Wednesday, 11 July 2018

மேகங்களின் கருச்சிதைவு.!நம்பிக்கைகளிலிருந்த 
சுருதியிறங்கி
நடைபாதையில்
கலந்து விட்ட நகரத்தில்
புதிய குழந்தையின் 
அரவணைப்பில்
பால் நனைந்தகொண்டிருக்கும்
பிஞ்சு நெஞ்சு

ஒளி மங்கிய
மிரட்சியில்
பஞ்சடைந்த பார்வையில்
கைகளில்
வளையமாகியே
நாட்டின் எல்லைகளாகிய
பாசிமணி மாலைகளைக்
கவனிக்க யாருக்குமே நேரமில்லை

இரக்கமான கண்களை
விலத்த முடியாமல்
நான் போட்ட
இருபது குரோனர்
சில்லறைகள்
தெறிக்க முதலே
புரியாத தாய்மொழியில்
சொல்லப்படும் நன்றி

சொல்ல முடியாத ஆயிரம்
வார்த்தைகளை அவளே
அனுபவிக்க
நிமிடத்தில் தப்பிக்க வழிதேடினாலும்
இந்தக் குழந்தை
எங்கள் எல்லோரின் பழி

பிடிவாதத்தைப்
பிடி கொடுக்காமல்
தோற்றத்தில்
நிவர்த்தி செய்கிற
என்னைப்போன்ற ஒருவளின்
நாடிழந்த
நாடோடிகளின்
நாட்டுப்புற வாசம்
என் மனச்சாட்சியையும் நடுத்தெருவில்
இழுத்துவிட்டது .
.

01.07.15
ஒரு பொழுதில்
காலடிகளின்
அவசரங்களை 
நெருக்கியடித்து
நகரங்களை 
நகர்த்தி வைக்கிற
நிலத்தடி மெட்ரோ
மறுபொழுதில்
வெறுமையாகிவிடுகிறது

சத்தங்களை
ஆக்ரமித்துக்கொண்டு
எல்லா நிறங்களையும்
பூசிக் கொண்ட
சுவரோவியங்களை
வேகமாகக் கடப்பதனால்
வெண்மையாக
தெரிகிறது நடைபாதை

முன்னுக்குப் பின்
முட்டி மோதும்
மனிதர்களின்
அனைத்துமான வாசத்தில்
அலைபாயும் மனம்
ஆயிரத்தோரு
இடங்களுக்கு
போய் வருகிறது

இறங்குவதும்
ஏறுவதும்
நேர்த்தியாக
அமையமுடியாத
சாத்தியமுள்ள
நிமிடங்களிலும்
பதட்டத்தை
முழ்கடித்து விடுகிறது.
வேலை தரும் போதை!
.
.////ஹென்றிக் இப்சன் நசினல் தியட்டர் நிலத்தடி மெட்ரோ ஸ்டேசன்..எப்பவுமே  அரக்கப் பரக்கப் இறங்கிப் போகும் ஸ்டேஷன் ///
அறிவியல் 
அருவருப்பாக 
வீங்கி வளர்ந்து 
இயற்கையை 
சுவாரசியமில்லாமல் 
சிக்கலாக்கிய
அவசர உலகத்தில்
முகவரியைத்
தவறவிட்டு வழிதவறிய
ஆட்டுக்குட்டியை
வேதாகமத்தில்
கர்த்தர் கண்டு பிடித்த
கதையில்
நீருபிக்கப்பட்ட நீதியை
முகத்தைத்
தடவக் கொடுத்த முத்தத்தில்
குழந்தைகள்
அறிந்து கொள்வதில்
முந்திக்கொள்கிறார்கள்.
.
.28.06.15வெளிக்கோடையில்
நிழல்க்
காளான் குடைகள்
வெள்ளி உறைபனிக்கு
இறுக்கி மூடிய 

ஜன்னல்கள்

அந்தி மாலை
சூடான கோப்பியோடு
தொடங்கிய
இரவுப் பாடல்
நுரை தள்ளும்
டேனிஷ் டுர்பெர்க் பியரோடு
நாசித்துவாரத்தில்
ஒட்டிய நடு இரவு

இன்றைக்கும்
வயதாவதைத்
தள்ளிப் போட்ட
மொத்தமான கதவுகள்
நடைபாதையைக் கடக்க
ஏதோ ஒன்றை
கனக்கவைத்து
வாசல்த் தடத்தில்  சுவடுகள்

மங்கலான
வெறி மயக்கமறிந்து ,
போக விரும்பியவர்கள்
வர விரும்பாத
ரம்மியமான கனவுக் காலம்

டென்மார்க் மனதினை
ஒஸ்லோவில் திறந்து
இதயத்தில் இடம்
நிரந்தரமாகப்
பதியவைத்த
* கொஹ்ப்பன்ஹெகன்.*
.
.28.06.15
* ஒஸ்லோவில் உள்ள ஒரு டேனிஷ் கிளாசிகல் ஸ்டைலில் உள்ள டென்மார்க் பியர் விற்கும் சின்ன தீம் பப் கொஹ்ப்பன்ஹெகன்.. முந்தி ஒரு காலத்தில் மார்டின்,ஆமுண்டு ,ரொபேர்ட் ,சிசிலியா, இங்கிலிங், மரியா ,இவர்களோடு சிவைன்ஐயும் சந்திக்குமிடம். சிவைன் சென்ற வருடம் மேலே போயிட்டார். மற்றவர்கள் இப்ப அதிகம் சந்திபதில்லை.*


தெற்கில்
தென்றல்
அலட்சியமாக
அலைந்துகொண்டிக்க
வடக்கில் 

வாழ்க்கை கொடுத்த
வாடை
வறண்டுபோயிருந்தது...

மேற்கில்
மோதிரம் போட்ட
கைகள்
உலாசமாக உலாத்த
கிழக்கில்
தாலி கட்டிய
தாம்பத்தியம்
தனியாகப் பிரிந்து போனது..

அவமான இருட்டில்
அடிவயிற்றை
மேல் வானம்
தன் கைகளில்
பொத்திப்பிடிக்க
மின்னல்
சிக்னல் கொடுத்தது..

கீழ்வானம்
வலியோடு
வெளிச்சமாக
அடை மழை போல
வழிந்தோடி முடிந்தது
மேகங்களின் கருச்சிதைவு.
.
.29.06.15