Sunday, 28 January 2018

நாடோடியின் நடைபாதை !கரைகள் ஓய்வை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை..இலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை போலவே காலமென்பது நமது கண்ணுக்குமுன்னாலேயே தண்ணிகாட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பது. மாறிக்கொண்டேயிருக்கும் அதன் அபரிமிதமான அபத்தக் குழப்பங்களில் இருந்து பின்னோக்கிய ஒரு இறந்தகாலத்திட்க்குள் நுழைந்து பழைய நினைவுகளை அப்பப்பப்ப விடுவித்துகொள்வது அவ்வளவு இலகுவான சமாளிப்பு அல்ல. 

                                                                   என்னோட அவதானிப்பில் அன்று அப்படி இருந்தது இன்று இப்படி இருக்கே என்ற அங்கலாய்ப்பு ஏட்படுத்திய இரண்டு சம்பவங்களை சொல்கிறேன் !

                                                      ஸ்டோக்ஹோலாமில் இயறகை மூச்சு விட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ரம்மியமான இடங்களும் நிறயவேயிருக்கு  ! அந்தப்பக்கம் நெருக்கியடித்துக்கொண்டு ஆக்கிரமிக்கும் அவசர நகரம்,,நதியின் இந்தப்பக்கம் இப்பவும் கொஞ்சம் மரங்களும்,,இலைகளும், மனிதர்களும்.! 

                                                       அலைகளில் மிதக்கும் ரெஸ்ட்ரோரெண்டில் ஆசுவாசமாக அமர்ந்து மனம்விட்டுக் கதைபேசும் இரண்டு நண்பிகள் ..நடுவில் வசந்தகால நதி , வளைந்து நெளிந்து நாட்டியம் போட்டு , கூடவே எசப்பாடுப் பாடும் நாணல்களை அசைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்க பழக்கமான ஒரு பூங்காவை விசாரிக்கப் போனேன் 

                                                        போகிற பாதை நதியோடு நடந்து போனது.   ஒரு சைக்கிளோட்டி மரவாங்கில் சைக்கிளை சாத்திப்போட்டு   ஓய்வாக ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தான் ,,அவன்  வாசிக்க விரும்பும் புத்தகம் என்னவாக இருக்கும் ?ஜோசித்துக்கொண்டு போனேன்.  ,,நதியின் மெல்லிய சலனம் ,,காற்றில் லேசான  துருவக் குளிரின்  கிசுகிசுப்பு..ஆற்றுத் தண்ணி தொட்டு விளையாட சரியும் மரங்கள் . எனக்கு முன்னும் பின்னும்  இடைஞ்சல் இல்லாத மனிதர்கள் நடந்து கொண்டிருந்தார்கள் ..

                                               ஒரு ஆர்வக்கோளாறில் அந்த மனிதன் வாசிக்கும் புத்தகம் என்னவாக இருக்குமென்று உற்றுக் கவனித்தேன் .அவன்  வாசிக்கும் புத்தகத்தின் தலைப்பு " The edge of life " ,என்பதைக் கவனித்தபோது ஆச்சரியமாகிப் போனேன்.  இயறகை எப்படி மனித உள்ளுணர்வு ஓட்ட்ங்களோடு ஒன்றிப்போகுது என்று முகத்தில் அறைந்த நிஜம் சற்றுக் குழம்பவைத்தது .

                                                              ஸ்டோக்ஹோலாம் நகரத்தை " வடதுருவ வெனிஸ் " என்று சொல்கிறார்கள். இத்தாலியில் வெனிஸ் நகரம் தண்ணியில் மிதப்பது போலவே இங்கேயும் ஸ்டோக்ஹோலாம் நகரம் பல அளவுகளில் உள்ள தீவுகளாக இணைக்கப்பட்டுள்ளது. நீர்வழித்தடங்கள் நிறயவேயுள்ள நகரத்தில் குங்ஸ்க்கோல்மன் என்ற தீவே பெரியது, 

                                                                    பீர்க்கர் ஜார்ல்ஸ் என்ற வைக்கின் கடலோடி நிர்மாணித்த ஸ்டோக்ஹோலமின் முக்கியமான வைகிங் வரலாற்று நினைவிடங்கள் இந்தத் தீவிலேயே அதிகமுள்ளது. நீர்வழித்தடங்கள் முக்கிய பிராயணப் படக்குப் போக்குவரத்தும், உல்லாசப் படகுகளின் போக்குவரத்தும் , ஆடம்பரமான அதிவேக மோட்டார் படகுகளின் போக்குவரத்தும் அந்த நீர்வழிகளில் அலைகளில் நுரைகளை ஆள்ளியெறிந்து போவது எப்போதும் அலாதியான காட்சிகள். 

