Thursday, 22 February 2018

அஸ்தமிப்பொழுதுகளில் .....

அண்மைக்காலமாகக் நவீன கவிதைகளை அல்லது புதுக்கவிதைகளை எடுத்து வைத்து பிரிச்சு மேஞ்சு விவாதம் செய்பவர்கள் இரண்டு முக்கிய சொல்லாடலைப் பயன்படுத்திகிறார்கள். நீங்களும் கவனித்து இருப்பிங்க ஒன்று - மீமொழி [meta language] என்ற நவீன மொழியியல் . அடுத்தது -
மொழியின்  குறியீட்டு ஒழுங்கு [symbolic order].  அம்மாவான ரெண்டுமே சத்தியமா எனக்கு விளங்கவில்லை. 

                                                                       இது குழப்பத்துக்குப் போதாது என்பது போல  இரண்டாம் கட்ட குறியீட்டு ஒழுங்கு என்ற( [secondary symbolic order].  மொழிக்குள் செயல்படும் இன்னொரு மொழி என்று ஒன்றும் அதிகம் சொல்கிறார்கள் . இவற்றை ஒரு மொழியில் சரியாகக் வார்த்தைகளில் கொண்டுவந்து நிறுத்தக்கூடியவர்களால் மட்டுமே கவிதை மொழியில் கை வைக்கும் உரிமை இருக்கு என்பது போல அழிச்சாட்டியம் செய்கிறார்கள். 

                                                                           இதெல்லாம் விளங்காமல்தான் நானே எழுதிக்கொண்டு இருக்கிறேன். என் புரிதல் அலைவரிசை வாசிக்கும் சிலரோடு ஒத்துப்போனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது பரஸ்பரம்  புரியும்படியான ஒரு ஆத்ம நேசத்தை உருவாக்கும் என்றால் அதுவே எனக்குப் போதும் . 

                                                              வழக்கம்போல முகநூலில்  எழுதிய    என்னுடைய  சின்னக் கவிதை போன்ற பதிவுகளை  வலைப்பூங்காவில் தூவிவிட்டு   உங்களோடு இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறேன் !ஒரு கண்
அசைவில்
எல்லாச் சம்மதங்களும்,
பள்ளிச் சீருடையில் 
நான்,
வெள்ளைச் சீருடையில்
நீ,

இதற்குப் பிறகு
இன்றைய வரையில்
என்னையே
ஒப்புக்கொடுக்கும் படியாக
எதுவுமே நடந்ததில்லை.!

..................................................................
ஒரு வீழ்ச்சியை குறிக்க
அமைப்பை 
விரிவாக்கிக்கொண்டே செல்கிற
கடல்
அடக்கமுடியாமல்
விம்மிக்   குமுறிக்கொண்டிருக்கு
கரைதேடிவந்து
சலிக்காமல்
காலத்தடங்களைத்
தேடிப்பிடித்து  அழிக்குது
அலைகள் !

.......................................................


எனக்கும்தான் 
இந்தவிதமான இயல்பு 
பிடிக்கவில்லை,
அச்சுறுத்தும் 
நேர்த்தியான அமைதி, 
பளிங்குபோல 
நழுவும் பொழுதுகள்,   
இணைத்துப் பொருத்தி 
மிச்சத்தை 
அர்த்தப்படுத்திவிடுகிறது 
காலம் !

..........................................................


கடல்
எல்லாத்தையும்
விழுங்கிக்கொண்டிருந்த
மிகப்பெரிய வானத்தில்
உனக்கு
பிடிவாதம் தரும் 
பக்கபலமாகப் 
பறவைகள்பாடுவது
போதுமாய் இருந்தது !

...............................................................

ஒரேயொரு மெளனத்தை
மொழிபெயர்க்க
நீ 
வள வள என்று
பேசிமுடித்த போதும்
என் 
குதிக் கால்களை
உரசிக்கொண்டு
நிலக்கடலை  விக்கும்
சிறுவனின் இயலாமையில் 
ஓட்டிக்கொன்டிருந்தேன்.

...................................................................


உன் நேரிய
வளைவுகள்
அதன் நுழைவுகள்
ஈரமான போது
பின் புறமே
அதிசயமாக இருந்தது
கொஞ்சச் தண்ணி விட்டு
இறுக்கிப் பிழிந்த வாசத்தில்
நான் தேடிய 
நெருக்க உறவு
விகசித்துவிட
கோபத்தைக் காட்டவும் 
கோபத்தை குறைக்கவும்.
இதுவல்ல நேரமடி !

...................................................................


தொண்டைக்குழியில் 
சேமித்து வைத்த 
விசமேறிய
சொற்களுக்குச் 
சாவு வருகுதில்லை
அவை
கண்ணின் 
இடுக்குகளில் சிக்கியிருக்கும் 
கண்ணீரின் 
ஊற்றை கிழித்து 
கொப்பளித்துக்கொண்டிருக்கு !

...................................................................


