Saturday, 23 July 2016

சமந்தா சலூன்

முடிவுகள் ஒரு முடிச்சுப்போல சிலநேரம் அதன் தொடக்கம் பிடிபடும் போது இலகுவாக  அவிழ்த்துவிட்டு அதன் சிக்கல்களை  சரியாக்கிவிடலாம் . சில நேரம் முடிவுகள் நமக்குப்புரியும்படியான ஒரு  பாதையில்  இருந்து  விலத்தி இன்னொருவிதமான வழிகளை  விரித்து வைத்தும் இருக்கலாம் . ஒரு முடிவோடு தொடங்கும் பயணத்தில்  சில  நேரம் பாதைகளே  அவைகளாக மாற்றிவைத்து எங்கள் வழிப்பயணத்தைக்  கேலிக்குரிய ஒரு திசையில்  நகர்த்தி வேடிக்கை  பார்க்கலாம் 

                                                                       சரியாக  நினைவு  இப்ப என் வயதான  மரமண்டைக்குள்  இல்லை , தொண்ணுற்றி ஆறு  எண்டு   நினைக்கிறன் ராணுவ நடவடிக்கை  சூரிய கதிரில்  வலிகாமம் முழுவதும் ஒரு பின்மாலை  இடம்பெயர்ந்து  தென்மராட்சி  வடமாராச்சி என்று வன்னியில் அவலமாக  இருந்த  நேரம் ஒரு அதிகாலை சரசாலை  ஊடாக  ராணுவம் அகோர  செலடியில்  தென்மாராட்சி  வாசலை கோப்பாய்ப் பக்கமாக  கைப்பற்றியது ,விடுவிக்கிறோம்  என்று  கைப்பற்றி மீசாலை  வீரசிங்கம் மகாவித்தியாலம்  வரையில் முன்னேறி அதில் தடை  போட்டு வலிகாம மக்களை மீண்டும்  உள்ளே  எடுத்தார்கள் 

                                      அந்த  தடைக்கு  இந்தப்பக்கம்  தான்  கடைசியாக சாந்தனை  சந்தித்தேன் , ஒரு தோளில் போடும் கன்வாஸ் பையுடன் நின்றான் ,நானும் இங்கால  போறாதா  அங்கால  போறதா  என்று முடிவு  எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டு  நின்றேன் . அவனும்  அப்படிதான் ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறுவது போல  இருந்தது . என்  உடன்பிறப்புகள் நேரத்தோட  தென்மராட்சியை விட்டு  கிளாலி  கடந்து வன்னியையும்  வவுனியாவையும் கடந்தே  போய்விட்டார்கள் 

                                  " சம்பந்தர்  நான்  உள்ளுக்க போகப்போறேன்  மச்சான்  ..நீ  என்ன  பிளான்  " எண்டு  கேட்டான் , அதுக்கு  நான்  

                                    " நான்  வன்னிக்கு  போறேன்  மச்சான்,,இலவசமா வள்ளம்  விடுறாங்கள் ,,வன்னியில்  காணியும்  கிடுகும்  கொட்டிலும்  தாறாங்களாமடா "

                                   "    அங்க  போய்  என்ன  மலேரியாவில்  சாகப்போரியா "

                                      "   அது  தெரியாது  மச்சான் ,,"

                               "   நீ போ..நான்  தனியாத்தான்  போகப்போறேன்..போய்  சலூன்  இருந்தா  நடத்துவம்  இல்லாட்டி வேற  என்னவும்  செய்வம் ,,இப்பிடியே  ஓடிக்கொண்டு  இருக்க  ஏலாது  மச்சான் "

                              "  நீ  தனியப்  போறாய்  என்டுறாய்,,உனக்கு  என்னவும்  நடந்தால்  யாருக்கு  மச்சான்  தெரியும்,,யார்  என்ன  செயுறது "

                                "   பிறக்கும்போது  தனியாதானே  பிறந்தேன்  வாறது  வரட்டும் ,,"

                                           இதுதான்  சாந்தன்  சொன்ன கடைசி  வாக்கியம். ராணுவம் உள்ளே எடுத்த  பல  இளையவர்கள்  பின் நாட்களில் சந்தேகத்தில்கடத்தப்பட்டு  செம்மணி  புதைகுழியில் சுட்டுப்  போட்டு புல்டோசரால்  மண் தள்ளி  சுவடுகள்  அடையாளங்கள் இல்லாமல்  மூடப்பட்டார்கள் . அதில்  சாந்தனும்  ஒருவர்  என்று பல வருடங்களின் பின் புலம்பெயர்ந்து  சுவிடனில் பாதுகாப்பாக வசிக்கும்போது கேள்விப்பட்டேன் 


எங்கள் ஊரில நிறைய மனிதர்கள் ஒரு காலத்தில் சுவாரசியமாக இருந்தார்கள் . அந்த சுவாரசியங்களை காலம் அவளவு இலகுவாக விழுங்க முடியாதவாறு நினைவுகளில் அப்பப்ப அவைகள் வந்து போவது இப்போதைய இருத்தலில் முக்கியமான ஒரு காலகட்டத்தை கடந்து முடித்து வெளியேறிவிட்டாதாக  நினைக்கவே விடுகுதில்லை. அந்தக் காலம் விடுதலைப்போராட்டம் நடந்த வருடங்கள்

