Sunday, 21 June 2015

கல்யாண நாள் பார்க்கச் சொல்லவா...

வாழ்க்கை அனுபவம் என்பதை எப்படியும் எழுதலாம்.அதில் உண்மைகள் அரைவாசி புனைவுகள் அரைவாசி. அந்த விகிதாசாரம் தேவைக்கு ஏற்றபடி கலக்கும் போது சில நேரங்களில் பிரமிப்பாக இருக்கும். அந்த நினைவுகளில் ஏதோவொன்று ஒரு காலக்கடத்தின் சந்தோசங்களை மறுபடியும் உயிராக்கும் .
                             
                                                     இந்த இசைகருவி, நோர்வே , தலைவிதி நகர் ஒஸ்லோவில ,என்னோட அயல்வீட்ல வசித்த, என்னைப் போலவே அரசியல் அகதியாக அடைக்கலம் பெற்று வாழும் ஒரு வயதான வடக்கு ஈராக்  நாட்டைச்  சேர்ந்த ஒரு வயதானவரிடமிருந்து  ஒரு நாள்  கிடைத்தது!அது கிடைத்த போது அதிகம் உட்சாகமாய் பின்னுக்கு பல சம்பவங்கள் தொடருமென்று அப்போது தெரியாது. 

                         அந்த வயதான அரபா மனிதர் நான் வீட்டில கிடாரை அகாலமான நேரம்களில் அதிரவைத்து நோண்டுவது தெரிந்து ஒருநாள் என்னை அழைத்து, தானும் தன் மனைவியும் நோர்வே குளிர் ஒத்துவராததால் மீண்டும் ஈராக்  போகப் போவதக சொல்லி இந்த அரபிக் தன்பூர் இசைக்கருவியைக் காட்டி 

                             "உங்களுக்கு இதை அன்பளிப்பாக தர விரும்புகிறேன் மகன் "என்றார் !

                                                         இந்த கருவி எனக்கு வாசிக்க தெரியாது, ஆனால் இந்த இசைக்கருவி வாசிக்கும் நிகழ்வுகள் ஈரான் நாட்டு மாணவர்கள் என்னோட படித்த போது பார்த்திருக்கிறேன். எனக்கு வாசிக்க முடியாத கருவி என்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதால் இண்டரெஸ்ட் வரவில்லை, அவர் வாசிப்பதை சும்மா பார்த்து கொண்டு இருந்தன், அவர் நல்லா வாசித்தார் , வாசித்து முடிந்தபின் நடந்த அந்த உரையாடலில் அவர்


                            " இதை வாசித்தால் அழகான பாரசீகப் பெண்கள் மயங்குவார்கள்,,
இன்ஷா   அல்லா,,,," 

                             "        என்ன சொல்லுறீங்க அரபா,,உண்மையாவா சொல்லுறீங்க "

                                       "  ஆமாப்பா,  இன்ஷா   அல்லா,,  ,உண்மைதான்,,இதன் இசையில் ஒரு பெண்களைக் கவரும் கவர்ச்சி இருக்கு "

                                           " அட,,இது எனக்கு இவ்வளவுநாளும் தெரியாமல் போச்சே "

                                          " அதனால் என்ன,,இப்ப  நான்  சொல்லி இருக்கிறேனே,,வாழ்க்கையில் சில சம்பவங்கள் சில நேரத்துக்காக காத்திருக்கும்,அந்த நேரம் வரும் போதுதான் அதிசயங்கள் நடக்கும்,,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா ,"


                                         எண்டுசொல்ல, நான் அவரின் நடுத்தர வயதான மனைவியைப் பார்த்தேன் , அந்தப் பெண்மணி கழுத்தைப் பாலில் குளித்த கிளியோபட்ரா போல அந்த நடுத்தர வயதிலும் வீனஸ்  நட்சத்திரம் அளவுக்கு  ஜொலிக்க , இதுக்கு மேல என்ன உத்தரவாதம் தேவை எண்டு , ஜோசிக்கத் தேவை இல்லை எண்டு போட்டு , சடார் புடார் எண்டு கலியாணம் கட்டுற ஹோர்மோன்கள் மூளையின்  ஹிப்போட்டலாமாஸ் இல் தாறுமாறாய் பாய தொடங்க
                          
                               " இதைதான் இவளவுனாலும் தேடிக்கொண்டு இருந்தேன் அய்யா ,ஆண்டவன்  உங்களின் வடிவில் வந்து அருள் புரிந்து இருக்கிறான் ,நன்றி அய்யா " 
                                        
                        எண்டு சொல்லி இந்த இசைகருவியைக் கையோட கிளப்பிக்கொண்டு வந்துடன்,
                                       
                                 "  மகன்,நீங்கள் தனியா இருகிரிங்கள்,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா, கடவுளின் நற்கருணையால் நல்ல காரியங்கள் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் ,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா
                           
                                         எண்டு வேறு சொனாரா, நானும் இத வீடில வைத்து நோண்டி "ஹபீபி ஹபீபி " (அன்பே அன்பே ) எண்டு தெரிந்த கொஞ்ச அரபிமொழிய வைத்து வாசித்து பழகினன்.கிடார் வாசித்தால் இது வாசிக்கலாம், fred board கொஞ்சம் வித்தியாசம்! 

