Wednesday, 18 September 2019

மரணத்தின்நிழல் !

நெருக்கமான ரெண்டுவார இடைவெளியில் மூன்று அறிமுகமானவர்கள் அவர்களின் பயணப்பாதையில் இருந்து  அகாலமாகத்   தவறிப்போனார்கள் . மூன்று பேருமே நடுத்தரவயதுள்ளவர்கள் . மரணத்தோடு சமரசம் செய்துகொள்ளும் உத்தேசங்கள் எதுவுமில்லாத போது மரணம் சரியான தருணம் பார்த்து  அவர்களை விழுங்கிவிட்டது  ." மரணத்தின் நிழலில் " இந்த அவலமான   சாவின் மறைமுகமான  தாக்கத்தில் , பாதிப்பில் எழுதப்பட்டவைகள் .

கவிதைகளோடு அறிமுகமான திருமலை எம் ஏ ஷகி , உடல்நலமில்லாமல் இருந்தார். ஆனால் சடுதியாக பிரிந்துபோகும் நிலைமை இருக்கவில்லை.  ! சட்டென்று நூலறுந்து காற்றில் காணாமல்ப்போன பட்டம் போலிருந்தது அந்த அதிர்ச்சியின் வீச்சு  . 
                                                                                  
                                                              ஷகியின் ஆரம்பகாலக் கவிதைகள் அவருடைய வாழ்வின் வலி !எளிமையான கட்டமைப்பில்  அதிகம் படிமங்கள் போட்டுக் குழப்பாமல்  நிதர்சனமாக அதில் நிறையவே துன்பியல் இருந்தது.
                                              சஹியிடம் தனக்கென ஒரு பாணியில் இஸ்லாமியத் தமிழ் உரைநடை மொழியில்  ரசனையாகக்  கதை எழுதும் ஆளுமை நிறையவே இருந்தது . அதை தொடரும்படி எப்பவுமே ஊக்கப்படுத்துறது , அனால் சஹி அதில அதிகம் முனைப்புக்காட்டவில்லை !   
                                                                    
                                                    புற்றுநோயுடன் போராடித் தோற்றுப்போன   ஷகியின்  இறுதிக்கால கவிதைகள் தத்துவார்த்தமான வார்த்தைகளில் நிலையாமையின் பரிமாணத்தில் தேர்ந்தெடுத்த  ஏதோவொன்றை நிரூபிப்பதுபோல இருந்தன .

ஜீவகுமார் என்ற ஜீவா , ஆரம்பகாலத்தில் நோர்வேயில் இருந்தபோது நெருங்கிய பழக்கமான ஒருவன். சில மாதங்கள்  நானிருந்த வீட்டில் தங்குவதுக்கு  வாரதும் போறதுமாக  இருந்தான்  பியஸ்க்கோ என்ற பாரில் தண்ணி அடிப்பதும் ,பம்பலம் பகிடியும் ஆக ஒருகாலம் இருந்தது. 

                                                                          ஒஸ்லோ தமிழர்களின்  வீடுகளுக்குப்போய் சாந்தி பூசை, துடக்கு கழிவு  போன்ற    அய்யர் வேலையும் செய்வான். ஒரு முறை அவனுக்கு  உதவியாளராக நானும் போயிருக்கிறேன் .சமஸ்கிருத  மந்திரம் சொன்னதாக நினைவில்லை.  பூசை முடிய அந்தத் தமிழ் குடும்பம் தானமாகக் கொடுத்த விலை குறைந்த  வேஷ்ட்டியை தூக்கி காட்டி படுதூஷணத்தில அரைமணித்தியாலம் மந்திரம் சொன்னது நினைவிருக்கு !
                      
                                                                      ஜீவா அநியாயத்துக்கு ஒரு ஒரு உளறுவாயன் , அவனோட வாய் முன்னெடுக்கும்  அணுகுமுறை தான் அவனுக்கே எதிரி. எல்லோரோடும் வாயைக்கொடுத்து பிரச்சினையை வேண்டிக்கட்டுவது . அனால் நல்ல நேர்மையான மனதுள்ளவன், நோர்வேயில் இருந்து  யாழ்ப்பாணம் சென்றபோது அவனோட  ஊரான  கோண்டாவிலில் இறந்ததாக தகவல்கள். மரணம் மர்மம் போலவுமிருக்கு  !


