைத்த போது
வடகிழக்கு மூலையில்
ஒரு

பிய்ந்த சிறகும்
ஒரு

வயதான மரமும்
ஒரு

கலைந்த கூடும்
உற்றுப்பார்க்கத் தெரிந்தன.

இருட்டில் இழந்துவிட்ட
இறக்கைகளில் சிலது
இப்பவும்
ஒரு மரத்தின் கூட்டில்
காற்றில் மிதந்த நினைவாலே
எழுப்பிய இசையில்
வாசமிழந்த அபத்தங்களை
இணைத்துவிட்டது

மிக அபூர்வமாகவே இவ்வாறு
மேற்குறிப்பிட்டபடி
ஒலியும் ஒளியும்
கச்சிதமாகக் கலந்தாடும்
ஒரு கனவுச் சித்திரதில்தான்
கால்வாசிப் புனைவையும்
முக்கால்வாசி யதார்த்தத்தையும்
புகைமூட்டத்தில் சிதைக்காமல்
பதிவாக்கமுடிகிறது ..*நேற்றே நடந்துமுடிந்தது 
இன்று 
நிகழ்ந்துகொண்டிருப்பது நிழலின் கனவு போல 
இடைநடுவில் குறுக்கிட்டு

பிரித்துவிடுகிற

ஜன்னல்.


மிகவும் பழக்கப்பட்ட திசையில்
திருப்பிக் கிடைக்காத நேரத்தைச்
சோம்பலோடு பார்க்கிறேன்,நடையோரப் பாதைகளில்
நசிந்துகொண்டிருக்கும் வெண்பனி
பர்தாவை விலதி
மர இலைகளைப் பார்க்குதுவெளிறிப்போன
கார்த்திகை பெண்கள்
காதுவரை குல்லாய் போட்டுப்
பத்திரமாகவே இருக்கிறதாக நினைக்கிறார்கள்,அலைபேசியில்
அழைப்பு துண்டிக்கப்பட்ட ஒருவன்
'இது நடக்கிற மாதிரி இல்லை ' என்கிறான்தாராளம் காட்டமுடியாத ஒருத்தி
தலையைக்குனிந்தபடி
வழிக்கிவிடும் இடங்களில் நிதானிக்கிறாள்,

வருடம் முழுதும் வேண்டியும்
அடங்காத ஆசையோடு
விழாக்காகப் பண்டிகைக் கிழம்புகிறது
ஒரு நடுத்தரக் குடும்பம்,

ஜன்னலுக்கு இந்தப்பக்கம்
நான் மட்டுமே
வேறு ஒரு ஜீவனுமில்லை

இன்னும் கொஞ்சம் சொல்ல மிச்சமிருக்கு
தாள்நிலையில் விறைத்துப்போன
ஜன்னல்க் கண்ணாடியில்
ஒரு பறவையின் எச்சம் இருந்தது

அதைப் பயன்படுத்தி
ஒன்றிரண்டுகளைத் தொடர்புபடுத்தி
முறைப்படி காலத்தை நீட்டிவிட நினைக்க
வெளிச்ச காலக்கெடு கடந்து
மொழியின் விழியிலும் இருட்டிவிட்டது!*


புயல் வருவதுபற்றி
முன்கூட்டியே சொல்லமுடிவதில்லை
கடலுக்கு
மேகங்களைத் தொடநினைக்கும்
உயரங்கள்வரையில்

ஆர்ப்பரித்து அலை அடிக்கும்
உப்புக் காற்று

பக்கச்சார்பாக மீறப்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தம் போலவே
இற்றைவரை அனுபவங்களும்
ஒருகணப் பொழுதில்
துரும்பாகி விடுகிறது

நுரையோடு மிதந்துவந்து
கரையெங்கும் தள்ளிவிடப்படும்
ஜெல்லிகள்

புரியமுடியாத அமைதியை
இன்னுமொரு பூரண அமைதி
சுற்றிவளைத்து
மேலேறி மேவிப்பாய்கிறது

அதிர்ச்சியான அறிவிப்புகளும்
பிரமாண்டமான விளம்பரங்களும்
முகஸ்த்துதி கேட்டுவாங்காத
மரணத்தெரிவுகளில் இல்லவேயில்லை

மிகவும் பிரயாசையாய்
அளவுப் பிரமாணம்
அடிகளில் குறித்து வைத்த
காலடி அடையாளமில்லா
வெள்ளை மணல்வெளிகள்

அதன் மீது வரையப்பட்ட
ஒரு மிக மெல்லிய வளைகோடு
உயிரோடிருத்தல்

அதட்க்குள்ளே
எல்லா ஆரவாரப்புழுதிகளும்
அடங்கியேபோய்விடும் !

*

நான்
எதுவும் சொல்லமுடியாத
இடங்களில்தான்
தீவிரமான விவாதங்கள்
ஆரம்பிக்கின்றன 


நான்
மவுனமாகும்
முடிவுகளோடிருக்கும்
மூலைகளில்த்தான்
இரைச்சல் அதிகமாயிருக்கு

என்
அவதியான நேரங்களில்த்தான்
ஆர்வமாகப் பேச
தேர்வுகள் செய்கிறார்கள்

ஒரு
நிசப்தநேசிப்புப் பாடலை
ரசிக்கத்தொடங்க
பெயரில்லா இலக்கத்தில்
கைபேசி அழைப்பு வருகுது

எழுதி முடிக்காத
கதையொன்றைத் தொடர
தண்ணி அடிக்க வாடா என்கிறான்
நீண்டகாலமாகவே
தொடர்பை இழந்த நண்பன்

ஒரேயிடத்தில்
இவளவு இடஞ்சலுக்குள்

வார்த்தைகளைப்
பிரசவிக்கும் உத்தேசத்தில்
வரிகளை
வயிறில் கட்டிக்கொண்டு
கவிதையொன்றும் காத்திருக்கு

என் இறுதி முடிவில்
எங்கிருதோ
ஒரு நாளின் போதாமையில்
சலிப்பு வந்துவிடுகிறது..

*

மேட்குநோக்கி 
சின்னதான நகரத்துக்கு 
எல்லை கடந்த பறவை 
மறுபடியும் 
கிழக்கில் வந்திருக்கு 

அதன் பழைய கூடு
சிதிலமாகிவிட்டது
இப்போதைய
ஸ்டோக்ஹோலம் நகரம்
பிரமாண்டங்களில்
பிரமிக்கவைப்பதாய் இருந்தாலும்
உறைபனிக்கால
வனாந்தர மரங்களில்
கிளைகளை நெருக்கியடித்து
புதிய கூடுகள் நிரம்பி வழியுது

வேடந்தாங்கலில்
மிகக் குறுகியகால விடைபெறுதல்

நீண்டு கொண்டிருக்கும்
உதிர்சிறகுகளில் பாரமேற்றிவிட
இந்தக் கோடையை
ஒரு மரத்தின் மஞ்சள் நிழலில்
சமாளிக்கலாம்

அல்லது
பறவையின் பறத்தலே கேள்விக்குறி

சலிப்பும் எரிச்சலும் தருகின்ற
பழைய நகரத்தின்
சோம்போறிக் கொட்டாவிகளுடன்
அந்தரத்தில்
நிலைக்குத்தாய் நிமிர்த்திவைத்த
ஏணி ஒன்றின் தள்ளாடும்
முதல் படியில்
இருப்பின் அடிப்படையான
உயிரோடு இருத்தலும்
விடையில்லாத வெற்றிடத்தில்
சேர்ந்துகொள்கிறது…!