Tuesday 17 July 2018

மழைபெய்திருக்கிறது !

எந்த மொழியில் எழுதுகிறோமோ அந்த  எழுத்து மொழியில் உள்ள வார்தைகளோடு , வசனங்களோடு , எழுத்துக்களோடு , இலக்கணத்தோடு , உள்ளிறங்கிச் சதிராடி   விளையாடும் அளவுக்கு  நிறையப் பரீட்ச்சயம் இருக்கவேண்டும். இது இண்டைக்கு உள்ள நிலைமையில் சாத்தியமா என்றால் , கொஞ்சம் கஷடம்தான் !


                                   எலி தரைக்கு இழுத்திச்சாம் தவளை தண்ணிக்கு இழுத்திச்சாம் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள் அதேபோல , தாய்மொழி கன்னித்  தமிழாக இருந்தாலும், அன்றாட வாழ்வியல் மொழி  கற்பிழந்த   ஐரோப்பிய மொழியாக இருப்பதால் எப்பவுமே இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்று இழுபட்டே கவடு கிழியுது. இப்படியான  நிலைமைதான் என்போன்ற " பு பெ இ த " களுக்கு இருக்கு. இதைத் தாண்டிக் குதிப்பதிலேயே தாவு தீர்ந்து போகிறது .


                                      இதுக்கு ஒரே வழி நிறைய ஆதித்தமிழ் மொழியில் உள்ள விசயங்களை  வாசிக்க வேண்டியதுள்ளது,  பண்ணிசை சின்ன வயசில்   முறைப்படி படித்ததால் இப்பவும் தேவார திருவாசக திருப்புகழில்  உள்ள பக்தி இலக்கிய மொழிவளம் கொஞ்சம் நினைவில் இருக்கு, இருந்தாலும் அந்த் தமிழ்மொழி இப்போது பாவனையில் இல்லையே ,


                                                         தமிழில் அப்பர் சுவாமிகளின்  திருமுறைத் தேவாரங்கள்  கொஞ்சம் எளிமையான சொல்லாடல் உள்ள பல விசயங்கள் இருக்கு, உதாரணத்துக்கு  " மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டறை பொய்கையும் போன்ற " இவ்வளவும் உண்மையில் இயற்கை பற்றிய வருணனை. 


                                           அதேநேரம் திருப்புகழ் ஒரு விசித்திரமான மொழிவீச்சு உள்ள வடிவம் ,,உதாரணத்துக்கு   " குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி " என்பதில் உள்ள சொற்களுக்கு என்ன அர்த்தம் என்பது சத்தியமா விளங்கவில்லை.. வேலாயுதக் கடவுளை  போற்றிப்பாடிய  15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் தமிழ்  அதன் அமைப்பு வடிவில்   " சந்த வேறுபாடுகளோடு " சம்பந்தப்பட்டது .அதுதான் நம்மைப்போட்டுக் குழப்புது.


                                                மாணிக்கவாசகரின் ,,,திருவாசகம் உண்மையில் Transpersonal psychology என்ற  சைகோலாயிகள் அப்புரோச் மொழிநடை, , புற்றுவாள் அரவம்  கண்டேன்  என்று தொடங்கும்  பாடல் மிகவும் அர்த்தமுள்ளது  கொஞ்சம் கவனிச்சா  "அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே!”  என்பதில்  அன்பிலாதவர் உறவு, நட்பு, என்பது அச்சம் தரும்படியான   பைத்தியக்காரத்தனம். என்று அவருடைய மணிவாசக ஸ்டைலில் சொல்லி இருக்கார் .  


                                                2018 ல் முகநூலில்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   எல்லாவற்றையும் புத்தகம் ஆக்கும்  ஒரு திட்டத்துக்கு முன் முயற்சியாக  சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகின்றேன்.




*




தனக்குள்தானே 
அடையாளங்களை 
மறந்துகொண்டிருக்கும் , 
நினைவுகளில் 
ஊஞ்சலாடியபடியே 

சுயமாக முடியாத,
இருட்டில்
சின்னாபின்னமாகி
பகல் என்பதையே
ஏற்றுக்கொள்ள மறுக்கும்
உன்னிடம் ,
கடைசி முயற்சியாக
ஒரு
சின்னஞ்சிறிய
திரி விளக்கின்
மஞ்சள் வெளிச்சம் தரும்
உற்சாகத்துடன்
நெருங்கிக்கொண்டிருக்கிறேன் !





*

உதடுகளில் 
புன்னகை நெளிந்தபோது 
ஆசீர்வாதம் !
அதிசயிக்கும்படி 
முதலில்ப் பார்த்தபோதே 
பிடித்து விட்டது
அந்தக் காதல் !
பின்னணியில்
சீராக ஏறியிறங்கி
மனசைப் பிசைந்தது
சந்தித்துப் பேசிய
சம்மதங்கள்
அந்தப் பொழுதுகளில் !
ஒரு
அதிகாலைக் கனவுபோல
மனதிலிருந்து
நகர்ந்துபோய்விட்டது
அந்தக் காலம் !.





