Friday 12 June 2015

காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!

மனிதர்களுக்கு எது முக்கியம்,எது முக்கியமில்லை என்பதில் எங்களின் தேர்வுகள் எப்போதுமே ஒரேமாதிரி இருப்பதில்லை. சிலநேரம் ஆச்சரியமாக இருக்கும் சிலரின் அற்பமான விருப்பங்கள் அவர்களுக்கு அதிமுக்கியமாக இருப்பதை அறியும் போது. 

                                               என்னோட அப்பாட்மென்டில் உள்ள எல்லா வீடுகளும், இருண்டு பாதுகாப்பான திறப்புக்கள் போட்டு திறப்பது போலத்தான் கதவுகள் இருக்கு. ஆனால் ஒருவர் அதுக்கு மேலாக மிகவும் பாதுகாப்பாக இன்னும் ஒரு வெளிஇணைப்பு ரகசிய இலக்கங்கள் அமத்தும் பூட்டுப் போட்டு அதைவிட வேறு இரண்டு சிக்கியூரிட்டிக் கொம்பனியின் எலார்ம் போட்டு வைச்சு இருக்கும் அறிவித்தல் உள்ள தகவல் அந்தக் கதவில் எழுதபட்டுள்ள அதி உச்ச பாதுக்காப்பு ஏற்பாட்டுடன் வசிக்கிறார்.

                                      இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடினாளாம் கதைபோல பல விசியங்கள் நாங்கள் நினைக்காத ஒரு நாளில் நடுவீட்டின்  கூரையைப் பிச்சுக்கொண்டு நேராக வந்திறங்கும்.  ஆனால் அவர் வீட்டில் என்ன அப்படி இருக்கு என்று எனக்கு தெரியாது. நான் நினைக்கிறன் என் அயலில் உள்ள ஒருவருக்குமே தெரியவாய்ப்பில்லை, காரணம் அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை.யாரையும் அவர் வீட்டுக்கு உள்ளே அழைத்ததுமில்லை. ஆனால் ஒரே ஒருநாள் அந்த சிதம்பர இரகசியத்தை அறிய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

                                பொதுவெளியில் எல்லோரும் ஒரு சமூகத்தின் மத்தியில் பகிரங்கமாக பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து இந்தக்கதை சொல்ல முடியுமா என்று நினைத்தால், ஒருவிதத்தில் சொல்லலாம் போலதான் இருக்கு, அதுக்கு காரணம் அந்த மனிதர் அவரோட கதவில நோர்வே மொழியில் " எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ அதே இடத்தில் உங்கள் தலையை உயர்த்தி உங்களை மேன்மையாக என் இயேசு வைப்பாராக...ஆமென் !!!! " என்று எழுதி ஒரு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்.        

                                    இது இன்னும் ஆர்வத்தை அவர் மேல் கிழப்பும். இந்த வயதான மனிதர் ஏன் இப்படி அதியுயர் பாதுகாப்பில் இருக்கிறார் என்ற ஒரே ஒரு கேள்விக்கு புதிரான , நானே ஜோசிக்கும் விடைகள் ஆயிரம் மண்டைக்குள்ள எப்பவும் முட்டி மோதும். ஆனால் ஒன்றும் பயனில்லை.  இனி அலட்டாமல் நேராகவே உலாவ் தாரியர் என்ற அந்த மனிதரின்  கதைக்குள்ள வாறன்.

                          மத்தியதர வர்க்க, " கையில காசு வாயில தோசை " என்று உழைத்து வாழும் அன்றாடம் காச்சிகள் அதிகம்  வசிக்கும் என்னோட பதினோருதட்டு தொடர்மாடிக் குடியிருப்பில் ஐந்தாவது தட்டில் உள்ள பன்னிரண்டு நெருப்புப் பெட்டி போன்ற குடியிருப்பில்தான் என்னோட உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இருக்கு. அந்த தட்டில் எதிர் எதிரே ஆறு குடியிருப்புக்கள் இருக்கு. அதில் வலது பக்க தொடக்கத்தில் இருந்தார் உலாவ் தாரியர் என்ற அந்தத் தனிமையான நோர்வே நாட்டு மனிதர். 

                                               நான் அந்த தட்டின் இடது பக்கத் தொங்கலில் தொங்கிக்கொண்டு இருக்கிறேன். வலதையும் இடதையும் பிரிக்கும் நடுவில் உள்ள கொறிடோர்தான் அதிகமாக என் தட்டில் வசிப்பவர்களை எப்பவாவது சந்திக்கும் " கனெக்டிங் பீப்பிள்ஸ் " சந்திப்பு மையும்.

