Tuesday 15 September 2015

இதுதான் வாழ்க்கை

யாழ்ப்பாணத்தில் இளவயதில் நான் வேலை செய்த நிறுவனம், இடம் பெயர்ந்த அகதிகளுக்கு நிவாரணம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் அதில வேலை செய்ததால், தற்செயலாக சந்தித்த ஒரு பெண்மணியிடம், இடக்கு முடக்கா கேள்வி கேட்டுக் கதைத்த போது வெளிவந்த கதையாக இனி நான் சொல்லப்போறது , எனக்கு பிடித்த ஒரு நல்ல எழுத்தாளர், சிந்தனையாளர் ஒருவரை மறுபடியும் நினைவு கொள்ளும் நிகழ்வு பல வருடங்களின் முன் நடந்த சம்பவம்.

                                                        அந்த எழுத்தாளரர் புங்குடுதீவில் ஒரு கிராமப் பாடசாலையில் ஆசிரியரா இருந்த, " போர்ப்பறை " , " ஒரு தனி வீடு " , " மெய்யுள் "  என்ற நாவல்களும், விமர்சனப் புத்தகமும்,வேறு பல சிறுகதைகள் எழுதிய, தன்னோட வாழ்க்கைப் போராட்டத்தைக் கதைகள் முலமாக தத்துவார்த்த சிந்தனையில் எழுதிய மு.தளையசிங்கம் என்ற ஒரு அரிதான ஈழத்துச் சிந்தனையாளர். சத்தியம் என்ற பத்திரிகையை வெளியிட்ட அவரைத் தமிழ் இலக்கிய ஆளுமை எண்டும் சொல்லுறார்கள்.

                                                                  மு.தளையசிங்கம் தனிச் சிங்கள சட்டம் பண்டார நாயக்கா கொண்டுவந்த நேரம் தமிழ் சுதேசிய உணர்வில் பலர் எழுத தொடங்கு முன்னமே, " புதுயுகம் பிறக்குது " என்று இனப்பிரசினை பற்றி எழுத தொடங்கிய எழுத்தாள சிங்கங்களில் ஒருவர் என்கிறார்கள். அவர் பல்கலைக்கழக மாணவனா இருந்த போதே " சுதந்திரம் " என்ற பத்திரிகையில் முதல் சிறுகதை எழுதிய அவரின் கொள்கைகள் ஆரம்பத்தில் காந்தியம், விநோபாபவின் கொள்கைகள் ,எண்டு தொடங்கி இருக்கிறார்  


                                                   பின் நாட்களில் சாதி எதிர்ப்பு, சமவுடமை போன்ற பக்கம் போனாலும்,அவரின் சிந்தனைப் போக்குகள், மார்டின் விக்கிரமசிங்க சிங்களத்தில் " கம் பெரலிய "என்று தொடக்கிய சாதாரண கிராமப் பிறழ்வு நிகழ்வுகள் எப்படி ஒரு சமுதாயத்திலும், தனி மனிதர்களிலும் ஆதிக்கம் செலுத்து எண்டு தமிழில் கதைகள்,நாவல் ,கட்டுரைகள் எழுதியவர்,

                                                      எழுதியது மட்டுமில்லை,நல்ல தண்ணிக் கிணறு போன்ற உயர் சாதி/ கீழ் சாதி அடையாள, வெட்டுக் குத்து சண்டைகளில் நேரடியாக பங்குபற்ற அவரின் வீடு புகுந்து வாளால் வெட்ட போன சம்பவங்கள்,அவர் இலங்கைப் போலிசால் கைது செய்யப்பட்ட நிகழ்வு, எல்லாத்தையும் எதிர்கொண்ட ஒரு சமுதாயவாதி.

                                                  அவர் அந்த நாட்களில் எழுதிக்கொண்டு இருந்த முற்போக்கு எழுத்தாளர்களுடனும் சேர்ந்தும் , பின்னர் " விமர்சன விக்கிரகங்கள் " என்ற கட்டுரை எழுதி முற்போக்கு எழுத்தாளர்களுடன் பிரிந்து தனித்தும் இயங்கி இருக்குறார் ,

                                                    அவர் எழுதி என்னைக் கவர்ந்த ",,, திருவெம்பா நேரம் பனை மரம்,,,,," ,என்ற ஒரு கதை ஒரு வித்தியாசமான ஈரோடிக் கதை,சைக்கோ அனலைசிங் அதிகம் உள்ள,புங்குடுதீவு மக்களின் பிரயாசைக்கு அவர்கள் கொடுத்த விலையின் கதை.

