Tuesday 11 September 2018

நாளைக்காகவும் காத்திருக்கிறேன் !


பலசமயம் மண்டையைப்பிச்சு  ஜோசிப்பது  தொடர்ந்து மீண்டும் புதிதாய்ப் படைத்துக் கொள்ளும் தேவை  குடகுமலையில் அகஸ்தியமுனியால் ஓலைச்சுவடிகளில்  எழுதப்பட்ட விதிகளின் வழியில் பயணித்துக்கொண்டிருக்கும்  தமிழ் மொழிக்கு இருக்குதா என்று ?  ஆதியான இலக்கண மொழியில் அவ்வளவு இலகுவாகக்  கோழி குப்பையைக் கிளறின மாதிரி புதிய படிமங்களைச் செருகிவைக்கிறோம் பேர்வழி என்று   மாற்றம் செய்ய முடியாது என்பது ஒரு பொதுவான கருத்து .


                                         ஆனாலும் ஒவ்வொருவரும்   காலஒட்டத்தில் கனவுகளோடு பயணிக்கும்   புனைவுக்  கவிதைகளிலும் , புதுவிதமான சிந்தனைப் போக்கில் மொழியைப் பரிசோதிக்கும் முனைவுகளிலும் அவர் அவர்கள் பாணியில் மொழியின் சாத்தியங்களை  தீண்டுவது நிற்கவில்லை,  ஆனால் பலசமயம்  அத்தனை  பரிசோதனையிலும் மரபின் மீறலும், குழப்பமான கருத்துக்களும் சேர்ந்த ஒருவிதமான ஒவ்வாமை   நெடி சிறிதளவு வீசுவதையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது ,


                                   “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,” என்ற மாபெரும் துவக்கத்துக்குப் பின் உள்ள    அனுபவம் போல மொழியில் கைவைத்து விளையாடுவது அவ்வளவு நல்லதில்லை போலிருக்கு. ஆனாலும் நான் எப்பவுமே ஏதாவது கோமாளித்தனமாக செய்துகொண்டுதான் இருக்கிறேன். அது எவ்வளவுதூரம் சரி என்று நீங்கதான் சொல்லவேண்டும் !


                                                          உருப்படாத மாடு ஒன்றை முழுசாத்  தின்றுமுடிக்காமல் ஒன்பதுகட்டுப் புல்லை இழுத்துப்போட்டுத்   தின்னுமாம்  என்பார்களே அதுபோல பலவிதத்திலும்   இந்த எழுத்துருக்கள் பலவிதமான மனோவிசித்திர  சம்பவங்களோடு சேர்மதியானவை .  இந்தவருடம் மிகஅண்மையில்  முகநூலில் எழுதியவைகள். இயன்றளவு எழுத்துப்பிழைகளை திருத்தி  தொகுத்துப் போடுகிறேன் !




*


அந்தச் சம்பவத்தை
முழுவதுமாக மறந்தேவிட்டேன் .
வேண்டுதல்களை
நிராகரித்து
விட்டுப் புறப்பட்ட

குழப்பமான முடிவுகளும் ,
விடையில்லாத கேள்விகளும்
நிழலும் கூடத் தெளிவாக இல்லை .


மீண்டும்
நிலைகொண்டுவந்து விட்ட
இன்று காலை
அவளைப்பற்றியதான
பேச்சுவரும்வரை
நினைவிலதுவும் சுத்தமாக இல்லை.


சில சமயம்
தூரத்திலிருந்து
திரும்பிப்பார்ப்பது போலிருக்கும்
தருணங்களில்
தவறுவிட்டேன் என்று தெரியுமே தவிர
என்ன என்று தெரியவில்லை !







*


வரிசையில்
கடைசியாக நிற்பதினால்
ஏதாவது எதிர்பாராமல் நிகழுமா,
முதலில்

அதைத்தான் நினைத்தேன்.

எனக்கு முன்னால் ...

பத்துப் பதினைந்து தலைகள் ,
அவர்கள் கிசுகிசுப்பது
என் மண்டைக்குள்

குலைத்துக்கொண்டிருந்தது.

