Wednesday, 1 August 2018

ஜீவனைத் தீண்டும் கண்களில்...

வளைந்து நெளிந்து 
நகர்ந்துகொள்ளத் தடுமாறும் 
பார ஊர்திகள் ! 
முடிவேயற்ற 
மூச்சு ஏற்றத்தில் 
நீண்ட நெடுஞ்சாலை !
நடைபாதையில்
படுத்திருக்கும்
பளிங்குச் சலவைக்கற்கள் !
கோர்வையாக நெய்யப்படும்
நேர்க்கோட்டில்
தடுமாற்றமில்லாத
எறும்புகள்!

*
வெளியேறவேண்டிய 
சரியான தருணம் 
திகைப்பில் தாமதிக்குது,
இனி 
நடனமாடியபடியே 
சுழன்றடிக்க
இடைவெளிகளுமில்லை !
பலவிதத்திலும்
தனித்து நிற்கிறது
முடிவின்மையின் காத்திருப்பு !
ஆயாசமானவைகளைத்
தவிர்த்த பிறகும்
எதற்காக
மவுனமாகவிருக்குது
நேரம்?*
மழை பெய்யும் நாட்களில் 
மரணம் 
நெஞ்சில் அடைப்பது போலிருக்கும்
எதிர்காலத்தைத் 
தெளிவுபடுத்தமுடியாமல் 
மவுனித்திருப்பேன் !
வெய்யில் நேரங்களில்
மீதமான வாழ்க்கை
வெளியே அழைப்பதுபோலிருக்கும்
சமீபிக்கின்ற ஓசைகளிலிருந்து
இறந்தகாலத்தை
வித்தியாசப்படுத்தத் தெரியாமல்
நடந்துகொண்டிருப்பேன் !
இரவுகள்
ஆழந்த அமைதியோடு
முத்தமிட்டுக்கொள்ள
மனசெல்லாம்
மெல்லத் திரும்பிவிடுகிறது
தற்போதைய நிலவரத்துக்குள் !

*

காலம் மங்கிய 
கறுப்பு வெள்ளைப் 
புகைப்படங்கள் !
நிதானமாகத்தான் 
பார்க்கவேண்டியிருந்தது !
ஒவ்வொன்றிலும்
வாழ்ந்துபோன மனிதர்களைப்
பாரமாக்குகின்றது
தலைமுறைத் திசைமாற்றங்கள் !
நிறங்களில் இல்லாத
சந்தோஷ அலைகளை
நிரம்பியிருந்தது
அவர்களின் முகங்களில் !

*

தேவாலயத்துக்கு 
மிக அண்மையிலிருந்தது 
சவுக்காலை ! 
தங்களில் 
யாரோவொருவரைப் புதைத்துவிட்டு 
மவுனத்தை வெளியேற்றும்
வயதான மனிதர்கள் !
சற்றுநேரம்
நானும் இறந்து போய்விட்டேன் !
பிறகு
புரிதலற்ற இடைவெளியைக் கடந்தபடி
கைகளை உதறிக்கொள்கிறேன் !
இப்போது
ஒவ்வொருவரும் அவதியாக
வாழ்வைத் துரத்த வெளிக்கிடுகிறார்கள் !
எனக்குரியவைகளைப் பின்தொடந்தபடி
நானும்தான் !
உயிரோடு
விலகிநின்று பார்த்ததனால்
ஒரு சிரிப்போடு
சமாளிக்கமுடிந்தது !*

வெய்யிலில் 
வேடிக்கைபார்க்கவும் 
மனதில்லை !
எங்கேயோ 
அனர்த்தங்கள் 
நிகழவாய்ப்பிருக்கின்றது போல
தசைகள் முறுக்கிக்கொள்கின்றன !
இந்த வலி
தனிப்பட்ட துயரம்,
உலகத்தை அளித்துச் செல்கிற
பின் உளைவு !
இது
நிரந்தரமாகவே
சஞ்சரிக்கும்
நேரங்களிளெல்லாம்
கைவிடப்பட்ட உணர்வு !

*
மிகப்பெரிய
வேடந்தாங்கல் 
நீர்ப்பரப்பை அளவெடுத்தபடி ,
கோடைக் காற்றோடு 
சிறகசைந்தபடியே 
கரணமடித்து வந்திறங்கியவுடன்
மூச்சு முட்டி நிற்கின்றன
திசைப் பறவைகள் ,
இந்த வெற்றிடம்
நீண்ட பறத்தலில்
தற்காலிகமானதுதான் !
இப்படியான
இடங்களுக்குள்
நானெப்போதும்
தனியனாகவே நுழைய விரும்புகிறேன்.!

