Wednesday 12 August 2015

நொண்டி குதிரைக்கு....

சில விசியங்களை இலகுவில் கைவிட முடியாது. " நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு போல " உத்தரவாதமான வெய்யிலும் ,தெளிந்த நீல வானமும், மிதமான கடல்க் காற்றும், வேலையில் லீவும், கையில காசும் , இருந்தால் சைக்கிளை தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருப்பது அலாதியான அனுபவம். இன்று ஒஸ்லோவின் முக்கிய கடல் விளிம்பு அதிசயமான , இந்தப் படத்தின் பிண்ணணியில் உள்ள " ஒஸ்லோ ஒபேரா ஹவுஸ் " பக்கம் சுற்றினேன்.
                                    உலகின் எல்லா நாடுகளிலும், முக்கிய நகரங்களில் " ஒபேரா ஹவுஸ் " இருக்கு. அதன் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நான் நினைப்பது அதை " செவ்வியல் அரங்கு " என்று அழைக்கலாம் என்று. அதிகமாக இதில பல நூற்றாண்டுகள் முன் இசை அமைக்கப்பட்ட கிளாசிகல் சிம்பொனி, கிளாசிகல் நாடகம்,நடனம் தான் நடக்கும். நிறையப் பொறுமையும் கலைகளில் காதலும் வேண்டும் அதை ரசிப்பதுக்கு. துரதிஸ்டவசமாக அது ரெண்டுமே என்னிடம் இல்லாததால் உள்ளே போய் நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை..
                                         பத்து வருடங்களுக்கு முன்னர் ,ஒஸ்லோ நகரம் " பழய முறத்துக்கு சாணி, கிழ பொணத்துக்கு சோறு.." எண்ட பழமொழி போல ,சும்மா அலை கரையை அடித்துக்கொண்டு கிடந்த இடத்தில இந்த " ஒபேரா ஹவுஸ் " கட்டினார்கள். கொஞ்சம் எழுப்பமா வெளிய தெரியாவிட்டாலும் உள்ளுக்க நல்ல பிரமாண்டமா இருக்கும். நிறைய மில்லியன் குறோணர்களை விழுங்கியது இந்தக் கட்டிடம் இப்படி எழுந்து நிற்க.
                                         என்னத்தை எழுதினாலும் நிறையப் பழமொழிகள் எழுதும்போது அப்பப்ப வசனங்களில் இடை இடையே தள்ளிவிட்டுப் போவது. பலருக்கு அதன் அர்த்தம் விளங்குமா தெரியலை. முக்கியாமா அதை எழுதுற எனக்கே அர்த்தம் தெரியுமா என்று பலருக்கு சந்தேகம் நீண்ட நாட்களாய் இருக்கு. நானும் அங்கேயும் இங்கேயும் படிப்பது.
                                      " நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு... போல " என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் எண்டு சொல்லாட்டி என் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கை இழக்க வாய்ப்பு உள்ளது . அதனால " படுத்தா ஒட்டுவதுதான் புரண்டாலும் ஒட்டும்,,போல " , அட பேந்தும்பார் இதுக்கும் ஒரு பழமொழி இடையில வருகுதே .. அர்த்தம் சொல்லுறேன்
                                       எனக்குத் தெரிந்த ஒரு நோர்வேயிய இன நண்பர் அடிக்கடி மூக்கு முட்டும் வரை குடிப்பார், குடிச்சுப் போட்டு தலையை சுவரில டமால் டமால் என்று முட்டுவார். " ஏன் இப்படி சுவரின் பலத்தை எப்போதும் பரிசோதித்துக் கொண்டு இருக்கிறாய் " என்று கேட்டா , " என் மனைவி எப்பவும் என்னோட சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறாள் . அத மறக்கத்தான் தினமும் குடிக்கிறேன்.” என்பார்.
                                உண்மையில் அவர் மனைவி இவரை விட்டுப் பிரிந்து போய் பலவருடம் . இவர் குடிச்சு வெறி தலைக்குத் தாறுமாறா ஏறத்தான் , அவர் கலியாணம் கட்டினதும் , பிரிந்து போன அவர் மனைவியும் , அவளோடு முன்னர் போட்ட சண்டையும் இவருக்கு நினைவுக்கு வரும். அதை வைச்சு மிச்ச கதையை சீரியல் போல இழுத்து நீட்டுறார்...
                              இவர் போல ஆட்களைத்தான் நொண்டிக்குதிரை. என்று சொல்லுவது. அவர் ஒரு பெரிய குடிகாரர். எப்படியாவது குடிக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு சாக்கு சொல்லி குடித்து முடிக்க முடியாமல்க் குடித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.
                                        இது போலத்தான் நல்ல லொக்கேசன் உள்ள இடங்களுக்கு போகும்போது என்னை அறியாமல் மொபைல் போன் பொக்கட்டில் இருப்பது நினைவு வரும். நானும்தான் இனிமேல் மொபைல் போனில படம் எடுத்து அதை முகநூலில் போட்டு, தெரியாத்தனமாக வந்து கழுத்தில சுருக்கு மாட்டிக்கொண்டு நிக்குற நட்புக்களை நேரம் காலம் இல்லாமல் வதைப்பது சரி இல்லை என்று நினைப்பது, ஆனாலும் ஆசையை மீசை போல வழிக்க முடியலையே.
                        என்ன சீவியமடா இது !
.
,.
12.08.15