                                                   முப்பது சொச்சம் வருடங்களை வலியோடு சேர்த்து இழுத்துக்கொண்டு  போன பாதையில் நடந்த விடுதலைப் போராட்டம் ஒரு குண்டக்க மண்டக்க குளறுபடி என்று எப்பவும்  சாந்தன் சொல்லுவான். நான் அதை அப்படி நினைக்கவில்லை என்றும் சொல்லமுடியாது. நான் அதைப்பற்றி சொல்வது முக்கியமில்லை. ஆனால் சாந்தன் அதை சொல்லும்போது சாகலாம் போல இருக்கும் .அதில் அவன் என்னத்தை எல்லாம் இழந்தான் என்பது ஒரு தனிமனித வரலாறு இல்லை. ஒரு இனத்தின் கசப்பான ஒட்டுமொத்த வரலாறு.


                                                 சமந்தா சலூன் பல வருடமாய் கிடாய்விழுந்தான் ஒழுங்கை வாசலில் இருந்தது. அப்போது அதுக்கு அந்தப் பெயர் இல்லை. உண்மையில் சொல்லும்படியாக ஒரு கவர்சியான பெயரே இல்லை. சாந்தகுமாரின் வயதான அப்பா அதை நடத்திக்கொண்டிருந்தார்.அது ஒரு சலூன் என்பதுக்கு எந்தவித வெளி விளம்பர அடையாளங்களும் இல்லாமல் அது இயங்கிக் கொண்டிருந்தது, அந்தக் காலங்களே அப்படிதான் விளம்பரங்கள் அளவுக்கு அதிகமாக கவனத்தைச் சிதறடிக்கச் தேவையற்ற ஒரு காலம் . 


                                       அதை சாந்தகுமார் நடத்தத் தொடங்கியபோதுதான் அதுக்கு சமந்தா சலூன் என்று பெயர் வைத்தான் . ஏன் அப்படி ஒரு அழகான இளம் பெண்ணின்  பெயரைத் தேர்வுசெய்து வைத்தான் என்பதுக்கு எந்தவிதமான உதியோகபூர்வமான  விளக்கங்களும் இல்லை. அந்த  விவரணங்கள்  யாருக்கும் அப்போது  தேவை இல்லாமலும் இருந்தது. ஆனால் அந்தப் பெயர் சிங்களப் பெயர் போல இருந்தது என்னவோ  கொஞ்சம் குழப்பமாக இடறியது உண்மைதான் 


                                             சொர்கத்துக்கும் நரகத்துக்கும்  நடுவில் உள்ளதுபோல   முன்னுக்குத் தள்ளித் திறக்கும் ஒரு பாதிக்கதவு  எல்லா சலூன்கள் முன்னுக்கும்  உள்ளது  போல  தொங்கிக்கொண்டு இருக்கும். அந்தக்  கதவைத்  தள்ளிக்கொண்டு  உள்ளே வந்து இருந்து  பத்து  நிமிடத்துக்கும்  அந்தக்  கதவு  உள்ளேயும்  வெளியேயும் மெல்ல மெல்ல கிரிச்  கிரிச்  என்று எலிபோல  சத்தம்  எழுப்பிக்கொண்டு   ஒரு கட்டத்தில் அடங்கி  நிலையாக  நிக்கும். மற்றப்படி அடக்கமான   ஒரு சின்னக் கடை  அது . 


                                                ஒருவிதமான  அழுக்கு முடிகளின் வியர்வை உறிஞ்சிய  பிரண்டல்  வாசம்  நிரந்தரமாகவே காற்றில்  சுற்றிக்கொண்டு  இருக்கும் அந்தக்  கடையின்   உள்ளே ரெண்டு தலைமயிர் வெட்டுபவர்கள் தலையை நிமிர்த்திக்கொண்டிருக்கும் கதிரை. அதன் குஷன் இருக்கைகள் பிய்ந்து போய் அரை மணித்தியாலத்துக்கு மேலே அதில இருந்தால் மூட்டைப் பூச்சி ஊசிபோடத் தொடங்கும். பாதரசம் விளிம்புகளில் கழண்டு போன ரெண்டு பெரிய கண்ணாடி கதிரைக்கு முன்னே உலகம் போலவே விரிந்து இருக்கும்.

