Sunday 6 March 2016

லல்லியக்கா

அந்த  ஊரில்  யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருக்கிறது  என்று நல்லாத் தெரிந்தும் அந்த இடத்தை விட்டு வேறு நாட்டுக்க ஓட விரும்பாத உறுதியான மனிதர்கள் நிறையவே இருந்தார்கள். அவர்களின் வாழ்க்கை ஒரு சின்னச் சிறுகதை அளவுக்கு  சுருக்கமாக எப்போதும்   இருந்ததில்லை, பெரிய ஒரு நாவலாக எழுதும் அலங்காரங்கள் இல்லாமல் ஒருவித பிடிமாணங்கள்  ஏதுமற்ற யதார்த்தம் எப்பவுமே அடியில் உறுத்திக்கொண்டு இருந்தது.

                                         லல்லியக்கா எல்லா நடுத்தர வயதுப் பெண்கள் போலதான். விசேஷமா சொல்லுறது என்றால்  எப்பவுமே வெள்ளைச் சீலை, நகை நட்டுப் போடுறது இல்லை. பூவும் பொட்டும் வைப்பதில்லை, அறிவான முகம் அடக்மான சிரிப்பு. ஆனால் கதை கொஞ்சம் அதிகம் தான்.ஆனால் அவா அப்படிக் கதைக்கத் தொடங்கியதே அவாவின் வீட்டில் மூன்றாவது செத்த வீடு முடிஞ்ச கையோடு வீட்டை விட்டு ஒவ்வொருநாளும் வெளியே சில மணித்தியாலம் உலாவத் தொடங்கின நாளில் இருந்துதான் .

                           டி ஆர் ஓ வீடு  அதுதான் லல்லியக்கா வீடு. அவாவின் கணவர் டி ஆர் ஓ ஆக வேலை செய்தார். அதுவும்  டி ஆர் ஓ இறந்த அதுக்குப்  பிறகுதான்  எல்லாத்துக்கும் ஹா ஹா ஹா என்று கதைக்கத் தொடங்க முதல் சிரிப்பா .  அந்த சிரிப்பு சந்தோஷத்தில்  வரும் சிரிப்பா, அல்லது வெறுப்பில் வரும் சிரிப்பா என்று ஒருவரைத் தவிர வேற ஒருத்தருக்கும் தெரியாது. அந்த ஒருவர் வேற யாருமல்ல லல்லியக்காவேதான். 

                              வீராளி அம்மன் கோவிலோடு முன் வீதியில் சேர்ந்தா மாதிரி இருக்கும் சின்னக்கா வீட்டுக்கு ஒருநாள் போவா லல்லியக்கா

                                  " ஹா ஹா ஹா  ம் ,,அப்ப பின்ன ,, சின்னா ,,சின்னா     என்ன நடக்குது  வீட்டில,, மனுஷன்  எங்க  காணேல்ல ,,ஆர் ஆக்கள் வீட்டில,,எல்லாம்  திறந்து போட்டபடி  கிடக்குது,,கோழியல் வேற  அலக்கா மலக்க பறக்குது "

                             " ஓம் ஓம்   லல்லியக்கா  வாங்கோ வாங்கோ,,நான் நேற்றுதான் பூநகரியால வந்தனான் "

                                " ஹா ஹா  ஹா  ம் ..அப்ப  பின்ன மொட்டைக்கறுப்பன் இந்த வருஷம்  நல்ல விளைச்சலோ "

                              " இல்லை,,  லல்லியக்கா அதையேன் கேக்குறியள் ,,இந்த சிறுபோகம் இரணைமடு  தண்ணி எல்லோ குறைஞ்சு போச்சு "

                             " ஹா ஹா  ஹா  ம்,,அப்ப பின்ன,, பெரியன்னையை கையோட கொண்டு போய்,,கிணத்தில அள்ளி இறைக்க விட்டு இருக்கலாமே "

                               " பெரியன்னையோ,,,அந்த  மனுஷன்  சும்மா பெயருக்கு எல்லோ   லல்லியக்கா புருஷன் எண்டு இருக்குது,,அவருக்கு நான் இங்க ஒவ்வொருநாளும் இறைக்க வேணும் "

                             " ஹா ஹா ஹா ஹா ,,அப்ப பின்ன வீடு வாசலில்  வைச்சிருக்காம  அடிசுக் கலையடி "

                                "  ஹ்ம்ம்,,,,எண்டாலும்  கட்டின  புருஷன் எண்டு  வைச்சுக்கொண்டு இருக்கிறேன்   லல்லியக்கா " 