                                    வசதியான ,நல்ல வேலை, கணவனும் மனைவியும் வேலை செய்யும் நோர்வே மக்கள் அதிகம் பெரிய இடவசதியுள்ள அப்பர்த்மெண்டில் இருப்பார்கள். , பணக்கார நோர்வே மக்கள் அப்பன் வீட்டு சொத்தில் வில்லா என்ற தனி வீடுகளில் இருப்பார்கள். என்னோட குடியிருப்பில் இல்லை, அவர்களுக்கு என்னோட குடியிருப்பு இருப்பதே பலசமயம் நினைவில் இருப்பதில்லை. 

                                                     ஆனாலும் என்னோட குடியிருப்பு தொடர்மாடியில் நிறைய நோர்வே மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதில் வசிப்பதுக்கு அவர்களின் வாழ்க்கை முறையைக்  குறை சொல்லும்படியான காரணங்கள் தான் இருக்கு.  வயதான  உலாவ் தாரியர்க்கும் அவைகள் பொருந்தும் என்று கோடைகாலத்தில் அவரோடு வெளியே உள்ள புல் வெளியில் கதைத்த போது அறிய முடிந்தது.

                           அளவுக்கு அதிகமான பணமும்,அளவுக்கு அதிகமான பெண்களின் தொடர்ப்பும் மனிதர்களை சீரழிக்கும் என்பதுதான்  உலாவ் தாரியரின் வாழ்க்கைக் கதை,அதையெல்லாம் " காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!  " என்று நோர்வே மொழியில் கொஞ்சம் கொச்சையான மொழியில் எனக்கு சொல்லுவார். அவரின் கதையை பியோதர் தவஸ்ட்டேக்கியின் " ப்ரதர் கொச்மநோவ் " நாவல் போல நாநூறு பக்க நாவலாக எழுத முடியும். அவளவு மேடுகளும் பள்ளம்களும் ,சில நேரம் அவரே தோண்டிய குழிகளும் அதில இருக்கு. 

                                         அவரின் வாழ்கையை ஒரு சிறுகதை போல சுருக்கி எழுத அந்தோன்  செக்காவ் போன்ற ஒருவரால் முடியும் ஆனால் என்னைபோல சாமானிய மனிதர்களால் முடியாது, இருந்தாலும் வியப்பில் ஆழ்த்திய ஒரு சின்ன சம்பவத்தை  முயற்சிக்கிறேன்.

                       உலாவ் தாரியர், வடகிழக்கு ஒஸ்லோவின் விளிம்பில், சுவிடன் எல்லைக்கு கிட்ட  உள்ள கிராமத்தில் ஒரு பணக்கார அப்பாவுக்கு ஒரே ஒரு பிள்ளையாக பிறந்து இருக்கிறார். அதுவே போதுமே வெம்பிப் பழுத்து தலையால தெறிக்க. சின்னவயசில் அழகா இருந்த அவர், இளவயதில் ஒஸ்லோவில் படித்து இருக்கிறார், ஒஸ்லோவின் முக்கியமான புட்போல் கிளப் ஆனா " வோலறேங்காவில் " கோல் கீபாராக இருந்து இருக்கிறார், 

                                            பின்னர் என்ன வேலை செய்தார் என்று இன்றுவரை அவர் சொல்லவில்லை,ஒருவேளை அதைப்பற்றி சொல்ல ஒன்றுமேயில்லையோ தெரியாது. ஆனால் நாலு முறை கலியானம் காடினார், நாலு பேரையும் விவாகரத்து செய்தார் .அவரின்   காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! வரும் போது இருந்ததை விடப் போகும்போது மினுக்கமாகப் போனதாக சொல்லுவார் .அவருக்கு பிறந்த பிள்ளைகள் மட்டும் அருமையான பிள்ளைகள் என்று சொல்லுவார்.

                         குழப்பமாக  காதலிகள் அவர் வடிவுக்கு காலுக்க சுருண்டு விழுந்த கதை கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வாற வல்லவரையன் வந்தியத்தேவன் போன்றவை , அவருக்கு பிறந்த பிள்ளைகள் அவரை விட்டு பதினெட்டு வயதில் " மண்டையப் போடும் போது சொத்தைப் பிரிக்க வாறோம் " என்று சொல்லிப்போட்டு போய் விட்டார்கள். வருட இறுதியில் வரும் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு பரிசாக தான் அனுப்பும் காசுக்கு நன்றி சொல்ல மட்டும் டெலிபோன் எடுப்பார்கள் என்று சொல்லுவார்.