                                                  ரெண்டு தும்பு கழண்ட தும்ப்புக்கட்டை. ஒரு மூலையில் சவரச் சவுக்காரம் கரைத்த சின்ன அலுமினியச் சட்டி. அந்த மூலைக்கு எதிர் மூலையில் ஒரு நசினல் பனசோனிக் ரேடியோ. அதில கெஸட் போட்டு ஏகாதசிக்கு பெருமாள் கோவிலில் உண்டியல் குலுக்கின மாதிரி எப்பவும் இளையாராஜா பாடல்கள். முகம் வழிக்கும் சவரக் கத்தி தீட்ட ஒரு பழைய சிம்மக்கல்லும், சிலநேரம் ரெண்டு இழுவை இழுக்க ஒரு மாட்டுத் தோல் பெல்ட்டும் தொங்கும்  


                                            ஒரு சின்ன அலுமாரியில் துவாய்கள் அடிக்கி வைச்சு இருக்க,   சுவர்களில்  தமிழ் சினிமா நடிகைகளின் படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். முக்கியமா வாணிஸ்ரீயின் படங்கள் தான் அதிகம். வானிஸ்ரீக்கும் ஒரு முடிவெட்டும் சலூனுக்கும்  அவளவு  நெருக்கம்  வந்ததே ஒரு  காரணத்தோடுதான் .ஏனென்றால் அதை நடத்திக்கொண்டிருந்த சாந்தகுமாரின்   அப்பா சிவாயி, எம் யி ஆர் ஹீரோக்கள் முன்னணியாக   சினிமாவில்  முத்துக்குளித்த  காலத்து ஆள் .


                                                 வாணிஸ்ரீயின் தீவிர இரசிகராக இருந்த அவர் . வசந்தமாளிகை படத்தை ஐம்பது தடவைக்கு மேலே ரசித்துப் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறான் சாந்தகுமார் . ஆனால் சாந்தகுமார் சலூனைப் பொறுப்பு எடுத்தபின் எல்லா எழுபதுக்களின் சினிமா ஹிரோக்களின் படங்களைக் கிழித்து எறிந்து போட்டு வானிஸ்ரீயை மட்டும் அப்படியே வைத்து இருந்தான்.அதுவே பெண்களை எல்லாவிதமான சூழ்நிலையிலும் ரசிக்கக் கூடிய இடமே ஒரு சலூன் போல  இருக்கும் 


                                                         முடிவெட்ட வாற எல்லா ஆண்களும் வானிஸ்ரீயின்  கூந்தல் அழகையும்,,கண்களில் மின்னும்  வெளிச்சங்களையும் வெள்ளித்திரை அழகையும்  ரசித்தபடிதான் தலையைத்  தாண்டவக்கோனே என்று கொடுத்திட்டு  இருப்பார்கள். மங்கிப் போன எல்லாப் படங்களிலும் வாணிஸ்ரீ முகமெல்லாம்  பிரகாசங்கள் வாரியிறைத்து  சிரித்துக்கொண்டு இருப்பா. வாணிஸ்ரீ முடிவெட்டும்  கதிரையில் குஷன்  மறைவில் இருந்து கடிக்கும்  மூட்டைப் பூச்சி கடியில் நெளியும் அவர்களைப் பார்த்து சிரிப்பது போல இருக்கும். 


                                     சாந்தன்  அவனுக்குப்  பிடித்தது  என்று ஒரேயொரு படம் தான் தொங்கவிட்டு இருந்தான். அதுவும் ஒரு மூலையில் அதிகம்  யாருக்கும்  கண்ணைக்குத்தாமல் இருக்க வேண்டும் என்பது போல கறுப்பு வெள்ளையில்  இருந்தது . அதில் கியூபாவில்  பஸ்டிட்டா  கொடுங்கோலனின்ஆட்சியைக்  கவிழ்த்த  பிடல்காஸ்ட்ரோவும்  எர்னெஸ்ட்டோ சேகுவேராவும் ஒரு ஜீப்பில் இருக்கும் படம் . அதில் சேகுவேரா  ஹவானா சுருட்டுப் பத்திக்கொண்டு இருப்பார் .அந்த சுருட்டின் புகை நிறைவேறிய ஒரு நீண்ட  கனவின் தொடர்ச்சி போல சந்தோசமாக சுருண்டு எழும்பிக்கொண்டு இருக்கும் 

                                   அந்த  சலூனில  எப்பவுமே  மல்லிகை மாத  சஞ்சிகை  இருக்கும்.  சாந்தன்  அதை வாசிக்கவேமாட்டான். நான்  ஆர்வமா  வாசிப்பேன். சில  நேரம்  மல்லிகை  வந்திருக்கா  என்று  கேட்டு  அதை  வாசிக்கவே  அவனோட  சலுனுக்கு போய்  மணித்தியாலங்களை செலவு  செய்து மல்லிகையில்  வரும்  கவிதை  கதை  எல்லாம்  ஒன்றுவிடாமல் வாசிப்பேன் . ஓரளவுக்கு  என்னோட  ஆரம்பகால  இலக்கிய  ஆர்வம் வந்ததுக்குக்  காரணமே  அந்த  சலூன் வாசமும் மல்லிகை  வாசமும்தான்  காரணம் , சாந்தன்  நான்  வாசிகிரத்தை  பார்த்துக்கொண்டு  மற்றவர்களுக்கு  முடி  வெட்டிகொண்டிருப்பான் 

                                         பொதுவா  அவன் முன்னம் பின்னம்  அதிகம் அறிமுகம் இல்லாத  யாரோடும்  அதிகம்  கதைக்க  மாட்டான் .அதுக்கு  உண்மையாகவே பயப்படும்படியாக  ஒரு காரணம்  இருந்தது . அது  அவன்  வாயைக்  கட்டிப்போட்டு ஒருவிதமான  இறுக்கமான  சூழ்நிலையை உருவாக்கி வைத்து  இருந்தது. சலுனில் யாரும்  இல்லை  என்றால் 

