Saturday 23 December 2017

தீச்சுவாலைத்தேசத்தில் ...

யுத்தம் அது ஒரு திகில்க்கனவு போல இருக்கும் அதட்குள் வாழாமல் வெறுமனையே அதை கேள்விப்படுபவர்களுக்கு. யுத்த காலத்தில் மரணத்துக்கு அருகில்  வாழ்ந்தவர்களுக்கு தெரியும் அதன் கொடுமை . அதன்  வீரியம்.  அதன் பாதிப்புகள் எவ்ளவு காலம் கடந்தும் அழிவதில்லை. அப்படியான நிலைமையை ஒருவித மனஅழுத்த வியாதியான PTSD என்று இங்கிலீஷில் சொல்லுகிறார்கள். 

                                                         எல்லாருக்கும் அப்படியான நிலைமை இல்லை என்றாலும் கொஞ்சமாவது துயரங்களையளைந்த அனுபவங்களை குடைநிழலில் நிலைதேடியெடுத்தபடி ஏதோவொரு
மேலதிக துன்பங்களை பரிசளிப்பதுபோல  யுத்தப்பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். 

                                              எண்பதுகளில் எங்கள் நாட்டில்  பிரபலமான  புதுக்கவிதை  விடுதலைக் கவிஞ்சர்கள் இருந்தார்கள். அவர்களின் கவிதைகள் வாசிக்க  எப்பவுமே இனமான  எழுச்சியாக இருக்கும். அதுகளை வாசித்துப்போட்டு இரவோடு இரவாக    இயக்கங்களுக்குப்  போனவர்கள் நிறையப்பேர்.  போனவர்கள் வீரமாகப்  போனவர்கள்தான் .    விடுதலை வெல்லப்படவில்லை ! 


                                                                அப்பப்ப எழுதிய இயலாமை  குறித்து  தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் சேகரித்துவைத்திருந்த கவிதை போன்ற பதிவுகளை தொகுக்கும் போது நானும் கொஞ்சம் யுத்த அவலங்களை தொட்டுச் சென்றுள்ளது தெரிந்தது.   அதை  இந்த தொகுப்பாக்கியுள்ளேன் ! 

.
நான் 
கடவுளைச் சபிக்கிறவனல்ல 
வெளியில் 
பொதுவான தளம்தான் 
குவிமையத்தில் 
வேவேறுவிதமான எண்ணங்கள்
குளிர் மழையோடு
கசகசத்துப் போனவைகளையும்
அனல் வெயிலொடு
தணலாகிப் போனவைகளுமாய்
என்
துயரங்களையளைந்த அனுபவங்களை
குடைநிழலில் நிலைதேடியெடுத்தபடி
ஏதோவொரு
மேலதிக துன்பங்களை பரிசளிப்பதுபோல
உச்சகட்ட வெறுப்பில்
பக்கம் பக்கமாய்ப்
புரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்
இன்னும்தான்
மனம்வைத்து உள்நுழைந்து
வாசிக்கவேதொடங்கவில்லையே !

.
.......................................................................................
.
ஒரு 
தீச்சுவாலைத்தேசத்தில் 
கடலொன்றுக்காய்க்காத்திருந்த 
ஊற்றுப்பெருக்கால் உலகூட்டிய 
ஜீவநதி 
ஆற்றுப் பெருக்கற்று
அடி வற்றிப்போவிட்டது !
அதன்பின்
ஆக்ரோஷ அலைகள்
உள்ளீட்டுப் புயலாகி எழுந்தாடியும்
சமுத்திரக்கரைகளைத்
தாண்டவேமுடியவில்லை !
தகமெடுத்த
மஹாநதியின்
ஒரு பெருமூச்சுடன்.
ஒரு கண்ணீர்த் துளியுடன்
ஒரு உதட்டில் மலரும் புன்னகையுடன்
ஒரு அரிநெல்லி மரத்தினடி இளைப்பாறுகையில்
மனச்சாட்சியை
நச்சுறுத்திக்கொண்டேயிருந்த
ஆழிப்பேரலைகள் 