                          பல வருடம் தனியாக இருந்தார், உலகம் சுற்றினார், ஆபிரிக்கா போய் கென்யாவின் சிங்கம் உலாவும் சவானாக் காட்டில் தனிய டென்ட் அடிச்சு இருந்தார், பிரேசிலுக்கு போய் அமேசன் நதியில் இறங்கி அனக்கொண்டா பாம்புகளைத் தேடினார், இந்தியாவுக்கு போய் புனித கங்கை நதியில் பாவங்களைக் களைய முழுக்குப் போட்டார். அங்கே சாதுக்களுடன் வாழ்ந்தார். எல்லாம் விபரமா சொன்னார் .

                              சாதாரண மனிதர்கள் செய்யமுடியாத எல்லாம் ஒரு கை பார்த்துப்போட்டு   இப்போது வயதாகி எங்கும் போவதில்லை ,ஞாயிற்றுக்கிழமை மட்டும் எங்களின் பேட்டையில் உள்ள நோர்பேறி சிர்கா என்ற சேர்ச்சுக்குப் போவார். வாசலில் எப்பவாவது என்னைக் கண்டால் என்னையும் வரசொல்லுவார்.சின்ன உரையாடலின் முடிவில் நான் எப்போதும் நேரம் இல்லை என்று ஏதாவது சாட்டு சொல்லி நழுவுவேன், அவர் சிரிச்சுக்கொண்டு  

                             " எந்த மனிதனோ, மனுஷியோ உங்களை புறக்கணித்திருந்தாலும் அவர்கள் மத்தியில் உங்களை ஆச்சரியப்படத் தக்க. வண்ணமாக என் இயேசு உங்கள் தலைகளை உயர்த்துவாராக,ஆமென் !!! " 

                                   என்று சொல்லிப்போட்டுப் போவார்.

                          இந்தவருடத் தொடக்கத்தில் ஒருநாள் அவரை எங்களின் வீட்டுக்கு அருகில் கீழே உள்ள சூப்பர் மார்கட்டில் கண்டேன், வழமைப்போல சுருக்கமான உரையாடல், அதன் முடிவில்

                       " இன்று உனக்கு நேரம் இருந்தால் என்னுடைய வீட்டுக்கு இப்ப வாவேன், கோப்பி குடிச்சு கொஞ்சநேரம் ஆறுதலாகக் கதைக்கலாம், காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! "

                                           என்றார், எனக்கு சனிக்கிழமை லோட்டரியில் லட்சம் விழுந்த மாதிரி இருந்தது. நான் வெளியே சில முக்கியமான வேலைக்கு அப்போது  போகவேண்டி இருந்தது. ஆனாலும் அந்த இடத்துக்கு போன் அடிச்சு எனக்கு உடம்பு சுகமில்லை இன்னொருநாள் வருகிறேன் என்று சொல்லிப்போட்டு, அவரோட பைகளை வேண்டிக் காவிக்கொண்டு அவரோடு வெளிக்கிட்டு  வந்தேன். அவர் கதவு திறக்க பத்து நிமிடம் எடுத்தது, முக்கியமாக  சிக்கியூரிட்டி பூட்டின் இரகசிய எண்களை அவர் அமத்தும்போது அதை எனக்கு மறைத்துக்கொண்டு அமத்தினார்.

                           விசாலமான அவரின் வசிப்பிடத்தில், ஆச்சரியமாக அவர் வீட்டுக்கு உள்ளே வழமையான நோர்வே மக்களின் வீடுகளில் இருக்கும் கலை அம்சமான எதுவுமே இல்லை. ஒரு சின்ன சோபா நடு வீட்டில்,ஒரு சின்ன டெலிவிசன், ஒரு சின்ன மேசை , சுவர்களில் கறுப்பு வெள்ளையில் குடும்ப்பப் படங்கள், அதில அவர் புட் [போல் விளையாடிக்கொண்டு இருந்த கால உன்னத நாட்களின்  பெருமிதம் மங்கிப்போய் இருந்தது , நிறைய வெள்ளிக்  கேடயங்கள் தூசு பிடித்துப்போய் இருக்க, கால்பந்துப் போட்டிகளில் வென்று கிடைத்ததில் சுவரில் தொங்கவிட்டு இருந்த பதக்கங்களில் பாசி பிடிச்சுப் போய் இருந்தது.