அருவருப்பைத்
தந்ததுகொண்டிருந்தது
வெயிலுக்குச் சூடு ஏறியிருந்த
வெள்ளைத்தோல் வியர்வை


மொட்டை அடித்த மாதிரி
கடைசியில் நின்றுகொள்வதால்
கிடைக்காமலே போய்விடலாமென்ற
ஏக்கம் இருந்தாலும்
உரசல்களிலிருந்து
விலகியிருந்தது
சுதந்திரமாகவிருந்தது !







*


தண்டவாளத்தைத் தாண்டி
ஒற்றைப் பாதையில் நுழைந்து
அமைதியாகச்

சென்றுகொண்டிருந்தது
மழை ,


அதன் குரல் ...

சிலநேரம் தெளிவாக
சிலசமயம் சத்தமாக
சிலபொழுது ஆவேசமானபோதும்
என்னால் அதைச்

சரியாக கேட்கமுடியவில்லை.

என் பெயர் சொல்லி
அழைத்தும் சுயநினைவில் இல்லாததால்
உற்றுப்பார்த்து
யாரென்று கேட்கவே
பதட்டமாகவிருந்தது.


கொஞ்சம்போல நெருக்கமான
ஆதித்தாய்மண்வாசனை
கலந்து இருந்ததால்
சிலதுளிகளைக் கையேந்தி
முகத்தில் விசிறியடித்துவிட்டு
மீண்டும்
என்னை மறக்கத்துவங்கினேன்.!







*


மான் தோலில் மேலங்கி,
மஞ்சள் காலுறைகள் ,
பூனைப் படம் போட்ட
வெள்ளைத் தொப்பி
வில்போலக் கழுத்து...

தோள்களித் தாங்கு நாடாக்கள்
தலையில் அப்படியொரு
செழிப்பான கறுப்புமுடி
குளிரில் இலேசாக நடுங்கியபடி
அமர்ந்திருக்கிறாள் !
 அவள் யாரென்று
இன்னும் நான் சொல்லவில்லை,
ஆனால்
விலக்கப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட
கைவிடப்பட்ட
மனப்பிறழ்வின் உச்சத்தில்
நாங்கள் இருவரும்
ஓரிடத்தில் இருக்கிறோம் !







*


நிபந்தனைகளின்றி
வழங்கப்பட்டுவிட்டது
வாக்குறுதிகள் ,
இறுக்கம்
தளர்த்தப்படுகிறது


விவாதங்களில் ,
களைத்துப்போய்
முகமூடிகளைக்
கழற்றி விடுகிறார்கள்
பழையவர்கள்  ….


கேலிச்சித்திரங்களில்
புதியவர்கள்
அளவுக்கதிகமாகவே
வெற்றித் தீவிரமாயிருக்கிறார்கள் ,


உண்மைக்கும்
பொய்களுக்கும்
நடுவிலதான் தொங்குகிறது
பிடிமான நம்பிக்கை,


நாளை
குடியுரிமையை
வாக்குப்பதிவாக்கும்
இறுதி நாளென
பிரகடனம் செய்கிறார்கள் !





*


தினப்பொழுதுகளில்
என்ன நடக்கிறதென்று 
 கேட்பதில்லை.
சாதாரணமாக இருப்பது போல

மெல்லப் பார்க்கிறாள்,


நீடிப்பில் 
 பியானோ வாசிக்கிறாள்,
நதியோரம்
நடக்கப் போகிறாள்,


நல்லபடியாகவே தெரிகிறாள்.
ஆனால்
நானோ நம்பிக்கைகளோடு
ஐயப்படும் முரட்டு முட்டாள்,


குறிப்பாக
நேற்றுபகல் குலுங்கி இருமியபோது
இரத்தம் திரண்டு வந்தது,
இது
இப்படியே நீடிக்காதென்று
அச்சமாகவிருக்கிறது.


அவளுக்கு
லுகீமியா வந்த பிறகு
நான்
எந்த உபதேசங்களையும்
மேற்கோள்காட்டுவதில்லை,!