அவ்வளவு 
கொடுமை தர
விரைவான வலியில்லாத
மரணம் வரப்போகும்
கடைசிக் காலத்துக்குப்
போதிமரம் 
நட்டு வைக்கிறேனென்று
சாமர்த்தியமாகவே 
நடித்துக்கொண்டிருக்கிறேன் !

.................................................................


உன்
ஆதிக்கத்தை 
நிலைநாட்டும் குறியீடு
உன்னிருப்பு 
ஞான உதயத்தைத்
தேடிக் கடப்பதில்
நீ மட்டும் 
விதிவிலக்கல்ல என்றுதான் 
எல்லாமே முடிந்துவிடுகிறது !

..................................................................


பழிவாங்கும்
உன் மவுனமும்
விழித்துப் பார்த்திருந்து
இதயத்தை
இறுக்கிப்பிடித்து வைத்திருக்கு 
என் 
அறியாமையை விழுத்தி 
பாதங்களில் மண்டியிட்ட
மன்னிப்பு 
உன் 
மனதை உடைத்திருக்கலாம்.

..................................................................


நேற்றுத்
தலைக்கேறிய பித்தம்
ஆட்டம்போட்டு
நேற்றிரவே இறங்கிவிட்டது,
மனம் வேறு
அதன் தத்துவம் புரியாத
உடம்பு வேரென்பதையே
ஒரு 
மனவெளிப் பொழுதின் 
விவாத சுழற்சிக்குள்
நிறுவித்தள்ளிவிட்டாய் !

.....................................................................

நீதான்டி 
எப்பவுமே வேணுமென்றேன்
அதுக்காக
வாழ்நாள் முழுவதையும்
சமாதானமாக
ஒதுக்கியே வைத்து விடு
அதி முக்கியமாக
அற்பமான
விரசங்களுக்காய்
அன்பின் பலத்தை
ஒருநாளும்
அசைத்துப் பார்க்காதே என்கிறது 

அனுபவப்பட்ட ஆத்மா.!

......................................................................

பைன்மரங்களில் 
இலைமேலேறியிருக்கும் 
பனிப்பூக்களை 
உதறி விழுதிக்கொண்டு , 
வில்லோ மரக் 
கிளைகளிப் பதுங்கும்
பஞ்சுகளை விசிறிக்கொண்டு,
வரும் வழியில்
காதுமடல் நுனியில்
என்னையும்
கொஞ்சி விசாரிக்குது
குளிர் காற்று !


..............................................................

எடுத்து வைக்கும்
பாதம் தொடுவது
பெரும்பரப்பா ?
ஆழ் சகதியா?
நீண்ட பள்ளமா ?
தெரியவே தெரியாது. !
வழியற்ற வழியில்
எனக்குள் விழித்த
எல்லாவற்றின் குறிக்கோளையும்
தெளிவாய் அறிந்து வைத்திருக்கு
உறைபனிப்பாதை !


.................................................................

வெண்பனியின்
சுருதிமேவும்
மவுன மோகனம்
தேவலோக மாக்கோலம் !
அவற்றை 
அழித்து விளையாடும்
காற்றின்
கீர்த்தனப் பிரியங்கள்
ஆத்மாவைப்
பொறுத்தவரையில்
தினமொரு
நித்திய நர்த்தனங்கள் .!


..................................................................

ஒரு
கதகதப்பான கோப்பிக்கடை,
கிள்ளிப் பார்த்துவிட்டு
ஓய்வெடுக்கும்
திவ்வியவாசனைக் குளிர், 
சந்தர்பங்களைச்
சுவாசித்துக்கொண்டு
கதைபேசும்
உன் சூடான உதடுகள் !
மூச்சுக் காற்றில்
அடையாளங்களேற்றும் .
பிராணசத்திய இங்கிதம் !
இதுக்குப்பிறகும்
முத்தமிட்டு
உறிஞ்சத்தான் வேண்டுமாடி ?


...............................................................

நெஞ்சலைகளை
அமிழ்ந்த விடுவதில்லை
எண்ணங்களோடு .
ஏரிக்கரையெல்லாம்
கை வீசி நடந்த 
உள்ளங்கை !
உறைபோட்டு மூடிவைத்த
உறைபனியின்
இறுக்கிய பிடியில்
நழுவவிடாத ஏதோவொன்றை
நேராகவே
மனவெளியில் பதிந்துவிடுகிறது !.


.....................................................................

வழியெங்கும் வழுக்குது
வயதுகளில்
வித்தியாசமில்லாத
வெள்ளை மனிதர்கள்
சறுக்குவதுக்குத் 
தயார்நிலை ஆகிறார்கள்,
நான்
ஒதுங்கி நிக்கிறேன்,
காட்சியில் பிழை இல்லை !
என்னிடம்தான்
வீரதீரக்
கனவுகள் இல்லையே.....!


.............................................................