                       " ஹா ஹா ஹா  ம் ,,அப்ப பின்ன கிடந்தது உத்தரி ,,உனக்கு  உதுதான்  உச்சம் தலையில  எழுதிக்கிடக்குப் போல "

                             "   ஹ்ம்ம்  மனுஷன்  இப்ப கொஞ்சம் திருத்தம்   லல்லியக்கா "

                         " ஹா ஹா ஹா  ம்  பின்ன  என்ன திருத்தம்  அதையும் சொல்லேன்,,,சின்னா "

                             " இல்லை  இப்ப   மனுஷன் பகலில கள்ளுக் கொட்டிலுக்குப்  போறேல்ல,,வீட்டில கூடமாட கைக்கு உதவியா  நிக்குது "

                          " ஹா.ஹா  ஹா  ம்  பின்ன ,, இனி  அப்பிடி இப்பிடி அட்ஜஸ்ட் செய்தா தானே  இரவுக்கு கள்ளுக்கு நீ காசு  கொடுப்பாய் .." 

                           "  ஓம் ,,ஓம்  லல்லியக்கா  அதெண்டா  உண்மைதான்,,,,,மனுசனுக்கும் வயசாகுது,,,இனி  என்னத்தை  அந்தாளோடு இழுத்துப் பறிச்சு  சண்டை  பிடிக்கிறது ,,சொல்லுங்கோ  பார்ப்பம்   " 

                        " ஹா ஹா ஹா  ம்  ,,பின்ன  தமிழரசன்  எவளவு  ஒழுங்கா  வளர்ந்த  பிள்ளை,,ஹ்ம்ம்,,அவன்  போனது  ஒரு  நல்ல நோக்கம்  ,,இலட்சியம் "

                         " ஓம்  ஓம்  லல்லியக்கா,,,,உங்கட  பொடியன்  எவளவு  அருமையா  வளர்ந்த  பொடியன்  "

                         " ஹா ஹா ஹா ம்...பின்ன,,,,அருந்ததிதான் ,,நான்  என்ன பாவம்  செய்தேனோ  தெரியேல்ல ,, ஒன்றையும் அனுபவிக்காமல்  அவளே தன்னை  அழிச்சுப்போட்டு போட்டாள் " 

                            " ஹ்ம்ம்..ஓம்  லல்லியக்கா,,,நீங்க  இதுகளை  இனி  நினைச்சு  என்ன வரப்போகுது  "

                           "ஹா ஹா  ஹா ,,ம்  ,,பின்ன ,,வியாழக்கிழமை பூசையில  உனக்கும்  புருசனுக்கும்  சேர்த்துபாடுறேன்,,எல்லாம்  அந்த  சச்சிதானந்தமூர்த்தி சாயிமாதா ,,என்னைப்  பாதுகாக்கிற  மாதிரி பார்த்துக் கொள்ளுவான்   " 

                                  
லல்லியக்கா வீடு  குளம் ஒருகாலத்தில் பெரிதாக நீட்டி நிமிர்ந்து வயலுக்கு அந்தப் பக்கம் படுத்திருந்த காலத்தில் தெய்வேந்திரம் பண்டி வளர்கிற மாந்தோப்புக் காணிக்கு முடிவில் இருந்தது. அந்த வீட்டுக்கு முன்னால் மூன்று பெரிய அசோகா மரம் வளர்ந்து  பிசாசு போல கிளைகளை ஆட்டிக்கொண்டு நின்றது . அசோகா மரம் நின்றால் யமன்  அதுக்குள்ளே ஒளித்து நின்று அந்த வீட்டில் சாவு விழும் என்று பெட்டிசம் பாலசிங்கம்  எப்பவுமே சொல்லுவார், பலர் அதை நம்பிக்கொண்டுதான் இருந்தார்கள். 

                                    அதுக்கு முதல் லல்லியக்கா  மூன்று  அசோகாமரம் நிக்கிற  வீட்டில் வசிக்கிறதே வெளிய தெரியாது. அவளவு அந்த வீட்டுக்குள் தனிமையின் நிழலில் ஐக்கியமாகிப்போய் வாழ்ந்துகொண்டிருந்த ஒருவர். வீராளி  அம்மன் கோவிலில்  திருவெம்பா பூசைக்கு ஒருநாள்   லல்லியக்கா   பயனைபாடுற எங்களுக்கு அவல் கடலை சுண்டல் அவிச்சு வைச்சு இருப்பா.