மிக்கா, என்ற மீக்காயில் என்னை ஒத்த வயதுள்ள  சுவிடீஷ் நண்பன்  . ஸ்கர்ஹோலமன் என்ற நகரத்தில்  உள்ள வோர்பேரி மலையடிவாரத்தில்   அறிமுகமானவன்  வின்டர் காலத்தில் என் வாழ்வாதார  நிலைமை   மிகவும் நெருக்குவாரமாக இருந்தபோதில் நிறைய உதவி செய்தவன். 

                                                     சப்பாத்தில சக்கரம் போட்டு ஓடுவார்களே அதில  விண்ணன். மல்டிபரல்  தாவு செல் அடிச்சமாதிரி சும்மா கூவிக்கொண்டு பறப்பான் .ஒருநாள்தன்னும்  தட்பாதுகாப்புக்கு தலைக்கவச  ஹெல்மெட் போடவே மாட்டான் .அது ஏன்பா  நீ அதெல்லாம் போடுறதில்லை என்று  கேட்டால் " அதெல்லாம் எல்போட் போட்டு ஒடிப்பழகிற தவ்வல்கள் பயத்தில  பாவிக்கிறது  , நானெல்லாம் புரோபோசனல் லெவல் என்று சொல்லுவான்
                                                   " வாழ்க்கையில் எப்பவுமே ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள் " என்று பொஸிடிவாக அடைவஸ் செய்கிறேன் பேர்வழி என்று     எனக்கும் அதைப்போட்டு பாலன்ஸ் எல்லாம் பிடிக்கவைத்து ஓடப்பழக்கினான்  .வயதான என்னோட கால்கள் சும்மாவே எம் எஸ் பெர்னாண்டோ போல பைலா ஆடுவதால் அது எனக்கு ஒத்துவரவில்லை  . 

                                                       சப்பாத்தில சக்கரம் போட்டு ஒருநாள் ஓடியபோது அகாலமாக விழுந்து மண்டையை உடைத்து  அதீத இரத்தப் பெருக்கில் அந்த இடத்தில இருந்து தாமதமாகி ஆஸ்பத்திரிக்கு ஏறிப்பறிக்க  அடுத்தநாள்  மரணம்  !அவனுக்குரிய விதி அவனோடயே  சப்பாத்துச்சக்கர உருளியில் ஓடிவந்து ஒரு தருணம் பார்த்த இடத்தில அதுகுறித்த நேரத்தில்  சறுக்கியிருக்கு !!


                                                         
வாழ்க்கை  என்பது ஏதோவொன்று   நம்மை  விழுங்கக்  காத்திருக்கும்போது  அதன்  நெளிவு சுளிவுகளில் மாட்டிக்கொள்ளாமல்  உச்சிக்கொண்டு  சுழி ஓடுவது  போல  இருக்கும். இருந்தாலும்  அதன்  நல்ல  பக்கத்தில்  நல்ல  விசியங்களும்,  துன்பமான  பக்கங்களில்  விடைபெற்றுப்  போன   நினைவுகளும் சேர்ந்துகொண்டேயிருக்கிறது  .

                                                                                    நம்முடைய காலத்தில் நம்மோடு பயணிக்கும் ஒவ்வொருவரும் முன்னுக்குப் பின்னாக விடைபெற்றுப்போய்விடுகிறார்கள் . அந்த வெற்றிடம் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும் .  பலமுறை ஜோசிப்பது  வாழ்தல்  என்பதே  இருத்தலின்  இன்னொரு  பரிமாணம் என்றும்   . மரணம் அதன் இன்னொரு பரிமாணம் என்றும் . ! 


*
சிதிலமான கூட்டில்
அநாதரவாக
ஒரு பறவையின் சிறகு ,

எதற்கென்று தெரியாமல்
முகம்மோதி
ஈரப்படுத்தும் காற்று ,


எதிர்பாராமல்
நினைத்தபோக்கில் பெய்துவிட்டு
ஓய்ந்துபோகும் மழை ,


இருண்ட சாலையையோரம்
வீசப்படுக்கிடக்கும்
கரடிபொம்மை ,


சுமைதாங்கமுடியாமல்
வேரோடு சாய்ந்தபடியிருக்கும்
தனிமரம் ,


பாதையின் வளைவை
கண்வெட்டாமல் வெறித்துப்பார்த்கொண்டிருக்கும்
வயோதிபர் ,


தனித்தபடி சுரங்கள்
கீழ்ஸ்தாயியில் ஒலித்துக்கொண்டிருக்கும்
ஏதோவொரு பழையபாடல் ,


சந்தேக மையல் வீச்சுக்ளோடு
தலையைக்குனிந்தபடி
கடந்துபோகும் இளம்பெண் ,


ஒவ்வொன்றிலும்
ஏனோ தெரியவில்லை
இப்பெல்லாம் மரணத்தின்நிழல் !