                                   என்னோட தொடர் மாடியில் நட்பான,ஒரு அரபிமொழி பேசும் , மத்திய ஆசியாவின் எதோ ஒரு நாடில இருந்து வந்த அரசியல் அகதிக் குடும்பம் இருக்குது, அந்த வீடில உள்ள பெண்கள் எல்லாம் பிரம்மதேவனிடம் அட்வான்ஸ் கொடுத்து, அளவு கொடுத்து சொல்லி செய்விச்ச மாதிரி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிபோல அழகா இருப்பார்கள் ,அவர்கள் அழகைப்பற்றி ஒரு கவிதை அல்ல ஒரு கவிதை தொகுதியே எழுதி சொந்தகாசை செலவழித்து அதை வெளியிடலாம் ,,அவளவு சொக்கத் தங்க தேவதைகள் !

                                           
                          ஒரு நாள் எப்படியும் அவர்களுக்கு இந்த அரபிக் தன்பூர் கருவியில் கீதம் இசைத்து ,அவர்கள் அன்பைப் பெறவேண்டும் எண்டு எப்பவுமே நினைப்பது ஒரு நாள் அந்த இளம்பெண்களை தொடர்மாடி நிலத்தடி வாசலில் சந்திக்க நேர்ந்தது ,பாலைவனத்தில ஒட்டகம்போல ஒரு ஓரமா ஒதுங்கி நிண்டு , அந்த வீட்டில வசிக்கும் கடைசி , சிறிய இளம் பெண்னிடம் ,

                          " என்னிடம் அரபிக் தன்பூர் இசைக்கருவி வீட்டில இருக்கு " 

                               எண்டேன், பேரீச்சம்பழகலரில் இருந்த அந்த சின்ன தேவதை திடுக்கிட்டு, நான் சொன்னது விளங்காமல் ,ஏதோ என்னோட வீட்டில அனக்கொண்டா மலைப் பாம்பு இருக்கு எண்டு சொன்னதுபோல விழிக்க ,நான் அவளுக்கு கொஞ்சம் விளக்கமா சொன்னேன் !அவள் பிரகாசமானா பாரசீக விழிகளால் ஆச்சரியமாகி ,

                       
                              "ஒ அப்படியா ,நீ வாசிபியா அதை ? எதுக்கும் அக்காமாரிடம் போய் சொல்லுறன்  எண்டாள், நான் இயல்பாக
                              
                       "அதுக்குதானே உன்னிடமே சொன்னேன் " எண்டு மெதுவாக சொல்ல,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா , 
                    
                      அவள் "என்ன சொன்னாய் எண்டு குழப்பமா கேட்டாள்", நான்
                          
                     " உன் அக்காமார் அரபிக் தன்பூர் இசையில் மயங்கி உயிரை விடுவார்கள் எண்டு கேள்விப்பட்டன் என்றேன் ! 
                        
                            அவள் சிரிச்சுப்போட்டு , "அப்படி எல்லாம் நாங்க மயங்குற ஆட்கள் இல்லை ,",என்று சொல்லிப் போயிட்டாள்
                                

                               அதன் பின், அந்த சம்பவத்தையும் அரபிக் தன்பூர் இசைக்கருவியையும,மறந்தாலும்,ஒருகோடைவிடுமுறையில் அவர்கள் குடும்பமாக வெளியே புல்வெளியில் இருந்தததை ஜன்னல் வழியாகப் பார்த்த போது, அந்த வயதான ஐயா சொன்ன ஆசீர்வாதம், அவரின் கிளியோபட்ரா மனைவி நினைவுவர, ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான் ,ஆனால் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கையில் , நைசா அரபிக் தன்பூர் இசைக்கருவியை நாரதர் போல தூக்கிக்கொண்டு போய் ஒரு ஓரமா பிச்சைக்காரன் போல , அவர்களோடு நானும் குந்திஇருந்து இந்த கருவிய வாசித்தன்,
                                                