                                                                 லல்லியக்கா எந்தக் கோவிலுக்கும் போறதில்லை அதால கொண்டுவந்து தரமாட்டா ,  ஆனால் அதிகாலை நாங்கள் அந்த அசோகா மரம் நிக்கிற பயத்தில அந்த வீட்டுக்கு போக மாட்டோம் . புண்ணியக்குஞ்சி தான் போய் எடுத்துக்கொண்டு வந்து தருவார் 

                              லல்லியக்கா ஒருநாள்  விளாத்தியடி ஒழுங்கையில் இருந்த மதியாபரணம் டீச்சர் வீட்டுக்குப் பின்னேரம் போவா 

                               " ஹா ஹா ஹா  ம்  ,,பின்ன  என்ன நடக்குது  வாத்தியாரம்மா ,, பவானி என்ன செய்யுறாள் "

                                " ஓம் ஓம் வாங்கோ லல்லியக்கா,,எங்க கனகாலம் கானேல்ல ,பவானி ட்யுசனுக்குப்  போட்டாள்,,இப்ப  கொஞ்ச நேரத்தில வருவாள் "

                                "  ஹா ஹா ஹா ம் பின்ன,,,கன காலமோ  போன கிழமை தானே வந்திட்டு போனனான் போகேக்கா கதலி வாழைப்பழம் ரெண்டு சீப்பு தந்ததை வேண்டிக்கொண்டு போனதும் நினைவு இருக்கே எனக்கு நல்லா "

                              "   எனக்கு  மறந்து  போச்சு,, லல்லியக்காவுக்கு நல்ல மெமறிப் பவர் தான் ,,"

                                 " ஹா ஹா ஹா ம்....பின்ன  ,,பவானி  படிப்புகள் என்ன மாதிரி போகுது   ஓ எல் எடுக்குறாலே  இந்த  வருஷம் "

                                  " ஓம்  ஓம் ... லல்லியக்கா,,,,நல்லா  படிக்கிறாள்,,ஆனால்  இவள்  பிள்ளையை  படிக்க விடாமல்,,,திருவெம்பா பஜனையில் எல்லோ ஒரு சின்னப்  பிரசினை வந்திட்டுது  லல்லியக்கா "

                                     " ஹா  ஹா  ஹா  ம் பின்ன,,,குமார்  பிள்ளைக்கு  சின்னப்பிரசினை  என்டா  அது  பெரிய  பிரச்சினை  கண்டியே,,ஆர் ஆட்கள்,,என்ன  பிரசினை  "

                              " என்ன லல்லியக்கா  ஒன்றும் நீங்கள் சிலமன் அறியேல்லையே,,உங்கட  அயலில  மணியம்,,,,ஐஸ்பழ வான்  ஓடுற  மணியம்  தெரியும்  தானே "

                                  "  ஹா  ஹா  ஹா   ம் ,,பின்ன,,நல்லாத்  தெரியும்,,அவனின்ட மகன் வாக்குக்குக் கண்   பொடியன்  அவனையும்  தெரியும்...என்ன பிரசினை "

                                 "  அவன்தான் லல்லியக்கா பவானிக்கு  கடிதம்  கொடுக்கப் போய்  அது  பிடிபட்டு  இப்ப ,,நான்  அவளையும்  கூ ட்டிக்கொண்டு  கொழும்பு  போற  திட்டதில  நிக்கிறம்,,,பெரிய  சீரழிவு வயசுக்கு வந்த  பிள்ளையோட ,,சொல்வழி  கேட்குறாள்  இல்லை   லல்லியக்கா "

                                 " ஹா  ஹா  ஹா  ம்  பின்ன,,,பொறு வாறன்,,அந்த  வடுவாக்கு  செய்யிறன்  வேலை,,,மணியத்தோட  இண்டைக்குக்  கையோட  கதைக்குறேன் , அவனின்ட  பெடிக்கு  இப்ப கிடந்தது  துள்ளுதோ "

                                  " லல்லியக்கா  சண்டை கிண்டை கிளப்பிப் போடாதையுங்கோ ,,பிறகு அதுவேற பரிசுகேடு ,,"

                              " ஹா ஹா ஹா  ம்  ,,பின்ன  தமிழரசன்  எவளவு  ஒழுங்கா இந்தக் குரங்குச் சேட்டைகள் இல்லாமல்  வளர்ந்த  பிள்ளை,,ஹ்ம்ம்,,அவன்  போனது  ஒரு  நல்ல நோக்கம்  ,,இலட்சியம் "

                         " ஓம்  ஓம்  லல்லியக்கா,,,,உங்கட  மகன்   எவளவு  அமைதியான பொடியன்,,எனக்கும்  கவலைதான்   "