                                                                          ரெண்டு பக்கமும் வளைத்து நீர் தொடும் வயதான மரங்கள் ,நேற்றுப் பிறந்த கரையோரோ நாணல்கள் ,உடட்பயிட்சி செய்யும் நடைபாதைகள், கொத்துக் கொத்தாக கொங்கிரீட் மேம்பாலங்கள் எல்லாம் சேர்ந்து கோடைகாலத்தில் முக்கியமானவொரு கனவுலகை சிருஷ்ட்டித்து விடுகின்றன.

                                                                     குங்ஸ்கலோமன் பார்கென் அதிநவீன சீமெந்துக் கொங்கிரீட் கட்டிடங்கள் தேவைக்கு அதிகமாகவே சுற்றிவளைக்கும் ஸ்டோக்ஹோலாம் நகரத்தின் நடுவில் விரிச்சு வைக்கப்பட்டிருக்கும் பச்சைக் கம்பளம். பல வருடம் முன்னர் போன இந்த இடத்துக்கு அண்மையில் மறுபடியும் சென்றேன். இடைப்பட்ட இத்தனை வருடங்களில் நான் அதிகம் மனிதர்களைச் சந்தித்ததில்லை,,ஆனால் நிறையவே இயற்கை சார்ந்த இடங்களோடு ஆத்மார்த்தமான தொடர்புகள் எப்பவுமே இருந்திருக்கு.

                                                                   உலகம் முழுவதும் பூங்காக்கள் அமைதி அமைதியாக இருப்பதுக்கே வடிவமைக்கப்பட்டு உள்ளன .குங்ஸ்கலோமன் பார்க்கும் அப்படித்தான் ஒருகாலத்தில் இருந்தது. இன்றைக்கு அந்தப் பார்க்குக்கு மிக அருகாக ஒரு மேம்பால நெடுஞ்சாலை நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறோம் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அமைத்திருக்கிறார்கள். அதில் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் டயர் வீதியோடு உரசி உரசியே எழுப்பிக்கொண்டிருக்கும் இரைச்சல் சத்தம் இடைவிடாமல் காதில நடுச்சாமக் கொசுத்தொல்லை போலவே இம்சிக்குது .

                                                                               நான் கொஞ்சம் காலாற சுற்றிப்பார்த்துவிட்டு வந்து ஒரு மரவாங்கில் இருந்தேன், எனக்கு அருகில் ஒரு வயதானவர் இருந்தார் . அவர் முகம் பின்வாங்க மறுக்கும் இளமையோடு இருந்தது . கிறிஸ்தவ ஸ்வன்ஸ்காஷிர்கா சேர்ச் வெளியிடும் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தார் , ஒரு அஞ்சு கிலோமீட்டர் நடந்து கடந்து களைத்த வியர்வை அவர் அடிடாஸ் டீசெர்ட்டை தொப்பலாக நனைத்திருந்தது. நைக் ஏர்ரன்னர் சப்பாத்துப் போட்டிருந்தார். அந்த சப்பாத்து அடிப்பக்கமா தேஞ்சுபோய் எனக்கு எப்ப பெஞ்சன் கிடைக்கும் என்பதுபோல ஏங்கிக்கொண்டிருந்தது

                                                                      அவர் பேப்பர் வாசித்துமுடிய அவரோடு சும்மா பேச்சுக்கொடுத்தேன். வழக்கம் போல சுவீடிஷ் மக்கள் விரும்பும் வெய்யில் விளையாடும் காலநிலையில் தொடக்கி,,என் பெயரைச்சொல்லி உள்ளங்கைகளில் பற்றிக் கைகொடுத்த உரையாடலில் முதல் கேள்வியை இப்படித்தான் கேட்டேன்

" இங்கே நடப்பதில் அப்படி என்ன விசேஷம் ,,சொல்லுங்களேன் "

" ஹ்ம்ம்..நிறைய இருக்கு ,,முக்கியமானது என் மனைவி..."