இசை மட்டும்
முடிவதுக்குள்
என்னை
ஏதோ ஒரு ராகத்தில்
இணைத்து விட்டுப்போவதை 
நிறுத்துவதேயில்லை ,
சில
அபஸ்சுவரத்தில்
விலத்தி நின்றாலும்
மீட்டுவதை
இன்றுவரையில்
அதுவும் நிறுத்தவில்லை !


.......................................................

தூங்கிவழியும் முகம்
என்னோடு
நடந்து கடக்கும் வார்த்தைகள் ,
மிகத்தனிப்பட
தனிமைத்துணையை 
இழுத்துக்கொள்ளும்
திசையறியாத அலைச்சல்
அதுதான்
எப்போதோ மறைத்துவைக்கப்பட்ட
ஆத்மாவின் ஆழத்தில்
சடாரென திறந்துகொள்ளும்
பழைய அனுபவம் !


......................................................

உலக ஊர்வலதில்
அபூர்வமான காட்சிகள்
நீங்களும்
அதையேதான் ,
நேரடியாகப் பார்க்கிறீர்கள், 
எனக்கென
ஆவணப்படுத்தப்பட்ட மாதிரி
உணர்கின்றதால்
நானதை வேறுவிதமாக்குகிறேன்,
நீங்கள்
போகவிரும்பாத பாதையில்
உங்களுக்காகவே
நான் பயணிப்பதால்
என்னையும் கட்பனை என்கிறீர்கள்


......................................................................

கனவின் ஆரம்பம்
சென்ற நூற்றாண்டின்
தீர்க்கதரிசியொருவர்.
தற்செயலாகவே சந்தித்தேன்
முடிவிலாவது 
அலாதியாக இருக்கலாமென்று
அவரைக்
கடவுளோடு
தொடர்புறுத்திப் பார்த்தேன் ,
அவரோ
ஆதிமனிதன் என்றார்.
மேட்கொண்டு
விவாதிக்க விடிந்துவிட்டது
உண்மையிலேயே
அதைத்தான் தாங்கமுடியவில்லை !


.....................................................................

சவால்களைக்
காத்திருத்தலிடம்
கொடுத்துவிட்டதாக
நினைக்கையில்
அலைகள் போலவே 
கரைகளை நனைத்துவிட்டு
நீள்கின்றன
பகற்பொழுதுகள் !


......................................................

ஒரு
தரையிறக்கத்துக்காய்க்
காத்திருக்கிறேன்
மாற்றங்களுக்காகத்
தாமதத்தை உருவாக்கும் 
அனுபவத்தில்
பழைய பாதைகள்
எங்கெல்லாம் சிதிலமானதோ
அவற்றில்
சில திருப்பங்கள்
செப்பனிடப்படலாம் !


.............................................................

ரட்சிக்கும்
வரவேட்புக் கைகுலுக்கல்
பின்னர்
நீண்ட உரையாடல்
அதன்பின்னர் 
மிகநீண்ட விளக்கங்கள்
சரிசெய்யும்
உத்தேசங்களை எதிர்பார்க்கக்
கிடைத்தது
மிகக்குறுக்கிய வார்த்தையில்
சலிப்பான வாக்குறுதி !


............................................................

நீ
கேட்ட எல்லாக் கேள்விகளிலும்
சத்தியமா உனக்கு
சந்தேகமே இருந்ததில்லை ,
நான் 
எடுத்துவிட்ட
எல்லாப் பதில்களிலும்
உளமறிய என்னோட
உண்மைகள் இருந்ததில்லை!


...................................................................

நம்பிக்கையின்
அடிப்படையிலேதான்
ஒரேயொரு
தனித்த வழிப்பாதை ,
நாட்களோடு 
சரிக்குச்சமன் வாதாடி
குடுமிபிடிச்சு சண்டைபிடிக்கும்
அஸ்தமிப் பொழுதுகளில்
எனக்குரிய
தற்காலிக முகவரி
நிரந்தரமாக அழிந்தும்விடலாம் !


...............................................................

பிரட்டிக் காட்டி
திருப்தி கொள்ளமுடியாத
அலைகள் ,
நிஜத்தைவிட்டவுடன்
மயக்கம் போலவே 
மேலதிக
அசைவுகளையும் தொலைத்துவிட்டது
பனிவாடை
உள்ளுறைந்துபோயுள்ள
ஏரிக்கரை !


..................................................

ஒரே ஒரு விஷயம் . 
பெரும்பாலும்  ஆழ்ந்து கவனித்த 
நமக்குத்தான் 
உணரும் போதும் 
உறக்கத்தில் வருந்துகிற
மனநிலை
குழந்தை முகங்கள்
பொய் சொல்வதில்லை என்பதை
ஏற்றுக்கொள்ளுங்கள்!

..............................................................நிலம்
நீண்ட பருவங்களில்
மழைகாகக் காத்திருந்த போது
வேரோடித் தேடி எடுத்த
வரிகளில்
நேராக எழுதிவிடக் காத்திருந்த
கவிதை
உறங்க மறுத்து
அபசகுனங்களை
அறுத்துக் கொண்டு
விதை
முளையாகி விழிப்பது..!