                         " ஹா ஹா ஹா ம்...பின்ன,,,,அருந்ததிதான் ,,நான்  என்ன பாவம்  செய்தேனோ  தெரியேல்ல ,, ஒன்றையும் அனுபவிக்காமல்  அவளே தன்னை  அழிச்சுப்போட்டு போட்டாள் " 

                            " ஹ்ம்ம்..ஓம்  லல்லியக்கா,,,நீங்க  இதுகளை  இனி  நினைச்சுக்கொண்டிருக்க வேண்டாம்,,ஜோசிச்சு    என்ன வரப்போகுது  ஒண்டும் நடக்கப்போறது  இல்லையே  "

                                    "ஹா ஹா  ஹா ,,ம்  ,,பின்ன ,,நீ ஜோசிக்காதை ..வியாழக்கிழமை பூசையில உனக்கும்  பவானிக்கும்    சேர்த்துபாடுறேன்,,எல்லாம்  அந்த  சச்சிதானந்தமூர்த்தி சாயிமாதா ,,என்னைப்  பாதுகாக்கிற  மாதிரி பார்த்துக் கொள்ளுவான்   " 

                              
அப்படி  கதை வழியாக  லல்லியக்கா வீட்டில   சாவு அசோகா மரத்தில மறைஞ்சு நின்றுகொண்டு  வெருட்டி வெருட்டி உலாவிக்கொண்டு இருந்த போதும் , உண்மையாகவே லல்லியக்கா வீட்டில எதிர்பார்ப்பு இல்லாத நேரத்தில் மூன்று சாவுக்கு யமன் பாசக்கயிறு எறிஞ்சான். 

                                                             மூன்றும் குறி தப்பவில்லை. அதுக்கு  அந்த மூன்று அசோகா மரமும் தான் காரணம் என்று புண்ணியக்குஞ்சி புரளி கிளம்பின போதும் லல்லியக்கா  அந்த மரங்களை வெட்டவே இல்லை, வெட்ட யாரையும் நெருங்கவிடவுமில்லை. 

                                
இந்திய அமைதிப்படை சண்டையில்  மும்மரமாக  இருந்த காலத்தில்  லல்லியக்கா குடும்பத்தை அடிசுக் கலைச்சுப் போட்டு அந்த வீட்டை முகாம் ஆக்கி வைச்சு இருந்தான் . ஒரு  பெரிய  அசோகா மரத்துக்கு பக்கத்தில்  மண் மூட்டை அடிக்கி சென்றிப் பொயின்ட் அடிச்சு இருந்தான். 

                                                     சில நேரம் மற்ற ரெண்டு பெரிய அசோகா மரத்தில குறுக்க பெரிய தடியைக் கட்டி அதில அரிக்கன் கிடாய் ஆட்டைக் கட்டித் தொங்க விட்டு அதை ஒரு குர்கா நாகலாந் ஆர்மிக்காரன்  வளைஞ்ச  குர்கா கத்தியால ரசித்து ரசித்து தொங்கித் தொங்கி  அரிஞ்சுகொண்டிருப்பான். 

                                

லல்லியக்கா  எங்களின் வீட்டுப் பக்கம் வயல்வெளிக்கால விழுந்து ,குளத்துக் கரையோடு அண்டிய  உடையார் ஒழுங்கையைப் பிடிச்சு பண்ணை வளவுக்குப் பக்கத்தில வந்து மிதந்து,வியாழக்கிழமை  தவிர்த்து வாரத்தில்  ஒவ்வொரு நாளும் ,ஒவ்வொரு வீட்டுக்கும் பின்னேரம் வருவா , சும்மா  இல்லை  கதைகளோடு வருவா. 

                                                 ஏன்  அப்பிடி ஒவ்வொரு  வீட்டுக்கும் போவதுக்கும் , வியாழக்கிழமை மட்டும் ஏன் வீட்டை விட்டுப் போகாமல் இருப்பதுக்கும் வலுவான ஒரு காரணம் லல்லியக்காவிடம் இருந்தது .

                               
லல்லியக்கா  ஒரு நாள் பின்னேரம் ஓட்டிடர் வீட்டுக்கு போவா.அந்த வீட்டுக்குள்ளே  போறதுக்குத் தனியான துணிவு வேணும். ஓட்டிடரிடம் மாட்டினால் அந்தாள் இங்கிலீசில் அபிஷேகம் பண்ணிபோட்டுதான் உள்ளே  போனவர்களை வெளியே அனுப்புவார். லல்லியக்கா ஓடிட்டர் மனைவியுடன்  நல்ல ஒட்டு அதால  ஓடிடர் என்ன பிசத்தினாலும் கணக்கில எடுக்கமாட்டா .