" அப்படியா,,சொல்லுங்க அதென்ன,,""ஹ்ம்ம் ,vissa dagar är hemska, "

ஓ 

" vissa minnen är hemska, så hur livet pågår  " 

                                  இந்த இடத்தில  சுவாரசியம் இல்லாத சித்தம் போக்கு சிவன் போக்கு என்று வாழும் கடைநிலை  மனிதர்கள் உபயோகிக்கும்  சுவீடிஷ் மொழியில்  உள்ள வார்த்தைகளை அவர் சொன்னது கொஞ்சம் கலவரமாக இருந்தது. ஏறக்குறைய அந்த வார்த்தைகளே பலசமயம் எனக்காகவே உருவாக்கப்பட்டவை போலிருப்பதை நானும் உணர்ந்து இருக்கிறேன் 

ஓ அப்படியா ,,வாழ்க்கை அப்படித்தானே சலிப்புத்தருகிறது   " 

ஆனால் இந்த பார்க் எனக்கு தனிப்பட நினைவுகளின் பொக்கிஷம் போல, "

"பலசமயம்  இடங்களும் நினைவுகளும், நினைவுகளும் இடங்களும் ஒன்றை ஒன்று விட்டுப் பிரிக்கமுடியாதவை என்று நான் நினைக்கிறன்  "

" சுவிடீஷ் மொழியில் ஒரு சொட்பதம் இருக்கு தெரியுமா "

" என்ன அது "

 " நினைவுகளை அசைபோட்டுக்   கடந்து போவதுதான் காலம் தரும்  மருந்து என்று"

" ஓ ,,இப்படித்தான் சைகோலோயிஸ்ட்களும் சொல்கிறார்கள் என்று நினைக்கிறன் "


" இருக்கலாம்,,,நான் அந்தளவு படிக்கவில்லை,, பென்ஷன் எடுக்கும்வரை எலட்ரிக்  ரெயில் எஞ்சின் ட்ரைவராகவே வாழ்ந்தவன்  "

"உங்களை பார்த்தபோதே தெரிந்தது கடின உழைப்பாளி என்று  "

"   இந்தப் பார்க் ,வில்லோ  மரங்கள், குஞ்சரவால்க்  குருவிகள், மஞ்சள் வெய்யில், குழந்தைகளின் கும்மாளம் எல்லாமே   உட்சாகம் தரும் சூழ்நிலையையும் உட்படுத்தி விடுகிறது "

"உங்கள் மனைவியும் அதெலெடிக் விசியங்களில் ஈடுபாடு உள்ளவர் போலிருக்கு "

                                            கொஞ்சநேரம் அமைதியாகக் கைகளைப் பிசைந்து, முகவாயை ரெண்டு உள்ளங்கைகையாலும் தடவி, வெறுமையாக வெற்றிடத்தை வெறித்துப் பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தார், நான் அவர் அமைதியாக இருப்பது அவரைபொருத்தவரை முக்கியமான ஒன்றாக இருக்கவேண்டும் என்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் 


" ஹ்ம்ம்,, நீ இப்போது என்னப்பா கேட்டாய். கொஞ்சம் திருப்பி கேளுப்பா ,"

"உங்கள் மனைவியும் அதெலெடிக் விசியங்களில் ஈடுபாடு உள்ளவர் போலிருக்கு "

" hon öppnade det nya fönstret för mig ...."

"ஓ அப்படியா,,,,,ஹ்ம்ம்  "

" ஓம்,,அவள் எப்போதும் என்னோட இங்கே சேர்ந்தே நடப்பாள் "

" இன்று வரவில்லையா,,"


                                         அவர் என்னைச் சந்தேகமாகப் பார்த்தார், அதில கொட்டபாக்குக்கு விலை கேட்க வட்டுக்கோட்டைக்கு வழி சொன்னது போலக்  குழப்பம்  எனக்கு சுவிடீஷ் மொழி எவ்வளவு தெரியும் என்பது போலிருந்தது, அல்லது எனக்கு காது கேட்பது குறைவாக இருக்கலாம் போல நினைப்பது போலவும் இருந்தது !

"  நீ இப்போது என்னப்பா கேட்டாய். கொஞ்சம் திருப்பி கேளுப்பா ,"

" உடம்புக்கு ஏலாமல் இருப்பதால் வரவில்லையா "

" இல்லைப்பா ,,அவள் இறந்து ரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது பா "

" ஓ,,சொறி,,சொறி "

" அவள் நடந்த பாதச் சுவடுகளில் நான் இப்போது நடந்துகொண்டிருக்கிறேன், முக்கியமாக அவள் நடந்த பாதச் சுவடுகளைத் தேடித்தேடி அதன்மீது நடந்துகொண்டிருக்கிறேன், அது எனக்கு ஆத்ம பலம் தருகிறது "

" அப்படியா,,சுவாரசியமாக இருக்கே "

" ஹ்ம்ம் "

                                                                 அதுக்குப் பிறகு நினைவலைகள் தாலாட்டும் ஒரு சிறிய மவுன அலைச்சலில் அவர் இருந்தார். அது முடிய முக்கியமாக மேம்பால நெடுஞ்சாலை இரைச்சல் மிகவும் துன்பம் தருவதாகச் சொன்னேன் , அவருக்கு அது புரியவில்லை.