*



காலைகளில்
பனிப்பாதை வழியிலேறிப்
பூசிக்கொண்டிருக்கும்
வெள்ளை வெளிச்சங்கள் !
அவைகளுக்கு 

எதிராகப் போராடியே
கழைத்துப்போகும்
மத்தியானங்கள் ! .
திரும்பத் திரும்ப அவைகளை
விரட்டிக்கொண்டு
பின்மாலைகள் .!
இந்தப் போர்
நாள் முழுதும் தொடரும். !
தப்பியதை எடுத்துக் கொண்டு
அடிமனதிலிருந்து
சாபம் கொடுத்துவிட்டு
தன்
ரகசிய இடத்திற்குத்
தூங்க வந்துவிடுகிறது
இரவு !.



*




மலர்கடையில்
விற்பனைப் பெண்
இளமை தரும் பரிசாகப்
பூத்திருக்கிறாள் !
மொட்டுகளை 

நிமிண்டிப் பறித்தெடுத்து
தயாராவதற்கு முன்பே
மலரச்செய்தால்
பொருந்தாத
முகப் பாவனையோடு
இறக்குமதிசெய்யப்பட்ட
வெப்பமண்டல மலர்கள் !
அவைகள்
நாளொன்றுக்குள்
விற்றுத் தீர்க்கப்படுவதுக்கு
எத்தனை
அப்பாவி இதழ்களை
உதிர்க்கவேண்டியிருந்ததென்று
யாருக்குத் தெரியும்?



*



வெய்யிலில்
பூந்தளிர்களை
நலம் விசாரிக்க
வந்தாகச் சொல்லியது !
அதுவே 

முழுப் பொய் !
உறைபனியில்
முனகிக்கொண்டிருந்த
மரங்களைத்
தேய்த்துக்கொண்டிருந்தது !
உள்ளங்கை
கொஞ்சநேரம்
வியர்த்தது உண்மைதான் !
ஏமாற்றுவித்தை
நன்கு பழகிப்போனதால்
என்
முதுகைக் காட்டியபடி
திரும்பியிருந்தேன் !



*



அடையாளம்கண்டு
சிலிர்த்துக்கொண்டது
மனத்திரை,
விளிம்பு தளர்ந்த
பழைய முகம், 

கையெல்லாம்
அலைகளின் சுருக்கம்.!
அரவணைப்பில் ஏங்கும்
நீலக் கண்கள்.
தெரிந்தவர்களை
நிலைக் குத்திடுகிறது,
நின்று
ரெண்டு வார்த்தையாவது
கேட்கவேணும் போலிருந்தது
எனக்குள்ளே
கதைத்துக்கொண்டு
கடந்து போய்விட்டேன் !



*



ஒண்டுமே
நடக்காதது மாதிரி
கதவோடு காத்திருப்பாள்,
சுகந்தமாகத்
தலைக்கு மேலேறும் 

உறைபனியின் வாசம் !
பனிமழை
படக்கூடாதென்று
விரித்தபடியே
குடையோடு நிற்பாள் ,
தனக்குத்தானே
பாரமாயிருக்கும்
மிதிபட்ட வாழ்க்கை!
அவன்
அடுத்த நாள் போய்விட்டபின்
உருகி, உருகி
உயிரையே விடுவாள் !



*




சின்னப் பழக்கடை
கொஞ்சம் வாழைப்பழமும், 
ஆப்பிள்களும் 
பியர்ஸ் பழங்களும் !
வாங்கிக்கொண்டு 

வீடு திரும்பும் வழியில்
கையேந்தும்
வீடில்லாத பெண் !
அப்படியே
பையைக் கொடுத்துவிட்டு
படியேறிய மாடியில்
பால்கனிச்செடிகள் !
எதையோ
சந்தோஷமாக நினைத்து
புத்துயிருடன்
கிளர்ந்திருகின்றன ! .



*



முகவரிகள்
உடைந்துகிடந்த
பாதசாரிகளின் நடைபாதை,
கொஞ்சதூரம்
நடந்துமுடிய 

வலதுபுறமாகத் திரும்பி
இடதுபுறம் நுழைந்து
வரிசையாகக் கட்டிடங்கள்,
கால் தடுமாறி
அங்கும் இங்குமாகத்
துருத்திக்கொண்டு நின்றது
தபால்பெட்டி !
இலக்கமில்லாத
நகரம் !
கடிதத்தைப்போட்டுவிட்டு
ஜோசிக்கிறேன்
விலாசம் சரியாக எழுதினேனா ?



*

நேற்றிரவு
பதினோரு மணிவரைக்கும்
வானம்
வாசல் முகப்பில
வெளித்திருந்தது நினைவிருக்கு ,

காலையில்
மின்சாரக் கம்பிகளில்
சின்னச்சின்ன
குமிழி விளக்குகள்,
பழைய சுவரின் 
பாசியில்
இரவில்க் கலந்த 
பூஞ்சண வாசனை,

பதினோருமணிக்குப்பிறகுதான்
வெள்ளைக் கடதாசியில்
அவசரமாக
வரிகளைத் தவறவிட்டு
நடுங்கும்
கையெழுத்தில் எழுதிய
கடிதம்போலவே
கொஞ்சம்
மழைபெய்திருக்கிறது !