தோற்றேபோய்விட்டன !
.
........................................................................................
.
நேற்றுமுன்தினத்தின்
தலைப்புச்செய்தி
இயலாமையைச் குறித்து
ஈட்டிபோலவே
நுனிமுனையில் கூர்மையாகவிருந்ததால் 
தேர்ந்தெடுத்த வார்த்தைகளில்
சேகரித்துவைத்திருந்தேன் ,
நேற்றேயதன்
வாதப்பிரதிவாதங்கள்
திட்டமிடப்பட்ட
எல்லாப் புத்திசாலித்தனங்களையும்
கேலிசெய்ததால்
வெற்றுத்தாலொன்றிலேயே
சிலிர்த்து எழுதநினைத்த
மூலக்கருவுடன் மோதி
உடன்பாட்டுக்குவரமுடியவில்லை !
.

...........................................................................
.
இன்று
இன்னொரு பரபரப்பு
அதையும் மேவிமுந்திவிட்டது !
நாளைக்கதுவும்
நலிந்துபோகவைக்கும் வியாக்கியானங்களுடன்
நாளொன்றுக்குள்
தோற்றோடிப்போய்விடலாம் !
இப்போதைக்கு
"எனக்கென்ன வந்தது "என்ற
அதீதமான அலட்சியத்தில்
வெற்றுத்தாளை
நாளைமறுதினத்தைக்
கிளப்பப்போகும் செய்திக்குள்
எழுத்துக்கள்தேடியெடுக்க
வெற்றிடமாகவைத்துக்கொண்டிகிறேன் !

.
.......................................................................................
.
ஒரு
மங்களகரமான நம்பிக்கையுடன்
நீண்ட பகல்களும்
நிசிநட்சத்திரங்களும்
வானத்துக்கும் பூமிக்கும் 
கொட்டமடிக்கும்
உத்தரதேசத்தில்தான்
நீ
இயல்பாகவேயிருக்கிறாய் !

இங்கேயோ
ஆதி உயிரின் குறியீட்டுக்
கடவுச்சொல்லே
நினைவுகளாலே இயங்குகிறது !

.
...................................................................
.
எல்லாத்தரப்பிலும்
நெருக்குவார அணுகுமுறைகள்
விசாரணைகளை ஏற்றுக்கொள்ளவிரும்பாத
ஆத்மாவொன்றை
விட்டுச்செல்கிற முடிவொன்று
தாமதமாகிக்கொண்டுதானிருக்கு
ஏனோதானோவென்று
காத்திருப்பதில்
சுமைகளைச் ஏற்றிவிடுகிற
இறந்தகாலத்திலிருந்து
எதிர்காலஇதயத்தைப்
பதிவிறக்கமுடியாமல்
எச்சங்களை இழுத்துக்கொண்டுவருகிறது
காலப்பக்கங்களில் பறக்கும்
வேகப்பறவை !

.
.....................................................................................
.
காற்றைப்போலவே எல்லைப் பிரதேசங்களை
வரிந்துகொள்ளாமல்
வாழ்வுக்கு எல்லாம் கொடுத்து
வினோதங்கள் செய்யும்
...

மதங்களைப்
பலமுறைகளில் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
ஒரு
மிகச்சிறுபான்மையினம்
மதம்பிடித்தவர்களால்
ஏதிலிகளாக்கப்பட்டு
பூமித்தாயிடம் மண்டியிட்டு
கால்களைப் பற்றிப்பிடிக்கையில்
தம்ம காருண்யபாதம்
எங்கோபோய்
ஒளிந்து கொள்கிறது.....!

.
..................................................
.
இப்பெல்லாம்
படைத்தவனின் சமன்பாட்டிலேயே
அடைப்புக்குறிக்குள்
அடங்கிப்போய்க்கொண்டிருக்கும்
பயனில்லாத
மதம்
அது ஏதுவாகத்தானிருந்தாலும்
மனிதாபிமானத்தின்
தாமதம் !