*

இளம்சிவப்பில் சூரியன்
மழைக்குளிரும் காற்றில்லை
சில்லென்று
கோடையிலும் ஈரம்
கழுத்திலும் நெற்றியிலும் !

முட்டிபோட்டு
தண்ணி மொண்டு
முகம் துடைத்து
கண் மழங்க விழித்தபடி
வெறும் தொண்டை விழுங்கி
மனசுக்குள் சலிச்சு
தினம் பழகிய கோலம்
விடிகாலை !


*


எக்கச்சக்கமான புத்தகங்களால்
அடைசலாகிய அறை ,


வேதாந்தியைப் போல
நீண்ட வெள்ளைத் தாடியை
ஜோசிக்கும்போது நீவிவிடுக்கொண்டிருந்தார். 


நானோ பாதிரியாரிடம் பாவங்களை
ஒப்புக்கொடுப்பதுபோல
நாற்காலி விளிம்பில்
அதைரியத்தோடு உட்கார்ந்தவாக்கில்
மறுமை உலகம்பற்றிய
சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன் !


உள்ளுணர்வில்
கச்சிதமாகத் தெரிந்திருந்த ஏதோவொன்றில்
என் பார்வையைத்
தன் வெளிறிய நீலக் கண்களால்
சந்திக்கத் தயாராக இல்லாதவர் போல
மணித்துளிகள் மவுனித்திருந்தார். 


ஜன்னலுக்கு வெளியே
எதனாலோ
தூண்டப்பட்டு விழித்துக்கொண்ட
மெல்லிருட்டு நெருங்கிக்கொண்டிருந்தது !


என்ன சொல்லியும்
என்னை நம்பவைக்கமுடியாத போது
பதிவு செய்யப்பட்ட நிரூபணங்கள் ஏதுமில்லையென்றார்


உண்மையைச் சொன்னால்,
அவர் உண்மையைச் சொல்லவில்லை !


*

சன்னமான
இழைகளால் பின்னப்பட்டதுபோன்ற
நிலை பற்றிய தெரிவிப்புக்களில்
எப்போதுமே முரண்பாடு !


முதலாவது

அருவருப்பால் முகம்கோணி
உண்மையைச் சொல்லமுடியாமல்
கையில்பொத்தி வைத்திருக்கிறதுபோல
ஒரு எண்ணம்,
அல்லது எதிர்பார்ப்பு. 


முடிந்தவரை அதில்
ஏதும் அறியாததுபோல
பாவனை செய்வதில் தோற்றுவிடுகிறேன் !


இரண்டாவது
உங்களைப் பற்றி எத்தனை தெரிந்திருக்குமோ
அதே அளவு
என்னைப்பற்றியதுமான
தகவல் வெளிப்பட்டுவிட்டது போல
ஒரு அவநம்பிக்கை
அல்லது ஐயம் !


எனக்குத் தெரியும்
பணயம் வைக்கப்பட்டிருக்கின்ற
பரமரகசியங்களின் மதிப்பு அதிகமென்று! 


வாழ்க்கை என்னுமளவிலும்
கடினமான சூழல் ரெண்டிலுமே !


எப்படியோ
ரெண்டுமே நல்லதுக்கில்லை !


'

தூங்குமூஞ்சி சோம்பேறிகள் சேர்ந்திருந்து
தோற்றுப்போன குரலில்
அரக்கப்பரக்க பேசிக்கொண்டிருந்த சதுக்கத்தில்
சுவாரஸ்யமான ஒரு பாடலை
சத்தமில்லாமல் காற்றில்தேடிக்கொண்டிருந்தேன் !


வெய்யில் மாலைநேரம்
பரபரத்துபடி வேகமாகக் கடந்ததுகொண்டிருந்தது !


என் முணுமுணுப்பு 

கெக்கலிப்புப்போலிருந்திருக்கவேண்டும்
உரையாடலை நிறுத்தி
சற்று மவுனமாயிருந்தனர் சோம்புகள் !