                                      "    சம்பந்தர்  சொல்லு  மச்சான்,,உந்த  மல்லிகையில்  என்னடா  இருக்கு  இப்பிடி  பிடிச்சு தின்னுற  மாதிரி  மூச்சு விடாமால்  வரிக்கு வரி  வாசிக்கிறாய் "

                                           "   இதில  நல்ல  விசியம்  இருக்கு ,,நீதானே  வேண்டிப் போடுறாய்  என்னத்துக்கு  வேண்டிப்போடுறாய் "

                                       " அட  மச்சான்,,இது  எண்ட  அப்பருக்கு  தெரிஞ்ச  ஒரு  ஆள்  கொண்டுவந்து  போடுவார் ,மச்சான்  அப்பர்  காலத்தில  இருந்து நெடுகிலும்  இது  வந்துகொண்டு  இருக்கு "

                                "    ஓம்,,மச்சான்  ,,அவர்தான்  டொமினிக்  ஜீவா "

                                "   ஓமடா  அவர்  எங்களுக்கு  கொஞ்சம்  தூரத்து  சொந்தம் ,,பாவம்  மனுஷன்  சைக்கில் பின் கரியரில்  இதைக்கட்டிகொண்டு  வெயிலில் மண்டை  பிளக்க  வருவார் "

                               " ஓம்,,அப்பிடி  கஷ்டப்பட்டுதான்  இலக்கியம்  வளர்கிறார் ,,அவரே  முறிஞ்சு  முறிஞ்சு  அதை  எல்லா  இடமும் கொண்டுபோய்ப்  போடுறார் "

                            "  உதென்ன முற்போக்கு  சஞ்சிகையா "

                        " ஓம்  அப்பிடிதான் சொல்லலாம்  மச்சான் "

                        "சாதி  வெறி...சமுதாயப்பார்வை ..சமூகப் புரட்சி  இதுகளை  சும்மா  எழுதிக்கொண்டு இருந்தா  நடக்கிற  காரியமே   "

                               "அது  எனக்கு  தெரியாது  மச்சான்,,ஆனால்  அந்தக்  கொடுமைகளை  அவலங்களை  எழுதுறதே  ஒரு முயற்சி தானே  " 

                          "என்னவோ  நீதான்  சொல்லுறாய்,,எனக்கு  உதுகளில்  நம்பிக்கை  இல்லை  மச்சான்  " 

                                "அது  உன்னோட  சொந்த அபிப்பிராயம் ,,நான்  என்ன  சொல்ல  முடியும்  "

                       "  உனக்கு தெரியும்  தானே  நான்  இயங்கியல்வாத  சோஷலிசம்,,,வர்க்க  கொமினிசம்...மக்கள்  யுத்தம்  எல்லாம்  படிச்சு  இருக்றேன்  டா..."

                             "  ஹ்ம்ம்....அது  தெரியும் "

                            " ஆனால்  இனி  அது  எல்லாம்  ஆரோடும்  கதைச்சா  நாரிதான்  முறியும்,,அரசியல்  பாசறையில்  படிச்ச  எல்லாமே  அவங்கள்  அப்பிக்கொண்டு  போன  நேரத்தோடு  சரி "

                          " ஹ்ம்ம் ..அது சோகம்  தான் "

                        " தெருவுக்கு  தார்  ஊத்திறதுக்கு  எண்டு  சொல்லி  வீடா சோத்துப்பாசல் வேண்ட  விட்டாங்கள் இதுக்கா  நான்  ட்ரைனிங்  எடுக்கப்  போனேன்,,சொல்லு  பார்ப்பம்  சம்மந்தர் "

                                      "      ஹ்ம்ம் "

                        "   ஊர்மிளா  செத்ததுக்கு  நோட்டிஸ்  ஓட்டவிட்டாங்கள் அதில என்னோட  வந்த சுக்குட்டி ,தனபால்,,நடுவில் ,,நிக்சன் எல்லாரையும் .......ங்கள் வந்து  பிடிச்சுக்கொண்டு  போய்  சுட்டாங்கள் ,,,"

                                      "   ஹ்ம்ம்,,,தெரியும் "

                            "  நான் பசை  வாளிக்கு  அமரிக்கன் மா  கரைக்கப்  போனதால்  தப்பினேன் ..அதை  வைச்சு  மருதடிக்  குளத்துக்கு பின்னால வறுகித் தப்பி ஓடினேன்  ..தெரியுமா  உனக்கு "

                                          "    ஹ்ம்ம்  அது  தெரியாது "

                         "   பெரிய  ஐயா   என்ற...அந்த  ............பொம்புள பொறிக்குக்கு நாங்க  எதுக்கு  சாக  வேண்டும் ,,ஊர்மிளா  ஆர்  தெரியுமா  ,,அந்தப்  பொட்டைப்  பொறுக்கியின்  வைப்பாட்டி "

                                 "  ஹ்ம்ம் "