" என்னப்பா சொல்கிறாய்,, மேம்பால நெடுஞ்சாலை இரைச்சலா அது எனக்கு இடைஞ்சலா கேட்கவில்லையே "

" ஓம்,,,இந்த இரைச்சல் பலவருடம் முன் இருக்கவில்லை,,,"


அப்படியா,,எனக்கு அது தெரியாது"

"நீங்கள் எவ்வளவு வருடமா இங்கே வருகிறீங்கள் "

" அஞ்சாறு வருசமா கோடையில் இதுதான் என்னோட பகல் நேரப் பொழுது போக்கு ," 


"அது நீங்கள் போட்டிருக்கும் டீசேர்ட்  வியர்த்து நனைந்து இருப்பதிலேயே  தெரிகிறது  " 

" நான்.., ஓய்வூதியம் எடுத்து இருப்பதால் பகலில் வேலை செய்ய எதுவுமே இருப்பதில்லை "

" இந்த இடத்தில குறுக்கப்போடப்பட்டுள்ள மேம்பால நெடுஞ்சாலை பத்து வருடங்களின் முன்னர் இருக்கவில்லை,,,"


அப்படியா,,எனக்கு அது தெரியாது"

" இந்த இடம் சொர்க்கத்தின் வாசல்படி போலவே அவ்வளவு பூங்காவன அமைதியாக இருந்தது "

" அப்படியா,,எனக்கு அது தெரியாது,,ஆனால் நீ சொல்லும் மேம்பால நெடுஞ்சாலை இரைச்சல் இப்பவும் எனக்குள் கேட்கவில்லையே "


" எனக்கு என் காதுக்குள்ளால கார் ஓடுறது போலக்   கேட்குதே   "

" எனக்கு இப்பவும் பாம்புக் காது ..நல்லா காது கேட்க்கும்பா "

" அதுதான் சொல்லுறது மூளையின் பழக்கதோஷம் என்று "

" அப்படியா,,அதென்னப்பா,,சொல்லு விளங்கவில்லை ..நீயே சொல்லுப்பா "

" வீட்டு ஹோலில் இருக்கும் மணிக்கூடு டிக்கு டிக்கு என்று செக்கன் கம்பி அசையும் சத்தம் எங்களுக்கு கேட்பதில்லை ..ஏனென்றால் அந்த ஹோலில் எப்போதும் இருப்பதால் மூளைக்கு அந்தச் சத்தம் பழக்கமாகி விடும் ,,ஆனால் புதிதாக வரும் ஒருவருக்கு அதுவே சில நிமிடங்கள் டிக்கு டிக்கு என்று கேட்கும் "

" ஹஹஹஹ,,அது உண்மைதான் ..உனக்கு இந்தப் புதிய மேம்பால இரைச்சல் இரைச்சல் புதிய அடையாளமாக இருக்கு என்று சொல்ல வாறியா" 


 " ஓம் "

" ஹ்ம்ம்,,நீ சொல்வது சரிதான் ,,ஆனால் நகரம் நாலு பக்கமும் பெருத்துக்கொண்டு போகுதேப்பா ..வீதிகள் பாதைகள் புதிதாகப் போடத்தானே வேண்டும் பா "

                                                                                   என்றார். நான் அதுக்கு மேலே ஒன்றும் சொல்லவில்லை. அதிநவீன வளர்ச்சிகள் என்பதே குப்புறக் கிடந்துகொண்டு மேல் நோக்கி உச்சிக்குத் துப்புவது போல . அது எங்கே திரும்பி வந்து அலாதியாக விழும் என்று நல்லாவே உங்களுக்குத் தெரியும். கவனித்த ரெண்டாவது விசயமும் அப்படித்தான் .

                                                                                முன்னம் இந்தப் பார்க்கில் இளையவர்கள் உடலில் உள்ள கழிவுகள் இறங்கும்வரையில் வியர்வை வடியும்வரையில் ஓடி ஆடி விளையாடுவார்கள் . இந்த முறை பார்த்தபோது ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் மரவாங்குகளில் கால்களை ஓய்வாக வைத்துக்கொண்டு மொபைல் போனில் பட்டரி சார்ச் இறங்கும்வரையில் இளையவர்கள்Online  Games  விளையாடிக்கொண்டிருந்தார்கள். 


                                                சிலநேரம் வென்றுவிட்டது போல கைகளை முஸ்டிபொத்தி துள்ளிக்குதித்து ஆரவாரிப்பதைப் பார்ப்பதுதான் கொடுமையிலும் கொடுமையாகவிருந்தது!!