                                  "  ஹா ஹா ஹா ம் ,,பின்ன  என்ன நடக்குது  ,,வீட்டில கணக்கு வழக்கு எல்லாம் ஒழுங்கா நடக்குதோ "

                                     " வாங்கோ  லல்லியக்கா  நல்ல நேரம் வந்தியள்,,இப்பதான் மனுஷன்  கோவிலடிக்குப்  போனது,,இல்லாட்டி  அந்தாள்  நாங்க இங்கால கதைக்க அங்கால நிண்டு இங்கிலீசில்  புருபுறுக்கும் "

                              "  ஹா ஹா ஹா ம்  பின்ன  ,,என்ன  படிச்ச  மனுசனைக் கட்டினால்  இங்கிலீசில்  தானே  திட்டு வேண்ட வேணும் "

                                  " கண்டியளோ ,, அதெண்டா உண்மைதான்  கண்டியளோ,,லல்லியக்கா ,,,எப்படி  உங்க  பாடுகள்,,,"

                           " ஹா ஹா ஹா ம்,,,,பின்ன  ,,,என்  பாடுகள் போகுது,,இனியென்ன  எல்லாருக்காயும் வாழ்ந்து  முடிஞ்சுது,,தனிக்கட்டை இந்தா  அந்தா  எண்டு  ஒரு  நாள்  இழுத்துது  எண்டா ,,உலைச்சல்  இல்லாமல்  போக வேண்டியதுதான் "

                               " என்ன  இப்படி இழுக்குறியல்,,நீங்கதான்  நல்லா  பொலிவா  இருக்கிறியள்  கண்டியலே,,"

                                  " ஹா,,ஹா ஹா  ம் ,,பின்ன,,இப்பிடித்தான் என்ட வீட்டில  மூன்று சீவனும் பனைமரம்  சரிச்சு  விழுத்தின மாதிரி  விழுந்ததே ஒவ்வொன்டா "

                               " ஓம்,,ஓம்,,,,,அதுகளை  இனி  நினைச்சு  என்ன  வரப்போகுது  லல்லியக்கா...கண்டியலே,,,  எழுதி  இருந்ததால்  நடந்திருக்கு  ,,அவளவுதான்  கண்டியலே "

                                " ஹா ஹா ஹா  ம்  ,,பின்ன  தமிழரசன்  எவளவு  ஒழுங்கா  வளர்ந்த  பிள்ளை,,ஹ்ம்ம்,,அவன்  போனது  ஒரு  நல்ல நோக்கம்  ,,இலட்சியம் "

                         " ஓம்  ஓம்  லல்லியக்கா, அது  எல்லாருக்கும்  தெரியும்  அக்கோய்   "

                         " ஹா ஹா ஹா ம்...பின்ன,,,,அருந்ததிதான் ,,நான்  என்ன பாவம்  செய்தேனோ  தெரியேல்ல ,, ஒன்றையும் அனுபவிக்காமல்  அவளே தன்னை  அழிச்சுப்போட்டு போட்டாள் " 

                            " ஹ்ம்ம். அதெண்டா அம்மாவாண உண்மைதான்  கண்டியலே  .ஓம்  லல்லியக்கா,நீங்க சொல்லுறது  உண்மைதான் ,, "

                            "ஹா ஹா  ஹா ,,ம்  ,,பின்ன ,,வியாழக்கிழமை பூசையில  உனக்கும்  புருசனுக்கும்  சேர்த்துபாடுறேன்,,எல்லாம்  அந்த  சச்சிதானந்தமூர்த்தி சாயிமாதா ,,என்னைப்  பாதுகாக்கிற  மாதிரி பார்த்துக் கொள்ளுவான்   " 

                                 
தென்னை பனை கமுகில் வைகாசிக் காற்று புழுதியால் குளிப்பாட்டிய அடையாளங்கள் அழிந்து போகாத  வெய்யில் அனல் விழுத்தி மூன்று நேரம் தலைக்கு அள்ளி  ஊற்றினாலும் வியர்வை வடிந்தோடிய காலத்தில் அந்த தேசத்தில் மனிதர்கள் சந்தோஷமாக ஏகாதசிக்கும்  துவாதசிக்கும்  திதி கொடுத்துக்கொண்டிருந்த காலத்தில், லல்லியக்கா  வருடத்தில் மூன்று திதி  ஐயரை வீட்டுக்கு  வரவிச்சு புருஷனுக்கும், மகனுக்கும் என்று  ரெண்டு அகலக்கரை பட்டுவேட்டியும் , மகளுக்கு  என்று ஒரு விலை அதிகமான பட்டுச்சேலையும்  வைச்சு மாசியம்  கொடுப்பா.