மிரட்சிகளேதுமில்லாத சூழ்நிலையின்
இறுக்கத்தைத் மேலும் தளர்த்துவதுபோல
மரங்களின் இலைகள்
தமக்குள் பாடிக்கொள்ளும் மென்சத்தம் கேட்கிறது..


சிக்கலான நேரங்களில்,
சிக்கலான இடங்களில்
சில நேரம் மிகச் சிக்கலான பாடலொன்றின்
மெட்டுக்குள் அமிழ்ந்துபோவதும்
அவசியமாகத்தான் தோன்றுகிறது.!!!


'
சாதாரண நாட்களில்
எதன்மீதும் கோபமில்லை. 


எப்போது நிலைதடுமாறுமென்று
எப்போதுமே கேட்டதில்லை. 


சம்பவங்கள் அனைத்துமே

காலஅனுசரிப்பில் அமைக்கப்பட்டவைதானே. 


கடவுளுக்கே தெரியும்
படைத்ததில்
எவ்வளவு குறைகள் இருக்கிறதென்று. 


அசாதாரணமாக
மரணவிறைப்பு நெருங்கும் சமயத்தில்
அடித்தொண்டையிலிருந்து எழும்பும் ஆதங்கம் போலவே
இரவுகளில் நான் மவுனித்திருக்கிறேன் 


இல்லையில்லை
இரவுகளில்த்தான் விழிப்புணர்விலிருக்கிறேன் 


இப்பொழுதெல்லாம்,
வெளிச்சமான பகல்கள்
என்னை கைவிடுவதற்கான காரணம் 


என் வெற்றியா ? 

அல்லது என் தோல்வியா ?
என்பது கூட சரியாகப் புலப்படுவதில்லை

*

மரநாற்காலியின் மேல் பகுதியை
விட்டு விலகிச் செல்கிறது
அந்நியர்களின் உரையாடல் !


மூன்றாவதாக என்காதுகளையும்
சேர்த்துக்கொள்கிறேன் !


அவளுக்கோ
பிறந்து இடத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது.
அந்த இடத்தை
காட்டிக் கொடுக்கும் முயற்சியில்
தன்னையும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறான்
அவன் !


இளமைக்காலம் பற்றிப்பகிர
தாய்மொழியில் 

அந்நியோன்னியமாகிவிடுகிறார்கள் 

இலக்கில்லாமல் நானோ
எங்கெல்லாமோ அலைந்துகொண்டிருந்தேன் !


எதிர்காலத் திட்டங்களைப் பேசிக்கொண்டு
எதையோ பார்த்துச் சிரித்தார்கள் !


புரிதலின் அடி நீரோட்டம்
அவர்களிருவருக்குமிடையே
அகப்பரப்பில் வலுவடையக்கூடும் !


என்னுடைய பின்புலத்தை
நானும் விசாரிக்கிறேன் எனக்குள் !


நெருக்கமாகப் பின்தொடருகிற
ஒரே இடத்தில்
இம்மூன்று விரட்டல்களும் நிகழ்கின்றன
என்பதைத் தவிர
நமக்கிடையே எந்த சம்பந்தமுமில்லை…!


*

பாதி உலகில்
கதகதப்பாக உட்கார்ந்துகொண்டு
மணித்தியாலங்கள்
உபதேசம் செய்கிறது
அவர்களுக்குச் சுலபமா இருக்கு....


மிகவும் தீனமாக
கச்சிதமான
நரம்புகளின் முடிவில்
கேலிக்குரிய விதமாக
வெகுதூரம் தள்ளி இருக்கறது
என் ஆத்மா !


‘நான்’ ஒன்றும் மகிழ்ச்சியாக இல்லை,
அப்படித்தானே?
மனதை வெறுமையாக்கி
வடியவிட்டு
பத்து நிமிடங்கள்தான் கடந்திருந்தன.


தெரிந்தவற்றிலிருந்து
அழித்த பின் எதை நினைவு வைத்திருப்பது ?


மறுபடியும் துவங்கி விட்டது.
என்னுடைய
மறுபாதி உலகம் !


*

இதுகாறும் கேட்டிராத
ஏதோ ஒன்று
விலா எலும்புக்கூட்டுக்குள் 


சிறைப்பட்டது மாதிரியே
சட்டென்று
நெஞ்சு நெருக்கும் வலி
இறுக்கிப்பிடித்தது !


