Tuesday, 19 December 2017

நெருங்கிப்பழகிய குரல் !

 " வேலிக்கு மேலால் படரும் கிளைகளை வெட்டும் தோட்ட்டக்காரனே கீழே படரும் என் வேர்களை என்ன செய்வாய் ? "  என்று பால் வீதி கவிதைத்தொகுதியில்  ஒரு சின்னக்  கவிதையில் கேட்பார், மேலோட்டமான உணர்ச்சிப் பெருக்கில் தம்மைக் கவிஞர்களாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள் மத்தியில் ஆரவாரமற்றுத் தன் கவித்துவத்தை வெளிப்படுத்திய  கவிக்கோ அப்துல் ரகுமான்.  

                                                       சட்டென  இக்கவிதையின் ஆழத்தைப் புரிந்துகொண்டால் சின்னக் கவிதைகளின் வீரியமான செய்திசொல்லும்  நுட்பம் புரியும். அப்படித்தான் சின்னக் கவிதைகள்.அளவில்   சின்னதாக இருந்தாலும்  விதையில் ஒரு உணர்வுபூர்வமான மன்றாடல் இருக்கும். 

                                                     தமிழ்க் கவிதையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த செழுமையான ஒரு காலத்தின் அடையாளம் மறைந்த கவிக்கோ தமிழ்ப் பேராசிரியர்  அப்துல் ரகுமான் . புதுக்கவிதைக்குக் காத்திரத்தையும் நெகிழ்வுத் தன்மையையும்  ஒருங்கே அளித்தார் என்பது மிகையான கூற்று அல்ல.  

                                                       சினிமா பாடல் எழுதுவதை அறவே தவிர்த்த   கவிக்கோ அப்துல் ரகுமான்.   சினிமா பாடல்களை கிண்டல்செய்யும்  சின்னக் கவிதைகளில் ஒன்று , ஒருமுறை கவிஞ்சர் கண்ணதாசனைச் சந்தித்தபோது, " ஐயா ஏன் ஐயா மீன் விக்கும் சந்தையில் விண்மீன்களை எதட்காக விக்குறிங்க  " என்று கேட்டார் ,,எவ்வளவு அர்த்தம் பாருங்க  .

                                                                        சின்னச் சின்ன கவிதை எழுதுறது கஷ்டம் .  வார்த்தைகளைச் சுருக்கி கருத்தை ஆழமாக்க  இங்கிலீசுல  சொல்லுறாங்களே   " லாட்ட்ரால் திங்கிங்  கிரியேட்டிவ் இமாஜினரி இன்டலிஜெண்ட் "  திறமை நிறைய  வேண்டும் .   நானும் நிறைய சின்ன சின்ன கவிதைகள் போல பினாத்தி பினாத்தி  எழுதி இருக்கிறேன், மீன் விக்கும் சந்தை முகநூல் சுவரில் அப்ப்ப்பப தப்பிய அவற்றை தேடி எடுத்து ,அவற்றில் கொஞ்சத்தை தொகுத்து போடுறன். மிச்சம் பிறகு போடுறேன். நேரமிருந்தால் படித்து பாருங்க,  

                                                இவைகள் உத்தரவாதமாக எல்லாம் வல்ல , எல்லாரையும் தண்டிக்கும்,  எல்லாவிதமான  ஆதிக்கம் உள்ள  ஆண்டவன் மேலே சத்தியமாக  நான் தான்  எழுதியது.  அங்கே இங்கே இருந்து சுட்டு உருவி எடுத்து டிங்கிரிங் செய்து,  பவுண்டேசன் கிரீம் போட்டு, உல்டா , உடான்ஸ் விட்டு எழுதியவைகள் அல்ல இவைகள். மனதளவில் ஒன்றிப் போன   என்னோட மண்டைக்குள் பாய்ந்த கட்பனைக்கும், கண் கண்ட சாட்சிகளுக்கும்  வரிகளும் வசனங்களும் கொடுத்து ஒரு இரவு துகிலுரியும்  ஓரங்க நாடகத்தில் மேடை ஏற்றியவைகள் !  
.
.
பழுத்த இலையை 
மெல்லெனவே கீழிறக்கி 
மரணத்தின் கனவோடு
உறங்கவைக்கவே 
மனதோடு காத்திருக்கிறது 
காற்று !