                                      ஒன்று மகளுக்கு , மற்றது  மகனுக்கு,மற்றது புருசனுக்கு , இதுதான்  அந்த  திதி  ஒழுங்குமுறை  இந்த மூவரின் ஆத்மாவும் வேறு வேறு சம்பவங்களில் விடுதலை அடைந்தது. அந்த  சம்பவங்களில்  இறுதியாக இறந்தது அவாவின் புருஷன் ,

                                                   டி ஆர் ஒ ஆக வேலை செய்துகொண்டிருந்த போது மகன் இறந்த துக்கத்தில் கொஞ்சம் சுகவீனம் அடைந்தபோது  ஓய்வூதியம் எடுக்கச்சொல்லி  லல்லியக்கா அந்த மனுஷனுக்கு  அட்வைஸ் சொல்லிக்கொண்டு இருந்த ஒருநாள் இரவு அவர் இறந்தார். 

                         
லல்லியக்கா ஒருநாள் பின்னேரம்  புண்ணியக்குஞ்சி வீட்டுக்குப் போவா. புண்ணியக் குஞ்சியம்மா  அவாவுக்கு  கொஞ்சம்  தூரத்து சொந்தம் .புண்ணியக்குஞ்சி  செய்துகொண்டு இருந்த சில சில பிரச்சினைகளால்  நடுவில நிண்டு பேச்சும் கிழியும் வேண்ட வேண்டி வரும் என்பதால் அதிகம் லல்லியக்கா வந்தால் முன்னுக்கு வந்து முகம் கொடுத்துக் கதைக்கமாட்டார் 

                               "  ஹா ஹா  ஹா  ம்  பின்ன  என்ன நடக்குது  குஞ்சியம்மா,,,,எங்க குஞ்சி ,,என்ன  சோசியல் வேலை செய்யக் கிளம்பியாச்சோ நேரத்தோடு "

                                 "  ஹ்ம்ம்,,ஹ்ம்ம்,,வாங்கோ,,லல்லியக்கா,,,,மனுஷன்  வீட்டில்ல எண்டைக்கு நிக்குது,,"

                                        "  ஹா ஹா  ஹா  ம்  பின்ன  என்ன நடக்குது "

                                            " குட்டி போட்ட பூனை குட்டியளை  ஏழு இடத்துக்கு  இழுத்துக்கொண்டு  திரிஞ்சாதான்  செரிமானம்  கிடைக்குமாமே  அதாப் போல  இந்த மனுஷன்  ஊரில  உள்ள  சோலியலை  இழுத்துக்கொண்டு  திரியுதே " 

                              "  ஹா ஹா ஹா ம் ,,பின்ன,,அதுதான்  நல்லது  "

                             "   என்ன லல்லியக்கா நீங்க அந்தாளுக்கு சப்போட் செய்யுரிங்க "

                                 " ஹா ஹா ஹா ம் பின்ன ,,,வேற என்னத்தை சொல்ல குஞ்சியம்மா ,,"

                                "  எப்படி  உங்கட  பக்கம்  லல்லியக்கா மழைக்கு  வெள்ளம் இந்த முறை  நல்லா வீட்டுக்க  உள்ளிட்டதோ "

                                " ஹா ஹா ஹா  ம்  ,,பின்ன  தமிழரசன்  எவளவு  ஒழுங்கா  வளர்ந்த  பிள்ளை,,ஹ்ம்ம்,,அவன்  போனது  ஒரு  நல்ல நோக்கம்  ,,இலட்சியம் "

                         " ஓம்  ஓம்  லல்லியக்கா,,,,உங்கட  பொடியன்  எவளவு  பொலிவா  வளர்ந்த  பொடியன்,,.இப்ப  இருந்து  இருந்தா,,ஒரு  உதவியா இருந்து இருக்குமே   "

                         " ஹா ஹா ஹா ம்...பின்ன,,,,அருந்ததிதான் ,,நான்  என்ன பாவம்  செய்தேனோ  தெரியேல்ல ,, ஒன்றையும் அனுபவிக்காமல்  அவளே தன்னை  அழிச்சுப்போட்டு போட்டாள் " 