இதயத்தமணித் துடிப்புகள்
வெற்றிடத்தில்
இட்டுக்கட்டப்பட்டவை போல ,,,


வேடிக்கையாகவிருந்த நிமிடத்தில்
எனக்கதில்
சிறிது கூடத் தொடர்பில்லை போலத்
தூரமாகிப்போய் நின்றேன் !


மனதின் மவுனம்
நியாயப்படுத்தியிருக்கிறது
உயிரோடிருத்தல்
ஓரங்க மேடையென்றும்
வாழ்ந்துகொண்டிருப்பது
அதிலொரு அபத்த நாடகமென்றும் ! 


அந்தப்
பிரமையை உடைத்து
கனவில் விழிக்கவும், 


மெதுவாக எழுந்து பார்க்கவும்
நடந்து கொண்டிருக்கவும் 


ஒரு பாவனையோடு
நிறுத்திக்கொள்கிறேன் !

Wednesday, 11 September 2019

வேறோர் குரல் !


நிலப்பரப்பை
மூழ்கடிக்கும்முன்னிரட்டு !
குரல்வளையத் திருகிக்கொண்டிருந்த
நெரிசலான இரைச்சல்
பூமியெங்கும் அதிர்ந்து கொண்டிருந்தது !...
பின்னணியில் மேகங்கள்
ஆவேசமாக முறுக்கிக்கொண்டிருந்தன !
இன்றளவும் உறவைத்தொடர்கிற
பூர்வஜென்ம பந்தம்போல
பெயர்தெரியாப் பறவை
காற்றில்க் கலைந்தபடியிருந்த
கடைசித் தருணங்களுக்கான காட்சிப்படிமத்தின்
இறுதிவரியை பாடிக்கொண்டிருந்தது !

*


பின்மாலை வெய்யில்
எப்ப வேண்டுமென்றாலும் கண்மூடலாம் போலிருந்தது !
அவ்வப்போது அலையெழுப்பி
போட்டுஉருட்டி விளையாடிக்கொண்டிருக்கும்
சாயங்கால மனதுக்குள்

சுள்ளென்று இழுத்துப்பிடிக்கும் சலிப்பு !
முகப்புத்தாழ்வாரத்தில்
குளிர்காற்றில் சுழன்றபடியிருந்தன
பழுத்து விழுந்த இலைகள் !
எப்பவும் இப்படித்தான் என்றில்லை . !
எல்லாரும் சொல்றமாதிரி
தலைமுழுகிவிட்டுப் போகமுடியுமா?
உள்ளங்கைகளை விரித்து வைத்து
அதிஷ்டரேகைகளை உறுப்பார்க்கும்போது
மையத்திலிருந்து ஓரத்திற்கு நகர்ந்துவிடுகிறது
ஒரு பிரியமான குரல்
அல்லது
ஒரு நேசமான நினைப்பு
அல்லது
ஒரு அன்பைப்பிழியும் சொல் !*


இடம் சரியாக இல்லையென்பதுபோல
வழக்கத்துக்குமாறாக
அசுமாத்தம் ஏதுமின்றிக்கிடந்தது
வழக்கமாகச் சலசலக்கும்
வளைசதுக்கம் ,

தூங்குமூஞ்சி மதுப்பிரியர்களும் இறந்தவர்கள்போல
நிசப்தத்தில் அமர்ந்திருந்தனர்.
காற்றசைந்தபோதும்
ஒருவர் கூட நகரவில்லை
வெய்யிலைத் தவிர
வேறு ஒரு ஓசையும் அங்கே இல்லை.
தப்பிச் செல்வதுக்கு
ஒரு வழியையும் பற்றி
அதிகம் ஜோசிக்கமுடியாத நேரம்
ஆகாயத்தில் மேகங்கள் இருந்தன,
குளிர் இன்னும் எழும்பவில்லை.
தூரத்தில்
சலனமாக பிரார்த்தனைக் குரல்
எல்லாம் அமைதியாகி விட்டது.*


இடிந்துபோன கடந்தகாலத்தை
அழிவிலிருந்து மீட்டெடுத்து ...