.
............................................................................
.
இயற்கை மரணம்போலவே
பின் கழிந்துகொண்டியிருக்கு
பொறுப்பில்லாத காலம்
ஒரு
முதிர்கன்னியின் பெருமூச்சில் 
அதுவே
எல்லாவிதமான சாட்சிகளுடன்
படுகொலைசெய்யப்படுகிறது

.
....................................................................
.
இருட்டில் எழுதப்பட்ட
எதிர்மறையான
புகைப்படமொன்றின்
இரண்டாம் பிரதியிலும்
வெளியற்றப்பட்ட வெளிச்சங்களுக்கு 
நிழலாகும் வாய்ப்புமில்லை

.
.............................................................................
.
முகத்துக்கு முன்னுக்கு
வயதை ஒருநாளும் மறைக்காத
நிலைக்கண்ணாடிக்கு
பாதரசம் நரைத்தட்டி
மரச்சட்டங்களில் சுருக்கம் விழுந்து 
பார்வை மங்கிப்போய்
வெள்ளி நிறம் வயக்கெட்டு
வயதாகிவிட்டது

.
........................................................................
.
அதே கதையில் அதே ராஜா
அதே கதையில் அதே ராணி
எல்லாவற்றிலும் ஊரும் ஒன்றேதான்
வழக்கமான தேவதைகள்தான்
அம்மா 
ஒவ்வொரு இரவிலும் அதையேதான்
சலிக்காமல் சொல்லிக்கொண்டிருக்கிறாள்
மடியில் குழந்தை
ஒவ்வொரு கதைக்கும்
ஒவ்வொரு தனித்தனியான
திரைக்கதை எழுதிவிடுகிறாள்

.
..............................................................................
.
முண்டியடிக்கும் ரெயில்ப்பெட்டி
கோடை வெய்யிலில்
உறைந்து போகின்ற வியர்வை
பொறுப்புக்களை இடம்மாற்றி
நகர்ந்துகொண்டேயிருக்கும் கால்கள் 
ஒரு
அநாதியான இருக்கையில்
கைவிடப்பட்ட கரடிப் பொம்மை
விலங்குகளின் சரணாலயத்தை
விந்தையாகப் பார்க்கிறது.

.
......................................................................
.
"தவறான இலக்க அழைப்பு "
என்கிறாள் எதிர்முனையில் ,
மறக்கமுடியுமா ?
நெருங்கி
நிரம்பிய வருடங்கள்
நெருங்கிப்பழகிய குரல்தான் !
.
...................................................................
.
வசந்தகாலத்தில் 
மஞ்சள்நிறப் பூக்கள் 
வேரடியில் 
தலையை நிமிர்த்திக்கொண்டிருந்தது
ஒரு வாரம் 
வாடாமலிருந்த 
நாலு குடைக்காளான்கள் 
.
.........................................................
ஒரு நீளவால்ப்பறவை 
கிளைகளை வளைத்தாடி 
முத்தமிட்டு ஜோடியானதில் 
கர்ப்பமானது, 
இப்போதும்  
தனித்திருக்குது 
தனிமரம் !
.
.........................................................
.
விரிகிற
காட்சிகளின் ஊடாகவே 
ஆதாரமான விதிகளுக்கு 
எப்போதும் 
விசுவாசமாகவேயிருக்கிறது

இயற்கை ! ,
.

..............................................................
.
கடைசித் திருப்பத்தில்   
சின்னஞ்சிறிய  வரி 
தயக்கமில்லாமல் 
காட்டிக்கொடுத்துவிட்டது 
திருடப்பட்ட 
மிகநீண்ட  கவிதையை ! 
.
.........................................................

ராத்திரியின் 

சாத்திரங்களாகிப்போன  
இரவல்க்  கதகதப்பில் 
தூரத்து மலையை
துணிச்சலோடு 

இடம்பெயர்க்கிறது
நெருப்பு வெய்யில் !

.
..............................................................
.
இந்தத் 
தனிப்பாதையிலையும் 
சலனமற்ற தன்னுணர்வைக்
கேள்வி கேட்குது
அந்துப்பூச்சிகளின் கூச்சல்!
.

...........................................................
.
யாரோ 
வரைந்து முடிக்காத 
கேலிச்சித்திரம்போல
உக்கிரமாக எழுந்தாடும்
ஊசியிலைக்காடுகள்!
.

..................................................
.
அசட்டுத்தனமான 
வாடைக் காற்றுடன்
தென்றலுக்காக 
உடன்படிக்கை செய்கிற
தென்மேற்கு மேகங்கள் !
.

.................................................
.
சரிவுகளில் 
விழுந்து புரண்டு 
நடந்து நடந்தே  
திசையிழந்த எதிர்காலத்தை
ஒப்புக்கொள்ளவைக்கும்
நீண்ட நதிக்கரை,
.

...........................................................
.
மழை 
வளைகாப்புப் போட்ட
கொண்டாட்ட சங்கமத்தை
மிதந்தபடியே 

தொட்டுச் செல்லும்
பறவையின் சிறகுகள்,!