                             "    இருந்த  இயக்கதிலையே  அதிகம்  பேர்  இருந்தது  எங்கட  இயக்கம்...பெரிய  ஐயா  ராவு ராவா கூத்துப்  போட்டு  பெண்டுகளின் ...இக்குள்ள  தமிழ்  ஈழம்  பிடிக்க  நாங்க  சாப்பாடும்  இல்லாமல்  மரவள்ளிக்கிழங்கு  ஒரு நேரம்  திண்டுகொண்டு ஆதையிண்ட சீலைக்க  அணில் பண்ணசுதாம் ....விசரைக்  கிளப்பாதை  சம்மந்தர் "

                    "  ஹ்ம்ம்..என்னக்கு  விளங்குதடா ,,சாந்தன் "

                                           "  இப்ப  பார்  மச்சான்  டிக்கு டிக்கு  என்று  அவன் அவனின்ட  காஞ்சு  போன  காஞ்சோண்டி  மண்டைகளை  பிறாண்டிக்கொண்டு  இருக்றேன் "

                                 "   நீ  உயிரோடு  இருக்கிறது  அதுவே  பெரிய  விசியம்  தெரியுமா ,,சின்னக்கண்ணா  அவன் ஜெலிக்னைட் அடையும் நேரம்  சிலிண்டர்  வெடிச்சு சிதறிப் போனான்  டா "

                         " ஓமடா  அது  நானும்  கேள்விப்பட்டேன் ..பொறு  மச்சான்  ஒரு  ஆள் வாரார்,,வைச்சு  சிரைச்சுப்போட்டு  வாறன்  மிச்சம்  கதைப்பம் "

                                                               

சாந்தகுமார் என்ற சாந்தன்  என்னோட சைவ மங்கையக்கரசி ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவன். அந்த வயதில் அவன் பின்நாட்களில் கத்திரிக்கோலை பிடிச்சு  ஒரு சலூனில் சிக்கிக்கொண்டு சிங்கி அடிக்கவேண்டி வரும் என்று நானோ,அவனோ ,யாருமே நினைத்திருக்க சந்தர்ப்பம் இருந்ததில்லை . என்னைப்போலதான் அவனும் படிப்பில சிங்கம் புலி போல இல்லாமல் சுமாராக வகுப்புகளைக் கடந்து கொண்டிருந்தான் . ஆனால் அவன் அப்பா சலூன் நடத்துறார் என்று ஒன்றாகப் படித்த எல்லாருக்கும் தெரியும்

                                        ஆறாம்  வகுப்புக்கு  நான் டவுன் பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டேன். சாந்தன் அந்த ஆரம்பப் பாடசாலையில் படிதுக்கொண்டிருப்பதாகத்தான்  நினைத்துகொள்ளும்படியாக இருந்தது . டவுன்  பாடசாலையில் நான் படிக்கப்போயிருந்தாலும் சாந்தன் போன்ற ஆரம்பப் பாடசாலை நண்பர்களை ஊருக்குள் எப்பவும் சந்திக்கும் நட்பான நிகழ்வுகள்  அதிகமாக இருந்தது . வீராளி அம்மன் கோவில் திருவிழாவுக்கு எப்பவுமே சாந்தன் வருவான். 


                                                        சமந்தா சலூனில தலைமுடி வெட்ட வேண்டிய தேவை இருக்கோ இல்லையோ என்பதைவிட சாந்தனை சந்தித்துக்  கதைப்பதுக்காகவே   எப்போதும் போவது. சாந்தான்  என்னைக் கண்டால்  


                                               " சம்மந்தர்   எப்படி மச்சான்  இருக்கிறாய்  " 

                               என்பான்  ,,நானும்   

                                         " ஏதோ  இருக்கிறேன் மச்சான் " 

                                        என்பேன் . அவன் ஏன் என்னை சம்மந்தர்   என்று சொல்லி அழைப்பதுக்கும் சரியான விளக்கம் இல்லை,  என்னோட  மூத்த அண்ணரின் பெயர்  தான்............. அதால்  என்னை சுருக்கமா  சம்பந்தர்  என்று  சொல்லி இருக்கலாம். என்னோட  மூத்த அண்ணரும் நானும்  சாந்தனும் படித்த அந்த ஆரம்பப் பாடசாலையில் தான் படித்தார். 

                                          விடுதலைப் போராடத்தில் எல்லா இயக்கமும் இயங்கிய காலத்தில் சாந்தகுமார் ......  என்ற இயக்கத்துக்குப் போனான். அந்த இயக்கம் அவனுக்கு அடிப்படைப் பயிட்சியை வடமாராச்சி கிழக்கில் உள்ள மணல்காடு என்ற சவுக்கம் தோப்புக்கள் அதிகமுள்ள இடத்தில கொடுத்தார்கள் .பிறகு ஆயுதங்கள் அந்த இயக்கத்துக்கு வருகுது  ,,,,வருகுது  என்று சொல்லி சொல்லியே பயிட்சி எடுத்த எல்லாரையும் வைச்சு வீணடித்தார்கள் .