.
.....................................................................
.
தோய்த்த துணிகள் 
கச்சான்காற்றிலாடுவது போலவே 
வெள்ளைக்கொடிகள் !
உத்தியோகபூர்வ இறுதிமரியாதைகள் 
புறக்கணிக்கப்பட்ட 
ஒரு
விருப்பமில்லா நாள் !
பிரபலமான பெயரையோ
தாண்டமுடியாத சாதனைகளையோ
உறுதிசெய்யமுடியாமல்ப்போன
மனிதன் !
அவனின் அகாலமரணத்தோடு
எப்படியெல்லாம்
அருகில் வந்து உடன்படுகிறீர்கள் ?
கீழ்வானம் போல சிவத்துப்போன
அவன் மனைவியின்
சந்தேகமற்ற கண்களில்
பிரசவ வலிபோலக் கண்ணீர் !
மரணச்சடங்கின்
இடைநிலை ஸ்திதியில்
மவுனமான அஞ்சலிகள்
சிலநொடித் தோற்றமயக்கத்தில்
எதிர்காலமென்பதை நிராகரித்து
நிகழ்காலமாகி
மீண்டும் இறந்தகாலமாகிவிட்டது!
இப்போது அவன்
கல்லறையைச் சுற்றி வரவும்
சாவின் விழிம்பைத்
பிரியமறுப்பதுபோல
அம்புரோசியோ மலர்கள்
சடைச்சுப் பூத்திருக்கின்றன !

.
.........................................................
.
அந்தநாளை
நினைக்கும்போது
வலிக்கிறதாலோ தெரியவில்லை
வலிக்கும்போதும்
நினைக்கத்தோன்றுகிறது !

.
...............................................................................................
.
எதையெல்லாம்
நீங்களாகவே
நிலையாமை என்கிறீர்களோ
அவைதான் அதன் பலமென்கிறது
அவன் எழுதிய நாவல் .!
வருடங்களின்முன்
அகால இறப்பில் தப்பியவன்
அவன் காலத்திலேயே
அலுத்துப்போன கதையாகிவிடுகிற
அதுதான்
சொல்லப்படும் உத்தியின் சுருக்கம் !
செத்து முடித்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து
மீண்டும்
இறந்து போகாமல்
மீண்டெழுந்து வந்தாலும் ஆச்சரியமில்லை.
ஏனெனில் மரணத்துக்கென்று
மரியாதையே கிடையாது.என்கிறான் !
ஒரே
ஒரு இடத்தில்
விதிக்கப்பட்ட விதியை
இலாவகமாக திருப்பியதற்காக
கடவுளை மெச்சுகிறதும்
அவன்தான் !
நட்சத்திரங்களை பின்தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருத்தலை
இரசித்துவிடும் மயக்கத்தில்
மனஉளைச்சலை
அவனால்
குற்றவுணர்ச்சியோடு கடக்க முடிகிறது.!
இந்த அபத்தங்கள்
ஏதேனும் பின்நவீனத்துவமா ?
அதைவைத்துத்தான்
" என்னைக் கொன்றுவிடுங்கள் "
என நாவலுக்குப் பெயர்சூட்டினானா ?
ஆச்சரியம் மட்டும் தான்
மிச்சம். !