                            " ஹ்ம்ம்..ஓம்  லல்லியக்கா,,,நீங்க  இதுகளை  இனி  நினைச்சு  என்ன வரப்போகுது,,உதை  மறந்து போட்டு  அலுவலைப் பாருங்கோ   "

                                "ஹா ஹா  ஹா ,,ம்  ,,பின்ன ,,வியாழக்கிழமை பூசையில  உனக்கும்  புருசனுக்கும்  சேர்த்துபாடுறேன்,,எல்லாம்  அந்த  சச்சிதானந்தமூர்த்தி சாயிமாதா ,,என்னைப்  பாதுகாக்கிற  மாதிரி பார்த்துக் கொள்ளுவான்"  
                                           
                                 
டி ஆர் ஓ  உயரமான மனிதர் அவருக்கு அளவா அடக்க  பிரேதப் பெட்டி எடுக்க யாழ்ப்பாணத்தில் அந்த அளவில் பெட்டி இல்லை. அதால கால் பக்கமா பெட்டியை உடைச்சு காலை வெளிய தெரிய விட்டுதான் சுடலைக்குக் கொண்டுபோய் எரிக்கவேண்டியிருந்தது.  உயிரோடு இருந்த காலத்தில்   டி ஆர் ஓ அரசாங்க உணவு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தார். அதன் சுருக்கம் தான் டி ஆர் ஓ. அமைதியான  மனிதர் . 

                                     அவரோட இளமைக்காலத்தில் தமிழரசுக்கட்சி இல் முக்கியமான ஒருவராக இருந்தார். ஒரு அரசியல் போராளியாக பலமுறை இலங்கை அரசாங்கத்துடன் பகைத்துக்கொண்டு தன்னோட அரசாங்க வேலையை இழக்கவேண்டிய நிலையில் இருந்தவர். 

            அதால் அவரோட ஒரே மகனுக்கு தமிழரசுவரன் என்று வைத்தார். 

                                             லல்லியக்காவுக்கு அரசியலில் ஆர்வமே இல்லை ஆனால் சீரடி சாய்பாபா மீது அளவுகடந்த பக்தி. வியாழக்கிமை பஜன் வைப்பா வீட்டில் .அதில் அயல் அட்டை சனம் கலந்து பாடுங்கள் .

                                  

தமிழரசுவரன் .............  என்ற  இயக்கத்துக்குப்  போய் ....திருகோணமலை   மாவட்டத்தில்  புல்மோட்டையில்  நடந்த  நேரடி மோதலில் வீரச்சாவு அடைந்து  அந்த உடல் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு வந்த சவ ஊர்வலத்தில்  டி ஆர் ஓ வீரமாக சவப்பெட்டிக்கு முன்னால் நடந்து போனார் . 

                                                        அந்த ஊர்வலத்துக்குப் பிறகு அவர் ஒரு நாளுமே அப்படி நிமிர்ந்து நடந்து போனதில்லை. யாரோடும் கதைப்தும் இல்லை, இறக்கும் வரை அப்பிடியேதான் தனிமையில் இருந்தார். லல்லியக்கவோடும் கதைக்கமாட்டார் 

                                கிழமையில்  ஒருநாள் எப்படியும்  எங்கள் வீட்டுக்கு லல்லியக்கா வருவா. எங்கள் வீட்டில் சுவாரசியமாகப் பேச ,அல்லது யாராவது அன்புக்கும் , ஆதரவுக்கும் பேச வரும் மனிதர்களை இருத்திவைத்துப் பேச யாருமே அவளவு ஆர்வமாக இருப்பதில்லை. 

                                               லல்லியக்கா பாட்டியுடன் அதிகம் கதைப்பா ,பாட்டி அவாவின் பிள்ளைகளின் சாதகம் பார்த்து பலன் சொல்லி இருக்கிறா,பாட்டிக்கு அந்த வயதில் கண் தெரியாது யார் முன்னுக்கு வந்திருந்து கதைகிறது என்று ,அதைவிட அவாவின் உலகம் ஆன்மீக உலகம் 

                          " ஹா ஹா ஹா  ம்  ,,பின்ன ,எப்படி  பாட்டி  இருக்கிறிங்க "

                           " இண்டைக்கு துவாதசி ,,கிருஷ்ணபட்சத்தில்   வந்திருக்கு "

                               " ஹா ஹா ஹா  ம்  ,,பின்ன  தமிழரசன்  எவளவு  ஒழுங்கா  வளர்ந்த  பிள்ளை,,ஹ்ம்ம்,,அவன்  போனது  ஒரு  நல்ல நோக்கம்  ,,இலட்சியம் "