                                    நான் பல மாதமா திட்டமிட்டு ,பழகிய " கல்யாண நாள் பார்க்கச் சொல்லவா ....." பாடலை இழுத்து இழுத்து வாசித்தேன் ,அவர்கள் என்னை அதிகம் கவனிக்கவில்லை, நாசாமப்போன இந்த அரபிக் தன்பூர் கருவியை அதிகம் கவனித்தார்கள் ! அவர்கள் வீட்டில இருந்து வந்த குட்டிப்பெண் மட்டும் என்னை சந்தேகமாகவே இவன் என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறான் என்பதுபோல எச்சரிக்கை உணர்வோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

                                      என்ன உலகமடா இது எண்டு வெறுப்பு வந்தாலும் அவர்கள் என்னோட இன்னிசை மழையைக் கொஞ்சம் ரசித்தார்கள், குப்புஸ் என்ற அரபிக் சாப்பாட்டை வாயில அடைஞ்சு கொண்டு இருந்த அந்த அழகான பெண்கள் என்னை ஏன் நாயே என்றும் கவனிக்கவில்லை. ஆனால் யாரும் அந்த வயதான ஈரரக் நாட்டவர் சொன்ன மாதிரி மயங்கின மாதிரி தெரியவில்லை, 


                                                 இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா ஆணையாக   அவர்கள் வளர்க்கும் இருண்டு பூனைகள் மட்டும் படு இண்டரஸ்ட் ஆக கேட்டுக்கொண்டு இருந்தன, வேற ஒண்டுமே நடக்கவில்லை. எழும்பிப் போற நேரம், இவன் எங்கே உருப்படப் போறான் என்று அந்த ரெண்டு பூனைகளும் என்னைப் பார்க்க , அந்தப் பேரீச்சம்பழ சின்னப் பெண்ணிடம் எப்படி என் பாட்டு என்று கேட்டேன் ,அதுக்கு அவள் நோர்ஸ்கில் என்னை விசாரித்தாள் 

                       " என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறாய் போல இருக்கு , 


                             " அப்பிடி எல்லாம் ஒன்றும் இல்லை,,அரபிக் தன்பூர் இசைக்கருவி எனக்கு உயிர் தெரியமா "

                                " அப்பிடியா ,சரி ஒரு பாட்டுத்தானே  என்னமோ வாசித்தாய் ,,அது  எங்கள் நாட்டு இசை போல இல்லையே "

                                  " ஓம்,,அந்த ஒரு பாட்டுதான் இதில கிடந்து முறிஞ்சு முறிஞ்சு வாசிக்கப் பழகினேன் ,ஒரு முடிவோடுதான் பழகினேன் ,இது இந்திய இசை "

                                  "  சரி,,அந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம் "

                               "  அது வந்து,,வந்து,,,,,ஓட்கம் தெரியுமெல்லோ,,அது  ஒருநாள் பாலைவனம் முழுவதும் அலைஞ்சுச்சாம் "

                               "  எதுக்கு அலைஞ்சுது ,,,"

                                "அதுக்கு  சாப்பாடு  இல்லை ,,தண்ணி இல்லை என்று  அலைஞ்சுது "

                                 "  ஹஹஹஹ் ,,ஓட்டகம் ,,அப்பிடி எல்லாம்  அலையாது" 

                          " வேற என்னத்துக்கு ஓட்டகம் பாலைவனத்தில் அலையும் "

                                " ஓட்டகம் தண்ணி இல்லாமல் ,சாப்பாடு இல்லாமால் மாதக்கணக்கில் சமாளிக்கும் "

                                      " அதெப்படி "

                                         " ஓட்டகம் அதன் கழுத்தில நிறைய கொழுப்பு சேர்த்து வைத்திருக்கும்,,அது அதுக்கு  பசி வரும்போது இரைமீட்டிட உதவும் "

                                         " ஓ,, நீங்களும் ஓட்டக்கப்பாலும் பேரிச்சம் பழமும் சாப்பிடத்தாலா இப்படி அழகா இருக்குறீங்க "

                                            " என்ன,,உனக்கு இப்ப என்ன பிரச்சினை,,சொல்லு,,என்ன பிரச்சினை,,நாங்க வடிவா இருந்தா உனக்கு என்ன "

                               " ஆனால் அநியாயத்துக்கு அள்ளிக்கொட்டுற வடிவா எல்லோ இருக்குறீங்க "

                               " இப்ப உனக்கு  என்ன  பிரச்சினை அதில "

                                     "   ஹ்ம்ம்,பேசாமல் ஒரு ஓட்டகாமா பிறந்திருக்கலாம்      "             

                                            "  அது எனக்கு தெரியாது,,,ஓட்டகம் பின்னங் காலில் எம்பி உதைக்கும் தெரியமா,,,,அந்த அடியில நீ அந்த இடத்திலேயே குளறிக் குளறி உயிரை விடுவாய் "

                                          " அட,,அப்படியா ,,பயமா  இருக்கே "