*
பழைய வீதி
நேற்றுப்போட்ட நடைபாதை 
புத்தம்புதிய வீடுகள்
நவீனமான நெருக்குதல் 
நான் 
முகத்தைத் துடைத்து
என்னோடும்
வெய்யிலோடும் நடந்த
உன்னோட காலடிகளைத்
தேடுகிறேன் !
அதே
மணிப்புறாக்கள் பறக்கின்றன
அதே
குடை விரித்த மரங்களிலிருந்து !
இப்போது
எல்லாமே பழையதாய் மாறுகிறது!

*

" அவள் எங்கேடா " மச்சான் ?
அதே வழக்கமான புன்னகையோடு 
நெடுநாளைய நண்பன் 
ஆரம்பிக்கின்றான் !
நினைவுகளை 
உறிஞ்ச ஆரம்பிக்கிற
வாசனைகளெல்லாம்
மிதக்கத்தொடங்குகிறன !
" எங்கேயென்று
தெரியாதடா மச்சான் " என்கிறேன் !
அவளுக்கேயுரிய
ஜீவனைத் தீண்டும் கண்களில்
அதே மின்னொளி ஆச்சரியம் !
சட்டென்று
நிசப்த மனசாட்சி
நீண்ட இரைச்சலாகியது !
எதற்காகப் பொய் சொன்னேன் ?
மவுனத்துக்குள்
நுழைந்துகொள்ளும் மனதுக்குள்
நினைவுகள்
உறிஞ்ச ஆரம்பிக்கிற நேரமமெல்லாம்
அவள் இங்கேதானேயிருக்கிறாள் !

*

உஷ்ணமாகும்
வருடத்தின்
இந்த மாதத்துக்கு
இது
மிகவும்குளிர்தான் , 

வடமேற்கே
நீல மலைகளில்
இன்னும் பனிபடர்ந்திருக்கிறது,
வெடித்தபடி
நொறுங்கிக்கொண்டிருக்கிற
அசையா நதியின்
சரிவான கரையில்
சறுக்கியபடி கீழிறங்குது
உறை பாளங்கள் ,
தேவையற்ற சுமையென
நினைத்திருக்கலாம்
ஒரு
மஞ்சள்ப் போர்வையை
போர்த்திவிட்டு நகருது
வடதுருவ சூரியன் !

 

*தீவிரமாகத் தேடிப்பார்த்து
எல்லைகள்
கிழிக்கப்படுகின்ற
இடத்தில்
தூக்கத்தைக் கெடுக்கிறதுபோல 

அந்தக் கனவு !
என்னைத்தவிர
யாரெல்லாருமோ
அந்தரங்கமான
பங்கெடுப்புக்களில்
வந்துவந்து போனார்கள் !
என்னையறியாமல்
நுழைந்தபோதும்
திருப்திப்பட்டுக்கொள்ள
ஏதுமிருக்கவில்லை !
சில சமயம்
ஒரு கனவென்பது
எனக்குரியதென்பதையும்
தாண்டிப்போய்விடுகிறது.!
*
குறுகலான 
சந்து முடுக்கில் 
இருட்டுப் பிரவேசம் ! ,
சட்டென்று 
உரையாடல் துவங்கும் போதே 

ஒருமையில் தான்
ஆரம்பித்துவிடுகிறது!
நொடிப்பொழுதில்
அடையாளம் கண்டு
விசாரிக்க வருகிறார்கள்!,
நான்
நானாகவேயிருக்கிறேன் !
இப்போதெல்லாம்
முன் போல்
கோபப்படமுடிவதில்லை.
என்னிடமிருந்து
மனம் அயர்ந்து விடுகிறது.1
இப்போது
நான் நிட்பதைக்
கணக்கிலெடுக்காமல்க்
கடந்துவிடுகிறார்கள் .!
வெளியேறிவிட
அந்த
விளிப்பு ஒன்றே
போதுமானதாயிருந்தது.


 

*


பின் மனசில் 
அலைக்கழிப்புக்கள்
மேல் அமிழ்த்தி 
ஓடிக்கொண்டேயிருக்கும் 
காட்சி ஞாபகம் ,

புரிதல்கள்
முற்றிலும் வேறாகவிருந்தாலும்
தினவாழ்க்கை
கொஞ்சமாய்
என்னவென்று தெரியாத
ஏதோ ஒன்றை
உறிஞ்சிக் கொண்டிருக்கிறது,
கண்

காணாமல்
அடிமனசில் ஒளித்து
அது
எப்போது வேண்டுமானாலும்
தீர்ந்து போகக் கூடும் !