                                 சாந்தன் பயிட்சி முடித்து வந்த நேரம் அவனைச் சந்திக்கும் ஒரு நிகழ்வு வீராளி அம்மன் கோவில் திருவிழாவில் கிடைத்தது. ஏற்கனவே ஒல்லியா வளர்ந்து இருந்த அவன் அந்த பயிட்சி முடிய தேடாவளயக் கயிறு முறுக்கின மாதிரி இருந்தான். குடிலில் போட்டு வாட்டின புகையிலை போல கறுத்துப் போயிருந்தான். கோவில் திருவிழாவில என்னைப்போன்ற இளசுகள் பெண் பிள்ளைகளின் அழகைப் பார்க்க அவனோ எப்பவும் எச்சரிக்கையாக ஒரு இடத்தில நிலை எடுத்து  எல்லாரையும் எதிரி போலப் பார்த்துக்கொண்டு இருந்தான் 

                                அந்த நேரம் அவன் முள்ளியவளை காட்டில உதய பீடம் பயிட்சிப் பாசறையில் ட்ரைனிங் முடித்து வெளியேறும் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தான் . புதிதாகச் சேர்ந்த இளையவர்களுக்கு ஒரு தேசத்தின் விடுதலைக்கு கனவோடு ஜெனரல் கியாப் என்ற வியட்நாம் மக்கள் விடுதலைப் போராளி எழுதிய " மக்கள் யுத்தம் மக்கள் போராட்டம் " என்ற புத்தகத்தை விவரித்து, 

                                             "  மக்களை அணிதிரட்டி தென் தமிழ்ஈழம் உள்ளிட மலையக மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் ஒரு பரந்த தமிழ் ஈழமே தென்னாசியாவில் போராடும் எல்லாப் பாட்டாளி  வர்க்க விடுதலை உணர்வுள்ள தேசிய மக்களின் சுரண்டல் விடிவுக்கு ...      "                         
                                                                                
                                                            என்று  அவன் வகுப்பு எடுத்த அன்று இரவு  அந்த இயக்கம் தடைசெய்யப்பட்டது. சாந்தனையும் எப்படியோ தண்ணியூற்றில் வைச்சு  அடுத்த சில நாட்களில் தேடிப்பிடித்து கையைக் கட்டி ,கண்களையும் கட்டி ஒரு நாலுக்கு நாலு சதுரம் உள்ள அறையில் அடைத்தார்கள் . அந்த இடம் கரிப்பட்டுமுறிப்பில் இருந்தது. தடைசெய்யப் பட்ட அவன் இயங்கிய இயக்க உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து  யாருமே சுடப்படவில்லை .

                                                    சாந்தன்  முடிவெட்ட  யாரும்  இல்லை  என்றால் வெளியே  வீதியை வேடிக்கை  பார்த்துக்கொண்டு  நிற்பான் . நான் அவடத்தால்  சும்மா  போனாலும்  உடன  

                           " சம்பந்தர் ,,என்னடா  செய்யுறாய் வாடா   மச்சான்  " என்பான்

                          "  எனக்குதானே  முடி  இன்னும்  பெரிதா  வளரவில்லை ,,இப்ப  வந்தா  என்னத்தைப்  பிடிச்சு  வெட்டப்போறாய் "

                              "  சும்மா,,வாடா  மச்சான்,,கதைச்சுக்  கனநாள்,,,காதுப்பக்கம்  கொஞ்சம்  சடை  கெம்பிக்கொண்டு  நிக்குது,,சைட்டா  பிடிச்சு  அரிஞ்சு  விடுறேன் ,,முதல்  உள்ளுக்கு  வாவன்,,இளையராஜாவின்  புதுப்  பாட்டுக்  கேசட்  ஒன்று  கிடைச்சுது  மச்சான் ,,வா  போடுறேன் "

                                      இப்பிடி  பாட்டு  போடுறேன்  என்றால்  நான்  எப்பவும்  அவன்  தலையை  வெட்டினாலும்  பரவாயில்லை  என்று  உள்ளே  போவேன்  என்று  அவனுக்கு  தெரியும். இளையராஜாவின்  பாடல்கள் அவளவு  விருப்பம்  எனக்கு. அது அவனுக்கும்  நல்லாத் தெரியும் . உள்ளே  போனால் புது  பாடல்  கேசடை  முதலில்   இருந்து  பாடவிட்டுப்போட்டு ,கதிரையில்   இருத்தி ஒரு  வெள்ளைத்துணியை  எடுத்து கழுத்துவரை கட்டிப்போட்டு  சீப்பும்  கத்திரிக்கோலும் அவனை அறியாமலே கையுக்கு வந்திரும் .