                                             நிறையத் தடித்தமட்டைப் புத்தகங்கள் ஒரு அலுமாரியில் இருந்தது. அந்த அலுமாரிதான் மிகப் பெரிதாக இருந்தது. வேற கண்ணுக்குள்ள குத்துற மாதிரி ஒரு மண்ணும் இல்லை அந்த வீட்டில. உலாவ் தாரியர் சுருக்கமாக, மெதுவாக, அந்த வீட்டின் அமைதியைக் குழப்பாமல்  கதைத்தார். நான் முக்கியமான கேள்வி கேட்கவேண்டிய தருணத்துக்கு காத்திருந்தேன்.

                              உலாவ் பரம்பரைப் பணக்காரராக இருந்தாலும்,அவர் வம்ச சொத்துப் பத்து எல்லாம் அவர் கிராமத்தில் இருக்கு. அப்புறம் காசு கட்டாயம் ஏதோ ஒரு பாங்கில் பாதுகாப்பாக இருக்கும் .வீடுக்குள்ள காசை உரப்பையில் கட்டி வைச்சுக்கொண்டு இருக்கும் அளவுக்கு அவர் முட்டாள் இல்லை. அப்படி இருந்தாலும் என்னைப்போல ஒரு வெளிநாட்டுக்காரனை நம்பி வீடுக்குள்ள உள்ளிட விரும்பமாட்டார். 

                                                 சில நேரம் அழகான பெண்கள்....ஹ்ம்ம்,,,அந்த வீட்டில் பெண்கள் வாசமே இல்லை, பதிலாக மாதக்கணக்கில்  தோய்க்காத பழைய துணிகளில் இருந்து வரும் உறண்டல் வாசம் தான் வந்தது. பொறுமையை அதுக்கு மேலயும் கமகட்டில அமத்தி வைக்க முடியாமல், இதுக்குமேலே என்ன இருக்கப்போகுது, அதைவிட அந்த வீடுக்குள்ள இனி ஆராய்ச்சி செய்ய வரவேண்டிய தேவையே இல்லாமல் இருப்பது யதார்த்தமாய் இருந்ததால்,

                        " உலாவ்  ,உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா, நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால் "

                                 என்று கேட்டேன் ,அவர் மவுனமாக இருந்தார், கொஞ்ச நேரத்தில் எழும்பிப் போய்க் கதவை செக் செய்தார். அது இறுக்கமாக உள்ளுக்கு தாழ்ப்பாள் போட்டு இருக்கு என்பதை உறுதி செய்துகொண்டு வந்து சோபாவில் மவுனமாக நாடியைத் தடவினார். ஆமுடையானை நம்பி அவசாரி ஆடலாமா? என்ற பழமொழி போல என்னைப் பார்த்தார், பார்த்துப்போட்டு 

                        " சரி,கேள் ,என்னத்தைப் பெரிசாகக் கேட்கப் போகிறாய், என்னத்தைப் பெரிசா அதுக்கு பதிலாக நான் சொல்லப்போறேன், நானே இந்தா அந்தா என்று கிடக்கிறேன்,காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! ... சரி கேள், விடை கிடைக்குதோ இல்லையோ கேள்விகள் சில நேரம் மிக மிக முக்கியம்,  "  என்றார்.

                        " உலாவ்,,நீங்கள் ஏன் இவளவு பாதுகாப்பாக வீட்டுக்கு சிக்கியூரிட்டி  பூட்டு எல்லாம் போட்டு வைச்சுக் கொண்டு  இருக்குரிங்க, நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால் அந்தக் காரணத்தை சொல்ல முடியுமா "

                          என்று சும்மா பொழுது போகாமல் குழந்தைகள் பாலமித்திராவில் வாற பலராமர்  கதை கேட்பது போல முகத்தை வைச்சுக்கொண்டு கேட்டேன். 