.
..........................................................................
.
அதிகாரமதிகமுள்ள
மனிதர்கள்
எப்படியெல்லாம்
மீசை முறுக்குவார்களோ
அப்படித்தான் அந்த 
" கடைசிச் சண்டை " கவிதையும் !
சில்லிடும் விபரிப்புகளில்
யுத்த நடைபயின்று
அடையாழமில்லாமல்த்
திசையிழந்துகொண்டிருந்தது !
வரவேற்றுப்
புகழ்ந்துகொண்டிருந்தவர்களின்
பொய்வேஷங்களெல்லாம்
இணக்கமான
சூழ்நிலையென்பதால்
பசப்புவார்த்தைகளோடு
வேகமாகவே கலந்து
இனம்தெரியாமல்
இயல்பாக்கிக் கொண்டிருந்தன !
புகழ்ச்சிதரும்
வார்த்தைகளை அசைபோட்டுக்கொண்டே
முகபாவனைகளைக்
கட்டுப்படுத்தமுடியாத
பிறவிக்குருடன் போலவே
எல்லா முன்னணி முனைகளிலும்
வரிகளோடு வரிகள் !.
எவ்வளவு நேரத்துக்கென்று
சொல்லமுடியவில்லை
இப்படியே
கருவூலத்தில் குளிர்ந்த இருட்டாகி
என்
தட்காப்பு நிலையெடுக்க இயலாத
மனதும்
போர்க்களம் போலவே
தாறுமாறாகச் சிதறிவிட்டது !

.
..............................................................................
.
கவனத்தை
மேலும் கீழும் ஈர்க்காமல்
முடியும்வரையில்
ஒரு
மரத்தின் பின்னாலே 
மறைந்துநிட்கிறேன் !
ஓரக்கண்ணால் பார்ப்பதை
நிறுத்திவிட்டு
எல்லோரையும்விட
அதிகமாய்
அழுகிறார்கள் அவர்கள் !
துள்ளிக்கொண்டிருந்த
நாட்களின்
நினைவுகளில்
நாற்றமெடுக்கும்
குளிர்ந்த சேற்றுமண் !
அடித்து ஓய்ந்தபின்னும்
விழுந்துவிடாமல்
மூச்சுக்குத் திணறும்
காற்று !
ஒப்பாரிகளில்
மிதமிஞ்சிய சோகத்தைத்
நனைத்துப்பிழிகிறது
மழை !

.
..........................................................
.
வதந்திபோலக் கிளம்பியதால்
நையப்புடைக்கப்பட்டு
சிதைக்கப்பட்டு
மர்மமான வியாதியொன்றின்
பிரதியெடுப்புப் போல
அட்பாயுளில் இறந்து போகிறது
இந்த
அட்புதங்களை உருவாகும்
நிமிடம் !

.
.........................................................................
.
பயப்படவேண்டாம் 
ஒரு 
புதிதான யுகமென்பது 
நுண்ணோவியனின் 
காலமான ஆசையிலிருந்து 
விடுபட்டுக் கிளம்பிவருவதல்ல !

ஒரு
மோசமான
திக்குத்தெரியாத அலைச்சலில்
ஏதோவொருவிடத்தில்
நிஜமாகிப் பரீச்சயமாகிவிடும்
கவிதை ,

ஒரு
அர்த்தமில்லாத பாதையில்
தேவையிழந்து
அபத்தமாக முடிவடைந்த
யுத்தம்,

ஒரு
மனத்தைரியமிலாதவனுக்கு
கழுத்தளவு சாபங்களிலும்
விகசித்துக் கிடைத்துவிடும்
விமோசனம் ,

ஒரு
ஓவியனின் அசட்டைத்தனத்தில்
புதியவொரு திசையெடுத்துக்
கலைந்து போய்விடும்
நிறப்பிரிகைகள்

ஒரு
காலூன்றமுடியாத கனவில்
சிறகுகள் ரெண்டும்
கறுப்புவெள்ளையாகவிருக்கும்
வண்ணாத்திப்பூச்சி ,

ஒரு
பராக்கிரமகாலத்தின்
கடைசிப் பெருமூச்சைப்
புழுதியோடு முந்தவிடும்
வீராதி வீரன் ,

இப்படித்தான்
முடியவே முடியாதென்று
வரிந்துகட்டிக்கொண்டிருந்த
அத்தனை கட்டுமானங்களும்
அழுத்தமாகவே
முடிந்துபோகிறது !

..