                                  "    சொல்லு  சம்பந்தர்  என்னடா  செய்யுறாய் ,,எங்க  இந்தப்பக்கம்  கனநாளாய்த் தலைக் கறுப்புக்   காணமுடியவில்லை "

                               " எங்க  மச்சான்  நேரம்  கிடைக்குது ,,ஏதும்  ஒரு  வேலையில்  சேருவம்  என்று  ஓடுப்பட்டுக்கொண்டு  திரியிறேன் "

                             " ஓம்,,அது கஷ்டம்தான்  தான்  மச்சான்,,நல்ல  காலம் எனக்கு  அப்பரின்  வேலை தெரியும்,,சலூன் சும்மா  பூட்டிக்கொண்டு கிடந்தது,,,உனக்கு தெரியும்தானே நான்  பட்ட  சீரழிவு,,தப்பி  உசிரோட  வந்த  உடன  பேசாமால்  இதைத்  தொடங்கிட்டேன் "

                                    "    ஹ்ம்ம்,,,,அது  நல்லதுதான் "

                                "  தெரியும்தானே  அவங்கள்  வெளிய விட்ட நேரம்  சோலி  சுரட்டுக்கு  போகக்கூடாது  என்று  வார்ன்  செய்து...பைல்  போட்டு  வைச்சுத்தானே  விட்டவங்கள் "

                                 "   ஹ்ம்ம் ,,சரி  விடு "

                           "   எங்களோடு  படிச்சதுக்கள்  இப்ப  எங்க  எங்க  இருகுதுகளோ  தெரியேல்ல ,,உனக்கு  என்னவும்  தெரியுமா "

                           "  இல்லைடா...எனக்கும்  அதிகம்  தெரியாது "

                              "உமாமகேஸ்வரி   இப்ப  எங்க  மச்சான் "

                           " யாரடா  குருக்களோடு  மகள்  தானே,,எனக்கு  எப்படி  தெரியும் அவள்  இப்ப  எங்க  என்று "

                                          உமாமகேஸ்வரி எங்களோடு படித்த எல்லாப் பெண் பிள்ளைகளிலும் பார்க்க துளசிப் பூப் போல அழகானவள்  . கலவரம்  இல்லாத ஹம்சத்வனி ராகம் போல  அமைதியான முகம் . சிந்தாமணிக் கடலை உறப்போட்ட   நிறம். கறுத்த பொட்டு நெற்றியில்  இழுத்து தலைமயிரை  படிய வாரி ரெட்டைப்பின்னல் போடுவாள். அதிகம் யாரோடும்  கதைக்க   மாட்டாள்.  நிழலைக் கூட  நிமிர்ந்தே பார்க்க மாட்டாள். நாங்களும் பார்க்க மாட்டோம்.உறை போட்ட  பெரிய  சூட்கேஸ் கொண்டு வருவாள். அதன் உள் பக்கத்தில் சாமிப்படங்கள் ஒட்டி இருப்பாள் .   சரஸ்வதிப் பூசைக்கு " சாமய வர கமணா "என்று சங்கீதம் பாடுவாள் 

                              "  ஓமடா  அவள்  தான் ,,    அவளோட  நான்  ஒன்பதாம் வகுப்புவரை  படிச்சன்,,,நீ  தானே  அஞ்சாம்  வகுப்போட டவுனுக்கு  பாஞ்சு  போயிட்டியே ,,அவள்  என்னோட  லைன்  அடிச்சுக்கொண்டு இருந்தாள் "

                             "  உண்மையாவா  சொல்லுறாய்,,அவள்  ஐயர்  பெட்டை  எல்லா "

                              "  பார்த்தியா  உன்னோட  சாதிப்புத்தியை எழுப்பிக்  காட்டுறாயே...ஐயர்  பெட்டை  என்றால்  என்னடா ,,அவளுக்கு  மட்டும்  என்ன எல்லாம்  பவுணாலையே  செய்து கிடக்கு "

                               "  இல்லை  மச்சான்  நான்  நடைமுறையை  சொன்னேன் "

                            " மன்னாங்கட்டி  நடைமுறை  அவள்  வழிஞ்சு  வழிஞ்சு  லைன்  அடிச்சாள்  டா,,உமாவுக்கு  அவளவு  விருப்பம் என்னில  தெரியுமா  "

                                " பிறகு  என்ன  ,,உடுத்த உடு  துணியோட இழுத்துக்கொண்டு  ஓடி  இருக்கலாமே "

                                  "  என்னடா  சம்பந்தர்  முசுப்பாத்தி  விடுறியா "

                           "  இல்லை மச்சான்  நான்  இன்னொரு  நடைமுறையை  சொன்னேன்,,அதுதான்  நடக்கும்  அடுத்ததா "

                               "  ஓமடா  அதுதான்  பிளான்  போட்டேன்,,உமாவும்  அதுக்கு  முதலில்  பயந்தாள் "

                              "   கதையை  செருகாமல்  ஒழுங்கா  சொல்லி  முடியடா "

                          "   சம்பந்தர்  நான்  சொன்னா  நம்ப மாட்டாய்   கதை  போய்  செருகிட்டுது ,,அதுக்குள்ளே  உமா ..."

                        "  ஹ்ம்ம்...சொல்லு  உன்னோட மிச்ச  ரொமான்ஸ்  கதையை "

                                  "  ஆனா ,உமா..கொஞ்சம்  நாள்  தரச்சொல்லி  கெஞ்சினாள்.."