                                                            தீவுப்பகுதியை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்த போது, அதில் வசித்த பல குடும்பங்கள் குடாநாடு முழுவதும் அகதியாக வந்து சிதறி சின்னாபின்னமாகி வசித்தார்கள்,அவர்களுக்கு நான் வேலை செய்த நிறுவனம், நிவாரணம் எண்டு மாதம் மாதம் உணவு கொடுக்க,ஒரு நாள் ,என்னோட அம்மாவின் வயசில் இருந்த ,சினேகிதமான சிரிப்பில் ,படித்த முகம் உள்ள,கவுரவமான,நெற்றியில் மருந்துக்கும் ஒரு பொட்டும் வைக்காமல். கழுத்தில,கையிலையும் ஒண்டும் இல்லாமல், கஷ்டப்பட்ட பெண்கள் போல ஒரு அம்மாவும் வந்து நிவாரணம் எடுத்தா.

                                       அவாவின் குடும்ப அட்டையில் புங்குடுதீவில் இருந்து இடம் பெயர்ந்த விபரம் இருக்க,சும்மா ஆர்வக்கோளாறில்,கொஞ்சம் படித்த முகம் உள்ள பெண் போல அறிவு அடக்கமாகக் கண்களில் இருந்ததால்


                                            " உங்களுக்கு மு.தளையசிங்கம் என்ற ஆசிரியரைத் தெரியுமா, அவர் ஒரு நல்ல எழுத்தாளர் " எண்டு கேட்டேன், அவா என்னை சந்தேகமா பார்த்தா,

                                               " எந்த தளையசிங்கம் , கணேசா வித்தியாலலயத்தில் படிப்பித்த அவரா, இல்லை இன்னொருவர் முருகமூர்த்தி கோவிலடியில் இருந்தார்,எழுத்தாளர் எண்டு சொல்லுறவரை எனக்கு நல்லா தெரியும்..நீங்களும் எங்கண்ட ஊரா, தளையசிங்கம் மாஸ்டரை எப்படி தெரியும், அவர் செத்துப் போனாரே "  எண்டு ஜோசித்து வருஷங்களின் நினைவுகளை இழுத்து எடுத்துச் சொன்னா,நான்

                                         " இல்லை,எனக்கும் உங்கண்ட ஊருக்கும் தொடசல் இல்லை, "  எண்டேன், அதுக்கு அவா

                                            " பிறகு அவரை எப்படி தெரியும் "

                                                  எண்டு கேட்டா,நான் அவரின் புத்தகம் சிலதும்,கதைகளும் வாசித்து இருக்குறேன் ,அவர் எழுதின ",,,,,, திருவெம்பா நேரம் பனை மரம்,,,,," ,என்ற கதை என்னை மிகவும் பாதித்த ஒரு கதை என்று சொன்னேன்,,,அவா என்னை இன்னும் நம்பாமல்,நெற்றியில விரலை வைச்சு தேச்சுப் போட்டு

,                                                 " அப்படியும் ஒரு கதை இருக்கோ,அதென்ன பனை மரத்தில திருவெம்பாவை நடந்த கதை "   


                                                    எண்டு கேட்டா.. அந்தக் கதை எஸ்.பொ என்ற இன்னுமொரு ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் எழுதிய சில ஈரோடிக் கதை போல உள்ள ஒரு கதை . அதுக்கு முதல் அந்தக் கதை நடந்த இடத்தைப்பற்றி கொஞ்சம் என்னோட குண்டக்க மண்டக்க கோபாலு ஸ்டைலில் சொல்லுறேன் 


                                                       புங்குடுதீவு மக்கள் பிரயாசைக்கு உலக அளவில் பிரபலம் ஆனவர்கள்,பனம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் முதலில் புங்குடுதீவு போய் அந்த மண்ணில ஒரு மணித்தியாலம் பிரண்டு உருண்டா யாருக்கும் அந்த ஆசை வரும்.அந்த ஊரில் இளம் ஆண்கள் ஒரு வயதில் கொழும்பு நாலாம் குறுக்கு தெருவுக்குப் போய் ,அவர்கள் ஊர் ஆட்களின் ஒரு கடையில் ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டு நிண்டு, வியாபார நுணுக்கம், சிங்களம் பேசப் பழகி,ஒரு கட்டத்தில் அந்தக் கடைக்கு எதிர்க் கடையின் முதலாளி ஆகுவார்கள்,அவளவு பிரயாசையான மனிதர்கள்,