                         " ஓம்  ஓம்  லல்லி,,அவன்  உத்திரட்டாதி  நட்சத்திரம் ,,சப்த ரிஷி மண்டலத்தில்  ,,அவன்  இருப்பான்,,நீ ஒண்டும் ஜோசிக்காதை   "

                         " ஹா ஹா ஹா ம்...பின்ன,,,,அருந்ததிதான் ,,நான்  என்ன பாவம்  செய்தேனோ  தெரியேல்ல ,, ஒன்றையும் அனுபவிக்காமல்  அவளே தன்னை  அழிச்சுப்போட்டு போட்டாள் " 

                              " அவள்  தனுசு,,,ஹ்ம்ம்,,,,எல்லாம்  சனியன்  பார்த்த வேலை,,சனியவன் தயங்கிப்  பன்னிரண்டில்  நின்றால்  இனிவரும்  கோள்கள்  யாவும்  நீங்கி மகராஜா ராஜ ஜோகம்,,"

                                             ",அருந்ததிதான் ..... "

                                    " அவளுக்கு  அட்டமத்துச்  சனி,,,,ஒன்பதில வியாழ பார்வை இருந்தும்  கண்ணை  மறைச்சுப் போட்டுது   ,அந்த அருமந்த பிள்ளையின் சீவனை .." 

                              " ஹா ஹா  ஹா ,,ம்  ,,பின்ன இனி  என்ன செய்யுறது "

                                " உனக்கு இப்ப கொஞ்சம் நல்ல காலம் வருகுது ,ஜெனன  ராசி  லக்கினாதிபதி  உச்சம்  அடையப் போறான்  பார் ..,குருசந்திர ஜோகம் ,,வெள்ளிதிசை உச்சம்  ஆகாப்போகுது "

                               " ஹா ஹா  ஹா ,,ம்  ,,பின்ன,,,இனி  எனக்கு  ராசி பலன் உச்சமாகி  என்ன வரப்போகுது "

                               " அப்பிடி சொல்லாதை,,இப்பவும் வீட்டில பூசை வைக்கிறனியா "
                           " ஹா ஹா  ஹா ,,ம்  ,,பின்ன ,,வியாழக்கிழமை பூசையில  உங்களுக்கும் சேர்த்துப்  பாடுறேன்,,எல்லாம்  அந்த  சச்சிதானந்தமூர்த்தி சாயிமாதா ,,என்னைப்  பாதுகாக்கிற  மாதிரி பார்த்துக் கொள்ளுவான்  "

                                   
டி ஆர் ஓ  வீட்டில்  நடந்த முதல் அகால மரணம் ஒரு தற்கொலை . லல்லியக்கா  அது நடந்த அன்று வீட்டில் இல்லை. அருந்ததி ஓ எல் படிக்கும்போது அவள் படித்துக்கொண்டிருந்த பாடசாலையில்  நடந்த சோசல் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு போக சேலை  வேண்டிதரச் சொல்லி இருக்கிறாள், டி ஆர் ஓ அதில்  கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். சேலையும் வேண்டித்தர மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். 

                                         இரவு லல்லியக்காவின் பழைய  சேலை ஒன்றை பிலா மரத்தில கட்டிப்போட்டு அதில திருகுதடம் போட்டு கழுத்தில கொழுவி, ஏறி நின்ற மர உரலைக் காலால் தள்ளி விழுத்த , கழுத்து எலும்பு பக்கவாட்டில உடைஞ்சு தலை கழுத்தோடு இழுபட்டு.... அருந்ததி தூங்கிக்கொண்டிருந்தாள்.  


                                       
அதன்  பிறகு  வந்த  எந்த  வியாழக்கிழமை சாய்  பஜன் பூசையிலயும் வெளி ஆட்கள் யாருமே கலந்துகொள்வதில்லை .லல்லியக்கா வெளி ஆட்கள் வருவதை விரும்பவில்லை.   லல்லியக்கா மட்டுமே  "  சச்சிதானந்தமூர்த்தி சாயி மாதா ,,சச்சிதானந்த மூர்த்தி சாயி மாதா ,,சச்சிதானந்த மூர்த்தி சாயி மாதா ,,என்று பாடுவா ."..எல்லாருக்காயும் பாடுவா. பாடிக்கொண்டு இருந்தா ....

                                                   ஒரு வியாழக்கிழமை நாள் அந்தப்  பஜன் கடைசிப் பஜனையாக முடிந்தது......