                                 " அட அட  என்ன  ஒரு ஹிரோயின்  என்ன  ஒரு  ஹீரோ ,,சரி  பிறகு  என்ன  பிக்கல் பிடுங்கல் "

                                     " சின்னச்  சில்லெடுப்பு  வந்தது,,சம்பந்தர்  அதை  என்னண்டு  சமாளிகிறது  என்று  அப்ப  தெரியவில்லை   " 

                                      " காதல்   என்ன  சிட்டுக்குருவி  லேகியமா  சுமுத்தா வழிக்கிக்கொண்டு போக,,சில்லெடுப்பு  வந்தா  தாண்டா  அது  காதல்  "

                                   "ஹஹஹா  ,,உனக்கு  முசுப்பாத்தியா  இருக்கு,,நானும்  உமாவும்  பட்ட  பாடு  எங்களுக்குத்தான் தெரியும்  சம்பந்தர்  " 

                                   "  கஷ்டம்  இல்லாமல்  காதல்  இல்லை டா  மச்சான்..அவங்கட  வீட்டில  பிரசனை  எடுத்தாங்களா ,,ஐயர்  ஆட்கள்  பயந்தாங்கொள்ளிகளே  "

                                      "  அதில  ஒண்டும்  வரவில்லை,  உமா  வீட்டுக்கு  ஒரு  மண்ணும்  தெரியாது..,உமா  நல்லா  படிப்பாள்  தெரியும்தானே "

                              " ஓம்,,அது  உண்மை, அவளுக்கு  சரஸ்வதி  கடாட்ஷம் ,அவள்தானே எப்பவும்  முதலாம்  பிள்ளை "

                           "  நான்  கடைசி  வாங்கு  அதுவும்  தெரியும் தானே "

                             "  காதலுக்கு  என்னடா  படிப்பு  ,,அது  பக்கு  பக்கு கடாய்  விளக்கு திரி  வைச்ச மாதிரி    பத்தி  இருக்குமே "

                                "   கைலாசபிள்ளையார்  திருவிழாவில தான்  கடைசியா  கதைச்சேன்  ,,போட்ட  பிளான்  எல்லாம் அதில  வைச்சு இன்னொருக்கா இன்னும்  வடிவா பிளான்  போட்டோம் "

                                 "  அடப்பாவி  இப்பிடி  என்றால்  நானும்  அங்கேயே  படிச்சு  இருப்பேனே...நான்  போனது  பொடியன்கள்  மட்டும்  படிக்கிற பள்ளிக் கூ டம்  டா...நல்லா  வறுத்து  எடுத்திட்டாங்கள் அங்க "

                            "    உமா,,நல்லா  லைன்  போட்டு  ,,ரெண்டு  பேரும்  அந்த  மாதிரி  ஒட்டு  தெரியுமா,  சொல்லி  வேலை  இல்லை ,"

                                "     ஹ்ம்ம்,,,பிறகு  என்ன  நடந்தது "

                          "  மச்சான்  உனக்கு  கன்னத்தில பூனை  மயிர்  சிலுப்புது ,,நாடியில்  ஆட்டுக்கிடாய்  தாடி ,,அலங்கோலாமா இருக்கடா ,,நாலு  இழுவை  இழுத்து  சேவ்  எடுத்து  விடவா "

                            "    சரி,,,சேவ்  எடு   ...எடுத்து  எடுத்து  கதையை  சொல்லுடா "

                                   சாந்தான் ஒரு அலுமினிய சட்டியில்  சவுக்காரம்  கரைச்சு  அதை பிரசில் தோச்சு  எடுத்து  முகம் முழுவதும் அடிச்சுப்போட்டு, சவரக்  கத்தியை  பெல்டில நாலு  இழுவை  மேல் வாக்கிலும்  பக்க  வாட்டிலும்  இழுத்துப்போட்டு அதை உள்ளங்கை சூரிய மேட்டில  வைச்சு சாணை பார்த்திட்டு , கேசட்டில " அடி  ஆத்தாடி  மனசொன்று ரெக்கை  கட்டிப்  பறக்குது  சரிதான..."   என்ற  பாட்டை  போட்டுடு கன்னம்  எல்லாம்  வழிசுக்  கழுத்துக்குக்  கிட்ட கத்தியைக்  கொண்டுவந்து  வைச்சிட்டு 

                                       " டேய்  மச்சான்,,,நான்  எடுத்த  முடிவு  சரியா  என்று  இப்பதான்  ஜோசிக்கிறன்  மச்சான் "

                                     "   அடப்பாவி  சவரக்  கத்தியை என்னோட   கழுத்தில சங்குக்கு  நடுவில  வைச்சுக்கொண்டு  இதைக்  கேட்கிறாயே "

                                        "  டேய் இல்லை   மச்சான்,,,நான்  எடுத்த  முடிவு  சரியா  என்று  இப்பதான் உண்மையாவே  ஜோசிக்கிறன்  மச்சான் "

                                    "   டேய்  விளையாடாதே,,,நீ  என்னடா  முடிவு  எடுத்தாய்..அதை  சொல்லு "

                                    சாந்தன்  மிச்சம்  சொல்லத்  தொடங்க  கேசட் பிளேயரில் " கண்மணி  நில்லு  காரணம்  சொல்லு.  காதல்  கிளியே ....ஏழையின் காதலை  ஏன்  மிதித்தாய்.......  " என்ற  பாடல்  பாடத்  தொடங்கி  விட்டது ...
.
.
...........தொடரும் .......

.