                     "  அதில என்ன சந்தேகம் உனக்கு, என் வீட்டுக்கு  பாதுகாப்பு தேவை ,அதனால் கதவுக்கு அதிக பாதுகாப்பு கொடுத்து வைத்து இருக்கிறேன் ,ரெண்டு  எலார்ம் சிக்கியூரிட்டிக் கொம்பனிக்கே மாதம் மாதம் நாலாயிரம் குரோனர் சுளையாக் கட்டுறேன் "   என்றார் 

               " அதுதான் எனக்கும் விந்தையாக இருக்கு, ஏற்கனவே ரெண்டு நல்ல பூட்டு நிரந்தரமா இருக்கே,பெருமாள் கோவில் உண்டியலுக்குப் போட்ட மாதிரி ஏன்தான் பெரிய ஒரு எக்ஸ்ட்ரா சிக்கியூரிட்டி பூட்டு போட்டு வைச்சு இருக்குரிங்க ,உலாவ் , அதுதான் குழப்புதே...   "   என்றேன் 

                               நானே ஒரு உப்புச் சப்பில்லாத கேள்வியைக் கேட்டது போல எதிரொலித்துக் கொண்டிருந்தது என் சிந்தனைப் போக்கைப் புரிந்துகொண்ட மாதிரி  ஜன்னல் திரைச்சீலைகள் மட்டும் கொஞ்சம் நிழலாக அசைத்துக்  கொண்டிருக்க , அந்த வீட்டின் பயமுறுத்தும் அமைதி மூலை முடுக்குகளில் அதிகமாகப் பதுங்கி  இருந்தது  .

                       "  நான் நினைச்ச கேள்வியைத்தான் கேட்கிறாய். முக்கியமான கேள்வியும் தான், காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!  இதுக்குப் பதில் நீ நினைப்பது போல கடினமாக இருக்காது. ஹ்ம்ம்....காதல் ,,ஹ்ம்ம் ,நிபந்தனையற்ற  காதல் ,,,அது என்ன  எண்டு  தேடித்தேடி ,,முக்கியமா அறிவுள்ள மனிதர்களிடம் தேடித்தேடி ,ஹ்ம்ம்,, " என்று பெருமூச்சு விட்டுப் போட்டு மறுபடியும் நாடியைத் தடவினார்.

                                         " நோர்வே நாடு பற்றி உனக்கு அதிகம் தெரியாது, முக்கியமா நோர்வே மக்கள் எப்படி வாழ்கையை நினைகிறார்கள் என்று உனக்கு தெரியாது,,அதிலும் நோர்வே பெண்கள் பிசாசுகள் "

                                      " ஹ்ம்ம்,,உலகம் முழுவதும் பெண்களைப் புரிந்துகொள்ள கஷ்டம் தான் .." 

                                               " என்ன கஷ்டம்....நான் இந்தியா சுற்றிப் பார்த்த போது ஒரு குடும்பத்தைப் பார்த்தேன். வயசான அம்மா ,அப்பா இவர்கள் இருவரையும் அவர்களின் அதிகம் வருமானம் இல்லாத பிள்ளைகள் கடவுள் போல அந்த வயதான காலத்திலும் தலையில தாங்கிப் பராமரிக்கிறார்கள் ,எனக்கு அதைப்பார்க்க கண்களில் கண்ணீர் வந்தது.என் பிள்ளைகள் நாளைக்கே மண்டையப் போட்டால் லோயரோடு வந்து நிக்குங்கள் என் சொத்தைப் பிரிக்க .."

                         "  உலாவ், உங்களை தர்மசங்கடம் ஆக்கும் கேள்வியாக இது இருந்தால்,தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு மடையன் அநாவசியமா அற்ப கேள்வி கேட்டுவிட்டேன் போல இருக்கு "

                        என்றேன். அவர் மறுபடியும் நாடியைத் தடவிப் போட்டு, என்னைப் பார்த்து முதல் முதலாக சிரிச்சுப் போட்டு,  நோர்வே மொழியில் ஒரு பெண்ணின் பெயரும், ஒரு ஆணின் பெயரையும் அன்பாக அழைத்தார். அவரின் படுக்கை அறையில் இருந்து ,பதுங்கிப் பதுங்கி ஒரு வெள்ளைநிறப் பூனை வந்து அவர் மடியில் பாஞ்சது .ஒரு கறுப்புநிறப் பூனை வந்து அவரின் தோழில் பாஞ்சு ஏறி இருந்தது.

                 உலாவ் தாரியர் என்னைப்பார்த்து, " காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! ,,,இனி நீ இந்த வீட்டுக்கு இந்த மாதிரிக் கேள்வியுடன் வரமாட்டாய் " என்று நினைக்கிறன் என்றார்.
.
.