*


என்னிடம்
மிச்சமிருக்கும்
கடைசி வாக்கியத்திலும்
நம்பிக்கை கொடுப்பதாக
எதையாவது சேர்க்க விரும்புவதால்...

பின்விளைவுகளையோ
நிராகரிப்புகளையோ
நான்
கேள்வி கேட்பதில்லை ,


இடையில் எப்போதாவதுதான்
என்னவென்று தெரியாத
முற்றுப்புள்ளி
நிரந்தரமாக விட்டுப் போவதை
தீர்மானிக்கவேண்டும்போலிருக்கும் 


 அதனால்த்தான்
நாளைக்காகவும்   காத்திருக்கிறேன் !





*


பஸ்தரிப்பில்
உட்கார்ந்து கொண்டுடிக்கிறேன்,
நான் யாருக்காகவும்
காத்திருக்கவில்லை !


கசககசவென்று வியர்த்த

உள்ளங்கைகளைச் 

  சூடுபடுத்துகிறேன்,
கொஞ்சம்போலத்
தூறல் போட்டுவிட்டுப்போன

ஆவணி மழை
தாழ்வாரங்களில்
வடிசல்த் தண்ணியைச்
சொட்டிக்கொண்டிருக்கிறது ,


பெரும் கொண்டாட்டம் நேரப்போகிற
உணர்வும்,
உடனே அதைத் தொடர்ந்து
வழக்கமான நம்பிக்கையற்றுப் போன
உணர்வும் ,


இதுதான் அனேகமாக
வாழ்க்கையின் நிலைமை
இப்போதெல்லாம் !



*


காற்றில்
உந்திக்கொண்டிருக்கும்
ஊஞ்சலே
காலத்தச்சன் கைவண்ணம்,


திருவிழாக்கால

ஒப்பனைப் பூச்சுக்கள்
இளமையின் கற்பனைகள்,


நொடிகளின் நுனியில்
நமக்கென காத்திருக்கின்ற
மொட்டுக்கள் போல்
அவிழ்வதற்கு
அழகின்
ரகசியம் என்பதே
மறைந்திருப்பதுதானே !


மாயைகளோடு
மோதித்திரத்திக்கொண்டிருக்கும்
மனம்
மகிழ்ச்சியின் பொழுதுகளில்
பெரும்பாலும்
இவ்வாறே நின்று விடுகிறது !





*


காலம்
அடிவேரின் தொடக்கம்,
பார்வையின்
பரிமாணங்களுக்கேற்ப
விரிந்த கிளைகள், ...

இலைகளாய் படர்ந்த
தரிசனம் தத்துவம்,
பொழுதுகளில்
வயதாகச்
செறிந்து உதிர்ந்து
பரவச அனுபவத்தின் வழியாக
மற்றுமொரு
கேள்வி நோக்கி நகர்த்தியபடி
மெல்ல அசைகிறது
போதிமரம் !





*




வியாபிக்கவேண்டி
தருணத்தை
எதிர்பார்த்திருக்கிறது
அலை விளிம்பிலிருந்து
புறப்படுவது போலிருக்கும் ...

நடைப்பயணங்கள் !


ஆனாலும்
என்
கால்களிரண்டும்
கடத்தப்பட்டுவிட்டதுபோல
சில நேரங்களில்
நகரவே முடிவதில்லை !


விரல்களிடை
எனக்கு பரிச்சயமான
அந்தச் சில நேரங்களில்த்தான்
வெறும் பாதங்களை
குறுனிக்கல்லில்
தேய்க்கவேண்டும் போலிருக்கும் !





*


அங்கலாய்ப்புகளில்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவில்
முரண்பாட்டுக்கொண்டிருக்கு
பழுப்புநிற நிழலில்

வெளிச்சப் பொழுதுகளை
அசைத்தபடி நீட்டிவைக்கும்
பகலும் ,
சகலத்தையும்
முழுமையாக அறுத்து
இருட்டிடை ஸ்தம்பிக்க வைத்தபடி
ஒளிந்துகொள்ள
இடமொன்றைத் தேடும்
இரவும் !