காட்சிப்படுத்தமுடியுமா ?
சந்தேகமாகவிருக்கிறது !!!!
அபத்த நாடகத்தின்
நடுப்பகுதியில் ஸ்தம்பித்துவிடுவது போலிருக்கு
நினைவுகளின்மீதேறிப் பயணிப்பது !
சராசரி மனநிலையிலும்
ஈர்ப்புக்களைக் குறையவிடுகுதில்லை
அடுத்தகட்டத்தை நிர்ணயிக்காத
எதிர்காலம் !
இயல்பாகப் பயணித்துக்கொண்டிருப்பது
உணர்ச்சிகரமாக மாறி
கேள்விகளால் துளைக்கும்போது
எரிச்சல் வருகிறது !
திணறிக்கொண்டிருக்கும் அன்றாடங்களில்
தேங்கிவிட்டது போலிருக்கும்
நாளையென்பது
கனவுலகத்துக்கு ஒருவழிப்பாதை !
அதில் மூழ்கித்திழைத்துச் சஞ்சரிக்கும்
மிகமிக மென்மையான
ஒவ்வொரு நொடிப்பொழுதுகளும்
மாறிக்கொண்டிருக்கும் நிகழ்காலத்திற்கு
தற்செயலாக அமைந்துவிட்ட
பொருத்தமான குறியீடு !*


நிலை மாற்றங்களும்
அதைத் தாங்கியடி நின்றுகொண்டிருக்கும் ...

நீண்ட பொழுதுகளும்
வெறுமனையே காலப்பிரமாணமில்லை !
நகர்த்தலிலும்
முழுமை பெறாது கசிந்து வழிகிறது
குளிர் உறிஞ்சும் அதிகாலை !
பெரிதாக வெளிப்படாவிட்டாலும்
கண்கொண்டு கூச்சமடைய வைக்கிறது
முன்கோடை வெயில் !
வாய்ப்புகள் அதிகமில்லாதபோதும்
வந்துபார்த்துவிட்டுப்போகிறது
காதலுணர்வு !
சொல்லமுடியாத தருணத்தில்
மதிப்பில்லாத அவமானங்கள் !
உயிர்ப்புடன் கடைசி வரையிலும்
எரிந்து கொண்டிருக்கிறது
நம்பிக்கை !
மெளனத்திற்கு எதிராக
ஓயாது உளறியபடியிருக்கிறது மனது !
அமைதியாய் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறது
நிழல்தந்து ஆத்மா!
ஆற்றாமையின் உள்ளக் குமுறலாக
நோகடிக்கும் அனுபவங்கள் !
அடி நீரோட்டமாய்க்
கால்களை நனைத்துக்கொண்டிருக்கிறது
புள்ளியாக நகரும் காமம் !
என
எழுதலிலும் , வீழ்தலிலும் வாழ்கின்றது
ஒரு மிகச் சாதாரண நாள் !*விம்மிவிம்மி
அவர்கள் கதைத்துக்கொண்டிருந்ததில்
இடிபாடுகளுக்குள் அகப்பட்ட
ஒரு பூனைக்குட்டியின் கதறல் இருந்தது !
அதைவிட அச்சுறுத்தியதென்னவென்றால்...
பறக்கும் பழக்கத்தை
பலவிதங்களில் பிரயாசைப்பட்டுக் கைவிடும்
ஒரு பறவையை
அது ஞாபகப்படுத்தியது !
அவர்களில் பலர் என்னைச்சுற்றிலுமிருந்தார்கள்
அவர்கள் நடுவில்
ஒரு வயதான தந்தையும்கூட இருந்தார் !
ஒடுங்கிப்போய்
மவுனமாகவிருந்தபோது
எந்த முயற்சியுமில்லாமல்
அவர்களிலிருந்து மாறுபட்ட ஒருவனாய்
என்னையறியமுடியவில்லை !
இறுகப் பிணைக்கப்பட்ட
இரும்புக்கதவை அகலத்திறப்பதுபோல
ஒருகாலத்தில் கொந்தளித்த
என் பழைய கோபமும்
நாளைக்கான
அவர்களின் தீர்க்கதரிசனமும் ஒன்றாவேயிருந்தது !*


நேற்று முழுவதும்
எந்தத் தலையீடும் இல்லாமல்
அழிவு நடனமாடிக்கொண்டு
மிச்சமின்றி
அதன்போக்கில் பொழிகிற ...