                                                
                                                           அவர்கள் திரும்ப புங்குடுதீவு வந்து கலியாணம் கட்டின நாலாம் சடங்கோடு ,கலியாணப் பெண்ணின் பூவும் ,பொட்டும் வாசம் மறைய முதலே,மறுபடியும் கொழும்பு நாலாம் குறுக்கு தெருவுக்கு சம்பாரிக்க எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அது குடும்ப வாழ்வில் உருவாக்கும் சமனற்ற  தன்மை  போன்றவை தவிரக்கமுடியாமல்  பின் தொடரவைக்கும். அதுக்கு அவர்கள் கொடுக்கும் விலை மிகப்பெரியது 

                                               " ஒருவரின் அந்தரங்கம் எவ்வளவு புனிதமானது! இட் இஸ் ஸம்திங் ஸேக்ரட் ! இதிலே இன்னொரு இரண்டாவது நபரின் பிரவேசம் – அது யாராயிருந்தாலும் ரொம்பக் காட்டுமிராண்டித்தனமானது, அசிங்கமானது…” என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியது போல  அந்த பனை மரத்துக்கு கீழே நடந்த கதை அப்படி ஒரு திருமணமான இளம்பெண், திருவெம்பா நேரம் அவர்கள் வீட்டு பனை மரத்தில கள்ளு சீவ வரும் கட்டழகன், தவிப்புத் தடவிய .......... விரகதாபத்தை, .................. சமூக நீதியை புளிய மரம் போல ,........................... பெரு மூச்சு விட்டு உலுப்பும் இளம் பெண்ணின் கதை , கீறிட்ட இடைவெளிகளை கற்பனையில் நீங்களே நிரப்புங்கள் இதுக்கு மேல என்னால் சொல்ல முடியவில்லை .


                                                    அந்த அம்மா ஒரு பெண்ணாக இருந்ததால், அதில வார பல விசியம் எந்தப் பெண்ணுக்குமே நேரடியா சொல்ல முடியாதபடியால,வெட்ட வேண்டிய வார்த்தைகளை வெட்டி சுருக்கமா அவாவுக்கு சொன்னேன், அவா

                                                  " நான் அவர் கதைகள் ஒண்டுமே படிக்கவில்லை,வெள்ளை யானை என்ற புத்தகம் கொஞ்சம் வாசித்த நினைவு இருக்கு, நீர் ஆர்வமாப் படித்து இருக்குறீர்.கேட்க சந்தோசமா இருக்கு "  எண்டு சொல்லிப்போட்டு ,

                                           " அவர் யார் தெரியுமா " எண்டு கேட்டா,

                                            நான் " உங்களின் உறவினரா ,அல்லது நீங்களும் அவரிடம் பாடசாலையில் படித்திங்களா " எண்டு கேட்டேன்,

                                         அவா " வேற என்ன கதை படித்தீர் அதையும் சொல்லுமன் " எண்டு கேட்டா,

                                 " மற்றக் கதைகள் நினைவு இல்லை " எண்டு சொன்னேன், அவா ஜோசித்துப் போட்டு சிரித்துக் கொண்டு

                                        " அவர் என்னோட புருஷன் என்றா ".

                                         எனக்கு கொஞ்சம் பயம் வந்திட்டுது, கொஞ்சம் சந்தேகமா இருக்க,அவாவின் குடும்ப அட்டையைப் பார்த்தேன்,,அதில குடும்பத் தலைவி எண்டு, திருமதி...............தளையசிங்கம் எண்டும் ,நிரந்தர முகவரி இத்தனையாம் வட்டாரம் எண்டும் போட்டு இருந்தது,தற்காலிக முகவரி எண்டு நான் வேலை செய்த நிறுவனத்துக்கு கொஞ்சம் தள்ளி உள்ள ஒரு வீதியின் பெயர் போட்டு இருந்தது. நான்

                                                 " உண்மையாதான் சொல்லுறிங்களா, மன்னித்துக்கொள்ளுங்கள் நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் "   எண்டு சொன்னேன். அவா ஒண்டும் சொல்லவில்லை,

                                           " அவர் எழுதின புத்தகம் படித்த நீர் ரசித்துப் படித்ததைக் கேட்கவே எனக்கு என்ர புருஷனை நினைக்கப் பெருமையா இருக்கு, ஆனாலும் நீர் பயங்கரக் கதைதான் படித்ததில் இன்னும் நினைவு வைச்சு இருக்குறீர் போல " எண்டு சொன்னா.