.
.........................................................
.
மிகப்புத்திசாலித்தனமான
படைப்பாளரின்
ஒவ்வொருவிதமான
விவரணத் தெரிவுகளிலும்
திமிறித் ததும்பும் 

பரவசங்கள் !.
.
..............................................................
.
சாதிதாழ்த்தப்பட்டவனின் 
வீட்டுக்குள்ளும் 
தயக்கமெதுவுமில்லாமல்
நுழைந்து 
வெளியேறிக்கொண்டிருக்கு 
ஜாதிமல்லிகை வாசம் !
.
...................................................................
.
நடுச்சாமராத்திரியின் 
ஏக்கமெல்லாம் இறக்கிவைத்துத் 
தொட்டணைத்துவிட நினைக்கும் 
பகல்க் கனவு 
நட்ச்சத்திரங்கள் !
.
...................................................................
.
சிவப்புச்சமிஞ்சை 
நிறுத்த விளக்கின் 
பொறுமையெல்லாத்தையும் 
நடுவீதிக்கு இழுத்து 
உறுமிக்கொண்டே சோதிக்கிறான் !
.
.............................................................................
.
நீண்ட நேர ஆண்மை பற்றிய 
சுவாரசியமான விவாத உரையாடலலே 
சடாரென்று 
தொட்டாச்சுருங்கி போல 
முடங்கிப்போனது !
.
......................................................................
.

இரண்டு 
மரங்கொத்திகள் 
மாறி மாறி அலகுகளை 
மொட்டையாக்கிய 
கோடாலிக் சத்தம் !
.
.....................................................
.
முழித்திருக்கும் 
ரெண்டு கண்களிலும் 
கிறங்கிப்படுத்திருக்கு 
நேரம் எழுப்பிக் கடிகாரம் 
திருடி எடுத்துத் திண்ற 
நித்திரை !

.
............................................................
.
அந்தரங்கமான
அந்திமனி நிறத்தவளின்
கூந்தல் மயிர்களை
இறுக்கிப்பிடித்திழுக்குது
வெட்கமில்லாத 
அமலோற்பவக் காற்று !

.
................................................................
.
பகலிலேயே
இருண்டுபோனவனுக்கு
வழிசொல்லும் வெள்ளைப்பிரம்புக்கும்
நிறங்களை வேறாக்கித்
திசையறியும் 
ஒருசோடிக் கண்கள் !

.
................................................................
.
கடந்துபோய்விட்ட
சாகசமற்ற வாழ்க்கையை
அர்த்தப்படுத்தமுடியாதவைக்கு
ஒப்புக்கொடுத்த இயலாமை
ஓய்வூதியம் !
 .
........................................................
.
சாம்பல்நிற ஆந்தை 
இரவுகளில் 
அடைக்கலமாகி 
அலறிக்கொண்டிருந்தது 
ஒரு முயல் 
அதுபற்றி அதிகாலை 
வேடிக்கையாகக் கதை சொன்னது!
.
..........................................................
.
வெட்டுக்கிளிகள் விரிந்து
பறக்கின்ற புல்வெளி
அசந்துபோன
மரவாங்கில் சரிந்திருக்கிறான்
பூங்காவனத்தின் 
காவலாளி !
.
.....................................................
.
நலுங்கு போட்டது போலவே
ஒளிர்ந்துகொண்டும்
சிதைந்துகொண்டும்
சிதறியபடி
பின் கோடைவெய்யில் !
.
..............................................................
.
உப்புக்கரிக்கும்
மனவோசையில்
உணர்வுகள் துடிக்கிற
முக்கியமானவொரு சம்பவம்
கண்களை ஆழப்படுத்திவிடுகிறது !
.
........................................................
.
அது
மனைவி இறந்ததாக 
அல்லது
பிள்ளைகள் கைவிட்டதாக
இருக்கலாம்தான்
வெறுமனே சலிப்பேற்றக் கூடிய
சராசரி சமாதானங்கள்
அதில் இல்லை !
.
.................................................
.
வாழ்வு
தொடக்கம் போலவே
தனிமையில் முடிந்துவிடுமெனும்
அவருக்கு
அவசியமானதாயிருக்கும்
அதீத நம்பிக்கை
ஓயும் நிமிடத்துக்குக்
காத்திருக்கிறது !
.
........................................................
.
எதிர்நோக்கிச் சொரிந்து
இறங்கிக்கொண்டிருக்கும்
மழை 
சேற்றுப் பாதையெங்கும்
வெள்ளம்
நடைபழகி
ஓடிச்சென்ற தடங்கள்  !
.
.