மழைநனைந்த மலர்கள்
ஒவ்வொன்றையுமே ஆர்வமாகவும்
உள்ளங்கையைத் தாடைக்கு அணைகொடுத்து
கவனித்துக்கொண்டு இருந்தேன்.
நேரத்தை
மையப்படுத்தும்
இன்றும் அப்படித்தான் !
துல்லியமா ஒரே மாதிரி
அதிதீவிர தகவமைப்புத் திறனில்
புத்தம் புதிதாக
ஏதோவொன்றை சொல்லிக்கொண்டிருந்தன.*


சத்தமாகச் சிரித்து
கதவடைத்ததுபோல மெல்லக் கதைத்த
அப்போதெல்லாம் உடலெங்கும்
மயிர்கால்கள் சில்லிட்டன !
அடிவயிற்றைப் பிசைந்துகொண்டு ...

சிலந்திவலையில் ஊர்கின்றன
ஒவ்வொரு உரையாடலும் !
நினைத்தால் தலைகுனிவாயிருக்கிறது
பழகிப்போன குரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாக பயனற்றுப்போய்விடுமா?
புரிதல்களை
ஒரு சமநிலைக்குக் கொண்டுவரும் தன்மையை
இழந்துபோவதால்
தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமா ?
அடிக்கடி
ஒழுங்கில் இருந்து ஒழுங்கின்மைக்குச் சென்று
விவாதப்போர் நடத்துகிறது மனது
யார்நீ ? என்கிறது ,
அந்தக்கேள்வியால் திடுக்கிட்டடு
உச்சத்தில் விழித்தெழுந்தபோது
அமைதிக்குள்ளிருந்து
வேறோர் குரல் எழுந்தது,!!*


தேவதைகள்
பூமியிலும் வாழ்ந்தார்கள் !
புள்ளிபுள்ளியாக மழைபெய்து
மாக்கோலத்தை அழிப்பதுபோல
நினைமனதை நெருடுகிற...

எந்தவிதமான சலனங்களுமின்றி
நடுநிசிகளிலும் நடுப்பகல்களிலும்
கண்டும்காணாமலும் கடந்துசென்றார்கள் !
அப்போதெல்லாம்
பழக்கப்பட்டுப்போன இயல்பாகவே
வாழ்க்கையும் வலம்வந்துகொண்டிருந்தது !
புராதனமான பாவனைபோலிருந்தாலும்
ஓரக்கண்களிலும்
வெட்கத்தை ஏந்தவைத்து
ரசனையுடன் புலம்பவைத்த அழகு !
பச்சைநிறப் பட்டுச்சேலை
முந்தானைக் கூந்தலை மூடிமறைத்தபோதும்
முகத்தை வசீகரித்து வைத்திருந்த
அந்தக் காலத்தோற்றம்
இப்போதெல்லாம் இல்லாமல்ப்போய்விட்டது !
நாளுக்கு நாள்
யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதுபோல
ஜதார்த்தங்களே
தலைமறைவாகிக்கொண்டிருக்கிறன !*

காது மந்தமாகி வெகுகாலம்
வாயசைவில் வார்த்தைகளைப் புரிந்துகொள்வார்
மேசையிலும் தரையிலும் புத்தகங்கள்
அவர்சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன்.
நீண்ட சிநேகிதமெல்லாமில்லை ...

ஒட்டுதல்கள் இல்லாத பரஸ்பர நடப்பு !
" புதிதாக ஒன்றும் எழுதமுடிவதில்லை
சொன்னது பலிக்கவில்லை " என்றார்
மரணத்துக்குள்
ஒரு காலடி எடுத்துவைத்ததுபோல
அறைமுழுவதும் வெள்ளை நிறம் !
நான் குறுக்கீடுகளின்றி அமைதியிலிருந்தேன் !,
வெறிச்சோடிக்கிடக்கும் அமைதியைக்
கலவரமாக்கிவிடுவதுபோல
"கல்லறைபோல ஏதாவது எழுதிவையுங்களேன் "
இதைத்தான் கேட்க நினைத்தேன்
முரண் நிகழ்வுகளையும்
காலத்தின் ஊஞ்சல் விளையாட்டையும்
நித்தியத்தில் ஆழ்த்துகிற
மௌனத்தை இடையூறு செய்வதுபோல
அந்த விண்ணப்பம் எஞ்சியிருந்தது
நினைக்கும்போதெல்லாம்
ஒருவித அலறல்போலவே
இப்பவுமிருக்கிறது !