                                             நான் அதுக்குப் பிறகு வாயே திறக்கவில்லை,,அவாவே நிறைய விசியம் சொன்னா, நான் அவாவுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணத்தில் கொஞ்சம் அதிகமாகி எல்லாம் போட்டுக் கொடுத்து முடிய அவா போற நேரம் ,

                                            " உங்களுக்குப் பாரமாக இருந்தால் தூக்கிக் கொண்டு போகமுடியவில்லை எண்டால் வையுங்க,வேலை முடிய நானே சைக்கிளில் கொண்டுவந்து தாரேன் " எண்டேன்,அவா


                                           " பரவாயில்லை,நாங்க பக்கத்திலதான் இருக்குறோம் " 


                                    எண்டு சொன்னா,  கடைசியா வெளிக்கிடும் போது என்னவோ எனக்கு சொல்லியே ஆக வேண்டும் என்பது போல,அமைதியாக ,

                                        " நீர் என்னோட மகன் போல இருக்குறீர் உமக்கு உண்மையைச் சொன்னா என்ன ,எங்கண்ட ஊர் ஆட்கள் எல்லாம் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் என்று ஓடி ஓடி சம்பாரிப்பில அவதியா இருந்த நேரம்,இவர் கதை எழுதி, அதால எங்களுக்கு எவளவு பிரச்சினை வந்தது எண்டு உமக்கு எங்க விளங்கப் போகுது, "


                                       " ம் , உண்மைதான் " 

                               "  நான் பிள்ளைகளையும் வைச்சுக் கொண்டு பட்ட அமளி துமளி எங்கண்ட ஊர் ஆட்களுகுதான் தெரியும்,அவர் எழுதிய காலத்தில் நான் ஒரு கதை தன்னும் ஆர்வமாக வாசிக்கவில்லை, " 

                                        "  ம்...  ம்.. அது பொதுவா நடக்கிறதுதானே " 

                                "  இப்ப நீர் சொல்லுறதைக் கேட்க சந்தோசமா இருக்கு , மெய்யான இவளவு இடைஞ்சல்ப் பட்டு அவர் எங்கண்ட ஆட்களின் சீரழிவைப் பற்றி எழுதின அவர் எழுத்தின் பெறுமதியை இப்பதான் நினைகேறேன்  " 

                                  "   ம் ம் ம்ம்ம் ,,பரவாயில்லை அவரைப்  பலர் படித்து இருக்கிறார்கள்,அதுவே நல்ல விசியமே  "

                                     " சரி நான் போட்டு வாறன் , கொஞ்ச நேரம் உம்மோட கதைச்சதே நெஞ்சுக்க என்னவோ செய்யுது , பிறகு இன்னொரு நாளைக்கு உமக்கு நேரம் இருந்தா எங்கள்ண்ட வீடுக்கு வாருமன், ...சந்தியால திரும்பி வர .ரெயில்வே தண்டவாளத்துக்கு அந்தப் பக்கம் உள்ள ,,மூன்றாவது வீட்டில வாடைக்கு இருக்கிறம்," 

             என்று சொன்னா,,நான் அதுக்கும் " ம்ம்ம்  " என்று சொன்னேன் வேற நான் ஒண்டுமே பதில் சொல்லவில்லை,

                                                  இன்று இருவத்தைந்து வருடங்களின் பின் ஜோசிக்கும் போது இதை, இது ஒரு எழுத்தாளனின் வீழ்ச்சியா,அல்லது எழுத்தின் வீழ்ச்சியா. எப்படி சொல்வது எண்டு விளங்கவில்லை....

...........................இதுதான் வாழ்க்கை............................

.


///// 18.05.14 /////
.