                                        " நாங்கள் குருதிஸ்தானில் வசித்த நேரம் எங்களின் மாமா இப்படி இசைக்கருவி வாசிப்பார்,,ஆனால் நல்லா ரசித்து வாசிப்பார், "

                                           "  ஓ  ,,அவர்  என்ன  பெரிய ஓல்டு மொங்கு பிஸ்தாவா "

                                            "      என்ன "

                                           "   ஒண்டுமில்லை "

                                       "  இல்லை நீ என்னவோ  எங்க மாமாவைப்பற்றி சொன்னாய் "

                                        "  இல்லைப்பா,,சும்மா  வாய் தவறி உளறிப் போட்டேன் "

                                         " நீ இந்த இசைக்கருவியோடு இங்கே வந்து குந்தின நேரத்தில் இருந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக்கொண்டுதானே இருக்கிறாய் "

                                         "  சம்பந்தம் முடிக்க தான் வந்து இருக்கிறேன் "

                                 " என்னது ,,இதென்ன  சொல்லுறாய்,,உனக்கு விசரா "

                                          " அப்பிடி எல்லாம் ஒன்றும்  இல்லை "

                                           " நீ  என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறாய் போல இருக்கு  நீ மசிங்கி மசிங்கி வாசிக்கிறதை பார்க்க  " எண்டாள்  .

                        நான் கோவத்தில, " இப்படியா ஒரு இசைக்கலைஞ்சனை அவமதிப்பிங்க " என்று கேட்டேன் 


                                       அவள் ஈஈ ஈ ஈ ஈ  என்று ஒட்டகம் போலப் பல்லை இளித்தால், நானும் பதிலுக்கு ஈ ஈ ஈ ஈ ஈ என்று கோவேறுகழுதை போலப்  பல்லை இளிதுப்போட்டு வந்திட்டேன்                               

                                 
                                       அதுக்குப் பிறகு , கொஞ்ச நாள் இந்த கருவி வீடில சுவரில தொங்கியது ,பார்க்க அழகா இருக்கும்,நினைக்க கோபம் வரும், இப்படியான தருணங்களில் தான் இசை மீதும்,இசைகருவிகள் மீதும் ,கடவுளின் " நற்கருணை" மீதும் வெறுப்புவருகின்றது ! இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இந்த அரபிக் இசைக்கருவியில் ஒரு முன்னோடிபோல ,பல தமிழ் ,ஹிந்தி ,பாடல்கள் வாசித்தாலும் , கீளதேய சாஸ்திரிய கரநாடக சங்கீத இல் வரும் தியாகராஜ சுவாமிகளின் " எந்தரோப மகானோ பாவு லு " என்ற பஞ்ச இரத்தின கீர்த்தனையை இதில வாசித்திருக்கிறேன் !
                                          

                                 சில மாதங்களின் முன், எனக்கு கலியாணத்துக்கு ராசியில்லாத இந்த இசைக்கருவி இனி வேலைக்கு ஆகாது எண்டுபோட்டு என்னோட தொடர்மாடியில் தனியாக வசிக்கும் , என்னைப்போலவே அரசியல் அகதியாக அடைக்கலம் பெற்று வாழும் ஒரு ஆப்கானிஸ்தான் இளம் நண்பனுக்கு..
                        
                                    " இதை வாசித்தால் அழகான பாரசீகப் பெண்கள் மயங்குவார்கள்" 
                             
                                       எண்டு அந்த வயதானவர் எனக்கு சொன்ன டைலாக்கை சொல்லி கொடுக்க அவனும் என்னைப்போலவே வாயைப் பிளந்து வேண்டினான் ,ஆனாலும்
                            
                                            " நான் திருமணம் ஆகியவன் , என்னோட மனைவிக்கு இன்னும் நோர்வே வர "பமிலி ஸ்பொன்சர் விசா" கிடைக்கவில்லை ,

                                    "  அப்படியா,,அது  கவலையான நிலைமைதான்"

                                  " எப்படியும் அவளுக்கு  இங்கே வர ஒருவருடம் எடுக்கும் போல இருக்கு "

                                   " அது,,இன்னும்  துன்பமாய்  இருக்குமே,,உங்களுக்கு "

                                      "  நல்ல உதவி நீங்கள் இதை தந்தது ,,மனைவி வரும்வரை யாராவது பாரசீகப் பெண்கள் கிடைக்க கடவுளின் நற்கருணையால் நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் எண்டால் அது நடந்துதான் தீரும் ,,இன்சா அல்லா ,," என்றான்
                          
                                  நீங்களே சொல்லுங்க பார்ப்பாம் ? கடவுளும் இருக்கிறவனுக்கு தான் இன்னும் கூரையப் பிச்சுக்கொண்டு கொடுக்கிறார் !.


.

.